Saturday, October 01, 2005

நியூஸிலாந்து. பகுதி 9

கப்பல் காத்திருக்கு!



இப்போது நாமெல்லாம், தெற்குத்தீவை நோக்கிப் போகின்றோம். அப்படியே விமானத்துலே போனால் ஒரு 40நிமிசம் போதும். ஆனால் வழியிலே வேடிக்கை ஒன்றும் பார்க்க முடியாதல்லவா?ஆகவே, நாம் வெல்லிங்டன் நகரிலிருந்து, 'குக் ஜலசந்தி' ( எல்லாம் நம்ம கேப்டன் ஜேம்ஸ் குக் தான்.இவர்தானே இந்த நாட்டைக் கண்டுபிடிச்சவர்)வழியாகக் கப்பலிலே போகிறோம்.


இது ஒரு 3 மணிநேரப் பயணம். நாம் போய்ச் சேருமிடம், 'பிக்டன்' என்னும் ஊர். அங்கிருந்து 'கார்'பயணம்.விருப்பம் என்றால் ரயிலிலும் போகலாம்! கார் தான் வசதி. நம் காரையுமே இந்தக் கப்பலிலே கொண்டுவந்து விடலாமே!
வரும் வழியில், ரொம்பவுமே குளிராக இல்லையென்றால், வெளியில் நின்றுகொண்டு, அவ்வப்போது துள்ளிக் குதித்துவிளையாடும் 'டால்·பின்' மீன்களைப் பார்த்து ரசிக்கலாம்!


இதைவிட வேகமாகப் போகும் '·பாஸ்ட் ·பெரி சர்வீஸ்' உண்டு.அதிலே போனால் இரண்டு மணி நேரம்தான். நாம்ஊரைச் சுற்றிப் பார்க்க அல்லவா வந்திருக்கிறோம். ஆகவே நிதானமாக எல்லாவற்றையுமே ரசிக்கலாம்!
எல்லாவற்றுக்கும் முன்பாக உங்கள் கைக்கடிகாரங்களில், இப்போது காண்பிக்கும் நேரத்தைவிட ஒரு மணி அதிகமாகவைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் கடிகாரம் காண்பிக்கும் நேரம் பத்து என்றால் அதைப் பதினொன்றாக ஆக்கிவிடுங்கள்!


இதைப் பற்றிய முழுவிவரமும் கீழே தருகின்றேன்!


பகல் நேர சேமிப்பு ( Day light Saving)


பகல் நேரச் சேமிப்பு நாளைக் காலை இரண்டு மணி முதல் ஆரம்பிக்கும் என்று தொலைக்காட்சியிலும், செய்திதாள்களிலும் வந்திருந்தது. இரவு தூங்கப்போகும் முன்பு வீட்டிலுள்ள கடிகாரங்களை ஒரு மணி நேரம்கூட்டி வைக்க வேண்டும்.


பகல் நேரச் சேமிப்பு என்றால் என்ன?


பூமத்திய ரேகைக்கு மேலும், கீழுமாய் கடக, மகர ரேகைகள் இருக்கின்றனவல்லவா? இவற்றிற்கு இடையில்உள்ள பகுதி 'ட்ராபிக்கல்' பகுதி என்று அழைக்கப்படுகின்றது. இங்கெல்லாம் சூரியன் உதயமாகும் நேரமும்,அஸ்தமிக்கும் நேரமும் காலை 6 மணி, மாலை 6 மணி என்று இருக்கும். பகல் நேரமும், இரவு நேரமும் அநேகமாக 12 மணி அளவில் இருக்கும். கோடைக் காலங்களில் சூரியன் 6 மணிக்கு சிறிது முன்பாகவும்,குளிர் நாட்களில் 6 மணிக்குச் சற்றே பிந்தியும் உதயமாகும். அதுவும் கூட அநேகமாக ஒரு பத்து நிமடவித்தியாசம்தான்!


