Friday, March 10, 2006

வட்டமும் சதுரமும்.


பயணவிவரம் பகுதி 1


இந்த முறை ஊருக்குப் போனது வழக்கமான 'சதுர' முறையிலெ இருந்து 'வட்டமா' ஆகிருச்சுங்க.புரியலீங்களா?


சரி, இப்படி சொல்லிரட்டுமா? எ.ஆ.மு & எ.ஆ.பி.


எழுத ஆரம்பிச்சதுக்கு முன்னே, எழுத ஆரம்பிச்ச பின்னே!!!! ( சந்தடிசாக்குலே இதையும் சொல்லிக்கறேன்.நான் எழுத ஆரம்பிச்சுச் சரியா ரெண்டு வருசம் ஆகுதுங்க. அதுக்குமுன்னே சின்னச்சின்னதா நம்ம தமிழ்ச்சங்கஆண்டுமலர்லே சிலவருசங்களா எழுதுனதைக் கணக்குலே(!) சேர்த்துக்கலைங்க)


முந்தியெல்லாம் ஊருக்குப் போகலாமுன்னு முடிவு செய்யறப்பவே அங்கே இருந்து 'வாங்கி'வர்ற லிஸ்ட் எழுத ஆரம்பிச்சுருவேன். எதுவும் வுட்டுறக்கூடாது பாருங்க. அடிக்கடி எங்கே போகமுடியுது? கடைசியாப் போயே வருஷம் மூணாச்சு.


இப்பத்தான் வலைஞர் வட்டத்துலே இணைஞ்சுட்டோமே! அதானாலே நமக்கு ஊருஒலகமெல்லாம் தம்பி, தங்கைங்க நிறைஞ்சு போயிட்டாங்கல்லே. கூடியவரை நாம எந்த ஊருக்குப் போறோமோ அங்கே இருக்கற வட்டங்களை( அட, நட்பு வட்டங்களைப்பா!) சந்திச்சுரணுமுன்னு ஒரு தீர்மானம் போட்டுக்கிட்டு நம்மைச் சந்திக்க விரும்பறவங்க விவரத்தையெல்லாம் பதிவுமூலமே சேகரிச்சுட்டேன். அநேகமா எல்லாருமே 'செல்' நம்பர் தந்திருந்தாங்க.


ச்சென்னையிலே காலு குத்துனப்பத்தான் தெரிஞ்சது 'செல் இல்லாதவன் புல்'ன்னு! ஜோதியிலே கலந்துரணுமேன்னு அவசர அவசரமா ஒரு 'சிம்'கார்டு வாங்கிக்கிட்டேன். ஏர்டெல்! இதுக்குக்கூட ரேஷன்கார்டு கேக்கறாங்கப்பா. இந்தவிஷயத்தை என்னோட அண்ணன் கையிலே விட்டுட்டதாலே தப்பிச்சேன்னு வச்சிக்குங்க.



கைப்பையிலேயே எப்பவும் வச்சுக்கிட்டு இருந்த லிஸ்ட்டை( ஆக்களோட செல் நம்பர் லிஸ்ட்டுங்க) எடுத்துவச்சுக்கிட்டு நானும் செல்லும் கையுமா ஆகிட்டேன். நம்ம கிருபாசங்கர், ஸ்டேஷன் பெஞ்சு ராம்கி, அல்வாசிட்டி விஜய், அருணா ஸ்ரீநிவாஸன் இப்படிச் சிலபேரைக் கூப்புட்டு வந்த விஷயத்தைக் கொஞ்சம் கசிய விட்டேன்.


இது எல்லாத்துக்கும் முன்னாலே, காலுகுத்துன ராத்திரிக்கு மறுநாள் விடியக்காலையிலே பக்திப் பரவசத்தோட நம்ம வூட்டுக்கு ரொம்பப் பக்கத்துலே இருந்த திருப்பதி தேவஸ்தானம் நடத்தற பெருமாள் கோயிலுக்குப் போனோம்.


எப்பவும் அங்கே துளசி, ரோஜான்னு பூ வித்துக்கிட்டு இருப்பாங்கதானே. இப்பப்பார்த்தா இதுங்கூட அடிஷனலாஅல்லி/தாமரைன்னு பிங்க் நிறத்துலே ஏராளமா துளசி கூடவே இருக்கு. என்னன்னு கேட்டா 'ஹஸ்பெண்டுக்குத் துளசியும், ஒய்ஃப்க்குத் தாமரையுமாம். இந்த ஒய்ஃப் எங்கே இருக்குன்னு மேல்விவரம் கேட்டா, நம்ம பூக்காரப்பொண்ணு(பேரு சாமுண்டீஸ்வரி)
'என்னாம்மா இப்படிக் கேக்குற? ஊருக்குப் போயிருந்தியா? எவ்ளோ நாளாச்சு, உள்ளேமகாலட்சுமி வச்சு.அதுக்குத்தாம்மா இந்தப்பூவு'ன்னு சொல்லிக் கையிலே இருந்த பூவை (அல்லியா தாமரையான்னு தெரியலைங்க)அதோட காம்பை ஒரு கையிலே புடிச்சுக்கிட்டு அதோட தலையிலெ ஒரு தட்டு. ஹை! பூ இதழ் இதழா மலர்ந்துருச்சு!அன்றலர்ந்த தாமரை....ஆஹா..... ஒரு ரெண்டு முழம் துளசியை அலுங்காமக் குலுங்காமப் பந்தாச் சுருட்டி அதன்நடுவிலே ஒரு தாமரை.


பத்து ரூபா கொடுத்துப் பூவை வாங்கிக்கிட்டு உள்ளே போனா, பெருமாள் பக்கத்துலே அவருக்குவலதுபுறம் சாக்ஷாத் மகாலக்ஷ்மி. மூக்குலே நத்து, கழுத்துலே நீலக்கல் அட்டிகை, காசுமாலைன்னு அமர்க்களமாப் பட்டுப்பொடவையோட அமர்ந்த திருக்கோலம். ஆனா முகத்துலே சிரிப்பே இல்லை. பெருமாளைப் பார்த்தால் வாயோரம் ஒரு புன்முறுவல். அய்யா நல்லா சிரிக்கறார். அம்மா ஏன் இப்படின்னு மனசுலே தவிப்பா இருக்கு. திரும்பஉத்து உத்துப் பார்க்கறேன். ஒரு 'கன்சர்ண்டு லுக்' இருக்கு. அதுக்குள்ளே கூட்டம் நகர்ந்து நம்ம முறை வந்துருச்சு,சாமி முன்னாலே நிக்கறதுக்கு. பயபக்தியோடு அந்தப் பூவை நீட்டுனா, அதை ஒரு கையாலே வாங்கி, பெருமாள் பாதத்துலே ஒரு கடாசு கடாசுனார் பட்டர். அதுலே இருந்த தாமரை தரையிலே விழுந்தது. நமக்குத்தான் மனம் பதைச்சதே தவிர, அவர் அதையெல்லாம் கண்டுக்கலை. இப்பத்தெரிஞ்சுபோச்சு, அம்மாவின் 'லுக்'குக்கு என்னஅர்த்தமுன்னு.


தீபாரதனை காட்டும்போதும் நம் கையில் இருக்கும் நோட்டுக்கேத்தபடிதான் நாம் கண்ணில் ஒற்றிக்கொள்ள 'முறை' வருது. இத்தனைக்கும் 'காணிக்கைகளை உண்டியலில் சேர்க்கவும்'னு எக்கச்சக்க அறிவிப்புப் பலகைகள். இதையெல்லாம் ரொம்பப் பொருட்படுத்தக்கூடாதுன்னு மனசை எச்சரிக்கை செஞ்சுக்கிட்டே தியானமண்டபம்/ஹால்லே வந்து உக்கார்ந்த பிறகும் மனசு ஒருமுகப்படலை. என்னமோ சரியில்லைன்னு ஒரு தோணல்.
அடுத்தடுத்த சிலநாட்களும் இதேதான். அப்பத்தான் ஒண்ணு கவனிச்சேன். சாமி சிலைகளுக்கும் நமக்கும் நடுவிலேஒரு ச்சின்ன இடுப்பளவு உயரமுள்ள தடுப்பு இருக்கே, அது பூஜை செய்யற பட்டருக்குத்தானே? அதுக்குள்ளேயும் சிலர் போய் சாமிக்குப் பக்க்க்க்க்க்க்க்க்க்க்க்கத்த்துலே நிக்கறாங்க. அவர்களுக்குத் தனிமரியாதை. யாரோ பெரியமனுஷங்க, வி.ஐ.பி.ங்க போலன்னு பார்த்தா, இல்லையே(-: ஆனா குபேரனோட பிரதிநிதிங்களா இருந்தாங்கன்னுகாசு கைமாறினப்போத் தெரிஞ்சது.


