Wednesday, August 19, 2009

துளசி விலாசில் அஜந்தா ஆப்பச்சட்டி

இதுவரையில் குழியான ஒரு கடாய்/வாணலியில்தான் இந்த வஸ்துவைத் தயாரிச்சுக்கிட்டு இருந்தேன்.
சிங்காரச்சென்னையில் சரவணபவனில் ஒருநாள் ஆப்பம் தின்ன கையோடு ஆப்பஜுரம் வந்துருச்சு. ஆப்பம் செய்யும் ப்ராப்பர் பாத்திரம் ஒன்னு வாங்கிக்கணுமுன்னு சொல்லி வாயை மூடலை, கண்ணெதிரே கடை. உணவகம் பக்கத்துலே நாலைஞ்சு கடை தாண்டி இருந்த பாத்திரக்கடையிலே நுழைஞ்சு விசாரிச்சதுலே கிடைச்சது அஜந்தா ஆப்பச்சட்டி. சின்னதா அழகா இருக்கு. இதுக்கு ஒரு துணை இருக்கட்டுமேன்னு, ப்ரிமியர் குழியப்பச் சட்டி ஒன்னும் வாங்கினோம்.


அந்தக் காலத்துலே எங்க வூட்டுப்பின்னாடி ஒரு ஆயா ஆப்பம் சுட்டுப் பொழைச்சுக்கிட்டு இருந்தாங்க. தினம் கல்லுரலில் மாவு மய்ய அரைச்சு வைப்பாங்க. சிலநாள் காலையில் அங்கேபோய் வேடிக்கை பார்ப்பேன். வாயகலமான மண் சட்டி ரெண்டு. ஒன்னுலே தீக்கங்கு இருக்கும். மாவு ஊத்தி ஆப்பம் சுடும் சட்டியில் கொஞ்சமா எண்ணெய் தொட்டுத் தேச்சுட்டு நீர்க்க இருக்கும் மாவை ரெண்டு கரண்டி மோந்து ஊத்திட்டு சட்டியை ரெண்டுபக்கமும் பிடிச்சு அப்படியே ஒரு சுழற்று சுழற்றுவாங்க. திருப்பி அதை அடுப்பில் வச்சுட்டு மேல்மூடியாத் தீக்கங்கு இருக்கும் சட்டியால் மூடுவாங்க. ரெண்டே நிமிஷம். சிறகை விரிக்கும் வெண்புறா போல சட்டியை விட்டுத் தானே கிளம்பிவரும் ஓரங்களைப் பிடிச்சு வெளியே எடுத்துருவாங்க. இதுலே சிலர் முட்டையைக் கொண்டுவந்து கொடுத்து முட்டையாப்பம் போட்டுவாங்கிக்கறதும் உண்டு. தொட்டுக்கன்னு ஒரு தேங்காப்பால். பாலுன்னு சொல்லமுடியாத பால்நிறத் தண்ணி. அதுலே ஏகத்தும் சீனி போட்டுக் கலந்து வச்சிருப்பாங்க. அதுலே ஒரு கரண்டி மோந்து ஆப்பத்தின் தலையில் ஊத்துனா சுவையான ஆப்பம்.

செட்டிநாடு உணவு வகைகள்ன்னு இப்போச் சென்னையில் எங்கே பார்த்தாலும் புது மவுஸ் ஏறிக்கிடக்கு. ஆப்பத்துக்குக் குருமான்னு ஒன்னும் கொடுக்கறாங்க. நல்ல வேளையாச் சாய்ஸ் இருக்கு என்னைப்போல காரம் ஆகாத ஆட்களுக்கு. தேங்காய்ப் பால். ஆயாக் கடைப் பாலைவிடப் பரவாயில்லைன்னு சொல்லத்தக்க ரகம்.

துளசி விலாஸ் ஆப்பத்துக்குன்னே ஒரு ரசிகர் இருக்கார். எனக்கு ஆப்பம் செய்யத் தெரியுமுன்னு சொன்னதும் மலர்ந்த முகத்தை நீங்க பார்த்திருக்கோனும். அவர் ஒரு மருத்துவர் என்பதும், தற்சமயம் ஆஸியில் இருக்கார் என்பதும் இங்கே கூடுதல் விவரம். நம்ம ஆப்பம் ஹெல்த் சர்ட்டிஃபிகேட் வாங்கிருச்சு. இதெல்லாம் ஒரு 28 வருசத்துக்கு முன்னால் நடந்த 'கதை'

நவநாகரிகமானப் புதுச் சட்டி வந்தவுடன் ஆப்பத்தை விடறதில்லைன்னு அரைச்சு வச்சேன். அன்று சில தோழிகளுடன் வெளியே போயிட்டு வந்தப்ப...... அவசரமில்லைன்னா வீட்டுக்குள்ளே வந்துட்டுப் போங்க. சோதனை இருக்குன்னதும் ஆடிப்போயிட்டாங்க. மனோதைரியம் இல்லாத மக்கள்ஸ்(-: வீட்டிலே இல்லாத வேலையையெல்லாம் மனக்கண்ணில் கொண்டுவந்து, 'ரொம்ப அவசரமாப் போகவேண்டி இருக்கு. இன்னொரு நாள் வரேன்'னாங்க. ஆப்பம் தின்ன அதிர்ஷ்டம் இல்லை(-:

புதுச்சட்டியில் செஞ்சுப் பார்த்தப்பச் சூப்பரா வந்துச்சு. வெறும் பாலைக் காய்ச்சி அதோடு தின்னு பார்த்தேன். அதி சூப்பர்.

மறுநாள் இதுக்குத் தோதா ஒரு தொட்டுக்க வேணுமேன்றக் 'கவலை'யில்
கொத்தமல்லி & புதினா சேர்த்து ஒரு சட்டினி அரைச்சேன். என்னை (முதல்முதலா)சந்திக்க வந்த தோழி ஆப்ட்டாங்க ஆப்பப் பரிசோதனைக்கு.

வெற்றி வெற்றி முழு வெற்றி.(சட்னி ரொம்ப நல்லா இருக்காம்)

ஆப்பம் செய்முறை:

தேவையானப் பொருட்கள்.

இட்லிக்குப் பயன்படும் புழுங்கல் அரிசி: அரைக் கப்

சோறு ஆக்கப் பயன்படும் பச்சை அரிசி: அரைக் கப்

உளுத்தம் பருப்பு : ஒரு மேசைக் கரண்டி ( ரெண்டு தேக்கரண்டி)

உப்பு: முக்கால் தேக்கரண்டி

விருப்பப்பட்டால்: தேங்காய் கால் மூடி. சில்லுன்னா ஒரு நாலைஞ்சு.


முதல் மூன்று பொருட்களை இரவில் படுக்கைக்குப் போகுமுன் ஊறவைக்கவும். இப்பவே நல்லாக் கழுவிட்டால் வேலை சுலபம்.

மறுநாள் லேசாக ஒருமுறை கழுவிட்டு மிக்ஸியில் போட்டு நல்லா அரைச்சு எடுத்துக்குங்க. தேங்காய் சேர்ப்பதா இருந்தால் முதலில் தேங்காயைப் போட்டு அரைச்சுக்கிட்டு அப்புறம் அரிசிக் கலவையைப் போடணும். நல்ல மைய்யா மசியணும். உப்பு சேர்த்துக் கலக்கி எடுத்து வச்சுருங்க. அடிக்கிற வெயிலுக்கு சுலபமாப் பொங்கிரும் இந்த மாவு.

அடுப்பில் ஆப்பச் சட்டியை ஏத்தி ஒரு துளி எண்ணெய் விட்டுக் கிச்சன் பேப்பரால் லேசாத் துடைச்சுக்குங்க. மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நல்லாக் கலக்கிக்கணும். தோசை மாவைவிடக் கொஞ்சம் நீர்க்க இருக்கணும்.அதுக்காக விளாவிடக்கூடாது:-)
ரெண்டு கரண்டி மாவை நடுவில் ஊத்திட்டு, ரெண்டு காதுகளையும் பிடிச்சு ரெண்டு சுத்து சுழட்டணும். நான் காதுகள்ன்னு சொன்னது ஆப்பச் சட்டியின் காதுகள்!



சட்டிக்குன்னு சட்டியுடன் வந்த மூடியைப்போட்டு மூடவும். அடுப்பு தீவட்டியா எரியக்கூடாது. மீடியமா இருக்கணும். ரெண்டு நிமிசம் கழிச்சுத் திறந்து பாருங்க. ஓரங்கள் பாத்திரத்தில் இருந்து கிளம்பி வந்துருக்கும். அப்படியே ஒரு ஓரத்தைப் பிடிச்சுத் தூக்கிறலாம். சூடோன்னு பயம் இருந்தால் மரக்கரண்டியால் எடுக்கலாம். எந்தக் காரணம் கொண்டும் உலோகக் கரண்டி, கத்தி இவைகள் வேணாம். நான் ஸ்டிக்கில் கீறல் விழுந்துரும்.

இப்ப அடுத்த ஆப்பத்துக்கு, அதே கிச்சன் பேப்பரில் ஒரு சொட்டு எண்ணெய்த் தொட்டுச் சட்டியைத் துடைச்சுட்டு, மாவை ஊத்துங்க. ஒவ்வொருமுறையும் மாவை நல்லாக் கலக்கிட்டு ஊத்தணும். இல்லேன்னா தண்ணி மேலாகத் தெளிஞ்சு நிக்குமுல்லே!

சட்னி:

புதினா : ஒரு கட்டு

கொத்தமல்லி இலை: ஒரு கட்டு

பச்சை மிளகாய் : நாலு

தேங்காய் : கால் மூடி

உளுத்தம் பருப்பு ரெண்டு மேசைக் கரண்டி

பெருங்காயத்தூள் : அரை தேக்கரண்டி

உப்பு : ஒரு முக்கால் தேக்கரண்டி

புளி: ஒரு கமர்கட் அளவு

எண்ணெய்: 2 மேசைக் கரண்டி

புதினா, கொத்துமல்லிக் கட்டுகளைப் பிரிச்சு இலைகளைக் கிள்ளி எடுத்து நாலைஞ்சுமுறை தண்ணீரில் அலசி மண் இல்லாமல் எடுத்து வடியவிடுங்க.

வெறும் வாணலியில் உ. பருப்பைப் பொன்னிறமாக இள ப்ரவுண் நிறத்தில் வறுத்துத் தனியா எடுத்து வச்சுக்குங்க. அதே வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊத்தி பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, பச்சை மிளகாய்களை ரெண்டா உடைச்சுப்போட்டு வதக்குங்க. அப்புறமா நீர் வடிய வச்ச புதினா, கொத்தமல்லி இலைகளைப் போட்டு நல்லா வதக்குங்க. வாணலி நிறை இருக்கும் இலைகள் அஞ்சே நிமிசத்தில் கைப்பிடி அளவாகிரும் விந்தை பாரீர்.

கொஞ்சம் ஆறினவுடன் உப்புப் புளி, தேங்காய் வறுத்துவச்ச உளுத்தம் பருப்பு எல்லாம் சேர்த்து அரைச்சு எடுங்க. பதம்? சட்னிப் பதம்தான், வேறென்ன?

விருப்பம் இருந்தால் அரைக்கரண்டி எண்ணெயில் கடுகு சேர்த்துத் தாளிச்சுக்கலாம். நான் தாளிக்கலை. போதும்...இத்தனை வருசங்களாத் தாளிச்சது....இன்னும் எண்ணெய் சேர்க்க வேணாமுன்னுதான்.

இந்தச் சட்டினி இட்டிலி, தோசை, தயிர்சாதம், சாம்பார் சாதம் எல்லாத்துக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.

ஆப்பம் ருசிபார்க்கணுமுன்னா துளசி விலாஸ்க்கு வருகை தரலாம். ரெண்டு நாளை முன்பாக அட்வான்ஸ் புக்கிங் செய்யணும். பதிவர்களுக்கு முன்னுரிமை உண்டு.


ஆரோக்கியமான உணவுப்பட்டியலில் ஆப்பம் என்றதையும் சேர்த்துக்கலாம். ஒருமுறை தேந்துளி பத்மா, முதியவர்களுக்கான உணவுகளைக் குறிச்சு ஒரு இடுகை போட்டாங்க. இதையும் அந்த லிஸ்ட்டுலே சேர்த்துக்கலாம். ஆனால்.... அமெரிக்காவில் ஆப்பச் சட்டி?
பேசாம ஆப்பச் சட்டி மொத்த வியாபாரத்துக்கு ஏஜன்ஸி எடுக்கலாமா?


