Friday, February 05, 2010

ஆதி 'மூல' கிருஷ்ணா...(குஜராத் பயணத்தொடர் 16)

கண் விழிச்சவுடன் கோபுரதரிசனம். வெள்ளைக்கொடி. ஆஹா.... சமாதானம்.
இன்னிக்கு இங்கிருந்து கிளம்பறோம். இந்தப் பயணத்தில் கடைசிமுறையாக் கோவிலுக்குப் போனோம். 'ஒரு மாலை அஞ்சே ரூபாய், வாங்கி சாமிக்குப் போடு......' தயக்கம் பார்த்து 'ரெண்டு மாலை அஞ்சு ரூபாய் வாங்கிக்கோ. துளசி மாலை போட்டால் புண்ணியம்.' ஆஹா.... அப்ப துளசியே போய்க் கும்பிட்டா? மாலைக்கு ஒரு நோ. இந்தப் பக்கமெல்லாம் நம்மைப்போலப் பூ கட்டவோ, மாலை கட்டவோ வர்றதில்லைபோல. கோமதி ஆற்றுப் பக்கம் போய் கோவிலைப் பார்க்கணும். கேமெரா மட்டும் கொண்டுபோய் லாக்கரில் வைக்க 2 ரூபாய் கொடுத்துட்டு கோவிலுக்குள் போனோம். பயங்கரக்கூட்டம். ஏகாதசியாம். அதுவுமில்லாம இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. லீவு நாள். பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட்டம் ஒரு பக்கம் நெரியுது.
தரிசன நேரம்தான். ஆனாலும் தேவகி சந்நிதிவரை ஸார்டீன்ஸ் இன் அ கேன் ( கோவிலுக்குள் மீன் உதாரணமா? வாட் டூ யூ மீன்? சாமி கோச்சுக்கமாட்டார். மச்சாவதாரம் எடுத்தவர்தானே? நோ ஒர்ரீஸ்) ஒரு தூணில் கால்வச்சு ஏறிப்பார்த்தால் ஒரு விநாடி(பிடிப்பு இல்லாததால் ஒரு செகண்டுக்குமேல் பிடிச்சுத் தொங்க முடியாது) சாமி தெரியுதாம். கோபால் ஒரு காப்பிகேட். கூட்டத்தைவிட்டு அகலே நின்னுருந்த என்னை வா வான்னு கூப்பிட்டு இதுலே ஏறிப் பார்ன்னார். கருநீல உடை. தலையில் குளிருக்கான கம்பளிக் குல்லாய்.

பார்த்தாச்சுன்னு கோவிலை இடம்வந்தோம். அதென்னவோ வந்ததும் உள்ளே முதலில் நுழைஞ்சுட்டா;ல் 'இடம்'தான் வரமுடியுது. விறுவிறுன்னு எல்லா சந்நிதிக்கும் போய் 'ஆஜர்' சொல்லிட்டு கடைசியா கண்ணனுக்கு 'பைபை' சொல்ல மீண்டும் போனால் ஒரு பத்துப்பேர்தான் வரிசையில். நாங்களும் அதுலே ஒட்டிக்கிட்டோம். தரிசனம் நல்லாக் கிடைச்சது. 'போயிட்டு வரேண்டா'ன்னு சொல்லிக்கிட்டேன். வைகுண்டத்துக்குப் போகும் வாசல்வரை கொண்டுவந்துட்டே. அதுக்கு தேங்க்ஸ்ன்னேன். கோபாலுக்கு ஒரு மஞ்சத்துண்டு கொடுத்தாங்க (தட்டுலே ரெண்டாவது முறை காசு போட்டதும்)

தேவகிக்கு,போயிட்டுவரேன்' சொன்னபோது, அங்கே வந்த ஒரு பண்டிட்(நேத்து 'கண்ணன்' அனுப்புன அதே ஆள்) இந்தப் பக்கம் வாங்கன்னு பிரகாரத்துலே இருக்கும் மரத்தடிக்குத் தள்ளிக்கிட்டு போனார். அங்கே ஒரு பண்டிட், இவர் கையில் தீர்த்தம் கொடுத்து சிலமந்திரங்களைத் திருப்பிச் சொல்லச் சொன்னதும் சொன்னார். (ஒரு பலவீனமான மூடில் இருந்துருப்பார் போல நம்ம ஆள்) போகட்டும் சிலசமயம் இப்படித்தான் ஆகிருது. ரெண்டு பேருக்கு தட்சிணை கொடுன்னு கேட்டு வாங்கிக்கிட்டாங்க. எனக்கும் கண்ணனை இனி எங்கே பார்ப்போமோன்னு மனசு குழைஞ்சு இருந்த சமயம். என்னவோ அஞ்ஞானம் போங்க. எல்லாம் ஏதோ மாயைக்குள் கட்டுப்பட்ட விநாடிகள்.

