Tuesday, January 10, 2006

என் செல்ல(செல்வ)ங்கள். கடைசி நாட்கள்

ம்மா ம்ம்ம்ம்மான்னு குரல் கொடுத்துக்கிட்டே வீட்டுக்குள்ளே ஓடிவந்து நிக்கிற கப்புவைப் பார்த்ததும்'பசங்க' இங்கே ரொம்பக் கஷ்டம் வைக்காம 'செட்டில்' ஆகிட்டாங்கன்னு சந்தோஷமாத்தான் இருந்தது.
கொஞ்ச நாளைக்கு முன்னால்வரை , அடுத்தவீட்டுக்குப் போய் அங்கே செடிப் புதரில் படுத்திருந்துட்டுபசியெடுக்கும் நேரம் மட்டும் இங்கே வந்துக்கிட்டு இருந்தவந்தானே இவன்.


நேரத்துக்குச் சாப்புடாம ஒரே எலும்பும் தோலுமா ஆயிட்டான் பாருங்க. ஏதோ இப்பவாவது கொஞ்சம் ஒடம்புதேறட்டும். வயிறெல்லாம் எப்படி ஒட்டிப் போயிருச்சு . பாவம்.


வேளாவேளைக்குச் சாப்புடறதும், தோட்டத்துலே இருந்த ஒரே மரத்தடியிலே தூங்கறதுமா நாள் போய்க்கிட்டு இருந்தது.அடுத்தவீட்டுப் புதரை இப்ப குத்தகைக்கு எடுத்திருக்கிறது நம்ம ஜி.கே. ஒருத்தன் மாத்தி ஒருத்தன்!
ரெண்டு வாரத்துக்கு முன்னே வீட்டுக்குள்ளெ வந்தவனைத் தூக்கும்போது கொஞ்சம் கனமாக இருந்தான். வயிறும்நிறைஞ்சமாதிரி இருந்தது. இவன் கொஞ்சம் பயந்த சுபாவம்தான். யாராவது வீட்டுக்கு வந்திருந்தாங்கன்னா போய்ஒளிஞ்சுக்குவான்.


அப்படிப்பட்டவன், ரொம்ப அதிசயமா ஒரு நாளு நடந்துக்கிட்டான். 'மெளனம் சுரேஷ்' குடும்பத்துடன் வந்திருந்தப்பதானாய் வந்து கூட்டத்துக்கு நடுவிலே நடுநாயகமா எங்க காலடியிலே வந்து உக்காந்துக்கிட்டது எங்களுக்குரொம்ப ஆச்சரியமாப் போச்சு.


மறுநாள் வழக்கம்போல அதிகாலையில் வந்து எழுப்பினான். 'ம்மா, ம்மா'ன்னு கூப்புட்டுக்கிட்டே தலையிலேவந்து உக்காந்து 'குர்குர்ன்னு பர்( purr)'பண்ணறதுதான் தினமும் எனக்குத் திருப்பள்ளி எழுச்சி.


கண்ணுலே மட்டும் கண்ணீர் வர்றமாதிரி இருந்தது. எதுக்கும் 'வெட்'கிட்டே காமிச்சரலாமுன்னு ஒரு நேரம்வாங்குனேன். மறுநாள் செவ்வாய்க்குத்தான் கிடைச்சது. நம்ம வீட்டுலேதான் 'வெட்'க்குக் கொண்டுபோறதே ஒருஅட்வெஞ்சர் ரைடாச்சே. நைஸாப்பேசி வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தேன். கூண்டுக்குள் வைக்கும்போதும்வழக்கமா வர்ற எதிர்ப்பு ஒண்ணுமில்லாமல் அமைதியா இருந்ததே மகா ஆச்சரியம்.இந்தப் பதினாறு வருஷத்துலேமுதல்முறையாச் 'சொன்ன நேரத்துக்கு'க் கொண்டுபோனோம். வழியெல்லாம் வழக்கமான 'குய்யோமுறையோ கூவல்'கூட இல்லை!


நம்ம 'ஷான் கானரி'ஆலன் பரிசோதிச்சார். கூடவே எங்க தலையிலே ஒரு குண்டைத் தூக்கியும் போட்டார். நுரையீரலில்இருந்து தண்ணீர் வழிஞ்சு வயித்துலே தேங்குதாம். இதயமும் பழுதடைஞ்சிருக்காம். அதீதவலியாலேதான் கண்ணுலேதண்ணீர். கடவுளே......


உடனே சிகிச்சையை ஆரம்பிச்சிருங்கன்னு சொன்னதுக்கு, இன்னொரு இடியைப் போட்டார். இதுக்கு நிவாரணம்இல்லையாம். வாழ்க்கையோட கடைசிக் கட்டத்துலே இருக்கானாம்.அப்போதைக்கு மட்டும் வலி நிவாரணமாஒரு ஊசி போடலாமே தவிர வேற ஒண்ணும் செய்யமுடியாதாம். சீக்கிரமா நாங்க முடிவு(!) எடுக்கணும்.


பொங்கிவர்ற கண்ணீரை மட்டுப் படுத்தமுடியாம நிக்கிறோம். சரி என்று தலையாட்டிவிட்டு வீட்டுக்கு வந்தோம்.கூண்டைத் திறந்ததும் துள்ளி ஓடும் ஓட்டம் இல்லை. 'தூக்கி வெளியே விடேன்'ன்னு சொல்லுது அதோட பார்வை.



கனத்த மனசோடயே புதன் கழிஞ்சது. வியாழன் காலையிலே என்னை எழுப்ப வந்தவனுக்குக் கட்டில்லே குதிச்சுஏறமுடியலை. கீழே நின்னுக்கிட்டே 'ம்மா ம்மா'ன்னு ஹீனக்குரல். கோபால்தான் அவனைத்தூக்கி என் மடியிலேவச்சார். வயிறு ரொம்பவே ஊதிப்போயிருந்தது. மெதுவாத் தடவிக் கொடுத்தவுடனே நீர் பிரிய ஆரம்பிச்சது. திட்டவும்மனசு வரலை. அப்புறம் விரிப்புகளையெல்லாம் எடுத்துத் துவைக்கப்போட்டேன்.


வழக்கமான மரத்தடியிலே தலையைக் குனிஞ்சுக்கிட்டு உக்கார்ந்திருக்கான். சாப்பாடும் ரொம்பக் கொஞ்சமாவேசாப்பிட்டான். மனசைக் கல்லாக்கிக்கிட்டு 'வெட்'க்கு ஃபோன் செஞ்சு, முடிவைச் சொன்னேன். வெள்ளியா இல்லேன்னாசனியான்னு கேட்டார். கோபாலும் கூட இருக்கணுமுன்னு இருந்ததாலே சனிக்கிழமைன்னு சொன்னேன்.


வெள்ளிக்கிழமை பொழுது விடிஞ்சப்பவே 'பகீர்'ன்னு இருந்துச்சு. இன்னும் ஒரு நாள்தான் இருப்பான். எதுலேயும்மனசில்லாம என்னவோ செஞ்சோம் போனோமுன்னு நாள் போச்சு. மரத்தடியை விட்டு நகராம இருக்கான். கிட்டப்போய் பக்கத்துலே உக்கார்த்தேன். பெரிய பெரிய ஈங்க அவனைத் தொந்திரவு செய்யுதுங்க. முற்றும் துறந்த முனிவரைப்போல யோக நிஷ்டையில் இருக்கான். வாலை ஆட்டி அந்த ஈக்களைத் துரத்தவும் இல்லை. அதுங்களும் அவன் மேலேயேமுட்டைவச்சுக்கிட்டு இருக்குதுங்க. மனசு கேக்காம உள்ளே தூக்கிவந்து சுத்தம் செஞ்சேன். அப்பப் பார்த்து நம்ம'வெட் க்ளினிக்'லே இருந்து கூப்பிட்டாங்க. சனிக்கிழமை நம்ம 'ஷான்' ஏதோ அவசர வேலையாக வெளியே போறாராம்.அதனாலே வேற ஒரு 'வெட்' நம்மைக் கவனிப்பாராம்.


