Friday, November 19, 2004

இருப்பதா? போவதா?

ஃபிஜி அனுபவம் பகுதி 18
**********************

ஒரு வாரகாலம் முடங்கியிருந்த விமானச் சேவைகள் மீண்டும் ஒருமாதிரி ஆரம்பித்தன! ஆனால் எப்போது என்ன நடக்குமோ என்ற
பயம் காரணம் சுற்றுலாப்பயணிகள் யாரும் வரவில்லை!


ஒரு வாரகாலம் முடங்கியிருந்த விமானச் சேவைகள் மீண்டும் ஒருமாதிரி ஆரம்பித்தன! ஆனால் எப்போது என்ன நடக்குமோ என்ற
பயம் காரணம் சுற்றுலாப்பயணிகள் யாரும் வரவில்லை! இருப்பவர்களும் போய்ச் சேரும் வழியைத் தேட ஆரம்பித்தனர். அந்தந்த நாட்டினர்
தங்களுடைய குடிமக்களை(ஹாலிடே மேக்கர்ஸ்) இங்கிருந்து உடனே திரும்பிவரச் சொல்லி வேண்டுகோள் விடுவித்த வண்ணம் இருந்தனர்!

சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், எல்லா ரிஸார்ட்டுகளும் காலியாகிவிட்டன! அரசாங்கத்துக்கும் வருமானம் போச்சு!

ராணுவம் ஏன் இப்படிச் செய்தது என்பதற்குப் பலவிதமான காரணங்கள் கசியத் தொடங்கியன! முதல் காரணம் பணம்!!!!

இங்கே ஏது அவ்வளவு பணம்?

இதற்குமுன் இருந்த பிரதமர் கோடிக்கணக்கில் பணத்தை 'அமுக்கிவிட்டார்' என்றும், புது மந்திரிசபை வந்தவுடன் அந்த ஊழல் வெளிப்பட்டு
விடுமென்ற பயத்தில், ராணுவத்தின் உதவியுடன் இதை நடத்திவிட்டார் என்றும் பரவலான செய்திகள் வந்தவண்ணமிருந்தன!

இங்கே எப்போதும் புயல் வருவதால்,( அதுதான் வருடாவருடம் வருகிறதே!) மற்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் புயல் நிவாரணம் நிதியை
ஒழுங்கான முறையில் செலவுசெய்து கணக்கில் காட்டாமல், சுருட்டிட்டாங்களாம்! அதுவே மில்லியன் கணக்கில் இருக்குமே!

இந்த கலாட்டாவைப் பார்த்துட்டு, நம்ம 'மாட்சிமை தாங்கிய மஹாராணி ' சொல்லிட்டாங்க, 'ஃபிஜியை 'காமன்வெல்த் கூட்டத்துலே இருந்து
விலக்கப்போறோம்!'

இந்த 'தம்கி' யெல்லாம் எந்த மூலைக்கு?

(இந்திய அரசாங்கம் ஒண்ணும் செய்யாமச் சும்மா அறிக்கை விட்டுகிட்டு இருந்தது! அங்கெயே குடுமிப்பிடி சண்டை நம்ம அரசியல்வாதிங்களுக்கு!
அதுலெ பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை யாரு நினைப்பா? அவுங்க ஓட்டு கணக்குலே வராதில்லே!)

இதற்கு நடுவுலே நமக்கு அங்கெயே இருப்பதா அல்லது இந்தியாவுக்குப் போய்விடலாமா என்று ஒரே குழப்பம். இந்தக் கம்பெனி ஆரம்பித்து
ரொம்ப நன்றாக வளர்ந்து இருந்தது இந்த 5 வருசத்துலே! முதல் வருடம் முடிவதற்கு முன்பே, ஆஸ்தராலியக் கம்பெனி ஒன்று இதனுடன்
கூட்டுச் சேர்ந்துகொண்டது! அதற்குப் பின் அதே ஆஸ்தராலியக் கம்பெனி, நியூஸிலாந்து கம்பெனிகளையும் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது!

அங்கிருந்தெல்லாம் 'பெருந்தலைகள்' அவ்வப்போது ஃபிஜிக்கு விஜயம் செய்து கம்பெனி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதும் நடந்து
கொண்டிருந்தது. அவர்கள் வரும்போது, மனைவிகளும் கூடவே வருவார்கள். அவர்களுக்கு ஒரு ஃப்ரீ ஹாலிடே! அப்படியே,
நம் வீட்டுக்கும் வந்து ஒரு விஸிட் அடித்துவிட்டுப் போவார்கள்.

