Tuesday, October 05, 2004

சக்கரை இனிக்குற சக்கரை

ஃபிஜி அனுபவங்கள். பகுதி 4


சக்கரை இனிக்குற சக்கரை
******************************
பணம் காசு இங்கே யாருகிட்டே தெரியுமா? வழக்கம்போல குஜராத்திங்க கிட்டேதான்! அவுங்கதானே வியாபாரம் செய்யறாங்க! மத்த இந்தியர்கள் எல்லாம், வெள்ளைக்காரரோட இருந்த அக்ரிமெண்ட் முடிஞ்சபிறகு, இங்கேயே செட்டில் ஆயிட்டாங்கல்ல. அவுங்க என்ன செஞ்சாங்க? அவுங்களுக்குத் தெரிஞ்ச ஒரே தொழிலான விவசாயம், கரும்புத் தோட்டத்துலே பயிர் செய்ய்றதுன்னு ஆரம்பிச்சாங்க.


இந்த நாட்டுலே எல்லா விளை நிலங்களும், எல்லாவிதமான நிலப்பரப்பும் மண்ணின் மைந்தர்களான ஃபிஜியன்களுக்குத்தான்! நமக்குஇடம் வேணுமுன்னா, நாம் ஒப்பந்தம் போட்டு அதை உபயோகிக்கலாம். எந்த மாதிரி ஒப்பந்தம்? 99 வருஷம்! நம்ம ஆளுங்க எல்லாரும் அப்படித்தான் ஒப்பந்தம் போட்டு, இடம் எடுத்து, வீடுவாசல்ன்னு இருக்காங்க! இந்திய ஆளுங்களுக்குத் தேவையான சாமான்களை விக்கறதுக்கு வந்தவங்கதான் குஜராத்திங்க! இதுலே பாருங்க ஒரு விசேஷம், இங்க இருக்கற குஜராத்திங்க 99 சதமானம் ஒரே ஊர்லே இருந்து வந்தவுங்க! குஜராத்துலே இருக்கற 'நவ்சாரி'ங்கறது அந்த ஊர். எப்படி ஒரே ஊர்க்காரங்க வந்திருப்பாங்க? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். கொஞ்சம் யோசிக்க வேணும்.

'ஃபிஜி ஷுகர் கார்ப்பொரேஷன்' ன்னு ஒரு நிறுவனம் இருக்கு. இது அரசாங்கத்துக்குச் சொந்தமானது. நாட்டுலே விளையற மொத்தக் கரும்பையும் இவுங்கதான் வாங்குவாங்க. வேற யாருக்கும் விவசாயிங்க விக்க முடியாது. கரும்பு நடவு காலம் வரும்போது, இவுங்களே விவசாயிங்களுக்குக் கடன் கொடுப்பாங்க. அதைச் செலவு செஞ்சு கரும்பு நட்டு, அறுவடையாகும் காலம் வரும்போது அதை இவுங்க கம்பெனிக்கு வித்துறணும். அப்ப கரும்புக்கு உண்டான விலையிலே இருந்து, கடனைக் கழிச்சுட்டு, பாக்கியை தருவாங்க. இப்படிதான் பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு!

'ஷுகர் கார்ப்பொரேஷன்', சக்கரையை மத்த நாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சிரும்! கரும்பு விளையுற ஊரிலே, பொங்கல் பண்டிகைக்குக்கூட ஒரு கரும்பை நாம எடுக்க முடியாது. கடையிலே கரும்பை விக்கக் கூடாது. ஆனா, தெரிஞ்சவுங்க தோட்டத்திலே இருந்து ரெண்டு கரும்பைக் கொண்டு வந்து படைக்கலாம்!


சர்க்கரையைக் கூட நல்ல வெளுப்பா ஆக்காம, ஒரு இளம் பழுப்புக் கலருலேயெ எடுத்து ஏற்றுமதி செஞ்சிருவாங்க. சட்டுன்னு பாத்தா ஆத்துமணலு போலவே இருக்கும்!

வருஷத்துலெ ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் சர்க்கரை ஆலை வேலை செய்யும். அப்புறம் அதை 'மெயிண்டனன்ஸ்' செய்யவேணுமில்லையா?அது மூடறதுக்குள்ளெ எல்லா அறுவடையும் நடக்கணும். சிலசமயம் ஆளுங்க கிடைக்காம பிந்திப்போச்சுன்னா, நஷ்டம் ஆயிருமே.அப்போ என்ன செய்வாங்கன்னா, கரும்புக் காட்டுக்குத் தீ வச்சிருவாங்க! எல்லா தழையும் எரிஞ்சதும் அணைச்சிருவாங்க.கரும்பு மட்டும் 'குச்சி குச்சி'யா நிக்கும். அதை வெட்டறது கொஞ்சம் சுலபமாச்சே.' டக் டக்'குன்னு அறுத்துருவாங்க. இந்தத் தீஞ்சகரும்புக்கு விலை கொஞ்சம் கம்மியாத்தான் கிடைக்கும். ஆனா, முழுசா நஷ்டம் வரதுக்கு இது மேல் இல்லையா?

