Saturday, April 09, 2005

விடுமுறையின் கடைசி நாள்!!!!

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி!!! பாகம் 9


சனிக்கிழமை பிறந்தாச்சு! இன்னைக்கு இங்கேயிருந்து கிளம்பறதாலே, பெருமாள்கிட்டே சொல்லிக்கலாமுன்னு
அதிகாலையிலேயே போய் பூஜையிலே கலந்துக்கிட்டுப் பிரியாவிடையும் பெற்றுக் கொண்டேன். கோயிலிலே
கும்பாபிஷேகம், மே மாசம் 29 ஆம் தேதியாம். வேலைங்க ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு!



திருப்பி தங்குற இடத்துக்கு வந்து, மகளையும் கூட்டிக்கிட்டு 'வழக்கமான இடத்துக்கு' ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப்
போனோம்.

இந்தத் தங்கற இடம்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்ல. இதைப் பத்திக் கொஞ்சம் சொல்லிரணும். இல்லையா?

இந்த ஹோட்டல் பேரு 'நியூ பார்க் ஹோட்டல்'. நம்ம முஸ்தாஃபா கடைக்கு ஜஸ்ட் பின்னாலெ இருக்கு!
அஞ்சு நட்சத்திர அந்தஸ்து பெற்றது! எல்லா ஹோட்டலும் போல இங்கேயும் 'ரிசப்ஷன் கவுன்டரிலே' சின்னப்
பசங்கதான்! என்ன, வயசு ஒரு 22 இருந்தாலே ஜாஸ்தி!! அதே போல நம்ம முஸ்தாஃபா கடையிலேயும் பல
இளம் பெண்கள் வேலை செய்யறது மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு! இந்தக் கடையைப் பத்தி அப்புறம்
சொல்றேன். இப்ப சொல்லவந்தது என்னன்னா, இந்த ஹோட்டல் விஷயம்....

நல்ல சுத்தமான இடம். அறைகள் எல்லாம் வசதியா இருக்கு. இங்கே தங்கறதுக்கு சார்ஜ் ( நாம எடுத்த ரூமுக்கு)
ஒரு நாளைக்கு 270 சிங்கப்பூர் வெள்ளியாம். நாம இணையம் மூலம் பதிவு செஞ்சதாலே 65% தள்ளுபடி கிடைச்சது!
'நெட்'லே எவ்வளவு வசதி பாருங்க!!! இதுக்குன்னு ஒரு 'சைட்' இருக்கு. யாருக்காவது வேணுமுன்னா ஒரு
தனி மடல் போடுங்க, அந்த விலாசம் தாரேன்.

'நான்ஸ்மோக்கிங் ஏரியா' வேணுமுன்னு கேட்டதாலே 18வது மாடியிலே ரூம் கிடைச்சது. இந்த தளத்தைச் சுத்தம்
செய்யற 'ஹவுஸ்கீப்பர்' நல்லவங்களா இருந்தாங்க. நாந்தான், 'தினம்தினம் 'பெட்ஷீட்'எல்லாம் மாத்தவேணாம்
( நம்ம வீட்டுலே தினமுமா ஷீட் மாத்தறோம்?)மூணு நாளைக்கு ஒருக்கா மாத்தினாப் போதும். டவல்ஸ் மட்டும்
தினமும் மாத்துங்க'ன்னு சொன்னதும் அந்தம்மாவுக்கு ஒரே சந்தோஷம்!!! டீ, காஃபி தயாரிக்க வசதி இருக்கு.
(யாருக்கு வேணும்னு தினமும் ஃபில்டர்கஃபிக்கே போய்க்கிட்டு இருந்தேன்.) ஆனா, 'நல்லா வசதியா இருக்கு,
நினைச்ச நேரத்துக்குக் காஃபி குடிக்க முடியுது'ன்னு மக சொல்லிக்கிட்டு இருந்தா. இதெல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே
தெரிஞ்ச விஷயம்தான். புதுசா ஒண்ணுமில்லே. ஆனாலும் தெரியாத ஒரு சிலருக்குப் பயன்படலாமேன்னு எழுதுனேன்!

இந்தமுறைதான் கவனிச்சேன் சிங்கையிலும் எங்க ஊர் மாதிரி ஒரே 'ஸ்மோக்'!!!! சூரியன் நடு உச்சிக்கு வர்றவரை
மாடி ஜன்னலுவழியாப் பாக்கறப்ப 'ஹை ரெய்ஸ் பில்டிங்ஸ்' ஒண்ணும் தெரியலை!!!! இது கொஞ்ச நாளுலே
ஒரு பிரச்சனையாவறதுக்கு சான்ஸ் இருக்கு!