திருப்பதியிலேதான் இப்படின்னா, இங்கேயுமா? கடவுளுக்கு முன்னாலே எல்லோரும் சமம் இல்லையா? மனசுலேபெரிய உறுத்தலா இருந்துச்சு. ஆனாலும் தினமும் விடாமப் பூ வாங்குனேன். காரணம் எனக்கு அந்த 'சாமுண்டீஸ்வரி'யைப்பிடிச்சுப்போச்சு. நல்ல களையானமுகம். புன்சிரிப்பு. 'லட்சுமிகரம்'னு சொல்வாங்களே அது... கையில் ஒரு அஞ்சு
மாசக் குழந்தைவேற. அவுங்களுக்கு ஒரு உதவியா இருக்கட்டும்ன்னு......


எதுக்கும் ஒரு முடிவு வர்றதுபோல மன உளைச்சலுக்கும் ஒரு முடிவு வந்துச்சு. எப்ப? 9 நாள் கழிச்சு!


தொடரும்....

26 comments:

said...

ஆஹா, எல்லோரும் எதிர்நோக்கியிருந்த மெகா தொடர் ஆரம்பித்துவிட்டது. கடவுள் வணக்கத்தோடு (திரைஉலக சென்டிமென்டோட) ஆரம்பித்திருக்கிறீர்கள். நன்றாக களை கட்டிவிட்டது.

said...

நன்றி மணியன்.

நீங்க சொல்றதுபோல 'மெகா தொடர்' ஆகாதுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் இதை முடிச்சுட்டு
சரித்திர வகுப்புக்குப் போகணுமில்லையா?

said...

ஆமாங்க டி ராஜ்.

கள்ளமில்லாத சிரிப்பு. எனக்கு அவுங்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவுங்க கண்ணுலேகூட
அந்த சிரிப்புத் தெரியுது பாருங்க.

said...

அட்டகாசமா ஆரம்பிச்சிருக்கீங்க துளசி..

சாமி வரம் குடுத்தாலும் பூசாரி... அப்படீன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு..

இங்க கடவுள மனசார கும்புடுறதுக்குக் கூட தடையா?

வேதனைதான் போங்க..

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டுவிட்டேங்கறா மாதிரி இந்த பதிவில அந்த பூக்காரம்மா சிரிப்பு..

ரொம்ப பொருத்தமா, அழகா..

ரொம்ப நல்லா இருந்துதுங்க..

said...

டிபிஆர் ஜோ,

ஆரம்பத்தைப் பார்த்து நல்லா வந்துருமுன்னு நினைக்கறீங்களா?

யாரு கண்டா? ஒருவேளை நல்லாவே வந்துருமோ என்னவோ?

said...

தொடங்கீட்டீங்களா டீச்சர். இனிமே எக்ஸ்பிரஸ் வேகந்தான். கூஊஊஊஊஊஊஊஊஉச்

கோயில்ல எல்லாரும் இப்பிடித்தாங்க....அதுனால போனமா பாத்தமான்னு இருக்குறது. எங்கிருந்தாலும் சாமிதான.

நம்ப மாட்டீங்க....இந்த வெங்கட் நாராயணா கோயில் முந்தி ஆள் அரவம் இல்லாம கெடந்தது. போனா ஆள் வந்துருக்காரேன்னு ஐயங்கார் ரொம்ப சந்தோஷப் படுவார். இப்ப கூட்டம் கூடிப் போயி ரொம்பவே படுத்துறாங்க. கோயிலுக்குப் போய்தான் கும்பிடனும்னு இல்லை. எங்கும் நிறைந்த பரம்பொருள் அல்லவா. ஆனா போறது...நம்மளப் போல வந்திருக்கிறவங்க ஜோதியில கலக்குறதுக்கும்...அங்க இருக்குற விஷயங்களைப் பாக்குறதுக்கும். ஆண்டவன் அருள் எப்பவும் நமக்கு இருக்கே.

இதே மாதிரி கர்நாடகாவுல காட்டி சுப்பிரமணியாங்குற முருகன் கோயில். முந்தியெல்லாம் போகும் போது அமைதியா இருக்கும். நல்லா பொறுமையா இருந்துட்டு வரலாம். சுத்துவட்டாரமும் மலைப்பாங்கா இருக்கும். இப்போ............காசு காசு காசு.....போறது. தூரத்துல இருந்து முருகனைப் பாக்குறது....கும்புடு போட்டுட்டு கோயிலச் சுத்தீட்டு மலையெல்லாம் பாத்துட்டு வந்துர்ரது. அவ்வளவுதான்.

said...

"நீங்க சொல்றதுபோல 'மெகா தொடர்' ஆகாதுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் இதை முடிச்சுட்டு
சரித்திர வகுப்புக்குப் போகணுமில்லையா?"

டீச்சர்,
சரித்திரம் எங்க போகப் போகுது? நீங்க மொதல்ல விலாவாரியா பயணக் கட்டுரையை எழுதுங்க. (உங்க கிளாஸ் (மூத்த) மானிட்டர் அப்டிங்கிற முறையில இத சொல்றேன். என்னப்பா, கிளாஸ் மேட்டுங்களா, நான் சொல்றது சரிதான? எங்கப்பா அந்த ராம்ஸ் மத்த எல்லாரும்//)

said...

ஆமாங்க ராகவன்,
//இந்த வெங்கட் நாராயணா கோயில் முந்தி ஆள் அரவம் இல்லாம கெடந்தது. ..//

எனக்குத் தெரிஞ்சுமே இப்படித்தான் இருந்துச்சு. மூணு வருசத்துக்கு முன்னே கூட இவ்வளோ மோசமில்ல.
கூட்டம் பெருகறதோட இஃபெக்ட்டோ?

இதை வீட்டுலே சொல்லிப் புலம்புனதுக்கு என்ன சொன்னாங்க தெரியுமா?

" இங்கெயெல்லாம் இப்படித்தான்.சரி. வா சாப்புடறதுக்கு!"

அட, ஒரு கோபம் வரவேணாமா? கண்டுக்கறதேயில்லைங்க.

said...

கிளாஸ் மானீட்டர் சொல்வாரு. பரிட்சைக்கு முந்தி போர்ஷனை முடிக்கவேணாமா?

said...

"நாங்க நினச்சா"பரிச்சையையே தள்ளி வச்சிருவோமில்ல...என்னப்பா நம்ம கிளாஸ் பசங்க யாரையும் கண்ணுலேயே காணல..

said...

சரித்திரம் எங்க போகப் போகுது? நீங்க மொதல்ல விலாவாரியா பயணக் கட்டுரையை எழுதுங்க. (உங்க கிளாஸ் (மூத்த) மானிட்டர் அப்டிங்கிற முறையில இத சொல்றேன். என்னப்பா, கிளாஸ் மேட்டுங்களா, நான் சொல்றது சரிதான? எங்கப்பா அந்த ராம்ஸ் மத்த எல்லாரும்//)

'ஆமாமா.. நானும் அதத்தான் சொல்றேன் துளசி '


இந்த பூக்கலோடு அந்த அஞ்சு மாதப் 'பூ'வையும் சேர்த்து எடுத்திருக்கலாமில்ல?

said...

பயணங்கள் தொடர்கதையாய்!
டீச்சரின் டக்கரான ஆரம்பம்!
டார்ச்சர் குடுத்த
பட்டர் மேலா?
முகம் காட்டா மகாலட்சுமி மேலா?
துளசிக்கு போட்டியான
மலர்கள் மேலா?
எப்படியோ பத்துரூபாய்
பணத்தில் பழைய ஞாபகம்!
பூக்காரியாய்!
அந்த சாமுன்டீஸ்வரியாய்!
கடவுள் எல்லாம் கரன்சியில்!

said...

அக்கா,
சரித்திரம் நல்லா தான் இருக்கும். பயண அனுபவம் இன்னும் நல்லா இருக்கும் னு நினைக்கிறேன். :)

said...

என்னங்க தருமி,

கிளாஸ் மானிட்டரே இப்படி கலாட்டா செய்யலாமா?

மாணவர்களோட அன்பு(!)மழையிலே நனைஞ்சுக்கிட்டு இருக்கேன். முடிஞ்சவரை சுருக்கமான விலாவரியா
எழுதிரலாமுங்களா?

said...

அத்துழாய்,

என்ன அழகான பேரு! ஆமாம் துழாய்ன்னா துளசிதானே?

நீங்க சொல்றது சரிதான். இந்த ஆம்புளைங்களுக்கு எதுவுமே ஒரு இளக்காரம்தான். பொம்பளைங்கதான்
பார்த்துப் பர்த்துச் செய்ய வேண்டியிருக்கு இல்லே? :-))))

said...