ஒருவேளை ஆப்பக்கடை வச்சால் அதுக்கு விளம்பர வாசகம்:
ஆரோக்கிய உணவுக்கு ஆல்வேஸ் ஆப்ஸ்.

40 comments:

said...

//ஆரோக்கிய உணவுக்கு ஆல்வேஸ் ஆப்ஸ்.//

நல்ல வேளை ஆரோக்கியத்தினால் உணவுக்கு ஆல்வேஸ் ஆப்ஸ் எனச் சொல்லாமல் விட்டீர்களே.

நல்லா பயமுறுத்தறாங்கய்யா!!

said...

///என்னை (முதல்முதலா)சந்திக்க வந்த தோழி ஆப்ட்டாங்க ஆப்பப் பரிசோதனைக்கு. வெற்றி வெற்றி முழு வெற்றி.(சட்னி ரொம்ப நல்லா இருக்காம்)///

அந்தத் தோழி இப்போது எந்த ஆஸ்பத்திரில இருக்காங்க டீச்சர்..?

said...

:-)

எங்க வூட்ல ஆப்பத்துக்கு எப்பவும் தேங்காய்ப்பால்தான் சைட் டிஷ். செம்ம டேஸ்ட்டா இருக்கும்!

போட்டோவுல சட்னியோட ஆப்பத்தை பார்த்தா பசியை கிளப்பிடுது..

said...

Aappam Super! Namma veettil vadakariyoda saappida semaya irukkum.

said...

//இதெல்லாம் ஒரு 28 வருசத்துக்கு முன்னால் நடந்த 'கதை'//

Good memory..... Coincides with the logo of the Blog. :-)

said...

எங்க பருத்தித்துறை நகரிலே ஓடக்கரை என்ற தெரு ஆப்பத்திற்கும், தோசைக்கும் ரெம்ப பிரசித்தம். தங்கள் வீட்டின் தெரு வேலியில் தட்டி போல வெட்டி அதற்குள்ளிருந்து சுடச்சுட சுட்டு விற்பார்கள். அந்த ஞாபகங்களை எல்லாம் கிளறிவிட்டீர்கள். நல்ல பகிர்வு. நன்றி

said...

நல்லாக் கெளப்பறிங்க பசியை.

இட்லி,தோசைக்கே எகிப்துல வழி இல்லை. ஆப்பத்துக்கு எங்கே போக..

படங்களும் அருமை.

said...

ரீச்சர்! ஆப்பம் சூப்பர்.. காலையில இருந்து கொலைபட்டினி.. இங்க ஆப்பம் என்ன எனக்குத்தான் பசிக்குது... சட்னி தான் செய்து பின்னூட்டம் கொடுக்க முடியும்.. இங்க ஆப்ஸ் சட்டி இல்லையே :((

said...

யக்கோவ் தேங்காய்ப் பால் எடுக்க உடைக்கும் தேங்காய் தண்ணீரை விட்டு ஆப்பமாவு கரைச்சா சுவை நல்லாருக்கும்னு சொல்வாங்க

அப்படியே இந்த லெப்ட் ஓவர் சாதம் இருந்தா மிக்சில போட்டு அரைச்சிக் கலந்தாலும் ஆப்பம் [அல்லது தோசை]சும்மா கும்முனு இருக்கும்னு சொல்லக் கேள்வி.

said...

நல்லா தான் வந்திருக்கு.

said...

டீச்சர் ஆப்பம் நல்லா இருக்கு ஆனா ஓரத்தில கொஞ்சம் மொறு மொறுனு இருந்த நல்லா இருக்கும்.

அப்புறம் மாவு அரைக்கும் குறிப்பில் நான் ஒன்னு சொல்ல விரும்புறன்.

ஆப்ப மாவு அரைக்க தண்ணிக்கு பதிலா கொஞ்சம் இளம் வலுக்கையுடன் கூடிய இளநீர் தண்ணி ஸோர்த்து வலுக்கையும் விட்டு அரைத்தால் ஆப்பம் நல்லா வரும். இல்லைனா கொஞ்சம் பழைய சாதம் ஊற வைத்த தண்ணீய ஸேர்க்கலாம். (ஈஸ்ட் பெர்மெண்டடேசன் நல்லா இருக்கும்)

தொட்டுக்க கொஞ்சம் பொடி, பால், சட்டினி இருந்த ஒரு ஆறு ஆப்பம் சாப்பிடலாம்

said...