யோசிச்சுச் சொல்றேன்னு சொன்னேன். நல்லா யோசனை செஞ்சப்ப, கப்புவுக்குப் பழக்கமான ஷான் இருந்தாத்தான்நல்லது. புது ஆளைப் பார்த்தால் அவன் மிரளக்கூடும். போற நேரத்துலே மனசமாதானம் முக்கியமில்லையா?மறுபடி 'ஷான்'கூடப் பேசினேன். அவர் புரிஞ்சுக்கிட்டார். 'சரி. இன்னிக்கு இரவே நீங்க கொண்டுவாங்க. எட்டுமணி வரைக்ளினிக் வேலைகள் இருக்கு. நான் காத்திருக்கேன். அதுக்கப்புறம் வேண்டியது செய்யலாம்.எட்டரைமணிக்குஎல்லாம் முடிஞ்சுரும்'ன்னு சொன்னார்.


எட்டுமணிக்குக் கொண்டுபோனோம். அழுதுஅழுது எனக்குப் பயங்கரத் தலைவலி. எத்தனை மாத்திரைபோட்டுக்கிட்டும்வலி அடங்கலை. உள்ளே கொண்டு போனோம். மேசையில் கிடத்துனோம். இனி ஒருமுறை என்னாலே இதையெல்லாம்தாங்கமுடியாது. கடவுளே.... கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?


ஊசிக்கு எல்லாம் தயார் செஞ்சாங்க. 'ஹெவி டோஸ் மயக்கமருந்துதான். உயிர் அடங்குறப்ப ஒரு ரீஃப்ளெக்ஸ் இருக்கும்.உடம்பு தூக்கிப்போடும், பயந்துராதீங்க. அவனுக்கு வலி தெரியாது. க்வாலிட்டி ஆஃப் லைப் போக ஆரம்பிச்சிருச்சு.ஹீ டஸ்ந் கேர் எனிமோர். பார்த்தீங்களா, முதுகுலே ஈ முட்டைகளை'ன்னு சொன்னார். ஷானோட கண்ணுலேயும்கண்ணீர் கட்டியிருந்துச்சு. குனிஞ்சு அவனோட தலையிலே ஒரு முத்தம் கொடுத்தார்.


ஊசி போட்டாச்சு. தலையைத் தடவிக் கொடுத்துக்கிட்டே நின்னேன். ஒரு அஞ்சு வினாடிதான். உடம்பு தூக்கிப் போட்டுச்சு.அப்புறம் அடங்கிடுச்சு. கண்ணைத் திறந்து என்னப் பார்த்துக்கிட்டே போயிட்டான்.


அழற எங்களைத் தேற்றாம ஷானும் கூடவே அழறார். 16 வருஷ வாழ்க்கை நொடியிலே முடிஞ்சது. அருமையானராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கான்.


இங்கே வளர்ப்பு மிருகங்களுக்கு ஒரு எரியூட்டும் இடம் இருக்கு. அங்கேயே கொண்டுபோய் எரியூட்டி, பிறகு அஸ்தி தரும் சேவைக்கும் சேர்த்து வேண்டிய ஏற்பாடுகளைச் செஞ்சுட்டு காலிக் கூண்டோட வீட்டு வந்தப்ப ஒம்போதரைமணி ஆயிருந்திச்சு.


யாருக்கும் யார்கூடவும் பேசவும் விருப்பமில்லாம, வீடே அமைதியா அழறமாதிரி இருந்துச்சு. திங்கள் கிழமை'வெட் க்ளினிக்'லே இருந்து ஒரு ஆறுதல் கடிதம் வந்து, அடங்கியிருந்த அழுகையைக் கிளப்பி விட்டுருச்சு. மறுபடிபுதனன்று கூப்பிட்டாங்க, அஸ்திப் பெட்டி வந்துருச்சுன்னு. போய் வாங்கிக்கிட்டு வந்தேன். ஷானும், அங்கே வரவேற்பு வேலையில் இருக்கும் பெண்ணும் எங்க துக்கத்துலே பங்கெடுத்துக்கிட்டாங்க. புத்திர சோகம்ன்னா என்னன்னு இப்பத்தான்முழுசாத்தெரியுது.