இந்த 'ட்ராபிக் ஆ·ப் கான்ஸர், ட்ராபிக் ஆ·ப் கேப்ரிகார்ன்' ( கடகம், மகரம்)இரண்டுக்கும் மேலேயும்,கீழேயும் உள்ள நாடுகளில், கோடைக்காலம் என்றால் காலை சூரியோதயம் ஆறுமணிக்கு முன்பே ஆரம்பித்துவிடும். இதுவே கோடைக்காலம் ஆரம்பித்து நாட்கள் போகப் போக இன்னும் சீக்கிரமாக சூரியோதயம் நிகழும்.அதுபோலவேஅஸ்தமன சமயமும் 6 மணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தள்ளித்தள்ளி போகும். டிசம்பர் மாதம் 22 தேதியன்று பகல் பொழுது மிகவும் நீண்டு இருக்கும். காலை 4 மணி அளவில் சூரியோதயம்ஏற்பட்டு, மாலை 9 மணிவரையும் அன்று பகல் பொழுது சூரிய வெளிச்சம் இருக்கும்! அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பகல் பொழுது சுருங்கி வர ஆரம்பிக்கும். ஜூன் மாதம் 22 ஆம் தேதி மிகக் குறைந்தபகல் பொழுது உள்ள நாளாகும். இவைகளையே 'லாங்கஸ்ட் டே, ஷார்ட்டஸ்ட் டே' என்று சொல்வார்கள்.


பூமத்திய ரேகைக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் குளிர்காலம் இருக்கும்போது, தெற்கேயுள்ள பகுதிகளில்கோடைக் காலமாக இருப்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமல்லவா?


பகல் பொழுது அதிகமாக இருக்கும் நேரங்களில் பகல் நேரத்தைச் சேமிக்கிறார்கள். மொத்தமே ஒரு நாளுக்கு 24 மணிதானே? எப்படி நேரத்தைச் சேமிக்க முடியும்? எந்த வங்கியில் இதை சேமிக்கிறார்கள் என்றெல்லாம்கேள்விகள் எழுகின்றதல்லவா?


இங்கே நியூஸிலாந்தில் குளிர் காலம் முடிந்து வசந்தகாலம் செப்டம்பர் 1 முதல் தொடங்கி விடுகின்றது.குளிர் காலத்தில், ஜூன் 22க்கு, ஏழரைமணிக்கு நேரும் சூரியோதயம், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துஅக்டோபர் 3ஆம் தேதி காலை 6 மணி 1 நிமிடத்திற்கு நடைபெறும். இந்த வருடம் 'லீப்' வருடம் என்பதால்இது அக்டோபர் 2ஆம் தேதி நிகழ்ந்தது! மறு நாளிலிருந்து 5மணி, 59 நிமிடம், அதற்கு அடுத்தநாள் 5 மணி57 என்று குறைந்துகொண்டே வரும்.
சீக்கிரம் பொழுது விடிந்துவிடுவதால், எல்லோருக்கும் சீக்கிரமே விழிப்பு வந்து விடுமாம். (ஆனால் இதுஎல்லோருக்கும் பொருந்துமா? 'கும்பகர்ணர்கள்' இங்கே மட்டும் இருக்க மாட்டார்களா?) அப்படி சீக்கிரம்எழுந்திரிப்பவர்கள், வேலைக்கோ, பள்ளிகளுக்கோ செல்வதற்காகத் தயாராகிவிட்டு, நேரம் போகாமல்சும்மாதானே இருப்பார்கள்? இங்கே வேலை காலை 8.30க்கும், பள்ளிக்கூடங்கள் 9 மணிக்கும் ஆரம்பிக்கும்.சும்மா இருக்காமல் சீக்கிரமாக வேலைக்கோ, பள்ளிகளுக்கோ சென்றுவிட்டால், சீக்கிரமாக வீடு திரும்பலாம்.எல்லோரையும் எப்படி சீக்கிரமாகக் கிளம்ப வைக்க முடியும்? சிலபேர், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்என்று நினைத்துவிட்டால்?
அப்போது எல்லோரையும் காலை நேரத்தில் விரட்ட என்ன வழி? ஆஹா! 'யூரேகா!' கண்டுபிடிச்சாச்சு!கடிகாரத்தில் காலை 6 மணியை 7 என்று மாற்றிவிட்டால் எல்லோரும் நேரமாகிவிட்டதே என்று அவதி அவதியாகக்கிளம்பிவிடலாம் என்று யாரோ 'ப்ரகஸ்பதி' கண்டுபிடித்ததுதான் இந்த பகல்நேர சேமிப்பு.