நமக்கும் ஒப்பந்தம் முடிவடையும் நாள் வந்துகொண்டிருந்தது! நாங்கள் 3 வருட ஒப்பந்தத்தில் வந்து, அது மீண்டும் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு
இருந்தது. இன்னும் 11 மாதங்களே இருந்தன! இந்தியாவுக்கே போகலாம் என்று முடிவு செய்து அதை நம் கம்பெனியிடம் தெரிவித்தோம்.
இன்னொரு எஞ்சினீயரை வரவழைக்க வேண்டுமல்லவா? அத்ற்கு நேரம் எடுக்குமல்லவா? இப்போது சொன்னால்தானே நல்லது!

அவர்களுக்கு நம்மை விட்டுவிட விருப்பமில்லை(!) ஃபிஜி குடியுரிமை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். 'ஆடிக் காத்தில் அம்மியே
பறக்கும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு?'

உள்ளூர் ஆட்களே, இங்கே இனி வாழ்க்கையில்லை என்று வெளியூர் கிளம்பிகின்றனர்!


மூணு மாசமாகிவிட்டது. ஒரே இறுக்கம்! ஏதும் முன்னேற்றம் காணப்படவில்லை. இன்னும் 'ராணி சாஹிபா'வின் ஆட்சியின் கீழேதான்
என்பதால் பேச்சு வார்த்தை(!) நடந்துகொண்டிருந்தது, இங்கிலாந்துடன்!

நம் ராணுவத்தலைவர் அவ்வப்போது ஏதாவது 'ஸ்டண்ட்' அடித்துக் கொண்டிருந்தார்! பழைய பிரதமரை ( ஊழல் பெருச்சாளி என்று
வதந்திகளில் வந்தவர்) புது 'கவர்னர் ஜெனரல்'பதவிக்குக் கொண்டுவந்தார்! ஒரு இடைக்கால அரசாங்கம் 'நியமிக்கப் பட்டது!'

உள்ளூர் டாக்டர்கள், இன்னும் நல்ல வேலைகளில் இருந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கனடா, ஆஸ்தராலியா, நியூஸிலாந்து
என்று போனார்கள். வேலை கிடைத்தல்ல! ச்சும்மாப் போய் வேலை கிடைக்குமா என்று பார்க்க! ஏற்கெனவே டூரிஸ்ட்டாக அங்கே
போனவர்கள் விசா முடிந்தபின்னும் திரும்பி வராமல் 'ஓவர் ஸ்டே'யாக நின்றுவிட்டனர்! அந்த அரசாங்கங்களும் ஏதாவது உதவி
செய்தேயாகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தன!

இங்கே தூதரகங்கள் எல்லாம் திரும்ப இயங்கத் தொடங்கிவிட்டன!

இந்திய ஹைக்கமிஷனர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவருடைய உரையில், இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு,
இந்த நாடு நல்ல நிலையில் இருப்பதற்கு இந்தியர்களின் உழைப்பே காரணம் என்று குறிப்பிட்டு விட்டாராம்! இது பொறுக்காத அரசு,
உடனே இந்தியத் தூதரகம் இனி தேவையில்லை. உடனே மூடப்படவேண்டும் என்று சொன்னது! இதனால் பரபரப்பு மீண்டும் தொற்றிக்
கொண்டது! அடுத்த நாளே, ஹை கமிஷனரும், அலுவலக ஆட்களும் கிளம்பிப் போய்விட்டனர்!

இதற்குள் நம் கம்பெனியின் 'பெருந்தலைகள்' கூடிப் பேசி, நீங்கள் இந்தியா திரும்ப வேண்டாம். ஆஸ்தராலியா அல்லது நியூஸிலாந்துக்கு
வந்துவிடுங்கள் என்று அழைத்தனர்!

இப்போது 'பந்து நம் பக்கம்'

ஆஸ்தராலியா பெரிய நாடு. ஒரு கண்டம் முழுவதும் ஒரே நாடு என்பது ஒரு சிறப்பு அம்சம்! ஃபேக்டரியும் பெரிது! முன்னேற நல்ல வாய்ப்பு
என்று பல நல்லவைகள் இருந்தாலும் என் மனதில் ஒரு அச்சம்! இங்கே ஃபிஜியில் வார, மாத இதழ்கள் என்று ஒன்றுமே வெளியாகாது.
தினசரிப் பேப்பரே ஒன்றே ஒன்று என்னும் போது இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? நமக்கோ, கொஞ்சம் ஏதாவது படிக்கவேண்டும்!
பொட்டலம் கட்டித்தரும் பேப்பர் என்றாலும் சரி! ஆனால் பொட்டலமே இல்லையே! எல்லாம் பாலித்லீன் பைகள்தானே!

ஊரில் இருந்து குமுதமும், ஆனந்தவிகடனும் வரவழைத்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் வேற ஒன்றும் இல்லாததால், ஆஸ்தராலியா
இதழ்களை ( இவை உள்ளூர்க் கடைகளில் தாராளமாகக் கிடைத்தன) வாங்குவதையும் வழக்கமாக்கி வைத்திருந்தோம்.

ஆஸ்தராலியாவைப் பற்றின என் அறிவெல்லாம்(!) இந்த இதழ்களின் மூலம் பெற்றவைதான். அப்போது அங்கே பள்ளிப் பிள்ளைகள் கூட
'ட்ரக்' உபயோகிக்கின்றனர் என்றெல்லாம் வந்துகொண்டிருந்தது. மேலும் 'இன ஒற்றுமை' அவ்வளவாக இல்லை என்றும் செய்திகள்
வந்துகொண்டிருந்தன. எனக்கோ வயிற்றீல் 'புளி!' பெரியவர்களுக்குப் பரவாயில்லை. ஆனால் குழந்தை, அடுத்தவருடம் பள்ளிக்குப்
போக ஆரம்பிக்குமே. பள்ளியில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் குழந்தையின் வாழ்வு பாதிக்கப்படுமே என்று ஒரே கவலை!

நியூஸிலாந்து பற்றித் தெரிந்த விஷயம் ஒண்ணும் இல்லை. ஃபிஜியில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத 'கேஸ்'கள்,
அவர்களுக்கு இருக்கும் நிதிநிலையைப் பொறுத்து, நியூஸிலாந்து நாட்டுக்கு வந்து குணம் பெற்றுத் திரும்பும்! பேச்சு வழக்கில் சொன்னால்
'ஏதோ கொல்லையில் இருக்கற இடம் போல, போயிட்டு வந்துட்டு இருக்கறது!'

அவ்வப்போது, மூணு மாசத்துக்கு 'விசா' இல்லாமலே போய்வரலாம் என்ற அதிரடி அறிவிப்புகள்வேறு வரும்! அப்போது, பலர் இங்கு வந்து,
'ஃப்ரூட் பிக்கிங்' வேலை செய்து சம்பாரித்துக் கொண்டு திரும்புவார்கள். ஒரு ஃபிஜி டாலருக்கு ரெண்டு நியூஸி டாலர்கள் இருந்த காலம்!
மேலும் ஃபிஜியில் வேலைக்கு வாரக் கூலிதான்! நியூஸியில் மணிக்கு இவ்வளவு என்று கூலியாச்சே! நல்ல காசு!

மேலும் 'நியூஸி'யில் வெள்ளை இன மக்களுக்கு மட்டுமே குடியேற்ற உரிமை என்ற கட்டுப்பாடு இருந்ததும், அப்போது புதிதாக வந்த
'லேபர் கவர்ன்மெண்ட்' இதைச் சற்று தளர்த்தியிருந்ததும் எங்களுக்குச் சாதகமாக இருந்தது!

வேலைக்கான அனுமதி என்று ஒருவகையும், பி. ஆர் ( பெர்மனன்ட்டு ரெஸிடன்ஸ்) என்ற ஒன்றும் இருந்தன. ஆனால் பி. ஆர்.
வேண்டுமானால் நிரந்தர வேலைக்கு உத்திரவாதம் இருந்தால்தான் கிடைக்கும்!

சரி ஒரு 'சான்ஸ்' எடுக்கலாம் என்று நினைத்தாலும், சரிவர விவரம் இல்லாமல் இடம் மாறுவது நல்லதல்ல என்றும் எண்ணம் இருந்தது.
என் கணவர் மட்டும் 'கம்பெனியை நேரில் போய்ப் பார்த்து விட்டு முடிவு' சொல்வதாகச் சொன்னார். நானும் வழக்கம் போல ஒரு
நீண்ட பட்டியலைக் கொடுத்தேன், என்னென்ன சாமான்கள் கிடைக்கும் என்ற விவரம் வேண்டி. அதில் முதலாவது இருந்தது எது என்று
சொல்லவும் வேண்டுமா? புளி!

இன்னும் வரும்
***************


0 comments: