Sunday, May 31, 2009

இப்போதைக்குக் கோட்டையையும் விடறதா இல்லை கொட்டாரத்தையும் விடப்போறதில்லை .........(2009 பயணம் : பகுதி 31)

புலியூர்குறிச்சிக்கு வந்து சேர்ந்தோமுன்னு சொன்னாவே ஒரு கெத்தா இருக்குல்லே? சரித்திரத்துக்குள்ளே மீண்டும் ஒரு பயணம். இங்கேதான் இருக்கு உதயகிரிக் கோட்டை. தொல்பொருள் இலாக்காவும் வனத்துறையுமாச் சேர்ந்து இதைப் பாதுகாத்துப் பராமரிக்கிறாங்க. உள்ளே போய்ப் பார்க்கச் சின்னதா ஒரு கட்டணம். அஞ்சே ரூபாய்கள்.. கெமெராவுக்கு ஒரு இருவது ரூபாய். உள்ளே சின்னதா ஒரு மூலிகைப் பண்ணையும், அக்வேரியமும், சில உயிரினங்களும் (முக்கியமாப் புள்ளி மான்) நட்சத்திர ஆமைகள் சிலதும் உள்ளே இருக்கு.

வட்டக்கோட்டைச் சரித்திரத்துலே வந்த டச்சுக்காரர் டிலென்னாய்தான் இங்கேயும் ஹீரோ வேஷம் கட்டியிருக்கார். கோட்டைச் சரித்திரத்தைச் சுருக்கமா ரெண்டு அறிவிப்புப் பலகைகளில் எழுதி வச்சுருக்கு அரசு. அதுவுமில்லாமல் இங்கிருக்கும் உயிரினங்களின் பெயர்கள், மரங்களின் பெயர்கள், மூலிகைகளின் பெயர்கள் எல்லாம் ரொம்பவே விவரமா எழுதிப்போட்டுருக்காங்க. இது ரொம்ப நல்ல விஷயம். யாரையும் போய்த் தொணப்பி எடுக்காம நாமே தெரிஞ்சுக்கலாம். நானும் விவரங்களை அப்படியே சுட்டுக்கிட்டு வந்துட்டேன்:-)

நாங்க போன சமயம் நாகர்கோவில் எஞ்சிநீயரிங் கல்லூரி மாணவ மாணவிகள் குழு ஒன்னு வனப்பராமரிப்புக்குன்னு வந்துருந்தாங்க. ஒரு பத்து மாணவிகள் இருந்துருப்பாங்க. கூடவே ஒரு டீச்சர். மாணவர்கள் ஒரு இருபது பேர் இருக்கலாம். அநியாயம் என்னன்னா மொத்தக் குழுவுக்கும் ரெண்டு துடைப்பம், ஒரு மண்வெட்டி. 'வாரியலைச் சும்மாக் கையிலே வச்சுக்கிட்டு நிக்காமத் தரையைக் கூட்டுவது போல போஸ் கொடும்மா'ன்னு சொல்லி வச்சேன்.
துக்கிட்டு இருக்கோமு'ன்னு கலாய்ச்சாங்க. இளரத்தம். பலசாலிகள். பரபரன்னு அவுங்களைவச்சு எவ்வளோ வேலை வாங்கி இருக்கலாம்! நம்மூர்லே எல்லாத்துக்கும் வெறுங்கூட்டம்தான். வேலை ஒன்னும் நடக்கறதில்லை. பராமரிப்புக்குன்னு வரும்போது தேவையானவைகளை அவுங்களே கொண்டு வரலாம். அப்படி இல்லைன்னா வனத்துறை ஏற்பாடு செஞ்சுருக்கலாம். எல்லாம் இந்த 'லாம் லாம்' தான். அரசு இயந்திரத்தின் நகராத பல்சக்கரத்தில் சிக்கிக்கிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
ஒரு உயரமான மரத்துலே உச்சியில் ஒரு குடில் கட்டிவச்சுருக்காங்க. ஒரு சமயத்தில் அஞ்சுபேர் மட்டும் ஏறிப் பார்க்கலாமாம். யானைகளுக்கு அந்த மர ஏணியில் ஏற அனுமதி இல்லை. அதனால் நான் போய்ப் பார்க்கலை. கோபால் போய்ப் பார்த்துட்டு வந்தார்,

பீரங்கி குண்டுகள் தயாரிச்ச உலைக்களத்தின் சிதைந்த பகுதிகள் எல்லாம் இருக்கு. தளபதி டிலென்னாய்யின் கல்லறையும் கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்காம். ஒரே முள்பகுதியாக் கிடக்கு. சின்னதா ஒரு பாதை போட்டு வச்சுருக்கலாம். எல்லாம் பீஸ் ஆஃப் ஹிஸ்டரி!

இவ்வளவு கலாட்டாவிலும் கோட்டை மதிலுக்கு ஏறிப்போகும் படிக்கட்டில் கடலை வறுத்துக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பேர். நம்ம ரமேஷ்வேற, 'படியிலே ஏறிப் பாருங்கம்மா அந்தப் பக்கம் இருக்கும் வீடுகளும் கோட்டை அமைப்பும் நல்லாத் தெரியுமு'ன்னு சொல்லிக்கிட்டே இருக்கார். நாம்தான் 'சிட்டி' ஆளுங்களாச்சே. 'எக்ஸ்க்யூஸ் மீ'ன்னு சொல்லிக்கிட்டு அவுங்களைக் கடந்து போய்ப்பார்த்தோம். பழையகாலத்து வீடுகளின் பின்பக்கப் புழக்கடை வாசல்கள். இன்னொரு இடத்தில் வீட்டின் முன்புறமுள்ள 'வீதி'யில்லாத்த வீதி!
(அகலமில்லாத தெருன்னு மலையாளத்தில்)

'என்ன, ஒன்னும் பேசாம அப்படியே உக்கார்ந்துருக்கீங்க'ன்னு கோபால் கடலைகளை விசாரிச்சார். சின்னதா, மிரட்சியா ஒரு புன்முறுவல். 'மௌனம் பேசுகிறது'ன்னு சொன்னேன்.

முருங்கை , வேம்பு ன்னு மரங்கள். சொர்க்கமரமுன்னுகூட ஒன்னு இருக்கு. ஒரு மரத்தைக் காமிச்சு இது என்ன சொல்லுங்க பார்ப்போம் னு புதிர் போட்டார் ரமேஷ். இலவம் பஞ்சுன்னு சொன்னேன். முழுமார்க் கிடைச்சது.
ஒரு நல்லதண்ணீர் கிணறும், வாளியும் கயிறும். உடனே கோபால் அங்கே ஆஜர்:-) மரத்தோட வயசை எப்படிக் கணக்குப்போடணுமுன்னு ஒரு மரம் வெட்டிக் காமிச்சுருக்கு. பூவுலகில் மிருகங்கள் மனிதர்கள் இப்படி எல்லாருமா இணைஞ்சு இருக்கணுமுன்னு ஒரு இடத்தில் போர்டு & விளக்கம். அறிவிச்சா வேலை தீர்ந்துச்சு. செயல்படுத்தன்னு மெனெக்கெடவேணாம்(-:
அடுத்த இடத்துக்குப் போகும் வழியில் ஒரு அபூர்வ மரத்தைக் காமிச்சார் ரமேஷ். அடுத்த புதிர்.
"மரத்துலே என்ன தொங்குது?"

"தூக்கணாங்குருவிக் கூடுகள்."

"இல்லை"

"அப்ப? நான் ஃபெயிலா?"

"ஆமாம். சரியான விடை: வவ்வால்கள்."

