Friday, July 31, 2009

மகம் பிறந்த மங்கை!

கேக் வெட்டிக் கொண்டாடலாமா? கோயிலுக்குப் போய் வரலாமான்னு பலவிதமாச் சிந்திச்சுப் பார்த்துட்டு, 'பர்த்டே கேர்ள்' கிட்டேயே என்ன செய்யலாமுன்னு விசாரிச்சாப் பதில் வருது ஆயிரம் வேணுமாம். கொடுத்தால் ஆச்சு. ஆமாம்....எந்த ஆயிரம்? நாதமுனிகள் ரேஞ்சுலே கேட்டாங்க.

வீரநாராயணபுரத்திலிருந்து நான்குபேரை வரவழைக்க ஏற்பாடானது.

எந்த வீரநாராயணபுரம்? அதான் பொன்னியின் செல்வனில், முதல் அத்தியாயத்தில் வந்தியத்தேவன் குதிரை மீதமர்ந்து வரும் அதே வீரநாராயணபுரம்தானாம்! இப்போ அதன் பெயர் காட்டு மன்னார் கோவில். மன்னார் சரியான காட்டாளா இருப்பாரோ? ச்சேச்சே..... காட்டும் மன்னார் கோவில் என்பதுதான் காட்டுன்னு ஆகிப்போச்சு.

எதைக் காட்டுனாராம்? (நம்ம புத்தி குறுக்காத்தானே வேலை செய்யும்?)

பிரபந்தங்களைத்தான். வேறென்ன?

சரி... கதையைப் பார்ப்போம்.

இந்த வீரநாராயணபுரம்தான் ஸ்ரீ நாதமுனி ஸ்வாமிகள் அவதரித்தத் திருத்தலம். இவருடைய தந்தை ஈஸ்வரபட்டர், இவருக்கு வச்ச பெயர் ரங்கநாதன். கோவிலில் சாமி கைங்கர்யம். வாழ்க்கை இப்படிக் கடவுளோடு போய்க்கொண்டிருந்த சமயம், வேற ஊரில் இருந்து வந்த ஒரு பக்தர்கள் கூட்டம், திருவாய்மொழியில் பத்துப் பாடல்களை, 'ஆராவமுதே, அடியேன் உடலம் நின்பால் அன்பாயேன்னு தொடங்கி, குருகூர்ச்சடகோபன் குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத் தீரவல்லார் காமர்மானேயநோக்கியர்க்கே'ன்னு பாடறதைக் கேட்டார். ஓராயிரத்துள் இப்பத்து என்ற வார்த்தை , 'சட்'ன்னு மனசுக்குள் போய் பத்த வச்சுருச்சு.

இப்பப் பாடுன பாட்டில் உள்ள ஓராயிரத்துள் பத்து இதுன்னா பாக்கி தொளாயிரத்துத் தொன்னூறு எங்கே? தெரிஞ்சா அதையும் பாடுங்கன்னார்.

நாங்க, எங்க ஊர் வழக்கபடி அந்தக் காலத்துலே இருந்து வழிவழியாப் பாடிக்கிட்டு இருக்கும் இந்தப் பத்துப் பாட்டுதான் தெரியும். இந்த ஓராயிரத்துள் இருக்கும் பாக்கியைப் பத்தித் தெரியாது. குருகூர் சடகோபன்னு இதுலே வர்றது பாருங்க. அந்தக் குருகூர்லே போய்க் கேட்டால் ஒருவேளை தெரியும்னு சொல்லிட்டாங்க.

திருக்குருகூர்ன்னு ஒரு ஊர் இருக்குன்ற விவரம் கிடைச்சு அங்கே போனார். அங்கே இங்கேன்னு விசாரிச்சார். விவரம் சரியாக் கிடைக்கலை. அப்போ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்யர் ஒருவரைச் சந்திக்கிறார். 'ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எல்லாம் எக்கச்சக்கமா இருக்குன்னாலும், எங்கே யார்கிட்டே இருக்குன்னு ஒரு பிடியும் கிடைக்கலை. ஆனா என் குருநாதர் பாடுன பதினோரு பாடல்கள் இருக்கும் ஓலைச்சுவடி என்னாண்டை இருக்கு. அதுலே பெருமாளைப் பற்றி ஒன்னுமே இல்லை. எல்லாமே அவரோட குருவான நம்மாழ்வார் மேல் பாடுன பாட்டுக்கள்தான்'னார்.

'கண்ணிநுண்சிறுத்தாம்பு'ன்ற தொகுப்பில் பாடல்கள். இதைமட்டும் பனிரெண்டாயிரம் முறை மனமுருகப்பாடினால் சாக்ஷாத் நம்மாழ்வாரே தரிசனம் தருவார்ன்னு நம்பிக்கை. நீ வேணுமுன்னால் முயற்சி செஞ்சு பாரேன்னார். (நம்ம நவதிருப்பதி தரிசனத்தில் ஆழ்வார் திருநகரியில் உறங்காப்புளின்னு திருப்புளி ஆழ்வார்ன்னு ஒரு புளியமரம் பற்றி எழுதுனது நினைவில்லாதவங்க கை தூக்குங்க)

கோயில் தலவிருட்சமான இந்த மரத்தடியில்தான் நம்மாழ்வார் அவர்கள் தவம் செஞ்சாராம். அப்போதான் மதுரகவி ஆழ்வார் அவரைத் தேடிவந்து குருவாக ஏற்றுக்கொண்டார். குருவின்மேல் வச்ச அதீத பக்தியால் பாடுனதுதான் மேலே குறிப்பிட்டக் 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' ........

திருப்புளி ஆழ்வார் முன் அமர்ந்து இடைவிடாது மூணு பகலும் மூணு இரவும் சேர்ந்தாப்புலே இந்தப் பாடல்களை பனிரெண்டாயிரம் முறை பாடினார் நம்ம ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள். பக்தியைப் புரிஞ்சுக்கிட்ட ஸ்ரீ நம்மாழ்வார் அவர் முன் தோன்றி,' என்ன வேணுமு'ன்னு கேட்க, அதுக்கு இவர்,
'நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முழுசும் வேணும். அதுக்குப் பொருளும் சொல்லணுமு'ன்னு விண்ணப்பித்தார். அப்படியே ஆச்சு. அதுக்குப்பிறகு வீரநாராயணபுரம் திரும்பிவந்த நாதமுனி ஸ்வாமிகள், மக்களுக்கு எல்லாம் திவ்யப்பிரபந்தத்தைச் சொல்லி, ராகத்தோடு பாட்டாகப்பாடி இறைவனை ஆடல்பாடலோடு வணங்கும் வழக்கத்தை உண்டாக்குனார், இதுதான் அரையர் சேவையா ஆகி இருக்காம்.

நாலாயிரம் பாடல்களில் நம்மாழ்வார் ஒரு ஆயிரம் பாடல்களும், (அதுக்கு மேலேயேன்னு கூகுளாண்டவர் சொல்றார்) திருமங்கை ஆழ்வார் ரெண்டாயிரம் பாடல்களும் மற்ற ஆழ்வார்கள் பத்துப்பேரும் சேர்ந்து ஒரு ஆயிரமும் பாடி இருக்காங்களாம். இந்தக் கதையும் விவரங்கள் எல்லாம் நம்ம' பர்த்டே கேர்ள்' கிட்டேக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது தான்.

இந்த வீரநாராயணபுரத்து ஏரிக்கரையில்தான் நம்ம பொன்னியின் செல்வரின் வந்தியத்தேவன் நமக்கு அறிமுகம் ஆறார். உங்களுக்கெல்லாம்கூட இந்த ஏரியைத் தெரிஞ்சிருக்கும். செய்திகளிலாவது படிச்சு இருப்பீங்க. இதுதாங்க வீராணம் ஏரி.

ஆடி மாசம் மகம் நட்சத்திரத்தில் பிறந்த இவுங்களோட சொந்த ஊர் இதே காட்டுமன்னார்குடிதான். இந்த ஊரைக் காட்டுமன்னார்கோவில் என்றும் சொல்றாங்க. அங்கே இருக்கும் பெருமாள் கோவிலில் திருவாய்மொழியில் 'ஆராவமுதே' தொடங்கிப் பத்துப் பாடல்களைச் சலவைக்கல்லில் பொறிச்சுச் சுவர்களில் பதிச்சக் கைங்கர்யத்தைச் செஞ்சவர் இவரோட அப்பா. அவருடைய சதாபிஷேகத்துக்குக் கலசம் வைக்க வாங்குன குடம், இன்னிக்குப் பூஜையில் வச்சுருந்தாங்க.
கலசம்

அந்த நாலு பேர்
நாலு பேர் வந்து இறங்கினாங்க. குழுவுக்குத் தலைவர் பெயரைக்கேட்டதும் ஆடிப்போயிட்டேன்! திருமங்கை ஆழ்வார் !!! . கலசம் அலங்கரிச்சுப் பூஜையில் வச்சு முதலாயிரம் படிக்க ஆரம்பிச்சது மகம் நாளில். அன்றைக்கு எட்டு நூறு முடிஞ்சது. மறுநாள் ஆடிப்பூரம். அன்னிக்கு பாக்கி 200 படிச்சு, ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் விசேஷ பூஜை செஞ்சு ஆண்டாளுக்குச் சீர்வரிசையெல்லாம் தலையில் சுமந்துவந்து கொடுத்து, அமுதூட்டி, தீபாராதனை, துளசிப் பூஜை எல்லாம் நடந்து முடிஞ்சது.



ஆண்டாள் சீர்
துளசி பூஜை

நாலு மகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள், ரெண்டு மகள்கள், மருமகன்கள், அவுங்க குழந்தைகள், மூணாவது மகளா நானும், மருமகனாக் கோபாலும் கலந்துக்கிட்டோம். வீடே கலகலன்னு இருந்துச்சு.

பூஜை முடிஞ்சு ஆசீர்வாதங்கள் ஆச்சு. அப்புறம் பிரசாதவகைகள், விருந்து சாப்பாடுன்னு அட்டகாசம் போங்க.
பரிவட்டம்?

இப்போதையக் காலக்கட்டத்துலே, இப்படி நல்ல நாட்கள் வரும்போது பெரிய குடும்பமா எல்லோரும் சேர்ந்து அரட்டையும் கலாட்டாவுமா மகிழ்ச்சியா இருப்பது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. நம்ம பர்த் டே கேர்ள்க்கும் கண்ணுலே தண்ணி நிறைஞ்சுபோச்சு. பொன்னியின் செல்வனையும் நந்தினியையும், குந்தவைப்பிராட்டியையும், வந்தியத்தேவனையும் யாருமே மறக்கலை. பேச்சு பூராவும் இவுங்கதான். ஆழ்வார்க்கடியானையும் விடலை:-)
ஓடி ஆடிக் களைச்சுப்போனக் குட்டீஸ்களுக்குக் கதை சொல்லி......

'குடும்பத்தைக் கட்டிக் காத்து எவ்வளோ நல்லது செஞ்சுருக்கீங்க. உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோமு'ன்னு, மாமியாரைப் பாராட்டி அண்ணன் சொன்னதும், நாங்கள் எல்லாம் சேர்ந்து 'ஹேப்பி பர்த் டே டு யூ' பாடுனோம்:-))))
வாழ்த்த வயதில்லை....


அண்ணன் பதிவர் இல்லை...ஆனாலும் எப்படி நம்ம டயலாக் எல்லாம் தெரிஞ்சதுன்னு........... சென்னையில் ஒரு டிஜிட்டல் பேனரை விடறதில்லை போல:-))))
மகம் பிறந்த மங்கையுடன் கட்டுரை ஆசிரியை:-)


மகம் பிறந்த மங்கைக்கு வயசு அதிகம் ஒன்னும் இல்லை. ஜஸ்ட் 80தான்.

வணங்கி ஆசிகள் பெற்றோம்.

பி.கு: இவுங்ககிட்டே நிறையக் கதைகள் இருக்கு. பேசாம நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரதைஞ்ஞூற'லே சேர்த்துக்கலாமா?

29 comments:

said...

அருமையோ அருமைம்மா..

ஆரம்பித்து முடியுற வரை தெரிந்த விஷயங்களையும் ரொம்ப ஆவலோட சொல்லிருக்கீங்க..

முதல்ல பாட்டியின் பாதத்தில் 4 முறை சேவிச்சுக்குறேன்.

said...

//அன்றைக்கு எட்டு நூறு முடிஞ்சது. மறுநாள் ஆடிப்பூரம். அன்னிக்கு பாக்கி 200 படிச்சு, ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் விசேஷ பூஜை செஞ்சு ஆண்டாளுக்குச் சீர்வரிசையெல்லாம் தலையில் சுமந்துவந்து கொடுத்து, அமுதூட்டி, தீபாராதனை, துளசிப் பூஜை எல்லாம் நடந்து முடிஞ்சது.//

திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார் அப்புடின்னு கே.ஆர்.எஸ் சொல்வார்.. அது எவ்வளவு உண்மைன்னு ஒரே ஒரு பாசுரத்தைப் படிச்சாலே தெரியும்.. அதிலும் சந்தை முறைப்படி கேட்கும்போது அதன் இன்பம் நம்மை அறியாமெலே புத்தகத்தைப் பார்த்தாவது அதே ராகத்தில் சொல்ல வைக்கும்.

said...

80 வயது கண்ட அன்னைக்கு முதலில் வணக்கங்கள்.

//இவுங்ககிட்டே நிறையக் கதைகள் இருக்கு. பேசாம நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரதைஞ்ஞூற'லே சேர்த்துக்கலாமா?//

சீக்கிரம் கதைகளை கேட்டு போடுங்கள்.

ஒரு சின்ன சந்தேகம்.துளசி மாடத்தில் மஞ்சள் வளர்வதுக்கு ஏதாவது ஆன்மீக

காரணம் உண்டா?

said...

எண்பதுக்கு எண்பது பார்த்த அன்னையை வணங்குகிறேன்.
எங்க அம்மாவுக்குக் கூட இந்த வருஷம் 80 ஆகியிருக்கும்.

பிரபந்தம் படித்தது

எஸ்பெஷலி,
''கண்ணீன் நுண் சிறுத்தாம்பு''
படிக்கக் கேட்டால் நன்றாக இருக்கும்.

said...

பாட்டிக்கு வணக்கங்கள் ;)

இந்த பாட்டியை பார்க்கும் போது அவுங்க குடும்பத்தை பத்தி படிக்கும் போதும் எங்க வீட்டு பாட்டி ஞாபகம் வருது.

கடைசி பேத்தியோட பெண்ணுக்கிட்ட விளையாடிக்கிட்டு இருக்காங்க ;)

said...

திரு ஆடி மகத்தில் ஜெகத்து உதித்தாள் வாழியே! :)

மகம் பிறந்த மங்கையை உங்களுடன் சேர்ந்து நானும் வணங்கிக் கொள்கிறேன் டீச்சர்!

//திருப்புளி ஆழ்வார்ன்னு ஒரு புளியமரம் பற்றி எழுதுனது//

பாத்தீங்களா? மரத்தில் கூட ஒரு ஆழ்வார் இருக்காரு! :)

said...

நாங்க இங்கேயே ஆசிர்வாதம் வாங்கிக்கிறோம்.

நான் கையை தூக்கிட்டேன் :)

said...

பாட்டிக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

'செஞ்சுரி'யில் சிறப்பு பதிவிட ஆண்டவன் அருள்புரிவானாக !

நல்லதொரு குடும்ப நினைவுகளை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்,மற்ற குடும்பத்தாருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

said...

பாட்டிக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

'செஞ்சுரி'யில் சிறப்பு பதிவிட ஆண்டவன் அருள்புரிவானாக !

நல்லதொரு குடும்ப நினைவுகளை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்,மற்ற குடும்பத்தாருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

said...

"இந்தக் கதையும் விவரங்கள் எல்லாம் நம்ம' பர்த்டே கேர்ள்' கிட்டேக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது தான்". வாழ்த்துக்கள்.

நலமுடன் வாழ்க.

said...

வாங்க ராகவ்.

பாட்டிக்கு உங்க நமஸ்காரங்களைச் சொல்லியாச்சு.

ஆசீர்வாதம் பண்ணினாங்க.

திருவாய்மொழியைக் காதில்கேட்டதில் புண்ணியம் கொஞ்சமும் சேர்ந்தது.

said...

வாங்க ஐம்கூல்.

மஞ்சள் வேணுமுன்னா துளசி தானே எடுத்துக்கட்டுமுன்னு கைக்கு எட்டும் தூரத்தில் வச்சுட்டாங்க போல:-)))

said...

வாங்க வல்லி.

உங்க வணக்கம் அத்தைக்குப் போயாச்சு.

said...

வாங்க கோபி.

முந்தியெல்லாம் வீட்டுவீட்டுக்கு இப்படி ஒரு பாட்டி இருப்பாங்க. எவ்வளோ கதை கேட்டு வளர்ந்தோம்.

இப்போதையச் சந்ததிகளுக்குத்தான் நமக்குக் கிடைச்ச வாய்ப்பு இல்லாமப் போச்சு.

இப்ப பாட்டியானாலும் சரி பேரக்குழந்தைகள் ஆனாலும் சரி டிவி பொட்டிதான் கதி(-:

said...

வாங்க கே ஆர் எஸ்.

உங்க வணக்கம் போற இடத்துக்குக் கரீட்டாப் போய்ச் சேர்ந்துருச்சு.

பெருமாளை நினைச்சால், நமம கண்ணுலே படும் எல்லாமே ஆழ்வார்கள்தான். மரமானால் என்ன..கல்லானால் என்ன?

காணும் பொருள்யாவும் அவன் தோற்றம்.

said...

வாங்க நான் ஆதவன்.

ஆசிகள் வழங்கிட்டாங்க.

said...

வாங்க துபாய் ராஜா & சென்ஷி.

செஞ்சுரி எல்லாம் டூ மச். இருக்கும்வரை நோய்நொடிகள் ரொம்பப் படுத்தாமல் இருக்கணும் என்பதுதான் அவுங்க வேண்டுதல்களாம்.

ஆசீர்வாதம் செஞ்சாங்க.

said...

வாங்க மாதேவி.

ரொம்ப சந்தோஷப்பட்டாங்கப்பா, இப்படி முகம் தெரியாத அன்பர்கள் வாழ்த்துச் சொன்னதுக்கு.

நன்றி.

எல்லாருக்கும் ஆசிர்வாதமுன்னு சொல்லச் சொன்னாங்க.

said...

பாட்டிக்கு வாழ்த்துக்கள்..:)

said...

ஆஹா,

எங்களின் வணக்கங்கள்

said...

டீச்சர் என் பொண்ணோட நடனம்/பாட்டு முடிஞ்சா பாருங்க.

said...

TEACHER AMMA NEENGA UNGA ATHULA PANNA KOSTI POOJAI PADAM POTINGA ANNA ANTHA ITHULA PANNA AKKARA ADISIL(SAKKARAI PONGAL) PLUS PULIAYOTHARAI PADAM POTINUNTHA NALLA IRUKKUM. MAGAM PIRANTHA MANGAI PERIAYAVA KITTA INTHA MAGAM PIRANTHA MAGANIN NAMASHKARAM.

PALLANDU PALLANDU VALLA MANIVANNA UN ARUL KIDAIKKUM.

said...

நமஸ்காரம் பண்ணிக்கிறேன்!

said...

வாங்க கயலு.

பாட்டிக்குச் சொல்லிட்டேன்:-)

வாழ்த்த வயதில்லைன்னாலும் வாழ்த்துனீங்கன்னு:-))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

வணக்கங்கலை அத்தைக்கு அனுப்பிட்டேன். அவர்கள் சார்பில் நன்றி.

said...

வாங்க குடுகுடுப்பை.

பொண்ணு சூப்பரா இருக்காள்.

பால க்ருஷ்ணி.

நல்லா இருக்கட்டும்.

பின்னூட்டத்தை வெளியிட்டுட்டேன். நம்ம மக்கள்ஸ் கண்ணுலே படட்டுமுன்னுதான்:-))))

said...

வாங்க இம்சை இளவரசனே.

மகம்பிறந்த மங்கனின் நமஸ்காரங்கள் ம.பி.மங்கைக்குச் சேர்ப்பிக்கப்பட்டன.

சக்கரைப்பொங்கல்,புளியோதரை, சுண்டல் இதெல்லாம் இல்லாம கோஷ்டி எப்படி?

நாந்தான் படம் போடலை(-:

said...

வாங்க ஜோ.

அத்தையம்மாவுக்கு நமஸ்காரம் போய்ச் சேர்ந்துச்சாம். ஆசி சொல்லச் சொன்னாங்க.

said...

பதிவு மிக அருமை.
உங்கள் அத்தை மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் பிறந்தநாளுக்கு வீரநாராயணபுரத்திலிருந்து நான்குபேர் வந்து ஆயிரம் வழங்கியது.

பொன்னியின் செல்வனையும் வீரநாராயணஏரியையும் அதன் கரையில் குதிரையில் வந்த வந்தியதேவனையும் மறக்க முடியாது.

’வந்துவிட்டான் வந்தியதேவன்’ என்று விள்ம்பரம் வருகிறதுவிஜய் டிவியில்.
ஆகஸ்ட் மூன்று கல்கியில் மீண்டும் வருகிறது பொன்னியின் செல்வன்.