வீடு முழுக்க ஒரு மாதிரியான வெறுமை. ஜி.கே.வும் சாப்பாட்டு நேரத்துக்கு மட்டுமே ஆஜர். இப்ப ஒரு மாசமாத்தான்ஜி.கே. வீடுதங்க ஆரம்பிச்சுருக்கான். மெதுமெதுவா கப்புவோட இனிய நினைவுகளோட வீடு பழைய நிலைக்குத் திரும்பிக்கிட்டு இருக்கு. அடுக்களை ஜன்னலில் பாத்தா கப்புவோட மரம் நிக்கும். நேத்து அதனடியிலே கறுப்பா ஒரு உருவம்.பதறிப்போய்ப் பாத்தா, நம்ம ஜி.கே. படுத்திருக்கார். இன்னிக்குக் காலையில் கப்பு போலவே வந்து எழுப்ப முயற்சிக்கிறார்.


ஆச்சு, இன்னையோட கப்பு ஸ்ரீவைகுண்டம் போய் 96 நாள். சொர்க்கவாசல் கதவு திறக்கும்போது அங்கே வெளியிலே நிக்கற உயிர்களை பெருமாளே கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போவாருன்னு ஒரு ஐதீகம் இருக்காமே. இன்னிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சே. கப்புவையும் உள்ளே அழைச்சுக்கிட்டுப் போயிருக்கணுமுன்னு மனசு தீர்மானமாச் சொல்லுது.


பின்குறிப்பு: கப்புவின் கடைசி நாட்கள் பத்தி எழுதணுமுன்னு ஆரம்பிச்சு, முடிக்க முடியாமலேயே மனசு கனத்துபோய்வச்சிருந்ததை இன்னிக்கு முடிச்சு அனுப்பறேன்.


வளர்ப்பு மிருகங்களை இழந்து தவிக்கிற எல்லோருக்கும் இதை அர்ப்பணிக்கின்றேன்.

23 comments:

said...

ரொம்ப டச்சிங்கா இருந்திச்சு துளசி.

வளர்ப்பு மிருகங்கங்கற கடைசி வரிதான் கொஞ்சம் உருத்துது..

செல்ல பிராணிகள்னு சொல்லியிருக்கலாம்.

கூடவே வாழ்ந்து மறைந்து போற எல்லா ஜீவராசிகளுமே வளர்தவங்களுக்கு ஒரு இழப்புதான். என் ரெண்டாவது பொண்ணுக்கு மீன் வளக்கறதுனா கொள்ளைப் பிரியம். ஒவ்வொன்னா சாவும். உக்காந்து அழுவா. ஏண்டி உனக்கு இந்த வேலைன்னு கேட்டா கேக்கமாட்டா. போய் இன்னும் ரெண்டு வாங்கி வந்து தொட்டியில விடுவா. இப்ப முன்னால இருந்த ஜோடியில ஒன்னு செத்துரும்.. இப்படியே வாங்கிக் கிட்டு வரும்போது சந்தோஷமும் அது சாவும்போது அழறதும் தொடர்ந்து நடந்துக்கிட்டிருக்கற நிகழ்ச்சி.. இப்பல்லாம் அவளோசந்தோஷமும் சோகமும் எங்க ரெண்டுபேரையும் தொத்திக்கிது..

said...

டிபிஆர் ஜோ,

//வளர்ப்பு மிருகங்கங்கற கடைசி வரிதான் கொஞ்சம் உருத்துது//

சரிதான். ஆனாலும் தொழுவத்தில் இருக்கும் பசுவை நாம் செல்லப்பிராணி லிஸ்ட்டிலே
சேர்க்கறதில்லை,இல்லையா?

ஆனாலும் அதுங்க உலகைவிட்டுப் போகும்போது எவ்வளோ வருத்தமா இருக்கு.
அதுனாலேதான் அப்படி எழுதுனேன்.

said...

:-(

said...

Thanks Gopi.

said...

ஐயோ! டீச்சர். எதுக்கு இப்பிடி அழுகாச்சி விஷயமெல்லாம் எழுதுறீங்கன்னு கேக்கத் தோணுசு. ஆனா கேக்கலை. ஏன்னு நான் சொல்ல வேண்டியதில்லை.

எனக்கு ஒரு குறள் நினைவுக்கு வருது டீச்சர். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். எதையெல்லாம் நம்ம நீங்கீர்ரமோ அதுனால நமக்குத் துன்பம் இல்லையாம். ரொம்பவே பயங்கரமான உண்மை. ஆனா நாம ஏத்துக்க மாட்டோம்.

நமக்கு அன்பு வேணும். அரவணைப்பு வேணும். சொகுசு வேணும். சொந்தம் வேணும். அதுனாலதான் நமக்குச் சோகங்கறது கூடவேயிருக்கு.

said...

Hello Tulasi
sorry to hear about your loss.
Murali

said...

ராகவன்,

//நமக்கு அன்பு வேணும். அரவணைப்பு வேணும். சொகுசு வேணும். சொந்தம் வேணும். அதுனாலதான் நமக்குச் சோகங்கறது கூடவேயிருக்கு. //

வேற வழி? இப்படிப் படைச்சவனைத்தான் கேக்கணும்.

said...

நன்றி முரளி.

இப்ப மூணு மாசம் ஆயிருச்சுன்னாலும் இன்னமும் வீட்டுலே எங்கேயும் அவன் நினைவுதான் நிறைஞ்சிருக்கு.

காலம் எல்லாத்தையும் கவனிச்சுக்கும்தானே?

said...

:`(

//ஐயோ! டீச்சர். எதுக்கு இப்பிடி அழுகாச்சி விஷயமெல்லாம் எழுதுறீங்கன்னு கேக்கத் தோணுசு. ஆனா கேக்கலை. ஏன்னு நான் சொல்ல வேண்டியதில்லை.

எனக்கு ஒரு குறள் நினைவுக்கு வருது டீச்சர். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். எதையெல்லாம் நம்ம நீங்கீர்ரமோ அதுனால நமக்குத் துன்பம் இல்லையாம். ரொம்பவே பயங்கரமான உண்மை. ஆனா நாம ஏத்துக்க மாட்டோம்.

நமக்கு அன்பு வேணும். அரவணைப்பு வேணும். சொகுசு வேணும். சொந்தம் வேணும். அதுனாலதான் நமக்குச் சோகங்கறது கூடவேயிருக்கு.//

Same.

said...

துளசி
வருத்தமா இருந்தது. காலம் எல்லாத்துக்கும் மருந்து

said...

ஷ்ரேயா & பத்மா,
நன்றி.

said...

:-( for pets.

யாருக்கு இந்த test. இப்ப exam நேரம் கூட இல்லயே.

said...

இல்லீங்க கார்த்திக்.
இந்தப் 'பட்டை'யைப் போட்டுட்டு 'பொட்டி' வேலை செய்யுதான்னு 'டெஸ்ட்' செஞ்சு பார்த்தேன்:-)

said...

ரொம்ப வருத்தமா இருந்திச்சி... நாங்க கூட ஒரு பூனை வளர்த்தோம்.. நல்ல வேளையா அது இப்டி எல்லாம், கஷ்டபடாம, ஒரு ஆக்ஸிடென்ட்ல போய்டிச்சி... அதுக்கப்புறம், செல்ல ப்ராணியே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்.
இருந்தும் மூணு வருடம் அது எங்க தங்கச்சியாகவே வளர்ந்தது மறக்கவே முடியாது...
அட, ஒரு ஒற்றுமை பாருங்க, எங்க பூனை பேரு, துளசி... :)

said...

