Friday, July 23, 2010

நின்றார் நின்றார் நெடுமரமாக நின்றார் (தாய்லாந்து பயணம் பகுதி 5)

இந்திரவிஹாரம் என்ற பெயரே ரொம்பப் பிடிச்சுப்போச்சு. இறங்கி உள்ளே போகும்போதே ஒரு சின்ன மண்டபத்தில் பிக்ஷூ ஒருத்தர் உக்காந்துருந்தார். அவர்முன்னே ரெண்டு பேர் மண்டியிட்டு நமஸ்கரிச்சுக்கிட்டு இருந்தாங்க. முறைச்சுப் பார்த்தால் நல்லா இருக்காதேன்னு கண்ணை எதிர்ப்புறம் ஓட்டினால்..... சுவர் ஓரமாக நெடுக நிற்கும் கண்ணாடி அலமாரிகளில் தட்டுத்தட்டாப்போட்டு வரிசைவரிசையா பீங்கான் ஜாடிகள் விதவிதமா இருக்கு. இறந்தவர்களின் அஸ்தியாம். 'ஐயோ.... என்ன ஆச்சு? இவ்வளவு பேரா இறந்துட்டாங்க?'ன்னேன்.
புன்முறுவலோடு நான்ஸி சொன்னது...... "ஒரே நாளில் இறக்கலை இதெல்லாம். அந்தந்தக் குடும்பம் தங்கள் குடும்பத்தினரின் அஸ்திகளை, அதற்கான கட்டணம் ஒன்னு செலுத்தி இங்கே கொண்டுவந்து வைப்பது"
கொதிக்கும் பளிங்குக்கல் படிகள் நாலைஞ்சு ஏறி போனால், சின்னதா இருக்கும் நிழலில் ஒடுங்கி ஒரு கோவில்பூனை குறுகி உக்கார்ந்திருக்கு. க்ளிக்கிட்டு சந்நிதிக்குள்ளே நுழைஞ்சேன். புத்தர் 'இருந்தார்' நிலையில் போஸ்.

சுவர்களில் எல்லாம் அவர் வாழ்க்கைக் கதைகளைக் கையால் வரைஞ்சு வச்சுருக்காங்க. கோவில் முகப்பு, கதவுகள் எல்லாம் படு அலங்காரமா இருக்கு. முகப்புக்கு முன்னே 'செமா' வகைக் கற்களால் ஆன ஒரு அமைப்பு. . அடுக்கடுக்கா நில விளக்குபோல! அதன் உச்சியில் நாலுபுறமும் யானை!

இதுக்கு நேர் எதிரா இந்தப் பக்கம் ஒரு கண்ணாடித்தொட்டியில் பக்கவாட்டுலே இருக்கும் சின்னத்துளைகள் வழியா, வெளிவரும் நீர்த்தாரை.
இது புனித நீராம். பாவங்களைப் போக்குமாம். தலையில் தெளிச்சுக் கொஞ்சம் பாவத்தைப் போக்கிக்கலாமுன்னு நினைக்கும்போதே ஒரு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதைவந்து மொய்த்தது. எல்லோரும் தமிழாட்கள். ஆஹா.... நம்ம பாவம் கிடக்கட்டும். அவுங்க பாவம் ஒழியட்டும்னு கோவில் பக்கவாட்டு வாசலில் அடுத்த பக்கம் போனால்......
பெரியதொரு வளாகம். இடக்கைப் பக்கம் நெடுநெடுன்னு 32 மீட்டர் உசரத்தில் நிற்கிறார் புத்தர். 1867 இல் அரசர் நாலாம் ராமாவின் காலத்தில் இந்தச்சிலையைச் செஞ்சுருக்காங்க. சின்னச்சின்னக் கண்ணாடித் துண்டுகளை இதில் மொஸைக் வேலைப்பாடாப் பதிக்கவே 60 வருசங்கள் ஆச்சாம். இப்போ தங்க நிற அங்கியோடு வெயிலும் மழையும் காற்றும் கொண்டு வலக்கையை மடிச்சு அதில் பிடித்திருக்கும் பிக்ஷைப் பாத்திரத்தோடு நிற்கிறார். எனெக்கென்னவோ கொஞ்சம் அகலமான மூக்கோன்னு ஒரு தோணல். கால்நகங்களில் பூத்தொட்டிகள் வச்சு விட்டுருக்காங்க! என்னதான் அலங்காரமுன்னாலும் இப்படியா?
புத்தருக்கு எதிரா சுற்றிலும் கோவில் வளாகம் முழுசும் கூரைபோட்ட மண்டபம் மூணு பக்கங்களில் இருக்கு. அதில் சுவற்றோரமாக இன்னும் ஏராளமான கண்ணாடி அலமாரிகளும் அஸ்திப் பாத்திரங்களும் வரிசை கட்டி நிற்குது. புத்த பிக்ஷு ஒருவர் 24 மணிநேரமும் அயராமல் இருந்தவாக்கில் புத்தரை நமஸ்கரிச்சுக்கிட்டே இருக்கார். அச்சுஅசலான உருவம். நல்லாச் செஞ்சுருக்காங்க.


வளாகத்தின் சுவரைக்கூட விட்டுவைக்காமல் அதுலேயும் அடுக்கடுக்கா அஸ்திகளுக்கான ஷோ கேஸ்கள்.
இங்கேயும் ஒரு நான்முகன் இருக்கிறார்.
தோலுறிஞ்ச சேஷ புத்தர்னு முதலில் நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் பார்த்தால் பக்தர்கள் கொண்டு வந்து அங்கங்கே ஒட்டிவைக்கும் தங்க ரேக்குகள்
எங்கே பார்த்தாலும் அஸ்தி ஜாடிகள்தாங்க
இங்கே மூணு கோவில் மிய்யூஸ் இருக்காங்க. அதுலே ஒருத்தர் எவ்வளவு கம்பீரமா ராஜா மாதிரி உக்கார்ந்துக்கார் பாருங்க.
இங்கேயும் வார புத்தர்கள் ஏழுபேரும் ஒரு மேடையில் காசு போடும்போது ஒவ்வொருத்தருக்கும் இத்தனை எண்ணிக்கைன்னு ஒரு கணக்கு இருக்காம் . ஒருத்தருக்கு ஒன்பது, ஒருத்தருக்கு பனிரெண்டு ஒருத்தருக்கு ஒன்னு இப்படி. அந்த எண்ணிக்கைக்கேற்றபடி ஒவ்வொரு உருவச்சிலை முன்பும் பாத்திரங்கள். பணம் கொஞ்சம் (?) உண்டியலில் போட்டுட்டு அங்கே ஒரு கிண்ணத்தில் செப்புக்காசுபோல் ஒன்னு நிரப்பி வச்சுருப்பதை எடுத்து அதை எண்ணிக்கைபடி போட்டுக்கலாம்.


டோக்கன் மாதிரி செப்புக்காசு. தேவலோகக் காசா இருக்கணும்.இல்லே?

டெர்ரகோட்டா ஓடுகள் அங்கே கிடைக்குது. நம் பிரார்த்தனைக்கு ஏற்றபடி அவைகளை வாங்கி அங்கே இருக்கும் ஸ்டேண்டில் நம்ம பெயரோடு வச்சுடலாம். கோவில் கூரைகளை மாத்தும்போது அவை பயனாகும். எல்லாம் கோவில் வருமானத்துக்கு வழி செய்யுது. பெரிய வளாகம். சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்காங்க.

வெளியே வந்து தெருவில் நாம் போய்ச்சேருமுன் இருக்கும் அலங்காரவளைவில், சித்தார்த்தர் தன்னுடைய முடியைத் தானே வெட்டிக் களைவதுபோல ஒரு சுதைச்சிற்பம் இருக்கு. பக்கத்தில் ஒரு குதிரையும் மண்டியிட்ட அரசனுமாய்...... புத்தர் கதை தெரிந்தவர்கள் சொல்லுங்க.
ஊருக்கு நடுவே இருக்கும் அரண்மனைத் தோட்டத்தையொட்டி வெளிப்பக்கமாய் இருந்த சாலையில் ஒரு பெரிய சுற்று முடிச்சு ஒரு நகைக்கடைக்குப் போய்ச்சேர்ந்தோம். வழியில் ஒரு இடத்தில் நல்லதா ஒரு கோவில் கண்ணில் பட்டுச்சு. அங்கே போகலாமான்னு கேட்டதுக்கு இந்த டெம்பிள் டூரில் மூணு கோவில்களும் ஒரு நகைக்கடையும், டூர் ஆஃபீஸ் போய் இன்னும் நமக்கு வேண்டியவைகளைத் தெரிஞ்செடுப்பதும்தான் அடக்கமாம். (இத்தைப் பார்றா???? மொதல்லேயே தெரிஞ்சுருந்தால் இந்த மூணு மணிநேரம் முழுவதும் கோவில்களிலேயே செலவழிச்சுருக்கலாம். அப்ப என்ன செய்வாங்களாம்??)

"நான்ஸி, பாங்காக்கிலே எத்தனை கோவில்கள் இருக்கு?"

"நானூறு."

"வாட்?"

"வாட்ஸ்தான்:-))))"

"ஹைய்யோ..............."