இப்ப முஸ்தாஃபா ஹோட்டல் புதுப்பிக்கறதாலே அது மூடியிருக்கா, அதாலே இங்கே ரொம்பக் கூட்டம்!!!! நிறைய
இந்தியர்களைக் குறிப்பா வட இந்தியர்கள் அப்புறம் ஆந்திரர்களைப் பார்த்தோம். நம்ம ஆளுங்க இப்பல்லாம்
வெளிநாடுகளுக்கு டூரிஸ்டாப் போறது சந்தோஷமான விஷயம்தான்! நாலு இடமும் சுத்தி, உலகத்தைப்பத்தித்
தெரிஞ்சுக்கறது நல்லதுதானே!

இன்னொண்ணும் இருக்கு. இந்த 'செக் அவுட்' நேரம் பகல் 12 மணின்றது நிறைய ஊர்களிலே இருக்குறதுதான்,
ஆனா, வாயிலே இருக்கு வழின்றதாலே நாம இன்னும் கொஞ்ச நேரம் தரும்படிக் கேட்டுக்கலாம்.( இங்கே
எங்க ஊர்லே காலையிலே 10 மணி. ரொம்ப அநியாயம் இல்லே?)

எங்களுக்கோ ராத்திரி 9 மணிக்குத்தான் ஃப்ளைட். பகல் 12லெ இருந்து எங்கே சுத்தறது? எக்ஸ்ட்ரா டைம் கேட்டதுலே
2 வரை தரேன்னு சொன்னாங்க. ஆனா, நானு ப்ளைட் நேரத்தைச் சொல்லி,(எட்டுநாளு அங்கெ ரூம் எடுத்ததையும்
சொல்லி!) குறைஞ்சது 5 மணிவரை வேணுன்னு கேட்டேன்.ச்சும்மா கேட்டுவைக்கறதுதான்.எப்படியும் 4 வரையாவது
கிடைக்குமே! அதேபோல 4 வரை கிடைச்சது.

எனக்கு யானை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு பூனையும் பிடிக்கும். ஏதாவது யானை, பூனை பொம்மைங்க
வாங்கணுமுன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். முந்தி( கடைசியா அங்கே வந்து 2 வருசமாச்சு) அங்கே லிட்டில் இந்தியா
ஆர்கேட்லே ஒரே ஒரு கடையிலேதான் யானை டிஸைன் போட்ட நாப்கின்ஸ், டேபிள்க்ளாத், வால் ஹேங்கர்ஸ்'னு
இருக்கும். இப்ப என்னன்னா, எங்கெ பார்த்தாலும் யானைங்க!!! 'டூ மெனி'யாகிப்போச்சு!!நம்மளை மாதிரி
ஜனங்க பெருகிட்டாங்க போல!!!

நானு, யானையும், புள்ளையாருமா( அவரும் யானை முகத்தவனாச்சே!) கலெக்ட் செஞ்சுக்கிட்டு இருக்கேன். விதவிதமா
வச்சிருந்தாலும் இன்னும் புதுசா என்ன இருக்குன்னும் தேடிக்கிட்டே இருப்பேன். ரெண்டு மூணு வாங்கிக்கிட்டு
அப்படியே போறப்ப அங்கெ ஒரு கடையிலே... அடடா.....

ஒரு ச்சின்ன பட்டு மெத்தை, இள மஞ்சள் கலருலே! அதும்மேலே குப்புறப்படுத்திருக்கற குழந்தை! அதுவும் நல்ல
மஞ்சள் பட்டு 'நாப்பி' போட்டிருக்கு! உச்சியிலே ஒரு ச்சின்னக் கொண்டை,அதுலே ஒரு மயில் பீலி! கைவிரல்
வாயிலே போட்டு சூப்பிக்கிட்டு இருக்கு! ஓஓஓ.... தெரிஞ்சிடுச்சு! அதான் நம்ம பேபிக்கிருஷ்ணர். ஆனா
முகம் மட்டும் யானை!!!! அம்சமா இருக்கற யானைக்காது!!! ஐய்யோ...என்ன ஒரு அழகான
பேபிப் புள்ளையார்!!!!! ச்சின்ன பொம்மைதான். விலை கொஞ்சம் (10 வெள்ளி)கூடுதலோன்னும் இருந்தாலும் விட
மனசில்லை. அப்படியே பஃபெல்லோ தெரு போய் புதுசா புத்தகம் வந்துருச்சான்னும் விசாரிச்சேன். நாளைக்கு
வருதுன்னு ஒரு 'ஸ்டேண்டர்ட் ரிப்ளை' கிடைச்சுச்சு!-))))))

கொஞ்சம் ஓய்வெடுத்துகிட்டுச் சாமான்கள் எல்லாம் பேக் செய்யலாம். ராத்திரிக்கு நல்லதூக்கம் இன்னைக்குக் கிடையாது.
பத்தரை மணிநேரம் பிரயாணமாச்சே!எப்பவும் இருக்கற லாஸ்ட் மினிட் பர்ச்சேஸ் ஒண்ணும் பாக்கி இருக்கே, அதையும்
முடிச்சிடலாமுன்னு கோமளவிலாஸ் ஸ்வீட்ஸ் கடைக்குப் போனோம்.

