Friday, September 11, 2009

ஆலமரத்துக்குள்ளே அத்தனையும் இருக்கு!

அட! இதுக்குள்ளே இத்தனை அற்புதங்களா? ஒரு கணம் மூச்சே நின்னுபோச்சு.

இது மூணாவது படையெடுப்பு. முதல் ரெண்டு தடவையும் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்கலை. முதல் முறை நாங்க நேரம் தவறிட்டோம். பத்து நிமிசம் லேட். ரெண்டாம் முறை ஞாயித்துக்கிழமை. 'அவருக்கு' விடுமுறை. பெரியவங்களைப் பார்க்க இன்னும் கொடுத்துவைக்கலைன்னு மனச் சமாதானம் செஞ்சுக்கிட்டோம். ஒரு நாளைக்குக் காலையில் ஒன்னரை மணி நேரம், பிற்பகலில் ரெண்டு மணி நேரம்தான் நமக்கு ஒதுக்கி இருக்காங்க. காலையிலே எட்டரை முதல் பத்து. விடிஞ்சது போ.....நமக்கு..... பிற்பகல் ரெண்டு முதல் நாலு வரை. போச்சுடா...... வேகாத வெயிலில் யாராலே 'லோ லோ'ன்னு ஓட முடியுது.

செப்டம்பர் முதல் தேதி. எங்கூர்லே வசந்தகாலம் ஆரம்ப நாள். கொண்டாடவேண்டியநாள். குளிர்காலம் ஒருவழியாத் தொலைஞ்சதே! ( அப்படித் தொலைஞ்சுறாது. விரட்டிவிட்டாலும் தயங்கித் தயங்கி நிக்கட்டுமா போகட்டுமான்னு இன்னும் ரெண்டு மாசம் நம்மை ஆட்டிவச்சுட்டுத்தான் போகும் என்பது வேற விஷயம். அது இருக்கட்டும். இப்போ இங்கத்துக் கதையைப் பார்க்கலாம். நாள் நல்லாத்தான் இருக்கு. நாலுநாளா மழை பேய்ஞ்சதுலே பூமி கொஞ்சமாக் குளிர்ந்துகிடக்கு. மேகமூட்டம் இன்னும் விலகாததால் மூடவெயில். காலார நடக்க முடியும். பகல் சாப்பாடுவேற ஒரு இருபத்தியாறுவகை வெட்டிவிழுங்குனதுக்கு ......... வீட்டுக்குப் போனா அப்படியே கண்ணைச் சுத்திக்கிட்டு வரும். வந்தா.......... ராத்தூக்கம் போச்சு(-:


மலர் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் வாசலில் நுழைஞ்சோம். 'என்ன விஷயமா வந்துருக்கீங்க?' என்ற காவலரின் விசாரிப்புக்கு, 'இப்படிப் பெரியவரைப் பார்க்கணுமுன்னு.......' 'வண்டி உள்ளே போகக்கூடாது. இங்கெயே நிப்பாட்டிக்கணும். ஆனா ஒரு கிலோமீட்டர் நடக்கணும். நீங்க பேசாம..தெற்கே(!?) அவென்யூ வழி வாசலுக்குப் போயிருங்க. அங்கிருந்து அஞ்சே நிமிச நடை!'

அந்த கேட்டிலும் 'கதை'யைச் சொல்லிட்டு இறங்கி நடந்தோம். 'அனுமதி வரம்பிற்குட்பட்டது' (ஓஓஓஓஓஓ....அதான் ஸோ & ஸோக்கள் புதர்மறைவில் இல்லை!) அடர்ந்த காடு போன்ற ஒரு இடம். அகலமான மண்பாதை.. 'பெரியவர் இருக்குமிடத்துக்கு இப்படிப்போ'ன்னு ஒரு கைகாட்டி. அந்தத் திசை திரும்புனதும் வலது பக்கம் (நேச) நாடுகள். ஒலிம்பிக்ஸ் நினைவு வந்துச்சு. க்ரீஸ் ன்னு ஆரம்பிச்சு இருக்கு. அந்தந்த ஊர் மரம் ஒன்னு நட்டு வச்சுருக்காங்க. மொத்தம் 64 நாடுகளின் மரவகைகள் அங்கங்கே இருக்காம். இடக்கைப் பக்கம் மரங்களின் மறைவில் வித்தியாசமான ஒரு கட்டிடம். பார்ஸி கோவில். அகலமான படிக்கட்டுகளின் இருபுறமும் மீசை வச்சுத் தொப்பி போட்டப் பார்ஸிக் காமதேனு ! தடியான வால் அழகா மடிஞ்சு கல்லுக்குளே போகுது.

நடுவில் ஒரு அறையும் சுத்திவர நாலுபக்கமும் விஸ்தாரமான வெராந்தா. தூண்களின் மேலே ரெவ்வெண்டு ஆடுகள். ஒருவேளைக் கன்னுக்குட்டியாகவும் இருக்கலாம். நான் ஆட்டுதேச ஆளு என்றதால் ஆடுதான் சட்னு மனசில் வருது. தூசி ரொம்பிக்கிடந்த ஒரு சின்னக்கண்ணாடிச் சன்னல் வழி கண்ணைச் செலுத்துனால்.....சின்னதா ஒரு தொட்டி அந்த அறையின் நடுவிலே. கரிபிடிச்சுக் கிடக்கு. தீ வளர்த்துப் பூசை செய்வாங்க போல. வட இந்தியர்கள் பயன்படுத்தும் ஸ்டைலில் உள்ள ஹோமகுண்டம். இப்போ அந்த கோயிலில் வழிபாடு இல்லை. பாழடைஞ்சு கிடக்குது.

அதே தெருவில் (சுப்பா ராவ் அவென்யூ) எதிர்ப்பக்கம் நடந்தால் கத்தோலிக்கத் திருச்சபை ஆலயம்னு கைகாட்டி. அந்தப் பாதையிலேயே உள்ளே போனால்..... மழை பேய்ஞ்ச ஈரமணலில் விடுவிடுன்னு வேகமா ஓடும் கறுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளி பார்டர் வச்ச உடம்பில் பூச்சிகள். டிஸைன் நல்லா சிம்பிளா இருக்கே! ஆடம்பரம் இல்லாத அடக்கத்தில் சின்னதா ஒரு சர்ச். பக்கச் சுவர்களில் குட்டிக்குட்டியாத் தூண்கள். சூப்பர். ரொம்பப் பிடிச்சிருக்கு.
உள்ளே மரப்பெஞ்சுகள் இருக்கை. சின்ன கர்ப்பக்கிரகம்(ஆல்டர்) கம்பிவலைச்சந்திலூடாக ரெண்டு படம் புடிச்சுக்கிட்டோம். (உபயம்: கோபால்)

சர்ச்சுக்கு மேட்சாப் 'பாதிரி'ப்பூ மரங்களும், கறுப்புவெள்ளைப் பூச்சிக்கு மேட்சா அதே நிறத்தில் வண்ணத்துப் பூச்சிகளுமா லைக் லைக் ஸேம் ஸேம்:-) கொஞ்ச தூரத்தில் ஒரு சீக்கியக் கோவில். உள்ளே எட்டிக்கூடப் பார்க்க முடியலை. மர கேட் மூடியிருக்கு. அதே தெருவில் நேரா நடந்தால் பிரமாண்டமான ஒரு வட்டமான தொட்டி. அதுலே நிக்கும் அலங்காரப்பனைமரங்களும், அல்லிப்பூக்களும். இதுக்கு அந்த்ப் பக்கம் எதிர்ப்புறமா நாம் பார்க்க வந்த 'பெரியவர்' கம்பீரமா பரந்து நிற்கிறார்.
பக்கத்துலே போய்ப் பார்க்க முடியாது. அலங்கார நுழைவு வாசல் அருமையா இருக்கு.
இவரைக் 'காவல்' செய்யும் பணியாளர் பாலகிருஷ்ணன் இங்கே இருவது வருஷமா வேலை செய்யறாராம். எல்லா விவரமும் இங்கே இருக்கு பாருங்கன்னு அங்கே கண்ணாடிச் சட்டத்துக்குள்ளே இருந்ததைக் காமிச்சார்.

