Thursday, October 28, 2004

யூனிடி இன் டைவர்சிடி !!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 12 ரமாயண் மண்டலி!!!!!!
**********************

' மங்கள் கோ ஹமாரி கர் பர் ரமாயண் படே. ஜரூர் ஆனா!'



'மங்கள் கோ ஹமாரி கர் பர் ரமாயண் படே. ஜரூர் ஆனா!'

இது என்னவா? அழைப்பு! செவ்வாய்க்கிழமை அவுங்க வீட்டுலே ராமாயணம் படிக்கறாங்களாம்.
நாம் அவசியம் வரணுமாம்!

கல்யாணத்துலெ ஆரம்பிச்சு, சாவு வரைக்கும் ஆன்னா ஊன்னா ராமாயணம் படிச்சுருவாங்க! செவ்வாய்க் கிழமை
என்று இல்லை! எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கும்.

நிறைய ரமாயண் மண்டலிகள் இருக்கின்றன! நல்லதாக, பெரிய எழுத்தில் இருக்கும் பெரிய 'சைஸ்' புத்தகம்.
அதற்கு என்று சிவந்த நிறத்தில் ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய பட்டுத் துணி. அந்தப் புத்தகத்தை வைப்பதற்கு
அளவான ஒர் பை! இதுவும் பூவேலை செய்யப்பட்டு படுஅலங்காரமாக இருக்கும்! பிரித்த புத்தகத்தை வைக்க ஒரு
மடக்கு ஸ்டேண்ட்டு.

இந்த அலங்காரம், அளவு எல்லாம் எல்லாருக்கும் பொது! அநேகமாக 'துளசிதாஸர் எழுதின ராமாயணம்'தான்!

குறைந்தபட்சம் ஒன்பது பேர் அந்த மண்டலியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஹார்மோனியம், மிருதங்கம் போல
உள்ள ஒரு டோலக், சலங்கைகள் வைத்த ஒரு ஜால்ரா, அப்புறம் நீளமான ஒரு கம்பியில் சில மணிகள் கோர்த்திருக்கும்
மற்றொரு ( பெயர் தெரியாத) வாத்தியம், மற்றவர்கள் பாட்டு. அதிலும் ஒருவர் 'லீட் சிங்கர்'


ஒரு மண்டலியில் இருப்பவர்களே அநேகமாக எல்லா மண்டலிகளிலும் இருப்பார்கள். வேறு மண்டலி என்று போனால்
முந்தாநாள் இன்னொரு மண்டலியில் கதை சொன்னவர்தான் இங்கேயும் சொல்வார். கதை கேட்பவர்களும் அநேகமாக
ஒரே கூட்டம்தான். அப்புறம் எதற்கு ஒவ்வொரு பெயரில் இந்த ரமாயண் மண்டலி இருக்கிறதென்று இதுவரை தெரியவில்லை!

இவர்கள் பிரார்த்தனையும், மிகவும் எளிய பேச்சு மொழியிலேயே இருக்கும். சம்பிரதாயமான விஷயங்கள் முடிந்ததும்
வீட்டு உரிமையாளர்கள் வந்திருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து அனைவரும் உணவு அருந்திச் செல்ல வேண்டுமென்று
கேட்டுக் கொள்ளுவார்கள்.

ராமாயணம், சில அத்தியாயங்கள் படித்துக் கதை சொல்வதோடு இது முடியாது. அதன் பின் பிரசாதம் வழங்கப்படும். அப்புறமும்
முடியாது. இரவு உணவும் தயார் செய்திருப்பார்கள். அதையும் சாப்பிட்டுவிட்டு, கதை கேட்க வராமல், வீட்டிலிருக்கும் ஆட்களுக்கும்
'பார்ஸல்' கொடுத்து அனுப்புவார்கள்!

கதை கேட்கவரும் ஆட்கள் ஹிந்துக்கள் மட்டுமல்ல. இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எல்லோரும் வருவார்கள். அவர்கள் வீடுகளிலும்
இது போன்ற பூஜைகள் வேறு பெயரில் நடக்கும்! பைபிள் வாசிப்பார்கள். அதற்கும் எல்லோரும் போவோம்! எல்லாத்துக்கும்
எல்லோரும்!!

பூஜையில் ஒரு 'ஹவனும்' உண்டு. நம் நாட்டில் தீ வளர்த்து 'ஹோமம்' செய்கிறார்களே அதுதான் இது! 'காங்க்ரீட்'கொண்டு செய்த
ஒரு சதுர வடிவ ஹோம குண்டம், (தூக்குவதற்கு வசதியாகக் கைப்பிடியெல்லாம் இருக்கும்) எல்லா மண்டலிகளிலும் இருக்கும்!

பூஜை முடிந்ததும் அதை, 'அலேக்'க்காகத் தூக்கி வெளியில் வைத்து அணைத்து விடுவார்கள். குழுவினருக்காக 'யக்கோனா' கலக்கப்படும்!

வாராவாரம் இந்த மாதிரி ஏதாவது இருந்துகொண்டே இருக்கும்.

பிரசாத வகைகள் கட்டாயம் ஏழு விதங்கள் இருக்கும்.

பழங்கள், பால் சாதம், மாவிளக்கு மாவு போல இனிப்பு சேர்த்த ஒரு மாவு, ரவா லட்டு, பரா ( வடை தான்) ஹலுவா.
இந்த ஹலுவா, ரவையும், பாலும் , சக்கரை, நெய் சேர்த்து உண்டாக்கிய கேசரி. ( நல்லா, அல்வா கொடுங்கறாங்க!)

இரவு உணவு இப்படி. பூடி ( எல்லாம் நம்ம பூரிதான். பூரின்னு சொல்லக்கூடாதாம். அது என்னவோ கெட்ட வார்த்தையாம்!)
சாதம், ஆலு பைங்கன், டமாட்டர் சட்னி, தால், ஒரு ஸாலட், ஊறுகாய், பப்படம், இம்லி சட்னி, இது ஸ்டாண்டர்ட் மெனு.
அப்புறம் அந்தந்த வீடுங்களைப் பொறுத்து இன்னும் பல தினுசுகள்.

ஆமாம். இதையெல்லாம் சமைப்பது யார்? எல்லாம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்தான். காலையிலிருந்து எல்லோருமாகச் சேர்ந்து
சமைப்பார்கள். வேலை முடிந்ததும் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டு, மாலையில் அப்போதுதான் அங்கெ வருவதைப் போன்று
அலங்காரவதிகளாக அட்டகாசமாக வந்து சேர்வார்கள்.

பூஜைக்கு என்றில்லை எந்த விதமான விழா என்றாலும் நாம் அழைத்தவுடன் வந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச்
செய்து தருவார்கள். இப்படி இல்லையெனில், எங்கள் மகளின் 'மொட்டை அடித்துக் காது குத்தும் விழா'வுக்கு 300 பேருக்கு
சமைத்திருக்க முடிந்திருக்குமா?

அந்த ஊரின் 'மேயர் ( இவர் பிறகு அமைச்சராக ஆனார்) அவர்களின் மனைவி உட்பட எல்லோரும் வந்து இரண்டு நாட்கள்
சமையலுக்கு உதவினர்.'பந்தா' வெல்லாம் கிடையாது. பிறந்த நாள் விழாவுக்குப் பிரதமரைக் கூட அழைக்கலாம்! ரொம்ப எளிமையான
மக்கள்.

ஒரு தடவை, தெரிந்தவர் ஒருவர் வற்புறுத்திக் கூப்பிட்டார் என்று அவர்கள் வீட்டுப் பூஜைக்குப் போனோம். வழக்கம்போல எல்லாம் படித்து
முடித்தபின் அவர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்கள். அப்போதுதான் தெரிந்தது அந்த விசேஷம் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
என்று.

விவாகரத்து செய்திருந்த பெண்மணி தெரிவித்தது, முன்னாள் கணவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கவாம்!


2 comments:

said...

துளசி,
இம்மாதிரி கூட்டமாக சேர்ந்து பங்கேற்கும் பல நிகழ்வுகளை டிவி வந்தபின் நம் ஊரில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம். இதைக் கேட்கும்போது அது நினைவுக்கு வருகிறது.

நல்ல சுவையான தொடர்.
அன்புடன்,
-காசி

மேலே ஊர்வலம் போகும் யானைகள் அழகு. இங்கே குதிக்கும் யானைகள் லொள்ளு, சில சமயம் கவனத்தை சிதறடிக்கிறது.

said...

Tulsi...your doing a superb job..congrads..