ஆஹா... பூன்ஸ்! அதான் உங்க பேரை 'பூனை'யை ஷார்ட்டாக்கி வச்சுக்கிட்டீங்களா (அண்ணா)?
செல்லப்பிராணிகளை வளர்க்கறப்ப இருக்கற சந்தோஷத்தை, அதுங்க நம்மை விட்டுப் போகும்போது
கூடவே கொண்டு போயிருதுங்க. இல்லையா அண்ணா?

துளசி- உங்க பூனையோட பேரா அண்ணா?:-)))))

ச்சும்மா....:-)))

said...

ரொம்ப நல்ல பதிவு துளசியக்கா!

:(

பதிவைப் படிக்கும்போது என் கண்களிலும் நீர் வழிந்ததைத் தவிர்க்க முடியவில்லை. மனசு பாரமாய்டுச்சு அந்த கப்புவினால்.


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

டீச்சர்,
நீங்க உங்க பூனையைப் பத்திச் சொன்னப்ப எங்க நாய் மணி ஞாபகம் வந்திடுச்சுங்க.
வளர்ப்பு மிருகங்களால வர மகிழ்ச்சியே தனீங்க. அதுங்க நம்ம கிட்ட இல்லைன்னு
ஆகும் போது வரும் சோகமும் அதிகங்க. பதிவு நன்றாக இருந்தது.
அன்புடன்
சாம்

said...

நன்றி சிபி. இது ரொம்பப் பழைய பதிவு. இப்பத்தான் நம்ம 'பூன்ஸ்' பழசையெல்லாம் படிச்சுக்கிட்டு வரார்போல.
திடீர்னு இதுக்குப் பின்னூட்டங்கள் வரஆரம்பிச்சதும் ஆச்சரியமாப் போச்சு.
இது என் செல்ல( செல்வ)ங்கள்னு ஏற்கெனவே 18 பகுதி வந்ததோட கடைசி( இப்போதைக்கு)ப் பகுதி.

said...

சாம்,
வாங்க வாங்க. நீங்களும் திடீர்னு வந்தது ...... ஏற்கெனவே சிபிக்கு பதில் மேலே கொடுத்துருக்கேன் பாருங்க.
'அன்கண்டிஷனல் லவ்' வளர்ப்புப் பிராணிகள்தான் கொடுக்கமுடியும்.

said...

//துளசி- உங்க பூனையோட பேரா அண்ணா?:-)))))//

ஆமாம்...

//அதான் உங்க பேரை 'பூனை'யை ஷார்ட்டாக்கி வச்சுக்கிட்டீங்களா (அண்ணா)?//

உண்மைதான். எனக்கு பூனைகள் ரொம்ப பிடிக்கும். துளசி(எங்க பூனை), அவளோட கிட்டத்தட்ட பத்து குட்டிங்க எங்க வீட்ல வளர்ந்துச்சு. கொஞ்ச நாள்ல யாரவது கேட்பாங்க, குடுத்துடுவோம். துளசி மட்டும் கடைசி வரைக்கும் இருந்துச்சு. அந்த நியாபகமாகவும் இந்த மாதிரி பேர் வச்சிருக்கேன்.

//செல்லப்பிராணிகளை வளர்க்கறப்ப இருக்கற சந்தோஷத்தை, அதுங்க நம்மை விட்டுப் போகும்போது
கூடவே கொண்டு போயிருதுங்க. இல்லையா அண்ணா? //

ரொம்ப சரி.. ஆனா, நான் அண்ணா இல்லை துளசிக்கா, தங்கச்சின்னு வேணா வச்சிக்கலாம். :)

// இது ரொம்பப் பழைய பதிவு. இப்பத்தான் நம்ம 'பூன்ஸ்' பழசையெல்லாம் படிச்சுக்கிட்டு வரார்போல.//

ஆமாங்க அக்கா, இப்படி ஒரு உலகம் இருக்கறதே இப்போ தான் தெரியும். அதான், ஒரு வாரமா, ஒவ்வொரு பதிவா எடுத்து படிச்சிகிட்டிருக்கேன்.