கரும்புக் காசு வர்ற சமயம் ஊரே கலகலப்பா இருக்கும். காசு ஓட்டம் இருக்குல்லே! கடைகளிலே வியாபாரம் அமோகம்! துணிமணி,நகை நட்டு, கல்யாணம் கார்த்தி எல்லாம் அப்பதான்.
கொஞ்சம் ஆளுங்க,வீட்டைச் சுத்தி இருக்கற இடத்துலே நமக்குத் தேவையான காய்கறிகளைப் பயிர் செஞ்சு, சனிக்கிழமை கூடும் சந்தைநாளில் கொண்டுவந்து விற்று, அவ்வப்போது கொஞ்சம் காசு பார்ப்பார்கள்.
கிலோக்க கணக்கு கிடையாது. எல்லாம் 'கூறு கட்டி வச்சிக்கிட்டு, குந்துக்கினு கூப்பிட்டா கோடி சனம் தேடிவரும்' கதைதான்! நம்ம ஊர் காய்களுக்குப் பஞ்சமே இல்லை. எப்பவும் வெயில்தானே. அச்சு அசல் தென் இந்தியாதான். ஆனா எல்லோரும் ஹிந்தி பேசுறதாலெ வட இந்தியா மாதிரி ஒரு தோணல்!


இன்னும் வரும்.
****************

5 comments:

said...

எல்லாத்தையும் சேர்த்து படித்தேன் துளசி ! சரளமா கலக்குகிறீங்க...வாழ்த்துக்கள் !

said...

துளசி: சுவையான கதைகள். தொடர்ச்சியாக எழுதுங்கள். சற்றே விரிவாக்கி ஃபிஜி உள்ளூர்க்காரர்களின் வாழ்க்கை முறை, குடும்பம், இனக்குழு வாழ்க்கை முறை, இந்தியர்களின் பழக்க வழக்கங்கள் (அதிலும் வட, தென், குஜ்ஜு) அனைவரும் ஒன்று சேர்ந்து வசிப்பதால் உண்டாகும் கலவை மாற்றங்கள், எதிர்ப்புகள், இனக்கலவையால் ஏற்படும் பிரச்னைகள், அரசியல் பிரச்னை, சில-பல புகைப்படங்கள் என எல்லாம் சேர்ந்தால் இங்கு ஒரு புத்தகத்திற்கான கரு தெரிகிறது!

அதே நேரம் ஆப்பிரிக்காவிலிருந்து யாராவது மொரீஷியஸ் பற்றிய கதையையும் தொடர்ந்தால்! மத்திய அமெரிக்காவிலிருந்து யாராவது டிரினிடாடைக் கையிலெடுத்தால்?

வலைப்பதிவுகளின் முழு சாத்தியங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்குகிறதல்லவா?

said...

ரவியா, பத்ரி,

தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி. புகைப்படங்கள் ஏராளமாக இருக்கின்றன.
அவற்றை வலைப்பதிவில் போடும் 'சூட்சமம்' இன்னும் பிடிபடவில்லை.

என் கணினி அறிவு இதற்கெல்லாம் போதாது. ஆனால் நண்பர்கள் உதவியோடு
இதைச் செய்யலாம் என்று ஒரு எண்ணம் வந்துள்ளது.

முயற்சி செய்வேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

ஆகா ஆகா = துளசி - பிஜீயப் பற்றி ஒரு பெர்ய ஆர்ராச்ச்சியே பண்ணி அதெய் எழுதியும் இருக்கீங்க - அசாத்திய பொறுமை துளசி. அந்த வேகம் இன்னும் இருக்கு. ஆமா பாவம் கோபாலைக் கவனீச்சீங்களா இல்லெயா ??

said...

எத்தனை நுணுக்கமான விஷயங்களையெல்லாம் சேகரித்து எழுதுகிறீர்கள், துளசி!
எங்கே போனாலும் குஜ்ஜூஸ் குஜ்ஜூஸ் தான்!
அருமை, அருமை!ரொம்பவும் சுவாரஸ்யம்!