Monday, January 29, 2007

தமிழ் அப்படியொண்ணும் அழிஞ்சுறாது.




கண்முன்னே பிரமாண்டமான கூடாரம்.. அலங்கார நுழைவு வாயில்.உள்ளெ நுழைய 'கட்டணம்'ன்னுகூடத் தெரியாம அப்புறம் அங்கே ரொம்பப் பக்கத்துலே போய்த் தெரிஞ்சுக்கிட்டோம்.


நுழைஞ்சதும் ....ஹா......... மக்கள் வெள்ளம்.
'தமிழ் அப்படி ஒண்ணும் அழிஞ்சுறாது. இவ்வளவு கூட்டம் தமிழ்ப் புத்தக ஆர்வத்துலே இங்கே வந்துருக்குமுன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை' திருவாய் மலர்ந்தார் கோபால்.




இந்தப் பயணத்துலே இதுவரை என் வாழ்க்கையில் 'முதல்' அனுபவமா சிலநிகழ்ச்சிகளை அனுபவித்தேன். அதுலே ஒண்ணுதான் இந்தப் புத்தகக் கண்காட்சி.


30வது கண்காட்சின்னு போட்டுருந்தாங்க. அப்பச் சரிதான்.... நாங்க தான் தமிழ்நாட்டை விட்டே வருசம் 32 ஆச்சுங்களே. 'எப்படாத் தொலைவா?'ன்னு பார்த்துருந்து ஆரம்பிச்சுட்டாங்களோ?


ரெண்டு பக்கமும் அடுத்தடுத்து ஸ்டால்கள். அகலமான நடைபாதை. ஆனாலும் நீந்திப் போகவேண்டி இருந்துச்சு.வரிசை முடிவில் அடுத்தப் பகுதிக்குப் போகும் வழி. பாம்புபோல ஊர்ந்து ஒவ்வொரு பகுதியாப் பார்த்துக்கிட்டு வந்தோம். இவ்வளவு பதிப்பாளர்கள் இருக்கறாங்களான்னு வாய் பொளந்து நின்னேன்.




இதுவரை எனக்குத் தெரிஞ்ச பதிப்பகம்ன்னு சொன்னா அது 'வானதி'தான். ச்சென்னைக்குப் போகும்போது சமயம் கிடைத்தால் சில புத்தகங்களை அங்கே நேரில் போய் வாங்கி வர்றதுண்டு. அதுக்கப்புறம் 'மணிமேகலை'.தபால்மூலம் ரெண்டு தடவை வாங்கி இருக்கேன்,பூனாவில் இருந்தப்ப. படிச்ச காலத்துலே 'லிஃப்கோ'ன்னு ஒண்ணு.


இப்ப ரெண்டு வருஷமாத்தான் சந்தியா, உயிர்மை, கிழக்குன்னு சிலதைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனா இங்கே 460பதிப்பாளர்கள்ன்னும், அவுங்க விவரங்கள் அடங்கிய கேட்லாக் 50 ரூபாய்க்கு விற்பனைக்கு இருக்குன்னும் ஒலிபெருக்கியிலே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. பேசாம அதை வாங்கி வந்துருக்கலாம்.......... ஹூம்.. அப்பத் தோணலை(-:


ஆன்மீகப் புத்தகங்கள் பிரிவுலேதான் கூட்டம் அதிகமோன்னு இருந்துச்சு. வயசு வித்தியாசம் இல்லாம கலந்துகட்டி இருந்தாங்க மக்கள்.


'வித்லோகா' போயிருந்தப்ப மேசையிலே 'கூகுள்'னு ஒரு புத்தகம். நம்ம பாலபாரதி 'மைலாப்பூர் திருவிழா'வுலே ஸ்டால் போடறோமுன்னு சொன்னார். மயிலை திருவிழாவா? அறுபத்து மூவரோ? இதையும் முதல்முறையாப் பார்க்கப்போறேனே,சரி அங்கேயே வாங்கிக்கலாம்னுதான் இருந்தேன். வாங்கணும்னு நினைச்சுக்கிட்டே அதை விட்டுட்டு 'இரா.மு.வின் மூன்றுவிரல்' வாங்கினேன். குமுதத்தில் ஒரு பத்து பாகம் படிக்கக் கிடைச்சது, இனி மீதியைப் படிக்கணும். ஒருநாள் காலையில் 'பய பக்தி'யா நம்ம 'கப்பு & கபாலி' யைப் பார்த்துட்டு பாலா சொன்ன குளத்தங்கரைக்குப் போனேன். ஒரு நீள வரிசையில் காலி ஸ்டால்கள். அக்கம்பக்கத்துலே விசாரிச்சா........... சாயுங்காலம் 6 மணிக்குத்தான் திருவிழா நடக்குமாம்.தேதியைச் சொன்ன பாலா நேரத்தைச் சொல்லலியே....... நறநற



அப்படியும் விடாம மறுநாள் மாலை மைலாப்பூர் குளம். முதல் கடையிலே பருப்புப் பொடி, பாவக்காய் வத்தல்ன்னு இருந்துச்சு. அடுத்து வந்த ஸ்டால்களில் கிழக்குப் பதிப்பகம் மட்டும் இருந்ததாக ஞாபகம். அங்கேயும் 'கூகுள்' கண் முன்னாலே பளிச். ஆனா அதை விட்டுட்டு 'சுப்ரமணிய ராஜு' மட்டும் வாங்கினேன். அதான் 30வது புத்தகக் கண்காட்சிக்குப் போறேனே, அங்கே இன்னும் கொஞ்சம் வாங்கிக்கலாம். டெல்லி போற சமயம் வாசிக்க இது ஒண்ணு போதும். நான் இந்தப் பக்கம் புத்தகம் மேயும்போது, எங்க இவர் அடுத்த பக்கம். கையில் 'யோகா ஃபார் ஹெல்த்' ( ஆமாம். தினமும் செஞ்சு படிக்கலைன்னா இருக்கு..........)


போகிப் பண்டிகை! எதையும் கொளுத்தாமல் சம்பிரதாயமா 'போளி' சாப்பிட்டுக் கொண்டாட்டம். இதோ கிளம்பிட்டேன் புத்தகத் திருவிழாவுக்கு. இந்தப் பதிவின் தலைப்பு சொல்லப்பட்டது அப்பதான்.


இதுவரை கேள்விப்படாத பதிப்பகங்கள். மூணு நாலு இஸ்லாம் மத சம்பந்தப்பட்ட ஸ்டால்களும் இருந்துச்சு. அநேகமா எல்லாத்துலேயும் கூட்டம். சில இடத்துலேபோய் , புத்தகங்களைப் புரட்டி, கொஞ்சமாப் படிச்சுப் பார்த்தேன். துளசின்னு கூடஒரு நாவல். எழுதுனவர் மகரிஷி. மேலோட்டமா பார்த்துக்கிட்டே போறோம்.


கணினியிலே தமிழ் எழுதன்னு சில மென்பொருட்கள் கிடைக்குதுன்னு கோபால் போய் பார்த்துட்டு வந்தார். நமக்குத்தான் கலப்பை இருக்கேன்னு மெத்தனமா இருந்தேன். வாங்கிக்கோ,வாங்கிக்கோன்னு சொல்லிக்கிட்டே இருக்கார். அப்படியெல்லாம் பேச்சைக் கேட்டுருவேனா?


தெரிஞ்ச முகம் எதாவது தென்படுமான்னு ஒரு நப்பாசை வேற. அதுக்குள்ளே இவர் ஒரு சி.டி வாங்கிவந்தார். 500 புத்தகம் அதுக்குள்ளே பதிஞ்சிருக்காம். கதை, கட்டுரை, ஸ்போர்ட்ஸ், ஹெல்த்ன்னு கலந்துகட்டி இருக்காம். வெறும் 100 ரூபாய். CCC டிஜிடல் லைப்ரரி.


இதோ ஒரு இடத்தில் 'இண்டியன் மேப்ஸ்'ன்னு போட்டுருக்கே. வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ட்ரீட் மேப்ஸ் போல இந்தியாவில் கிடைக்காதான்னு இருந்தப்ப, நம்ம பாலராஜன்கீதா வீட்டில் ஒரு ஸ்ட்ரீட் கைடு பார்த்தோம். இது....இதுதான் நான் தேடிக்கிட்டு இருந்தது. ஹிக்கின்பாதம்ஸ்லே கிடைக்குமுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப இந்த ஸ்டாலில் கேட்டுப் பார்க்கலாமுன்னு கேட்டா......... நம்ம அதிர்ஷ்டம். ஆ....... கிடைச்சுடுத்து:-))) அதையும் கூடவே இன்னொண்ணும்'த வொர்ல்ட் ( பொலிட்டிகல் & கைடு மேப்) வாங்கினோம்.


வேற ஒரு ஸ்டாலில் 'ஃபெவிசால் பர்னிச்சர் டிஸைன்ஸ்' அடுக்களை, ட்ராயிங் ரூம், பெட் ரூம், குழந்தைகள்ரூம், டைனிங் ரூம், ன்னு இது எல்லாத்துக்கும் அலங்கரிக்கிற ஃபர்னிச்சர்களை தனித்தனிப் புத்தகமாப் போட்டுருக்காங்க.ஒவ்வொரு டிஸைனும் அட்டகாசமா இருந்தது. நம்ம தச்சருக்குக் (நியூஸியில் உள்ள ஹாங்காங் சீனர்) காமிச்சு,செஞ்சுதர முடியுமான்னு கேக்கணும். அதுக்காக wall units design வாங்குனேன். தச்சுவேலைன்னதும் இன்னொரு விஷயமும் இங்கே சொல்லிடறேனே. ச்சென்னையில் அண்ணனின் புது வீட்டுச் சமையலறை இன்னும் மற்ற அறைகளின்மரவேலைகள் அமர்க்களமா இருக்கு. அதுலேயும் அடுக்களை....... பிரமாதம். நம்ம பாத்திர பண்டங்களுக்கேத்தபடி என்னமாச் செஞ்சுருக்காங்கன்னு அப்படியே வாய்பிளந்து நின்னுட்டேன்.வெளிநாடுகளில் அடுக்களைக்குன்னு எக்கச்சக்கமா அழுதாலும் இந்த அமைப்பும், வசதியும் வரலை. தட்டுகள், பாத்திரங்கள்னு அடுக்க சரியான அமைப்புகளா இருந்துச்சு.நியூஜெர்ஸியில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த அண்ணன் மகளும், நானும் விட்ட பெருமூச்சுகளுக்கு..............



இதோ கிழக்குப் பதிப்பகம். கூட்டம் இருக்குதான். அதுக்காக? நாங்களும் முண்டியடிச்சு உள்ளே போனோம். அள்ள அள்ளப்பணம் அமோகமாப் போகுதாமே! அதுலே பாகம் 2 மட்டும் கோபால் வாங்குனார். பங்கு மார்க்கெட் பித்துப் பிடிச்சிருக்கு.கூகுள் இருக்கான்னு பார்த்தா.......... இல்லை. நம்ம பத்ரியும், பா.ராவும் படு பிஸியா இருக்காங்க. ஒரு அரைமணி நேரம்,இல்லேன்னா 40 நிமிஷம் இருக்க முடியுமுன்னா புத்தகங்களைக் கொண்டு வர ஆள் அனுப்பிறலாமுன்னு பத்ரி சொன்னார். இருந்தாப் போச்சு. பா.ராவுக்கு ஒரு வணக்கம் போட்டாச்சு. போன வருஷம் நம்ம கிருபாஷங்கர் நிச்சயத்தன்னிக்குப் பார்த்ததைக் கவனம் வச்சிருந்தார். 'என்னங்க,டாலர்லே கொழிக்கறீங்க போல இருக்கே?'ன்னு கேட்டு வச்சேன். அவரும்ஒரு புத்தகம்தான் வந்துருக்குன்னு சொல்லிச் சிரிச்சார். எனக்குக் கொஞ்சம் தி.ஜா.ரவும், லா.ச.ராவும் வாங்கிக்கணுமுன்னுஆசை. எங்கே கிடைக்கும்முன்னு தெரியலைன்னதுக்கு வானதியில் பார்க்கச் சொன்னார். அதான் 40 நிமிஷம் இருக்கேன்னுவானதி போனோம். நடந்துநடந்து கால்கள் பின்னத் தொடங்கிருச்சு. அங்கேயே வெளியே இருந்த ஒரு நாற்காலியில் இடம் பிடிச்சேன்.


சாண்டில்யனின் கடல்புறா, மன்னன் மகள், ஜலதீபம், யவனராணி & இன்னபிற நாவல்கள் இன்னமும் பிச்சுக்கிட்டுப் போகறதைக் கவனிச்சேன். ஜனனி,கங்கா, கழுகு, சிந்தா நதி வாங்கினேன். அதுக்குள்ளெ இவர் அங்கேயும் இங்கேயுமாப்போய், ஜே.கே.வின் புத்தகங்கள் ஒரு செட் ( கைக்கடக்கமா ச்சின்னதா இருந்துச்சு. மொத்தம் 9) வாங்கிக்கிட்டார்.மேலாக இருந்ததின் தலைப்பு What is a problem. சரியாப் போச்சு, என்னைத்தான் சொல்றாரோ?

அதுலே இருந்தமற்றவைகளின் தலைப்புகள் இதோ.
On knowing oneself
What is relationship?
The ending of sorrow
The problem of fear
Is there such a thing as security
To live without conflict
Learning about pleasure
What is a problem
On being open to the unknown
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது!


இன்னும் கொஞ்ச நேரம் சுத்திட்டு இருந்தோம். சந்தியா பதிப்பகம். ஜெயந்தி சங்கரின் புத்தகம் இருக்கான்னு கேட்டேன். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! எல்லாம் வித்துப்போச்சாம். அட!நக்கீரன் ஸ்டாலில் கலை நயத்தோடு அலங்காரத் தூண் எல்லாம் வச்சுருந்தாங்க. திரும்பக் கிழக்குக்கு வந்தோம். நம்ம பாலபாரதி இருந்தார். 'தமிழ்நதி வந்துருக்காங்க. குறும்படம் பார்த்துக்கிட்டு இருக்காங்க'ன்ற சேதி சொன்னார்.


இஸ்லாமிய அன்பர்கள் சிலர், தொழுகை நேரம் வந்துருச்சுன்னு ஒரு காலி இடத்தில் தொழுதுக்கிட்டு இருந்தாங்க. ஓசைப்படாம கொஞ்ச நேரம் உக்கார்ந்திருந்தோம். நேரம் போய்க்கிட்டு இருக்கு. கூகுள் கொண்டு வரப்போனவர் இன்னும் வந்து சேரலை. இன்னொருத்தரை சந்திக்க வரேன்னு சொன்ன நேரம் கடந்துக்கிட்டு இருந்தது. வயசானவங்களைக் காக்க வைக்கிறது நல்லா இருக்காதுன்னு கிளம்பிட்டோம். ரெண்டு இடத்துலே கண் முன்னாலெ இருந்ததை விட்டுட்டு, இப்ப அதுக்குன்னு காத்திருக்க வேண்டியதாப் போச்சு. கண்ணாமூச்சி...ம்....எல்லாம் கூகுளின் நேரம். இனிமே எதாவது வாங்கிக்கணுமுன்னா கண் பார்த்தவுடனே வாங்கிக்கணும். இதுவும் ஒரு படிப்பினைதான்.


வெளியே வந்தப்ப, சுரா அரங்கத்தில் என்னவோ நிகழ்ச்சி. அடுக்கு மொழியில் ஒருத்தர் பேசிக்கிட்டு இருந்தார். யாருன்னு பக்கத்துலே விசாரிச்சேன். அவருக்கும் பேரு தெரியாதாம். ஆனா பேசறவர் லியோனியின் பட்டிமன்றத்துலே பேசறவராம். அதுக்குள்ளே கோபால் காதுப்பக்கம் சொல்றார், 'மேடையில் பாரு, சத்தியராஜ்'. பேச்சாளர் அப்பத்தான் கலைஞருக்கும், பெரியார் சத்திய ராஜுக்கும், மற்ற எல்லோருக்கும் நன்றி சொல்லிப் பேச்சை முடிச்சார். அரங்கம் நிறைஞ்சுஇருந்துச்சு.





கார் நிறுத்தம் வந்தப்ப, அங்கே ஒரு கூட்டம். என்னமோ ஏதோன்னு பதறிப் போய்ப் பார்த்தோம். கிறிஸ்துவமத அன்பர்கள் பிரசங்கம். சாட்சி சொல்றவங்க சொல்லலாமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.


எப்படியோ வாழ்நாளில் குறைஞ்சது ஒரு புத்தக் கண்காட்சியாவது பார்த்தோம் என்ற திருப்தியுடன் கிளம்புனோம். இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாத் தமிழ்ப் புத்தகங்கள் சேர்ந்துக்கிட்டு இருக்கு நம்ம வீட்டுலே. அதுவே கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு.
மக்களிடையே படிக்கும் பழக்கம் பரவலா இருக்குன்னாலும், நிறைய நல்ல புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும்போது முதல் பதிப்புக்கும் ரெண்டாம் பதிப்புக்கும் ஏழெட்டு வருஷம் இடைவெளி இருக்கு. வெறும் ஆயிரம் புத்தகம் மட்டுமே ஒவ்வொரு பதிப்புக்கும்ன்னு இருக்கும் நிலையில் இந்த இடைவெளி இன்னும் குறைச்சலா இருக்கணுமா இல்லையா? மக்கள் காசு கொடுத்து வாங்காமயே படிக்கிறாங்களா என்ன? நம்மத்தமிழ்நாட்டு மக்கள் தொகை ஆறு கோடியே இருபத்துநாலு லட்சமுன்னு புத்தகக் கண்காட்சியிலே இருந்த 'Census of India' ஸ்டால் சொல்லுச்சேங்க. ஒண்ணும் புரியலை.


கண்காட்சி இல்லாம வெவ்வேற இடத்துலே ஒரு சில புத்தகங்கள் வாங்கினேன். பாண்டி பஜார் ப்ளாட்ஃபாரக் கடையில்'சுந்தரகாண்டம்'
மயிலை கிரி ட்ரேடிங்லே அமைதி உன் பிறப்புரிமை-சத்குரு, 108 வைஷ்ணவ திருத்தல மகிமை, பெரிய எழுத்து விஷ்ணு சகஸ்ரநாமம், சில திரைப்படங்கள்.
தி.நகர் 'கிராஸ்வேர்ட்ஸ்'லே புத்தகங்களை வேடிக்கைப் பார்த்துட்டு சில பழைய ( அரதப் பழசு!) திரைப்படங்கள்.பேரைக் கேட்டாலே நடுங்கிடுவீங்க.
சுருதிலயாவில் எனக்கொரு வீணை, அப்புறம் 'உங்கள் அபிமான திரைப்படப் பாடல்கள் நொடேஷன்ஸ்1,2,3,'ன்னு மூணு புத்தகம்.


இந்தப் பயணத்தில் எனக்கு சில நண்பர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகங்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தாச்சு.
விவரம்:

தொல்காப்பியப் பூங்கா. நம்ம சிஜி கொடுத்தார். என் தமிழைப் பொறுக்க முடியாமல் இலக்கணமா எழுதச் சொல்லிக்கேக்காமல் கேக்கறாரோ? :-)

மணிக்கொடி (1&2) ஜோதிர்லதா கிரிஜா கொடுத்தாங்க.

வாழ்ந்து பார்க்கலாம் வா

பின் சீட்

நியாயங்கள் பொதுவானவை - இவை மூன்றும் நம்ம சிங்கை ஜெயந்தி சங்கர்.


வலை பதிய ஆரம்பிச்சதுலே இருந்து நண்பர்கள் வட்டம் பெருகிப் போச்சு. அருமையான பல எழுத்தாளர்களின் நட்பு கிடைச்சதுக்கு இணையத்துக்குத்தான் நன்றி சொல்லணும்.


தமிழுக்கு என்றுமே அழிவில்லை.



46 comments:

Anonymous said...

துளசி அம்மா,

கண்காட்சியை கண்ணுக்கு காட்சியாக அப்படியே படம்பிடித்து எழுதி இருக்கிங்க... நீண்ட பதிவு !

பாராட்டுக்கள் !!

said...

// 'எப்படாத் தொலைவா?'ன்னு பார்த்துருந்து ஆரம்பிச்சுட்டாங்களோ?//

:-))))..உங்க ஸ்டைல்...

Anonymous said...

துளசியம்மா,
கொடுத்து வைத்தவர் நீங்கள்.:))

நானும் இதுவரை ஒரு தமிழ்ப்புத்தகக் கண்காட்சிக்கும் போகக்கிடைக்கவில்லை.
பார்ப்போம், எப்ப என் ஆசை நிறைவேறுகிறதென்று...

said...

//மக்கள் காசு கொடுத்து வாங்காமயே படிக்கிறாங்களா என்ன?// பின்ன தமிழ்மணம் வளருவது எப்படி?
//நம்மத்தமிழ்நாட்டு மக்கள் தொகை ஆறு கோடியே இருபத்துநாலு லட்சமுன்னு புத்தகக் கண்காட்சியிலே இருந்த 'Census of India' ஸ்டால் சொல்லுச்சேங்க.//இதில எத்தனை பேரு எழுத, படிக்க தெரிஞ்சவங்கன்ற கணக்கு இல்லையா? அதுல, எத்தனப் பேரு உள்ளுருல இருக்காங்க, .... அதுல எத்தன பேருக்கு புத்தகம் காசு கொடுத்து வாங்க முடியுது...... வாங்குனாலும், படிக்க எங்க நேரமிருக்கு.... நமக்கு கவலையெல்லாம் மெகா சீரியலும், சிவாஜி ரிலீஸ் தேதியும்தான்..... ஆக பார்க்க போனா மிஞ்சுவதென்னவோ....ஹ்ம்ம்ம்ம்ம் இன்னுமா புரியல!!!!!!!!

Anonymous said...

உங்களுக்கு என்று எடுத்து வைத்த புத்தகத்தை குடுக்க விட்டு போனது எனக்கு ஒரு குறையாகவே இருக்கிறது.
இன்னும் இந்த விருந்தோம்பல் என்றாலே நடுக்கமாகத் தான் இருக்கிறது.என்ன செய்ய வேண்டும் என நினைப்பது எல்லாம் செய்யாமல் விட்டு போகிறது சில சமயங்களில்.

Anonymous said...

நீங்க சொல்லிய புத்தகமே இவ்வளவு இருக்கே!!
அப்ப அங்கிருக்கும் புத்தகங்ளின் அளவு ஊகிக்கமுடிகிறது

Anonymous said...

துளசியம்மா, ரொம்ப நல்ல பதிவு!!!

Anonymous said...

வருக! வருக!!

எங்க வீட்டு பக்கமா சைக்கிள்ல பேப்பர் போடுறவன்கிட்ட குமுதம், விகடன் வாங்கறதுதான் நம்மளுக்கு பெரிய விஷயம், சின்ன வயசில.

இங்க எல்லாமே பெரிய பெரிய எழுத்தாளர்கள் பேர் இருக்குது.

உள்ளேன் அம்மா போட்டுட்டு போறேன்.

said...

என்ன தேதி வாரியா பதிவு வருமுன்னு பார்த்தா ரொம்ப ஜம்ப் ஆகுதே...

இருந்தாலும் எல்லாரும் பதிவு போட்ட கண்காட்சி பத்தி உங்க கண்ணோட்டத்தைச் சொல்லி இருக்கீங்க. நானும் படிச்சாச்சு! :))

Anonymous said...

போகியன்னிக்கு வந்திருந்தீங்களாக்கா? நான் கூட அன்னிக்கு வந்திருந்தேனே! உங்களையும் பார்க்கலை, தமிழ்நதியையும் பார்க்கணும்னு நினைச்சி அன்றைக்குப் பார்க்க முடியலை.. :(

அதே நாள் நம்ம முத்து தமிழினி வேற வந்திருந்ததா அப்புறமா சொன்னாரு! :) உங்க கூகிள் மாதிரியே ஆகிப் போச்சு :))

said...

வாங்க ஜிகே.

ரெண்டு பதிவாப் போட்டா சுவாரசியம்(????) விட்டுப்போயிருமுன்னுதான்
ஒரே பதிவாப் போட்டுட்டேன்.

said...

வாங்க மங்கை.

அதானேங்க, நம்ம ஸ்டைலை வுட்டுறமுடியுதுங்களா? :-)

said...

வாங்க வெற்றி.

எனக்கு ஒரு குறிப்பிட்ட கனவு ( அதுக்குன்னே ஒரு பதிவு போட்டுறணும்) அடிக்கடி வரும்.
அதோட பலனைப் பார்க்கலாமுன்னு ( கனவுகளின் பலன்கள் -தமிழ்வாணன்)பார்த்தா,
'உங்களுடைய நியாயமான ஆசைகள் எல்லாம் நிறைவேறும்'ன்னு போட்டுருந்துச்சு:-)
அதான் இப்படிப் பலிச்சிருச்சு.

உங்களுக்கும் கண்டிப்பா ஒரு நாள் ஆசை நிறைவேறும்.

said...

கஸ்தூரிப்பெண்ணே,

இப்படி நாட்டு நடப்பைப் புட்டுப்புட்டு வைக்கலாமா? :-)

said...

வாங்க லட்சுமி.

பரவாயில்லைங்க. எனக்குந்தான் வராதவுங்க வந்துட்டாக் கையுமோடாது காலும் ஓடாது.
இதுலே நான் வேற அடுக்களையில் நீங்க போடற காஃபியை மேற்பார்வை பார்த்துக்கிட்டு
இருந்தேனே:-)

இனி அந்தப் புத்தகம் பார்க்கறப்பெல்லாம் உங்களுக்கு என் நினைவு வரணும், ஆமா:-)

said...

வாங்க குமார்.
நம்மது எல்லாம் ஜுஜுபிங்க. ஒவ்வொருத்தர் வீட்டுலே பார்க்கணுமே!

said...

வாங்க கார்த்திகேயன்.

ரொம்ப நன்றி.

said...

வாங்க தம்பி.
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? பெரிய பெரிய எழுத்தாளர்......?
நமக்கு நாமே திட்டம். கேள்விப்படலையா? :-)))

உங்க பதிவு தலைப்பைப் பார்த்து மிரண்டு போய்
இருக்கேன். எட்டிப் பார்க்கப் பயமா இருக்கு(-:

said...

கொத்ஸ்,

வாங்க. தேதிவாரியாப் போட்டா 42 நாளுக்கு படா ரம்பமா இருக்காதா?
அதான் இப்படி சிலதோட நிறுத்திப் பலர் மனசுலே 'ஆவின்' வார்க்க எண்ணம்.

said...

வாங்க பொன்ஸ்.

எனக்கும் நம்மாக்கள் நிறையப்பேரை 'அங்கே' சந்திக்க முடியலைன்னு
ஒரு ஏமாத்தம்தான்.
இப்படி கூகுள் கண்ணாமூச்சி ஆடிடுச்சேப்பா:-)

Anonymous said...

கூகிள் தேடத்தான பயன்படுதுங்குறதால தேடித்தான் கெடைக்கனும்னு இருந்திருக்கு. அதுக்கென்ன செய்றது!

26, 27, 28 மூனு நாளும் லீவு. அதுவரைக்குமாவது கண்காட்சியை நடத்தீருக்கலாம். அத விட்டுட்டு எங்க நான் வந்துரப்போறேனோன்னு 21ந்தேதியோட முடிச்சிட்டாங்க. ஹம்ம்ம்ம். யார் செஞ்ச சதிவேலைன்னு தெரியலை.

கோவி.மணிசேகரன் புத்தகங்கள எந்தக் கடையிலயும் போடலையா!

மகரிஷி எழுதிய இரண்டு நெடுங்கதைகள் திரைப்படங்களா வந்திருக்கு. பத்ரகாளி மற்றும் வணக்கத்திற்குரிய காதலியே. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்துல.

said...

கண்ணுக்கினிய அருமையான பதிவு, புக்பேர் போகமுடியாத குறையை தீர்த்துட்டீங்க..அத்தோட நன்றி வணக்கத்தோட போஸ்டை முடிச்சது சூப்பர்.

வாழ்த்துக்கள்..!!!

said...

//சுருதிலயாவில் எனக்கொரு வீணை,..//

இது வேறயா..ம்ம்.. ஜமாய்ங்க..

said...

வாங்க ராகவன்.

//கூகிள் தேடத்தான பயன்படுதுங்குறதால தேடித்தான்
கெடைக்கனும்னு இருந்திருக்கு. அதுக்கென்ன செய்றது!//

இது சூப்பர்:-))))

//கோவி.மணிசேகரன் புத்தகங்கள எந்தக் கடையிலயும் போடலையா!//

கவனிக்காம விட்டுட்டேனே!
இருங்க....... வானதி, கங்கைஅப்புறம் திருவரசு புத்தக நிலையம்( இதுவும் வானதியோடதுன்னு நினைக்கிறேன்.
பேர் வேற வேற இருந்தாலும் மேல் விலாசம் ஒண்ணா இருக்கு!)
இவுங்களோட புத்தக விலைப்பட்டியல் கொண்டு வந்துருக்கேன். பார்த்துட்டாப்போச்சு:-)

said...

வாங்க செந்தழல் ரவி.

//நன்றி வணக்கத்தோட போஸ்டை முடிச்சது சூப்பர்.//

'யாரும் கவனிக்கலையே'ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
நீங்க கண்டுபுடிச்சிட்டீங்க.
தேங்க்ஸ்ப்பா

said...

வாங்க தருமி. பார்த்து(?) ரொம்ப நாளாச்சே:-)

இந்த 'வீணை'யும் இதுவரை யாரும் கவனிக்கலையேன்னு ஒரு குறை இருந்துச்சு.
ஆஹா........... அது ஒரு சின்ன பொம்மை வீணைன்னு யார்கிட்டேயும் சொல்லிறாதீங்க.
ஆனா, அச்சு அசல் வீணை:-)))

said...

விடாது கருப்பு,

உங்க பின்னூட்டத்தை அனுமதிக்கலைங்க. இந்த ஆட்டத்துக்கு நான் இல்லை(-:
மன்னிக்கணும்.

Anonymous said...

டீச்சர்,

நீண்ட பதிவுனாலும் சுவராயசியமா படிக்க வைச்சிட்டிங்க....

+

:)

Anonymous said...

//உங்க பதிவு தலைப்பைப் பார்த்து மிரண்டு போய்
இருக்கேன். எட்டிப் பார்க்கப் பயமா இருக்கு(-://

போட்டோ பாக்காதிங்க! அப்படிதான் இருக்கும் :))

Anonymous said...

துளசியக்கா!
தமிழ்ப் புத்தகக் கண்காட்சி,விற்பனைக் கூடம் இதுவரை பார்க்கக் கிடைக்கவிலை. நல்லா வழமைபோல் விலாவாரியாகக் கூறியுள்ளீர்கள்.
ஒரு நாள் நமக்கும் கிட்டும்.அப்போ பார்ப்போம்.
யோகன் பாரிஸ்

said...

even after looking at you
how can gopal thinks so?

Anonymous said...

உள்ளேன் அக்கா.

Anonymous said...

Saw your link somewhere... but the script is undecipherable to me....

said...

துளசி,
புத்தகக் கண்காட்சி, உங்க பார்வையில் நானே வந்துட்டுப் போன மாதிரி இருக்கு.

அகரம் ஸ்டால் போகலியா.
கி.ராஜநாரயணன் புத்தகங்கள் எல்லாம் இருக்குமே.

ஜோதிர்லதா உங்க சினேகிதியா.
அம்மாடி!!
நின்ங்க கூட என் நண்பிதானே.
அதனாலே நானும் சொல்லிக்கலாம்:-)

said...

வாங்க இராம்.

+ க்கு நன்றி.
எங்கே சுருக்கறதுன்னு தவிச்சுட்டேன். அதான் நீண்ட பதிவாப் போச்சு:-)

said...

வாங்க யோகன்.

//.....ஒரு நாள் நமக்கும் கிட்டும்//
அதானே யானைக்கு ஒரு நாள்ன்னா பூனைக்கு ஒரு நாள் வராதா? :-)))
காலம் வரும். காத்திருப்போம்.

said...

ஹா சிஜி,

you too...........

நறநற....

said...

வருகைக்கு நன்றி குமரன்

said...

vahsek,
Thanks for visiting.

This blog is in Tamil language.

said...

வாங்க வல்லி.

460 கடைகள். முதல் தடவை வேற. கண்ணைக் கட்டிக் காட்டுலே விட்டதுபோல ஆச்சு.
புத்தகக் குவியல்களைப் பார்த்துத் திக்குமுக்காடிட்டேன்ப்பா:-)

Anonymous said...

சென்னை புத்தக கண்காட்சியிலிருந்த கூட்டமும் வலைப்பதிவுகளில் இடம்பிடித்த எண்ணிக்கையையும் கண்டால் நிச்சயம் "தமிழ் அப்படியொண்ணும் அழிஞ்சுறாது".

நான் முன்பு சென்றிருந்த சென்னை புத்தக கண்காட்சிகளில் ஆங்கில/நுட்ப புத்தகங்களே வாங்கியிருக்கிறேன் :( இன்று தமிழ் புத்தகங்களுக்கு ஆறிமுகம் கிடைத்துள்ளது, போகத்தான் முடியவில்லை என்ற ஏக்கத்தை உங்கள் பதிவுகள் ஏற்படுத்துகின்றன.

//உங்களுக்கும் கண்டிப்பா ஒரு நாள் ஆசை நிறைவேறும்.//
அக்கா வாக்கு எல்லோருக்கும் பலிக்கும் தானே!

Anonymous said...

துளசி
குடுத்துவைச்சவ நீங்க, ஏன்னா//எப்படியோ வாழ்நாளில் குறைஞ்சது ஒரு புத்தக் கண்காட்சியாவது பார்த்தோம்// இதுக்குத்தான்.
நாமளு்ந்தான் இருக்கோமே எங்க இப்பிடி எல்லாம் சான்ஸ் கிடைக்கப் போறது?
நல்ல பதிவு.நன்றி அம்மணி.

said...

'காணும் கலையெல்லாம் கண்காட்சி'ன்னு சொல்லி அந்த காலத்திலே கண்காட்சின்னு ஒரு திரைப்படம் வந்தது தெரியுமா? அது மாதிரி புத்தக கலைன்னு படிப்பதற்கு எத்தனையோ இருப்பதை காட்சியாக்குவதும் நல்ல கண்காட்சி தான். ரொம்ப நாளாவே இது மாதிரி ஒரு பெரிய கண்காட்சி போயி அள்ளிக்கிட்டு வர்றணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன், உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு!

said...

வாங்க மணியன்.
நலமா?

அக்கா வாக்குக் 'கண்டிப்பா' எல்லோருக்கும் பலிக்கும். அதான் நியாயமான ஆசைகள்
நிறைவேறுமாமே!

said...

செல்லி,
எதுக்கு இந்தக் கவலை? அதுதான் 'அருள்வாக்கு' சொல்லியிருக்கம்லே?

said...

வாங்க உதயகுமார்.

//கண்காட்சி போயி அள்ளிக்கிட்டு
வர்றணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்,
உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு!//


எங்கே 'அள்ளிக்கிட்டு' வர்றது? எல்லாம் 'கிள்ளிக்கிட்டு'த்தான் வந்துருக்கேன்:-)
50+ வயசுக்கு முதல்முதலாப் போனதுக்கே இப்படியா? :-))))