Sunday, May 10, 2009

சூரியன் வருவது யாராலே .....(2009 பயணம் : பகுதி 22)

எல்.ஆர். ஈஸ்வரியின் 'எல்லாம் ஏசுவே' வகைகளில் இருந்து கீர்த்தனைகள் எல்லாம் இப்ப எப்படியெல்லாமோ மாறிப்போயிருக்கே! கொஞ்சம் 'கவனமாக் கவனிச்சதும்' இதெல்லாம் கிறிஸ்துவ மதப் பாட்டுக்கள்தான்னு புரிஞ்சது. ஜன்னல் பக்கம் நின்னு பார்த்தால் கீழே பரவிக்கிடக்கும் பகுதியில் எங்கிருந்தோ பாட்டு எழும்புதுன்னு தெரிஞ்சாலும் எந்தக் கட்டிடமுன்னு கண்டுபிடிக்க முடியலை. முக்கால் இருட்டு. விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சில விளக்குகள் எரியுது. நம்ம அய்யன் மட்டும் இருட்டுலே முறைப்பா நிக்கறார். ஆற்காட்டார் உபயம் போல!

சுடச்சுடக் காஃபியும் ஆளுக்கு அஞ்சு பிஸ்கெட் ( ஒவ்வொருவகையில் ஒன்னு. அழகா food wrap போட்டு மூடி வச்சுருக்கு. மற்ற இடங்களில் காஃபின்னா எப்பவும் வெறும் காஃபி மட்டுமே வருதுல்லே?) வச்ச தட்டுகளுமாய் வந்து எழுப்புன பணியாளரைக் கேட்டேன்....நாலு மணிலே இருந்து ஏன் இப்படிப் பாட்டு? சர்ச்சுலே பாட்டும்மா''ன்னார். தினமும் இப்படியான்னு பயத்தோடு விசாரிச்சால்.... நல்லவேளை...இல்லையாம். இன்னிக்கு ஏதோ விசேஷமா இருக்குமுன்னு சொன்னார். சத்தத்துக்கு இடையில் இவரிடம் கத்திப்பேசவேண்டி இருந்துச்சு.

காஃபியை முடிச்சுட்டு ஆறாவது தளம் மொட்டை மாடிக்குப்போனால். அங்கே மொட்டைக்கு மேலே குட்டியா இன்னொரு மாடி இருக்கு. அதிகாலைன்னு இல்லாட்டியும் இன்னும் ஃபோகியாத் திரை போட்டாப்போல் இருக்கு பரிசரமெல்லாம். கலங்கரை விளக்கத்து வெளிச்சம் மட்டும், வந்து போய் வந்து போயுன்னு...... நம்ம அய்யன் வள்ளுவர் இவை எல்லாத்தையும் நின்னமேனிக்குப் பார்த்துக்கிட்டு மௌனசாட்சியா இருக்கார். கட்டிடத்தின் எதிர்ப்பகுதியில் கடல் இருக்கும் பகுதியில் கொஞ்சம் படகுகள், இந்தப் பக்கம் படகுத்துறையில் இன்னும் கொஞ்சம் சிறிதும் பெரிதுமாப் படகுகள், எல்லாமேக் கண்ணுக்கும் காட்சிக்கும் ஊடே ஏதோ சல்லாத்துணியில் திரை போட்டுக்கிட்டதுபோலப் புகைமூட்டத்தில். பாட்டுச் சத்தம் மட்டுமே அமைதியான அந்த நேரத்தைக் கலவரப்பகுதியாக ஆக்க முயலுது.

