Monday, December 11, 2017

பாதிதான் பார்த்தேன். இப்ப மீதியையும்.... (இந்திய மண்ணில் பயணம் 87)

முதல்வேலை முதலில்னு  அடுத்தாப்லே இருக்கும் சத்குருவுக்குப்போய்  நமக்கு காஃபியும் சீனிவாசனுக்கு டீயுமா ஆச்சு. அப்பதான்  சேதி வருது ஸ்பெஷல் வடை இருக்காம்.   வடைன்னா  விடமுடியுதா?   ப்ச்....  கொண்டு வாங்க....  ஆச்சு :-)

அப்பதான் நம்மவர் சொல்றார், இவருக்கு இந்தக் கோவில் சமாச்சாரம், போன இடத்தில் கிடைச்சதாம்.  மீட்டிங்கில் சின்னப்பேச்சு :-)

முத்தியால்பேட்டை என்ற இடம்.  அட!  இதே பெயரில் நம்ம சிங்காரச் சென்னையில் ஒரு பகுதி இருக்கே!  எங்க அம்மாவின் அம்மம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச இடமாம்!

அதிக தூரமில்லை. ஷெண்பகாவில் இருந்து வெறும் 2.7 கிமீதான்னு  கூகுளார் சொல்லிட்டார். இதே மஹாத்மா காந்தி சாலையில்  வடக்கே நேராப்போய் நம்ம  காய்தே மிலத் நூற்றாண்டு வளைவுக்குப் பக்கம்  ரைட் எடுக்கணும்.
   மேலே படம்:   வலையில் ஆப்ட்டது 


அந்தப்பேட்டைக்குள் போய் கொஞ்சம் விசாரிச்சதும் கோவிலுக்கு வழி தெரிஞ்சது. இங்கே அதுக்குள்ளே இருட்டிப்போச்சு பாருங்க.....   கோபுரம் இருக்கா என்ன?  முன்னால் பந்தல் போட்டுருப்பதால் கண்ணுக்கு ஆப்டலை....
வீடு போல இருந்த ஹாலுக்குள் போனால்  தகதகன்னு மின்னும் கொடிமரம், கம்பி கூண்டுக்குள் ....  அந்தாண்டை பெரிய திருவடிக்கான சந்நிதி. இவருக்கும் தகதகன்னு  'தங்கச்சுவர்' !
மூலவருக்குத் திரை போட்டுருந்தாங்க. அஞ்சு நிமிஷம் ஆகுமாம்.   அடுத்தாப்லே இருந்த இன்னொரு ஹாலுக்குள் போனால்.... அங்கேயும் திரை!  உற்சவர் எழுந்தருளும் மண்டபமாம்!
அங்கே இருந்த படங்களைப் பார்த்தும்,  சுவரில் இருந்த  அஹோபில நரசிம்ஹர்களைப் பற்றிப் போட்டுருந்த தகவல்களைப் படிச்சுக்கிட்டும்  இருந்தப்பதான், இதன் மேல் மூலையில்  பத்து நரசிம்ஹர்களை மேல் சந்நிதியில் தரிசிக்கலாம் னு எழுதி இருப்பதைக் கவனிச்சேன்.


நம்ம அஹோபில யாத்திரையில்  பத்துக்கு அஞ்சு பழுதில்லைன்னு  கிடைச்ச அம்பது சத தரிசனத்தை இங்கே துளசிதளத்தில் எழுதி வச்சுருந்தேன். யாருக்காவது ஞாபகம் இருக்கோ?   இல்லைன்னா.... இங்கே எட்டிப் பார்க்கலாம் :-)


ஆனாலும் அது ஒரு மனக்குறையா ஒரு மூலையில் இருந்துக்கிட்டேதான்....

உடம்பு இருக்கும் நிலையில்  கோல்பிடித்து நடந்தெல்லாம் போக முடியாதே.....

அந்தக் குறை உனக்கெதுக்கு? இதோ இங்கே பார்னு கூப்புட்டுருக்கான் போல!
இதே கட்டடத்தின் பக்கவாட்டுக் கதவுக்குப் போகணும். மாடிப்படி தெரிஞ்சது.  முதல் மாடி தாண்டி ரெண்டாவது மாடிக்குப் போகணும்.
போனால்....
ஹைய்யோ......   பத்துப்பேரும் ஒரே வரிசையில் அழகா காட்சி கொடுக்கறாங்க!  பஞ்சலோஹ விக்ரஹங்கள்! பளிச் பளிச் !
அருமையான தரிசனம்!   படம் எடுக்கலாமான்னு தயக்கத்துடன் கேட்டேன். எஸ்ஸுன்னுட்டார் பட்டர்பிரான்!  ஹைய்யா..... பெருமாளே/\....