ஏற்கெனவே பயணத்துக்குக் கிளம்புமுன் நான் எடுத்த முன்முடிவை மனசுக்குள் பாராட்டிக்கிட்டே நகை பார்க்கக் கடைக்குப்போனேன். கல்லெல்லாம் வாங்கவே போறதில்லைன்னு இருக்கும்போது கண்ணிலே பார்த்தால் என்ன தப்பு? சிரிக்கும் பன்றிகளும் முயல்களும் காளைகளும், யானைகளுமா நம்மை வரவேற்பதுபோல் வாசல்படிகளில் வச்சுருக்காங்க. எல்லாம் தங்க நிறம். இன்னிக்கு ரொம்பவே தங்கம் பார்த்தாச்சு இதெல்லாம் ஒன்னுமே இல்லை என்ற மிதப்போடு கடைக்குள் நுழைஞ்சு அவுங்க காட்டுன அரிய கற்கள் பாலீஷ் பண்ணும் முறைகளையும் அடுத்த ஹாலில் இருந்த நகைகளையும் பார்த்து பாராட்டி நாலு வார்த்தை சொல்லிட்டு ஒன்னும் வாங்கிக்காம வெற்றிகரமா வெளியில் வந்தேன்.

அங்கே, நம்ம நான்ஸி போட்டுருப்பதுபோல உடை அணிஞ்ச (யூனிஃபார்ம்) எல்லா கைடுகளும் உக்காந்து கதைபேசிக்கிட்டு இருக்காங்க. சொல்லிவச்சு இங்கே கொண்டுவந்து விட்டுடறாங்க. நாம் வாங்கும் நகையில் ஒரு கமிஷன் இவுங்களுக்கு உண்டாம். அடுத்த ஸ்டாப் இவுங்களோட சுற்றுலா ஆஃபீஸ். அங்கே போனால் ஒரு பத்திருபது மேசை போட்டுக்கிட்டு ஆட்கள் நம்மைப் பிடிக்க ரெடியா இருக்காங்க. என்னென்ன பார்க்க விருப்பம்? எத்தனை நாள் இருக்கீங்க? எந்த டூர் வேணும் இப்படி ஏகப்பட்ட கேள்விகள். அரைநாள் முழுநாள்ன்னு மொத்தம் 21 வகைகள் வச்சுருக்காங்க. நமக்கு விருப்பமான சில டூர்கள் நாள் முழுசும், இல்லைன்னா காலை 6 மணின்னு இருக்கு. நடக்காத வேலை.

யோசிச்சுட்டு போன் செய்து புக் பண்ணறேன்னு சொன்னால் கூடாதாம். இப்ப இந்த விநாடியே பதிவு செஞ்சுக்கணுமாம். போன் பதிவு எடுக்கமாட்டாங்களாம். 'வேணாம் ஆளைவிடு'ன்னு தப்பிச்சு வெளியே ஓடிவந்தேன். நம்ம வண்டி ட்ரைவர் சாப்பிட்டுக்கிட்டு இருந்தவர் ஓடிவந்து சாப்பாட்டை மூடிவைக்கப் போனார். பாதி சாப்பாட்டுலே யாரையும் எழுப்பறது பாவம்னு எங்க பாட்டி சொல்வது மனசுலே இருந்துச்சு. கூடவே எல்லாக் கஷ்டங்களும் இந்த ஒரு சாண் வயித்துத்துக்குதான்னு வேற அப்பப்பச் சொல்வாங்க. வேணாம். நான் காத்திருக்கேன். நீங்க சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வாங்கன்னேன். அதுவரைக்கும் சும்மா இங்கே நிக்கணுமா? . கொஞ்ச தூரத்தில் எதிர்வரிசையில் இருக்கும் துணிக்கடைக்குப் போகலாம். அங்கே தாய் சில்க் கிடைக்குமுன்னு நான்ஸி என்னைக் கூப்பிட்டுப்போனாங்க.

பிளெயினா எல்லா நிறங்களிலும் ஸூட் துணி மாதிரி ஒன்னு நிறைஞ்சு கிடக்கு. ரெண்டே நாளில் தச்சும் கொடுப்பாங்களாம். மீட்டர் 600 பத். ரெண்டு மீட்டருக்கு மேலே வாங்கினால் 500ன்னு குறைச்சுக்குவாங்களாம். ஹிந்தி நடிகர் ப்ரேம் சோப்ரா ஒரு படத்தில் விதவிதமான நிறங்களில் ஸூட் போட்டுக்கிட்டு வருவார். அப்படி ஒரு ஸூட்டில் கோபாலை நினைச்சுப் பார்த்தேன்.................. ஐயோ.....விடு ஜூட்:-)

இதுக்குள்ளே சாப்பாட்டை முடிச்சுட்டு வந்துட்டார் ட்ரைவர். நன்றியால் அவர் நெஞ்சு நிறைஞ்சு போச்சாம். என்னிடம் சொல்லச்சொல்லி 'தாய்' மொழியில் நான்ஸிகிட்டே சொன்னாராம். ம் ம் ....இருக்கட்டும். பரவாயில்லை.