இருள்பிரியாத அதிகாலை
கிழக்கில் கண்ணு நட்டுக் காத்திருந்தோம். இடதுபக்கம் இருக்கும் ஹொட்டேல் மாதினி மொட்டை மாடியில் ஆட்கள் பலர். நம்ம மாடிக்கு நாலு பேர் நிதானமாப் படி ஏறி வந்தாங்க. ஆறே முக்கால் ஆகப்போகுது சூரியரைக் காணோம். அவரை எதிர்கொண்டழைக்கப்போன சின்னப் படகுகள் மூணு காத்திருந்து பயனில்லைன்னு திரும்பி வருது. லேசான தங்க நிறம் தண்ணீரில் பிரதிபலிக்கக் கடலின் அந்த இடத்தில் மட்டும் தண்ணீரெல்லாம் பொன் நிறம். அதோ அந்தரத்தில் சூரியன். ஆனா உதயமாகி ஒரு கா(ல்)மணியாவது ஆகிருக்கும்.


ஆரஞ்சுப்பழமா?
காலை உணவை முடிச்சுட்டுப் படகுத்துறைக்குப் போனோம். மணி ஒன்பதரை. அதுக்குள்ளே மொட்டை வெய்யில். இவர் தன் தலைக்கு ஒரு தொப்பி வாங்கிக்கிட்டார். விவேகானந்தர் பாறைக்குப் போகணும். தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அட்டகாசமான ஏற்பாட்டில் அழகானக் கட்டிடத்தில் இருக்கு. போகவர இருபது ரூபாய்கள்.பயணச்சீட்டு எடுக்கும் இடத்தில் எக்கச் சக்கமான கூட்டம். முக்கால்வாசியும் வட இந்தியர்கள்.
எட்டுமணிக்கே படகுப் போக்குவரத்துத் தொடங்கிருது. மனித உருவங்கள் படகுலே ஏறுவதும், இறங்குவதுமா அறையின் ஜன்னலில் பார்த்தப்பவே தெரிஞ்சது. சீட்டு வாங்குனதும் ஒரு பெரிய ஹாலில் காத்திருந்தோம். வரிசையை ஒழுங்குபடுத்தவும் காத்திருப்பில் மக்கள் அமரவும் வரிசையின் நீளத்துக்கு இருக்கைகளா கல்பாவியத் திண்ணை பெஞ்சுகள். மொத்தம் மூணு வரிசைகள். இந்தக் கட்டிடம் வெளியே இருந்து பார்க்கும்போது உண்மைக்குமே ரொம்ப அழகா இருக்கு.

படகு திரும்பிவந்தவுடன் பயணிகளை இறக்கி விட்டுட்டுக் காத்திருக்கும் பயணிகளை ஏற்றிக்கும். வெய்யிலில் கிடந்து நாம் அல்லாடவேண்டாம். அதுவரை நிழலில் ஜாலியாகக் காத்திருந்து, பொழுதுபோக்கா அங்கே சுவர்களில் கைக்கு எட்டின உயரம் வரைக்கும் நம்ம விலாசம், ஆட்டோகிராஃப், நம் வாழ்க்கைச் சரித்திரம் எல்லாத்தையும் பதிவு செஞ்சுக்கலாமுன்னு இருக்கு போல! வரிசை நகர்ந்து நாங்கள் கட்டிடத்தின் அடுத்த பக்கம் வழியாகப் படகை நோக்கிப்போனோம்.

நம்ம படகின் பெயர் பொதிகை. படகின் தரைக்கும் நாம் நிற்கும் கடற்கரைத் தரைக்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமாவே இருக்கு. படகின் வாசப்படிக்கு வெளியே பெருசா ரெண்டு டயரைக் கட்டி வச்சுருந்தாலும் கால்வச்சு ஏறும்போது அந்த ரப்பர் அமுங்குவதால் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஒரு பணியாளர் நின்னுக்கிட்டு எல்லாரையும் குறிப்பாப் பெண்களுக்குக் கை கொடுத்து உதவிக்கிட்டு இருந்தார். இங்கே நியூஸியில் உள்ளதைப்போல ஒரு நீண்ட பலகையை வாசப்படிக்கும் ஜெட்டிக்கும் இடையில் கம்பியில் மாட்டிவைச்சால் எல்லாருக்கும் ஏற இறங்கச் சுலபமா இருக்குமே. அதை மாட்டவும் எடுக்கவும் கூடுதல் வேலைன்னு நினைச்சுக்கிட்டாங்க போல நம்மாளுங்க. உள்ளே ஏறுனதும் படகின் அகலம் கண்ணுலே பட்டுச்சு. நடுவில் இடைவெளிவிட்டு ரெண்டு பக்கமும் எட்டு எட்டா இருக்கைகள். பயணத்துலே அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதுகாப்பாக இருக்கணுமுன்னு லைஃப் ஜாக்கெட் எல்லாம் வச்சுருக்காங்க. பயணிகள் அதை எப்படி அணிஞ்சுக்கணுமுன்னு வீடியோவில் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. மக்கள்ஸ் 'அட்வெஞ்சர் ட்ரிப்' போறமாதிரிக் கண்ணுலே லேசான பயம் மினுங்க அதைக் கவனமா எடுத்து அணிஞ்சுக்கிட்டு இருக்காங்க.
படகு கிளம்புச்சு. மூணே நிமிஷப் பயணம். ஆனாக் கரையைத் தொட்டுச் சரியா நிறுத்தவே அஞ்சு நிமிசம் எடுக்குது. அங்கேயும் வெளியே ஒருத்தர் நின்னுக்கிட்டு நம்மைக் கையைப் பிடிச்சு இழுத்துத் தரையில் விடறார். லைஃப் ஜாக்கெட் எல்லாத்தையும் கழட்டித் தரையில் வீசி எறிஞ்சு அதுமேலேயே நடந்து போகுது நம்ம சனங்கள்(-: விவேகானந்தர் நினைவுக் கட்டிடம் பிரமாண்டமாத் தெரியுது.
திரும்பிப்போகும் பயணிகளுக்கானக் காத்திருப்புக்கு ஒரு கூரைபோட்ட வரிசை. பாறையின் மேல் போகும் பாதையில் ஏறிப்போனோம். நினைவு மண்டபம் உள்ளே போய்ப் பார்க்க அங்கே பத்து ரூபாய்க் கட்டணம் கட்டி இன்னொரு சீட்டு எடுக்கணும். இதுக்காக வெயிலில் பத்து நிமிசம் நிக்கவேண்டியதாப் போச்சு. இங்கே வர்றவுங்க எப்படியும் உள்ளே போய்ப் பார்க்கத்தானே போறாங்க? அப்போ படகுத்துறையிலேயே இதுக்கும் சேர்த்து கட்டணம் வசூலிச்சுச் சீட்டு கொடுக்கக்கூடாதா? முடியாதாம். படகுத்துறை தமிழக அரசுக் கட்டுப்பாட்டிலும் விவேகானந்தர் நினைவுக்கட்டிடம் விவேகானந்தர் கேந்திரத்தின் கட்டுப்பாட்டிலும் ரெண்டு வெவ்வேறுவகையான நிர்வாகம்.

ஒருவழியாச் சீட்டெடுத்துட்டு உள்ளே நுழையுமுன்னே இன்னொரு விஷயம். காலணிகளைக் கழட்டிட்டுட்டு போகணும். இலவசமாத்தான் பாதுகாத்துத் தர்றாங்க. ஆனால்..... சூடான பாறையில் கால்கள்..... மாரியாத்தாளுக்குத் தீமிதிச்சது போல! வலது பக்கம் ஒரு மண்டபம். அது ஒரு கோவில் மாதிரி. ஒத்தைக் காலில் நின்னுத் தவம் இருந்தக் குமரி அம்மனின் திருப்பாதம் பாறையில் பதிஞ்ச இடம். சுத்திவரக் கம்பி போட்டுப் பாத தரிசனம், பதிச்சிருக்கும் கண்ணாடியின் வழியே. பூக்கள் வச்சு வழிபாடு நடத்தி இருக்காங்க. இங்கே கண்டிப்பாகப் படம் எடுக்க அனுமதி இல்லை. மண்டபத்தைச் சுற்றி நல்ல வெராந்தாபோல இருக்கு. அதுலே வலம் வரலாம். வெளியே படி இறங்கும் இடத்துக்கு நேரெதிரா விவேகானந்தர் நினைவு மண்டபம். இது ரெண்டுக்கும் நடுவிலும் அங்கங்கேயும் தரையில் வெள்ளையா ஏதோ ஒரு பெயிண்ட் அடிச்சுவச்சுருக்காங்க. அங்கு காவல் பணியில் இருந்த ஒருத்தரிடம் விசாரிச்சேன். , இந்த வெள்ளைமேலே நடந்து போனால் காலில் சூடு தெரியாதாம். அட! நடந்து பார்த்தேன் அவர் சொன்னது உண்மை. அதுக்குப்பிறகு நான் வெள்ளையை விடலைன்னு தனியாச் சொல்லணுமா?
வெள்ளை பெயிண்ட்

நினைவு மண்டபத்தின் முன் கதவுகளை மூடிவச்சுருந்தாங்க. பழுதுபார்க்கும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. கட்டி முடிச்சே 39 வருசம் ஆயிருச்சே. 1970 வது வருசம் திரு.வி.வி. கிரி அவர்கள் குடியரசுத் தலைவரா இருந்த காலக்கட்டம். ரெண்டு பக்கமும் கம்பீரமாக நிற்கும் யானைகளுடன் ஏறிப்போக நிறைய படிகள்.

அதுலே ஏறிப் பக்கவாட்டுக் கதவின் வழியாக உள்ளே போனோம். விவேகானந்தர் நிற்கிறார். அவருக்கு நேர் எதிரா மாடங்களில் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சாரதா தேவி இவர்களின் உருவச்சிலை சின்ன அளவில். அந்த மண்டபத்தில் யாருக்கும் உட்கார அனுமதி இல்லை. வெளியே வந்து படி இறங்கிக் கீழ்த்தளத்தில் போனால் தியானம் செய்யும் இடம் முக்காலரைக்கால் இருட்டில். 'ஓம்' என்ற ஒலி மட்டும் கேக்குது. நேர் எதிர்ச்சுவரில் 16 எம் எம் திரைபோல ஒன்னில் சமஸ்கிரதத்தில் ஓம் என்று படம் வந்துக்கிட்டு இருக்கு. தடவித் தடவி இருக்கையில் அமர்ந்து ஒரு நிமிசம் 'தியானம்' செய்ய முயன்றுத் தோற்றேன். நம்மைத்தாண்டி குறுக்கும் நெடுக்குமா மக்கள்ஸ் நகர்ந்துக்கிட்டே இருக்காங்க. விவேகானந்தர் தியானம் செஞ்சப்ப அவர் மட்டுமே இருந்துருப்பார்! கடலில் நீந்தி வந்து மூணு நாட்கள் இருந்தாராம்.

இந்த மண்டபம், பேலூர் ராமகிருஷ்ணா ஆசிரமக்கோயில் முகப்பில் வடிவமைச்சு இருக்காங்களாம். விவேகானந்தர் சிலை நிற்கும் உள் மண்டபம் எல்லோராக் குகைகளில் இருக்கும் ஸ்டைலாம்.
வெளியே வந்துச் சுற்றிப்பார்த்தோம். அங்கிருந்து கரைப்பக்கம் பார்வையை ஓட்டினால்...... நேர் எதிரில் குமரி அம்மன் ஆலயம், வலப்பக்கம் கழுத்து நீண்ட அன்னப்பறவை போல் வெள்ளையாக நிற்கும் கோபுரத்துடன் ஜொலிக்கும் தேவாலயம், இடது பக்கம் 'க்ளோஸ் அப்'பில் நம்ம அய்யன், கொஞ்ச தூரத்தில் முக்கடல் சேரும் குமரி முனைன்னு காட்சிகள் அட்டகாசம். நினைவகத்தில் அங்கங்கே யானைச் சிற்பங்கள். சூரியனின் பயணப்பாதையில் உத்தராயனம் தக்ஷிணாயனம் எல்லாம் பளிங்குத்தரையில் பதிச்சு இருக்கு. ரசிச்சுப் பார்த்து மயங்கினோமுன்னு இல்லாம வெய்யல் போடும்போட்டில் மயக்கம் வர்றதுபோல இருக்கு.

கிளம்பிப்போகும் வரிசைக்கு வந்து சேர்ந்தோம். படகும் வந்தது. ஏறியும் ஆச்சு. மக்கள்ஸ் அதுக்குள்ளே பயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டாச்சு. யாரும் லைஃப் ஜாக்கெட்டைச் சட்டை பண்ணலை. அதென்னவோ இங்கே காலையில் வந்தது முதலே நியூயார்க் சுதந்திரத் தேவிச்சிலையைப் பார்க்கப்போன நினைவு திரும்பத் திரும்ப வந்துக்கிட்டே இருந்தது. அதை இன்னும் உறுதிப்படுத்துவது போல ஒரு நிமிடத்துக்கும் குறைவான பயணத்தில் அடுத்த தீவில்/பாறையில் இறக்கிவிடப்பட்டோம். அய்யன் இருப்பது இங்கே!


படங்கள் சிவற்றை இங்கே ஒரு ஆல்பத்தில் போட்டுருக்கேன்.

அங்கே தங்கி இருந்த நாலு நாட்களும் ஆன்னா ஊன்னா அய்யனைப் படம் எடுத்துருவேன். கொஞ்சம் கூட முகம் கோணாமல் போஸ் கொடுத்துருவார்.

தொடரும்.......:-)))))

19 comments:

said...

கூட வந்திட்டே இருக்கேன்ல! கன்னியாகுமரிக்குப் போயே 20 வருஷத்துக்கு மேலே இருக்கும். அதெல்லாம் நினைவுக்கு வந்தது..... அடுத்த முறை கட்டாயம் போகணும்னு சொல்லிட்டிருக்கேன். இந்த ஹோட்டல் பரவாயில்ல போலிருக்கு...

நான் தான் முதல் பின்னூட்டமா:-)

said...

வாங்க கெக்கே பிக்குணி.

நான் போயேச் சரியா நாப்பது வருசம் ஆகுது. அப்பெல்லாம் வெறும் மொட்டைப்பாறைகள்தான் அங்கே.

இந்த ஹொட்டேல் ரெஸ்ட்டாரண்டும் நல்லா இருக்கு. விலையும் நார்மல்தான். வசதியா இருக்கு.

ஆமாங்க. நீங்கதான் போணி:-)))

said...

படங்களுடன் அருமையான “அய்யன்” பதிவு.
அந்த வெள்ளை பெயிண்ட் வேறொன்றும் இல்லை.. "Solar Reflective Paint" -சுமார் 1 வருடம் அல்லது 2 வருடங்களுக்கு நல்ல Effect இருக்கும்.
மொட்டை மாடி வீடுகளுக்கு உதவியாக இருக்கும்.

said...

வாங்க குமார்.

எங்கூர்லே சோலார் கார்ட் ன்னு ஒரு பெயிண்ட் விக்குது. ஓஸோன் லேயரில் ஓட்டை இருப்பதால் இங்கத்து வெப்பம் அப்படியே தோலை உரிச்சுருதுன்னு வீடுகளின் எக்ஸ்டீரியர் விஷயங்களுக்கு சோலார் கார்ட்.

இந்த வெள்ளைப்பெயிண்ட் உண்மைக்குமே நல்லாப் பயனாகுது இல்லே? மொட்டைமாடியில் அடிச்சுட்டா வீட்டுக்குள்ளே அனல் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

said...

//ஆரஞ்சுப்பழமா?//

அருமை அருமை

said...

சின்ன வயசில் கன்யாகுமரி பார்த்தது.ஒவ்வொரு தடவையும் ஊருக்கு(ஆழப்புழா) போகும்போதும் போகணும்னு நினைக்கறது..ஆனா போக முடியறது இல்லை. பிக்காஸா ஆல்பம் சூப்பர் டீச்சர்.

said...

அட நாங்களும் அந்த வெள்ளைக்கலர் வாங்கி வெளி சுவத்துக்கு அடிச்சிட்டா எங்க வீட்டுல வெயில் தெரியாதா.. ;)நல்லாருக்கே..

நான் போய் வந்து 13 வௌர்சம் இருக்கும் மறந்தே போச்சு..

said...

நான் அங்க போயி 50 வருஷம் ஆச்சு:)
அநியாயத்துக்கு இப்படி அழகாப் படங்கள் எடுத்துத் தள்ளி இருக்கீங்க.

வெய்யிலுக்கு இப்படி ஒரு வெள்ளைப் பெயின்டா!!இதை மலைப் படிகளில் போட்டால் சோளிங்கர் மலையெல்லாம் சுருக்க ஏறலாமே.
கோவிலிலிருந்து கூட படிகள் கடலுக்கு வருதே. அங்கே உட்கார்ந்து கடலைப் பார்த்துக் கொன்டே இருக்கலாம். தான்கீஸ் பா. நல்லா இருந்தது.

said...

அய்யனை பார்க்க மிகுந்த ஆவலாக இருக்கு.

said...

வாங்க கைலாஷி.

கொஞ்சம்கூட புளிப்பே இல்லேன்னா பாருங்களேன்:-)))))

said...

வாங்க சிந்து.

ஆல்பம் யாரும் பார்க்கலையோன்னு இருந்தேன்.

டாங்கீஸ்:-))))

said...

வாங்க கயலு.

13 வருசமா?

அப்ப அய்யன் அங்கே இருந்துருக்கமாட்டாரே.......

said...

வாங்க வல்லி.

அங்கே போய் ஒரு நாள் உங்க நினைவு வந்துச்சு.

அடுத்த பதிவைப் பாருங்க, புரியும்:-))))

said...

வாங்க கோபி.

சான்ஸ் கிடைச்சா விடாதீங்க.
பேசாம அங்கே ஒரு பதிவர் சந்திப்பு வச்சுறலாமா?

said...

எதைச்சொல்ல எதை விட!.அய்யனை கிட்டே போய் பாக்க சந்தர்ப்பம் கெடைக்கலை.தள்ளி நின்னு பாத்ததோட சரி.ரெண்டு தடவையும் அவர விளக்கு வெளிச்சத்துலதான் பாக்க முடிஞ்சது. முந்தி போனதடவை விவேகானந்தர் பாறையில சூட்டுல கால் சாக்ஸே ஓட்டை விழுந்து போச்சு.

said...

படகு கொண்டு போனவங்க சூரியரை கட்டி இழுத்து வர கயிறு கொண்டு போயிருக்க வேண்டாமா?.அந்த தேவாலயம் உலகப்புகழ் பெற்றது. பெயர் நினைவுக்கு வருது,,, ஆனா வரமாட்டேங்குது.

said...

வாங்க ஐம்கூல்.

அலங்கார மாதா கோவில்.

அவர் லேடி ஆஃப் ரேன்ஸம்னு ஆங்கிலத்தில் எழுதி வச்சுருக்காங்க.

said...

டீச்சர்னா டீச்சர் தான். விளக்கமா எழுதிருக்கீங்க நமக்கு இவ்ளோ விரிவா எழுத முடியாது. :)

said...

செந்தில் தளத்தில் நீங்க கொடுத்துள்ள இணைப்பு வழியாக இங்கே வந்தேன். முழுமையாக வாசித்து விட்டு எப்போது எழுதினீர்கள் என்ற போது கொஞ்சம் ஆச்சரியம். 2009 மே அன்று தான் எனக்கு தமிழ் இணையம் என்பதே தெரிய வந்தது. மறக்க முடியாத ஆண்டு மற்றும் மாதம்.