நன்றி சொல்லிட்டுக் கீழே கோவிலுக்கு வந்தால்  ஹயக்ரீவரும் லக்ஷ்மியுடன்  ஸேவை சாதித்தார்!   ரொம்ப அழகான உருவம்!

கோவில் பழசுதானாம்.  தினமலர் சொல்றாப்லே ஐநூறு வருஷம் இருக்குமான்னு சின்ன சந்தேகம் வரத்தான் செஞ்சது...
சமீபத்தில்தான் நாப்பத்தி  ஆறாவது ப்ரம்மோத்ஸவம் நடந்ததாக ஒரு தகவலும் கிடைச்சது!
இவுங்க கோவிலின் பதிவில் 1971 இல் ஸ்தாபிதம்னு இருக்கு.  அந்தக்கணக்கில் பார்த்தால்  46 சரியா வருதே!

இவுங்க   ஸைட்லே போய்ப் பார்த்தால்   1971 இல்  குடமுழுக்குன்னும் இருக்கு.  ஒருவேளை ஏற்கெனவே இருந்த கோவிலைக் கொஞ்சம் விஸ்தரிச்சுக்கட்டிக் கும்பாபிஷேகம் நடத்தி இருக்காங்க போல!

 அப்ப அந்த நாப்பத்தியாறு?  அது  ட்ரஸ்ட் ஃபார்ம் பண்ண வருஷம். அப்படித்தான் எனக்குத் தோணுது.  மேல்விவரம் கேட்டு அனுப்பிய மடலுக்கு பதில் இதுவரை இல்லை!

கல்விக்கடவுள் நம்ம ஹயக்ரீவர்  என்பதால் எல்லோருக்கும் பிடிச்சுப்போயிருக்கும்தானே?  மேலும் மூலவர் பிரதிஷ்டைக்குமுன்  அங்கே செப்பு யந்திரம் ஒன்னு  பதிச்சுருக்காங்களாம்.  பவர்ஃபுல் சாமியா இருக்காருன்னும் கேள்வி.

 ஹயக்ரீவர்  கதை ஒன்னு நம்மவருக்காக இங்கே சொல்லணும்தான். இதோ சுட்டி. எட்டிப் பார்த்தால் தேவலை  :-)


ராம ராவண யுத்தம் நடந்தப்ப,  லக்ஷ்மணன்  அடிபட்டு விழ,  அவரைக் காப்பாத்த நம்ம ஆஞ்சி சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தாரே..... அப்போ கொஞ்சம் மண் சரிஞ்சு பூமியில் மூணு இடத்தில் விழுந்துருச்சு.  அந்த மூணு இடங்களிலும்   லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவில் இருக்குன்னு  சொல்றாங்க.

ஓ.... ஒன்னு இங்கே!  மத்த ரெண்டு எங்கே?

திருவஹீந்த்ரபுரமும் நம்ம நங்கநல்லூரும்தானாம்!   நங்கநல்லூர் கோவிலில் கூட மூலவர் பெரிய ஸைஸில் ரொம்ப அழகா இருப்பார்.  அங்கேயும் மாடி ஏறிப்போகணும் தரிசனத்துக்கு!

நல்ல தரிசனம் கிடைச்ச மகிழ்ச்சியில் அப்படியே கிளம்பிப்போறோம்.  பதிவுலக நண்பருடன்  மதியம் பேசுனதில்  சந்திப்பை ஒரு எட்டரைக்கு வச்சுக்கலாமான்னு கேட்டார். தங்க்ஸ் வேலைக்குப் போயிருக்காங்க. எட்டுமணிபோலதான் வருவாங்களாம்.

ரொம்ப நல்லது. அதுவரை இன்னும் கொஞ்சம் ஊர் சுத்திக்கறேன்னு  சொல்லி இருந்தேன்.   காலையில் கிளம்பிப்போன  நம்மவரும் எத்தனை மணிக்குத் திரும்பிவருவார்னு தெரியாது பாருங்க...

