Wednesday, December 24, 2008

பசிச்சவள் பார்த்தப் பழங்கணக்கு.

'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரக்' ன்னு காதுக்குள்ளே வந்து விழுந்த சத்ததில் அப்படியே ஆடிப்போயிட்டேன். 'ஐயோ'..... எங்கே வெட்டறீங்க?

"ஒன்னுமில்லை. நீ ஆடாம இரு. சரியாத்தான் வெட்டறேன்"

தப்பான ஆள்கிட்டேத் தலையைக் கொடுத்துட்டேன். நம்பியே இருக்கக்கூடாது.....காதுக்குள்ளே இன்னும் சத்தம் வந்து விழுது. இனிக் கூக்குரலிட்டுப் பயன் இல்லை. ஆனாலும் கத்தாம இருக்க முடியுதா? ஒரு பேயாட்டம் ஆடிட்டுத்தான் ஓய்ஞ்சேன்.

போன வருசத்தின் கடைசிநாள். குளித்து முடிச்சு ஈரத்தலையைப் படிய வாரி எல்லா முடிகளையும் சேர்த்துப்பிடிச்சுக் கச்சிதமா ஒரு க்ளிப் போட்டுக்கிட்டு இருந்தப்ப, எங்க வீட்டுக்கு மேலே ஆகாயத்துலே பறந்து போய் ஆளைத் தேடிக்கிட்டு இருந்த சனியன், 'ஆப்ட்டுக்கிட்டாண்டா' என்ற சந்தோஷத்துடன் சட்னு இறங்கிவந்து உக்கார்ந்தது, கோபாலின் நாவில்.

" ஒரே லெவலில் இல்லையே. நான் வேணுமுன்னா கொஞ்சம் ட்ரிம் செஞ்சு விடவா?"

சனியன் இடம் மாறி என் தலையிலே வந்து உக்கார்ந்தது தெரியாமல் தலையை ஆட்டுனேன் நான்(-:

பின்பக்கத் தோட்டத்தில் நான் நிக்கக் கத்திரியும் கையுமா இவர். ( கொஞ்சம் முதல் வரிக்குப் போங்களேன்). சரியா அந்தக் க்ளிப்புக்குக் கீழே, அதைத் தொட்டதுபோல 'நறுக்.'

நான் ஆடுன ஆட்டத்தில் பயந்து போய் இடதுகையில் பிடிச்சிருந்த மயிர்க்கற்றையை லூஸில் விட்டு, அது தோட்டம் பூராவும் பரவி ஓடிப்பிடிச்சு விளையாடுது.

வாலறுந்த நரியாக நான். 'அதெல்லாம் வளர்ந்துரும். கவலைப்படாதே'ன்னு சொன்னார் கோபால்.


ஸ்க்ரஞ்சின்னு சொல்லும் துணியால் ஆன ரப்பர்பேண்ட்களை வச்சுச் சமாளிச்சேன். பெரிய சோகம் என்னன்னா.... இங்குள்ள நட்புவட்டத்தில் ஒருத்தரைத் தவிர வேற யாருமே கண்டுபிடிக்கலை:-)))))

இதோ அடுத்த புதன் வந்தால் டிசம்பர் 31. சரியா ஒரு வருசம். பழங்கணக்குப் பார்க்கும்போது அவ்வளவு பிரமாதமான வருசம் இல்லைன்னாலும் அவ்வளவு மோசமும் இல்லை. இந்தப் பதிவோடு 183 பதிவுகள். நம்ம வகுப்புக்குக் கூடுதலா இன்னும் சில மாணவர்கள். வாசகர் வட்டம் கொஞ்சம் பெருசா ஆகி இருக்கு. ஒரு சிலருக்காவதுப் பயன்படும் பதிவுகள் வந்துருக்குன்னு 'இலா'வின் பின்னூட்டம் சொல்லுது:-)

தமிழில் புகைப்படக்கலை என்ற நம் PIT பெருமக்களால் புகைப்பட ஆர்வம் கூடிப்போய் இருக்கு. எதை பார்த்தாலும் கை 'பரபர' தான். வரப்போகும் போட்டிகளுக்கு இந்தத் தலைப்பு வந்துருச்சுன்னா...... (பதிவுகள் எண்ணிக்கை கூடுனதுக்கு இதுவும் ஒரு காரணம்.)

அடுத்த வருசமாவது இன்னும் கவனமா எழுத்தை மேம்படுத்திக்கணும், மனசுலே குறிச்சுவச்சுருக்கும் சில சரித்திர நிகழ்வுகளை மறக்காம எழுதணும். எங்கெ போனாலும் கெமெராவைக் கையோடு எடுத்துப்போக மறக்கக்கூடாது.



24 செ.மீ. வளர்ந்துருக்கு. அஸினோ பிஸினோ வரும் விளம்பரத்தைப் பற்றிப் படிச்சதைக் கவனமா மனசுலே இருத்திவச்சுக்கிட்டேன். ப்ளாட்டினம் எப்படி இருக்குமுன்னு கோபாலுக்குத் தெரியாதாமே!!!! அந்த தனிஷ்குக்கு நியூஸிவரக் கொடுத்துவச்சுருக்குதோ என்னவோ:-)

ஃபாலோ அப்ன்னு சொன்னால், 'வோடாஃபோனு'க்குக் கண்ணீர்க்காவியமெல்லாம் சொல்லி அவுங்க பாதி இறங்கிவர, நானும் சமாதானக்கொடி பிடிச்சு மெதுவா மேலேறி நடுவழியில் சந்திச்சு 40 டாலர் நம்ம கணக்குலே வரவு வந்துருக்கு. 50% வெற்றி. 'அடிசறுக்குன யானை'யை பாதிவரை தூக்கிவிட்டாச்சுன்னு வச்சுக்கலாம்.


உலகம் முழுசும் பொருளாதாரம் கொஞ்சம் கீழ்நோக்கி இருக்கும் இந்த சமயத்தில் அனாவசியச் செலவுகளைக் குறைக்க முதலில் கத்துக்கணும். எந்தக் காரியமும் அது நல்லதோ அல்லதோ வீட்டில் இருந்துதானே ஆரம்பிக்கணும். அதனால் இந்த வருச கிறிஸ்மஸ் பண்டிகைக்கான அலங்காரத்தில் முதலில் கை வச்சேன். பழைய அலங்காரப் பொருட்கள் இருந்த அட்டைப் பெட்டிகளைக் குடைஞ்சு கிறிஸ்மஸ் ரீத் செஞ்சு மாட்டியாச்சு. இந்த வகையில் 25 டாலர் மிச்சம்!
நாமும் பண்டிகை கொண்டாடுவொம்லெ:-))))



ரீத்துக்கான வளையம் குக்கர் கேஸ்கட்:-))))




நம்ம வகுப்புக் கண்மணிகளுக்கு விடுமுறை விட்டாச்சு. நாளை முதல் 15 நாள் டீச்சரை மறந்துருங்க. ஆனால் வகுப்பை மறக்காதீங்க. புதுவருசத்தில் உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்கும் வரை உங்கள் அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்மஸ் பண்டிகை & புதுவருசத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

என்றும் அன்புடன்,

துளசி,

கோபால்
&
கோகி என்ற கோபாலகிருஷ்ணன்.

நம்ம ஊர் விழாக் காட்சிகளில் சில:












நேட்டிவிடி ஸீன் நம்ம ' டிபிஆர்ஜோ' வுக்காக.

66 comments:

said...

ரீச்சர் உங்களுக்கும் வாயில்லாப் பிள்ளைகளான ரெண்டு கோபாலர்களுக்கும் என் வாழ்த்துகள்! :))

said...

வாய்யா கொத்ஸ்,

கடமைதவறாத க்ளாஸ்( glass இல்லை) லீடரா வகுப்புக்கு முதல்லே வந்து 'பூச்சிகளை' வாழ்த்தியதுக்கு நன்றி:-))))

said...

உங்களுக்கும் உங்க கோகி க்கும் இனிய புத்தாண்டு, கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

முடி வளந்துர்ருக்குமே. ஒரு வருசம் ஆச்சில்ல. விழாக்கால நல்வாழ்த்துக்கள்.
கோடைக்காலத்தை நல்லா அனுபவிங்க. (அப்படி ஒண்ணு இருந்தா) :)

said...

விடுமுறைக்கால வாழ்த்துக்கள்...

said...

தலைப்புக்கான அர்த்தம் சொல்லவே இல்லியே..

said...

வாங்க நசரேயன்.

நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க நரேன்.

நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

உங்க வாயிலே சக்கரை போடலாமுன்னா என் கைக்கு எட்டலை:-)

சம்மருன்னு ஒன்னு வரப்போகுதாம். பிப்ரவரி மாசக் கடைசி வாரம் வருமோ என்னவோ!!!!

said...

வாங்க தங்ஸ்.
நன்றிப்பா. உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

அடுத்தவருசம் வகுப்பை மறந்துறவேணாம்:-))))

said...

வாங்க இளா.

காலையில் எழுந்ததும் கணினி முகத்தில் விழிச்சு உடனே எழுத ஆரம்பிச்சது இது.

தமிழ்ப் பழமொழி

இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?:-)))))

said...

உங்கள் மூவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

ரீத் நல்லாயிருக்கு.

//சிலருக்காவதுப் பயன்படும் பதிவுகள் வந்துருக்குன்னு 'இலா'வின் பின்னூட்டம் சொல்லுது:-)//

பலருக்கும்:)!

said...

ரீச்சர்,

இனிய வாழ்த்துக்கள்.

said...

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துகள் அம்மா :)

said...

happy neew year all

said...

//உலகம் முழுசும் பொருளாதாரம் கொஞ்சம் கீழ்நோக்கி இருக்கும் இந்த சமயத்தில் அனாவசியச் செலவுகளைக் குறைக்க முதலில் கத்துக்கணும்.//

என்று டைப்பும் அதே கரங்கள்தான்

//ப்ளாட்டினம் எப்படி இருக்குமுன்னு கோபாலுக்குத் தெரியாதாமே!!!! அந்த தனிஷ்குக்கு நியூஸிவரக் கொடுத்துவச்சுருக்குதோ என்னவோ:-)//

என்றும் டைப்புகின்றன. முரண்பாடுகள் இந்த ஜெண்டருக்குப் புதிதல்லவே!

கொத்தண்ணன் சொன்னது போல வாயில்லா கோபாலர்களுக்கும், உங்களுக்கும் பண்டிகைக்கால வாழ்த்துகள்!

said...

நான் இப்பத்தான் முடியவெட்டி இருக்கேன்.. அடுத்தவருசம் தான்கணக்குப் பார்க்கனும்.. :))) பண்டிகை வாழ்த்துக்கள்.

said...

பின்னூட்ட ஆரம்பே களைகட்டிருச்சு...:-)
உங்களுக்கும் & குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்.புது வருஷத்தில் வரும் போது நிறைய பதிவுகள்,போட்டோவோட வாங்க!!!!
அப்புறம் ரெண்டு கோ ”ஜி” க்கும் என்னோட வாழ்த்துக்களை சொல்லிருங்க!!!!

said...

வாழ்த்துக்கள் டீச்சர் ;))

said...

Happy new year Teacher..

Selvi

said...

அளந்து பாக்கலியா கூந்தலை??
:))
அன்பு ஜிகேக்கும் உங்களுக்கும்,

குழலுக்குப் பதில் கத்திரி எடுத்த கோபாலுக்கும் ,விடுமுறைக்கு வரப்போற மகளுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ஹாப்பி 2009!!!!

said...

//ஹைய்யா ஹைய்யா ஹை......