'அங்கே பாரேன், கோபுரத்துலே யானை'

எங்கே? எங்கே?
இவ்வளவு கம்பீரமா நிக்குது . எப்படிக் கவனிக்காமக் கோட்டைவிட்டுருக்கேன்? க்ளிக் க்ளிக் க்ளிக்
கோமதியைப் பார்க்கப்போனோம். தண்ணீர் நிறைய இருக்கு. அந்தப் பக்கத் தெருவழியாப்போய் படித்துறையில் இருந்து கோவிலுக்குப் போகும் வழியைப்பார்த்தால்..... கோவில் நல்ல உயரத்தில் இருக்கு., நிறையப் படிகள். படித்துறைக்குப் பக்கம் ராதா தாமோதர், க்ருஷ்ணா மந்திர்ன்னு சின்னச்சின்னதாக் கோவில்கள். ஒரு கோவிலில் துலாபாரம் கூட வச்சுருந்தாங்க. நிறைய யாத்ரீகர்கள் பித்ரு காரியங்கள் நடத்தறதும், கோமதி கங்காவுக்கு ஆரத்தி எடுத்து எரியும் அகல்விளக்கு, பூக்களைத் தண்ணீரில் விடுவதுமா இருந்தாங்க. படகு ஒன்னு பயணிகளோடு நதியில் போகுது.

திண்ணைமாதிரி இருக்குமிடங்களில் யாசகர்கள் வரிசைகட்டி உக்கார்ந்துருந்தாங்க. போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத ஏற்பாடு. அறைக்குத் திரும்பினோம். நாம் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு நிமிச நடையில் இருக்கும் ஷ்யாம்சதன் என்ற போஜனாலயத்தில்தான் நேத்து இரவு சாப்பாடு. சூப்பரா இருந்துச்சு. அகர்வால் சாப்பாடுன்னு சொன்னாங்க. போர்டுலே மார்வாடி குஜராத்தி உணவுன்னு இருக்கு. விலை ரொம்பவே மலிவு. வெறும் 65 ரூபாய்தான். அன்லிமிட்டட். பார்த்துப் பார்த்து உபசரிச்சு அன்பாப் பரிமாறுனாங்க.

இது இருப்பது தெரியாமல் முதல்நாள் பப்பன், மாடர்னா இருக்குமுன்னு ஒரு மல்ட்டிப்ளெக்ஸ் இருக்குமிடத்துக்குக் கொண்டுபோய் விட்டார். கீழே ரெஸ்டாரண்ட், மாடியில் சினிமா ஹால். ஈ காக்கையைக் காணோம். சினிமா முடிஞ்சதும் சாப்பிடும் கூட்டம் வருமாம். சுமாரான சாப்பாடு. பாலக் ஆலு வந்தது. சும்மா உப்புப்போட்டு வேகவச்ச கீரையைக் கடைஞ்சு அதுக்குள்ளே வெந்த உருளைக்கிழங்கை திணிச்சு வச்சுருந்தாங்க. தால் ஃப்ரை மட்டும் தாளிச்சு இருந்த்து. விலையோ ஃபைவ் ஸ்டார் ரேஞ்ச்.
நேற்றைய அனுபவத்தால் பயந்து பயந்து இங்கே நுழைஞ்சால் அட்டகாசமா இருக்கு அந்த இடம். படு சுத்தம். அங்கே மேனேஜரா இருந்த பையர் 'சூடா இருக்கும்போதே நீங்க சாப்பிடுங்க ஆண்ட்டி. படம் நான் எடுக்கறேன்'னு கேமெராவை வாங்கிக்கிட்டு இண்டு இடுக்கு விடாம அந்தக் கூடம் முழுசையும் எடுத்துத் தள்ளிட்டார். இதுலே 'காகா நீங்க பரிமாறுங்க, சாச்சா நீங்க பூரியை தட்டுலே போட்டுக்கிட்டே போஸ் கொடுங்க'ன்னு ஏகப்பட்ட கலாட்டா:-) எல்லோரும் ஒரு குடும்பமா நினைச்சு இங்கே வேலை செய்யறோமுன்னு சொன்னது ரொம்பப் பிடிச்சுப்போச்சு. த்வாரகா போகும் பதிவுலக அன்பர்கள், வாசகர்கள் தைரியமா அங்கே போய் சாப்பிடலாம். நல்ல சுத்தமான உணவு.
காலை உணவு இங்கே இல்லையாம். இருந்துருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்! லஞ்ச் & டின்னர் மட்டும். கடைசி முறையா வெள்ளைக்கொடியையும் கோபுரத்தையும் நம்ம பால்கனியில் இருந்து தரிசிச்சுட்டு, ரெண்டு கிளிக்கிட்டு அறையைக் காலி செஞ்சுட்டுக் கிளம்பினோம்.

நாப்பது நிமிஷப்பயணத்துலேயே சாலையின் ரெண்டு பக்கமும் பயிர்பச்சைகள் தெரிஞ்சது. பருத்தியும் ஆமணக்கும் போட்டுருக்காங்க. சில இடங்களில் சோளம். எதுக்கும் உதவாத உவர்மண் த்வார்க்கா பகுதியில் மட்டும்தானாம். பறவைகளை விரட்டவோ, இல்லை வளர்ந்துவரும் இளம் செடிகளின் குருத்துக்களைக் காக்கவோன்னு தெரியலை. ஒரு வயலில் ப்ளாஸ்டிக் பைகளை வரிசையாப் பார்த்தோம். ஏதோ ரன்வே லைட்ஸ் மாதிரி வெயிலில் மினுங்குது.
சாலையின் ரெண்டு பக்கங்களில் ஆல்கள். விழுதுவிட்டு ஜே ஜேன்னு இருக்கு. விஸாவாடா என்ற கிராமம். மூல் த்வார்க்கா தீர்த் தாம். த்வாரகையில் இப்போது இருக்கும் கோவில்களை விடப் பழமை வாய்ந்ததாம். நாங்க போகணுமுன்னு நினைச்சது ஹர்சித் மாதா கோவில். இது க்ருஷ்ணனே கட்டிய கோவிலாம். ஜராசந்தனை 'வதம்' செய்யக் கிளம்புமுன்னே கூடுதல் சக்தி வேணுமுன்னு அம்பா(ள்) மாதாவிடம் பிரார்த்தனை செஞ்சுக்கிட்டாராம். வதம் முடிஞ்ச பிறகு இந்தக் கோவிலைக் கட்டுனதா ஐதீகம். நினைத்த காரியம் எதுவானாலும் நடக்குமுன்னு மக்கள் நம்பிக்கை. ஆமதாபாத்லே விமானநிலையத்துலே கொஞ்சம் தகவல் புத்தகம் கிடைச்சதுன்னு சொல்லி இருந்தேனில்லையா? அதுலே பார்த்து வச்சுக்கிட்ட இடம். எப்படியும் போற வழிதானே. பார்த்துட்டே போகலாமுன்னு நினைச்சோம். ஆனால் ஒரு இடத்துலே ரைட் திரும்பி உள்ளே போயிருக்கணும். பாதையை விட்டுட்டார் பப்பன். இங்கே மூல் த்வார்க்கா வந்தவுடன், இது ஹர்சித் மாதா இல்லையேன்னு கேட்டால் அதைத்தாண்டி பத்துகிலோ மீட்டர் வந்துருக்கோம். சரி போகட்டும். கிடைச்சதைப் பார்க்கலாமுன்னு உள்ளே போனோம்.

நமக்கிடது பக்கம் தனியா ஒரு சந்நிதி. ஒரு கையில் தூக்கிய சஞ்சீவி மலை, மறுகையில் 'கதை''யுமா சிரஞ்சீவி. ஒரு பெண்ணின் நெஞ்சை மிதிச்சுக்கிட்டு கோபமா இருக்கார்.

வெளியே வந்தால் பக்கத்துலேயே ஒரு படிக்கிணறு. நேரா இறங்காமல் 'எல்' வடிவத்தில் போகுது. தொல்பொருள் இலாகாவின் பாதுகாக்கப்பட்ட இடம். ஞானகுண்டமாம்.

சின்னதா ஒரு கோபுரம் கண்முன்னால் தெரிஞ்சது. சின்ன முற்றத்தில் கலர்ஃபுல்லா ஒரு குட்டி நந்தி. உள்ளே நடுவில் சிவன் சந்நிதி. பின்னால் சுவரில் பார்வதி. வலது பக்கச் சுவரில் மாடத்தில் பிரம்மா. எதுத்த சுவரில் மூன்று தலையுடன் ஒரு சாமி. தத்தாத்ரேயா?


வளாகத்துலே வலது பக்கம் ஒரு பெரிய வாசல் இருக்கேன்னு அதுக்குள்ளே நுழைஞ்சோம். ஹப்பா............. இதுதான் மூல துவாரகை கோவில். அங்கே 'மட்டும்' உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னு ஒரு அறிவிப்பு.

ரொம்பப் பழைய பாணியில் அமைஞ்சுருக்குன்னு பார்த்தவுடன் தெரியுது. பெரிய வளாகம். அரசமர மேடை, சிவன், காயத்ரி, சரஸ்வதின்னு தனித்தனி சந்நிதிகள். ஒவ்வொரு சந்நிதிக்குமுன்பும் ரெண்டு பக்கமும் பெரிய கல் திண்ணைகள். திண்ணையின் ஒரு பக்கத்தில் இருந்து எழுந்து கூரையைப் பிடிக்கும் தடிமனான தூண்கள். அருமை போங்க. ஆனா சிற்பவேலைப்பாடு ஒன்னுமே இல்லை. சிற்பக்கலையை அறியாத காலக்கட்டமோ என்னவோ?

நுழைவாசலுக்கு இடப்புறம் த்வார்கீஷ் தனியா நிக்கிறார். கொஞ்சம் ஹைடெக் உத்தி. நம்மைப் பார்த்ததும் பண்டிட் ஒரு ஸ்விட்சைப் போட்டவுடன், த்வாரகை அரசனுக்குப் பின் ஒளிவட்டம் சுத்துது! பிரஸாதம் கொடுத்து ஒரு படமும் கொடுத்தார்.


படம் எடுக்க முடியலையேன்ற கவலையுடன் கிளம்பி வெளியே வந்து முதலில் நுழைஞ்ச (படிக்கிணறுக்குப் பக்கம்) சிவன் பக்கம் கண் ஓட்டினால் அட! அந்தக் கோவிலும் இதே பாணியில்தான் இருக்கு. முதல்முறை பார்த்தப்பக் கவனிக்காம விட்டுருக்கேன். எல்லாம் அந்த அனுமந்தடு மிதிக்கும் பெண்ணின் நினைவால்.......

இன்னொண்ணும் இந்த பயணத்தில் கவனிச்சது என்னன்னன்னா...... எங்கேயும் பார்க்கிங் காசு கொடுங்கன்னு யாரும் பில் புத்தகத்தோடு வந்து நிக்கலை. நம்ம பக்கம் ஒவ்வொரு கோவிலுக்கும் வெவ்வேற தொகை கட்டிக்கிட்டே போனது நினைவுக்கு வந்துச்சு. கோவில் மட்டுமில்லை பொதுவா எல்லா இடங்களிலும் வண்டி நிறுத்த காசே கிடையாது. வசூலிக்கத் தெரியாத மக்குகள்.

கொஞ்சம் மூல் த்வார்க்கா கோவில் படங்கள் இங்கே
.

பயணம் தொடரும்..............:-)))))

31 comments:

Anonymous said...

அந்த ப்ளாஸ்டிக் பைகள் செடி மாதிரி இருக்கு. ஒரு வேளை பறவைகள் கிட்ட இருந்து காப்பாத்த அப்படி கட்டி விட்டுப்பாங்கன்னு தோணுது.

said...

காலை உணவு இங்கே இல்லையாம்.//

குஜராத் முழுதுமே காலை உணவு இருக்காது. இன்னும் பல வடமாநிலங்களிலும் காலை உணவு என்பது நம்ம பக்கம் மாதிரி எல்லாம் கிடைக்காது. ஆனால் மதிய உணவு பத்தரை மணியிலிருந்து ஆரம்பிக்கும். காலை உணவுனு போனால் கிடைப்பவை, டோக்ளா, ஜிலேபி, பஜியா, பக்கோடா(இது பாலக், ஓமவல்லி இலை, புதினா, கொத்துமல்லி போட்டுச் செய்திருபபாங்க), சனா க்ரேவியில் போடப் பட்ட பாப்படி, கமன் போன்றவைகள் கிடைக்கும். இவற்றுக்கு மேலே தூவிக்கொள்ள முள்ளங்கித் துருவல், காரட் துருவல், வெங்காயம் சேர்ப்பவர்கள் என்றால் வெங்காயத் துருவல், எலுமிச்சைச் சாறில் ஊற வைத்து எண்ணெயில் வதக்கிய பச்சை மிளகாய்கள் கிடைக்கும். ஆலு வடா சில இடங்களில் கொடுப்பாங்க. இது நம்ம ஊர் உ.கி. போண்டா மாதிரித்தான். ஆனால் காரம் இருக்காது. ராஜஸ்தானில் காரம் அதிகமா இருக்கும். குஜராத்தில் காரம் கம்மி. இந்த எண்ணெயில் வதக்கிய பச்சை மிளகாய்தான் பயமுறுத்தும். ஆனால் அவங்க சாப்பிடுவாங்க. நாங்க பார்த்துட்டு இருப்போம்! :)))))))))))

said...

உறுதி படுத்திட்டேன்

http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post_06.html


பிறந்தநாள் வாழ்த்துகள்...

(அம்மாவுக்கு 32 தானே!!)

said...

அப்பாவி முரு//

அநியாயத்துக்கு அப்பாவியா நீங்க?? :P :P:P:P :))))))))))

said...

உங்க கூட சேர்ந்து நாங்களும் கோபுரதரிசனம் பார்த்தாச்சி..டீச்சர் ;)

இன்னிக்கு என்ன ஸ்பெசல் ;)

said...

" எனக்கும் கண்ணனை இனி எங்கே பார்ப்போமோன்னு மனசு குழைஞ்சு இருந்த சமயம். என்னவோ அஞ்ஞானம் போங்க. எல்லாம் ஏதோ மாயைக்குள் கட்டுப்பட்ட விநாடிகள்.""
கவலையே படாதீங்கப்பா துளசி !!உடுப்பி ஸ்ருங்கார குட்டி கிருஷ்ணனை போய் பாருங்கோ, அழுதுடுவீங்க:)). சின்ன ஜன்னல் மாடத்திலேந்து த்வாரம் வழி தான் பாக்கணும்.அக கண்ணால் பாக்கறதுக்கு உண்டான SYMBOLISM போல இருக்கு. மெல்லிசு விளக்குல சின்ன குழந்தை வஜ்ராங்கி ல கண்ணை நிறைச்சுடுவான்.அழாதவா இருக்க மாட்டா!! கூடவே தர்மஸ்தலா போய் மஞ்சுனாத ஸ்வாமி பார்த்துட்டு, சாப்பிடுங்க. சுட சுட சாப்பாடு அமிர்தம். எவ்வளவு CLEAN பா!!. மூகாம்பிகை, கொரனாடு அன்னபூரணி, ஸ்ருங்கேரி, சுப்ரமண்யா எல்லாமே அழகு.கர்னாடகா கோவில் மனச இழுக்கத்தான் செய்யறது. ஆனா ரோட் தான் முதுகை பழி வாங்கிடும்:(( . இந்த தடவை கிடைத்தது.

said...

வாழ்த்த வயது இல்லை . நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .. கேக் மற்றும் விருந்து எங்கே


@ கீதா

மத்திய பிரதேசத்தில் காலை ஜிலேபி போன்ற ஒன்று தருவார்கள்

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..

வித்யா

said...

///(அம்மாவுக்கு 32 தானே!!)///

எல்லாப் பல்லும் இருக்கான்னு கேட்டிருப்பருங்க அம்மா. :))

இல்லையா அப்பாவி முரு. (ஏங்க இப்டி)

said...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
என்பார்கள்.கோபுர தரிசனம் பார்த்தோம்,கோடி புண்ணியம் பெற்றோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்.

//இந்தப் பக்கமெல்லாம் நம்மைப்போலப் பூ கட்டவோ, மாலை கட்டவோ வர்றதில்லைபோல//

சுட்டுப்போட்டாலும் வராது..மூணு மூணரை இஞ்சு நீளத்தில, பூ தைக்கிற ஊசின்னே ஒன்னை வெச்சிருப்பாங்க.நம்ம ஊருல சின்னப்புள்ளைங்க பூக்கட்ட பழகுறதுக்கு முன்னால,ஊசியால கோர்க்குமே அப்படி, அந்த ஊசியால கோத்து வெச்சிருப்பாங்க.

said...

//கீதா சாம்பசிவம் said...
அப்பாவி முரு//

அநியாயத்துக்கு அப்பாவியா நீங்க?? :P :P:P:P :))))))))))//

அக்கா., அநியாத்துக்காக இல்லை நியாத்துக்காக தான் அப்பாவி...

லிங் கொடுத்திருக்கும் இடுகையில் அம்மா 30 வயதுன்னு சொல்லியிருக்காங்க. சரிவிடு, காசா? பணமா? அம்மா மனசு சிரமப்படாம இருக்கட்டுமேன்னு தான்...

மத்தபடி ஆம, டெர்ரரு...

said...

வாங்க சின்ன அம்மிணி.

பறவை விரட்டா? 'ஆஆஆலோலம்.....'

said...

வாங்க கீதா.

எனக்குக் காலைஉணவுன்னு ரொம்ப வேணாம். ரெண்டு பிஸ்கெட் & காஃபி இருந்தாப் போதும்.

பாவம் கோபால்தான் கஷ்டப்பட்டுட்டாருன்னு நினைக்கிறேன்.

காலங்கார்த்தால் எப்படி அந்த பாப்டி, ஜிலேபி எல்லாம் சாப்பிட?


சாப்பாட்டுக்கு வைக்கும் பச்சைமிளகாய் பார்த்தாவே பயமாத்தான் இருந்துச்சு.

said...

வாங்க அப்பாவி முரு.

32?

அது ரெண்டு வருசமுன்னே போட்ட பதிவு.

சரியாச் சொன்னா இப்போ 30:-)))

said...

வாங்க கோபி.

இன்றைய ஸ்பெஷல் கோபாலை அழவிட்டதுதான்.

நைஸா ஏழெட்டு வெங்காயம் உரிச்சு பொடியா அரியச் சொல்லிட்டேன்!

said...

வாங்க ஜெயஸ்ரீ.

உடுப்பிக் கனவு ரொம்ப நாளா இருக்கு.

எப்பக் கிடைக்குமோ?

நான் சும்மாவே சாமியைப் பார்த்தா அழுவேன். மனசு குழைஞ்சாக் கேக்கணுமா? :-)))

ஒரே அஞ்ஞானம்தான் போங்க:-)

said...

வாங்க எல் கே.

வாழ்த்த வயசு எதுக்கு? மனசு இருந்தால் போதுமே!

நன்றி.

said...

வாங்க வித்யா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

அந்தக் கணக்கும் இப்போ கவுண்ட் டவுன்.

30 தான்;-)))))

said...

வாங்க கோமதி அரசு.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

சுட்டா அப்புறம் எப்படி கட்ட? அதான் சுட்டாலும் வராது:-))))

தண்டுமாலைகள் கட்ட தமிழ்நாட்டைவிட்டா ஆள் இல்லை.

said...

துளசி மேம், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!(லேட் ஆ
சொன்னாலும் லேட்டஸ்ட் ஆ சொல்லிட்டேன்;))
வாழ்க வளமுடன்!-எழிலரசி பழனிவேல்

said...

Happy BirthDay Thulsi Madam!

said...

ராஜராஜேஸ்வரி! ருக்மணி எங்க காணோம்?
அந்தக் கோவில் அப்புறமா:)
போஜனசாலா பார்க்கவே நல்லா இருக்கு. கோடிப் புண்ணியம் துளசி உங்களுக்கு.
இத்தனை படங்களும் போட்டு அசத்தறீங்களே!

said...

Happy Birthday teacher.

21 more for 1000. (Naan padivai chonnen)

said...

வாங்க எழிலரசி.

ரொம்ப அழகான பெயர்!

புதுவரவு நம்ம வீட்டுக்கு?

வருக வருக.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க ஷைலூ,

'எல்லாத்துக்கும்' நன்றி!

said...

வாங்க வல்லி.

என்னப்பா இது? ருக்குதான் ராஜராஜேஸ்வரியாமே! அந்தத் துண்டுலே ரெண்டு பேரும் போட்டுருக்கு.

ஒருவேளை 'நாத்தனாருக்கு நமஸ்காரமோ?"

said...

வாங்க பிரசன்னா.

கணக்குலே வச்சுக்கணும்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

நிறைந்த படங்களுடன் கட்டுரை நன்று.

அனுமந்தடு இரண்டுகாலாலும் இந்தமிதி மிதிக்கிறாரே என்ன கோபம் வந்துச்சோ.

said...

வாங்க மாதேவி.

இந்த 'அனுமந்தடு'விஷயம்தாம்ப்பா இன்னும் சரியாத் தெரியலை.

கே ஆர் எஸ் சொல்றேன்னு சொல்லி இருக்கார். பார்க்கலாம்.