இப்ப ஹொட்டேலுக்குத் திரும்பிப்போய்க்கிட்டு இருக்கோம். அரைநாள் சுற்றுலா முடிஞ்சது. மீதி இருக்கும் அரைநாளை என்ன செய்யப்போறேன்னு கேட்ட நான்ஸிக்கு, எனக்கு கிராண்ட் பேலஸ் போகணும். எவ்வளவு நேரம் எடுக்குமுன்னு கேட்டேன். அது உங்க நடை வேகத்தைப் பொறுத்துன்னாங்க. இதுக்குக் கட்டணம் எவ்வளவுன்னா.....

"இன்னிக்குப் பிற்பகலே போறதுன்னா 2500. இன்னொரு நாள் போகணுமுன்னா 3000 பத். இன்னிக்கே வச்சுக்கலாமா? "

அட ராமான்னு கூவக்கூட முடியாது. ராஜாவைக் கூப்பிட்டதா ஆகிரும்! இப்போ இருக்கும் அரசரைப் பார்த்துருக்கீங்களான்னு நான்ஸியைக் கேட்டேன். இல்லையாம். தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்காங்களாம்.

'ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும். இன்னிக்கு நான் தயாரா இல்லை. நாளைக்கு போகலாமான்னு யோசிச்சுச் சொல்றேன். போறதா இருந்தால் மாலை 7 மணிக்கு முன் ஃபோன் செய்யறேன்'னு செல் நம்பரை வாங்கி வச்சுக்கிட்டேன்.

திரும்ப அறைக்கு வந்தப்ப மணி பனிரெண்டே முக்கால். மேஜைமேல் கிடந்த இந்தக் கோவில் சுற்றுலா ப்ரோஷரைத் தற்செயலாத் திறந்து பார்த்தால்...... மூணாவது கோவிலா இருந்துருக்க வேண்டியது Wat Benchamabopit என்ற மார்பிள் கோவில். 'இருந்தாரா' புத்தர் அங்கே இருக்கார். நமக்குக்கிடைச்சது Wat Indraviharn என்ற நின்றார் கோவில். கிடைக்கணும் என்றுள்ளது கிடைச்சுருச்சு!


இன்னிக்கு டூர் பரவாயில்லை. 'நின்றார், இருந்தார், கிடந்தார்'ன்னு மூணு நிலைகளில் 'சாமி'யைப் பார்த்தாச்சு.

தொடரும்.......................:-)

37 comments:

said...

//புன்முறுவலோடு நான்ஸி சொன்னது...... "ஒரே நாளில் இறக்கலை இதெல்லாம். அந்தந்தக் குடும்பம் தங்கள் குடும்பத்தினரின் அஸ்திகளை, அதற்கான கட்டணம் ஒன்னு செலுத்தி இங்கே கொண்டுவந்து வைப்பது"//

சிங்கை மலேசியாவில் சீனர்களிடமும் இந்த வழக்கம் உண்டு, அடக்கம் செய்யும் இடங்களை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அரசு எடுத்துக் கொள்ளும், அங்கு பூங்காக்களை அமைப்பார்கள், அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பணக்காரர்களாக இருந்தால், அஸ்தியை இது போன்ற இடங்களில் வைக்கிறார்கள், வீட்டு விலையில் 1/4 பங்கு ஒரு அஸ்தி வைக்கும் இடத்திற்கான நிரந்தர கட்டனம். 100 ஆயிரம் வெள்ளி வரையிலும் கூட கொடுத்து அஸ்தியை வைக்கிறார்கள்

said...

வாங்க கோவியார்.

இது ஒரு சீன ஸ்டைல் கோவில்தான்.

'அடக்கம்' செய்யும் இடங்களை அரசு எடுத்துக்கிட்டு பூங்கா அமைப்பது நல்ல விஷயம்தான்.

ராத்திரியில் ஹாயா உலவ ஏதுவாக இருக்கும்!

பேசாமல் நம் வீட்டுலேயே ஒரு பூஜை அறை உண்டாக்கி அதில் நம் முன்னோர்களின் அஸ்தியை வச்சால் என்னன்னு இப்ப எனக்குத் தோணுது.

எங்க கப்பு & ஜிகேவின் அஸ்திகளை என் பூஜை அறையில்தான் வச்சுருக்கேன்.

said...

அன்பு துளசி, ரொம்ப எக்ஸ்பென்சிவ் சிடி போல இருக்கே பாங்காக்.!எல்லாம் பிரம்மாண்டம். எல்லாம் தங்கம்:) இதில் அஸ்திகளுக்காக வேற தனிக் கட்டிடங்கள்.
பூனையார் ஜோராயிருக்கிறார்.

said...

மூணு பிள்ளையார் வைத்த அந்த சிற்பம் வெகு அழகு.பெரிய மூக்குத்தான்:)புத்தருக்குப் பொறுமை ஜாஸ்தி. அதான் கால் நகத்தில தொட்டி வைப்பதைக் கண்டு கொள்ளலை.

said...

நம்ப டீச்சருக்கு எங்க போனாலும் ஒரு மியாவ் மியாவ் பூனை குட்டி கண்ணுக்கு தெரிஞ்சுரதுப்பா!!...:))

said...

ஏதோ அவ்வப்போது நல்லதாகக் கிடைக்கும்போது கொஞ்சம் உண்டியலில் போட்டு வைக்க வேண்டியதுதான். வேறே யார் எங்களுக்கு இந்த அளவுக்கு பூனைக்குட்டிகள் முதல் புத்தர்வரை விபரமாகக் காட்டப் போகிறார்கள்?

தீர்த்தம் சுத்தமாகத்தான் உள்ளது என்று தெரிவதற்காகக் கண்ணாடித் தொட்டியில் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.

டெரகோட்டா ஓடுகள் வாங்கி வைப்பது சிறப்பான விஷயமாக உள்ளது. சென்ற வருடம் கேரளத்தில் உள்ள சோட்டானிக்கரை ஆலயத்தில் ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் கல்தளம் அமைக்க இப்படித்தான் ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்று நன்கொடை வசூலித்தார்கள்.

said...

புத்தர் நிலையில் பூனை குட்டி
இரண்டாவது பூனைபடமும் அப்படித்தான்
கிடந்தார்நிலையில்.
நாலாம் ராமாவின் காலம்
நான்முகன் படம். பிள்ளையார் தலைநாலு இறுக்குமா?
நானூறு கோவில்கள்
படம் அருமை பயணம் தொடரட்டும்

Anonymous said...

எங்க போனாலும் யானையும் பூனையும் டீச்சர் கண்ல படுது. :)
புத்தர் விஷ்ணுவோட அவதாரம்னு சொல்லுவாங்களே. அதுதான் அந்த ஆதிசேத புத்தரோ

said...

நம் ஊரில் சாமியை தொட்டு,தொட்டு கும்பிடுவதுபோல் அங்கேயும் தொட்டு கும்பிட்டுதான் சேஷ புத்தர் இப்படி இருக்கரோ என்று நினைத்தேன் நல்ல வேளை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் டீச்சர்.நின்றார் எவ்வளவு பெரிய புத்தர் கால்களுக்கு மட்டும் தனி சந்நிதி நன்றாக உள்ளது டீச்சர் :))))

said...

இவ்வளவு புத்தரை பார்க்க போரடிக்கலை??
கஜமுகரையும் நான்முகமாக்கிடாங்களா?(ஒரு படத்தில் 3 முகம் மட்டும் தெரிகிறது)

said...

//டோக்கன் மாதிரி செப்புக்காசு. தேவலோகக் காசா இருக்கணும்.இல்லே?//

சேச்சே! துக்குனூண்டு செப்புக் காசுக்காகவா தேவலோகம் போவாங்க? அதுக்கு பக்கத்துல இருக்குற மியூசியம்-க்கே போயிறலாமே! தேவலோகத்தில் ஒன்லி வைரக்காசுகள் டீச்சர்! :)

நீங்க இத்தனை புத்தரைப் பார்த்து பார்த்து ஆசையை ஒழிச்சிட்டீங்க போல! அதான் செப்புக் காசெல்லாம் பாத்துட்டு தேவலோகக் காசு-ன்னு சொல்றீங்க! :)

said...

//பேசாமல் நம் வீட்டுலேயே ஒரு பூஜை அறை உண்டாக்கி அதில் நம் முன்னோர்களின் அஸ்தியை வச்சால் என்னன்னு இப்ப எனக்குத் தோணுது//

:)
பொதுவாக, நம் தர்மத்தில் அஸ்தி என்பது கரைக்கப்பட வேண்டிய ஒன்று! = இயற்கையோடு இரண்டறக் கலந்து விடுதல்!
You came from Dust & You go back to Dust என்பது பைபிள் வாசகமும் கூட!

தனி மனித வாழ்வில் ஆயிரம் போராட்டங்களையும் பாரங்களையும் சுமக்கும் உடல், அதெல்லாம் சுமந்து முடித்த பின்னாலும் கூட, பாத்திரம் என்னும் கூட்டுக்குள் அடைபட்டு விடக் கூடாது! அதுவும் நம் சுயநலத்துக்காக!

மாறாக இயற்கை அன்னையின் மடியில்...நீரோடோ, மண்ணோடோ, அவள் மடியில் ஐக்கியம் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லப்பட்டது!

நாம் நினைவு வைத்துக் கொள்ள ஏதுவாய் இருக்கும் என்ற சுயநலத்துக்காக, கூட்டுக்குள் கிளியை அடைத்து வைப்பது போல் அடைத்து வைத்தலை விட, சுதந்திரமாக இயற்கையில் ஒப்புவித்து விடுதலே நல்லது!
அது எரியூட்டலோ, மண்ணில் புதைத்தலோ...எதுவாகினும், back to nature! Thatz shd be the "natural" thing!

காந்தியடிகள் அஸ்தியைப் பல நதிகளிலும், கடலிலும் கரைத்தார்கள்! நேருவோ வயல்களில் தூவச் சொன்னார்!

அவர்களின் நினைவை வேறு பல நல்ல வழிகளில், அவர்கள் பெயர் கொண்ட சமூகப் பணியிலோ, அவர்கள் பயன்படுத்திய பொருட்களிலோ நினைவு வைத்துக் கொள்ளலாம்!

//குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அரசு எடுத்துக் கொள்ளும், அங்கு பூங்காக்களை அமைப்பார்கள்//

இன்னும் அருமை! இயற்கையோடு இரண்டறக் கலந்தும் ஆகியாச்சு! பூமி இன்னும் கொஞ்சம் பசுமையாவும் போகியாச்சு! இருப்பவர்களுக்கு நல்ல காற்றும் கிடைச்சாச்சி! இறந்தவர்களுக்கு நல்ல கதியும் கிடைச்சாச்சி! :)

said...

//கஜமுகரையும் நான்முகமாக்கிடாங்களா?(ஒரு படத்தில் 3 முகம் மட்டும் தெரிகிறது)//

அதுக்கு இன்னும் ரெண்டு முகம் பின்னால் இருக்கும் போல!
= பஞ்சமுகக் கணபதி!
டீச்சர் வீட்டுலேயே ஒரு பொம்மை இருக்குமே! :) அந்தப் பிள்ளையார் படம் சூப்பர்! சொடுக்கிப் பெருசாக்கிப் பார்த்தேன்!

said...

தரிசனம் நல்லபடியா ஆச்சு..

இந்த ஷாப்பிங் கூட்டிட்டு போற வழக்கம் நம்மூர் ட்ராவல்ஸ் ஆட்கள் மட்டும்தான் கடைப்பிடிக்கிறாங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.. அங்கியுமா:-))))

said...

வாங்க வல்லி.

கொஞ்சம் காஸ்ட்லியான சிடிதான். ஆனால் ஆட்டோ ரிக்ஷா கூலி ரொம்பவே மலிவு. சில சமயம் இலவசம். நான் கர்ப்பிணி இல்லைன்னாலும் கூட:-)

இதைப்பற்றி அப்புறம் சொல்றேன் இந்தத் தொடரில். ஓக்கே?

புத்தருக்கு மட்டும்தான் பொறுமை அதிகம்ப்பா:-))))

said...

வாங்கோ தக்குடு.

யானையா இருந்தா இன்னும் சட்னு கண்டுபிடிச்சுருவேன்! பூனை என்றதால் உத்துப்பார்க்க வேண்டி இருக்கு:(

said...

வாங்க பிரகாசம்.

ச்சும்மாத் தேங்காய் உடைப்பதும், பூமாலைகள் வாங்கிப்போடுவதும் தவிர்த்து கோவில் பராமரிப்புக்கான வழிபாடுகளை நான் ஆதரிக்கிறேன்.

தீர்த்தம் குடிப்பதற்கு மட்டும் ன்னு அங்கே ஒரு அறிவிப்பும் இருந்துச்சு.

said...

வாங்க ஹரி.

யானை உருவம் மூன்றுதான்னு நினைக்கிறேன். இதே போல கோவிலுக்கு இடதுபுறம் ஒன்னு இருக்கு. அங்கே உச்சியில் யானை இல்லை. மாவிலைபோல ஒரு டிஸைன் மட்டும்தான்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

இப்படி சேஷனை சேதாரமாக்கலாமோ?

பூனையும் கூட விஷ்ணுவின் அவதாரம்தான்:-) தூணிலும் துரும்பிலும் இருப்பவன் யானையிலும் பூனையிலும் இருக்கிறான்!

said...

வாங்க சுமதி.

நம்மூரில் எங்கேப்பா சாமியைத் தொட்டுக் கும்பிடறோம்? கருவறையில் (மீண்டும்) புக அனுமதி இல்லையே!

said...

வாங்க குமார்.

நமக்கு நம்மூரில் கோவில்களில் மீண்டும் மீண்டும் சிவனையும், பெருமாளையும் பார்த்தால் போரடிக்குதா?

கஜமுகன் மூன்று முகங்களுடன் இருக்கார். இந்தமாதிரி மூணுதலை யானை இங்கே ரொம்பவும் பிரசித்தமாம்.

said...

வாங்க கே ஆர் எஸ்.

//சேச்சே! துக்குனூண்டு செப்புக் காசுக்காகவா தேவலோகம் போவாங்க? //

நோ நோ.... அந்தக் கஷ்டம் வேணாமுன்னுதான் இங்கேயே வச்சுருக்காங்க. இதை 'மேலே' கொண்டுபோனால் எல்லாம் வைரக்காசா மாறிடுமாம். இங்கே வைரம் வச்சால் புத்தர் கொள்கைகளை மக்கள் மீறிடுவாங்க. அந்தப் பாவம் வேணாமேன்னுதான் செப்புக்காசு:-)


இன்னும் சில ஆண்டுகளுக்குப்பிறகு , மக்கள் தொகைப் பெருக்கத்தால் பூமியில் ஆறடி கிடைப்பதே அருகிவிடும். அப்போ எரிச்சேதான் ஆகணும். பஞ்ச பூதத்தில் ஒன்றான நெருப்பில் கலந்தபிறகு கிடைக்கும் மிச்சம் ஒரு பிடி சாம்பல்மட்டும்தானே? அதை ஜாடிக்குள் வைப்பதும் உயிரோடு உள்ள கிளியைக் கூண்டுக்குள் வைப்பதும் ஒன்னா? ஆத்மாதான் சுதந்திரமாப் பறந்து போயிருச்சேப்பா!!!!

டீச்சர் வீட்டில் பஞ்சமுகம் இருக்கு:-))

said...

வாங்க அமைதிச்சாரல்..

நம்மூர்லே நகைக்கடைக்குக் கொண்டு போறாங்களா? அட! எனக்குத் தெரியாதேப்பா!!!

தரிசனம் ஒரு பத்து சதம்தான் ஆச்சு. இன்னும் ஏராளமா பாக்கி இருக்கு. அதுவரை எல்லோரும் தியானத்தில் இருங்க:-)))

said...

நின்றார், இருந்தார், கிடந்தார்'ன்னு மூணு நிலைகளில் 'சாமி'யைப் பார்த்தாச்சு.::)))

intha line paasurathilum undu
வேங்கடமும், விண்ணகரும், வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும், நான்கு இடத்தும்
நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே,
என்றால், கெடுமாம்-இடர்

said...

இதே மாதிரி வெளியில் காத்தாட உட்கார்ந்திருக்கும் தெய்வங்களை தொட்டு கும்பிடும் வழக்கம் கிராமங்களில் நான் கவனித்திருக்கிறேன் டீச்சர்.

said...

ஜவுளிக்கடைக்கும் மத்த ஷாப்பிங் கடைகளுக்கும் அலேக்கா கொண்டுபோய் விட்டுர்றாங்க. நகைக்கடை இன்னும் அனுபவப்படலை :-)))

said...

வணக்கம் டீச்சர். பின்னூட்டம் போடலைன்னாலும் ஒங்க பதிவுகளைத் தொடர்ந்து படிச்சிக்கிட்டுதான் வாரேன்.

பயணக்கட்டுரைகளைப் பிரமாதமா எழுதுறீங்கன்னு நான் சொன்னா எல்லாரும் அடிக்க வருவாங்க. ஏன்னா... ரொம்பப் பிரமாதமா எழுதுறீங்கன்னு சொல்லனுமாம். ;)

அலுவலக வேலையா ஒரு மாசம் துருக்கி வந்திருக்கேன். இங்க எங்க பாத்தாலும் பூனைக. நீங்க பாத்தீங்கன்னா போட்டா பிடிச்சிக்கிட்டேயிருக்கனும். அவ்வளவு பூனைங்க. காலைல எந்திரிச்சி டாக்சி பிடிக்க வந்தா கால் கிட்ட வந்து நிக்கும். திரும்ப வர்ரப்போ இன்னும் சிலது வரும். படுக்கும். புரளும். மிரளும். ஓடும். ஓடி ஒளியும். இப்பிடி எதையாச்சும் செஞ்சிக்கிட்டேயிருக்கும். நீங்க கண்டிப்பா இந்தப் பக்கம் எட்டிப்பாக்கனும் (இது வரைக்கும் பாக்கலேன்னா).

அப்புறம் இன்னொரு விஷயம் சொன்னீங்களே. அந்த டிரைவர் சாப்பிடும் போது எழுந்திருக்கப் போனவரைத் தடுத்துச் சாப்புடச் சொன்னீங்களே. ரொம்பச் சரி. ஆடுற ஆட்டமும் ஓடுற ஓட்டமும் அதுக்குத்தானே. அதுனாலதான் சாப்பாட்டை வீணாக்குறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம். கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் முடியவே முடியாதுங்குற நிலை வந்தாலொழிய வீணாக்குறதில்லை.

புத்தர்களெல்லாம் அருமை.

இந்த உலகம் நிலையில்லாதது. நேற்று இருந்தது இன்று இல்லை. இன்று இருப்பது நாளை இல்லை. நாமும் அப்படித்தான். இப்பிடி நிலையில்லாத உலகத்துல கருணாநிதி, ஜெயலலிதா, ராஜபக்ஷேவா நம்ம மாறிடக்கூடாதுன்னு நிலையாமையைக் குறிக்க நினைக்க நெற்றியில நீறு பூசிக்கிறோம். அப்படியிருக்க நீடுதுயில் கொண்டவங்கள நீறுதுயில் கொள்ள வைக்கிறது எவ்வளவு பொருத்தம்னு தெரியலை. வள்ளுவரோட நீறு எடுத்து வெச்சிருக்கோமா... அவரோட துணிமணிகளை பாதுகாத்து வெச்சிருக்கோமா...ஆனாலும் எப்படி நினைவில் இருக்கிறார்! அவர் செய்த திருப்பணி. திருக்குறள் என்ற ஞானமேகம் ஆண்டாண்டு காலாமாக நின்று நிலைப்பதே அவர் பெருமை. அப்படி வாழனும். இது என் கருத்து.

said...

அக்கா உங்க பயணக்கட்டுரையை படித்ததும் நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு...படங்களும் மிக அழகு..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்....

said...

வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.

பாசுரத்துக்கு நன்றி.

ஒரே நாளில் இம்மூன்று நிலையிலும் பார்க்கணும். அப்பத்தான் பலன் உண்டுன்னு இன்னும் இங்கே யாரும் ஆரம்பிச்சு வைக்கலை போல இருக்கு!!!!

said...

சுமதி,

நீங்க கிராமக்கோவில்களைச் சொன்னீங்களா? ரொம்பச்சரி.

நான் ஆகமவிதிப்படிக் கட்டிய கோவில்களைச் சொன்னேன்ப்பா.

said...

அமைதிச்சாரல்,

இப்படியெல்லாம் இருக்குன்னே உங்க பின்னூட்டம் பார்த்துத்தான் தெரியுது. உள்நாட்டுச் சுற்றுலாவுக்கு நாம் தனி வண்டியா வாடகைக்கு எடுத்துக்கறதால் ....இதுவரை புரிபடாமல் இருந்துருக்கு போல!

நன்றிப்பா. தனிஷ்க்கில் கொண்டு விட்டால் தேவலை:-)))

said...

வாங்க ஆன்மீகச் செம்மலே!!!!

துருக்கி நல்லா இருக்கா? இஸ்த்தான்புல்லா? கோபால் அங்கே போகணுமுன்னு துடிச்சுக்கிட்டு இருக்கார்:-)

நீங்க தொடர்ந்து படிப்பதுக்கு நன்றி.

ஆமாம்..... எல்லோரும் வள்ளுவராக முடியுமா? ஆளாளுக்கு குறள் எழுத ஆரம்பிச்சா....... அரசுக்கட்டிலில் இருப்பவர் எதைன்னு எடுத்துக்குவார்? அவர் எழுதுனதையா?

ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு வகையான குணங்கள் செயல்கள் இருக்கேப்பா!!!

said...

வாங்க மேனகா.

ஆஹா... நீங்களும் வகுப்புக்கு வந்துகிட்டுத்தான் இருக்கீங்களா?

சமையலறையிலே எப்பவும் இருக்க முடியுதா என்ன? :-)))))

இன்னிக்கு அடுத்த பகுதி வந்தாச்சு.

கூடியவரை திங்கள் முதல் வெள்ளிவரை அஞ்சு இடுகைன்னு ஒரு (மனக்)கணக்கு.

said...

ஆமா டீச்சர். இஸ்த்தான்னா புல்லுதான். நல்லாவே இருக்குது ஊரு. கண்டிப்பா இங்க வந்து சுத்துங்க. பதிவு போடுங்க. நானும் வழக்கம் போலப் படிச்சிட்டுப் பின்னூட்டமும் போடுறேன். முடிஞ்சு கெளம்புறேன். அடுத்த செவ்வாய். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

said...

இந்திரவிஹாரம் பிரமாண்டமாகவே இருக்கு.

said...

ராகவன்,

பத்திரமாப் போயிட்டு வாங்க. அப்படியே இஸ்த்தான்புல் பதிவு ஒன்னு போடுங்க.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.