இனிய நிழலைத் தந்து நம்மை உபசரிக்கும் இந்த ஆலமரம்,. உலகிலுள்ள பெரிய ஆலமரங்களில் ஒன்றாகும். இது தென்வடலாக 238 அடிகள் நீளமும், கீழ்மேலாக 250 அடிகள் அகலமும் உள்ளதாகப் பரவியுள்ளது. இதன் மொத்த விஸ்தீர்ணம் 59,500 சதுர அடிகளுக்கு அதிகமாகும். இம்மரம் ஓர் அபூர்வ விருக்ஷமாகும். உலகில் இதுபோல பெரியவையான வேறு இரண்டு மரங்கள் உள்ளனவென்று அறிகின்றோம். ஆனால் அவ்ற்றின் ஒன்றின் நடுவான அடிமரம் பட்டுப்போய்விட்டது. மற்றொன்றோ இரண்டு தனி மரங்கள் சேர்ந்து பின் ஒன்றாக இணைந்து வளர்ந்துள்ளதாகும். இந்த ஆலமரமோ அதன் மூலமான அடிமரத்தில் இருந்தும் பல குருத்துக்கள் தோன்றி மேலும் பலகிளைகளாக நாளும் ஓங்கிப் பரவி வளர்ந்து கொண்டிருக்கின்றது. இம்மரம் நம் பிரம்ம ஞானச் சங்கக்கூட்டங்கள் நடைபெறுமிடங்கள் பலவற்றின்னுக்கும் நடுநாயகமாக இங்குத் திகழ்கின்றது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் இங்கு வந்து இதன் அரிய உருவை கண்டுகளித்து, இதன் குளிர்ந்த நிழலில் தங்கி இளைப்பாறி இன்புறுகின்றனர்.
தகவல் பலகையில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு நாலு மொழிகளில் அச்சடிச்சு இருக்கு. சென்னப்பட்டினமு முந்தி தெலுங்கு தமிழ்ன்னு பாகம் வைக்காம இருந்ததின் அடையாளம்!
இந்த மரத்தின் தாய்மரம் இப்போப் பட்டுப்போச்சாம்.

"அச்சச்ச்சோ..... எப்ப இது சம்பவிச்சது? :

"ஒரு பதினைஞ்சு வருசம் ஆச்சுங்க."

"அப்போ அதுக்குமுந்தி இருந்தே இங்கே வேலை செஞ்சுருக்கீங்களே, தாயைப் பார்த்திருக்கீங்களா? எவ்வளோ பெருசு? "

"ஆமாம்மா. நடுவில் இருந்த தொட்டியின் சுற்றளவு வரும் அதன் அடிப்பாகம்."


"அடடா..... அதைக் குறுக்கா வெட்டி அந்தப் பலகையை இங்கே டிஸ்ப்ளே வுக்கு வச்சுருக்கலாமே..... என்ன செஞ்சீங்க அதை?"

"உள்ளே அப்படியே காய்ஞ்சுபோய், பூசணம்பிடிச்சுக்கெட்டுத் துண்டுதுண்டா உடைஞ்சு விழுந்துருச்சும்மா"

". .......த்ச் த்ச்....."


தாய்மரம் இருந்த இடம் பிரமாண்டமா இருக்கு. புல் முளைச்சுக்கிடக்கு. இந்த இடத்தைச் சுத்தி, அதன் பிள்ளைகள் விழுதுவிட்டு மரமாகிப் படர்ந்து அவுங்களும் பேரப்பிள்ளைகள் எடுத்து ஆல்போல் தழைச்சுக்கிடக்காங்க.
ஆலமரம் இருந்தா...அதன் அடியில் வேற செடிகளை வளரவிடாதாம். அதன் விழுதுகளுக்கு மட்டுமே அங்கே இருந்துக்க ஒரு சலுகை.

தான் தன் குடும்பம்.......எனக்கென்னமோ இது இன்னொரு குடும்பத்தையும் நினைவுக்குக் கொண்டுவந்துச்சு.....படிப்பினை ஒருவேளை இங்கே இருந்துதானோ? புத்தருக்கு அரசமரமுன்னா...... இன்னொருத்தருக்கு ஆலமரமா இருக்கப்படாதா?


வெளியே போட்டுவச்சுருந்த கல் இருக்கையில் மூன்று இளம் விழுதுகள். பக்கத்துலே இருக்கும் பள்ளிக்கூடச் சீருடை. வகுப்புக்குப் போலையா? போயிட்டு வந்துட்டாங்களாம். இன்னிக்குச் சும்மா இங்கே வந்தாங்களாம். 'உங்களைப் படம் புடிச்சு நெட்லே போடப்போறேன். வகுப்புக்கு மட்டம் அடிச்சுட்டு வந்துருந்தா...மாட்டிக்கப்போறீங்க'ன்னு லேசா 'மிரட்டுனேன்':-)

முகமது நஸீர், ஹரிஹரன், ஷட்புதீன் இவர்களுடன் நாங்கள் ஐவரானோம். எங்ககூடவே அந்த மூவரும் வந்தனர். மரத்தைச் சுத்திச் சுத்தி வளைச்சு வளைச்சுப் படம் எடுத்தேன். நானும் ஃபோட்டோக்ராஃபர்தான்...................க்கும்.

ஒரு இடத்தில் புத்து ஒன்னு இருக்கு. பாம்போன்னு அவுங்களுக்கு ஐயம். பார்த்தால் எறும்புப் புத்தாட்டம்தான் இருக்கு. இதுலே நம்ம ஹரிஹரனுக்குப் பாம்புன்னா பயமே இல்லையாம். பார்த்துருக்கானாம். எங்கே? ஊர்லே தாத்தா வீட்டுக்குப் போனப்ப! நகரங்களில் பாம்புக்கு இடமிருக்கா என்ன? பாவம்!

அப்படியே தோட்டத்தைச் சுத்திப் பார்த்துக்கிட்டே போனோம். 'உண்மையைவிட உயர்ந்த மதம் வேறொன்றில்லை' ஆஹா.... எவ்வளோ உண்மையான சொற்கள் பாருங்க! அங்கங்கே தெருக்கள். வெவ்வேற பெயரோட இருக்கு. ப்ளாவாட்ஸ்கி அவென்யூ, ப்ளாவாட்ஸ்கி பங்களா

நியூ க்வார்ட்ராங்கிள் னு ஒரு பழைய கட்டிடம். கட்டும்போது புதுசாத்தானே இருந்துக்கணும். சுத்திவர மரங்கள் அடர்ந்த இடத்தில் குளுகுளுன்னு இருக்கு. மாடியும் கீழேயுமா இருபத்தினாலு அறைகள். உள்ளே நுழைஞ்சு பார்த்தோம். பின்னால் நல்ல வெட்டவெளியான முற்றம். குளியலறைகள், கழிப்பறைகள், துணி துவைக்கும் தொட்டிகள்ன்னு எல்லாம் கொஞ்சம் வெள்ளைக்கார நாடுகளின் கேம்பிங் க்ரவுண்டை நினைவூட்டுச்சு.

நாகலிங்க மரங்கள் பூத்தும் காய்ச்சும் குலுங்கி நின்னது. பெரிய தேங்காய் அளவுலே உருண்டைப் பந்துகள். தேவதைகளின் அவுட்டோர் பவுலிங் க்ளப்? பசங்க அதை எடுத்து உடைச்சுப் பார்த்தாங்க. காய்தான் போல. உள்ளே பெரிய ராட்சஸச் சுளைகளுடன் க்ரீம்கலரில் மாவு மாதிரி எதோ ஒன்னு. ஆனா நிச்சயமா இது சாப்பிடத் தகுந்தது இல்லைன்னேன். எப்படித் தெரியும்?
இதென்ன கேள்வி. திங்கலாமுன்னா...கடைக்கு வந்துருக்காதா? இப்படியா ச்சீப்படும்....

வெளியே நடந்து போகும்போது அங்கங்கே சிலபல கட்டிடங்கள். பேய்ப்படம் எடுக்க நல்ல லொகேஷன். இன்னொரு ஆலமரம் ஒன்னு விழுதுகள் மரங்களாக ஆகி, நடுமரம் பாழ்பட்டுக்கிடக்கு. அங்கங்கே ஆதரவா இரும்புப் பட்டைகள், குழாய்கள் போட்டுவச்சுருக்கு.

கத்தாழைக் காட்டுக்குள்ளே போனோம். தமிழ்ப்படத்தின் தாக்கம் அதிகமாகிப்போச்சோ.................. யார் யாரை யாருக்குப் பிடிக்குது, யாருக்கு யார் மேல் காதல், யார்யார் வந்து போனாங்கன்ற எல்லா விவரமும் இதழில் 'பொறிக்கப்பட்டு இருக்கு'! காதலைச் சொல்லத் தகுந்த மொழி ஆங்கிலம்தான் என ருசு கிடைச்சது. சப்பாத்திக் கள்ளிப் பழம் பழுத்து நிக்குது. தாத்தா வீட்டுக்குப்போய்வந்த ஹரிஹரன், அதையெல்லாம் திங்கலாமுன்னதும் மற்றவர்களுக்கு ஆ........ச்சரியம். 'ஆமாம். ஆனால் அதுலே கவனமா இருக்கணும். பழத்துக்குள்ளே ஒரு தட்டையான முள்பாகம் இருக்கும். தொண்டையிலே மாட்டினா....அம்பேல்ன்னேன். நல்லவேளை...பசங்க விஷப்பரீட்சை செய்யலை.

வண்டி வரப்போக ஏதுவானத் தார்ச்சாலைக்கு ரெண்டுபக்கமும் தென்னந்தோப்பு. பக்கவாட்டில் பிரிஞ்சுபோன மண்பாதைப்பக்கம் ஏகப்பட்ட கூச்சல்கள். என்னதான் நடக்குதுன்னு பார்த்தால் உச்சாணிக் கொம்பில் தலைகீழாகத் தொங்கிக்கிட்டே ஜாலியாப் பேசிக்கிட்டு இருக்கும் வவ்வால் சமூகம். இன்னொரு பக்கம் இந்தியன் பேங்க். அது உங்களுடைய பேங்க். அப்புறம் இன்னொரு இடத்தில் தபால்,தந்தி ஆபீஸ்.


மருதாணிப்பூக்கள் 'கொல்'னு சிரிக்குது. ஆவலோடு அதைப் பறிச்சுக் கையில் வச்சு முகர்ந்து பார்க்கும் சிலர். இங்கே எதையும் பறிக்கக்கூடாதுன்ற விவரம் ஒன்னும் அறியாத கிராமவாசிகள். இங்கே பக்கத்துலேக் கட்டிட வேலைக்கு வந்துருக்காங்களாம். இன்னிக்கு மழையா இருக்குன்னு வேலை இல்லையாம். விழுப்புரம் பக்கத்துலே கிராமமாம். ஒரு பெண்ணின் பெயர் எனக்குப் புதுசா இருந்துச்சு. தாவாயி. அந்தக் கிராமத்துலே தாவாயம்மன்னு சாமி இருக்காம்.

மழை பேஞ்சா வேலை இல்லை. வேலை இல்லேன்னா கூலியும் இல்லை.
ஆம்பிளைக்கு நூத்தியம்பது ரூபா, பொம்பிளைக்கு நூத்திப்பத்து ரூபா.. நாங்களேதான் அங்கே ஆக்கித் தின்னுக்கிட்டு வேலை செய்யறொம். ரெண்டு மூணு மாசத்துக்கு ஒருக்கா ஊர்ப்பக்கம் போறதுதான்......

இன்னிக்கு எனக்குக் குறைகேட்கும் நாள்.!

கிராமத்துலே இன்னும் இந்த வெகுளித்தனம் நீங்காமல் இருக்குன்றதுக்கு அடையாளமா....... ஒரு பெரியவர் எங்ககூட்டத்துலே வந்து சேர்ந்துக்கிட்டவர், ' போட்டோப் புடிச்சப்ப நான் இல்லை'ன்னார்
அதுக்கென்ன இன்னொரு போட்டோ எடுத்தால் ஆச்சு. நில்லுங்க எல்லாரும்.. டிஜிட்டல் கேமெரா நல்ல வசதிதான்,இல்லை? படத்தைப் 'போட்டுக் காமிச்சதும்'......முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. நம்மாலே நாலு பேருக்கு மகிழ்ச்சின்னா அதுலே தப்பே இல்லை:-))))
அங்கங்கே செயற்கை அல்லிக்குளங்களும், இயற்கை ஆம்பல்பூக்களும்.. அழகான சோலைக்கு நடுவில் அங்கங்கே கட்டிடங்கள்.. தலைவருக்கான பங்களா பிரமாண்டமா இருக்கு. நந்தித் தோட்டத்தில் ஞானம் கிடைக்குதான்னு மரத்தடிமேடையில் உக்கார்ந்து பார்த்தார் நம்மவர். ஹூம்...என் பெயரை ஞானமுன்னு மாத்துனால்தான் .....

அருண்டேல் வீடுன்னு ஒரு கைகாட்டி. கலாக்ஷேத்ராவின் அருண்டேல்தான். இன்னொரு பக்கம் மேடைபோன்ற அமைப்புடன் ஒரு இடம். அதுக்கு முன்புறம் நிகழ்ச்சிகளை உக்கார்ந்து ரசிக்கும் விதமா படிக்கட்டு இருக்கைகள். ஆம்ஃபி தியேட்டர். கலாக்ஷேத்ரா நடன நிகழ்ச்சிகள் இங்கே நடக்குமாம். மரச்சாமான்களைச் சுத்தம் செய்துக்கிட்டு இருந்த குழு சொன்ன விவரம்.

பட்டுப்போன, காய்ஞ்சுப்போன மரங்களை வெட்டி எடுத்து அறுத்து அடுக்கிக்கிட்டு இருந்தாங்க சிலர். உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடியப் புத்தகங்கள் இங்கே இருக்கு பாருங்கன்ற அறிவிப்புடன் தியோசாஃபிகல் சொஸைட்டி வெளியிடும் புத்தகங்களுக்கான விற்பனை இடமும் அலுவலகமும் இருக்கு. காலம்காலமா நகராம ஒரே இடத்தில் உட்கார்ந்துருந்தா....... என்ன ஆகும்? முதுகுத்தண்டு வளைஞ்சுறாதா? அதே நிலைதான் புத்தகங்களுக்கும்......................

நாங்க உள்ளே நுழைஞ்ச கேட்டின் வலப்பக்கம் லைப்ரரி, ஆராய்ச்சிகளுக்கான இடமுன்னு சில கட்டிடங்கள் இருந்தது நினைவுக்கு வந்துச்சு. அரிய புத்தகங்கள் பல இருக்கலாம். ஒருநாள் உள்ளே போய்ப் பார்க்கணும். நடந்து நடந்து நாங்கள் மேற்குப்பக்கம் திரு.வி.க பாலம் அருகில் இருக்கும் வாசலுக்கு வந்துருந்தோம். பாலத்தின் ரெண்டு பக்கமும் நம்ம கோகி உக்கார்ந்துருக்கான். கூடவே கச்சைக் கட்டுன மங்கையர். சொர்க்கத்தில் மஜாவாத்தான் இருக்கான் போல!
பி.கு: ஆல்பம் போட நேரமில்லை. முடிஞ்சாப் போட்டுட்டுச் சொல்றேன்.

ஓடிவிளையாடு பாப்பான்னு சொன்ன நம்ம முண்டாசுக்கு இந்தப் பதிவைச் சமர்ப்பிக்கின்றேன்.

29 comments:

said...

ஒரு குடும்பம்தான் ஞாபகம் வந்ததா:)
துளசி படங்கள் சூப்பர்.
இப்பவே போகணும்னு தோணுது.

வவ்வால் ஜோடி பிரமாதம். என்ன பேசியிருக்கும் ரெண்டும்.

பசங்க சுட்டி. அழகா இருக்காங்க.

அதே போல கட்டிடக் கலைஞார்களும் எளிமையயாய்
கண்ணில தெரிகிற வறுமையோட ஆன மகிழ்ச்சியா போஸ் கொடுத்திருக்காங்க.

இதுக்கப்புறம் கூட நான் போய்ப் பார்க்கலைன்னா சரியான கேனத்தோட சேர்த்தி:)

said...

Hey GK. goodlooking.!!

said...

ஆலமரத்தை சுத்தி இத்தன கதை இருக்கா டீச்சர்!!!! 98ல் பார்த்ததா சின்ன ஞாபகம். பச்சை பசேல்னு போட்டோ பார்க்க அழகா இருக்கு. கோபால்ஜிக்கு வயது குறைஞ்சு வருதோனு ஒரு சின்ன சந்தேகம் டீச்சர்.

said...

ஆலமரம் - குடும்பம் அது என்ன ஞாபகம் வந்ததோ எனக்கு புரியலையே ..

ஆல்பம் போட்டதும் சொல்லிவிடுங்க..:)

said...

//நம்மாலே நாலு பேருக்கு மகிழ்ச்சின்னா
அதுலே தப்பே இல்லை//

ஆம் துளசி சரியாக சொன்னீர்கள்.

பாரதியும் நாட்டு மக்கள் மகிழ்ச்சிக்குத்தானே பாடுப் பட்டார்.

said...

குறை கேட்டதும் கொஞ்சம் பரிகாரம் செய்யனும் சொல்லி துளசியனந்தமயி ஆக இருந்த சான்ஸ் விட்டுட்டீங்க:))

said...

nice post and photos thanks a lot for sharing .

said...

பதிவிலேயே ஆல்பம் அளவுக்கு படங்கள் இருக்கே,தனியாகவேறு எதற்கு?
படங்கள் நன்றாக இருக்கு.

said...

வாங்க வல்லி.

இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாப் போங்க. ரெண்டு மணிக்கு அங்கே இருந்தால்..... ரெண்டுமணி நேரத்தில் நிதானமாப் பார்க்கலாம்.

said...

வாங்க சிந்து.

ஹௌ சின்ன வயசு? 15 வருசத்துக்கு முந்தின்னா....தாயைப் பார்த்திருக்கலாம்!

கோபால்........ எங்கிட்டே இருந்து இளமையைத் திருடிக்கிட்டார்:-))))))

said...

வாங்க கயலு.

ஆனாலும் அப்பாவியா இருக்கீங்க!!!!!!

கட்டாயம் சொல்றேன்:-)

said...

வாங்க கோமதி அரசு.

ஆமாம், ஆமாம்!

said...

வாங்க பத்மா.

ஆசிரமம் கட்டுன பிறகுதான் பரிகாரம் சொல்வேன்:-)

said...

வாங்க ராம்ஜி யாஹூ.

ஆதரவுக்கு நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க குமார்.

அதெப்படி முடியும்? 367 இருக்கு:-)

said...

ஆஹா.. நம்ம ஏரியாவுக்கு போயிட்டு வந்தீங்களா..? 3 வருஷமாச்சு பாத்து, கண்ணெல்லாம் தண்ணி போங்க :( அருமையான விவரிப்பு டீச்சர்! :)

said...

//கோபால்ஜிக்கு வயது குறைஞ்சு வருதோனு ஒரு சின்ன சந்தேகம் டீச்சர்.//

டீச்சர், இதுல இருக்கற நுண்ணரசியலை கவனிச்சீங்களா? :D :P

said...

நானும் சென்னை வந்து 25 வருடங்களுக்கு மேலே ஆச்சு இன்னும் அடையார் ஆலமரம் பார்க்க முடியல்லே. இதெ தான் நான் போன தடவைகள் எல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கலை. உங்க தயவால் முழுசா பார்த்துட்டேன் நன்றி துளசி டீச்சர்.

இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்

said...

"எங்க ஊருல வசந்த காலம்"
வந்தாச்சே!! . இதோ நாட்டு நடப்பு :-இன்னிக்கு 22 டிகிரி நார்வெஸ்டர். ஊரெல்லாம் செர்ரி ப்ளாசம், ஹக்லில டாஃபோடில்ஸ்.கூடவே சொறி, அக்ச்சூ!! கீச்சு கீச்சென்று ஆனைசாத்தம் கலந்து.... இல்லைய்ல்லை கீஸ் கீஸ் என்று ஆஸ்த்மா சத்தம் கலந்து தான்(:. வராஹர் ஒய்வு எடுப்பதினால் இவர்கள்!!! எங்களுக்கு வாழ்வு:)) ஆலமரமா இந்த தடவை? எப்போ பார்ஸி கோவில் கட்டினா. தக்ஷிண் சித்ரா போனேளா?மாட வீதி மெஸ் ?

said...

ம்ம் ஏரியாவுல இருக்குற பெரிய குடும்பத்தையும் பார்த்துட்டிங்க...நான் சின்னப்பிள்ளையில போனது...போயி பார்க்கனும் ;)

said...

அடையார் ஆலமரம் மனிதன் தன் உள்ளத்தே எத்துணை உயரவேண்டுமெனச் சொல்கிறதோ என‌
நான் நினைத்ததுண்டு.
ஒரு நல்ல நாவல் படித்து முடித்த உணர்வு உங்கள் பதிவினைப்படித்தபின் எனக்கு ஏற்பட்டது.
நிற்க. உலகத்திலே அடையார் ஆலமரம் போன்ற சிறப்பு மிக்க பத்து மரங்களை நீங்களும்
உங்கள் ரசிகர் பெருமக்களும் காணவேண்டாமா ?

இங்கே செல்லுங்கள்:

http://www.neatorama.com/2007/03/21/10-most-magnificent-trees-in-the-world/

இயற்கையின் அற்புதத்தைக் கவனியுங்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

said...

இனிமையான பதிவு.

குளுமையான படங்கள்.

said...

வாங்க பொற்கொடி.

உள்ளூர் ஆளா நீங்க? ஆஹா.....

நுண்ணரசியலைக் கவனிச்சுட்டுக் கண்டுக்காமப் போய்க்கிட்டே இருக்கணும்:-)

said...

வாங்க கைலாஷி.

உங்களுக்கும் ஸ்ரீஜெயந்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

வரப்போகும் பதிவு ( பாதி எழுதி வச்சுருக்கேன்) உங்க நினைவைத்தான் கொண்டுவந்துச்சு!

said...

வாங்க ஜெயஸ்ரீ.

வசந்தகாலம் தொடங்கி ஒன்பது மாசமும் விதவிதமான அழகுதான் அங்கே. என்ன ஒன்னு அந்த மூணு மாசம்தான் கொன்னுருது(-:

பார்சி கோவில் அநேகமா 1924 இல் கட்டுனது. தட்சிண் சித்ராவுக்கு போன மார்ச் போய் வந்து எழுதியும் ஆச்சு:-)

மெஸ்ஸுக்குப்போகும் மன உறுதி இன்னும் வரலை:-)

said...

வாங்க கோபி.

பெரிய குடும்பத்தின் கிளைக் குடும்பங்கள்கூட அங்கங்கே விழுதுவிட்டுப் படர்ந்துருக்கு:-)

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

சுட்டிக்கு நன்றி.

இந்த நாவலில் 'பாத்திரங்கள்' எல்லாமே ஒன்னுதான்:-)

said...

வாங்க துபாய் ராஜா.

சென்னையின் கொளுத்தும் வெயிலுக்கு அங்கே, ஆலமரத்தாண்டைக் கிடைக்கும் குளுமை சூப்பர்.

said...

ஹாய் பெரியம்மா நலமா? தனிமடல் போட்டேன் கிடைச்சுதா?

பள்ளிப் பயின்றதொரு காலம் என்றொரு தொடர் விளையாட்டுக்கு உங்களை மாட்டி விட்டிருக்கிறேன்.

1.உங்களுக்குப்பிடித்த ஆசியர்கள் பற்றிச் சொல்லலாம்.
2. பள்ளியில் நீங்கள் அடி/ திட்டு வாங்கிய சம்பவங்கள்
3. பிடித்த பிடிக்காத பாடசலை ரியூசன் அனுபவங்கள்
4. பப்பி லவ் கதைகள்
5. இவை தொடர்பான சுவாரிசயமான வேறு விடயங்கள்.

http://snegethyj.blogspot.com/2009/09/blog-post_11.html

வந்து எழுதுங்கோ.
அன்புடன்
சினேகிதி.