"ஹா..............இத்தனையா? அதுவும் பட்டப் பகலில்"!!!!!!
பத்துநிமிசம்கூட ஆயிருக்காது கோட்டையைவிட்டு. இப்ப என்னடான்னா பத்மநாபபுரம் அரண்மனை முற்றத்தில் நிக்கறோம். பள்ளிக்கூடத்துப் புள்ளைங்க 'இன்பச் சுற்றுலா' வந்துருக்காங்க. மரத்தடியில் 'களபிள'ன்னு பேசிச்சிரிச்சுக்கிட்டு, அப்பப்ப டீச்சர்களின் கண்ணசைவைக் கவனிச்சபடி இருக்காங்க.
அரண்மனையைப் பார்க்கக் கட்டணம் ஒன்னு இருக்கு. ஆளுக்கு இருவத்தியஞ்சு ரூபாய். கெமெராவுக்கு இருவத்தியஞ்சு ரூபாய். இதுவரைக்கும் ஓக்கே. ஆனா வீடியோ கேமெரான்னா மட்டும் ஆயிரத்தைஞ்ஞூறாம். இதென்னடா 'ராஜா' இப்படிக் கொள்ளையடிக்கிறார்!!! நடப்பதுதான் கம்யூனிஸ்ட் ஆட்சியாச்சே......

ராஜாவின் கொட்டாரமுன்னா சினிமாவில் காட்டறதுபோலப் பளாபளா ஜெகஜெகான்னு மினுங்குமுன்னு கற்பனை செஞ்சுக்கவேணாம்.. சாதாரண வீடுபோன்ற முகப்புதான். அறைஅறைகளா நீண்டு போகுது. ஆனா முகப்பில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் மர வேலைகளைப் பார்க்கணும். ஹைய்யோ.... அப்படி ஒரு நுட்பமான செதுக்கல். 408 வருசப் பழமைவாய்ந்த கட்டிடமுன்னு சொன்னாங்க. முழுக்க முழுக்க மரமே மரம்.
ரெண்டு பகுதிகளா அமைஞ்சுருக்கு. நம் கண்முன்னால் ராஜா வூடு.. வலதுபக்கம் இருக்கும் பகுதி தொல்பொருள் காட்சியகம். வீட்டின் முதல்பகுதியா வரவேற்புக் கூடம். இதைப் பூமுகம்ன்னு சொல்றாங்க. விதானத்தில் மரத்தண்டுகளில் பூக்களாவே செதுக்கி வச்சுருக்காங்க. தொன்னூறு பூக்களாம். ஒவ்வொன்னும் ஒரு டிஸைனாம்! முழுக்க முழுக்க மரமே மரம்.
சீனர்கள் அன்பளிப்பாக் கொடுத்த ஒரு நாற்காலி இந்த பூமுகத்தை அலங்கரிக்கறதைப் பார்த்தா....... இப்ப எதைப் பார்த்தாலும் இருக்கும் 'மேட் இன் சீனா' ஒன்னும் புதுசில்லை:-))) இந்த இடத்தைக் கடந்து இடதுபக்கமா இருக்கும் மரப்படிகளில் ஏறிப்போனால் ராஜாவின் ஆலோசனை அரங்கம். இங்கேதான் முக்கியப் பிரமுகர்களைச் சந்திப்பாராம். இந்த அரண்மனை முழுசும் அங்கங்கே தகவல் பலகைகளை வச்சு, மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தின்னு மூணு மொழிகளில் விலாவரியா சரிதம் முழுதும் எழுதி இருக்கு. இதில்லாம அங்கங்கே நம்ம சந்தேகத்தை நிவர்த்திச் செஞ்சிக்க ஏராளமான சேச்சிமார் பணியில் இருக்காங்க. நம்ம ஆளும் சந்தேகம் கேட்டுட்டாரே...... 'சந்திரமுகி ஷூட்டிங் நடந்த இடம் எது'ன்னு:-))))
ஆலோசனை நடக்குமிடங்களில் 'கிளிவாதில்' என்று சொல்லும் சின்னச் சன்னல்கள். நாம் உள்ளே இருந்து கீழே வெளிப்புற முற்றத்துலே நடப்பவைகளைப் பார்க்கலாம். ஆனால் அங்கே இருக்கும் எவருக்கும் நாம் தெரியமாட்டோம். ரகசிய ஆலோசனைகள்தான் போல!! அங்கிருந்து இன்னொரு படி மூலம் கீழ்தளத்திற்குவந்தால் உணவுக்கூடம். ஒரே சமயம் ஆயிரம்பேர் இருந்து சாப்பிடலாம். இதேபோல மாடியிலும் இன்னொரு கூடம் இருக்காம். ரெண்டாயிரம் பேர் ஒருவேளைக்குச் சாப்பிடணுமுன்னா எவ்வளோ ஆக்கி இருப்பாங்க! கூடத்தின் ஒரு பக்கம் பெரிய பிரமாண்டமான சீனச் சாடிகள். ஊறுகாய் போட்டு வச்சுக்கும் பரணி. பள்ளிக்கூடத்துப் பசங்களும் கூடவே வந்துக்கிட்டு இருந்தாங்க. அது என்ன ஜாடின்னு கேட்டேன்...... தெரியலையாம். ஊறுகாய் ஜாடின்னு சொன்னதும் ஊறுகாய் எங்கேன்னு கேக்குதுங்க. இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சேன்னேன்:-)))))
அங்கங்கே திறந்தவெளி முற்றங்களும் கட்டிடங்களுமாப் பரந்து விரிஞ்சு போய்க்கிட்டே இருக்கு மாளிகை. செடிகள், மரங்கள் அலங்காரமாயும் வெய்யில் தெரியாமக் குளுமை தரவுமா நிறைய இருக்கு. பரமரிப்புப் பணிக்குப் பணியாளர்கள் ஏராளம். ஓய்வா உக்காந்து கதை பேசிக்கிட்டு இருந்தாங்க. ச்சும்மாவா? அரமணை உத்தியோகமுல்லே! தென்னை மரங்களும் வளாகம் முழுசும் அடர்த்தியா இருக்கு.
அரண்மனை வளாகத்தின் கட்டிடக்கூட்டங்களின் நடுநாயகமா இருக்கும் நாலுமாடிகள் உள்ளத் தாய்க்கொட்டாரம் உள்ளெ நுழையும்போதே மண்டபத்துலே மர நாகர். மேலே விதானத்தில் மரவேலையில் பூக்களாக ஒரு டிஸைன். அதுலே நடுவிலே ஒரே ஒரு பூ மத்த டிசைனிலே இருந்து வித்தியாசமா இருக்குன்னு விடாமச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நானும் உத்து உத்துப் பார்த்தேன். என் ஓட்டைக் கண்ணுக்கு எல்லாமே ஒன்னாக் கிடக்கு. இவர் சொல்றார் மத்ததுலே மூணு வட்டம் இதுலே ரெண்டுவட்டமாம். சொல்லிச் சொல்லி என்னை வட்டாக்காம விடமாட்டாங்க போல:-) முழுக்க முழுக்க பலாமரத்தில் செஞ்ச மண்டபமாம்.
( மலையாள மொழியில், வட்டு = பயித்தியம்)


உப்பரிகை மாளிகை, அந்தப்புரம், அரசிகளின் படுக்கை அறை, அந்தக் காலத்துப் ப்ரத்யேகக் கழிவறை ( long drop) எல்லாம் முதல் மாடியில் இருக்கு. ரெண்டாம் மாடியில் மகாராஜாவின் படுக்கை அறையில் 64 மூலிகை மரங்களால் ஆன அருமையான கட்டில். நாலுபுறமும் யானைத்தந்தமுன்னு நினைக்கிறேன். அட்டகாசமான வேலைப்பாடு. அங்கிருந்து மேலே மூணாம் நாலாம் மாடிக்குப் படிக்கட்டுகள் இருந்தாலும் நமக்கு அனுமதி இல்லை. மூணாம் மாடி, மகாராஜா தியானம் செய்யுமிடமாயும், நாலாவது மாடி திருவாங்கூருக்கு 'உண்மையான அரசரான சாக்ஷாத் ஸ்ரீ அனந்தபத்மனாப ஸ்வாமி'யே வந்து படுத்துறங்கும் கட்டில் இருக்குமிடமாயும் இருக்காம்.

திருவாங்கூர் சமஸ்தான அரசர்கள் எல்லோரும் வழிவழியா, ஸ்வாமி ஸ்ரீ அனந்தபத்மனாபனின் பிரதிநிதிகளாக மட்டுமேப் 'பத்மனாபதாஸன்' என்னும் பட்டப்பெயர்களோடு. அரசாட்சி செய்கிறார்கள். மாளிகையைச் சுத்தி வரும் வெராண்டா முழுசும் மரத்தடுப்புகளோடு வெளிச்சமும் காற்றும் உள்ளேவர வசதியாவும் அதே சமயம் அரை இருட்டாகவும் இருக்கு.
அம்பாரி முகப்பு

காவல் கோபுரம் உள்ள பகுதி, ஆயுத சாலை, அம்பாரி முகப்பு ( மக்கள் வந்து ஒரு முற்றத்தில் கூடுனா, ராஜா மாடம் வழியாக அவுங்க குறைகளைக் கேப்பாராம்) ஓவியச் சாலை இப்படி எல்லாமும் பார்த்துக்கிட்டே அயல்நாட்டு விருந்தினர்களுக்குக் கட்டப்பட்டப் பகுதிக்கு வந்தோம். இந்திரவிலாஸம்னு பெயராம். கேரளப் பாணியில் இல்லாமல் கொஞ்சம் விஸ்தாரமான படிகள்! அதிலே இறங்கி வெளி முற்றத்திற்கு வந்தால் அடுத்துள்ள ஒரு சிறிய கட்டிடத்தில் கட்டணக் கழிப்பறை! அரண்மனைக் கட்டிடங்களின் சாயலில் கட்டியிருக்காங்க. மாடர்னாக் கட்டுறோமுன்னு ஆரம்பிச்சு இருந்தால் சூழலுக்கு ஒவ்வாமத் துருத்திக் கொண்டு இருந்துருக்கும். நல்லவேளை.

இந்தக் கட்டண அறைகளை இந்தியாவில் பயன்படுத்த இதுவரை சான்ஸே கிடைக்கலை. இங்கே போயிட்டுவந்தால், 'ஒன்னுமில்லெங்கிலும் கொட்டாரத்தில் ஒன்னு போயி'ன்னு பறயாமல்லோ:-))))

"மூத்ரம் ஒழிக்கானோ அல்லது மற்றதோ?" கேட்டது அங்கே ஜோலிக்கு இருந்ந ஒரு வலியம்மே. 'பைஸா பின்னே தந்தோளு'

அதுவும் சரிதான். என்ன ஆகப்போகுதுன்னு போனாத்தானே தெரியும்!!

ஒன் பாத் ரூம் போக ஒரு ரூபாய்

ரெண்டு பாத்ரூம் போக மூணு ரூபாய். ( ஆஹா..... ரெண்டுன்னா அதுலே ஒன் னும் அடக்கம் என்ற கணக்கோ)

குளிக்கணுமுன்னா நாலு ரூபாய்.

டாய்லெட் நல்ல வ்ருத்தியா. கொள்ளாம். தள்ளெயிடம் ஒரு ரூபாய் கொடுத்தேன்.

மகாராஜா குளிக்கும் அரண்மனைக்குளம் பாசிபிடித்துக் கிடக்கு. வளாகத்தில் சின்னதா ஒரு கோயிலும்கட்டி வச்சுருக்காங்க. கடைசியாக வந்து சேர்ந்து இடம் 'ஒருமுறை வந்து பார்த்தாயா?'ன்னு கேட்டது. நவராத்ரி மண்டபம்.

"பார் உன் மனைவி கங்காவைப் பார்.."

"என்ன கொடுமை சரவணன்?"

'ராரா..... சரசக்கு ராரா.....' ன்னு பாட்டு தன்னாலே வாயில் வருது. கஷ்டப்பட்டு வாயைக் கட்டவேண்டியதாப் போச்சு:-)

இத்துனூண்டு சைஸிலே மூணு ஜன்னல்கள்:-))))

அரண்மனை டூர் முடிஞ்சு அருங்காட்சியகம் போனோம். பழங்கால விளக்குகள், பாத்திரங்கள் ஆயுதங்கள், வீரர்களுக்கான கவசங்கள் இப்படி. சிற்பங்களும் நிறைய இருக்கு. ஓவியங்களும் கொஞ்சம் வச்சுருக்காங்க. 'நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் சாகறதை' அங்கே பார்த்தேன்!!!!!

இப்போ ஒரு 95 வருசமாத்தான் மகாராஜா குடும்பம் திருவனந்தபுரத்தில் வசிக்கறாங்க. ராஜ குடும்பம் இப்போ இங்கே இல்லை. நாலாம் மாடியில் சாமி மட்டுமே இருப்பார்.

அரண்மனையில் அங்கங்கே மேற்கூரை பிரிச்சு ஓடு மாத்தும் வேலைகள் நடந்துக்கிட்டே இருக்கு. அரண்மனையின் அளவைப் பார்த்தால் வருசம் முழுசும் இந்த வேலை ஓயாது போல. மக்களுக்குக் காண்பிக்கும் பகுதி மூணில் ஒரு பங்குதான் இருக்கும்.

எல்லாக் கேரளப் பாணியில் உள்ள பழங்கால வீடுகளின் கண்ணாடித்தரைதான் இங்கே முக்கியமான இடங்களில் எல்லாம். என்ன ஒரு மினுமினுப்பு! (அதுவும் சந்தியா நேரத்தில் 'தீபம் தீபம் எனச் சொல்லிக்கொண்டே கையில் பிடிச்ச ஏற்றிய நிலவிளக்குக் கொண்டுவந்து பூமுகத்தில் வச்சவுடன், இருளை விழுங்கி ஒளிவீசும் விளக்கின் ஜோதி அந்தத் தரையில் பிரதிபலிக்கும் அழகு இருக்கே..... சொல்லி மாளாது. கெமெரா என்னும் வஸ்து எட்டாக் கனியா இருந்த காலகட்டத்தின் ஓர்மைகள் இதொக்க)

படங்கள் எல்லாம் சமீபத்திய வழக்கம்போல் ஆல்பத்தில் போட்டுருக்கேன்.

உதயகிரிக் கோட்டை

பத்மநாபபுரம் அரண்மனை



கொட்டாரம் விட்டு வெளியில் வந்தால்....... செவ்விளநீரும் நுங்கும் கிடைச்சது.

தொடரும்..................:-)))))

12 comments:

said...

வேலைக்கு போகிற நேரத்தில்...முழுவதுமாக படிக்கமுடியவில்லை,பிறகு வருகிறேன்.வீடியோ கேமிராவுக்கு 1500 ரூபாயா? அனியாயமாக இருக்கு.

said...

எம்மா .. மஹா பெரிசு இந்த அரண்மனை!!!! என்ன ஒரு விஸ்தாரம். கால் வலிச்சுதோ துளசி!!
குளம் ஒண்ணு இல்லையா. ராஜாக்கள் ராணிகள் குளியலுக்குப் பிரத்தியேகமா குளம் இருக்கும்னு நினைச்சென்.

செவ்விளநீர் குடிக்க ந்ல்லா இருந்ததா.
அது ஊறுகாய் ஜாடிதானா. வேற ஏதோன்னு நினைச்சேன்:)

said...

நான் சிறுவயதில் நாகர்கோயிலில் இருந்தபோது பார்த்தது. இப்போ மூன்றில் ஒரு பகுதி தான் பார்வைக்கென்றால் முழுதும் பார்த்தால்.. :)

Anonymous said...

நான் மணிச்சித்ரத்தாழ் பாத்தேன். அதிலயும் அதே கோட்டைன்னு தான் நினைக்கறேன்.

said...

டீச்சர் நலமா?
எங்க ஏரியா பக்கம் வரை வந்திருக்கீங்க. ஒரு மெயிலை தட்டியிருந்தா ஒத்தாசைக்கு வந்திருப்பம்ல.

said...

வாங்க குமார்.

மெள்ள வாங்க. இங்கேதானே இருக்கப்போகுது:-)))

இனி கொஞ்சநாள் போனால் வீடியோ கெமெரா விலையே டிக்கெட்டுக்குக் கேப்பாங்க போல!

said...

வாங்க வல்லி.

ஆமாம்ப்பா. அன்னிக்குச் சுத்துன சுத்தலுக்கு அளவே இல்லை!

அரண்மனைக் குளம் ஆல்பத்துலே இருக்கேப்பா.

said...

வாங்க கோமதி.

நிறைய இடங்களில் ஓடு பிரிச்சு மேய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க.
அதனால் பார்வைக்கு வச்சுருக்கும் இடங்கள் குறைவு போல இருக்கு.

ஆனாலும் இதுவே நிறையதான்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

மணிச்சித்திரத்தாழில் மட்டுமில்லைப்பா, அதன் எல்லா ரீமேக்குகளில் இதே மூணு சன்னல்கள்தான்:-)

said...

வாங்க ஆடுமாடு.

எங்கே ஆளையே காணொம் ரொம்ப நாளா? மேய்ச்சலுக்கு போயிட்டீங்களா?
அப்ப எங்கேன்னு மெயிலைத் தட்டிவிடறதாம்?

சமீபத்துலே ஒரு படத்துலே டைட்டில் பார்த்தப்ப உங்கே பெயர் இருந்ததைப் பார்த்தேன். நீங்கதானோன்னு ஒரு சம்சயம்.

said...

கோட்டை நல்லா இருக்கு.விவரங்கள் அருமை.டீச்சருக்கே மார்க்கா?. ரமேஷ் ஆளு கொள்ளாம்:-)) கொட்டாரம்...கலையழகு மிக்க இடம்.மணிச்சித்திரத்தாழு,வருஷம் 16 ரெண்டும் இங்கேதான் எடுத்தாங்க.சேச்சிகளும் கொட்டாரத்த சுத்தி காட்டும்போது நல்ல விவரமா சொல்வாங்க(இங்கேதான் இந்த சீன் எடுத்தாங்க.. ).ஆனா இப்போ நெறய இடங்கள்ள no entry போட்டிருக்காங்க.
வீடியோவுக்கு வெலை ஜாஸ்திதான். காம்பவுண்டுக்கு உள்ளே கூட எடுக்க கூடாது.
//'ராரா..... சரசக்கு ராரா.....' ன்னு பாட்டு தன்னாலே வாயில் வருது. கஷ்டப்பட்டு வாயைக் கட்டவேண்டியதாப் போச்சு:-)//
பாடிட வேண்டியதுதானே:-). லக லக லகன்னு சவுண்டு விட அண்ணனுக்கு தெரியாதா என்ன:-))

said...

வாங்க ஐம்கூல்.

கூடவே (என் பாட்டுக்கு) ஆடிக்கிட்டு இருந்த கோபாலை இப்படி வில்லனா ஆக்கலாமா? :-)))))