Monday, February 19, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 5 )



ஆர்வம் இருந்தாலும் சிலசமயம் சோம்பல்வந்து மனுஷரை ஆட்டிப் படைச்சுருது. அந்தக் காரணம் ( இதுக்கெல்லாம் கூட ஒரு காரணமா? ) இருந்ததாலே இன்னிக்கு சுதா ரகுநாதன் கச்சேரிக்கு டிக்கெட் வாங்கிக்கப் போகலை. பார்க்கலாம், சாயந்திரக் கச்சேரிதானே.


நித்தியக் கடமைகளான கோயில்( இதைப்பத்தி அப்புறமாச் சொல்லணும்) சரவணபவன், துணிக்கடைகள், டெய்லர்னுஒரு சுத்து முடிச்சிட்டு( நவகிரக சந்நிதி போல ) பகல் ஒன்னரைக்கு ஓபுல்ரெட்டி ஹாலுக்கு வந்தேன். எல்லாம் வாணிமாஹால்தான். ச்சும்மா
ஒரு சேஞ்சுக்கு இப்படிச் சொல்றது. பாலக்காடு வேணுகோபால் பாடறார். மெல்லிசான குரல். உச்சத்தில் பாடும்போது இன்னும் மெல்லிசாப் போறது. ஒரு கட்டத்துலே எனக்கு என்னவோ பூனை ஞாபகம் வந்தது. நல்லவேளை, நான் 'மியாவ்'ன்னு கத்தலை.
'பக்கல நிலபடி' பாட்டுலே வயலின் இழைஞ்சது சூப்பர். மிருதங்கம் தனி ஆவர்த்தனம் அட்டகாசம். இப்படித்தான் சிலசமயம் பாடகரைவிட பக்கவாத்தியக்காரர்கள் பிரமாதமா அமைஞ்சுடறாங்க. புதிய இளம் பாடகர்களின் கச்சேரிகளுக்கு ( ஆல் ஆர் வெல்கம்)
அவ்வளவாக் கூட்டம் இருக்கறதில்லை. கொஞ்சம் பேர்( பெயர்) வந்துட்டா,அவுங்களை மாலை நேரத்துக்கு மாத்திருவாங்க போல.

அவருக்கப்புறம், ஒரு பதினேழு வயசு இளைஞர், பேர் கோபால கிருஷ்ணன் பாடவந்தார். பி.காம் ரெண்டாவது வருஷம் படிக்கிறாராம். அவரோட அம்மா சொன்னாங்க. குடும்ப ஆடியன்ஸே அதிகமா இருந்தாங்க. அஷோக்ன்னு ஒருத்தர் (நியூஸியிலிருந்து வந்துருக்காராம்)
மிருதங்கம். பலே பேஷ் பேஷ். இப்பெல்லாம் எலக்ட்ரானிக் சுருதிப்பெட்டிதான் அநேகமா பல இடங்களில். இங்கேயும் அதேதான். ஆனா குள்ளத் தம்புரா போலவே இருந்தது எனக்குப் பிடிச்சிருந்தது.


சித்தி விநாயகம் சரணம் அருமை. கம்பீரமான பார்வையுடன் சபை நடுக்கமில்லாமப் பாடுனார். குரலும் நல்லா இருந்துச்சு. கையைமட்டும் ஒரேதா ஆட்டிக்கிட்டு இருந்தார்.குடும்பம் முழுசும் இங்கேயும் அங்கேயுமாப் போய் எல்லாரையும் வரவேற்றுக்கிட்டே இருந்தாங்க. பக்கத்துலே ஒரே பேச்சு. நம்ம ஜனங்களைத் தண்டிக்கணுமுன்னா 'கொஞ்ச நேரம்பேசாம இருக்கச் சொன்னாப்போதும்' :-) இதுக்கிடையிலும் 'தாமஸமு சேயகலு, மனம் இரங்காதா இறைவா, கோவிந்தா கோபாலா 'பாட்டு எல்லாமே நல்லாவே ரசிக்க முடிஞ்சது.


அடுத்து ஒரு புல்லாங்குழல் கச்சேரி. பாட்டாவே கேட்டுக்கிட்டு இருக்கோமே, ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு இருந்துட்டேன். விஜயகோபால் ப்ளூட். ரெண்டு பாட்டைக் கேட்டுட்டுக் கிளம்பலாமுன்னு இருந்தவளை அப்படியே உக்காரவச்சது என்ன? எல்லாமே தெரிஞ்ச பாட்டுக்கள். அதனாலெ கூடுதலா ரசிக்க முடிஞ்சது. விறுவிறுன்னு நல்ல வேகம்.
கொனஷ்டைகள் ஒண்ணும் கிடையாது. கேக்கவும் சுகமா இருந்தது. முடியும்போது மணி ஆறரை. இனிமே எங்கே சுதா?


இன்னிக்குப் பாருங்க, எல்லாமே கோபால்ஸ்! செவிக்குணவு ஆச்சு. இனி வயித்துக்கு? இருக்கவே இருக்கு மூகாம்பிகையும் முரளியும். கீரைவடை, ரவாதோசை& கள்ளிச்சொட்டுக் காஃபி.


மறுநாள் ஒரு புகழ்பெற்ற வலைப்பதிவாளரைச் சந்திக்கக் கிளம்புனேன். (இதை எழுதும் இந்த நாளில் அவர் ஜொலிச்சுக்கிட்டு இருக்கார்) வழக்கம்போல 'லேண்ட் மார்க்' கேட்டுக்கிட்டேன். ஆட்டோகாரருக்கு இதெல்லாம் சொன்னாத்தான் அவருக்கும் எவ்வளோன்னு 'சத்தம்' சொல்லச் சரியா இருக்கும். ஒரு குத்து மதிப்பா எம்பது ரூபாய்ன்னுதான் ஆரம்பிக்கிறது. நம்மூர் ஆட்டோக்காரர்களுக்கு இந்த இடங்கள் எல்லாம் சரியாத் தெரியுதோ இல்லையோ பேரம் படிஞ்சதும் போற வழியிலே ஆட்டோ ஸ்டேண்டுலே இருக்கும் மத்த ஆட்டோக்காரரிடமோ,இல்லேன்னா 'தள்ளுவண்டி யாவாரம் பார்த்துக்கிட்டு இருக்கறவங்களாண்டையோ' கேட்டுக்கறதுதான். அம்மாந்தூரம்னு சொல்லி ஏறிக் குந்துனா, இம்மாந்தூரத்துலேயே வந்துரும் சிலசமயம்.

வித்யாபாரதி கல்யாண மண்டபம். இதுக்கும் நாலு இடத்துலே வழி கேட்டும், சந்திக்கப்போறவர் கிட்டேயும் ரெண்டு முறை செல்லுலே கேட்டும் ஒரு வழியா அங்கே போனேன். நான் போகவேண்டிய இடம் அந்தக் கல்யாண மண்டபம் இல்லை. அதுக்குப் பக்கத்துலே இருக்கற ஒரு கடை. அதுவும் ஒரு புத்தகக் கடை. கடைன்னு சொன்னா நல்லா இல்லையோ? சரி ஷோரூம்ன்னு வச்சுக்கலாமா? வித்லோகா.

இந்நேரம் அவர் யாருன்னு தெரிஞ்சிருக்குமே? எஸ். யூ ஆர் ரைட். நம்ம பாலபாரதி. பகல் மூணு வரைதான் இருப்பேன்னு (அபாய) அறிவிப்புக் கொடுத்ததாலே நானும் பதறியடிச்சுப் போனப்ப மணி பன்னிரெண்டுக்கும் மேலே!

ஏதோ காலங்காலமாத் தெரிஞ்ச நண்பர்கிட்டே பேசறது போல இருந்துச்சு. சூடா ஒரு ஏலக்காய் ச்சாய் வேற கிடைச்சது. 'பஹூத் அச்சா தா'. கூகுள் மேஜை மேலே கிடந்தது அப்போதான். வாங்கிக்கலை(-:


கல்யாண மண்டபத்தின் வாசலில் இறங்குறப்பவே அங்கே ஷாமியானா போட்டு இருந்ததையும், மக்கள்ஸ் கைக்கும் வாய்க்குமா இருந்ததையும் பார்த்து வச்சுக்கிட்டேன். மீனாம்பிகை கேட்டரர்ஸ். அடுத்த வாசலில் ஒரு பேனர். ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா.

ச்சென்னைச் சபாக்களிலே வயசுலே மூத்தது எது? சந்தேகம் என்ன... இதுவேதான். 1900 வருஷம் ஆரம்பமாம்.
107 வயசுக்கு, இதுவரை சொந்தக்கட்டிடம் கட்டிக்கலை(-: அவுங்க நிகழ்ச்சிகள் எல்லாம் இப்ப இந்த வித்யாபாரதியில்தான் நடந்துவருதாம். அவ்வளவா வசதிகள் இல்லாத ஹாலா இருந்தது. இங்கேயும் பிரம்பு நாற்காலிகள், ஆனால் ஒரு சின்னக் குஷன் வச்சுக்கட்டி இருந்தாங்க. மேடை அமைப்பும் ஏதோ தாற்காலிகமா வச்சதைப் போல. நம்மையெல்லாம் மறைஞ்சிருந்து பார்க்கிறமாதிரி இடது பக்கம் திரை மறைவில் ஒரு பிள்ளையார் விக்கிரகம் அலங்காரத்துடன்.


இசைவிழாக் கச்சேரிகள் மட்டுமில்லாம கருத்தரங்கம், Lecture Demonstration Session எல்லாம்கூட உண்டு இந்த சபாவுலே என்றதுதான் இன்னும் கூடுதல் சிறப்பு. அது காலையில் எட்டரை முதல் ஒன்பதரைக்குள்.அதெல்லாம் சங்கீதம் படிக்கிறவங்களுக்கு நல்ல பயனா இருக்கும். இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?


கல்கத்தா கே.ஸ்ரீ.வித்யா பாட்டு. தியாகைய்யரின் 'பண்டுரீத்தி கொலு' அருமையாப் பாடுனாங்க. பஜரே மானசம் சுமாராத் தோணுச்சு. ரொம்பத்தான் எனக்கு........ ஓசிக் கச்சேரியில் போனோமா, நாலு பாட்டைக் கேட்டோமான்னு இல்லாம........
'புண்ணியத்துக்குப் பசுமாடு கொடுத்தா......பல்லைப் புடிச்சுப் பார்த்த கதை.


வித்யா நல்லா வயலினும் வாசிப்பாங்களாம். கல்கத்தாவுலே எதோ பேங்க்லே வேலையாம். குடும்பமே சங்கீதம் படிச்சிருக்காம். அம்மா, சித்தி எல்லோரும் நல்லாப் பாடறவங்களாம். சொன்னது சங்கீதம் படிச்ச சித்தி. பாராட்டுக்களைச் சொல்லிட்டுக் கிளம்புனேன்.


மறுநாளும் அந்தப்பக்கம் வேற வேலையாப் போனப்ப வித்யாபாரதியில் நுழைஞ்சேன். யேசுதாஸ் குரல் மாதிரிக் கேட்டது. ஆனால் பாடிக்கிட்டு இருந்தவர் காவலம் ஸ்ரீகுமார். கையில் மாவுக்கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தார் வயலின்காரர். ஒரு ச்சின்னப் பையன்
பதினாறு, பதினேழு வயசுதான் சொல்லலாம் மிருதங்கம் அடிபொளி. மலையாளப் பாட்டுகள் சிலதும் பாடினார்.
'ஆடினான் கண்ணன் முகில்வண்ணன்' அருமை. கடைசியில் பாடிய தில்லானா சூப்பர். ஆமாம்......... வாய்ப்பாட்டுக் கச்சேரியில் கடைசியில் மங்களம்தானே பாடுவாங்க. இவர் என்ன தில்லானா பாடிக்கிட்டு இருக்காரேன்னு நினைச்சேன். நம்ம சங்கீத ஞானத்தைக்(??)
காமிச்சுக்க வேணாமேன்னு அக்கம்பக்கம் வாய் திறக்காமச் சும்மா இருந்துட்டேன்:-)

பகல் சாப்பாடு வேளை ரொம்பவே தள்ளிப் போயிருச்சு. வாணிமஹால் போய் இறங்கி மூகாம்பிகையில் முழுங்கிட்டு அப்படியே மேலே போய் பாட்டும் கேக்கலாம்னு சாப்பிட உக்கார்ந்தேன். முரளியின் உபசரிப்பு வழக்கம்போல. அப்ப எதிர் இருக்கையில் ஒருத்தர் வந்து உக்கார்ந்தார். அவரோட பேச்சு தோரணையெல்லாம் கவனிச்சப்ப, அவர் இந்த தியாகபிரும்ம கான சபாவின் முக்கிய புள்ளியோன்னு இருந்தது. அவர்கிட்டேயே கேட்டுட்டேன். அவருக்கு ஒரே ஆச்சரியமாப் போயிருக்கும் போல. ( அடிப்பாவி! என்னை.......... தெரியாதா? )
அவருக்குப் பக்கத்தில் பணிவோடு உக்கார்ந்திருந்தவரிடம், 'நீ சொல்லுப்பா'ன்னு எழுந்து கை கழுவப்போனார்.


ராம்ஜியாம். பத்மா சுப்ரமணியனின் சகோதரர் 'அபஸ்வரம் ராம்ஜி' இப்ப ஆச்சரியம் எனக்கு. திரும்ப வந்தவரிடம் பேச ஆரம்பிச்சேன். 'உங்களைப்பத்தி பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் படிச்சிருக்கேன். ஆனா ஆளை நேரில் பார்க்கறது இப்பத்தான்'. ரொம்ப சந்தோஷம். அவரும் என்னைப்பத்தி விசாரிச்சார். 'நீங்க உள்ளூர் இல்லைன்னு பார்த்தவுடன்
தெரிஞ்சது(!!??????) எப்படிக் கேக்கறதுன்னு தயங்குனேன், அதுக்குள்ளெ நீங்களே பேசிட்டீங்க'

சங்கீத சீஸன் முடிவுக்கு வந்தாச்சாம். நாளையோட இந்தக் கேண்டீனுமே இருக்காதாம்.(ஹா.........) முக்கிய புள்ளிகளோட
கச்சேரிகள் மட்டும் சரியான தேதிகள் கிடைக்காம விட்டுப்போனதுன்னு இருக்கறது மட்டும் இன்னும் நாலைஞ்சு நாளுக்கு இருக்குமாம்.


"இப்ப என்ன செய்யப்போறிங்க? "

" சாப்புட்டுட்டு மேலே போய் பாட்டுக் கேக்கலாமுன்னு இருக்கேன்"

" வேற ஏதும் முக்கியமான வேலை இல்லேன்னா வலையப்பட்டி ஃபெஸ்டிவல் போங்களேன். ஹேமமாலினியிலே நடக்குது.
எங்க க்ரூப் இப்ப அங்கே பாடப்போறாங்க. நானும் அங்கெதான் போய்க்கிட்டு இருக்கேன். நீங்க என்கூடவே வந்துறலாம்."


கிளம்பும்போது, 'வழியில் கதீட்ரல் ரோடுலே இறங்கிக்கறேன்'னு இன்னொரு பெண்மணியும் எங்களோடு சேர்ந்துக்கிட்டாங்க.
காரில் போகும்போதுதான் அந்தப் பெண்மணியை அறிமுகம் செய்தார். விநாயக்ராமோட அண்ணியாம்.


"விக்கு விநாயக்ராம்? கடம்? "

" ஆமாங்க. இவுங்களும் நல்லாப் பாடுவாங்க"


சங்கீத சீஸன்லே ச்சென்னையில் இடறி விழுந்தா.........இப்படிப் பெரிய மனுஷங்க மேலேதான் விழுவோமோ?


இவருடைய 'இசை மழலை' குழுவிலே கிட்டத்தட்ட 450 பிள்ளைங்க இருக்காங்களாம். இந்த வருஷம் மட்டும் 85 நிகழ்ச்சி கொடுக்கறாங்களாம் வெவ்வேற நாளில், வெவ்வேற சபாக்களில். அப்பாடா.............


ஜனவரி முதல்தேதி வருஷப்பிறப்புக்கு சிறப்பு நிகழ்ச்சியா பாரதீய வித்யாபவன் மினி ஹாலில் காலையில் 9 மணிமுதல் பிற்பகல் 3 வரை 6 நிகழ்ச்சிகள் இவுங்களெ நடத்தறாங்களாம். நேரம் இருந்தாக் கட்டாயம் வாங்கன்னு சொன்னார்.

எல்லாம் வளர்ந்துவரும் இளைய இசைப்புயல்களா இருக்குமில்லே!!!

கோபால் செல்லுலே கூப்பிட்டார். நான் போரடிச்சுக் கிடப்பேனோன்னு அவருக்குக் கவலை. நமக்கு அடிச்ச (சர்)ப்ரைஸைச் சொன்னேன். போன வேலை முடிஞ்சதாம். ராத்திரி கிளம்பி வர்றாராம்.


கோபாலபுரம் வழியாப்போனோம்.
'இங்கேதான் முதலமைச்சர் வீடு'ன்னு சொன்னார். அடுத்து அண்ணா திமுக கட்டிடத்தை ( முந்தி இது எம்ஜிஆர் அவர்கள் வீடு) அடுத்து ஹேமமாலினிக் கல்யாண மண்டபம்.


இன்னிக்கு நடக்கப்போறக் கச்சேரியில் மிருதங்கம் வாசிக்கறது ஒரு பொண்ணாம். உலகத்துலேயே மிருதங்கம் வாசிக்கிற முதல் பொண்ணுன்னே சொல்லலாமாம். கச்சேரிக்காகவே அமெரிக்காவில் இருந்து வந்துருக்காங்களாம்.



முதல்வரிசையில் கொண்டுபோய் உக்கார்த்தி வச்சுட்டார். மேடையில் வந்து உக்கார்ந்தது மூணு ச்சின்னப் பொண்ணுங்க. பட்டுப்பாவாடையும், தாவணியுமா பார்க்கவே கொள்ளை அழகு. வயசு 17 தாண்டுனா அதிகம்.


ரெமா - பாட்டு, சுதா- வயலின் , ரஜ்னா சுவாமிநாதன் -மிருதங்கம்.


ஹம்ம்ம்ம்மா.......... என்னத்தைன்னு சொல்ல? தூள் கிளப்பிருச்சுங்க. ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையா
புன்முறுவலாச் சிரிச்சுக்கிட்டே ......... சூப்பர். கொஞ்சம் சாம்பிள் இதுலே போட்டுருக்கேன் பாருங்க.(யூ ட்யூப்லே ஏத்திட்டு என்ன செய்யறதுன்னு முழிச்சேன். உதவிக்கு வந்த நண்பருக்கு நன்றி)

என்னமா தூள் கிளப்பிருச்சுங்க இந்தப் பொண்ணு ரஜ்னா!!!

ஒண்ணரைமணி நேரம் ஓடியே போச்சு. ராம்ஜி கிளம்பறப்ப சொல்லிட்டுப்போனார். அடுத்து நாலரை முதல் திருச்சூர் பிரதர்ஸ். அமெரிக்கையா உக்கார்ந்து அருமையாப் பாடுனாங்க. பக்கவத்தியக்காரர் எல்லாமே கேரளம்.


இதுவரை சந்தித்த சில நண்பர்கள்( எல்லாம் அங்கங்கே சபாக்களில் பக்கத்து இருக்கையில் நம்மகிட்டே அகப்பட்டுக்கிட்டவங்க) அபிஷேக் ரொம்ப பிரமாதமாப் பாடறான்(ர்) கட்டாயம் கேளுங்கோன்னு சொல்லி வச்சுருந்தாங்க.
யார் இந்த அபிஷேக் ரகுராம்? பாலக்காடு ரகு( மிருதங்கம்) வோட பேரன். சங்கீதப்பரம்பரை. பின்னே எதிர்பார்ப்புக்குக் கேக்கணுமா?



இப்போ அடுத்து அபிஷேக். நல்லா இருட்ட ஆரம்பிச்சது. ரெண்டே பாட்டுன்னு கேட்டுட்டுக் கிளம்பிட்டேன்.

மறுநாள் எல்லாருக்கும் அல்வாக் கிண்டி விளம்புனாங்க. எங்களுக்கும் கிடைச்சது.

18 comments:

said...

டீச்சர் சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் பாடப்போறேன்னு கிளம்பிட்டீங்க. நல்லதுதான்.பிரமாதமா விமர்சனம் பண்ணீயிருக்கீங்க.வாணிமஹால் எல்லாம் போனீங்க நம்ப வீட்டுக்கும் வந்திருக்லாம்லே.இது ஞாயமா?

said...

Nanthan first

said...

'கோவிந்தா
கோபாலா 'பாட்டு எல்லாமே நல்லாவே ரசிக்க முடிஞ்சது'
கோபால்னு பேர் வந்தாலேபோதுமே உங்களுக்கு. அதிலேயும் பாட்டு நல்லாவும் இருந்துட்ட கேக்கண்மா!!!

said...

வாங்க தி.ரா.ச.

உங்களைமாதிரி ராகமெல்லாம் கண்டு பிடிச்சுச்
சங்கீதம் ரசிக்கத் தெரியாதுங்க(-:

காதுக்கு இனிமையா இல்லையான்னு மட்டும் கண்டு பிடிச்சுருவேன்:-))))

ஆமா, நீங்க வாணிமஹால் பக்கமா இருக்கீங்க? நானே மூணரை வாரம்
அங்கே பக்கத்துலேதான் ஜாகை வச்சுருந்தேன்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நீங்க ரெண்டாவதுங்க:-))))

கோபால் என்ற பேருக்கு உள்ள 'இனிமை' கோபால் அருகில் இல்லாதப்ப
இன்னும் கூடுதோன்னு ஒரு சந்தேகம் எனக்கு:-)))))

said...

வயிற்றுக்குணவு இல்லாத பொழுது சிறிது செவிக்கும் ஈயப்படும்!! என்னவோ சொதப்பிட்டேன் போல இருக்கே. அதுமட்டும் இல்லாம ஈயம், இசம் எல்லாம் பேசினா அரசியலாமே. விட்டுடுங்க.

பாட்டுக் கச்சேரிகளில் மங்களம் பாடும் முன் தில்லானா பாடுவது வழக்கம்தான்.

said...

சங்கீதம் தெரியாதுனு சொல்லிக் கிட்டே விமரிசனம் இவ்வளவு நல்லா எழுதறீங்க.
வித்லோகாவில சிடி எல்லாம் நல்லா இருக்குமே.
பார்த்தீங்களா?
நானும் பாரதியைப் பார்க்கும்போது ,அவருடைய எளிமையையும் நகைச்சுவையையும் ரசித்தேன்.மழலைப்புயல் ரொம்பவுமே இனிமையா இருக்கும்.
4,5 வயசுக் குழந்தைகள் பாடுவது அற்புதம் கேட்க.

said...

இதில் சங்கீதம் "வெள்ளமாக" இருக்கு.

said...

வாங்க கொத்ஸ்,

நமக்கும் அரசியலுக்கும் தூரம் கொஞ்சம் கூடுதல்தான். அதனாலே ஈயம் பித்தளை எல்லாம் வேணாமுன்னு
நீங்க செஞ்ச முடிவுக்கு இதோ நானும் 'ஜால்ரா' போட்டுடறேன்:-))))

வயிறு, செவி ரெண்டும் மாத்தி மாத்தி வந்தாலும் பிரச்சனை இல்லை.
அதது அந்தக் காலக் கட்டத்துக்குத் தகுந்தபடி.

மங்களத்துக்கு முன்னே தில்லானா உண்டா? அறியாமையைப் போக்கியதுக்கு ரொம்ப நன்றி.

said...

வாங்க வல்லி.

சிடி ஒண்ணுமே பார்க்கலை. இருந்த நேரம் முழுசும் பாலாவோடு அரட்டைதான்:-))))

450 பிள்ளைகளைக் கட்டிமேய்ச்சுப் பாட்டுச் சொல்லித் தர்றது ரொம்பவே பெரிய விஷயம்தான்.
பிள்ளைங்களும் சரி, இப்ப இருக்கற பாரமான கல்விமுறையில் அகப்பட்டுக் கஷ்டப்பட்டாலும்,
கூடவே பாட்டு, நடனம்ன்னு ஜமாய்க்குதுங்க பாருங்க. உண்மைக்குமே பாராட்டப் படவேண்டிய
அம்சம்.

said...

என்னங்க குமார், வெள்ளமா? நீந்திக் கரை ஏறுங்க:-))))

said...

அக்கோவ்
வந்துட்டேன்ல..
பாலபாரதிய அம்போன்னு விட்டுட்டு
சபா பக்கம் திரும்பிட்டீங்க.........

ஒருவேளை பா.க.ச வுக்காக யோசித்து
கட் பண்ணிட்டீங்களோ?

சிவஞானம்ஜி

said...

துளசி,
பாட்டு கேட்டேன்.
காதுக்கு ரொம்ப இனிமையா இருந்ததுப்பா.
ழகாப் பாட்டியிருக்காங்க.அதிலும் சின்னப் பெண்கள். நல்ல குரல் வளம்.
தான்க்ஸ்பா.

said...

வாங்க சிஜி.

'அஞ்ஞான வாசம் ' முடிஞ்சதா?

பா.க.ச. வுக்கு நீங்கதான் தலைமைன்னு நினைச்சேன். சரியாத்தான் போச்சு:-))))

said...

வல்லி,

யாருமே பாட்டைப் பத்திச் சொல்லலை. சரிதான், யூ ட்யூப் வலை ஏத்துனதுலே சொதப்பிட்டேனோன்னு
இருந்துச்சு. நல்லவேளை, வயித்துலே ----- ( காப்பியோ, பாலோ, மோரோ, பீரோ எதோ ஒண்ணு) வார்த்தீங்க:-)))

said...

ஆமா எங்க உங்க பிரியாணி பதிவு? படிச்சிட்டுப் போய் செஞ்சுபாத்துட்டுப் பின்னூட்டம் போடலானு இருந்தா இப்பப் பதிவக் காணோம். நல்லா வந்துது. ஆனா நியூசிக்கு வரும்போது உங்க பிரியாணியையும் சாப்பிட்டுப் பாத்தாத்தான் என்னோடது சரியான்னு தெரியும்:))

said...

வாங்க செல்வா.

இது 'விக்கி பசங்களுக்காக'ப் போட்ட பதிவுங்க.

நம்மளையும் பசங்க கூட்டத்துலே சேர்த்துக்கிட்டாங்க.
அதுக்கு நன்றியாத்தான் எல்லாருக்கும் பிரியாணி போடலாமுன்னு............

வெறும் பிரியாணிதாங்க. குவாட்டர் எல்லாம் இல்லை:-)

நியூசிக்கு எப்ப வர்றீங்க? தகவல் சொல்லுங்க. இருக்கற 45 மில்லியன் ஆட்டுலே
ஒண்ணை பொலி போட்டுரலாம்:-)

said...

என்னாது - மோரோ பீரோ வா - என்னாது இது ??

அப்புறம் கோபால் பக்கத்துலே இல்லன்னாத்தான் அவரு நெனவாவே இருப்பீங்களா ?

பெரிய புள்ளிகள் எல்லாமே சந்திச்சிருக்கீங்க - ம்ம்ம்