வழக்கமா வாங்குறமாதிரி, ஜாங்கிரி, ஹல்வா வகைகள், முறுக்கு, காராசேவு போன்ற நொறுக்ஸ் எல்லாம் தூக்க
முடிஞ்ச அளவு வாங்கிகிட்டு ரூமுக்குப் போய்ச் சேர்ந்தோம். மழை பெய்ய ஆரம்பிச்சது! ரொம்ப நாளா மழையே
வரலைன்னு ஜெயந்தியும், சித்ராவும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நல்லவங்க(!) ஊரைவிட்டுப் போறாங்களேன்னு
மழை கொஞ்சம் வலுவா வந்துக்கிட்டு இருந்துச்சு!

சாமான்களையெல்லாம் அடுக்க ஆரம்பிச்சேன். மகள், அவளோட புதுக் கேமெராலெ இன்னும் சில படம் எடுக்கறேன்னு
சொன்னா.அப்பப் பார்த்து, அது வேலை செய்யலை!!! அதோட புத்தகத்தை எடுத்துவச்சுக்கிட்டு 'ட்ரபுள் ஷூட்டிங்'
பக்கத்தைப் படிச்சுக்கிட்டு இருக்கா. இது சரிப்படாது. இப்பவே 'சிம்லிம் ஸ்கொயர்' போகணுமுன்னா போய்வந்துறலாம்னு
சொல்லி, ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டுப் போனோம். சரியான மழை!கார் இஞ்ச் இஞ்சா நகருது.'ஜலான் பெசார்'
ரோடுலே அப்படி ஒரு ட்ராஃபிக் ஜாம்!!!! மணியோ ஒண்ணாகப் போகுது!

ஒருவழியா அங்கெபோய்ச் சேர்ந்தோம். அந்தக் கேமெராக்கடை எனக்கு நல்ல பழக்கமானதுதான். நல்ல வேளையா
அந்த சேல்ஸ்மேன் பையனும் அங்கே இருந்தான்(ர்). விஷயத்தைச் சொன்னதும் வாங்கிப் பார்த்துட்டுக், கவலைப் படாதீங்க,
வேற தரேன்னுட்டு ஒரு புது 'பேக்'கைத்திறந்து இந்த 'ச்சிப்பை' அதுலே போட்டுக் கொடுத்தான்(ர்). அப்ப அதுக்கு
இன்னோரு ஸ்பேர் பேட்டரி என்ன விலைன்னு கேட்டு வச்சேன்.( மகள் அதை வேற ஒரு கடையிலே 85 வெள்ளிக்கு
ஏற்கெனவே வாங்கியிருந்தா!)40 வெள்ளியாம்!!!!!! மகளோட முகம் போன போக்கைப் பாக்கணுமே((((-

மழை நின்னு போச்சு! அப்படியே டெக்கா மால்வரை நடந்து வந்தோம். அதுக்குள்ளே நுழைஞ்சு வந்தா, அங்கே
ஒரு கடையிலே நாம வாங்குனதைப் போல ஒரு பேபிப் புள்ளையார்! எனக்கு ஒரு கெட்ட(!) பழக்கம் இருக்கு.
ஒரு சாமான் வாங்கினப்பிறகும்கூட, எங்கேயாவது அதைப் போல இன்னொண்ணைப் பார்த்தாவிலை விசாரிக்கறது!
கோபால்தான் இதைக் கெட்ட பழக்கமுன்னு சொல்லிக்கிட்டு இருப்பார். ச்சும்மா, நாம சரியான விலை கொடுத்தமா
இல்லை, ஏமாந்துட்டமான்னு தெரிஞ்சுக்கறதுக்குத்தான்!

அந்த பொம்மை அங்கே 16.90 வெள்ளி! மனம் சமாதானமாச்சு! அப்படி இப்படின்னு மணி 2 ஆயிருச்சு. பகல்
சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுப் போய் பேக் செய்யலாமுன்னு நினைச்சு, பழையபடி கோமள விலாஸ்! சாப்பாடே
சாப்பிட்டோம். மூணு மணிக்கு பேக் செய்ய ஆரம்பிச்சு, வேலையை முடிச்சுக்கிட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டுச்
சரியா 4 மணிக்கு சாமான்களையெல்லாம் 'லாபி'க்குக் கொண்டு வந்து வச்சிட்டு, பில் எல்லாம் செட்டில் செஞ்சுட்டு
எதுத்தாப்புலே இருக்கற முஸ்தாஃபா ஷாப்பிங் சென்டருக்குப் போனோம். இன்னும் ரெண்டுமணி நேரம் இருக்கே!!!




0 comments: