Monday, August 07, 2006

ரெடிமேட் பகுதி 10

மக்கள்ஸ் மாப்பு......... ப்ளீஸ்.

எடுத்த வேலையை முடிச்சுறலாமுன்னு நினைச்சால் எதாவது தடங்கல் வந்துக்கிட்டே இருக்கேன்னு,கொஞ்சம் முனைப்பா இந்தத் தொடரையாவது எழுதிரலாமுன்னு மறுபடி ஆரம்பிச்சிருக்கேன்,வழக்கம்போல ஆதரவு கிடைக்கும் என்ற மகா நம்பிக்கையுடன்.


மறந்து போனவங்களுக்காகவும், புதுசா வந்து இருக்கறவங்களுக்காகவும் இதோ முன் பதிவுகள், 1 முதல் 9 வரை.


ரெடிமேட் 1

ரெடிமேட் 2

ரெடிமேட் 3

ரெடிமேட் 4

ரெடிமேட் 5

ரெடிமேட் 6

ரெடிமேட் 7

ரெடிமேட் 8

ரெடிமேட் 9


ரெடிமேட் பகுதி 10

ஊருக்கும் போகணும். நம்மகிட்டே இருக்கற நாலு பாத்திர பண்டங்களையும் காப்பாத்திக்கணும். எல்லாத்துக்கும் மேலா, உயிரோடு இருக்கணும். ஊஹூம்.... இந்த வீடு சரிப்படாது.வேட்டையை மறுபடி ஆரம்பிச்சோம். எல்லாம் வீடு வேட்டைதான்.


அலைஞ்சதுலே பலன் கிடைச்சது. ஹடப்ஸாரை அடுத்து இருக்கற சஸானே நகர்லே ஒரு வீடு இருக்கு. முக்கியமா அக்கம்பக்கத்துலே எங்க இவரோட கம்பெனியில் வேலை செய்யும் ஆட்கள் குடும்பத்தோடு இருக்காங்க. இன்னும் சொல்லப்போனா அதிமுக்கியமான விஷயம் ஒண்ணும் இருக்கு. எல்லாரும் தென்னிந்தியர்கள். அதுவும் கேரளர்கள்.


போய்ப் பார்த்தோம். வீடு(?) ரொம்பச் சின்னது. ஒரு பெரிய அறையை ரெண்டாத் தடுத்திருக்கு. டூ ரூம் ஹவுஸ்!அறை என்ன பெரிய அறை? பன்னெண்டுக்கு பதினாறு அடி இருக்கும் ரூம், ரெண்டாக் கிடக்கு. முன்னாலெ இருக்கறது ஹால் & டைனிங் & பெட்ரூம் & ஐய்யோ இப்படிச் சொல்லிக்கிட்டே போகவேண்டியதுதான். அடுத்து இருக்கறது அடுக்களை & பாத்ரூம். ச்சின்னதா கட்டைச்சுவர் எழுப்பி ஒரு மூணுக்கு மூணு இடம். குளியலறை! மத்ததுக்கு வெளியே தனியா ஒரு கட்டிடம், நாலு கழிவறைகளோடு.


நல்லாத்தான் இல்லை. ஆனா....... ஊருக்குப் போகணும். கட்டாயம் போகணும். போயே ஆகணும்.மனசுலே ஒரே வெறி.


சரின்னு அங்கே வீடு மாறியாச்சு. வாடகைக்கு எடுத்திருந்த சாப்பாட்டு மேஜையைத்தான் வச்சுக்க முடியாது. அது ரொம்பப் பெருசு வேற. இடம் கிடையாதே. அதை மொதல்லே திருப்பிக் கொடுத்தோம். இங்கே வந்து சாமான்களைஒதுக்கி வச்சு, அக்கம்பக்கம் நட்பாக ஒரே நாள்தான் ஆச்சு. நமக்கு பாஷை ஒரு பிரச்சனை இல்லையே!


ரெண்டு பக்கமும் வரிசையா வீடுங்க, ஒண்ணோடஒண்ணுதோளில் உராய்ஞ்சுக்கிட்டு. எதிர்வரிசையில் மூன்று குடும்பமும், எங்க வரிசையில் 3 குடும்பமும் தவிர மத்தவங்க எல்லாம் மராத்திக்காரங்க. ரொம்பச் சாதாரண மக்கள். சேட்டன்மாரெல்லாம் எங்க இவர் வேலைசெய்யும் கம்பெனியில் மெஷீன் ஆப்பரேட்டர்கள். கருவேப்பிலைக் கொத்துப்போல ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு எங்க இவர் மட்டும்தான் எஞ்சிநீயர். அதனாலே நமக்குஏகப்பட்ட மருவாதை.


தினம் பத்து மணிக்கப்புறம் மாதர்சங்கம் கூடிரும் நம்ம வீட்டுலே. தொ(ல்)லைக்காட்சிப் பெட்டிகள் அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருந்த காலக்கட்டம்.


ஊருக்குப் புறப்பட ஆயுத்தம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. சில புதுப் புடவைகளும் எடுத்தாச்சு. அதுக்கு ப்ளவுஸ் தைக்கணுமே. நம்ம வீட்டுக்குப் பின்னால் இருந்த இன்னொரு வரிசை வீட்டிலே ஒருத்தர் தைப்பாங்களாம். அங்கேயே கொடுத்துட்டா சுலபமுன்னு நினைச்சு அங்கேயே கொடுத்தேன். தைச்சும் கொடுத்தாங்க. என்னத்தைச் சொல்ல?கிராமத்து ஸ்டைல்!

சரியில்லேன்னு சொல்லி, அதை பிரிச்சு மறுபடி தைச்சு எப்படியோ வந்துச்சு. வேற வாங்கிக்க சக்தியும் இல்லை, நேரமும் இல்லை. அதையே ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செஞ்சு போட்டுக்கிட்டு ஊருக்குப் போய்வந்தோம்.


ஒரு நாள் எம் ஜி ரோடுலே உல்லாசமா(!)நடந்துக்கிட்டு இருந்தோம். ஏன் உல்லாசம் இருக்காது? அதான் போனஸ் கிடைச்சிருந்ததே! நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத கணத்துலே, 'உனக்கு என்ன வேணும்? வாங்கித்தரேன்'னு சொன்னார். என்ன வேணும்? கேக்கத்தெரியலை. ஒருவேளை ஷாக்குலே இருந்துருப்பேன். அப்படியே நின்னுட்டேன்.அந்தக் கணம் நடந்துக்கிட்டு இருந்த இடம் ஒரு தைய்யல் மெஷீன் விக்கற கடைக்கு வெளியே.


' எனக்கு ஒரு தைய்யல் மெஷீன் வாங்கித் தாங்க'ன்னதும் மறு பேச்சுப் பேசாம அந்தக் கடைக்குள்ளே நுழைஞ்சுட்டார். 'நீலம் தைய்யல் மெஷீன்' விலை 600 ரூபாய். வாங்கியாச்சு. மறுநாள் கடைக்காரப் பையனே கொண்டு வந்து டெலிவரி செஞ்சுருவான்.


'இன்னும் வேற என்ன வேணும்?'னு அடுத்த ஷாக்! எவ்வளவு போனஸ் வந்தது? கேக்கலையே!


அங்கே பக்கத்துலே வீட்டுச் சாமான்கள் விக்கற இன்னொரு கடை இருந்தது. அங்கே போய்ப் பார்க்கலாமுன்னு போனோம். நல்ல இரும்பு பீரோ, காத்ரெஜ் கிடையாது. ஆனா அதே போல, லோக்கலி மேட். ஆளுயரக் கண்ணாடிஒரு கதவுலே இருக்கு. கதவுக்கு உள்பக்கம் வளையல்கள் வச்சுக்க ஒரு ரோலர். உள்ளே லாக்கர். அதுக்குள்ளே நகைகள் வைக்கத் தனியா இன்னொரு லாக்கர். அதுக்குள்ளே இன்னும் ஓரு ரகசிய லாக்கர். கையை வளைச்சு ஒரு ஆங்கிளிலே கொண்டுபோனா மத்த ரெண்டு ரகசிய அறைகளும்தட்டுப்படும். வாங்கலாமா, வேணாமான்னு யோசிச்சப்ப அங்கே கண்ணுலே பட்டுச்சு கிச்சன் டேபிள்.


அளவு சரியாத்தெரியலை. ஒரு மூணடிக்கு அஞ்சடி இருக்கற மேஜை. எல்லாம் இரும்பாலே செஞ்சது. அலுமினியம் டாப்.அது மேலே இடது பக்கத்துலே ஒரு பக்கத்துலே ச்சின்ன ஷெல்ஃப்.
மேஜைக்கு அடியிலே வலதுபக்கம் ஒரு வலைக்கதவு போட்ட கப்போர்டு. இடதுபக்கம் தட்டுகள் அடுக்கி வைக்ககம்பி கம்பியா இருக்கும். நடுப்பாகம் ரெண்டு தட்டு ஓப்பன் ஷெல்ஃப். முக்கால்வாசி அடுக்களைச் சாமான்களை அதுலேயே வச்சுக்கலாம். முன்பக்கம் கொக்கிகள் இருக்கும், டீ கப்புகளை மாட்டி வைக்கறதுக்கு. 'இனிமே வாங்கப்போற' கேஸ் அடுப்பை அலுமினிய மேஜையில்( மேடையில்) வைத்துச் சமைக்கலாம். குழம்பு கொதிச்சு வழிஞ்சாலும் துடைக்கிறது ரொம்பசுலபம். பூனா, பாம்பேலேதான் இதை நான் நிறையப் பார்த்திருக்கேன். இட நெருக்கடி இருக்குதில்லையா?


அது இருந்தாத் தேவலை. பீரோ வேணாமுன்னு சொன்னேன். இதுலே நகையெல்லாம் வச்சுக்க வசதி இருக்கு. ஆனா நம்மகிட்டே பெருசா நகைகள்னு ஒண்ணும்தான் இல்லையே!


இவர் என்ன நினைச்சாரோ தெரியலை. ரெண்டுமே வாங்கிக்கலாம். காசு இருக்குன்னு சொன்னார்.


மறுநாள் வீட்டுக்கு எல்லா சாமான்களும் வந்து சேர்ந்துச்சு. தைய்யல் மெஷீனுக்கு ரெண்டு வருசம் கேரண்டியாம்.அட! பரவாயில்லையே.
கொண்டுவந்த அந்தப் பையனே மெஷீன்லே எப்படி நூலைப் போடணுமுன்னு போட்டுக் காமிச்சு, ஒரு துண்டுத்துணியிலே தைய்யல் சரியா வருதான்னு பார்க்க ரெண்டு தடவை ஓட்டியும் எல்லாம் சரி செஞ்சும் கொடுத்துட்டுப் போனான். ச்சின்னப் பையன்தான். பதினேழு வயசுகூட இருக்காது.


இனி நாமே எல்லாத்துணிகளையும் தைச்சுக்கலாம். இதுலேயே பூத் தைய்யல் போட்டு ஜமாய்க்கலாம். ஜாலிதான். ஆனா.....



ஆனா என்ன ஆனா?

எனக்குத்தான் துணி தைக்கத் தெரியாதே!
_____________________

9 comments:

said...

முதல்ல தொடர்லருக்கற எல்லா எப்பிசோடுகளையும் படிக்கணும்..

இன்னைக்கி, நாளைக்கி, நாளன்னிக்கி போர்ட் மீட்டிங், கமிட்டி மீட்டிங்னு பிசி..

இனி வியாழக்கிழமைதான்.. சரீங்களா?

said...

துளசி அக்கா,

ஒரு வருஷம் கழிச்சி, இன்னிக்கு எப்படி நினைவு வந்துச்சு இந்தத் தொடர்?!!

ஆரம்பம் ரெண்டு அத்தியாயம் படிச்சேன்.. எல்லாத்தையும் படிக்க ஓவர் டைம் தான் போடணும்.. அப்புறம் வரேன்.. :)

[எல்லாரும் இதையே சொல்லப் போறாங்க, பேசாம மீள்பதிவாக்கி இருக்கலாம் ;) ]

said...

வாங்க டிபிஆர்ஜோ.

எங்கெ ஓடிறப்போகுது? நிதானமாத்தான் படியுங்க.

said...

பொன்ஸ்,

என்ன மீள் பதிவா? ஒம்போது பகுதியை மீள்பதிவாப் போட்டா,
ஆட்டோ கூட இல்லை, லாரிதான் வரும் அடிச்சு உதைக்க:-))))

நின்னு நிதானமாப் படிங்க. அவசரமே இல்லை.

ஆமாம் இப்பக் கப்பல் பயணமா? நியூஸிக்குத்தானே வந்துக்கிட்டு இருக்கீங்க?

said...

திடீரென்று சென்றவருட வகுப்புக்கு அனுப்பி விட்டீர்களே! நீங்க தையல் கிளாசிற்குப் போனீர்களா ?

//ஒரு வருஷம் கழிச்சி, இன்னிக்கு எப்படி நினைவு வந்துச்சு இந்தத் தொடர்?!!//

எல்லாம் Archive browser உபயம்தான், சரிதானே !:)

said...

துளசி, 10ம் படிச்சாச்சு. ஆளை விடு. அனுபவமா. அனூஊஊஊஊபவமாஆ.

ரொம்ப நல்லா இருக்குப்பா.
இத்தனை இடம் மாறி, மஷினும் வாஙியாச்சு. ரவிக்க ப்ரச்சினை தீர்ந்துதா?
ஊருக்குப் போனீங்களா.
தைச்சிங்களா.
கெங்கு ரெட்டி தெருவிலே எப்போ இருந்தீங்க
கேள்விகளுக்குப் பதில் எதிர்பார்க்கும்...

said...

வாங்க மணியன்.
தையல் வகுப்புக்கு எல்லாம் போகலை. 'ஆயிரம்பேரைக் கொன்னு அரை வைத்தியன் ஆனான்'னு பழமொழி
இருக்கே அதுபோல, ரெண்டாயிரம் துணியைக் கெடுத்து அரை/முழு டெய்லர் ஆயிட்டேன்:-)))))

இந்த வாரம் புதுசா எழுத நேரம் இல்லை. ஏற்கெனவே எழுதி ஆரம்பித்த 'ரெடிமேடை'யும் எப்பவாவது முடிக்கத்தானே
வேணுமுன்னு, அதுக்காக முதலிலேயே எழுதி வச்சிருந்ததை இப்பப் போட ஆரம்பிச்சேன். இதைக் கட்டாயம் முடிச்சுரணும்
இன்னும் ரெண்டு மூணு வாரங்களில்.

said...

வல்லி,

மனுஷவாழ்க்கையே அனுபவங்களின் தொகுப்புதானேப்பா.

1974 ஆரம்பத்துலே கெங்குரெட்டித் தெருவுலே இருந்தேன்.

said...

எல்லா ட்டீச்சரும் இதைத்தான் செய்வாங்க.....நடத்துற சப்ஜெக்ட்லே
தடங்கல் வந்தா நைஸா வேற சப்ஜெக்ட்ட எடுத்துடுவாங்க
எனக்கு என்ன வசதினா மிக சமீபத்திலேதான் ரெடிமேட் 9 எபிசோடையும் திருப்பி திருப்பி படிச்சேன்