Monday, April 03, 2006

நூபுர கங்கை

பயண விவரம் பகுதி 14


இன்னிக்கு மாலை இங்கிருந்து கிளம்பறோம், மறுபடி சென்னைக்கே. சனிக்கிழமையாவும் இருக்கு.நம்ம 'சுந்தர ராஜனை' பார்க்கோணும். அப்படியே மேலே பழமுதிர்ச்சோலைக்குப் போய் முருகனையும் கண்டுக்கலாம். தைப்பூசமாச்சே! நல்ல நாளாத்தான் அமைஞ்சுருக்கு.


என்ன ஒண்ணு, நம்ம ஷங்கர் வண்டி கிடையாது. அவரை ஒரு வாரத்துக்கு திருச்சிக்குப் போறதுக்கு க்ளெயண்ட் கேட்டுருக்காங்களாம். நல்ல நம்பகமான மனுஷர். வர்ற வேலையை நமக்காக விடச் சொல்ல முடியுங்களா?அதிலும், இவுங்களுக்கு மாசச் சம்பளம் இல்லையாமே. என்னிக்கு வேலை செய்யறாங்களொ அன்னிக்கு மட்டும்தான் சம்பளம். தினப்படி பேட்டா பயணிகள் கொடுத்துருவாங்க. வேற அஸைன்மெண்ட் கிடைச்சதும் மேலே வந்து நம்மளைப் பார்த்துச் சொல்லிட்டு போனார்.


கல்யாணத்துக்குப் போனோம் பாருங்க, அப்பவும் ஒருதடவை போனவுடனே, வழியெல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டுச் சொந்தக்காரங்க வீட்டுக்கு ட்ரிப் எல்லாம் கவனமாச் செஞ்சார். நல்ல துணிமணிகள் கார்லேயே வச்சுக்கிட்டு இருந்து விசேஷத்துலே கலந்துக்கிட்டப்ப படு நீட்டா இருந்தார். எங்களுக்கு அவரை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. சரி. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்.


எட்டரைக்கெல்லாம் நம்மளைக் கொண்டு போக வந்தவர் காதர் பாட்சா. அழகர் கோயிலுக்குப் புறப்பட்டாச்சு. இவரும் பரவாயில்லை. குடும்பக்கதைகளைச் சொல்லிக்கிட்டே வந்தார். கொஞ்ச தூரத்துலே ஒரு பெரிய சிலை தென்பட்டது.அங்கே நிறுத்தச் சொன்னோம். அது ஒரு சக்தி கோயிலாம். 16 கைகளோட அம்மன் ஆகாயத்துக்கும் பூமிக்குமா நிக்குது. நமக்கும் இப்படி பதினாறு...ச்சீச்சீ அத்தனை வேணாம், ஒரு ஆறு கை இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்? ப்ளவுஸ் தச்சுக்கக் கஷ்டமாப் போயிருமே (-:


கோயில் நல்லா நீட்டா இருந்துச்சு. ஒரு சிவனையும் கோபுரத்துக்குப் பக்கத்துலே கட்டிக்கிட்டு இருக்காங்க.அதுக்கப்புறம் நம்ம ஸ்டாப், அழகர் கோயில்தான்.

கருப்பணசாமிக்குன்னு ஒரு ச்சின்னக் கோயில் வாசலிலேயே இருக்கு. அதுக்குப் பக்கத்துலே யானைக் கொட்டடி. பேரு கல்யாணி. பத்து ரூபாய் வாங்கிக்கிட்டு ஆசீர்வாதம் செஞ்சது. மரத்தடியிலே சிலபேர் பொங்க வச்சுக்கிட்டுஇருந்தாங்க. வேண்டுதலாம். நுழைவாசலுக்கு வந்தோம்
வாசலிலேயே நிறைய குரங்கன்மார் ஓடித்திரிஞ்சாங்க. அவுங்களுக்குப் போடக் கடலை வகையறாக்கள் வித்துக்கிட்டு இருந்தாங்க. நிறைய வாங்கிக்கிட்டுப் போனோம். அவன்களுக்கும் தெரியும் இந்த மாதிரி பொட்டலம் கையிலே இருந்தா,அவுங்களுக்குன்னு. ஓடி வந்தாங்க. பிரிச்சுப் போட்டாச்சு. குட்டிக்குட்டிக் குரங்குங்களைப் பாக்கவே ஆசையா இருந்துச்சு.எனக்கு ஒரு குரங்கு வளர்க்கணுமுன்னு ரொம்ப ஆசை. ஆனா நிறைவேறலையே. இப்படித்தான் என் பொண்ணுக்கும்.


ஒருதடவை மகாபலிபுரத்துலே குரங்காட்டியோட குரங்கு நாங்க கை நீட்டுனவுடனே சரசரன்னு காலைப் பிடிச்சு ஏறிவந்து மகள் கையிலே உக்காந்துக்கிச்சு. நாங்க தடவித் தர்றோம்.கூட வந்த அண்ணன் குடும்பம், கீழே விட்டுருன்னு கத்திக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கெல்லாம் ஒரே பயம். சில குரங்குங்க கடிச்சுரும்தான். ஆனா அது ரொம்பக் குட்டியா இருந்துச்சு.


கோயிலுக்கு உள்ளே போயாச்சு. அழகனையும் பார்த்தாச்சு. வண்டியை எடுத்துக்கிட்டு அங்கிருந்து மேலே போகணும்.மீனாட்சி கோயில் மாதிரியெ இங்கேயும் பிச்சை எடுக்கும் பெண்கள் எங்களை ஓடஓட விரட்டுனாங்க.
பழமுதிர்ச்சோலைக்கு போய்ச் சேர்ந்தா, 'தைப்பூசம்'ங்கறதாலே விசேஷ பூஜை & எக்கச்சக்கக் கூட்டம். ஸ்வாமிஅலங்காரம் நடந்துக்கிட்டு இருக்கு.


அதுவரைக்கும் ச்சும்மா நிக்காம இன்னும் மேலே போய் 'நூபுர கங்கை'யைப் பார்த்துட்டு வரலாமுன்னு போனோம். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் இருக்கும். கார்ப் பாதை இருக்கு.


மேலெ போகப் படிக்கட்டுங்க நல்லா விஸ்தாரமாவே இருக்குங்க. ஒரு கை இல்லாத குரங்கர் இருந்தார். பாவமா இருந்தது. பொரி ஒரு பாக்கெட் வாங்கி அதை பிரிச்சுக்கிட்டு இருந்தேன். அது மெதுவா வந்து அடுத்த கையாலெ மொத்தபாக்கெட்டையும் பறிச்சுக்கிட்டுப் போயிட்டார்.


மேலே போனா, ஆளுக்கு ஒரு ரூபாய் வசூலிச்சுக்கிட்டு உள்ளெ விட்டாங்க. தரையெல்லாம் ஒரே ஈரம். குளிச்சுட்டு வர்றவங்க 'நதநத'ன்னு செஞ்சு வச்சுருந்தாங்க. கிழே போக ஒரு இருவது படிக்கட்டு இருக்குங்க. ஆண்களுக்கும்பெண்களுக்கும் வெவ்வேற படிகள் அந்த முற்றத்துக்கு ரெண்டு பக்கமும் எதிரெதிரா. அந்த முற்றத்துலே, மேலெ இருந்துஒரு பக்கம் மூணு குழாயிலிருந்து தண்ணீர் வந்துக்கிட்டு இருக்கு. ஒரு தொட்டி கட்டி அதுலெ கீழ்ப்புறமாமூணு குழாய் வச்சிருக்காங்க.அருவியா வந்தாத்தானே பாக்கறதுக்கு நல்லா இருக்கும்? இது,சாதாரணத்தண்ணியை தொட்டிமூலம் ஊத்தற வேலையோ என்னவோ? யாரு கண்டா?


ஆனாலும் ஜனங்க நம்பிக்கையோடு குளிக்குதுங்க. ஒரு விதத்துலே நம்புனாதான் கடவுள். இல்லையா? மெதுவா இறங்கி வந்தோம். அங்கே மரத்துலே நூத்துக்கணக்கா தூக்கணாங் குருவிக்கூடுங்க காத்துலெ அழகா ஆடுதுங்க. பாக்கவே ரம்யமா இருந்துச்சுங்க.


திரும்ப பழமுதிர்ச்சோலை வந்தோம். 16 வருசத்துக்கு முன்னே இங்கே வந்துருக்கோம். அப்ப ஒரு மேடையிலேவேல் மட்டும் செங்குத்தாக் குத்தி வச்சிருக்கும். முருகன், சூரபத்மனை அழிச்சுட்டு, கோபம் தணிஞ்சு ( தணிகை மலை)அங்கிருந்து இங்கே வந்து கையிலே இருந்த வேலைப் பூமியிலே குத்தி வச்சுட்டு மறைஞ்சுட்டார்னு ஐதீகம்.இப்ப என்னன்னா அங்கெ கோயிலே கட்டிட்டாங்க. உள்ளே முருகன் சிலையை பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க.


கொஞ்ச நேரம் காத்திருந்தோம். திரை விலகியது. அலங்காரமா நிக்கறார் முருகன்.


வழக்கம்போல் கோயில் வாசலில் மலைப்பாதை முழுசும் ரெண்டு பக்கமும் தர்மம் யாசிக்கிறவங்க. பாவமாத்தான் இருக்கு.ஆனா எல்லாருக்கும் போட முடியலையே. அதுலே ஒருத்தர் நான் கார்க்கதவை மூடப்போனப்ப, 'அம்மா, நீ ஒரு கோயில் கட்டணுமுன்னு இருக்கே. அது நடக்கும். தர்மம் செய் தாயி'ன்னு சொன்னார்.


அதுக்குள்ளே வண்டி கிளம்பிருச்சு. ஒரு நிமிசத்துக்குப் பிறகுதான் மண்டையிலே நுழைஞ்சது அவர் சொன்னது.


நினைச்சதுக்கு முன்னாலேயே கீழே இறங்கிட்டோம். கீழே அன்னதானமுன்னு ஒரு சின்னப்பந்தல் போட்டு சாப்பாடுப்பொட்டலம் வினியோகிச்சுக்கிட்டு இருந்தாங்க. கொஞ்சம் கூட்டம்தான். அப்ப மரத்தோரமா உட்காந்துருந்த ஒருதள்ளாத பாட்டி, அங்கேயே கவனமாப் பாத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களாலே போய் நின்னு வாங்க முடியாத உடல்நிலை.நாம எதுக்கு இருக்கோம்? இவரும் சொன்னார், ' பாவமா இருக்கு. நீ போய் ஒண்ணு வாங்கியாந்து தாயேன்'னு.


நானும் போய் வரிசை(?)இல்லாதக் கூட்டத்துலே நின்னு ஒண்ணு வாங்கிவந்து அந்தப் பாட்டிக்குக் கொடுத்தேன்.அப்ப பாட்டி புன்முறுவலோடு மெதுவா அதும்பக்கத்துலே வச்சிருந்த கூடையத் திறந்து காமிக்குது, அதுலேஏற்கெனவே 3 இருக்கு. நம்மை போலவே இன்னும் 3 பேர் இருந்துருக்காங்க. பாட்டி சொன்னது, 'இதுவே போதும் ஆத்தா'ன்னு.ஹூம்... மொதல்லேயே பாட்டிகிட்டே கேட்டுருக்கலாம், 'சாப்பாடு பொட்டலம் வேணுமான்னு?'


இப்ப என் கையிலே இருக்கற பொட்டலத்தை என்ன செய்யறது? பேசாம பிரிச்சுச் சாப்புட்டுறவா? ஒரு பத்தடி நடந்தப்பஒரு அம்மா, வேகமா நுழைவு வாயிலிலே வராங்க.அவுங்களுக்கு வேணுமான்னு கேட்டேன், உடனே வாங்கிக்கிட்டாங்க.அந்த அரிசியிலே அந்தம்மா பேருதான் எழுதியிருக்கும் போல.


நேரம் இருக்கெ, தருமியைப் பார்த்துட்டுப் போயிரலாமுன்னுஅவர் வீட்டுக்கு ஃபோன் போட்டோம். ஒரிஜனல் ப்ளான் படி சாயந்திரம் ஏர்ப்போர்ட் போறதுக்கு முன்னாலெ அவரைச்சந்திக்கணும். அவருக்கும் திடீர்னு சாயந்திரம் கொஞ்சம் வேற வேலை வந்துருச்சுன்னு தெரிஞ்சது. நல்லதாப்போச்சுன்னு நேரா அவர் வீட்டுக்குப் போயிட்டோம். அவர் சொன்ன ஏரியாவுக்குப் போனமெ தவிர வீடு இருக்கற இடம் தெரியலை. அதான் இருக்கவே இருக்கே செல்லு.


அவரே ஸ்கூட்டருலே வந்து விஐபி வண்டிக்கு முன்னாலெ போற பைலட் வண்டி மாதிரி வழி காமிச்சார்.வீட்டு வாசலில் இறங்குனதும் 'போபோவும், டாம்மியும்' வரவேற்புக் கொடுத்தாங்க. போபோ ,ப்ரவுன் கலர்.டாம்மி கருப்பும் வெள்ளையும். போபோ தருமியோடது, டாம்மி பக்கத்து வீட்டுக்காரர். வயசு என்ன ஒரு ஆறுவாரம் இருந்தா ஜாஸ்தி. பக்கத்து வீட்டுக்காரர் 'ஓடிறப்போறாரு'ன்னு கட்டிப் போட்டுருந்தாங்க. போபோ வீட்டுஆளாச்சே. தைரியமா உலாத்திக்கிட்டு இருந்தார். அப்ப ஒரு பெரிய நாய் ஒண்ணு திறந்திருந்த கேட் வழியா 'விருக்'னுவெளியே ஓடிப்போச்சு.


வீட்டுக்குள்ளே போனோம், வீட்டம்மாவைப் பார்த்தோம் பேசோ பேசுன்னு பேசுனோம். அப்பத்தான் தெரிஞ்சது அந்த 'ஓடுன நாய்'வீட்டம்மாவோட செல்லமாம். ஆனா கொஞ்ச நேரத்துலே தானே வந்துருமாம்ன்னு சொல்லிக்கிட்டு, அப்பப்ப வந்துருச்சான்னுகேட்டைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நானும், துணைக்கு கேட்டைப் பாத்துக்கிட்டே அவுங்களோட பேசுனேன். ரொம்ப நேரங்கழிச்சுப் போனவர்' திரும்ப வந்துட்டார்.


இதுலே பாருங்க இவுங்க வீட்டு வரவேற்பறைக்கு முன்னாலே இருக்கற ' ஃபோயர்'லே எல்லாம் போபோவுக்கு அனுமதி இல்லையாம். ஆனா நாய்க்காரி வந்த தைரியத்துலே ( இவளே உள்ளே போறப்ப எனக்கென்ன உரிமை இல்லையா?)அது அங்கெ வந்து நிம்மதியாப் படுத்துக்கிட்டுக் 'குட்டி'த் தூக்கம் போடுது!


இங்கே வந்தவுடனே நம்ம காதர் பாட்சாவை சாப்பாட்டுக்கு அனுப்பியிருந்தோம். அவர் ஒரு ரெண்டு மணி வாக்குலேதிரும்ப வந்துட்டார். நாங்களும் கிளம்பி, மதிய சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ஆனந்தா மெட்டல்ஸ் போனோம்.'யாத்திரை வந்தா பாத்திரக்கடையைப் பார்க்காமப் போனா புண்ணியம் கிடைக்காதாம்'( புது மொழி!)ச்சும்மா ஒருபார்வை பார்த்துட்டு, குக்கர்லே வைக்க ஒரு இன்செட்டும், சிணுக்கோல் ஒண்ணும், சில குங்குமச்சிமிழ்களும் வாங்கியாந்தோம். இங்கே யாராவது வந்தா போனா வச்சுக் கொடுக்க வாணாம்?


சாயந்திரம் ஏழு மணி ஃப்ளைட். ஏர்ப்போர்டுக்குப் போய் சேர்ந்தாச்சு. ஏர்டெக்கன் புக்கிங் ஆஃபீஸ் அங்கே இருக்கு.'பெங்களூரு போக ரயில் நல்லது'ன்னு நான் சொல்லச் சொல்ல என் பேச்சைக் கேக்காம, இவர் அங்கேயே , ரெண்டுநாள் கழிச்சு ச்சென்னையிலிருந்து பெங்களூரு போய் வர டிக்கெட்டு எடுத்துட்டார். சொன்ன பேச்சைக் கேக்காததுக்குஅப்புறமா வருத்தப்பட வேண்டியதாப் போச்சு.


ஸ்டாப் ஸ்டாப். கற்பனையை வளர்காதீங்க. நான் ஒண்ணும் அடிக்கலை, திட்டலை. எல்லாம் தானாய் வந்துச்சு.

மதுரையை நம்ம தருமி வசமே திருப்பிக் கொடுத்துட்டு, ச்சென்னைக்கு இரவு ஒம்போது மணிக்கு வந்து சேர்ந்தோம்.


நாளைக்கு ஞாயித்துக்கிழமை. ஸ்பெஷல் டே!

பின்குறிப்பு: தருமி, இனி நீங்க எடுத்துக்கலாம்:-)

நம்ம ப்ளொக்கர் படம் போடச் சொதப்புதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேனேன்னு நம்ம தோழி உதவிக்கு வந்து ஒருஇடத்துக்குக் கையைக் காமிச்சு விட்டாங்க. அங்கே ஒரு 16 படம் போட்டுருக்கேன். இலவச சேவைதான். ஒரு மாசம்இவ்வளோன்னு கணக்காம். 'ஆத்துலே போட்டாலும் அளந்து போடறங்க' (பழமொழி). இனி நீங்க பார்த்தபிறகு அங்கே பழசை எடுத்திட்டுப் புதுசு போட்டுக்கலாம். இப்போதைக்கு அழகர்கோயில் இங்கே.

21 comments:

said...

'அழகர் கோயில்'னு போட்ட இடத்துலே படங்கள் சரியா வருதான்னு தெரியலை.

பார்த்தவுங்க யாராவது சொல்லுங்க வருதா வரலையான்னு.

நன்றி.

said...

படங்கள் நல்லா வந்திருக்கு துளசி அக்கா.. பளிச்சுனு இருக்கு..

//ஸ்டாப் ஸ்டாப். கற்பனையை வளர்காதீங்க. நான் ஒண்ணும் அடிக்கலை, திட்டலை. //
:))

said...

ஆகா நூபுர கங்கை போனீங்களா.....அங்க இப்பத்தான் குழாய் வெச்சு தண்ணி ஊத்துறாங்க. நான் சின்னப்பிள்ளைல எல்லாம் கெணத்துல மொந்து குளிக்கனும்..இல்லைன்னா ஒழுகுற தண்ணியில குளிக்கனும். வரவரக் கூட்டம் பெருகிப் போயி சமாளிக்க இப்பிடி செஞ்சிட்டாங்க.

நானும் ஒரு வருசத்துக்கு முன்னாடி மதுரைக்குப் போயிருந்தப்போ....ஒரு ஒத்தக் கைக் குரங்கப் பாத்தேன். பாவம் வண்டி கிண்டி அடிச்சிருக்கும் போலத் தெரியுது......ஆனா அந்தக் கொரங்குதான் இந்தக் கொரங்கான்னு தெரியலை.... கைதான் ஒத்தக் கையே தவிர....பயங்கர சுறுசுறுப்பும் சுட்டித்தனமுமா இருந்துச்சு அந்தக் கொரங்கு.

படங்களும் நல்லா வந்திருக்கு. அனுமார் வால்தான் ஹைலைட்.

ஏர் டெக்கான்னு சொல்லும் போதே எனக்கு விவரம் புரிஞ்சி போச்சு.....எத்தன பேருகிட்ட கேட்டிருப்போம்...ம்ம்ம்ம்...

said...

வாங்க பொன்ஸ்,

மொதல்லே எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.
உங்க பேரை ஆங்கிலத்துலே வந்தப்ப பூன்ஸ் னு நினைச்சுக்கிட்டு
இருந்தேன், பூனைப் பிரியைன்னு.

இப்ப தமிழிலே பொன்ஸ். அப்ப இதுக்கு என்ன விளக்கம்?

குறைஞ்சபட்சம், தனிமடலிலாவது சொல்லணும், ஆமா.

படங்களை இப்படி போடறது நல்லாத்தான் இருக்கு. ஆனா
ரொம்ப நாள் விட்டுவைக்க முடியாதே(-:

said...

ராகவன்,

அந்தக் குரங்கா இருக்குமுன்னா நினக்கிறீங்க?

இதுக்கு இடது கைதான் இல்லே(-:

நீங்க சொன்னமாதிரி பயங்கர சுறுசுறுப்பு.

said...

டீச்சர் அந்தக் கொரங்குக்கும் எடது கைதான் இல்லை. முழங்கை வரக்கும் இருக்கு. அதுக்குக் கீழ ஒன்னும் இல்ல. பாவம்.

said...

அம்மா, படம் நல்லா இருக்கு.
இரண்டு நாளுக்கு முன்னாடி நான் மனதால் பார்த்தது படமாக பார்க்க முடிந்தது.

அழகர் கோவில் வர்ணனனை நல்ல இருக்கு.

//'நூபுர கங்கை'யைப் பார்த்துட்டு வரலாமுன்னு போனோம். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் இருக்கும். கார்ப் பாதை இருக்கு//

கடந்த 3 வருஷத்தில் நான் 6 தடவை மதுரைக்கு போய் வந்துள்ளேன். ஆனால் அழகர் கோவில் பொக முடியவில்லை. சுற்றுப்புறத்தை பார்க்க முடிந்தது. சுந்தரனையும், அவன் மருகனையும் அடுத்த முறை அவசியமாக பார்க்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். எல்லாம் அவன் சித்தம்.

said...

ராகவன்,
இது வேற குரங்கு. கையிலே மணிக்கட்டுவரை இருக்கு. ஆனா பாவம் இல்லை. அந்தப் புண் ஆறும்வரை எவ்வளோ வலிச்சிருக்கும்.
எங்கெபோய்க் கையை விட்டதோ தெரியலை(-:

said...

சிவமுருகன்,
அடுத்தமுறை கட்டாயமாப் போயிட்டு வாங்க. வழியிலேதான் அந்த 'சக்தி' கோயிலும் இருக்கு.
அதுக்குள்ளே முழுசும் கட்டி முடிச்சுருவாங்க.

நீங்க விஷ்ணு சகஸ்ரநாமம்னு சொன்னதும் நினைவுக்கு வர்றது, நம்ம டிடிடி தேவஸ்தானக் கோயிலைப்
பத்திச் சொல்லிக்கிட்டுருந்தேன் இல்லை. அங்கேயும் ரெண்டு லைன் விஷ்ணு சகஸ்ரநாமம் (ஆரம்பிக்கறது என்னவோ
சத்தமா ஆனா அரை லைன்லேயே குரல் உள்ளெ அமுங்கிரும்) சொல்லிக்கிட்டே நாம் கொண்டு போற பூவைக்
கடாசறதைப் பாக்கணும். நமக்கு மனசு நொந்துபோயிரும்.

said...

ஒரு விதத்துலே நம்புனாதான் கடவுள். இல்லையா? //

ரொம்ப கரெக்ட் துளசி.

மனுஷ மூளைய வச்சிக்கிட்டு எல்லாத்துக்கும் காரணம் காரியம்னு கற்பிச்சிக்கிட்டிருந்தா அவ்வளவுதான். நம்பிக்கைதானே வாழ்க்கையே..

said...

டிபிஆர் ஜோ,

மனுஷன் நிம்மதியா வாழணுமுன்னா எதுலேயாவது நம்பிக்கை வச்சுத்தானெ ஆகணும். இல்லீங்களா?

said...

நம்பி குடுத்துட்டு போயிருக்கீங்க; முடி்ஞ்சவரைப் பத்திரமா பாத்துக்கிறேன்!

said...

தருமி,

நீங்க பத்திரப்படுத்துனதை ஊருக்குச் சொல்லிறலாங்களா?:-)

said...

அழகர் கோவில் படமெல்லாம் அழகாவே இருக்கு. ஆமாம் கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் கழிச்சும் இன்னும் சொன்ன பேச்ச கேகறதில்லையா? :)ஒரு 101 டுடோரியல் எடுக்கவா?

said...

என்னங்க பத்மா, டுடோரியல் எடுத்துருங்களேன்.

ஒரேடியாப் பிடிச்சு இழுக்கக்கூடாதுல்லையா. அப்பப்ப கொஞ்சம் லூசா விடவேணாமா? அந்த சமயத்துலேதான்
பின்னாடி லூஸா கயிறு இருக்கரது புரிஞ்சுக்காம இப்படி எதாவது நடந்துருது:-)

said...

padangal nalla irukku
adhennanga deccan airways kashtam

said...

சிவஞானம்ஜி,

அதென்னங்க, பேருலேயே ஒரு மரியாதை கொடுக்க வச்சுட்டீங்க?:-)

ஏர்டெக்கன் கதையைச் சொல்வேன் பாருங்க, அப்பத் தெரியும்.

அப்படியாவது வாசகர்களை தக்க வச்சுக்கலாம், இல்லே?

said...

படங்கள் அருமை. மிக்க நன்றி அக்கா.

அழகர் கோவில் (திருமாலிருஞ்சோலை), பழமுதிர்சோலை இரண்டு இடங்களுக்கும் சென்று வந்த மாதிரி இருந்தது. நூபுர கங்கையில் குளிக்கவில்லை சரி. குடித்தாவது பார்த்தீர்களா? தீர்த்தம் அமுதம் போல் இனிக்குமே. அங்கிருக்கும் ராக்காயி அம்மனைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை. என் தந்தையாருக்கு மிகவும் பிடித்த அம்மன் ராக்காயி அம்மன். ரொம்ப பயபக்தியோடு வணங்கி எங்களையும் அப்படியே வணங்க வைப்பார்.

said...

குமரன்,

வாங்க வாங்க. எங்கே ஆளையே காணோம்?

நூபுரகங்கையிலே ராக்காயி அம்மனைப் பார்க்கலையே(-: எங்கே இருக்கு? படியேறி மேலே போகும்போது வலது பக்கம்
ஒரு மேடையிலே விளக்கு வச்சிருந்தாங்களே அதா?

அப்புறம் நான் பயணம் செய்யறப்ப,வெளியிலே எங்கேயுமே தண்ணீரை அது கோயில்
தீர்த்தமா இருந்தாலுமே குடிக்கறதில்லை. தலையில் தெளிச்சுக்கறோதட சரி.
இருக்கற கொஞ்சநாளுலே வயிறு அப்செட் ஆனா கஷ்டமில்லையா அந்த பயம்தான்.

said...

தொட்டி மூணு குழாய்ன்னு சொன்னீங்களே. அந்த தொட்டிக்கு மேல தான் ராக்காயி அம்மன் சன்னதி இருக்கு. சொதசொதன்னு இருந்ததால நீங்க அந்த மண்டபத்தைச் சுத்திவரலையோ என்னமோ? சுத்தி வந்திருந்தா ராக்காயி அம்மனைப் பாத்திருக்கலாம்.

said...

குமரன்,
எங்கே சுத்தி வர்றது? கீழே எங்கே வழுக்கிறப்போதோன்னு கவனமாப் பார்த்துப் பார்த்து
அடியெடுத்து வைக்கவேண்டியதாப் போச்சே.

குனிஞ்ச தலை நிமிராம( அவ்வளோ அடக்கம்!) இருந்தேனேப்பா. அப்ப அங்கே படியேறிப்போறப்ப
இருந்த மரத்தடி விளக்கு? அது வேற சாமியோ?