Wednesday, May 17, 2006

சிங்கையில் ஒரு கங்கை

பயண விவரம் பகுதி 27

காலையிலே சிங்கை வந்து சேர்ந்துட்டு 'த க்ளேற்மாண்ட்' க்குப் போய்க்கிட்டு இருக்கேன். முஸ்தாஃபாவுக்கு எதிர்லேதான் இருக்காம். ரெண்டுதடவை செராங்கூன் ரோடை வலம் வந்தாச்சு. இன்னும் கண்ணுலே படலை. அப்புறம்டாக்ஸியை மெதுவாப் போகச்சொல்லி ஒவ்வொண்ணாப் பார்த்துக்கிட்டு ஊர்ந்து போனா ஒரு வாசல் தெரியுது,
ச்சின்னதா. கேஃபேக்கு இடையிலே.


அதுக்குள்ளே அந்த டாக்ஸிக்காரர் சொல்றாரு, 'அப்படி ஒரு ஹோட்டலே நான் கேள்விப்படலே'ன்னு! சாயந்திரம் அவரே வந்து திரும்ப என்னை ஏர்ப்போர்ட் கொண்டுபோறேன்னு சொன்னார். 'நம்பலாமா'ன்னு கேட்டதுக்கு 'நம்பிக்கோ'ன்னார்.ஏழரைக்கு வரச் சொல்லிட்டு உள்ளெ போனா, வரவேற்புலே ஒரு இந்தியன் பொண்ணு இருக்கு. விவரம் சொல்லி,ரூம் எதுன்னு கேட்டா, இன்னும் ஒரு மணி நேரம் வெயிட் செய்யணும். இன்னும் ரூமை எல்லாம் ஒழுங்கு பண்ணலை.வேலைக்கு ஆளு வர்றதுக்கு நேரமாகுமுன்னு சொல்றாங்க. ச்சின்னதாச் சாமியாடுனேன்.


"காலையிலே 6 மணிக்கு ரூம் வேணுமுன்னுத்தான் மொதல்லேயே சொல்லி ஏற்பாடு செஞ்சிருக்கு. இப்ப மணி ஆறரை. இன்னும் ரெடியா இல்லேன்னா என்ன அர்த்தம்?"


"அப்ப எத்தனை மணிக்குக் காலி செய்வீங்க?"


" மாலை ஏழரைக்குக்குத்தான் காலி செய்வேன். அதுக்குத்தான் ஒரு நாள் வாடகை வாங்கறீங்கெல்லே?"


"ம்ம்ம்ம்ம்ம் சரி. ஒரு நாள் வாடகையும், 20 $ காசும் தாங்க"


" 20 $ எதுக்கு? அதையும் அந்த கார்டுலேயே போடுங்க. என் கிட்டே இருந்த காசை டாக்ஸிக்குக் கொடுத்தாச்சு."


" இல்லே. அந்த 20 $ டெபாஸிட். காலி செய்யறப்பக் கொடுத்துருவோம்"


"10$ தான் இருக்கு. வேணுமா?"

"சரி. வேணாம். இந்தாங்க ரூம் சாவி."

இப்ப மட்டும் ரூம் எங்கிருந்து வந்துச்சு? ஒண்ணும் சொல்லாம மேலே போனேன். டபுள் ரூமாம். கரெக்ட்.ரெண்டு கட்டில் இருந்துச்சு.


குளிச்சுட்டுக் கோயிலுக்குப் போயிட்டு வந்து, ஒரு தூக்கம் போட்டாத்தான் நல்லது.


பாத்ரூம் ரொம்பக் கீக்கிடமா இருக்கு. மடிச்சுப் போட்டிருந்த டவலைப் பிரிச்சா................


ஒரே கிழிசல். என்னடா நமக்கு வந்த கதின்னு இருந்தப்பத்தான், கதவுலே உள்பக்கம் ஒட்டியிருந்த நோட்டீஸ் கண்ணுலே பட்டது. பொதுவா, எமர்ஜென்ஸியிலே என்னென்ன செய்யணுமுன்னுத்தானே ஒட்டிவச்சிருப்பாங்க.ஆனா இங்கே வேற மாதிரி. அந்த ரூம்லே இருந்த ஒவ்வொரு பொருளுக்கும் விலைப் பட்டியல் இருந்துச்சு. இந்த டவலுக்கு எவ்வளோன்னு பார்த்தா அதுக்கு 15$. ம்ஹூம்....ஒருவேளை இந்தப் பொருட்களை எடுத்துக்கிட்டுப் போறவங்களுக்கு ஹோட்டல்காரங்க கொடுக்கற தொகையோ?


'சீனு'வைப் பார்த்துட்டு, அப்படியே மெதுவா கோமள விலாஸ்( பழசு)வரை நடந்து போனேன். செராங்கூன் ரோடுலே காலையிலே நடக்கறது (அதாவது 9 மணிக்கு முன்னாலே ) ரொம்ப சுலபம். டிஃபனை முடிச்சுக்கிட்டு, காளியம்மாவையும் கும்பிட்டுக்கிட்டு திரும்ப வந்து நம்ம ஜெயந்திக்கு ஃபோன் போட்டு ரூம் நம்பரைச் சொல்லிட்டுத் தூங்கிட்டேன்.


இங்கே ஹோட்டல் புக்கிங் இல்லாமத் தடுமாறுனப்ப நம்ம வலை நண்பர்கள் எல்லாம் எங்ககூட வந்து இருங்கன்னு உபசரிச்சாங்கதான். ஆனா இந்தச் சீனுவைப் பாக்கறதுக்காகவே செராங்கூன்ரோடு நம்ம ச்சாய்ஸா ஆயிருச்சு.


ஒரு பதினொண்ணரைக்கு நம்ம ஜெயந்தி வந்துட்டாங்க. நாட்டு நடப்பையெல்லாம் அலசினோம். அவுங்களோட 3 புத்தகம்(சமீபத்துலே வெளிவந்தவை)'நாலேகால் டாலர், ஏழாம்சுவை, முடிவிலும் ஒன்று தொடரலாம் ' குடுத்தாங்க. அப்படியே கொடுத்தா? கையெழுத்துப் போடவேணாமா?'மூணுலேயுமா? 'ன்னு கேட்டாங்க. பின்னே? எழுத்தாளர்கிட்டேயே கையெழுத்துப் போடச்சொல்லி வாங்கி வச்சுக்கிட்டேன்.அருமையா வந்திருக்கு புத்தகங்கள். வாழ்த்து(க்)கள் ஜெயந்தி.


அங்கே இருந்து கிளம்பி 'கங்கை'க்குப் போனோம். நம்ம சிங்கை வலைஞர்களை அங்கே சந்திக்கறதா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. உள்ளே போனா நம்ம குமார்( அதாங்க ஃபில்டர் காஃபி) 'சாப்பாட்டுலே உப்பு சரியா இருக்கா'ன்னு பரிசோதிச்சுக்கிட்டு இருந்தார்:-))) நம்ம சித்ரா ரமேஷ் வந்து சேர்ந்தாங்க. ரூமுக்குப் போய்ப் பார்த்துட்டு வந்தாங்களாம். அஞ்சு நிமிஷத்துலே 'மிஸ்' செஞ்சிருக்கோம். சிங். செயகுமார், அன்பு வந்து சேர்ந்தாங்க. சிங். செயகுமார் தான் எனக்கு அங்கே புது முகம்.



நாங்கெல்லாம் சேர்ந்தா கேக்கணுமா? பேச்சும் சிரிப்புமா சாப்பாடு நடந்துச்சு. இவுங்களையெல்லாம் பார்த்த சந்தோஷத்துலே எனக்கு மனசு ரொம்பிருச்சு. பசியே இல்லைங்க.


" இந்தியாவின் முதல் பிரதமர் யார்? விடை ரெண்டு எழுத்து. முதல் எழுத்து நே, கடைசி எழுத்து ரு. என்னன்னு சொல்லுங்க"


சபையிலே கூடியிருக்கும் ஜனங்கள் ஆரவரத்தோடு அலை மோதுது.


" எனக்குத்தெரியும், நான் சொல்றேன்."


" தெரியுங்களா? அப்பச் சொல்லுங்க"

"நென்று"

தமிழ் தொலைக்காட்சி க்விஸ் நிகழ்ச்சிகள் நடக்கற அழகை, நம்மச் சித்ரா சொன்னதும் நாங்க சிரிச்ச சத்தத்துலே கங்கையே தளும்பிருச்சுன்னா பார்த்துக்குங்க.


பேச்சும் சிரிப்புமா எங்க 'இலக்கியக்கூட்டம்' நடந்துக்கிட்டு இருந்துச்சு.

குமாரோட மனைவிகிட்டே ஃபோன்லே ரெண்டு வார்த்தை பேசுனேன். அவுங்களும் வந்திருக்கலாம். ஆனா முக்கியமானவேலை இருக்கறதாலெ ஆஃபீஸ்லே லீவு எடுக்க முடியலையாம்.அதுக்குள்ளே அன்பு தன்னோட 'செல்'லை என் பக்கம் அனுப்பறார். என் நிலவரத்தைத் தெரிஞ்சுக்க, கோபால்தான் கூப்புட்டு இருக்கார்.

இன்னும் அஞ்சு நிமிஷம் இருந்திருந்தா எங்களையெல்லாம் அள்ளி வெளியே போட்டுருப்பாங்க 'கங்கை'காரங்க.மணி மூணாகப்போகுது. ஆனா அதுக்கெல்லாம் அசந்துருவமா என்ன? கீழே வந்து இன்னும் ஒருமணி நேரம் அமர்க்களப்படுத்திட்டுத்தான் பிரிஞ்சோம்.


நானும், ஜெயந்தியும், சித்ராவும் திரும்ப ரூமுக்கு வந்தோம். இன்னும் கொஞ்சம் பேச்சு பாக்கி இருந்துச்சே:-))சிங்கப்பூர்லேதான் எப்பவும் திடீர் திடீர்னு மழை வருமே, ஆனா இன்னிக்கு என் காட்டுலே 'மட்டும்' பெரு மழை.
அழகான புடவை பரிசாக் கிடைச்சது சித்ராகிட்டே இருந்து.


'த க்ளேற்மாண்ட்' பெருமையைச் சொன்னப்ப, நம்ம ஆட்கள் ஹோட்டல்களிலே இருந்து இப்படிப் பொருட்களைஎடுத்துக்கிட்டுப் போறதுன்னு அங்கே சிங்கையில் ஒரு பிரச்சனை இருக்குன்னு சொன்னாங்க. என்னாலே நம்பவே முடியலை. ப்ரிட்ஜ்ஜை எப்படிக் கொண்டு போவாங்க?



இப்ப எதுக்கு இந்தக் குறிப்பிட்ட ஹோட்டலைப் பத்தி இவ்வளோ சொல்றேன்னா, நம்ம வலைஞர்கள் யாரும் தப்பித்தவறி இங்கே ரூம் போட்டுறக்கூடாதேன்னுதான். எச்சரிக்கை மணி.


அஞ்சுமணி போலஆச்சு. சித்ராவும், ஜெயந்தியும் கிளம்பிட்டாங்க. எனக்கும் எதாவது வாங்கணுமா, வேணாமான்னு முடிவு எடுக்கச் சிரமமா இருந்துச்சு. அவுங்களை டாக்ஸியிலே ஏத்திட்டு அப்படியே 'முஸ்தஃபா வின் நகைப் பிரிவு'மட்டும் பார்க்கலாமுன்னு போனேன்.


முதல்முறையா அந்தக் கட்டிடத்துக்குள்ளே நுழையறேன். ஜொலிப்பு, ஜொலிப்பு. ஜொலிப்பு மட்டுமே!


9, 14, 18 ன்னு வெவ்வேற காரட் தங்கங்கள், வெவ்வேற நாட்டு டிஸைன்கள்னு ஒரு மார்க்கமாதான் இருக்கு கடை! பேஸ்மெண்ட் போனா, நமக்கு, இந்தியருக்குன்னே 22 தகதகன்னு! நின்னு நிதானமாச் சுத்தி வந்தேன். என்னோடநெஞ்சுரம் எப்படி இருக்கும்ன்றதுக்கு இது ஒரு டெஸ்ட்!


'ஜெயிச்சுட்டேன், நான் ஜெயிச்சுட்டேன்' என்னையே என்னாலே நம்ப முடியலை!


இந்த முறைக்குக் கடைசியா இருக்கட்டுமுன்னு கோமளாலே ( பழசு) ஒரு காஃபி வாங்கி இஞ்சினுக்கு ஊத்திக்கிட்டு, மகளுக்குக் கொஞ்சம் ஜாங்கிரி வாங்கிக்கிட்டு வந்துட்டேன்.


இதென்னங்க, கடிகாரம் இப்படி வேகமா ஓடுது? மணி ஏழுக்கு மேலே ஆயிருச்சே. எல்லாத்தையும்கேபின் பையிலே அடைச்சுக்கிட்டுக் கீழே வந்து பில்லை செட்டில் செய்யச் சொன்னேன். 11 சதம்தரச் சொன்னாங்க, போன் செஞ்சதுக்கு. பஞ்சாபி ஓனர் போல. தாராள மனசா பரவாயில்லை, 10 சதம் கொடுங்கபோதும்னு சொன்னார்.


வெளியே வந்து டாக்ஸியை நிறுத்தலாமா, இல்லே காலையிலே சொன்னமாதிரி அதே டாக்ஸிக்காரர் வறாரான்னு பார்த்தா, சிரிச்ச முகத்தோட வரார் அந்த டாக்ஸிக்காரர். 'பார்த்தீங்களா, சொன்ன டயத்துக்கு 'டாண்'னு வந்துட்டேன்.அஞ்சு நிமிஷம் முன்னாலேயே வந்துட்டேன் போங்க'ன்றார்.


மூணு பசங்களாம். பெரிய பொண்ணு அக்கவுண்டண்ட் ஆகணுமுன்னு முழுமூச்சாப் படிச்சு, இப்பத்தான் முடிச்சதாம்.மத்த பையனும், பொண்ணும் இன்னும் 'ஓ'லெவல் லே இருக்காங்களாம். கஷ்டப்பட்டுப் பசங்களை முன்னுக்குக் கொண்டு வந்துட்டாராம். டாக்ஸி பிஸினெஸ் ஒண்ணும் அவ்வளவா லாபம் இல்லையாம். இப்படி நாட்டு,வீட்டு நடப்புங்களையெல்லாம் பேசிக்கிட்டு ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்தோம்.


கணினி கைநாட்டுன்னாலும், அங்கங்கே ஓஸி உபயோகத்துக்கு வச்சிருக்கற கணினியப் பார்த்ததும் காலுதானாஅங்கே நின்னுருதுங்க. 'வந்துக்கிட்டே இருக்கேன்'னு ஒரு மெயில் வீட்டுக்கு அனுப்புனேன்( அது இன்னும் இங்கே வந்துசேரலைன்றது வேற விஷயம், இப்பத்தானே ரெண்டரை மாசம் ஆகி இருக்கு)

அப்புறம்?

வேற என்ன மரியாதையா ஃப்ளைட்லே ஏறி, மறுநாள் 12 மணிக்கு நியூஸிவந்து சேர்ந்தேன். மகள் வந்து வீட்டுக்குக்கொண்டு போனாள். கைக்கு க்ளவுஸ், நல்ல ஜாக்கெட், கழுத்துக்கு ஸ்கார்ஃப் எல்லாம் கொண்டு வந்திருந்தாள்.இதெல்லாம் எதுக்குன்னு கேட்டதுக்கு, முதல்லே போடுங்க. அப்புறம் பேசலாமுன்னு சொன்னதும், ஒண்ணும் வாய் திறக்காமப் போட்டுக்கிட்டு வெளியே வந்தா........... மகளே, உனக்குக் கோடி நன்றி.


பயங்கர மழை, ஆலங்கட்டி மழை. ரெண்டு டிகிரி. 30லே இருந்து ரெண்டு. உறைஞ்சுருவேன்போல இருக்கு.'அடிமைப்பெண் எம்ஜிஆர் ஆக்ட்' கொடுத்துக்கிட்டே ஓடிவந்து வண்டியிலே ஏறிக்கிட்டேன்.


ப்ளொக்கர் சொதப்பியதால் சில படங்களை இங்கே போட்டுருக்கேன். பாருங்க.
-------
முன்னுரை எழுதாட்டியும் முடிவுரை எழுதணுமுன்னு ஒரு சம்பிரதாயம் இருக்காம்.

பயணத்தின் முடிவில்:


புள்ளையார், யானை கலெக்ஷனுக்கு ஒரு முப்பத்தியஞ்சு சேர்ந்துருச்சு. நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும்எனக்கும்( நானும் சிலது வாங்கினேனே) நன்றி.


நல்ல நட்பு, நண்பர்கள் கிடைத்தார்கள். அவுங்களுக்கும் ஸ்பெஷல் நன்றி.


தமிழ்மணம் பார்க்காமல் அஞ்சு வாரம் ஓட்ட முடிஞ்சதுதான். ஆனா மனசுலே ஒரு வெற்றிடம் இருந்துச்சுன்றதைஒளிக்க முடியாது. தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாவே மாறிப்போச்சு. பார்க்கலைன்னு வச்சுக்குங்க,'கை ஒடிஞ்சாப்போல'


அஞ்சுவாரத்தை இப்படி 27 பதிவா நீட்டிட்டயேன்னு கேட்ட மனசாட்சியை, 'அடங்கு'ன்னு சொல்லி வச்சேன். இது 50வரைபோகச் சான்ஸ் இருந்துச்சுன்னு சொன்னதும் அதுவே அடங்கிருச்சு. அதுக்கும் ஒரு நன்றி.


ஒரு ரெண்டு வருசத்துக்கு பயணம் அநேகமா இருக்காது. அதனாலே நீங்க நிம்மதியா இருக்கலாம்:-)))


-------


டீச்சரைக்காணொமுன்னு குஷியாச் சுத்திக்கிட்டு இருந்தவங்க எல்லாம் சரித்திர நோட்டுப்புத்தகத்தைத் தேடி எடுத்துக்கிட்டு வகுப்புக்கு ஒழுங்கா வந்து சேருங்க.


நன்றி ,வணக்கம்.

38 comments:

said...

என்னங்க அதுக்குள்ளே முடிச்சுட்டீங்க
எல்லா இடங்களுக்கும் இலவசமா அழைச்சுப்போனீங்க நல்ல அணுபவம்
என்னா குறைன்னா ஆளுக்கு ஒரு ட்டி.வி பொட்டி இலவசமா கொடுதிருக்கலாம்

said...

வாசிச்சிட்டிருக்கறப்ப சொல்ல தோணினத வாசிச்சு முடிச்சப்பறம் தட்டச்சலாம்னு விட்டேனா, அது காணாமப் போயிருச்சு. எதைச் செய்ய வந்தோம்னு மறந்துட்டா வந்த இடத்துக்குப் போனா ஞாபகம் வரும்னு சொன்னத நினைச்சிகிட்டே பதிவை மூணு நாலு தரம் வாசிச்சாச்சு. என்ன யோசிச்சேன்கிறது மட்டும்.. ம்கூம்..வரவே இல்லீங்க!!! :O((

//ஒருவேளை இந்தப் பொருட்களை எடுத்துக்கிட்டுப் போறவங்களுக்கு ஹோட்டல்காரங்க கொடுக்கற தொகையோ?//
துளசி கடி! :O)

said...

அதெப்படிங்க? டிவி பொட்டியைத் தூக்கிக்கிட்டே அலைய முடியுமா உங்களாலே?

said...

அக்கா, யானை சூப்பர்.. உங்க பொண்ணு கிட்ட நான் சொன்னேன்னு சொல்லிடுங்க.. செம க்யூட்டா பண்ணி இருக்காங்க.. :))

மத்த போட்டோ எல்லாம், யாரு என்னன்னு போடலியே... :(

சரித்திர வகுப்புக்கு நானும் வரலாமா!?

said...

ஆகா! இந்தப் பதிவுலதான் முடியுதா? நான் போன பதிவுலயே முடிஞ்சிருச்சுன்னு நெனச்சேன். அது சரி..ஜிங்கப்பூரு போட்டோ ஒன்னையும் காணோமே?

இப்பிடித்தான் டீச்சர். நானும் பயணத் தொடர் எழுத உக்காந்த போய்க்கிட்டேயிருக்கு.........

said...

டிராஜ்,

உண்மைக்குமே மறந்துட்டேனே.
அடடா.....

ஆமாம் அந்த மூணூ வார்த்தை உங்களுக்காவந்து ஞாபகம் இருக்கா?

ச்சே... எப்படி நான் மறந்தேன்?
வயசாயிருச்சுன்னு ஒரு காரணம் சொல்லிரவா?

said...

முடிச்சுட்டீங்களா:-((

அது என்னங்க பாடம், பாடம்னு பயங்காட்டரீங்க.

அது அந்த க்விஸ் மாதிரி ஈசியா தான இருக்கும் :-D

said...

ஷ்ரேயா,
அப்புறமா நினைவு வர்றப்பச் சொல்லுங்க. நான் எங்கே ஓடிறப்போறேன்?:-)

said...

பொன்ஸ்,

ப்ளூ சுடிதார் ஜெயந்தி
மரூன் சித்ரா
ப்ளூ பூப்போட்ட சட்டை குமார்
வெள்ளைச் சட்டை அன்பு
ப்ளெயின் ப்ளூ சிங். ஜெயகுமார்

பொண்ணுகிட்டே கட்டாயம் சொல்றேன்.
நன்றி.

said...

ராகவன்,

ப்ளொக்கர் சொதப்பிருச்சு இங்கே பாருங்கன்னு போட்டுருக்கேன்.
அங்கே 'பாருங்க' படம் சிலது இருக்கு.

said...

நன்மனம்,
டீச்சர்ன்னா ஒரு கெத்து வேணாமா?

சரித்திரவகுப்பு இப்பத்தான் 35 பகுதி முடிஞ்சுருக்கு. இதோ ரெண்டொரு நாளுலே 36 ஆரம்பம்.

அதெல்லாம் அரியர்ஸ் எழுதிக்கலாம். வகுப்புக்கு வந்துருங்க.

said...

சிங்கையில் நேரம் போனதே தெரியவில்லை தான் எங்களுக்கும். உங்களோடு ஒரு இனிய பயணத்தை மேற்கொண்ட அனுபவம் சுவையாக இருந்தது. நாங்களும் நிறைய பதிவர்களை 'கண்டு' கொள்ள முடிந்தது.

சிவஞானம்ஜி தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டாரே, நல்லது.

said...

நெஜமாலுமே நீங்க சரித்திர டீச்சரா?
உண்மையைச்சொல்லுங்க

said...

//அதெல்லாம் அரியர்ஸ் எழுதிக்கலாம். வகுப்புக்கு வந்துருங்க.//

அப்பா இப்ப தானுங்க தெம்பே வருது.

அந்த பழைய வினா தாள்லாம் ஒரு பொஸ்தகம் போட்ருப்பீங்களே அத கொஞ்சம் கொடுங்க அது இருந்தா தான் எது வரைக்கும் வந்திருக்கு வகுப்புனு தெரிஞ்சு, சுலுவா விட்ட எடத்துலேருந்து பிடிக்க முடியும் :-)

said...

துளசி, இந்தியாவின் முதல் பிரதமர் க்ளூ மறக்கவே முடியாது.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி துளசி.

said...

//ஒரு ரெண்டு வருசத்துக்கு பயணம் அநேகமா இருக்காது//.
நண்பர்க்களே! ஒடி ஒளிந்தது போதும், துளசியக்கா, நியுசி அடைந்து விட்டார்க்கள். இனி இன்னும் இரண்டு வருடங்களுக்கு அவர்கள் தொந்திரவு இருக்காது. இனி நம்ம ராஜ்ஜியம் தான் .........
இதுமாதிரி யாருங்க அங்க சொல்லுரது, தங்க தலைவி குறித்து குறை சொல்லுபவர்கள் மேல் 1 கோடி ரூபாய்க்கு அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும். ஜாக்கிரதை!

said...

சிவஞானமஜி,

ஏன் இப்படியெல்லாம் சந்தேகம் உங்களுக்கு வருது?
ஒரு நாள் வகுப்புக்கு வந்து பார்த்துக்குங்க.

said...

நன்மனம்,

உங்களுக்கு நிஜமாவே 'நன்மனம்'தாங்க.

http://thulasidhalam.blogspot.com/2005/09/1.html

இதுதாங்க ஆ'ரம்பம்'

இங்கே இருந்து அப்படியே படிச்சுக்கிட்டே மேலே ஏறி வந்துருவீங்கதானே?:-)))

இன்னும் சுட்டி வேணுமுன்னா சொல்லுங்க. கிடைச்ச மாணவரை
அப்படியே விட்டுறமுடியுதுங்களா?

said...

மணியன்,

நன்றிங்க. சிவஞானம்ஜிக்குத் தமிழ் சொல்லிக்குடுத்தீங்க. இப்பப்பாருங்க என்னமாதிரி சந்தேகம் எல்லாம்
அவருக்கு வருதுன்னு?:-))))

said...

டிராஜ்,
அடுத்தமுறை கட்டாயம் சந்திக்கலாம். உங்க குடும்பத்தையும் பார்க்கணுமுன்னு இருக்கேன், ஆமா.

said...

கீதா, அந்த ஜோக் நம்ம சித்ரா சொன்னாங்க. அவுங்ககூடக் கொஞ்ச நேரம் பேசுனாப் போதும், சிரிச்சுச் சிரிச்சு
வயித்துவலி வந்துரும்.

said...

நாகை சிவா,
'அப்பாடா'ன்னு ரொம்ப சந்தோஷம்( உள்ளூக்குள்ளேயே) பட்டுக்கவேணாம்.

இந்தப் பயணம் மட்டும்தானா? உலகம் சுத்துன பயணம் எடுத்தேன்னு வச்சுக்குங்க,
அவ்வளவுதான் எல்லாரும் 'அம்பேல்':-)

said...

கிளாஸ் ஆரம்பிச்சாச்சா இதோ வந்துகிட்டே இருக்கேன் !

said...

நன்றி மணியன்...எல்லாம் உங்களைப்
பொன்றோரின் தூண்டுதல்தான்..நன்றி

said...

பொதுவா ஹிஸ்டரி டீச்சர்ங்க மெலிசா இருப்பாங்க(ட்யூஷன் சான்ஸ்
இல்லேல்லே.....)
அது மாத்ரமில்லெ....வேணாம் சொன்னா வம்பு...ஆட்டோ இல்லெ ஹெலிகாப்டர் வரும்...உட்ருங்க

said...

துளசி முடிச்சுட்டீஙக சீக்கிரமா?கூடவே வந்த உணர்வு. பொண்ணு போட்ட யானை மிகப் ப்ரமாதம். திருப்பி திருப்பி ஹிஸ்டரி பாடம் வருது. எங்கெ வரணும்/?பாட்டிகளுக்கு இடம் உண்டா?

said...

வாங்க சிங்.செயகுமார்.

'மாணவர்'ன்னா உங்களை மாதிரி இருக்கணும்.எவ்வளோ ஆர்வமா வகுப்புக்கு வரேன்னு சொல்றீங்க.

சிலர், இருக்காங்கப்பா, ஆயிரம் கேள்விகள் கேட்டுகிட்டு:-)))))))))))))))

said...

சிவஞானம்ஜி,

இப்படிப் பேருலேயே ஒரு 'ஜி'யை வச்சுக்கிட்டு எல்லாரையும் வெகுமரியாதையாக் கூப்புட வச்சுட்டீங்க:-))

என்ன ? சரித்திர டீச்சர் ஒல்லியா இருக்கணுமா? ஏன்? எதுக்கு? எப்படி?
இதுக்கேத் தனியா ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்து ட்யூஷன் ஃபீஸ் வசூல் பண்ணிட்டாப் போச்சு.
அனுப்புற அதே ஹெலிக்காப்டரில் வந்து சேருங்க.

said...

மானு,

இதுதான் ஓப்பன் யுனிவர்சிட்டிங்கறது. யாரு வேணா சேரலாம். படிச்சாலும் படிக்கலாம், படிக்காமயும் இருக்கலாம்.

ச்சும்மா ஒரு 'பில்ட் அப்'தான். வகுப்பு நல்லா இல்லேன்னா அடிக்க வந்துறாதீங்க.

ஜெயகுமாரோட ஆர்வத்தைப் பார்த்தா அப்படிச் சொல்ல மாட்டீங்கல்லெ?

said...

உஷா,

என்னது தடை செய்யப்பட்ட சைட்டா? தேவுடா.......!!! அது ஃப்ளிக்கர் போட்டொ ஆல்பம்தான்.

http://www.flickr.com/photos/49375112@N00/?saved=1

இதுலே பாருங்க. இல்லேன்னா தனி மடல்லெ அனுப்பிவிடறேன்.

said...

உண்மை தான் அம்மா, போன மே மாதம் நாங்களும் சிங்கை சென்றபோது அதே கிளார்மவுண்ட்டில்தான் தங்கவைக்கப்பட்டோம் எங்கள் டூர் ஏஜண்ட்டால், வெளியில் இருந்து வாங்கிச்சென்று குடித்துவிட்டுப்போட்ட்ட கோக் பாட்டிலையும் அங்கு இருந்தே எடுத்து குடித்ததாக கணக்கு காட்டி மோசம் செய்கின்றனர், எதிரேயே அவ்ளோ பெரிய கடை இருக்கறதால இவங்க அடிக்கற கொள்ளை பெரிசா தெரியலையோ என்னவோ மக்களுக்கு????? எனிவே , மக்களே என்னோட அறிவுரையும் இதுவே, புதிதாக சிங்கை செல்பவர்கள் ஏஜெண்ட்டிடம் சொல்லிவிடுங்கள், இப்போ கோடைவிடுமுறை கழிக்கச்செல்பவர்கள் கூட, ஏனெனில் அந்த விடுதிக்காரர்கள் ஏஜண்ட்களுக்கு பணம் கொடுத்துவிடுகின்றனர், எனவே சொல்லி மாற்ற்றிக்கொள்ளுங்கள் அதைவிட ச்சீப்பான விடுதி எலாம் உண்டு, அப்ப்படியே தங்கினாலும் ஏமாறாதீர்கள்..
நன்றிகள் அம்மா...
ஸ்ரீஷிவ்...

said...

சிவா,
இதைப் பதிஞ்சிருந்தா இப்படி நான்போய் மாட்டிக்கிட்டு இருப்பேனா?

போங்க சிவா.

சரி சரி. இனிமேயாவது யாரும் போகாம இருந்தாச் சரி.
அதே காசுலே 'நியூ பார்க்' கிடைக்கும். அருமையான இடம்.
முஸ்தாஃபா கடைக்குப் பின்னாலே இருக்கு. நல்ல பெரிய ஹோட்டல்.
அங்கே ஸ்பெஷல் ரேட்லெ புக் செய்யலாம்.

said...

துளசி,

உங்கள பார்த்தா பொறாமையா இருக்குங்க.. எத்தன ஊரு.. எத்தன நண்பர்ங்க.. நானும் இருக்கேனே குண்டு சட்டிக்குள்ள குதிரைய ஓட்டிக்கிட்டு..

ஒலகத்துல எந்த மூலையாருந்தாலும் நண்பர்களை நினைவுல வச்சிக்கிட்டு மறக்காம போய் பாக்கறீங்க பாருங்க.. க்ரேட்..

உங்களோட இந்திய பயணத்துல ஏறக்குறைய எல்லா நாட்களையுமே பயனுள்ளதாத்தான் செலவழிச்சிருக்கீங்க. பயணம் முடிஞ்சப்போ உங்களுக்கு இருந்த அதே திருப்தி, சந்தோஷத்த உங்க அனுபவத்த படிச்ச எங்களுக்கும் தந்திருக்கீங்க பாருங்க அதாங்க ஒங்க எழுத்துக்கு கிடைச்ச வெற்றி..

மனமுவந்து வாழ்த்துகிறேன்..பிடிங்க நூறு பொற்காசுகள்:))))))))))))))))))) போதுமா இந்த சிரிப்பு!

said...

சிவஞானம்ஜி தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டாரே, நல்லது. //

ஜி! இதுல உங்களுக்கு குரு நாந்தான்னு ஒரு அறிக்கை விடுங்களேன்:))

said...

என்னங்க டிபிஆர்ஜோ,
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..... இப்பவே!

மொதல்லே குண்டு சட்டிக்குள்ளே குதிரையை எப்படிக் கொண்டு போனீங்க?
குதிரை என்ன ப்ரீடு?

நூறு பொற்காசுகள்? தங்கம் விக்கறவிலையிலே இதுவே போதும்தான். ஆனா அதை
'ஒட்டியாணம்' செஞ்சு கொடுக்கலாமுல்லே?:-)))

---
சிவஞானம்ஜிக்கு குருவா?
சரியாப்போச்சு...........
மொதல்லே அவருக்கு நான் 'டீச்சர்'தானான்னே பெரிய சந்தேகம் இருக்கு.
இதுலே இப்ப இது வேறயா?

said...

என்ன profileஐ பகிர்ந்துட்டீங்க போலிருக்கு. சரி, நல்லது. உங்க அடையாளம் பாதுகாக்கப்படும். அப்படியே நம்ம வலைப்பதிவுக்கு வந்து தன்னியக்க மட்டுறுத்தல் (Smart moderation) பத்தியும் படிச்சுட்டு போங்க.

said...

துளசி உங்க ஆசை மகளின் அன்பு பரிசு!அழகு
ஒவ்வொரு பதிவும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது!
பதிவை படிக்கிறவங்களுக்கே இப்படின்னா உங்களுக்கு கேக்கணுமா

பகிர்ந்து கொண்டது ரொம்பவும் சந்தோஷம்.

மீனா.

said...

மீனா,
நன்றிங்க.
இப்படி ஓசைப்படாம 'வாசக(ர்)சாலை'யைத் திறந்து வச்சா என்ன அர்த்தம்?

ஊர் ஊராச் சுத்துனதுலே இதைக் கோட்டை விட்டிருக்கேன்(-: