Wednesday, October 06, 2004

வெற்றிவேல் !!! வீரவேல்!!!!

வெற்றிவேல், வீரவேல்
************************


எனக்கு ஏதாவது 'சாமி வந்துவிட்டதோ' என்று நினைக்கிறீர்களா?

இங்கே ஃபிஜியில் சிறிதும் பெரிதுமாக 350க்கும் மேலே தீவுகள் இருக்கின்றன. அவைகளில், இரண்டு தீவுகள் முக்கியமானவை. ஒன்று மிகப் பெரிதான தீவு. பெயர் 'வீடிலேவு' மற்றது இதில் பாதி அளவு வரும் 'வனுவாலேவு'
இவைகளையே நான், வெற்றிவேல், வீரவேல்' என்று சொல்லிக் கொண்டிருப்பேன். மற்ற தீவுகள் எல்லாம் சின்னச் சின்னது. சிலரொம்பக் குட்டி இப்படி வகைவகையாய்!

பல தீவுகளில் யாருமே வசிப்பதில்லை. சிலவற்றில் வெறும் கால்நடைகள் மட்டும். கொஞ்சம் ஆடு, மாடுகளைக் கொண்டு போய் விட்டு விட்டால், அவை தாமே பல்கிப் பெருகிடுமே!

கொஞ்சம் அளவில் சுமாராக இருப்பவைகளில், வெளிநாட்டு நிறுவனங்கள் 'ரிசார்ட்' அமைத்து விட்டன. சிலவற்றை ஒரு 30 நிமிஷத்தில்ஒரு சுற்று சுற்றிவிடலாம்!

ஓய்வு எடுக்கச் சரியான இடம்! அந்த ரிசார்ட்டைத் தவிர வேறு ஒன்றுமே அங்கே இருக்காது. பகல் முழுவதும், சூரியக் குளியல் எடுத்துக் கொண்டும், இரவு முழுதும் 'பார்'இல் குடியாயும் இருப்பார்கள் பலர். எல்லாம் 'ஹாலிடே' வரும் வெள்ளையர்கள்தான்! சில இடங்களில், கண்ணாடித்தரை உள்ள படகுகளில் சென்று, பவழப்பாறைகளைப் பார்க்க முடியும். இன்னும் பலவிதமாகப் பொழுதைப் போக்கவும், 'ஸ்நோர்க்கேல், வாட்டர் ஸ்கீயிங் இப்படி பல வசதிகள் உண்டு. சுற்றுலா மூலம்தான் மிகப் பெரிய வருமானம் இந்த நாட்டுக்கு வருகிறது! அதே 'ஹோட்டேல்களில் நிர்வாகம் எல்லாம் இந்தியர்களே. எல்லா 'ஹோட்டேல்'களிலும் ஃபிஜியர்கள்தான் வேலை செய்கிறார்கள். அவர்களின் சிரிப்பே ஒரு பெரிய மூலதனம்! இவர்களா ஒரு காலத்திலே 'நரமாமிசம்' உண்பவர்களாக இருந்திருக்கிறார்கள்? நம்பவே முடியவில்லை. ஆனால் நம்பணும்!

'வீடிலேவு'தான் பெரிய தீவு என்பதால், அங்கே தான் தலை நகரும், பெரும்பாலான வசதிகளும், பன்னாட்டு விமானதளமும் இருக்கிறது. இந்தியத் தூதரகம், மற்ற அண்டை நாடுகளான நியூஸிலாந்து, ஆஸ்தராலியாவின் தூதரகங்களும் தலைநகரான 'சுவா'என்னும் ஊரில் உள்ளது. பெரிய தீவு என்றாலும் ஒரு முறை வட்டமாக இந்தத் தீவைக் காரில்ச் சுற்றிவர 8 மணி நேரம் போதும். பன்னாட்டு விமான நிலையம் இருப்பது தலைநகரில் இல்லை. தீவின் அடுத்த கோடியில்!

கடலை ஒட்டியே ரோடு போடப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களைத் தவிர, கடல் என்று தோன்றாத விதத்தில், ஒரு பெரிய ஏரி, குளம் போலவே அலைகள் இல்லாமல் அமைதியான கடலைக் காணலாம். நல்ல நல்ல இடங்களையெல்லாம், ரிஸார்ட் க்கு எடுத்துக் கொண்டதால் பொது மக்களுக்கு என்று உள்ள 'பீச்' ரொம்ப சுமாராகவே இருக்கும்.