உங்க பயணத்தின் போது இப்படி பழைய சோகத்தை எல்லாம் கிளப்பி விட்டுட்டேனோன்னு இப்போ தோணுது.. அப்படி ஏதாச்சும் இருந்தா சாரி :(

said...

எதுக்கு வருத்தப்பட்றீங்க பூன்ஸ்? இப்ப இது மீள் பதிவா வலம் வருது பாருங்க. அதுவும் நல்லாதான் இருக்கு.

நாந்தான் முதல்லே உங்ககிட்டே மன்னிப்புக் கேக்கணும். ஜெண்டர் மாத்துனதுக்கு(-:

புனைப்பெயரில் ஜெண்டர் எப்படிக் கண்டுபிடிக்கறதாம்? எப்படியோ இப்பவாவது தெரிஞ்சது சந்தோஷம்.
துளசி-தங்கைன்னு சொன்னதாலே அண்ணா( துளசியே சொல்றமாதிரி!) போட்டுட்டேன்.

வலைப்பூ ன்னு வந்த தமிழ்மணம் இப்ப எல்லா மக்களையும் வலைவீசிப் பிடிச்சுருச்சு. ரெண்டு வருசத்துக்கு முன்னாலே இணையத்துலே
தற்செயலாத் தமிழ் வாசிக்க இருப்பதைத் தெரிஞ்சுக்கிட்டு அதே கதியா தேடித்தேடிப் படிச்சுக்கிட்டு இருந்தேன், இப்பவும்
இருக்கறேன். இது ஒரு புதிய உலகம். உண்மையைச் சொன்னா பலவிதமான வாசிப்பு அனுபவம் இதுலேயே கிடைச்சுருது. தினப்பத்திரிக்கை
படிப்பதுகூட இப்பெல்லாம் குறைஞ்சு போச்சு. இதுவே யதேஷ்டம்:-)))

said...

//தினப்பத்திரிக்கை
படிப்பதுகூட இப்பெல்லாம் குறைஞ்சு போச்சு. இதுவே யதேஷ்டம்:-))) //

ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க அக்கா..

said...

வால்ட் டிஸ்னி படம் "ஓல்ட் எல்லர்" (Old Yeller) என்றத் தலைப்பில். அதைப் பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில் 1958-ல் சென்னை ஓடியன் சினிமாவில் பார்த்தேன்.

அதைப்பற்றி மேலே அறிய: http://www.amazon.com/gp/product/0788812467/102-9236254-4656932?v=glance&n=404272

அப்பா, அம்மா, இரு பையன்கள் என்று சந்தோஷமான குடும்பம். அதில் வந்து சேர்கிறான் ஓல்ட் எல்லர் (நாய் என்று கூற மனமில்லை, இனிமேல் பெயர்தான்). தம்பி அவனை அறிமுகப்படுத்த, அண்ணனுக்கு அவன் இணைபிரியா நண்பனாகிறான். ஒரு வெறி நாயுடன் சண்டை போட்டதில் அவனுக்கும் வெறி பிடிக்க, அவனைத் "தூங்கச் செய்யவேண்டிய" நிலை. அண்ணன்காரன் தானே அக்காரியத்தைச் செய்யவேண்டும், ஏனெனில் ஒரே குண்டில் எல்லருக்கு வலி தெரியாமல் காரியம் முடிய வேண்டும் என்று கூறி துப்பக்கியை எடுத்து,... மேலே எழுத முடியவில்லை.

படம் முடிந்ததும், நான், என் தந்தை மற்றும் என் அத்தை பிள்ளை மூவரும் ஓடியனிலிருந்து திருவல்லிக்கேணியில் உள்ள எங்கள் வீடு வரை ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பினோம்.

நீங்கள் அனானி மற்றும் அதர் ஆப்ஷனை செயலிழக்கச் செய்திருப்பதால் உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதைப் பார்க்க எலிக்குட்டி சோதனை செய்தால் போதும். ப்ளாக்கர் எண் 4800161 மேட்ச் ஆக வேண்டும். அதன் பிறகே மட்டுறுத்தல் செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்