Thursday, September 03, 2009

எப்படிச் சொல்வேன்!!! கர்ணா...நீ ரொம்பப் பாவம்டா

மனங்கோணாமல் தனக்குப் பணிவிடை செய்த இளம் குந்திக்கு துர்வாசர் மந்திரத்தை அன்பளிப்பாக செவியில் ஓதினார். சின்னப்பொண் அல்லவா? 'நெசமாவா சொல்றீங்க?' அவளுக்கு ஒரே ஆச்சரியம். இது எப்படி....' ஆர்வக்கோளாறில் மந்திரத்தைச் சொல்லிப் பார்க்கிறாள். மந்திரம் சொல்லும்போது ஒரு தேவனை நினைச்சுக்கணும். தலைக்குமேல் சூரியன் பளிச்சுன்னு இருக்கான். ஓக்கே..... சூர்யா!
அழகான வாலிபனா சூரியன் அப்படியே இறங்கிவர்றான். பயத்துலே இவளுக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. நமஸ்கரிச்சுட்டு, திரும்பிப்போயிருங்கன்னு வேண்டிக்கறாள். மந்திரத்தின் ஆகர்ஷணம் படுவேகமா இருக்கு. வந்த வேலை முடியாமல் திரும்ப முடியுமா? நோ ச்சான்ஸ். வேகமா அவளைத் தழுவுகிறான்.......................
சூர்யா மறைந்ததும் அடுத்தகணம் அழகான குழந்தை 'பிறக்குது' விநாடி நேரத்துலே எப்படின்னு அசட்டுத்தனமாக் கேக்கப்பிடாது. அது அப்படித்தான். காதுலே குண்டலம், உடம்புலே கவசமுன்னு ஜொலிக்கும் குட்டிப் பாப்பா. குழந்தையை ஆர்வத்தோடு எடுத்து உச்சிமோந்து அணைச்சுக்கறா. இப்ப அடுத்த பிரச்சனை..... இவனை என்ன செய்யறது? ( பேசாமக் கையோடு எடுத்துக்கிட்டுப்போய் காட்டுலே ஆப்ட்டதுன்னு சொல்லி இருக்கக்கூடாதா?)

'விவரம்' அறியாச் சிறுமி. அங்கே இருந்த ஒரு நாணல் பெட்டி(??)யில் குழந்தையை வச்சு, தன்னுடைய கைவளை, கழுத்துலே இருந்த சில ஆபரணங்களையெல்லாம் கழட்டி அதே பெட்டியில் வச்சு ( என்ன விவரம் பாருங்க. காசு இருந்தால் குழந்தை வளர்ந்துருமுன்னு அப்பவே இருந்துருக்கு) ஓடும்நதியில் பொட்டியை மிதக்க விட்டுடறாள்.

ரதம் ஒன்னை ஓட்டிக்கிட்டே வரும் சாரதிக்கு தாங்கமுடியாத தாகம். நதியைப் பார்த்ததும் ரதத்தை நிறுத்தி, கீழே இறங்கிக் குதிரைகளைச் சமாதானப்படுத்திட்டு, ஆத்துலே இறங்கித் தண்ணீரை அள்ளிக்குடிக்கிறார். கன் முன்னால் பெட்டி மிதந்து வந்துக்கிட்டு இருக்கு. தண்ணீர் வேகத்துலே அடிச்சுக்கிட்டுப் போகும் பெட்டியைப் பக்கத்துலே இருக்கும் நாணல் புதர்களை ஒரு கையால் பிடிச்சுக்கிட்டு, மறுகையால் இழுக்கறார். திறந்து பார்த்தால் அட! அழகான ஆண் குழந்தை! வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் மனைவியிடம் கொடுத்து வளர்க்கிறார். பச்சப்புள்ளெ யாருன்னு புரிஞ்சுருக்குமே...... கர்ணன்.
பையன் எல்லாக் கலைகளையும் படிச்சுப் பெரியவனா ஆனான். திரௌபதி சுயம்வரம். மேலே சுத்தும் இயந்திர மீனை, கீழே இருக்கும் தண்ணியில் தெரியும் பிரதிபலிப்பைப் பார்த்து அடிச்சு வீழ்த்தணும். கர்ணனும் அங்கே போறான். சுயம்வரம் ராஜகுலத்துக்கு மாத்திரமுன்னு சொல்லி , இவனைக் குலம், கோத்திரம் கேட்டுத் தேரோட்டி மகன்னு கேலி செய்யறாங்க. அவமானத்துலே மனசு ஒடைஞ்சு போறான். துரியோதனன், உடனே இவனை நண்பனாக ஏத்துக்கிட்டு தன்னுடைய ராஜ்ஜியங்களிலே ஒன்னுக்கு ராஜாவாகப் பட்டாபிஷேகம் செஞ்சு இவனை(யும்) அரசனாக ஆக்கிட்டான்.

இதை வேறமாதிரி படிச்ச நினைவு. பாண்டவர்களும் துரியோதனாதிகளும் சின்னவயசா இருக்கும்போது , இதுவரை கற்ற கலையில் அவுங்கவுங்களுக்கு உள்ளத் திறமைகளைக் காட்டும் போட்டி நடக்குது. பாண்டவர்கள், அந்த நூறுபேரைவிடத் திறமைசாலிகளா இருந்து எல்லாப் போட்டிகளிலும் ஜெயிச்சுக்கிட்டே இருக்காங்க. துரியோதனனுக்கு எரிச்சலா இருக்கு. அப்ப அர்ஜுனன், தன்னை யாராலும் வெல்ல முடியாதுன்னு சவால் விடறான். அர்ஜுனன் செஞ்சதையெல்லாம் என்னாலும் செஞ்சு காமிக்க முடியுமுன்னு சொல்லும் கர்ணனிடம், சமமான தகுதி (குலம் அந்தஸ்து) இருந்தால்தான் உன்னை அனுமதிக்க முடியும். உன் பெற்றோர், குலம் இதெல்லாம் சொல்லுன்னதும்........................ மனசு உடைஞ்சு போறான். வெறும் தேரோட்டும் வேலைக்காரனின் மகன் , அரசகுலத்தோருடன் போட்டிப்போடுவதா?
பகைவனுக்குப் பகைவன், தனக்கு நண்பன் என்ற பழஞ்சொல்படி, உள்ளே எரிஞ்சுக்கிட்டு இருந்த துரியோதனன், உடனே கர்ணனை நண்பனாக்கிக்கிட்டு அவனை அங்கதேசம் என்ற இடத்துக்கு அரசனா அபிஷேகம் செய்யறான்.
சரி....எப்படியிருந்தாலும்.....இப்போக் கர்ணனும் ஒரு அரசன். வெவ்வேறு ஆசிரியர்கள் எழுதுன பாரதக் கதைகளில் அங்கங்கே இதுபோல சில வேறுபாடு இருக்கலாம். அது இப்போப் பிரச்சனை இல்லை. கதைக்கு வருவோம்.

க்ஷத்திரியர்களை வெறுக்கும் பரசுராமரிடம், வில்வித்தைகளையும், இன்னும் சிறப்பாச் செயல்படும் அஸ்திரங்களையும் ( ஹையர் ஸ்டடீஸ்) கத்துக்கப்போன கர்ணன், தான் அரசன் என்பதைச் சொல்லாமல் அந்தணர்குலமுன்னு சொல்லி வித்தையெல்லாம் கத்துக்கிட்டான். பிரம்மாஸ்த்திரம்கூடச் சொல்லிக் கொடுத்துட்டார் பரசுராமர். ஒருநாள் குருவுக்குத் தூக்கம் வருது. சீடன் தொடையில் தலைவச்சுத் தூங்கறார். அப்போ ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையில் துளைக்குது. உடம்பு அசைஞ்சால் குரு முழிச்சுக்குவாறேன்னு அமைதியா அந்த வலியைப் பொறுத்துக்கிட்டு உக்கார்ந்துருக்கான். வண்டு பாட்டுக்குத் தன்வேலையைக் காமிக்குது. ரத்தவெள்ளம். ஈரப் பிசுபிசுப்பு தன் உடலில் பட்டதும் குரு கண்ணை முழிச்சுட்டார். தரை பூராவும் ரத்தம்.
"வலியைத் தாங்கும் மனோவலி க்ஷத்ரியனுக்குத்தான் இருக்கும். நீ அந்தணனா இருக்க(வே)முடியாது. உண்மையைச் சொல் நீ யார்? "

(அரசுச் சலுகைக்காகப் பொய் சர்ட்டிஃபிகேட் கொடுத்து கல்லூரியில் சேரும் ஆட்கள் நினைவு வருது)

" மன்னிக்கணும், குருவே.. வித்தைப் பயிலும் ஆர்வத்தில் உண்மையை மறைச்சுட்டேன்"

" அடப்பாவி..... நம்பிக்கை துரோகி ( டபுள் செக் பண்ணாம நீ சொன்னதை நம்புனதுக்கு என்னை.......) அதான், எல்லாத்தையும் கத்துக்கிட்டோமே. இனி உண்மை தெரிஞ்சு என்ன பயன்னு அசால்ட்டாவா இருக்கே? பொய் சொல்லி நீ கற்ற அந்த பிரமாஸ்த்திரம், உனக்குத் தேவைப்படும் சமயத்தில் உதவாமல் போகட்டும். அந்த மந்திரத்தை நீ என்னதான் முயன்றாலும் அப்போ நினைவுக்கு வராது. பிடி சாபம்"

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் நடக்கப்போவது உறுதியானதும், இந்திரன் தன்னுடைய மகன் அர்ஜுனனுக்குக் கர்ணனால் ஆபத்து வருமுன்னு யூகிச்சு, தானம் கேட்க வந்த யாசகன் உருவில் 'கர்ணனுடைய கவசகுண்டலத்தைத் தானமாக் கேட்கறான். அப்போ சூர்யா, 'தானம் கேக்க வந்தவன், இந்திரன்னு சொல்லியும்கூடக் கேட்கும் தானத்தை மறுக்காமல் வழங்கும் (கொடையில் கர்ணன்) குணமுள்ளதால், தன்னுடலோடு ஒட்டிப்பிறந்தக் கவசகுண்டலத்தை அறுத்துக் கொடுக்கறான்.

தன்னலமான இருக்கும் தன் நடவடிக்கையால் கொஞ்சம் குற்ற உணர்ச்சி வந்து இந்திரனுக்கு. கர்ணனைப் பாராட்டி ஒரு சக்தி ஆயுதம் தரான். ஆனா ஒரு கண்டிஷன். ஒரே ஒருமுறைதான் அதைப் பயன்படுத்த முடியும். அது முடிஞ்சதும் தானே அது இந்திரனிடம் போய்ச் சேர்ந்துருமாம். (கிஃப்ட் வவுச்சர் வித் கண்டிஷன் அப்ளைட்.)

ஒருநாள் சூரியோதயத்தில் நதிக்கரையில் நின்னு சூரியனை வழிபடும் கர்ணனைச் சந்திக்க குந்திதேவி வர்றாங்க. (எல்லாம் ஒரு காரனத்தோடுதான். பாசமெல்லாம் பொத்துக்கிட்டு வரலை) 'நீ என் மகன்தான். என் விளையாட்டுப் புத்தியால் கன்னிப்பொண் கையில் புள்ளையா வந்துட்டே. உலக அபவாதத்துக்கு பயந்து உன்னை ஆத்தோட விட்டுட்டேன். அதுக்கு நீ என்னை மன்னிச்சுரு. இப்பத்தான் உனக்குத் தெரிஞ்சுபோச்சே நாந்தான் உன் அம்மான்னு. பாண்டவர்கள் உன் தம்பிகள். நீ நம்மாத்துக்கு வந்துரு. எல்லாரும் சேர்ந்து இருக்கலாம்'னாங்க.
அம்மா கிடைச்சாளேன்னு சந்தோஷப்படறதா.... இல்லை அவுங்கெல்லாம் எதிரிகள் கூட்டத்தில் இருக்காங்கன்னு துக்கப்படறதா?

"அதெப்படி முடியும்? ஊருலகமெல்லாம் என்னை அநாதை, தேரோட்டி எடுத்து வளர்த்த பையன்னு இழிவாப் பேசுனபோது எவ்வளவு அவமானப்பட்டுருப்பேன். அப்பெல்லாம் வாயை மூடிக்கிட்டு இருந்துட்டு, இப்போ உன் பிள்ளைகளுக்கு என்னாலே ஆபத்துன்னதும் ஓடி வந்தாயா?
துரியோதனன் மட்டும் அப்போ என்னை அரசனாக்கி இருக்காட்டா.........என் நிலை என்னவா ஆகி இருக்கும்? செய்நன்றி இல்லாதவன் மனுசனா(வே)இருக்கமுடியாது. நான் மனுசன்."

அண்ணந்தம்பின்னு ஆசை காமிச்சு இவனை இழுக்கமுடியாதுன்னு குந்திக்குத் தெரிஞ்சுபோச்சு. சரி, வேற வழியில் இவனை மடக்கலாமுன்னுட்டு, 'நீ உன் தம்பிங்க அஞ்சுபேரையும் போரில் கொல்லக்கூடாது'ன்னாங்க. தம்பியாவே இருந்தாலும் இல்லாட்டாலும்கூட அந்த அஞ்சு பேரில் அர்ஜுனன் தவிர்த்த மற்ற நாலு பேரும் எனக்கு ஒரு பொருட்டே இல்லை . எனக்குச் சமமான பலத்தையுடைய அர்ஜுனன்தான் என் எதிரி. அவனைமட்டும் விடமாட்டேன்'றான்.

போர் தொடங்குது. கர்ணனைப் பற்றிய முழுவிவரம் அறிந்த பிதாமகர் பீஷ்மர்கூட, அவனுக்குத் தரவேண்டிய மரியாதை, உரிமைகளையெல்லாம் ஒரு பக்கம் தள்ளிவிட்டுட்டு, அவனை அலட்சியமாத்தான் நடத்தறார். உதாசீனம் என்றது என்ன கொடுமை பாருங்க.

பரதப்போரில் பீஷ்மர் தலைமை வகிச்சநாட்களில் கர்ணன் போரில் கலந்துக்காமல் ஒதுங்கி இருக்கான். பத்தாம்நாள் பீஷ்மர் வீழ்ந்தார். கர்ணன் சேனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றுப் போரை நடத்தறான். குந்தியின் ஐந்து மக்களும் கர்ணனைத் தாக்குறாங்க. (நல்ல அம்மா. கர்ணனை வஞ்சிச்சு வரம் வாங்குன குந்தி, பாண்டவர்கள்கிட்டேயும் 'அண்ணனைக் கொல்லாதே'ன்னு சொல்லி இருக்கக்கூடாது?)

பரசுராமரின் சாபத்தின் பலனாக, போர்க்களத்தில் அர்ஜுனனோடு சண்டை முற்றிவந்த ஆபத்துகாலத்தில் பிரம்மாஸ்த்திரத்துக்கான மந்திரம் மறந்து போயிருது. (நானா இருந்தால் எழுதிவச்சுருந்துருப்பேன்) பூமியில் அழுந்துனத் தேர்ச்சக்கரத்தை வெளியில் எடுக்க முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் அர்ஜுனன் அம்பெய்து கர்ணனைக் கொன்னுடறான்.

துர்வாசர் தொடங்கி மேலே சொன்ன கதை மாந்தர் அத்தனைபேரையும் பார்த்தோம் உணர்ந்தோம். மேடையில் என்னமோ ரெண்டே பேர்தான். ஸ்ரீதர் & அனுராதா. 'ஒருமுறை வந்து பார்த்தாயா.....மணிச்சித்திரத்தாழ் படத்தில் ஷோபனாவுடன் ஆடுனவர். (தமிழில் விநீத் ஆடி இருப்பார்) ஒருத்தருக்கொருத்தர் சளைக்காமல் போட்டி போட்டு ஆடுனாங்க. 100 நிமிசம்...போனதே தெரியலை. 'மெய்யாலுமே' அருமையான ஜோடி.



இசைக்குழுவும் அட்டகாசம். அருமையான உச்சரிப்பு. பாட்டு முழுசும் சமஸ்கிரதம்தான் என்றாலும் அப்படியே புரிஞ்சது . எல்லாம் ஆட்டம் ஆடுன ஆட்களின் திறமை. (சமஸ்கிரதமுன்னு எப்படி எனக்குத் தெரியுமுன்னு கேக்காதீங்க. அதெல்லாம் ரெண்டு வருசம் படிச்சுருக்கேன்,. அம் அஹா) எனக்கு அடுத்த இருக்கையில் ஒரு சமஸ்கிரத வித்தகி. ஆனாலும் அவுங்ககிட்டே 'பொருள்' கேட்டுக்கலை:-)

பாடல்கள், சம்பவங்கள் எல்லாம் வியாஸர் எழுதுன மகாபாரதத்தில் இருந்து எடுத்ததுன்னு சொன்னாங்க. ஒளி அமைப்பு பிரமாதம். இதைச் சொல்லாமவிட்டால் அமாவாசையன்னிக்கு நம்ம வீட்டில் லைட் எரியாது.
சூரியன் வரும் இடங்களில் திரையில் ஒளிர்வதைப் பார்க்கும்போது, கன்யாகுமரியில், கடற்கரையில் நின்னு சூர்யோதயம் பார்க்கிறமாதிரி இருந்துச்சு.

நிகழ்ச்சி முடிஞ்சதும் நடனமணிகளைச் சந்திச்சு 'எட்டு வார்த்தை'களைச் சொல்லிட்டுத்தான் வந்தோம்.

'எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை. அற்புதம்'

2 comments:

said...

TEST

இந்த வாரம் இதுவரை நம்ம பதிவுகள் தமிழ்மணத்தில் முகப்பில் காமிக்கப்படலை என்பதால் என்ன ஏதுன்னு தெரியாம முழிக்கிறேன்.

பின்னூட்ட விவரமாவது வருதான்னு பார்க்க இந்தப் பின்னூட்டக் கயமை(-:

said...

//(தமிழில் விநீத் ஆடி இருப்பார்) //

மலையாளத்தில் இல்லை விநீத் ஆடிப் பார்த்தேன், நான் தமிழிலே பார்க்கலை, ரஜினிக்காக எல்லாத்தையும் மாத்தித் தொலைச்சிருப்பாங்கனு எரிச்சலில்! :P

நல்லா இருக்கு, பதிவு, இவங்க ஆட்டம் தொலைக்காட்சியிலே பார்க்கிறது உண்டு.(பொதிகையிலே தான், சாயந்திரம் போடுவாங்க, அதிலே எப்போவானும் அபூர்வமா இப்படிப் பிரபலங்களொடது வரும்)