Monday, September 18, 2006

ரெடிமேட் பகுதி 14

டிங்..... டிங்.....னு ரேடியோவிலே சத்தம் வந்தவுடனே தெரிஞ்சு போகும், மரண அறிவிப்பு வரப்போகுதுன்னு.டவுன்லே இருக்கற ஜனங்களைத்தவிர ஒவ்வொரு டவுனைச் சுத்தி இருக்கற 18 பட்டி மக்களும், இன்னும் சொல்லப்போனா நாடு முழுக்க இந்த ரேடியோவைத்தான் நம்பி இருக்கு.மக்களுக்கு எதாச்சும் சொல்லணுமுன்னா ரேடியோவிலே சொன்னாப் போதும்.


புயல் எச்சரிக்கை, நாட்டு நடப்பு, மரண அறிவித்தல் எல்லாமே இப்படித்தான். கடைகண்ணி, ஆஃபீஸ், தொழிற்சாலைன்னு எங்கேயும் மெலிசான குரல்லே ரேடியோ பாடிக்கிட்டும் சொல்லிக்கிட்டும் இருக்கும். 24 மணி நேர ரேடியோ. இதுலே ஹிந்திக்குத் தனிச்சானல். இந்த ஹிந்திப் பாட்டுகளுக்கிடையிலே திடீர்னு ஒரு தமிழோ, தெலுங்கோ, மலையாளமோ இல்லேன்னா எதாவது ஒரு இந்திய மொழியிலோ ஒரு பாட்டு வரும். எப்போ, என்னைக்குன்னு தெரியாது. இதெல்லாம் நம்மைமாதிரி ஆளுகளுக்கு ஒரு போனஸ்.


மரண அறிவிப்புலே, யார் இறந்தாங்க, அவுங்க யார்யாருக்கு என்ன வகையிலே சொந்தம், எப்ப சவ அடக்கம்,எங்கே எத்தனை மணிக்குன்னு விஸ்தாரமாச் சொல்வாங்க. பலருக்கும் சொந்தங்கள் கனடா, ஆஸ்தராலியான்னு இருக்கறதாலே சவ அடக்கம் பொதுவா ஒரு வாரம் தள்ளியே நடக்கும். அதுவரை?


இறந்தவங்க உடல், சவக்கிடங்குலே வச்சிருப்பாங்க. மரணம் நடந்த வீட்டிலே சவ அடக்கம்வரை அடுப்புப் பத்த வைக்கக்கூடாதுன்னு ஒரு சாஸ்த்திரம் இருக்காமே. அதனால் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இருந்துசமையல் செய்து கொண்டு போய்க் கொடுக்கறது வழக்கம். தினமும் சாயந்திரம் அவுங்கவுங்க மதப் பழக்கத்தை அனுசரிச்சு கீதையோ, பைபிளோ, குரானோ படிப்பாங்க.அப்பவும் அக்கம்பக்க மனிதர்கள் நண்பர்கள்ன்னு ஒருகூட்டம் போய்வரும்.


சவ அடக்கநாள் வந்துருச்சுன்னா, ரேடியோவில் சொன்ன நேரத்துக்கு மறுபடி எல்லாரும் போவாங்க. அங்கே இறந்தவர் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டுலெ நமக்குப் பழக்கமான ஒப்பாரி வகைகளொ,தாரை தப்பட்டை,சேகண்டி, சங்கோ இல்லாம அமைதியாத்தான் இருக்கும். முக்கியமா எல்லாரும் நல்ல நல்லஆடை ஆபரணங்களோடு வந்திருப்பாங்க. இது இறந்தவருக்குச் செய்யும் மரியாதைன்னு அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்.


இப்படித்தான் ஒரு சாவு வீட்டுக்குப் போயிருந்தப்ப, இறந்தவரின் கடைசி மகள் போட்டுருந்த உடுப்பு டிஸைன் கண்ணுலே பட்டது. எப்பவும் புதுப்புது டிஸைன்களைப் பத்தியே சிந்திச்சுக்கிட்டு இருக்கற எனக்கு எங்கே போனாலும் இந்தக் கண் அலைச்சலை நிறுத்த முடியறதில்லை. சவப்பெட்டிக்குப் பக்கத்துலே உக்கார்ந்து அப்பாவையே பார்த்துக்கிட்டு இருக்கற பொண்ணை நான் பார்த்துக்கிட்டே இருக்கேன். அப்புறம்?......


ரெண்டேநாளுலே அதே டிசைன் உடுப்பு மகள் போட்டுக்கிட்டு இருந்தாள்!


இப்படி தினம் தைக்கிற உடுப்பு அன்னிக்குப் போடறதோட சரி. இன்னொரு நாளுக்குத்தான் வேற புதுசு வந்துருதே.நம்ம குழந்தையைக் குளிப்பாட்ட வந்துக்கிட்டு இருந்த தாதியம்மாவுக்கு ஒரு பேத்தி பிறந்துச்சு. என் மகளைவிடமூணு மாசம் ச்சின்னது. அந்தப் பாப்பாவுக்கு உடுப்புகளைக் கொண்டு போயிருவாங்க தாதியம்மா. அந்த ஊர்லே அப்ப கேரளத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் குடும்பத்தோட இருந்தார். அவரோட மனைவி கீதாவும் நல்லா தைப்பாங்க. அவுங்க குழந்தை 22 மாசம் பெரியவள். அவளுக்குத் தைக்கும்போது மீதம் வர்ற துணியிலே என் மகளுக்கும் ஒரு ச்சின்ன உடுப்பு தைச்சுக் கொண்டு வந்து கொடுப்பாங்க கீதா. ரெண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி உடுப்போடு விளையாடும்.வீடு முழுக்க இப்படித் துணிகளா இருந்தது அப்ப. அதுக்கப்புறம் ஆறு மாசம் கழிச்சு, கீதா குடும்பம் வேற நாட்டுக்குப் போயிட்டாங்க.


இப்படியே சில வருஷங்கள் போச்சு. இதுக்கு நடுவிலே மெஷீன் கொஞ்சம் தகராறு. அதுக்குப் போட்ட காசையெல்லாம் முதலாக்கியாச்சுதான். நஷ்டம் ஒண்ணும் இல்லை. மெஷீன் இல்லேன்னா கை ஒடைஞ்சதுபோல ஆயிறாதா? அப்ப என் பொழுது போக்கு?


சரியாத் தைக்காத கோபத்தில் மெஷினைக் கழட்டிக் கொண்டுபோய் புல்தரையில் போட்டுருவேன். போறப்ப வர்றப்பக் கோவமா லுக் விட்டுக்கிட்டு இருப்பேன். அதுக்குப் புரிஞ்சதோ என்னவோ........... கொஞ்ச நேரம் கழிச்சு வேற என்னசெய்யறதுன்னு தெரியாம திருப்பிக் கொண்டுவந்து ஸ்டேண்டுலே பூட்டுனா, தெய்வமேன்னு கொஞ்சம் தைக்கும்.இது சாதாரணக் கால் மெஷீந்தான். வேற ஒண்ணு புதுசா வாங்கிக்கலாமுன்னு விசாரிக்க ஆரம்பிச்சேன். பக்கத்துலே ரெண்டாவது ஊர்லே ( 44 மைல் தூரம்) ப்ரதர் சோயிங் மெஷீன் ஏஜண்ட் இருந்தார். இந்த ஊருக்கு அடிக்கடி போய்வர்றதுதான். அங்கெ ஒரு கடையிலே தமிழ் சினிமா வீடியோ டேப் கிடைக்கும். படம் எதாவது அவுங்களுக்கு வந்துச்சுன்னா,அவர் ஃபோன் போட்டுச் சொல்லுவார். இங்கிலீஷ்லே எழுதி இருக்கற படத்தோட பேரைத் தப்பும் தவறுமாப் படிப்பார்.குஜராத்திக்காரர். எப்படியோ அதை(யும்) புரிஞ்சுக்கிட்டு அவ்வளோ தூரம் போய் அதை வாங்கி வருவோம். இப்படி நம்மதமிழ் சினிமாத் தொடர்பு விட்டுப்போகாமக் கட்டிக் காப்பாத்துனோம். அதானே? கலை & கலாச்சாரத்தை அப்படியே விட்டுறமுடியுதா என்ன?


டேபிள் மாடல் மெஷீன்கள்தான் நிறைய வந்துக்கிட்டு இருந்துச்சு. எனக்கு, பழைய ஸ்டைலில் இருக்கற ஸ்டேண்டு மாடல் கிடைக்குமான்னு தேடுனதுலே அப்படி ஒண்ணு கிடைச்சது. 22 விதமான தையல், ஆட்டோமாடிக் பட்டன் ஹோல்,Zigzag தைய்யல்னு அமர்க்களமா இருந்துச்சு. எலெக்ட்ரிக் மெஷின்.


வாங்கிவந்து நம்ம ஸ்டேண்டுலே பூட்டியாச்சு. ஜோரா கஷ்டமே இல்லாம தைக்குது. அப்பப் பழைய மெஷீன்?


ஊசியை மட்டும் கழட்டிட்டு மகளுக்கு விளையாட்டுச் சாமானாக் கொடுத்துட்டேன்!

9 comments:

said...

//பழைய மெஷினை மகளுக்குக் கொடுத்திட்டேன்..//

சீதனம்?

said...

koduthu vecha dhadhiyamma.. ;) niraya vagai vagaiya dress.. ana adhellam potuka mudiyuda illiya ngradu vera vishayam.. hehehe

said...

பேரினை நீக்கிப் பிணம் என்று கூப்பிட்டு
சூரியன் காட்டிடையே கொண்டுபோய் சுட்டு வீடு
நீரில் மூழ்கி நினைப்பு ஒழிவார்கள் -
என்று மனிதனின் மறைவிற்குப் பிறகு ஏற்படும் நிலைப்பாட்டச் சிறப்பாகச் சொன்னான் ஒரு ஞானி!

இங்கேயெல்லாம்
24 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க மாட்டார்கள்
5 நாட்களில் அந்திமக் காரியங்களையெல்லாம் நிறை வேற்றிவிட்டு
அனைவரும் சகஜ வாழக்கைக்குத் திரும்பிவிடுவார்கள்.

said...

சிஜி,

இந்த 'ச்சீ' தனம் ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை:-)

said...

வாங்க வாத்தி(யாரே)

அது என்னங்க பட்டினத்தார் பாடலா?

இப்ப சொந்த பந்தங்கள் வெளியே இருந்து வர்றதாலே நம்ம பக்கங்களிலும்
சில நாள் ஒத்திப்போட்டுவைக்க வசதி வந்துருச்சாமே. அதுவும் ஒரு
வகையில் நல்லதுதான்.

said...

ரேடியோ!!
எனக்கு பக்கத்தில் உள்ளவன் அவனுக்கு மட்டுமே புரியக்கூடிய பாஷை (சீனம்) பாட்டை தினமும் போட்டு கட்டாயப்படுத்தி கேட்க வைக்கிறான்.
என்னத்தச்சொல்ல??

said...

enga en pinnuttam kaanom :(

said...

வாங்க குமார்.
எதோ ஒரு பாஷையிலே 'ங்ஙொண ங்ஙொண' கேட்டுக்கிட்டே இருக்கீங்களா?
அதுக்கென்ன? பேசாம அந்த பாஷையைக் கத்துக்குங்க. 'குச் காம் கோ ஆயேகா'

said...

பொற்கொடி,

இதுதானே? அந்தம்மா போட்டுக்க முடியாது. உண்மை. அந்தக் குழந்தை போட்டுக்கலாமுல்லெ?
அவ்வளவு மோசம் இல்லையாக்கும் நம்ம தைய்யல்(-:

பின்னூட்டம் லேட்டா வந்துருக்கு. இப்பப் போட்டாச்சு.