வாங்க கொத்ஸ்.

நலமா? ஆளையே காணோம்?

காணாமல் போனவரைக் கண்டு பிடிக்க ஆல்வேஸ் ஆப்ஸ் ன்னு சொல்லலாம் போல இருக்கே.

ம்ம்ம்....நீங்க வரப்போறது தெரியாமச் சட்னியில் தேங்காய் சேர்த்து அரைச்சுட்டேன்(-:

said...

வாங்க உண்மைத் தமிழன்.

தோழி நேத்து 'சாட்'லைனில் வந்தப்ப ஏதும் 'சைட் எஃபெக்ட்' உண்டான்னு கேட்டதுக்கு,
'இன்னொருநாளும் ஆப்பம் தின்ன வரவா?'ன்னு கேக்கறாங்க.

தைரியலக்ஷ்மி:-))))

said...

வாங்க சென்ஷி.

எனக்கும் தேங்காய்ப் பால்தான் பிடிக்கும். ஆனால் ஃப்ரிட்ஜ்லே உக்காந்துருக்கும் கொத்தமல்லி, புதினாவைத் தீர்த்துக்கட்டச் செய்த சதிதான் இந்தச் சட்னி:-)

said...

வாங்க தமிழ் பிரியன்.

வடகறியா? அடடே..... எனக்கு அதுவும் பிடிக்கும். ஒருநாள் செஞ்சுறணும்.

ஆப்பத்துக்கு நான் வெஜ் குழம்புகளும் நல்லாத்தானே இருக்கும்.

ஆல் இன் ஆல் அழகுராணி ஆப்ஸ் வாழ்க:-)

said...

வாங்க நன்மனம்.

யானைக்கு............ அதன் உருவ அளவுக்கு ஞாபகமாம்:-))))

said...

வாங்க டொக்டர்.

நலமா?

நேத்துத்தான் உங்களை நினைச்சேன். வலைச்சரத்தில் மருத்துவப் பதிவர்களைப் படித்தபோது!

said...

வாங்க துபாய் ராஜா.

மனசைத் தேத்திக்கிட்டு, இங்கே வரும்போது ஒரு பிடி பிடிக்கவேண்டியதுதான்!

said...

வாங்க இலா.

//இங்க ஆப்ஸ் சட்டி இல்லையே :((//

இது.....இதுக்குத்தான் ஆப்பச் சட்டி ஏஜன்ஸி எடுத்துடலாமுன்னு சொன்னது.

இப்ப நீங்க ஒருத்தர். இன்னும் ஒரு 99 ஆளைப் பிடிங்க. மொத்தவியாபாரத்தை நூறில் ஆரம்பிக்கலாம்:-)

said...

வாங்க கண்மணி.

நீங்களும் காணாமப்போனவர் லிஸ்டில் இருந்ததாக் கேள்வி:-)

நீங்க கேள்விப்பட்ட சமையல் டிப்ஸ் அத்தனையும் நெசம்தான்.

ஊற வச்சப் பச்சரிசியை இடிச்சு அந்த ஈரமாவில் தண்ணீர் & கொஞ்சம் கள் சேர்த்துக் கலந்து வச்சுட்டு செய்யும் ஆப்பம் இருக்கு பாருங்க மெத் மெத்துன்னு சூப்பரா இருக்கும்.

said...

வாங்க குமார்.

ஆமாம்ங்க. அதைத்தானே நானும் சொல்றேன்:-)))

said...

ஆஹா ஆப்பம் அழகு!!!

அம்புட்டு அழகு.!!

இதை வேணாம்னு சொன்ன முட்டாள் யாருங்க.
பேரு சொல்லுங்க . கூப்பிட்டு வையறேன்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
இப்படியா ஒரித்தர் பசியைக் கிளப்புவாங்க.
ரொம்ப நல்லா வந்திருக்கு துளசி. ரெண்டு நாள் முன்னாடி சொல்லிட்டு சிங்கமும் நானும் வரோம்.
அவரே 6 தின்னுவாரு. எனக்கு ஒரு பத்து.
வேணும்னா உங்களுக்கு உங்க ரங்கத்துக்கும் 2 எக்ஸ்ட்ரா செய்துக்குங்க:))))

said...

வாங்க பித்தன்.

நம்ம பழைய இரும்பு வாணலியில் செஞ்சது நல்லா மொறுமொறுன்னு ஓரத்தில் வரும். இந்த நான் ஸ்டிக்லே மொறுமொறுப்புக் கம்மிதான். தோசைத் தவாவும் நான் ஸ்டிக்லே இப்படித்தான் இருக்கு.

எண்ணெய் சேர்க்காமன்னா இப்படித்தான்(-:

ஆமாம்...ஆறு போதுங்களா?

said...

வாங்க வல்லி.

இதைத்தான் போனாவராது....பொழுதுபோனாக் கிடைக்காதுன்னு சொல்றது:-)))))

கட்டாயம் வாங்க.

Anonymous said...

நானும் மொறுமொறுப்பு கம்மியா இருக்கேன்னு பாத்தேன். பின்னூட்டம் படிச்சப்பறம் தான் புரிஞ்சுது

said...

எனக்கு தேங்காப்பால் ஆப்பம் வேணும்..வீட்டுக்காரங்களுக்கு தேஙகய் சட்னி வேணும்.. ஆனா ஆப்பம் கஷ்டமோன்னு நினைச்சு ரொம்ப நாள் செய்யவே இல்லை.. கொஞ்ச காலமாத்தான் செய்யறேன்.. நல்லாவே வருது. :) உங்க ஆப்பசட்டியும் நல்லா இருக்கே.. அது இருந்தா இன்னும் நல்லா வருமோ எனக்கும்..

said...

சூப்பர் ரெசுபீங்க!

இது நாள் வரை ஆப்பம் னா கொஞ்சம் தயக்கமா.. நமக்கு , சட்டியை விட்ட வராது..ன்னு , ட்ரை பண்ணாம இருந்தேன். உங்க பதிவ பார்த்தப்புறம், பண்ணிரலாம்னு ஒரு தைரியம் வந்திடுச்சு.

நன்றி.

said...

ஆப்பசோடா (சமையல் சோடா) என்று ஒன்று சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் soft ஆக வரும் போல.

baking powder ம் ஆப்பசோடா வும் ஒன்று தானா தெரியவில்லை.

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஹா.......புரியும்படியா எழுதிட்டேனா????

ச்சும்மா:-)))

said...

வாங்க கயலு.

தேங்காய்ப்பால்தான் சரியான காம்பினேஷன். ஆனா..... இங்கே நம்ம வீட்டிலும் இனிப்பு விரும்பாதவர் ஒருத்தர் இருக்கார். அவருக்குன்னு சட்னியோ (நேத்து வச்சக்) குருமாவோதான்:-))))

அஜந்தாவுக்கு ஆர்டர் எடுக்கப்படுகிறது. பதிவு செஞ்சுக்குங்க
(முன்பணம் கொடுத்து) நம்ம தளத்தில்:-))))))

said...

வாங்க வெற்றி மகள்.

அரைக்கப் அரிசி மட்டும் போட்டுச் செஞ்சுபாருங்க. வந்தால் நமக்கு வராட்டால் 'சிங்'க்குக்கு:-))))))

(ஆங்கில சிங்க்)

said...

வாங்க மெனெக்கெட்டு.

இங்கே வந்து மெனெக்கெட்டுச் சொன்னது சரியான பாயிண்ட்:-)

அருமையான கேள்வி. வெரி குட்.
விளக்கட்டா?

ஆப்ப சோடா, பேக்கிங் பவுடர் இல்லை.

ஆனா பேக்கிங் பவுடரில் ஆப்ப சோடா இருக்கு.

முன்னது சோடியம் பை கார்பனேட்

பின்னது ஸ்டார்ச், ட்ரை பவுடர், சோடியம் பை கார்பனேட் கலந்த கலவை.

அது ஒரு சிட்டிகை போட்டால் போதுமுன்னா, இது ஒரு அரைத் தேக்கரண்டியாவது போடணும்.

பின்னதை அவனில் வச்சுத் தயாரிக்கும் கேக், மஃப்பின் ஆகியவற்றுக்குப் போடணும். அப்பத்தான் மிருதுவாக வரும்.

நம்ம சமையலில் இட்லி, ஆப்பம், தோசைக்கு ஆப்பசோடாவைச் சேர்க்கும் வழக்கம் உண்டு. நானும் நியூஸியில் கொஞ்சம் சேர்ப்பேன். ஆனா சென்னையில் இருக்கும் சூட்டுக்கு இது வேணாமுன்னுதான். கூடியவரை எந்த ரசாயனப்பொருளும் சேர்க்க விருப்பமில்லை.

ஈஸ்ட் வாசனை பிடிக்குமுன்னா ஒரு சிட்டிகை ஈஸ்ட்டை கால் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரைத்தேக்கரண்டி சக்கரை/சீனியோடு சேர்த்துக் கலக்கி வச்சுட்டுப் பத்து நிமிசம் கழிச்சுப் பாருங்க. அப்படியே நுரைச்சுப் பொங்கி இருக்கும். இதையும் மாவோடு சேர்த்துக் கலக்கி வச்சுட்டால் சீக்கிரம் மாவு பொங்கிவருவதோடு ஆப்பமும் நல்ல மிருதுவாக இருக்கும்.


இந்த சோடா பை கார்பனேட்டை அந்தக் காலத்தில் இருந்து ஆப்பத்துக்குச் சேர்த்துட்டு அதன் பெயரையும் ஆப்ப சோடான்னு மாத்திட்ட நம்ம ஆட்கள் கில்லாடிங்க:-)))))

நம்ம சமையல் வகுப்பில் மெனெக்கெட்டுக் கேள்வி கேட்ட மெனெக்கெட்டுக்கு க்ரேஸ் மார்க் 10 !

said...

ஆகா இந்த மாதிரி பதிவெல்லாம் படிச்சாலே இந்த பிரச்சனை தான். உடனே சாப்பிடனும்னு தோணும். வீட்லயிருந்தா அம்மாவை செய்ய சொல்லலாம். இங்க அடுத்த தடவை சரவணபவன் போகும் போது ஆர்டர் பண்ணிட வேண்டியது தான் டீச்சர்.

said...

//சிறகை விரிக்கும் வெண்புறா போல//அந்த வரிகள் அற்புதம்,உங்கள் ஆப்பம்
சுவையோ சுவை!.

said...

வாங்க நான் ஆதவன்.

நம்ம பிரச்சனை என்னன்னா.....
சமைச்சு வச்சாச் சாப்பிட ஆள் இல்லை(-:

said...

வாங்க கோமதி அரசு.

அட! யாரும் கவனிக்கலையேன்னு இருந்தேன்.

நன்றிப்பா!

said...

ஆப்பம் உங்க கூடவும் நல்லா ஒத்துப் போயிருக்கே!!!பேஷ்..பேஷ் ரொம்ப நல்லாருக்கு.

கண்மணி சொன்னதும் சரிதான்.

சேரீ....நானும் சங்கரும் நாளன்னைக்கு அங்கு வாரோம்.

ஆப்பமும் தேங்காய்பாலும் ஏதாவதொரு சைட்-டிஷ்ஷும் செஞ்சு வையுங்க. எங்களை வையாமல்!!!

said...

நானானி ஆப்பக் கடையிலிருந்து வருகிறேன்.நீங்கள் வெந்தையம் சேர்க்கவில்லை ஆப்பத்துக்கு வெந்தையம் போடாவிட்டால் ருசிக்கு ஆபத்தாச்சே.
ஸ்லோகன் சூப்பர்’
ஆரோக்கிய உணவுக்கு ஆல்வேஸ் ஆப்ஸ்.//

said...

வாங்க நானானி வாங்க.

ஆப்பம் ரெடி பண்ணிடலாம் பிரச்சனையே இல்லை.

said...

வாங்க கோமா.

தேங்காய் சேர்த்து அரைச்சால் வெந்தியம் தேவை இல்லை.

எங்க மாமியார் எல்லாத்துலேயும் வெந்தியம் கொஞ்சம் சேர்த்துக்குவாங்க.

இப்ப எனக்கும் அந்தப் பழக்கம் வந்துருச்சு இந்த ஆப்ஸைத்தவிர:-)