மீனா,

அந்த அஞ்சுமாசப் பிஞ்சு வீட்டுலே பாட்டிகிட்டேல்லெ இருந்துச்சு. அதுக்கு ஒரு உடுப்பு வாங்கிக் கொடுத்துட்டு
வந்தேன். அந்தப் பிஞ்சோட அப்பா ஒரு படத்துலே இருக்கார். அதையும் ஒரு நாள் போடணும். கணவன் பக்கத்துலே
நிக்கிற இயல்பான வெக்கம், சூப்பர்!

said...

சிங். செயகுமார்,

எல்லாம் கவிதையாவே எழுதிடறீங்க? நேர்லே பாக்கறப்ப 'கவிஞர்' மாதிரி தெரியலையே:-)
இதைத்தான் சொல்றது போல,'எந்தப்புத்துலே என்ன பாம்பு இருக்குமோ'ன்னு?

said...

கார்த்திக்,

சில 'பயணங்கள்' எல்லாம் ஒரு காலக்கட்டத்துலே 'சரித்திரம்' ஆயிருதுல்லே?

said...

வரலாறை விட பயணக் கட்டுரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அக்கா. அதனால க்ளாஸ் மானிட்டர் சொன்ன மாதிரி விளக்கமா (சுருக்கமா இல்லை) விலாவாரியா எழுதுங்க.

//நேர்லே பாக்கறப்ப 'கவிஞர்' மாதிரி தெரியலையே// கவிஞர்ன்னா எப்படியக்கா இருப்பாங்க?

said...

நல்ல படம் துளசி. என்ன அழகான சிரிப்பு. இன்னும் பல பதிவுகள் வரும் என்று நினைக்கிறேன்.

said...

//'ஹஸ்பெண்டுக்குத் துளசியும், ஒய்ஃப்க்குத் தாமரையுமாம். இந்த ஒய்ஃப் எங்கே இருக்குன்னு மேல்விவரம் கேட்டா, நம்ம பூக்காரப்பொண்ணு(பேரு சாமுண்டீஸ்வரி)// அட இந்த கதை உங்களுக்கு தெரியாதா, இது திருச்சி ஸ்ரீரங்கம் போய் வந்திருந்தீங்கன்னா சாதாரணம்! ஆழ்வாருக்கு துளசிமாலை, மீராவுக்கு தாமரைன்னு உண்டாச்சே!

said...

என்ன குமரன் தம்பி,
நல்லா இருக்கீங்களா?

போற போக்கைப்பார்த்தா விலாவரியாத்தான் எழுதணும்போல. 'போதும் நிறுத்து உன் ராமாயணத்தை'ன்னு
சொல்லாம, எழுது எழுதுன்னு 'குடும்பம்' சொல்றதைக் கேட்டுப் 'புல்' அரிக்குதேப்பா:-)

'கவிஞர்'ன்னா ஜிப்பா போட்டுக்கிட்டு இருப்பார்னு மனசுக்குள்ளெ ஒரு படம் நின்னு போச்சு பாருங்க.
அதான் காரணமோ என்னவோ?

said...

பத்மா,
ரொம்ப இயற்கையா இருந்தாங்க அந்த பூக்காரம்மா. பார்த்தோடனே 'சட்'னு பிடிச்சுப்போச்சு.
ஒன்னரைவண்டி மேக்கப் போட்டுக்கிட்டு இருக்கறவங்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன
மனசுக்கு அவுங்க இதமா இருந்தாங்க.

said...

உதயகுமார்,
//திருச்சி ஸ்ரீரங்கம் போய் வந்திருந்தீங்கன்னா சாதாரணம்! ஆழ்வாருக்கு துளசிமாலை, மீராவுக்கு தாமரைன்னு ...//

இதுதான் தெரிஞ்சதாச்சே. இந்த வெங்கடநாராயணா ரோடு கோவிலில் 'தாயார்' பிரதிஷ்ட்டை பண்ண விவரம்
தெரியாததாலேதான் புரியாம கொஞ்சம் முழிச்சேன்.

said...

இன்று தானிரு பதிவுகளையும் பார்த்தேன். சென்னையில் இருந்தாலும் நான் போய்ப் பார்க்காத இடங்களைப் பற்றி உங்கள் பதிவுகள் மூலம் தான் அறிய இருக்கிறேன்..தொடருங்கள்..

said...

ராம்கி,

இன்னும் எவ்வளவோ அருமையான இடங்கள் இருக்குதான். நானும் பாக்கி வச்சுட்டுத்தான் வந்திருக்கேன். அடுத்தமுறை
வர்றப்ப வேணுமில்லே?