சந்திப்புக்கு இன்னும் சுமார் ஒன்னரை மணி  நேரம் இருக்கே... அதுவரை சும்மா  பீச் வரை போய் வரலாமே....    பீச் ரோடில் போக முடியாது  அதுதான் மாலை 6 மணி முதல்   வண்டிப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லையே....

இதுக்கு இந்தாண்டை இருக்கும் தெருவழியாப் போகலாமுன்னு  சீனிவாசன் அப்படிக்காப் போய்  ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினார்.  பழைய கலங்கரை விளக்கம் இருக்கு  இங்கே.  நாங்க இறங்கி நடந்து போறோம்....

கண்ணுக்குத் தெரிஞ்சது ஒரு பெரிய  வெள்ளைக் கட்டடம். க்ராஃப்ட்  பஸார்.
மகளிர் சுய உதவிக் குழுவினரின் பயனுக்காக அரசு கட்டிக்கொடுத்துருக்கு!
ரொம்ப நல்ல சமாச்சாரம்.  பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை  விற்பனைக்கு வைக்க ஒரு இடம் வேணும்தானே?


உள்ளே போய்ப் பார்த்தோம். துணிமணி நகை நட்டு, எம்ப்ராய்டரி, டெய்லரிங்ன்னு  கொஞ்சம் கடைகள்/ ஸ்டால்கள்.    சரக்கை வச்சுட்டுப் பூட்டியெல்லாம்  வச்சுட்டுப்போக முடியாது.  தாற்காலிகமான கடைகள்னு சொல்லலாம்.

போனதுக்காக நானும் ஒரு பச்சை மணி மாலை வாங்கினேன்.
அப்படியே வண்டி நிறுத்தத்துக்கு  நடந்து வந்தா....  பெருமாள் கூப்பிட்டார்!  இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர பாலாஜி !  சின்னதா ஒரு சந்நிதி. மேலே  பெருசா ஷெட் போட்டுருக்காங்க. சுத்திவர கம்பி வேலி!
 வாசலில் நின்னாவே பெருமாள் பளிச்ன்னு தெரியறமாதிரி அமைப்பு!  சாமின்னா  இப்படி இருக்கணும். காட்சிக்கு எளியவனா!!  நல்ல தரிசனம். பெருமாளே   நீர் நல்லா இரும்!
திருப்பதி திருமலையில் ஏறி ரெண்டு விநாடி கூடப் பார்க்க விடாம இருட்டுலே நின்னுக்கிட்டு அழிச்சாட்டியம் செய்றவனுக்கு...  சேதி அனுப்பினேன்....  பார்த்துக்கோ.... நல்லா பார்த்துக்கோ....இங்கேயும் அதே ஸ்ரீநிவாஸன்தான்! 

மணி எட்டரை ஆகப்போகுது.....  நண்பரை சந்திக்கலாம்  வாங்க  :-)


தொடரும்......  :-)


Friday, December 08, 2017

குருவும் சிஷ்யனும்..... என்று சொல்லலாமா?(இந்திய மண்ணில் பயணம் 86)

எத்தனை முறை இந்தப் பாண்டிக்கு வந்துருக்கேன்.... ஆனாலும்  இந்த வீட்டுக்கு வர வாய்ச்சதோ?  இன்றைக்கு நல்ல வாய்ப்பு. விடக்கூடாதுன்னு,  நம்ம வரதராஜர் கோவிலில் இருந்து கிளம்புனது  'நம்ம முண்டாசு'அங்கே வசிச்ச வீட்டுக்குத்தான்.

ரொம்பக் கிட்டக்க...  அடடா.... தெரியாமல் போச்சே....
 ஈஸ்வர தர்மராஜா கோவில் தெரு  முனையில்  இருக்கு வீடு. இப்ப இதை நினைவகமா மாத்தி இருக்காங்க. கூடவே  பாரதியின் எழுத்துகளை ஆராயும் ஆராய்ச்சி மையமாவும்!

சுமார் பத்து வருசம் இங்கே குடி இருந்துருக்கார்.  1908 முதல்.......     பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி கடிந்து பேசி, எழுதின்னு இருந்ததுலே  இவரைப் பிடிச்சு சிறையில் அடைக்கப்போற சேதி  தெரிஞ்சதும் புதுச்சேரிக்கு 'எஸ்' ஆனார்.  இங்கே தான் ஃப்ரெஞ்சு அரசாங்கத்தின் ஆட்சியா இருந்துச்சே.  வெவ்வேற மாகாணம். வெவ்வேற    ராஜ்ஜியம்!
பாரதியைப் பத்தி நான் சொல்றது சூரியனுக்கே டார்ச் அடிக்கிற மாதிரி!  நம்ம வ.ரா எவ்ளோ சுவாரசியமா எழுதி இருக்கார் பாருங்க.  இந்தச் சுட்டியில் நூல் பிடிச்சுப் போங்க..... கட்டாயம் உங்களுக்கும் பிடிக்கும்!வாசலில்  உயரம் குறைஞ்ச திண்ணை/வராந்தா அமைப்பு தூண்களுடன்!   முன் பக்கம் இருக்கும் சின்ன ஹாலைக் கடந்து உள்ளே போனதும்  குட்டியா  ஒரு முற்றம், சுத்திவர   தூண்களோடு உள் வராந்தா.   முற்றத்தில்  தொட்டியில் இருக்கும்  சில செடிகளோடு நானும்!   சில பெண்கள்  புத்தக பைண்டிங் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  அவுங்களிடம் படம் எடுக்க அனுமதி  வாங்கினேன்.

இனி இது ஒரு படப்பதிவுன்னு  சொல்லிக்கலாம் னு நினைச்சேன். அப்படியும் சொல்ல நாலு சேதி ஆப்ட்டதே :-)

நம்ம தில்லக்கேணியில் இருக்கும் பாரதியார் இல்லம் ஏற்கெனவே பார்த்ததால்....  இங்கே பிரமிப்பு அவ்வளவா இல்லை.  ஏறக்கொறைய அதே  படங்கள், அவருடைய கைப்பட எழுதிய கட்டுரைகள், பாடல்கள்னு  சேகரிப்பு. கண்ணாடிப்பொட்டிக்குள் காட்சிக்கு வச்சுருக்காங்க.

அப்போ எழுதுன பாரதியும் சாரதியும்  இங்கே !
ஒரு அரைமணி நேரம்தான் அங்கே இருந்தேன். நல்ல சுத்தமா பராமரிச்சுக்கிட்டு இருக்காங்க.  ரங்கோலியில் ஒரு  பாரதி, அருமை!
இந்த வீடு, விரிசல் விட்டுப் பழுதாயிருச்சுன்னு இடையில் ஒரு அஞ்சு வருசம் மூடியே வச்சுருந்து,  புதுப்பிச்சு   சமீபத்தில்தான்  திறந்துருக்காங்களாம்.

மேலே  படம் : பழைய வீடு!  அன்றும்  இன்றும் !
இன்னும்  இந்த மாநிலத்தில்   பாதாள சாக்கடை அமைப்பு  முழுசுமா  வரலைன்னாலும் சென்னையை விடச் சுத்தமான மாநிலம் என்றதை ஒப்புக்கத்தான் வேணும்.


அடுத்ததாகப்போனது  சிஷ்யர் வாழ்ந்த வீட்டுக்கு!   உள்ளூர்க்காரர்!  பாரதி மேல் இருந்த அபிமானத்தால் கனகசபை சுப்புரத்தினம்  என்ற தன்னுடைய பெயரை பாரதிதாஸன்னு மாத்திக்கிட்டார்!  (கனகசபை... அப்பா!)
தாஸன்னு சொல்லிக்கிட்டாரே தவிர ரெண்டு பேருக்கும் வயசு வித்யாசம் அதிகம் இல்லை. ....  வெறும் ஒன்பது வருசம்தான் அவர் வயசில் பெரியவர். அவர் 1882 இல் பிறந்தார். இவர் 1891 !

பாரதியார் புதுச்சேரிக்கு  வந்தது 1908 இல். அப்போ  அவருக்கு  வயசு 26 தான்.  இவருக்கோ  17 !   நல்ல நண்பரா இருக்க வேண்டியவர் அவருடைய தாஸானுதாஸனா மாறிட்டார் பாருங்க!   பதின்மவயசு பிரமிப்பு !!!

