Sunday, September 11, 2005

முண்டாசின் நினைவு.

இன்னிக்கு காலேல தினசரிக் கேலண்டரிலே வழக்கம்போலத் தாளைக்கிழிச்சவுடனே
வழக்கம்போலவே வாசிப்பும்(படிப்பு !) ஆரம்பமாச்சு. அஷ்டமி 45.36 கேட்டை 42.12 அகஸ் 30.17 மரண 42.12
அமிர்த யோகம். பெருங்கவி பாரதியார் நினைவுநாள்......... ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்.



நம்ம முண்டாசுக்கவிஞரோட நினைவுநாளா இன்னிக்கு? ஐய்யோ, யானையாலே அவருக்கு முடிவு வரணுமுன்னு இருந்திருக்கே!
மனசுக்குள்ளே ஒரு தவிப்பு. எனக்கோ, யானைன்னாவே பிரியம் ஜாஸ்தி. அதன்காரணமாவே புள்ளையாரும் பிடிக்கும். வீட்டுலே
எங்கே பாத்தாலும் யானையும் புள்ளையாருமா இருக்குற நம்ம வீட்டுலேயும் ஒரு அருமையான பாரதியார் படம்
இருக்கு. நல்ல பெரிய படம்.

ஒருதடவை நம்ம வானதி திருநாவுக்கரசு ஐயாவைச் சந்திச்சுப் பேசிக்கிட்டு இருந்தேன். எப்பன்னா ஒரு 20 வருசத்துக்கு முன்னாலே.
அப்ப பேச்சுவாக்கிலே 'உங்ககிட்டே பாரதியார் படம் இருக்காம்மா?'ன்னு கேட்டார். 'இல்லீங்களே' ன்னு சொன்னவுடனே, அவரோட
உதவியாளரைக் கூப்பிட்டு பாரதியார் படம் ரெண்டு கொண்டுவரச் சொல்லி அன்போடு கொடுத்தார். அப்ப என் மடியிலே இருந்த
என் மகள்கிட்டே( அப்ப ஒண்ணரை வயசுக் குழந்தை) 'இது யாரு? பாரதித்தாத்தா'ன்னு சொன்னார். மகளும் 'பாதித்தாத்தா'ன்னு
மழலையிலே திருப்பிச் சொன்னதும் அவர் முகத்துலே ஆனந்தப் புன்சிரிப்பு.

சின்னக் குழந்தையா இருக்கறப்ப வீட்டுக்கு யார்வந்தாலும் அவளோட பொம்மைகளை அறிமுகப்படுத்திக்கிட்டே வரும்போது,
ஹால் சுவத்துலே மாட்டியிருக்கற பாரதியாரோட படத்தைக் காமிச்சு 'இது பாதித்தாத்தா'ன்னு சொல்லுவா.
அதுக்கப்புறமும் இத்தனை வருஷகாலமா பாரதியாரோட படத்தைப் பாக்கறப்பெல்லாம் 'பாரதித்தாத்தா' ன்னு மறக்காமச் சொல்ற
மகளை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

நினைவு அலைஅலையா வரஆரம்பிச்சதும், பொழுது விடிஞ்சவுடனே இப்படி இருந்தா ஒண்ணும் வேலைக்காகாதுன்னு,
பாரதி படத்துக்கு முன்னாலே ஒரு நிமிஷம் மெளனமா நின்னு மனசுக்குள்ளே ஒரு அஞ்சலி சொல்லிட்டு வீட்டுவேலையை
ஆரம்பிச்சேன். 'இன்னும் கொஞ்சநாள் இருந்து சுதந்திர இந்தியாவைப் பாக்காமப் போயிட்டையே ஐயா'ன்னு மனசு
கொஞ்சமே கொஞ்சம் புலம்புச்சு.

அந்த இன்னொரு படம் என்ன ஆச்சுன்னு கேக்கறீங்களா? நம்ம தோழி ஒருத்தர் இருந்தாங்க. அவுங்களும் ஒரு
தமிழ்ப்பிரியைதான். பொன்னியின் செல்வனோட தாக்கத்துலே, அவுங்க பிள்ளைகளுக்கு 'குந்தவை, ராஜன்' னு பெயர்
வச்சிருந்தவுங்க. அவுங்க நம்ம படத்தைப் பார்த்துட்டு, 'ஏதுங்க பாரதியார் படம்? நல்லா இருக்குங்க'ன்னு சொன்னாங்களா,
'இந்தாங்கன்னு'ன்னு ரெண்டாவதைக் கொடுத்துட்டேன். அப்ப நாங்க இருந்த ஊரும் பாரதியாரின் நினைவில் இருந்த
ஊர்தான். அவரோட 'கரும்புத்தோட்டத்திலே' கவிதையோட களம், ஃபிஜித்தீவுகள்!



3 comments:

said...

>>ஐய்யோ, யானையாலே அவருக்கு முடிவு வரணுமுன்னு இருந்திருக்கே<<

பாரதியின் முடிவு யனையால் ஏற்படவில்லை.யானைச் சம்பவம் நடந்தது ஜூனில். பாரதி மறைந்தது நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல இன்று.

யானைச் சம்பவத்திற்குப் பிறகு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வேலைக்குப் போய்வந்தார்.ஆகஸ்ட் 4ம் தேதி சுதேசமித்ரனில் எனது ஈரோடு யாத்திரை என்று ஒரு கட்டுரை எழுதினார். ஆகஸ்ட் 11ம் தேதி காந்தியடிகளின் ஒரு கோடி ரூபாய் திலகர் நிதி பற்றி எழுதியிருக்கிறார். அதன் பின்னர் ரவீந்திரநாத் தாகூரின் ஐரோப்ப்பிய விஜயம் பற்றிக் கட்டுரை எழுதினார். இதுதான் அவரது கடைசிக் கட்டுரை (இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் சுதேசமித்ரனில் அவர் எழுதிய முதல் கவிதையும் வங்கம் சார்ந்தது.கவிதையின் பெயர் வங்கமே வாழிய)

யானைச் சம்பவத்திற்குப் பின் உடல்நலம் தேறிவிட்டதாக பாரதிதாசனுக்குக் கடிதம் எழுதினார். 'நான் நம்ப மாட்டேன், படம் எடுத்து அனுப்புங்கள்' என்று அவர் வற்புறுத்தியதின் பேரில் சென்னை பிராட்வேயில் இருந்த ரத்னா கம்பெனி என்ற ஸ்டுடியோவிற்குச் சென்று ஜூலை 1921ல் படம் எடுத்துக் கொண்டார். அதுதான் இன்று பிரபலமாகக் காணப்படும் முண்டாசுடன் கூடிய படம்.
யானைச் சம்பவத்திற்குப் பின் திருவல்லிக்கேணி வீதிகளில் தேசிய பஜனை நடத்தினார். ஒரு முறை செல்லம்மாவை சென்னை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் நடந்த ஒரு மாதர் அமைப்பின் பொதுக் கூட்டத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு அலுவல்கம் போயிருக்கிறார். அவரே வெளியூர் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஈரோட்டிற்கு அருகில் உள்ள கருங்கல்பாளையத்தில்தான் கடைசியாகப் பேசினார். அவர் பேச்சின் தலைப்பு: "மனிதனுக்கு மரணமில்லை"

அன்புடன்
மாலன்

said...

அன்புள்ள மாலன்,

தகவலுக்கு நன்றி.

இந்த யானை சம்பவத்துக்குப்பின் அவருடல் நிலை பலஹீனமடைந்து
அப்புறம் சில மாதங்களில் இறந்துவிட்டார் என்று எங்கோ படித்ததின் நினைவில் இப்படிக்குறிப்பிட்டுவிட்டேன்.

நல்லவேளை, உண்மையான தகவல் தங்களால்கிடைத்தது.

அப்பாடா... யானையால் அல்லஎன்றதில் பரம நிம்மதி.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

ஆனால் இன்னும் வரலாற்றுப் புத்தகத்தில் யானையால் இறந்ததாகத்தான் பதிவு. மாலன் போன்றவர்கள் அதை மாற்ற பரிந்துரைக்கலாமே.

பாரதி பாடம் படித்த பிறகு என் மகன் யானையைக் கண்டு பயந்து ஓடிவிடுகிறான்;பாரதியின் பாடல்களைப் பிடித்துப்போய்ப் பாடி பரிசு வாங்குகிறான்!!!