சென்னையிலே 'மெரீனா'வுக்கு மாலையிலே மக்கள் போவது மாதிரி, சூடான தேசமாக இருந்தாலும் இங்கே யாரும் போவதில்லை! மாலையிலே ஒரு ஈ, காக்காகூடக் கடற்கரையிலே இருக்காது!

இவ்வளவு எதற்கு? நாங்கள் வசித்த 'ம்பா டவுன்' மாலை 6 மணிக்கூ தெருக்கள் எல்லாம் வெறிச்சோடி, ஆள் அரவமற்றதாகிவிடும். அந்த ஊரின் மொத்த ஜனத்தொகையே ஐந்தாயிரம்தான். அதனால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும்! சாயந்திரம், கொஞ்சநேரம், உடற்பயிற்சிக்காக நடக்கலாம் என்று வெளியே போனால், தெருவில் ஒரு நாய் கூட ஓடாது. எல்லாம் கூட்டில் அடங்கிவிடும்போல! இதைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும்? நாம் நடக்கலாம் என்று வாசலுக்கு வந்தால போதும், ரெண்டு அடி எடுத்து வைப்பதற்குள், தப்பித் தவறி அந்தப் பக்கம் வரும் கார், 'சரக்'கென்று அருகில் வந்து நிற்கும். 'ஏன் நடக்கின்றீர்கள்? எங்கே போகவேண்டும்?' என்றேல்லாம் கேட்டுத் துளைத்துவிடுவார்கள். எங்களை எப்படித் தெரியும்?

நாங்கள் அங்கே போன நாள், அந்த நாட்டின் ரேடியோ ஒலிபரப்பில் செய்தியாக வந்திருந்தோமாம்! அங்கே ஃபிஜியில் முதல் முதலாக வரப்போகும் ' கேபிள் கம்பெனி'யை ஆரம்பிக்கவே என் கணவரும், அவருடனே நானும் இங்கே வந்தோம். நாங்கள் இந்தியாவிலிருந்து வந்து இறங்கியததையும், கம்பெனி ஆரம்பித்தவுடன், உள்நாட்டினருக்கு வரப்போகும் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் அந்த ஒலிபரப்பில் விளக்கினார்களாம். தொழிற்சாலைக்கான கட்டிடம் மட்டும் காலியாக இருந்ததும், அங்கே வரப்போகும் 'மெஷீன்'கள் எல்லாம் ராட்சஸ அளவுள்ள பெட்டிகளில் அங்கே இறக்கப்பட்டிருந்ததும் எல்லாமே ஒலிபரப்பில் வந்ததாம்!

அன்றுமாலை, வியாபாரம் செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்களின் வரவேற்பும், எல்லோரையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் எல்லாம் தவறாது நடந்ததால் ஒரே நாளில் எல்லோருக்கும் எங்களைப்பற்றித் தெரிந்திருந்தது!

இந்த ரேடியோ ஒலிபரப்பு என்பது இங்கே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருபத்துநாலு மணி நேரமும் இந்தியர்களுக்கான 'ஹிந்தி' ஒலிபரப்பு உண்டு.ஒலிபரப்பின் நடுவே திடீர் என்று ஒரு தமிழ்ப் பாட்டு, ஒரு மலையாளம் பாட்டு, தெலுங்குப் பாட்டு என்ரறு வரும்! வீடுகளிலும், கடைகளிலும், மற்ற தொழிற்சாலைகளிலும் கூட ரேடியோ நிகழ்ச்சி கேட்டுக்கொண்டே எல்லா வேலைகளும் நடந்துகொண்டிருக்கும்.

இங்கே யாராவது இறந்துவிட்டாலும், செய்தி சொல்வதற்கு முன்பாக 'டிங் டிங்'என்று ஒரு ஓசை வரும். அப்போதே தெரிந்துவிடும்! ஏதோ ஒரு 'சோக் சமாச்சார்' வரப்போகிறதென்று. அதில் விஸ்தாரமாக, இன்ன இடத்தில், இன்ன பெயருள்ள நபர் இறந்துவிட்டார். அவருடைய பிள்ளைகள் நெருங்கிய குடும்பத்தினர் பெயர்கள். சாவு எடுக்கப் போவது எத்தனை மணிக்கு, எந்த நாளில், எங்கே கொண்டு போய் அடக்கம் செய்வார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஒருமுறை அல்ல, பலமுறை.


இது நாடு முழுவதும் ஒலிபரப்பாகும். செய்தியை ஆட்களிடம் சொல்லி அனுப்பும் பழக்கம் எல்லாம் இல்லை. நாம் இதைக் கேட்டுவிட்டு, உடனே நம் பேட்டையில் என்றால் அவர்கள் வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வரவேண்டும்.சவ அடக்கம் ஆகும்வரை, அங்குள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் அந்த சடலம் பாதுகாக்கப்படும்.

ஃபிஜி 1989-ல்தான் சுதந்திர நாடாகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. அதற்குமுன், 'காமன்வெல்த்' நாடுகளில் ஒன்றாகவும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நேரடி அதிகாரத்திலுமே இருந்தது. அரசியின் சார்பாக 'கவர்னர் ஜெனெரல்' இருந்தார். ஆகவே ஃபிஜி குடியுரிமை உள்ளவர்கள், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பிரத்தியேக விசா ஏதும் இன்றி பயணிக்கவும் அங்கே தங்கி வேலை செய்யவும் தடைகள் ஏதும் இல்லாமல் இருந்தது.

இந்திய வம்சாவளியினர், மூன்று நான்கு தலைமுறைக்குப் பின்னர் பிறந்தவர்கள் மற்ற நாடுகளில் போய் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க ஆவலுடன் இருந்தனர். அப்படியே பல குடும்பங்களில் நிறைய ஆட்கள், மகனும் மகளும் பேரக்குழந்தைகளுமாய் இடம் பெயர்ந்துவிட்டனர். இதனால், எப்படியும் ஒரு குடும்பத்தில் குறைந்த பட்சம் யாராவது ஒருவர் வெளியே இருந்து வரவேண்டுமென்ற நிலையில் இருப்பதால், சவ அடக்கம் ஒருபோதும் உடனே நடப்பதற்கு இயலாத நிலை.

அந்த நாள் வரும்வரை, மரணித்தவர்கள் வீட்டில் அடுப்புப் பற்றவைத்து சமைக்க முடியாது என்ற சாஸ்த்திர சம்பிரதாயத்தை ஒட்டி, அயல்பக்கத்தினரும், நண்பர்களின் குடும்பங்களும் ஏதாவது சமைத்துக் கொண்டு போய் அந்த வீட்டில் வைத்துவிட்டு வருவார்கள். கெட்டில் கெட்டிலாகத் தேநீரும், 'ப்ரெட்'டும், மற்ற சாப்பாடுவகைகளும் அடுக்களையில் குவிந்திருக்கும்!

அதைத்தவிர தினமும் மாலையில் அவரவர் தர்மத்தின்படி, கீதையோ, பைபிளோ படிப்பார்கள். அதற்கும் அயல்பக்க வீடுகளில் இருப்பவர்களும், நண்பர்களுமாகப் போய்வருவார்கள்.

சாவு வீடு என்றால், இந்தியக் கிராமங்களில் இருப்பதைப் போல் இல்லாமல் எல்லோரும் நல்ல உடை உடுத்துக் கொண்டு அலங்காரமாகவே இருப்பார்கள். அடக்கம் செய்யும் நாளன்று 'சட்'டென்று பார்ப்பவர்களுக்கு ஏதோ நல்ல விசேஷம் நடக்கும் இடம் போல எல்லோரும் நல்ல ஆடை ஆபரணங்களுடன் இருப்பார்கள். சோகத்தையுமே கொண்டாடத் தெரிந்தவர்கள்!


இன்னும் வரும்
*****************

1 comments:

said...

துளசி - கண்ணும் காதும் தொறந்தே வச்சிருப்பிங்களா ?? கூர்ந்து கவனித்து சிறு சிறு செய்திகளைக் கூட விட்டு விடாமல் திறமையுடன் எழுதுவது என்பது பாராட்டத்தக்கது.

இன்னிக்குக் கூட ப்ரிட்டீஷ் பாஸ்போர்ட் வைச்சிருக்கவங்களுக்கு நெரெய நாடுகளுக்கு விசா தேவை இல்லை.

துக்கம் நடந்த வீடுகள் - சமைப்பது இல்லை - அலங்கார ஆடைகள் - நண்பர்களின் வீடுகளிலிருந்து உணவு - ஒலிபரப்பில் செய்தி - முழுவதுமாக -350 குட்டி குட்டித் தீவுகள் - வீரவேல் வெற்றிவேல் - வந்து இறங்கிய அன்றே பட்டி தொட்டி எல்லாம் ரேடிய்யொலே சொல்லியாச்சு வருகை பற்றி - பகல்லெ ச்சுர்யக் குளியல் - இரவிலே பாரிலே குளியல் - எவ்வளவு செய்திகள் ...


அநியாயத்துக்கு நினைவாற்றல் - ka.kai.naa - kosuvaththi - mmmmm
இந்த ஆங்கில சொற்களுக்கு ராயல்டி யெல்லாம் கெடயாது.