Sunday, February 14, 2010

த்ரிவேணி காட் (குஜராத் பயணத்தொடர் 22)

சோம்நாத் கோவிலுக்கு எதிர்ப்புறமாப் போகணுமுன்னு சொன்னதும் போய்க்கோ''ன்னுடுச்சுப் போலீஸ். இடப்பக்கமாப் பிரியும் சாலையில் போனோம். அட்டகாசமான அலங்கார வாயில். ஹிரண், கபில், சரஸ்வதி நதிகள் சங்கமமாகும் இடமாம். சரஸ்வதி நதி யார் கண்ணுக்கும் புலப்படாமல் பூமியடியில் பாய்ந்து ஓடுதாம். பித்ருக்களுக்கு இங்கே தர்ப்பணம் செய்வது விசேஷமாம். அழகான சின்னச்சின்ன மண்fடபங்கள் ஆத்தோரமாக் கட்டிவச்சுருக்காங்க.
வானத்துக்கு ஏகின நல்விருந்தினருக்கு தர்ப்பணம் செஞ்சுவைக்க புரோகிதர்கள் செல்விருந்து ஓம்பி வரும் விருந்து காத்திருக்காங்க.

மொரார்ஜி (பாய்) தேசாய் இந்த சோம்நாத் ட்ரஸ்ட்டுக்கு ஈடுபாடுடன் சேவை செஞ்சுருக்காராம். அவரை கவுரவிக்க ஒரு சிலை, இந்த வளாகத்துலே வச்சுருக்காங்க.

உள்ளே நுழையும்போதே மீனுக்குச் சாப்பாடு போட்டுப் புண்ணியம் தேடிக்குங்கன்னு சொல்லி 'பிஸ்கெட்' விக்கறாங்க. பாவம்..... மீன்கள். பிஸ்கெட்டும் கேக்குமாத் தின்னு வளருது!
சங்கு, சிப்பிகளால் ஆன அலங்காரப்பொருட்கள், பிள்ளையார் பொம்மைகள் எல்லாம் செஞ்சு விக்கறாங்க. அழகாத்தான் இருக்கு. ஆனா நமக்கு வேணாம். படகுச்சவாரி செய்ய விருப்பமானாலும் போய்வரலாம்.
இறந்தவர்களை எரியூட்ட அருமையான வகையில் மேல்கூரையோடு கட்டடங்கள் ஆற்றங்கரையில் இருக்கு. இப்படியே எரிச்சு அஸ்தியையும் ஆத்துலே கரைச்சுடலாம். யாரோ எரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க, நாங்க போன சமயம்.

இந்தப்பக்கம் சாலையின் எதிர்வரிசையில் கோபுரமும் கொடியும் கண்ணுலே பட்டதேன்னு கடந்துபோனோம். வரிவராகங்கள் குடும்பம் ஒன்னு ஜாலியாத் திரியுது! காம்நாத் மந்திர். வாசலில் இருந்தவரிடம் குஃபா இருக்கான்னால் இருக்காம். நம்ம குகைதான் இங்கே குஃபா.
சங்கரமடம் நிர்வகிக்கும் கோவில் இது. ஆதிசங்கரர், சிவன், சரஸ்வதி, நரசிம்ஹர்னு தனித்தனிச் சந்நிதிகள். குகைக்குப் போகும் வழின்னு ஒன்னு காமிச்சாங்க. தரையில் இருந்து ரெண்டடி உசரமா ஒரு வழி. உக்கார்ந்த நிலையில் அதுவழியாப்போய் மறுபக்கம் படியில் இறங்கலாம். அங்கே சின்னதா, நின்னால் கூரை தலையில் இடிக்கும் அளவுள்ள ஒரு அறை. ஆதி சங்கரர் சிலைகள் ஒரு ஏழெட்டு இருக்கு. உக்கார்ந்து நாமும் தியானம் செஞ்சுக்கலாம். வெளியே வர அதே வழியில் தலையை நீட்டித் தவழ்ந்து வந்துறலாம். இன்னொரு அறையில் நிறைய 'சேஷலிங்கங்கள்'.

இந்தக் கோவிலையொட்டிய இன்னொரு வாசலில் நுழைஞ்சால் பக்கத்துக் குன்றுக்கு ஏறும் படிகள். இந்த ஏற்றத்தின் சரிவுகளில் எல்லாம் வீடுகள் இருக்கு. அன்றாட வாழ்க்கை, வீட்டுவேலைகளுக்குப் பங்கம் இல்லாம எல்லாம் நடக்குது. பாத்திரங்களையெல்லாம் தேய்ச்சு வாசலில் காயவச்சுக்கிட்டு இருந்தாங்க சிலர்.
இந்த வீட்டோடுவீடா அங்கே சூரியனுக்கான ஒரு கோவில். சூரஜ் மந்திர். ஒரிஜனல் சோம்நாத் கோவிலோட வயசுதான் இதுக்கும்! கோவிலின் அருமை தெரியாத மக்கள்ஸ், கோவில் மாடத்துலே கயிறுகட்டி, துணிகளை உலர்த்தி இருக்காங்க! 'சூரியன்' காயவச்சுருவான்!
கோவிலுக்குள்ளே போனால்...ஒரிஜனல் சிலைகள் எல்லாம் அந்நியப் படையெடுப்பால் காலி. சின்னதா ஒரு சிலை, கடைகளில் விற்கும் சூரியன் முகம் (வால் ஹேங்கிங்!!) இப்படி வச்சு கருவறை! பாலும்நீருமா சேர்த்த ஒரு தீர்த்தம். வீட்டுக்குள்ளே உக்காராம, இங்கே ஒரு ரெண்டு மணிநேரம் ஓய்வா உக்கார்ந்தா வர்ற வருமானம் வந்துட்டுப்போகுதுன்ற தோணல்.
கருவறையைச் சுத்திவந்தால் பழங்காலம் மனசுலே பச்சக்ன்னு வந்து ஒட்டுனாலும், சூரியன் & மனைவியின் அருமையான சிற்பங்களை சுண்ணாம்பும் காரைன்னு கொண்டு பூசி வச்சுருப்பதை என்னன்னு சொல்ல? இங்கேயும் ஒரு படிக்கிணறு இருக்கு.
இந்தியாவின் 'இப்போதைய தேசிய விளையாட்டை' சின்னபசங்க குழு ஒன்னு ஆடிப்பழகுது.

பெருமூச்சோடு இடத்தை விட்டு கிளம்புனால் ஹிங்களாஜ் மாதா கோவில் இந்தப் பக்கம்னு ஒரு அம்பு. ரெண்டு மூணு படி இறங்கி கீழே போனால் ஒரு மண்டபம். அதுலே இருந்து ஒரு பக்கம் சின்னதா, அகலக்குறைவா மாடிப்படி ஒன்னு கீழே போகுது. ஹிங்களாஜ் குகை. மண்டபத்தின் எதிர்ப்பக்கத்தில் சிவலிங்கம் ஒன்னு பெருசா,. ஸித்தநாத் மஹாதேவ், நந்தி, பிள்ளையார் சந்நிதி. பக்கவாட்டில் நின்னு 'குகை'க்குள் இறங்கிப் போனாங்க ஒரு பெண்மணி. என்னைவிட இன்னும் கொஞ்சம் ஸாலிட்டான உடம்பு!
எனக்கு ஒரே யோசனையா இருக்கு. போகலாமா வேணாமான்னு. கோபாலைமட்டும் போய்ப் பார்த்துட்டு வாங்கன்னேன். அதுக்குள்ளே இன்னொருத்தர் போய்வந்து மெள்ள இறங்கிப்போகலாம். பிரச்சனை இல்லைன்னார். அட! தமிழ்க்காரர். ராஜ்கோட்லே வேலை செய்யறார். அப்பா அம்மா குஜராத் விசிட் வந்துருக்காங்கன்னு கூடவே கிளம்பி வந்துருக்கார். ஸாலிட் அம்மாவின் கூடவே அங்கே வந்த ஒரு பொண்ணு, 'ஆண்ட்டி...ரிஸ்க் எடுக்காதே. குகைக்குள்ளே மாட்டிக்கிட்டா வம்பு'ன்னு சொன்னதும், ஸாலிட் அம்மா, 'அதெல்லாம் ஒன்னுமில்லை. நானே போயிட்டு வந்துட்டேன். நீங்க தாராளமாப் போகலாம். பக்கவாட்டுலே இறங்கணும்'னு பால் வார்த்தாங்க.

கோபால் படிகளில் இறங்கிப் போயிட்டார். கொஞ்சம் யோசனைக்குப்பிறகு, 'துணிந்தபின் மனமே...............'ன்னு நானும் இறங்கினேன். பயமுறுத்துன அளவுக்கு மோசம் இல்லை. பக்கவாட்டுச் சுவரில் பிடிச்சுக்க ஒரு கம்பி வச்சாங்கன்னா இன்னும் வசதியா இருக்கும். சும்மா ஒரு பத்துப் படிக்கட்டுகள்தான். டைல்ஸ் எல்லாம் பதிச்சு வச்சுருக்காங்க. கடைசிப் படிக்கட்டில் உக்காந்து காலைத் தொங்கப்போட்டு இறங்கினால் சுலபம்.

இதுவும் ரொம்பச் சின்ன அறையா, ஒரு மூணு பேர் உக்காரும் அளவுலே இருக்கு. அங்கே இருந்த மேடையில் கோபால் உக்கார்ந்துருந்தார். பக்கத்துலே இன்னொரு துவாரமா வழி. தவழ்ந்துதான் போகணும். போனேன். அதுவும் சின்ன அறை. இதுதான் குகைக் கோயிலாம். பஞ்ச பாண்டவர்கள் வந்து வழிபட்ட தலமாம். பாரதப்போருக்குத் தயாராகும்போது, வெற்றி பெறணுமுன்னு, இங்கே இந்த ஹிங்களாஜ் மாதாகிட்டே வேண்டுதல் வச்சாங்களாம்.
ஒரு பூசாரி குறுகி உக்காந்துக்கிட்டு நமக்கு நெற்றியில் சிந்தூரம் வச்சுவிடறார். குஃபா கோயில்கள் கூடுதலா இருக்கும் பகுதிகள் இவை.

நல்ல வசதியான கல் இருக்கைகள் எல்லாம் போட்டு இந்த முன்மண்டப ஹால் நல்லா இருக்கு. பக்கத்துலேயே விழுதுகள் தொங்கும் ஆலமர மேடை. எனக்கும் 'எம் ஜி ஆர் ஆக்ட்' கொடுத்து வருசக்கணக்காச்சேன்னு, கொசுவத்தி.... சின்னதா ரெண்டுமுறை தொங்கூஞ்சல் ஆடிட்டுக் கிளம்பினேன்.

கொஞ்சம் படங்கள் ஆல்பத்துலே இருக்கு. பாருங்க.

பயணம் தொடரும்.....:--)

12 comments:

said...

//'சூரியன்' காயவச்சுருவான்!//

:)

அப்ப க(கு)ளத்தில் இறங்கிட்டீங்களா.. :)

said...

அட! கவனிச்சுட்டீங்களா கயலு:-))))

'தமிழ்நாட்டை' என்பதைச் சொல்லலை:-)

said...

நாம பர்கர் பிஸ்ஸான்னு மாறும் போது பாவம் மீனுங்களுக்கும் ஊட்டி வளர்ப்போம்னு நினைச்சிருப்பாங்க:)!

வரி வராகம் இப்பத்தான் பார்க்கிறேன்.

//'துணிந்தபின் மனமே...............'ன்னு நானும் இறங்கினேன்.//

வெற்றி வாகை சூடியதை பிக்காஸாவிலும் பார்த்தேன்! தொங்கூஞ்சலும்:)!

said...

படமெல்லாம் இனிதான் பார்க்கணும். அதென்ன வரி போட்ட வராஹங்கள். அதிசயமா இருக்கே! ஏம்பா எதுக்கு இப்படி குறுகலா கீழ போகிற மாதிரி படிகள் காட்டி, பாதாளத்துக்குப் போகச் சொல்றாங்க.? ரொம்பத்தான் சூரியப் புகழாப் போச்சு:) உண்மையிலியே அந்த நீத்தார் கடன் இடம் நன்றாக இருக்கிறது.

said...

ஏதோ நாங்களே போய் பாக்குற போல இருக்கு
வாழ்க உங்க தொண்டு [பயணத் தொடர்]

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கல்ச்சர் ச்சேஞ்ச் அதுகளுக்குமா?

ஆஹா:-)))

பாவம்...அந்த விழுதுகள்!!!

said...

வாங்க வல்லி..

ஒல்லி உடம்பின் அவசியத்தை மறைமுகமா உணர்த்துராங்களோ!!!!

said...

வாங்க கண்மணி..

தொண்டூழியம் செய்வது நமக்குப் புதுசா என்ன?

வாழ்நாள் முழுக்க இதுதானே:-))))))

said...

வீரசாகசங்கள் அட்டகாசம். :-))

said...

வாங்க அமைதிச்சாரல்.

நாமும் 'ரௌடி தான்'ன்னு காமிச்சுக்கணுமில்லே:-)))))

said...

ஆத்தோர அழகான சின்னச்சின்ன மண்டபங்கள், குஃபா. படங்கள் நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது. நன்றி.

said...

வாங்க மாதேவி.

மறக்காமக் கூடவே வர்றீங்க. நன்றிப்பா.