Thursday, October 19, 2006

எவ்ரிடே மனிதர்கள் -20 இந்திரா காந்தி

இந்திரா காந்திக்கு ஆஸ்த்துமா. இன்னிக்குக் கொஞ்சம் இழுப்பு கூடுதலாவெ இருக்காம். அடடா.... சரி, போய்ப் பார்த்துட்டு வரலாமுன்னு போனேன். பக்கத்து வீடுதானே?


ரொம்பக் குறுகலான மாடிப்படி. ஏந்தான் இப்படிக் கட்டி இருக்காங்களோ? இருட்டு வேற.தடுமாறிகிட்டே ஏறுனேன். மேல் படிகிட்டே நெருங்கும்போதே 'ஹ்ஙே ஹ்ஙே'ன்னு சத்தம்.பதறிக்கிட்டு உள்ளெ ஓடுனேன். என்னப் பார்த்ததும் 'சட்'னு கட்டிலிலே இருந்து எழுந்தாங்க.


குண்டுமில்லாம ஒல்லியாவும் இல்லாம நடுவாந்தரமான உடம்பு. தோளைத் தொடும் சுருட்டை முடி கம்பிகம்பியா பரந்துருக்கு. அதுவும் வலியிலெ படுத்துப் புரண்டதுலே இன்னும் 'பம்'னு ஆகியிருக்கு.


"வெறும் ஸ்வாசமுட்டல் தன்னே....பேடிக்கண்டா.... பதிவா.........."


அடக்கடவுளே! இப்படி இழுக்குது. ஆனா " ச்சும்மா மூச்சுத்திணறல்தான்.
பயப்படாதே.வழக்கமா வர்றதுதான்" ன்னு சொல்றாங்களே.
ம்......... அதுலேயும் உண்மை இருக்கு போல. "ஆஸ்த்துமாக் காரனுக்கு அழிவில்லே'ன்னு ஒரு பழமொழிஇருக்குல்லே? அதான் எல்லாரும் வேலைக்கு, பள்ளிக்கூடத்துக்குன்னு கிளம்பிப் போயிட்டாங்க.
வீட்டை சுத்திப் பார்வையை ஓட்டுனேன். பெரூசா ஒரு அறை. ஹால்ன்னே சொல்லலாம். அதுலெயேஒரு பக்கம் மேஜை ஒண்ணு போட்டு கேஸ் அடுப்பு உக்கார்ந்துருக்கு. அதுக்கு அந்தண்டைப் பக்கம் இருக்குற மோரியிலெ பாத்திரங்களா இறைஞ்சு கிடக்கு. இந்தப் பக்கம் ரெண்டு கட்டிலுங்க தலையும் தலையும் ஒட்டுறமாதிரி கிடக்கு. பின் பகுதியிலே இன்னுமொரு மாடிப்படி. ச்சும்மா பாக்கறதுக்கு ஏணிமாதிரி இருக்கு. மேலே இருந்து பளிச்சுன்னு சூரியன் அடிக்குது.


என் கண்ணு போற போக்கைப் பார்த்துட்டு, மேலே ஒரு கட்டில் போட்டுருக்கு. ஷெரீபோட இடம்ன்னுசொன்னாங்க. அட! வெளியே இருந்து பார்க்கும்போது நம்ம வீட்டுக் கூரை உயரம்தான் இருக்கு இந்த வீட்டுக்கும். இங்கே மட்டும் எப்படி மேலெ ரூம்? ஏறிப்போய்ப் பாருங்கன்னு சொல்லி வாய்மூடுறதுக்கு முன்னே அந்த ஏணியிலே கடகடன்னு ஏறிட்டேன். பத்துப்படி இருந்தாலெ ஜாஸ்த்தி. மேலே உயரம் ரொம்பக் குறைஞ்ச இடம். 'அடிமைப்பெண் எம்ஜிஆர்' மாதிரிதான் நிக்கணும், நடக்கணும். அங்கெ இருந்தஒரு மரச்சட்டம் போட்ட, வெள்ளை நாடாவுலே பின்னி இருந்த கட்டிலும், பக்கத்துலெ இருந்த ஸ்டூலும் எதோ பொம்மை வீட்டுக்குள்ளெ பார்க்கறது போலத்தான் தெரிஞ்சது. மேல் படிக்கட்டுலேயே நின்னுபார்த்துட்டு இறங்கிட்டேன்.


பாத்திரம் தேச்சுக் கொடுக்கவான்னு கேட்டேன். 'அதெல்லாம் வேணாம். அடுத்த வீட்டுலெ வேலை செய்யும் பொண்ணை கொஞ்சம் இங்கே வரச்சொன்னேன்னு சொல்லிருங்க, நீங்க கீழே போகும்போது' ன்னுட்டாங்க.


நாலு புள்ளைங்க. மூத்தது ரெண்டும் ஆண், கடைசி ரெண்டும் பொண்ணு. பெரியவனுக்கு 12 வயசு. அவந்தான் அந்த 'மச்சு'லெ இருக்கறவன். ரெண்டாவது பையன் பயங்கர வாலாம். சமாளிக்க முடியலைன்னு அம்மா வீட்டுலெ விட்டுருக்காங்க. உள்ளூர்தான். பொண்ணுங்க ரெண்டும் ஏழும், அஞ்சும் வயசுலே.


வசதியான குடும்பத்துப் பொண்ணுதான். ஆனா வீட்டுக்கு மூத்தது. அடுத்தடுத்து தம்பி, தங்கைன்னு ஆறுபேர்.அதனாலெ படிக்க வைக்கலை. வீட்டுலே மத்த புள்ளைங்களைப் பார்த்துக்கணுமே. போலியோ வந்து ஒரு கால் கொஞ்சம் வளைஞ்சு ச்சூம்பி இருக்கும். புடவையில் ஒண்ணும் தெரியாதுதான். ஆனா நடக்கறப்ப லேசா விந்தி விந்தி.........


கல்யாணம் கட்டுனதும் சொந்தத்துலெதான். அப்பாவோட சொந்தம். அதுனாலெயே அவுங்க அம்மாவுக்கு அவ்வளவா மருமகனோடு பிரியம் இல்லையாம். மருமகனுக்கு சீர் செனத்தியாத் 'தான்' நடத்திக்கிட்டு இருந்த ஓட்டல்களில்ஒண்ணைக் கொடுத்தாரு மாமனார். அதை அவர் வச்சுப் படைக்கலை. எல்லாம் போச்சு. கொஞ்ச நாள் இப்படி அப்படியா இருந்து இன்னொருக்கா செலவு பண்ணி அதையே நல்லா சீராக்கிக் கொடுத்தார். அதுவும் போச்சு. வியாபாரமுன்னா கவனம் வேணுமுல்லே? இப்ப இன்னொரு ஓட்டலிலே மேனேஜரா( அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்கார்) இருக்கார்.
அங்கே ஓட்டலுக்கு அன்னன்னிக்கு வேண்டிய சாமான்களை இவரே போய் மார்கெட்லே பார்த்து நல்லதா வாங்குவார். பத்து மணிக்குத்தான் கிளம்புவார். அவரோட சைக்கிள் நம்ம வீட்டு மாடிப்படி வளைவிலெதான் நிக்கும்.சிலநாள் நம்ம இ.கா( இந்திரா காந்தி)யும் அவர் கூடவே போவாங்க. வீட்டு சாமானெல்லாம் வாங்கிக்கிட்டு ஒரு ஆட்டோவுலே வந்துருவாங்க.


அருமையா சமைப்பாங்க. என்னைப்போல ஒரு கறி, ஒரு குழம்புன்ற கதையே இல்லை. அஞ்சாறுவகைதான். பக்கத்து வீடாச்சா.... அவுங்க பால்கனி வெரந்தாவும், நம்மதும் ஒட்டுனாப்போல இருக்கும். ச்சின்னக்கிண்ணத்துலே வச்சுக் கையை நீட்டுனாப் போதும். நானும் விசேஷ நாளுன்னா இப்படித் தான் பலகாரங்களைஅனுப்புவேன். சம்பிரதாயம் பார்த்துக்கிட்டு அங்கே கொண்டு கொடுக்கற வேலையெல்லாம் ஆவாது. போனா...நாலஞ்சு குடும்பங்களைத் தாண்டிப் போகணும். ஒருத்தருக்குக் கொடுத்து ஒருத்தருக்குக் கொடுக்கலைன்னா நல்லா இருக்காதுல்லையா? அதான் இந்த 'ரகசிய உடன்படிக்கை':-)))


வீட்டுக்காரர் சரியா இல்லையேன்னு உள்ளூக்குள்ளே கவலை. வீட்டுச்செலவுக்கு முக்காவாசி அம்மா வீட்டுலே இருந்து வர்ற உதவிதான். பிள்ளைங்க நாலு ஆயிருச்சே, எப்படி வளர்க்கப் போறொம், பெருசாக ஆக செலவு கூடுமேன்னு. இதுலே அப்பப்ப இப்படி ஆஸ்த்துமா அட்டாக். தானே ஓய்வெடுத்துக்கிட்டு சரியாயிருவாங்க. சீக்கு பழகிப்போனதாலெ யாரும் கண்டுக்கறதில்லை. படுத்துக்கோன்னு சொல்லிட்டு அவுங்கவுங்க வேலையைப் பார்க்கப் போயிருவாங்க. தம்பிங்களுக்குக் கல்யாணம் பேசிக்கிட்டு இருக்காங்க. பொண்டாட்டிங்க வந்தா இப்பக் கிடைக்கிற உதவிக்கு பங்கம் வருமோன்னு ஒரு உறுத்தல். என்கிட்டே மட்டும் கவலைகளைப் பகிர்ந்துக்குவாங்க.


உடம்பு நல்லா இருந்தா ஆளைக் கையிலே பிடிக்கமுடியாது. கலகலன்னு பேசுவாங்க. மத்யானமா நம்ம வீட்டுக்கு வந்து மாடிப்படியிலே உக்காருவாங்க. வர்றப்பயே 'நியூஸ்' கொண்டு வருவாங்க. எல்லாம் 'தாஜா கபர்'தான்! பக்கத்துலே இருந்து பார்த்தமாதிரி சம்பவங்களை விவரிப்பாங்க. எல்லாம் அவுங்க புருஷன், அங்கே சிட்டிக்குள்ளே நடந்ததாக(???)சொன்ன கதைகள்!!!!! சொல்ற கதையிலே(??) முக்காவாசியை தாராளமாத் தள்ளுபடி செஞ்சுறலாம்.கீழே வீட்டுக் குடித்தனக்காரர்கள் எல்லாம் இந்த 'சபை'யில் வந்து கூடுனாலும் ஒரு மாதிரி நமுட்டுச் சிரிப்போடு ( முகத்தை ஒரு பக்கம் மறைவாத் திருப்பிக்கிட்டுத்தான்) கதை கேப்பாங்க.


நம்ம பங்குக்கு ச்சும்மா இருக்க முடியுமா? நம்ம வீட்டுலே தினமும் வாங்குற பேப்பர்லே (த டைம்ஸ் ஆஃப் இண்டியா)வந்த நியூஸை எடுத்து விடுவேன். அதெல்லாம்தான் முந்தியே தெரியுமேன்னு ஒரே அடி அடிச்சு விடுவாங்க நம்ம இ.கா.:-))


மக்கள்ஸ் ஏன் இவுங்க பேச்சை, விருப்பம் இல்லாட்டியும் பொறுமையாக் கேக்கறாங்களா? ஒண்ணாவது டைம் பாஸ். ரெண்டாவது அரிசியிலே கல் பொறுக்கிக்கிட்டு, காய்கறி நறுக்கிக்கிட்டு, பச்சைப்பட்டாணி உறிச்சுக்கிட்டுக் கை வேலையில் இருக்கும்போது களைப்புத் தெரியாம இருக்க ரேடியோ (டிவி பரவலாவராத காலம்)மாதிரி ஒரு பொழுது போக்கு. எல்லாத்தையும் விட முக்கியமானது இவுங்கதான் நாங்க இருந்த வீட்டுக்குச் சொந்தக்காரரோட மகள்.


நாங்க ஊரைவிட்டுப் போயி எட்டு வருசம் கழிச்சு, ஒரு விடுமுறையிலே அந்த ஊருக்குப் போயிருந்தொம். நம்ம மக்கள்ஸ் எப்படி இருக்காங்கன்னு பார்க்க அங்கே போனோம். பசங்க பெரியவங்களா இருந்தாங்க. ச்சின்னப்பொண்ணு ரொம்பவே அழகு. பெரியவளும் நல்லாவே இருந்தாள். மூத்த பையன் காலேஜ்லே படிக்கிறானாம். இந்த வருசம் கடைசியாம்.
நாலு வீடு தள்ளி நமக்குத் தெரிஞ்ச இன்னொரு பொண்ணு துணிங்க தச்சுக் கொடுக்குது. எக்கச்சக்க பிஸினெஸ்ஸாம். அதனாலெஅந்தப் பொண்ணு வெட்டிக் கொடுக்கற துணிகளை இவுங்க 'அவுட் ஒர்க்கர்'ரா தச்சுத் தராங்களாம். கையிலே நாலுகாசு தாராளமாப் புழங்குதாம். வீட்டுலெ கலர் டிவி முழங்கிக்கிட்டே இருக்கு. அதுலே ஒரு கண்ணும், மெஷின்லேஒரு கண்ணுமா நேரம் போயிருதாம். முந்தி மாதிரி மாடிப்படி சபை எல்லாம் கூடுறது இல்லையாம். யாருக்கு நேரம் இருக்கு? இப்பதான் 24 மணி நேரம் டிவி வந்துருச்சேன்னாங்க இ.கா.


இந்த தொலைக்காட்சி வந்ததுலெ இப்படி அயல்பக்கத்து ஜனங்களோட நட்பா இருந்து பேசற பழக்கம் கூடப்போயிருச்சு பார்த்தீங்களா? இது நல்லதா இல்லெ கெட்டதா?


'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரி'யா இருக்காங்களேன்னு, இவுங்களுக்கு இந்திரா காந்தின்னு பேர் வச்சதுகூட நாந்தான்.


அடுத்த வாரம்: ராமன்


நன்றி: தமிழோவியம்

18 comments:

said...

மெதுவாக படிச்சுட்டு சொல்கிறேன்.
சென்னை வந்தால் படிக்கக்கூட முடியவில்லை.

said...

இந்த வாரம் இ.கா. வழக்கம் போல் யதார்த்தம். எவ்ரிடே மனிதர்கள் சாமான்யர்களின் வரலாறு சொல்லும் தொடர். படிக்கும் போதெல்லாம் பின்னூட்டம் போடணும்ன்னு நினைப்பேன்.. இதோ போட்டாச்சு. அப்புறம் துளசி அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

said...

'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரி' வச்ச பேரா அது? ஆஹா பேஷ் ..பேஷ்
திவ்யமா இருக்கு

said...

//இந்த தொலைக்காட்சி வந்ததுலெ இப்படி அயல்பக்கத்து ஜனங்களோட நட்பா இருந்து பேசற பழக்கம் கூடப்போயிருச்சு பார்த்தீங்களா? இது நல்லதா இல்லெ கெட்டதா?//

என்ன டீச்சர் இப்படி கேக்கிறீங்க? இந்த 24 மணி நேர டீவியினால நட்பு மட்டுமில்ல, வீட்டு குழ‌ந்தங்களோட, துணைவரோட ரெண்டு வார்த்த பேசக் கூட நேரமில்லாம பாசம்ங்கறதே இல்லாமப் போச்சு. நல்ல சீரியல் நடக்கிற நேரமா தெரிஞ்சவங்க யார் வீட்டுக்காவது போனீங்கன்னாத் தெரியும். கழுத்த பிடிச்சு வெளியில தள்ளாத குறைதான். பசங்க internet, computer games
அப்படின்னு பிஸியாயிடறாங்க. பெரியவங்க டீவி சீரியல்ல ஐக்கியமாயிடறாங்க.

(அது சரி இப்பவாவது சொல்லலாமா எங்க டூர் போயிட்டு வந்தீங்கன்னு)

said...

அதானே பார்த்தேன். எப்படிடா இந்திரா காண்தினு பேரு வந்துச்சுனு.

'எல்லாம் தெரிந்த ஏகாம்பரியா' துளசி இது பூனாவா?:-))

சிரிச்சு அஞ்சு நாளாச்செனு பார்த்தென்.
இப்பா ஆஸ்துமா இருக்கானு சொல்லலியே!!!

said...

மருமகனுக்கு வீடு வாங்கி கொடுத்த கொத்தனார் கதைக்கு sequelஆக ஓட்டல் வாங்கி கொடுத்த மாமனாரைப் பார்க்கிறோம். பாடுபடாமல் கிடைத்த சொத்தை யாரும் சரியாக பராமரிப்பதில்லை.
இந்திராகாந்தி பெயர்க் காரணம் சரியாக இல்லையே! ஏதெனும் விடுபட்டுள்ளதா?

said...

என்ன குமார்,

சென்னைக்கு திடீர் விஸிட்டா?

said...

வாங்க தேவ்.

//தொடர். படிக்கும் போதெல்லாம் பின்னூட்டம்
போடணும்ன்னு நினைப்பேன்//

நினைச்சதுக்கும் பின்னூட்டம் போட்ட பலனில் பாதி உண்டு:-))))

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள்

said...

வாங்க சிஜி.

மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதாமே. அப்படியா?:-)))))

said...

மதி,

நீங்க சொன்னது அப்படியே நிஜம். இந்தியாவுக்கு வந்தவுடன்,
எந்தெந்த நேரம் எந்த சீரியல்ஸ் வருதுன்னு பார்த்துவச்சுக்கிட்டுதான்
மக்கள்ஸ் வீட்டுக்கு விஸிட் போகணும்.

ரொம்ப தூரம் போகலைப்பா. க.கெ.கு.சு. தான்:-))))
ஒரு தாண்டு!

said...

வாங்க வல்லி.

இது பூனாதான்.
அவுங்களுக்கு ஆஸ்த்மா எப்படி இருக்குன்னு தெரியலை. ஆனா எனக்கு
இங்கே வந்தபிறகு ஆஸ்த்மா வந்துருச்சு:-))))

said...

வாங்க மணியன்.

மாமனாரே நாலைஞ்சு ஓட்டல் (காகா ஓட்டல்ஸ்) நடத்திக்கிட்டுத்தான் இருந்தார்.
அதுலே ஒண்ணுதான் சீதனம்.

நம்ம இ.கா. வீட்டுக்காரருடைய மகளாச்சே. அதனாலெ கொஞ்சம் பந்தா காட்டுவாங்க.
அப்பப்ப 'ரூல்ஸ்' போட்டுருவாங்க. சிலசமயம் 'எமர்ஜென்ஸி'தான். தான் சொல்றதுதான்
சரின்ற தொனி எப்பவும் அவுங்க பேச்சுலே இருக்கும். அப்படி ஒரு அத்தாரிட்டி.
( ஆனா யாரும் அதையெல்லாம் சட்டை செய்ய மாட்டோம்) அதான் பெயர்க் காரணம்:-)))

said...

அடக் கடவுளே. பாத்துங்க.
ஆஸ்துமாவா. இது புதுசா இருக்கே.
போலன் அலர்ஜியா வந்துடுத்தா.

டேக் கேர் துளசி

said...

டீச்சர் பெரிய ஆள்தான் தெரியும். அதுக்காக இந்திரா காந்தியே அவங்களுக்கு எவ்ரிடே மனிதரா அப்படின்னு ஒரு ஆச்சரியத்தோடத்தான் படிக்க வந்தேன்.

நடுவுல வேற வர இ.கா. என்ற சுருக்கத்தை இ.கொ. எனப் படித்து தனி குழப்பம்.

டூர் எல்லாம் நல்லபடி போச்சா?

தீபாவளி வாழ்த்துக்கள்.

நீங்க ஊரில் இல்லாத சமயத்தில் ஒரு விவாதத்தைக் கிளப்பி விட்டேன். உங்க கருத்தையும் வந்து சொல்லுங்க. சுட்டி இதோ.

said...

வல்லி,

இது க்ளைமேட் ஒத்துக்காம வந்த ஆஸ்த்மாவாம். இப்பத்தான் ஒரு 15 வருஷமா இருக்கு. ஆனா அண்டர் கண்ட்ரோல்:-)))

said...

கொத்ஸ்,

வாங்கப்பா. உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

டூர் முடிஞ்சது. இப்பத்தான் ஒரு பதிவு போட்டேன்.

விவாதமும் இப்பத்தான் பார்த்தேன்.
எனக்கும் காரை மாத்துனா நல்லாதான் இருக்கும்:-))))

said...

என்னங்க துளஸி
ஸமீபமா 15 வருஷமா ஆஸ்த்மாவா?ஆந்திரா மீன்சிகிச்சை ட்ரை பண்ணுங்க

said...

சிஜி,

பாவம் அந்த மீன். பொழைச்சுப் போட்டுமே:-)