இன்னும் நாலைஞ்சு இஞ்சு வளரட்டுமுன்னு காத்துருக்கேன்.....

நீங்க சொன்னீங்களேன்னுதான்:-))))))//

"தாங்க்ஸ் டு தனிஷ்க் பார் திஸ் நைஸ் விசுவல் அண்ட் ...மெலடி"

அட என்னோட இந்த பதிவுக்கு நீங்க போட்ட அந்த பின்னூட்ட ரகசியம் இப்ப தான தெரியுது!!!
அட்ரா ...அட்ரா ...நாக்க முக்க ...!!!!சும்மா ப்ளாட்டினத்துல வைரம் பதிச்ச சிட்டுக் குருவி கொண்டை போட்டு அசத்துங்க டீச்சர் கிறிஸ்துமஸ்க்கு.அதான் முடி வளந்துருச்சு இல்ல?

said...

//'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரக்' ன்னு காதுக்குள்ளே வந்து விழுந்த சத்ததில் அப்படியே ஆடிப்போயிட்டேன். 'ஐயோ'..... எங்கே வெட்டறீங்க? //

அப்படியே பழைய காலத்துக்கு கொண்டு போயிட்டீங்க டீச்சர்..

எனக்கு கருகருன்னு முடி சீக்கிரம் வளர்ந்துடும்..மாசத்துகொருமுறை வெட்டணும். :(
என்னோட அக்காவுக்கு ஏற்கெனவே முதுகுவரை நீளமா,அடர்த்தியான கூந்தல். போற போக்குல எங்க பாட்டியொருத்தர் என் கையால முடிவெட்டிக்கிட்டா இன்னும் முடி நீளமா வளரும்னு சொல்லிட்டுப் போக, அன்னிக்கு ஆரம்பிச்சது என்னோட பார்பர் வேல :)..ராசியான பார்பராம் :)

அக்கா, அக்காவோட சினேகிதிங்க, பக்கத்துவீட்டு அக்காக்கள்னு வளர்பிறை நேரத்துல எல்லோரும் தங்களோட 'தலைக்கனத்தை'க் குறைக்க வீட்டுக்கு வந்துடுவாங்க..அவங்க சொல்ற மாதிரி இத்துணூன்டுதான் வெட்டணும். மேல ஒரு மில்லிமீற்றர் வெட்டினாலும் கூட முகம் சுருங்கிடும் அவங்களுக்கு..அப்புறம் அதை ஒரு பொக்கிஷம் போலக் கொண்டுபோய் புதைச்சிட்டு வருவாங்க.. :)

பொண்ணுங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கூந்தல் மோகம்னு தெரிலை. :(
பேசாம எல்லோரும் மொட்டையடிச்சிட்டு த்ரிஷா மாதிரி விக்குக்கு மாறலாமே ? :)

இனிய நத்தார் & புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சருக்கும் கோபால் அண்ணாவுக்கும் நம்ம கோபிக்கும் :)

said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!
//அடுத்த வருசமாவது இன்னும் கவனமா எழுத்தை மேம்படுத்திக்கணும், மனசுலே குறிச்சுவச்சுருக்கும் சில சரித்திர நிகழ்வுகளை மறக்காம எழுதணும். எங்கெ போனாலும் கெமெராவைக் கையோடு எடுத்துப்போக மறக்கக்கூடாது.//
அடக்கம் மாணப் பெரிது :)

said...

துளசி அக்கா எப்படி இருக்கிங்க? நான் உங்களுக்கு மெயில் போட்டேன். கிடைத்தா?
உங்கள் மைக்ரோவேவ் ஈசி ரெசிபிஸ் நல்லாவெ இருக்கு, மேலும் ஏதாவது கொஞ்சம் மைக்ரோவேவ் ரெசிப்பிஸ் இருந்தா சொல்லுங்க.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாற்க்கும் என்
கிறிஸ்மஸ் & இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த புத்தாண்டில் என்ன என்ன ரெசல்யூஷன்ஸ் சொல்லுங்க.

said...

என்னது 15 நாள் வகுப்புக் கிடையாதா? என்னமோ போங்க...
Merry Christmas and Happy Newyear to all.

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ரீத் நல்லா இருக்கு, ஆனால் ஒரு வாரம்வரை குக்கர் வைக்க முடியாது:-)))))

நோ பருப்பு அட் ஆல்:-)

பலருக்கும் பயன் என்றால் கூடக் கொஞ்சம் போட்டுக் கொடுத்தாப்லெதான்!!!!

said...

வாங்க ராம்.

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

தலை(ப்பு) சரியாச்சா?

said...

வாங்க கவிநயா.

நன்றிம்மா. உங்களுக்கும் அதே அதே:-)

said...

வாங்க SUREஷ்.

நன்றி. same to you .

said...

வாங்க பினாத்தலாரே.

//என்றும் டைப்புகின்றன. முரண்பாடுகள் இந்த ஜெண்டருக்குப் புதிதல்லவே!//

அவசரக்குடுக்கையா இருப்பது 'அந்த' ஜெண்டருக்கு எப்பவுமே பழசு. ஆகிவந்ததாச்சே:-))))

தெரியாதவங்களுக்கு, இதுதான் அதுன்னு காமிச்சாலும் தப்பா?

நியூஸிக்கு வர்றதும் அந்த தனிஷ்கோட அதிருஷ்டத்தைப் பொருத்தது. கவனிக்கணும், என் அதிர்ஷ்டம் இல்லை.

கொத்தண்ணன் இங்கே வகுப்பில் இருப்பதுபோலவே அங்கே(யும்) இருக்காரான்னு கண்டுபிடிக்கனும்.

பூச்சிகளின் தொல்லை தாங்கலைப்பா.

எங்கே அந்த ஸ்ப்ரே?

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கயலு.

வெட்டுனது வெளியில்தானே?

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க குமார்.

லீடர் முன்னுக்கு வரத்தானே வேணும்:-)))))

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சிந்து.

ரெண்டு 'ஜி'க்களுக்கும் சொல்லிட்டேன். நன்றின்னு சொல்லச் சொன்னாங்க.

said...

வாங்க கோபி.
நன்றி & உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கமலினி/செல்வி.

புதுசா இருக்கீங்க போல!!!!

வணக்கம். நலமா?

நன்றி & உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வல்லி. அதெல்லாம் அளக்காம விட்டுருவொமா?

24 செ.மீன்னு சொன்னது அதைத்தான்:-))))

உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.
2009 இல் சந்திப்போம்:-))))

said...

வாங்க மிஸஸ் டவுட்.

அதெல்லாம் அசத்தியாச்சு எப்பவோ!!!!!

கனவுன்னு ஒன்னு தினமும் வருமே நினைவு இருக்கா?:-)))

said...

வாங்க ரிஷான்.

திரிஷா விக்கா? அட!!!! சூப்பர் தகவல்.

கைராசி இருக்குன்னா நல்லதுதான். கைவசம் ஒரு தொழில் இருக்கு:-)

இங்கே ஆஸியில் இப்போதைக்கு ஹேர்ட்ரெஸ்ஸர் ஷார்ட்டேஜ்.

விண்ணப்பித்தால் இடம் கிடைச்சுருதாம்:-)

said...

வாங்க மணியன்.

நலமா ?

உங்களையும், நம்ம டிபிஆரையும் சர்ச்சுக்குப் போனப்ப நினைச்சுக்கிட்டேன். ஏன்? எப்படி, எதுக்குன்னு தெரியலை.

இங்கே வந்துபார்த்தா நீங்க வந்துருக்கீங்க!!!!

இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க இண்டியாடேஸ்ட்.

உங்க மடலுக்குப் பதில்போட்டே ஒரு வாரமாகுது. இன்னும் கிடைக்கலையா?

மைக்ரோவேவ் ரெஸிபிகள் போட்டாப் போச்சு. என்ன பிரமாதம்.

நிறைய சமையல்குறிப்புகள் எழுதிவச்சுருக்கேன். இன்னும் ரிலீஸ் பண்ணலை.

எந்த ரெஸல்யூஷனும் பண்ணக்கூடாதுன்னு ஒரு ரெஸல்யூஷன்:-)))

said...

வாங்க கவிதா.

வகுப்பை மிஸ் செய்யற ஒரே ஒருத்தர் நீங்கதான் போல!!!!

மத்தவங்க மூச்சு விடலை:-))))

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க குடுகுடுப்பை.

நன்றி & உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

நல்லகாலம் வருகுது, நல்ல காலம் வருகுது

said...

நல்லா போட்டிருக்கீங்க உங்க பழங்கணக்கை..

வாழ்த்துக்கள் மேடம் உங்களுக்கும், உங்கள் கணவர் மற்றும் பிள்ளைக்கும்.

183 பதிவாஆஆஆஆஆ
டிப்போயிட்டேன்.

said...

வாங்க அமித்து அம்மா.
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

183க்கே ஆடிட்டா எப்படி? நம்ம கோவியார் 400த்துச் சொச்சம்!!!!!!

said...

உங்களுக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் டீச்சர்...:)

said...

இன்னொரு முறையும் வாழ்த்துக்கள் தமிழ் பிரியன் சார்பாக அவரும் உங்க கிளாஸ்ல ஒருத்தராச்சே அவர்தான் ஊருக்கு போயிட்டதால அவரோட அட்டென்டன்ஸ் என்னை போடச்சொல்லி இருக்காரு..:)

said...

வாங்க தமிழன் - கறுப்பி.

உங்களுக்கும், குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

தமிழ் பிரியனுக்கும் நம் வாழ்த்து(க்)களை இங்கே சொல்லிக்கலாம். அவர் வீட்டில் புதுப்பூ மலர்ந்துருக்கு!!!!

said...

வாழ்த்துக்கள் மேடம்

said...

வாங்க இயற்கை.

நன்றி.
உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

புத்தாண்டு வாழ்த்துகள் டீச்சர் :)

said...

//அடுத்த வருசமாவது இன்னும் கவனமா எழுத்தை மேம்படுத்திக்கணும், //

புத்தாண்டு உறுதிமொழியா !!

வாழ்க ! வளர்க !!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

said...

ஒரு விடயத்தை தெளிவாகவும், விரிவாகவும் எழுதும் ஆற்றல் உங்களுடையது " அக்கா தொடர்" நம்மூரில் தணியாத தாகம் நாடகத் தொடர் மாதிரி எழுதினீர்கள். தொடர்ந்து தொடர்கள் எழுதுங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

வாங்க புதுகை. அப்துல்லா.

நன்றிங்க. உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க காரூரன்.

மெகா சீரியலுன்னு கிண்டல் செய்வாங்களோன்னு ஒரு பயம் இருந்துச்சு. உங்க பின்னூட்டம் எல்லாம் பார்த்தால்......பேசாம எழுதிக்கிட்டே போகலாம் போல!!!!

ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி.

உங்கள் அனைவருக்கும் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)க்ள்.

said...

ஹலோ துளசி சேச்சி, (இங்கன விளிக்காமோ)

இது என்னொட முதல் பின்னூட்டம் ஆனா ஒரு பதிவையும் விடாம படிச்சிருக்கென். சிலது படிச்சிட்டு திரும்ப ஞாபகம் வர வரிகளை மட்டுக் வெச்சு பதிவை தேதி தலயைப் பிச்சிகிட்டு இருக்கென். ஆனா எப்படியும் கண்டு பிடிச்சிடுவென்னு வச்சிக்கிங்க. ஆனா இப்ப நான் வந்ததுக்கு மொத காரணம் இங்க லீவு விட்டுட்டு ஜெயஸ்ரீ பதிவுல மட்டும் என்ன பின்னூட்டம்?? (தேஷ்யப்படல்லே. பெகுமானம் கொண்டு சோதிச்சதானு. தெற்று தெரிக்கறது கேட்டோ).

அன்புடன்
ஸ்ரீலதா

said...

நேட்டிவிடி ஸீன் நம்ம ' டிபிஆர்ஜோ' வுக்காக.//

அட! நம்மள இப்பவும் மறக்கலை!!

படங்கள் எல்லாமே நல்லாருக்குதுங்க. நம்ம வீட்லயும் வச்சிருக்கேன். கிறிஸ்துமஸ் மரத்தோட. அந்த படங்கள ஒரு பதிவோட போட்டுடறேன். சீக்கிரமாவே!

said...

எண்டெ ஸ்ரீலதெ,

வரூ வரூ. சுகந்தன்னே?

சேச்சீன்னு விளிச்சது வளரே இஷ்டப்பெட்டு.

நம்ம வகுப்புக்கு மட்டும்தான் லீவு. இப்ப டீச்சருக்கு ஒரு சான்ஸ், எல்லா வீட்டுக்கும் ஒரு விஸிட் அடிக்க.

சோம்பி உக்கார முடியுதா?
அப்படியே போய்வந்து வரப்போகும் பதிவுகளுக்கும் மேட்டர் தேத்தணும் இல்லையா? :-))))

தேஷ்யம் ஒன்னுமில்ல கேட்டோ. நம்மெக் குறிச்சுச் சிந்திக்குன்ன ஃப்ரெண்ட்ஸ் கிட்டியல்லோன்னு தெய்வத்தினு நந்நி பறயும் ஈ சேச்சி.

said...

வாங்க டிபிஆர்.
நலமா?

அதெப்படிங்க மறக்க முடியும்? அப்படியா இருக்கு இணைய நட்பு?

எதைப் பார்த்தாலும் சம்பந்தப்பட பதிவர் நினைவு வருவதைத் தடுக்க முடியாதுல்லே?

யானையும், பூனையும் கூடவே வடையும் பார்த்தா உங்களுக்கு யார் நினைவு வரும்?

அப்படியே போண்டா ன்னு சொன்னதும் 'யார்' மனசில் வருவாங்க? :-)))))

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

பெரியவங்க நீங்க, உங்க வாழ்த்து கிடைச்சதுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

மீனாட்சி அக்காவுக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)களைச் சொல்லிக்கறேன்.

said...

அட! நியூசியிலே வேற குக்கர் கேஸ்கட்டே கிடைக்காதா? சமைக்காமலிருக்க இப்படியும் ஒரு வழியா? நல்லாருக்கே?

ஒரு வழியா ஒரு வருசத்தைக் கடத்தியாச்சு. வரும் வருசம் நல்லாருக்க வாழ்த்துக்கள் துள்சி!
ஹாப்பி டே...அண்ட் ஹாப்பி எவ்ரிடே!!!!

said...

வாங்க நானானி.

உங்களுக்கும் புதுவருடத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

சமையலில் இருந்து தப்பிப்பது எப்போது? ஹூம்.... அந்த நாள் எப்போ வருமுன்னு காத்துக்கிட்டு இருக்கேன்:-)

ஒரு வாரத்துக்கான பருப்பை மொத்தமா வேகவச்சு ஃப்ரீஸர்லே போட்டாச்சு. அதனால் கேஸ்கட் இல்லாமலேயே தாளிச்சுக்கிட்டு இருக்கேன்.

இங்கே கேஸ்கட் ஒரு கடையில் கிடைக்கும். அதுக்குக் கொடுக்கும் விலைக்கு இந்தியாவில் ஒரு புது குக்கர் வாங்கிக்கலாம்.

said...

புது வருஷம் ஆரம்பிச்சு எட்டு நாள் ஆச்சு....நீங்க சொன்ன 15 நாளும் முடிஞ்சு போச்சு...அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிங்க அக்கா......