இதை 'ஒரிஜனலாகக் கண்டுபிடித்த நாடு' இங்கிலாந்துதான். இங்கே புலம் பெயர்ந்த வெள்ளையர்களுக்குஅது 'தாய்நாடு'அல்லவா? என்ன இருந்தாலும் பாசம் போகுமா? அங்கே என்ன மாற்றங்கள் நேர்ந்தாலும்,அதை ஓரளவாவது புலம் பெயர்ந்தவர்களும் கடைப்பிடிப்பது ஒரு மரபாக ஆகிவிட்டதே!
இங்கே நியூஸிலாந்தில் இதைத் தொடங்குமுன் ஒரு கருத்துக் கணிப்பு நடந்ததாம். அதில் நிறையபேர் இதைஆதரித்து ஓட்டுப் போட்டதால் இது நடைமுறைக்கு வந்துவிட்டது. இது தொடங்கி இந்த ஆண்டோடு சரியாகமுப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த மாற்றமாக இருந்தாலும் நியாயமாக நடப்பதாகக் காண்பிப்பதற்கு ஒரு பொதுக் கருத்துக்கணிப்பு, தேர்தல் நடக்கும் சமயம் சேர்த்து நடத்தப்படும். ஓட்டுச் சீட்டுபோல ஒன்றுதரப்படும். அதை நாம் வழக்கமாக்ப் போடும் ஓட்டுச் சீட்டோடு சேர்த்து இரண்டு சீட்டாகப் பெட்டியில் போடவேண்டும்!



முதலில் கோடைகாலம் ஆரம்பித்தபோது மட்டும் என்றிருந்து, படிப்படியாகக் கூடிப்போய் இப்போது வசந்தகாலம்தொடங்கி ஒரு மாதம் ஆனதுமே இதையும் ஆரம்பித்துவிடுகின்றனர். அக்டோபர் மாதம் முதல் ஞாயிறன்றுஆரம்பித்து, கோடை முடிந்து, இலையுதிர் காலம் மார்ச் மாதம் ஆரம்பித்தபின்னர் மூன்றாம் வாரம் இதுமுடிவடையும்.

இதனால் என்ன பயன்?


அரசாங்கம் சொல்கிறது இப்படி. சீக்கிரம் வீடு திரும்புவதால், மாலை நேரங்களில் குடும்பத்தாருடன் கூடுதல்நேரத்தைச் செலவிடலாமாம்! உடற்பயிற்சி, பொழுது போக்கு நடவடிக்கைகள் என்று ஏதாவதில் அந்த நேரத்தைச்செலவிடலாமாம்! ஒரு மணி நேரம் கிடைப்பது என்பது பல விஷயங்களுக்கு உதவியாக இருக்குமாம்!


விவசாயிகளும், பால்ப் பண்ணை வைத்திருப்போரும் இதை ஆதரிக்கவில்லை. காலை 5மணிக்குப் பால் கறக்கும்வழக்கம் என்று வைத்துக்கொண்டால், பகல் நேரச் சேமிப்பின்போது,அரசாங்கம் அறிவித்த நேரம் காலை மணி 5 மணி என்பது,உண்மையாக 4 மணிதானே! அப்படி இருக்கும்போது இருட்டில் யார் போய் பால் கறப்பது, மற்றும்விவசாய வேலைகளைக் கவனிப்பது என்று அவர்கள் இதை விரும்பவில்லை. முதல் 5 வருடங்கள் அவர்கள் இதைஎதிர்த்தும், அவர்கள் கடிகாரத்தில் நேரத்தை மாற்றாமல் எப்போதும் போலவே இருந்தார்களாம்.


இதனால் அவர்கள் பலவித இடைஞ்சல்களுக்கும் ஆளானார்களாம். கறந்த பாலை, வாங்கிக் கொண்டுபோக வரும்'டாங்கர்கள் லாரிகள்' ஒருமணிநேரத்திற்கு முன்பே வந்துவிடுமல்லவா? பிள்ளைகளும், பள்ளிக் கூடங்களுக்கு ஒருமணி நேரம்தாமதமாகப் போய்ச் சேர்வார்கள் அல்லவா? இந்தக் குழறுபடிகள் எல்லாம் சகிக்க முடியாமல் போனவுடன், அவர்களும்அரசாங்க நேரத்தையே கடைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
நாடு முழுவதும் ஒருமணி நேரம் கடிகாரத்தைத் திருப்பி வைத்துக் கொள்வதால் உண்மையாகவே நன்மை உண்டா என்றுஎன்னைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


சரி, சீக்கிரம் எழுந்தாயிற்று. சீக்கிரம் வேலைக்குப் போகவேண்டுமே என்று வழக்கத்தைவிட ஒரு மணி முன்பாகவேகாலை உணவு சாப்பிடவேண்டும். பகல் நேர 'லஞ்ச் ப்ரேக்'12 மணி என்றால் அப்போது உண்மையான நேரம்காலை 11 மணிதான். இதேபோலத்தான் மற்ற உணவு நேரங்களும். எல்லாம் ஒரு மணி முன்னே.


நம் உடலில் 'பாடி க்ளாக்' எனப்படும் ஒரு கடிகாரம் உண்டல்லவா? அதற்கு உண்மையான 7.30க்குக் காலை உணவுஅருந்தும் பழக்கம் என்றால், அரசாங்கம் சொல்கின்ற 7.30 ஆகிய நேரம் உண்மைக்குமே 6.30 அல்லவா? எப்படிப் பசி எடுக்கும்? சரி, தொலையட்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் வயிற்றைப் பழக்கப்படுத்தி முடிப்பதற்கும், இந்தப்பகல் நேர சேமிப்பு முடியவும் சரியாக இருக்கும்! அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து உணவருந்த மீண்டும் வயிற்றைப் பழக்க வேண்டும்!



இது மட்டுமல்ல. இங்கே சின்னக் குழந்தைகளுக்குப் படுக்கை நேரம் 7.30. பகல் நேரச் சேமிப்பின் போது 7.30 என்றால்உண்மையிலேயே அப்போது 6.30தான். பிள்ளைகள் எப்படித் தூங்கப் போவார்கள்?


இன்கே தொலைக் காட்சிகளில், மாலை 6 மணி செய்திதான் முக்கியமான தொன்று. அதுவும் (உண்மையான 5 மணிக்கே)அரசாங்க 6 மணிக்கு ஒளிபரப்பப் படும். அது முடியும் முன்பே, சாப்பாடு, பிள்ளைகளைக் குளிப்பாட்டுதல் என்று பல வேலைகள் இருக்குமல்லவா?


மேலும், தனியார் கம்பெனிகளில் கொஞ்சம் பெரிய உத்யோகத்தில் இருப்பவர்கள், காலையில் 8.30 வேலைக்குப் போனாலும், மாலையில், பதிவாகவே நேரம் சென்றுதான் திரும்புவர். அவர்களும், இன்னும் வெளிச்சம் இருக்கிறதே என்று கூடுதலாகஅலுவலகத்தில் இருந்துவிட்டே திரும்புவார்கள். அப்புறம் எல்லோரும் சீக்கிரம் எழவேண்டுமென்றால், சீக்கிரம் தூங்கப் போகவேண்டாமா?


இதோ இன்றைக்கு அக்டோபர் 3. ஒருமணி நேரம் சீக்கிரம் எழுந்தாயிற்று. இதைச் சரிக்கட்டி,அந்த ஒரு மணி நேரத்தை மீண்டும்எடுக்க நான் மார்ச் மூன்றாம் வாரம் வரும், ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும். அப்போதும் செய்தித்தாளிலும்,தொலைக்காட்சிகளிலும்அறிவிப்பார்கள், இன்று இரவு படுக்குமுன்பு, கடிகாரத்தை ஒரு மணி பிந்தி வையுங்கள், அதாவது இரவு 2 மணி என்று கடிகாரம்காட்டும் நேரத்தை இரவு மணி 1 என்று மாற்றிக் கொள்ளணும்!


இங்கே பலருடன் இதைப் பற்றிப் பேசிப்பார்த்தபோது, அவர்களும் இதையேதான் சொல்கின்றனர். இதை மறுபடி மாற்ற வேண்டுமென்றால்ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கவேண்டும். அந்தக் கருத்துக் கணிப்பு எடுக்க வேண்டுமா, வேண்டாமா என்று இன்னொரு கருத்துக் கணிப்பு மூலம் உறுதி செய்ய வேண்டும்!


நானும் இந்தப் பதினேழு வருடங்களாகப் புலம்பிக்கொண்டிருக்கின்றேன். இந்த பகல் நேரச் சேமிப்பால் பயன் என்ன என்று?


உங்களுக்கு, ஏதாவது பயன் என்று தெரிந்தால் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்!


நன்றி: சங்கமம் 2004


இந்த வருசம்(2005) இது ஆரம்பிக்கிறது நாளைக்கு அக்டோபர் 2. புலம்பிக்கிட்டே ஒருமணி நேரம் முன்னாலெ சாப்புடப்போறேன்.வேற வழி?
****************************************************

7 comments:

said...

அக்கா தினமலர் பார்த்தீங்களா?

http://www.dinamalar.com/2005oct01/flash.asp

said...

அன்புள்ள சுரேஷ்,

இப்பத்தான் நம்ம 'குழலி' இந்தவிவரத்தைச் சொன்னார்.
உடனே போய்ப் பார்த்தேன்.

வலைப்பதிவுக்ள் பக்கம் இந்த பத்திரிக்கைகளின் பார்வை திரும்பி இருக்கறது நல்லதுதானே?

குறைஞ்சபட்சம், உண்மையைப் பூசிமெழுகாம உண்மையாவே மக்கள் தெரிஞ்சுக்க முடியும். இல்லையா?

said...

அக்கா,
உங்களுக்கு நேரம் சரியில்ல.. எங்களுக்கு அக்டோபர் 30 வரைக்கும் காத்திருக்கணும்.. இன்னும் ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ராவா தூங்கலாமே.. அதுக்காகவது DST இருந்துட்டு போகட்டும்.. ஆனா மார்ச்-ல திரும்பி மாத்தி தூக்கத்த கெடுத்திடுவாங்க.

தமிழ்மணத்தின் பின்னூட்ட நாயகியை இப்போதாவது அடையாளம் கண்டுண்டாங்களே.. வாழ்த்துக்கள்!

said...

தினமல்ரில் உங்கள் தளம் பற்றி பார்த்தேன். தமிழ்நாடு புகழ் துளசி வாழ்க, வாழ்க (துளசி கொழுக்கட்டையில் கொஞ்சம்)

said...

உங்க காலக்`கெடு' ரொம்ப கெடுபிடியா இருக்கே! வாசித்து கொஞ்சம் தலை சுற்றல்.
தினமலர் பார்த்ததும் மெத்த மகிழ்ச்சி. சுத்திப் போடுங்க, தினமும் வாழ்த்து மழையா இருக்கே!

said...

// நானும் இந்தப் பதினேழு வருடங்களாகப் புலம்பிக்கொண்டிருக்கின்றேன். இந்த பகல் நேரச் சேமிப்பால் பயன் என்ன என்று? உங்களுக்கு, ஏதாவது பயன் என்று தெரிந்தால் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்! //

அப்படி என்றால் அலுவலகத்திற்கு ஒர் மணி நேரம் கழித்துச் சென்றால்கூட, நான் சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கிறேன் என்று மற்றவரைக் குழப்பலாமா? (ஆனால் மாலையில் மட்டும் எல்லோரும் அவரவர் வீட்டுக்குப் புறப்படும்போது நாமும் நம் வீட்டிற்குப் புறப்பட்டுவிடலாம்தானே?:-))

said...

இராமநாதன்,

எங்களுக்கு மொதல் ரெண்டு மாசம் இந்த 'டே லைட் சேவிங்' ஒரே கடுப்பு. அப்புறம் ஒருமாதிரிப் பழகிடும்.
லஞ்சு சமயம்தான் ரொம்பவே எரிச்சல்.

தேன் துளி, தாணு

வாழ்த்துக்களுக்கு நன்றி. பத்மா, தாணுவுக்குத் 'தெரியாம'த்தான் கொழக்கட்டை அனுப்பணும்:-)

லதா,

இந்த ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா எல்லாரும் இதையே ஃபாலோ பண்ணிட்டா?

ச்சின்னக் குழந்தைகள் பாடுதான் ரொம்பவே திண்டாட்டம். இங்கே அவுங்களுக்கு இரவு தூங்கற டைம்
7.30.( அப்ப நிஜமான டைம் 6.30தானே?) சம்மர்வர்றதுனாலே பகல் வெளிச்ச நேரம் கூடுதல். சூரியாஸ்தமனம்
ராத்திரி 8க்கு. அப்ப அந்த ப்ரகாசமான வெளிச்சம் இருக்கறப்பயே 'தூங்கு தூங்கு'ன்னா அதுங்க எப்படித் தூங்கும்?
மறுநாள் ஸ்கூலில் எல்லாப் பசங்களும் 'க்ராங்கி'யா இருக்கறதுலே என்ன அதிசயம்? டீச்சருங்களுக்கும் இது தலைவலிதான்.