ஆனாலும்  நம்ம   பாரதிக்கு எல்லாத்துலேயும்  ஒரு   அவசரம்..... இளரத்தம் கொதிச்சு தேசபக்தியில் ஈடுபட்டு,  பிரிட்டிஷாரை எதிர்த்து எழுதி, வீரமுழக்கம் இட்டு,  ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமுன்னு பாட்டும் எழுதி,   எல்லாத்தையும்  வேகவேகமாச் செஞ்சுட்டு, கனவு கண்டு ஆசைப்பட்ட சுதந்திரம் கிடைக்கும்வரை பொறுமை  இல்லாம முப்பத்தியொன்பது வயசுலேயே....  சாமி கிட்டே போயிட்டாரேன்னு....  பல சமயம் நான் நினைச்சு வருத்தப்படுவேன்.


நிமிஷ நடையில் இந்த வீட்டுலே இருந்து அந்த வீட்டுக்குப் போயிடலாம். 115, பெருமாள் கோவில் தெரு.


 இங்கே  திண்ணை வச்ச பழையகாலத்து வீடு!  தரையெல்லாம் கோலங்கள் போட்டு வச்சுருக்காங்க.  வீட்டு உள் முற்றத்தில்  பாரதிதாஸனின் சிலை !
 இங்கே படம் எடுக்க அனுமதி இல்லையாம்.  வாசலில் இருந்தே நாலு க்ளிக்ஸ். அவ்ளோதான்.

ஆனால்  வலையில் சிலபல படங்கள் இருக்கு. ஒருவேளை  நாம் போகும் நேரம், பொறுப்பில் இருக்கும் ஊழியர்களின் மனசுபோல.....   அல்லது   விஐபிக்களின் விஸிட்?   சுட்டுப்போட்டேன் நானும் :-)


இங்கேயும் பாரதிதாஸனின் வாழ்க்கை வரலாறு,  நடந்த முக்கிய சம்பவங்கள், எழுதுன கவிதைகள், பல்வேறு முக்கிய நபர்களுடன் நடந்த சந்திப்புகளின் படங்கள்னு  வச்சுருக்காங்க.

இவருடைய  எழுத்துகளை ஆராயும் நபர்களுக்கான ஆராய்ச்சி மையமும் இதுதான்.
இந்த வீடுமே ரொம்ப விசாலமாவும், பழைய பளபளப்பு, மினுங்கும் தூண்கள்னு அருமையா இருக்கு. இது இவரின் சொந்த வீடு என்பதால் குடும்பம் கட்டிக் காக்குதுன்னு தோணுச்சு. பலதும் என்னுடைய தோணல்கள்தான்.   மனசு நினைக்கிறதை என்னன்னு  வேணாமுன்னு  சொல்ல முடியுது.... இல்லே....

வாசல் திண்ணைக்குப் பக்கம் இவர் எழுதிய நூல்களின் பட்டியல் ஒன்னு!


இங்கே சுமார் ஒரு மணி நேரம் இருந்துருக்கேன். 

பாரதிதாஸன் என்றதும் சட்னு என் மனசுக்குள்ளே வர்றது  'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ   & சங்கே முழங்கு !'   சினிமாவில் வந்த தாக்கத்தால் இருக்கலாம்.  தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது.....  ப்ச்....

இன்னும் ஒன்னு சொல்லணுமுன்னா.... அவர் ஆத்திகர் இவர் நாத்திகர்.  ஆனால்  தமிழும், கவிதையும்  இவரை அவரிடம் பக்தி  செலுத்த  வச்சுருச்சு!!

வெய்யில் ஏற ஏற  வெளியே சுத்த மனசில்லாமல் போச்சு.  ஷெண்பகாவுக்குத் திரும்பிட்டேன்.

ஷெண்பகாவில்  உள் அலங்காரம் செய்தவர் எங்கூர் பீட்டர் ஜாக்ஸனின்  ரசிகர் போல!    மேற்கூரையில் இருந்து   கருடன்கள் நம்மைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க :-)

திரும்ப வலை மேயல், அண்ணனிடமும் அண்ணியிடம்  ஃபோன்பேச்சு, மதியச் சாப்பாடுன்னு  எல்லாம் இங்கே அறையிலேயேதான்.  எப்பவோ எப்படியோ அசந்து தூங்கிட்டேன்.....    மாலை  அஞ்சரைக்கு   இவர் வந்து எழுப்பும்வரை அப்படி ஒரு தூக்கம் :-)

இதுவரை போகாத, கேள்விப்படாத கோவில் விவரம் ஒன்னு(ம்) கொண்டு வந்துருக்கார்.

வாங்க அங்கே போகலாம்....

தொடரும்..... :-)