Friday, January 28, 2011

(பூம்பூம்)மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம்.

இருக்குன்னு தெரியும். ஆனா எட்டுமாசமா போக வாய்க்காதது இந்த மாட்டுப் பொங்கலுக்கு வாய்ச்சது. திடீர்னு செஞ்ச ஏற்பாடுன்னு அழைப்பிதழ் நொடியில் வந்தது டெக்ஸ்ட் மெஸேஜ் மூலமா. இடத்தை உரப்பிக்கணுமுன்னா கார்த்திக் ரெஸ்ட்டாரண்டுலே முன்பதிவு செஞ்சுக்குங்கன்னாங்க. தமிழர்களுக்கான சேதி முதல் சோறு வரை ஒருங்கிணைப்பாளரா இருப்பது 'கார்த்திக்'தான். முதல்நாள் போய் பதிவு செஞ்சு ஸீட்டுக்கான சீட்டு வாங்கியாச்சு.

மனிதப் பொங்கலாச்சேன்னு நேத்து மாலை சண்டிகர் முருகனைப் பார்க்கப்போனால் கோவில் வாசலில் சாம்பலும் கரியுமா ஏதோ அடுப்பு வச்ச அடையாளம். காலையில் வாசலில் பொங்கல் வச்சாங்களாம். அட! இதைப்பத்தி ஏன் முன்னாலேயே சொல்லலைன்னு நம்ம குருக்கள் கிட்டே கேட்டால்...... 'அவுங்க வந்து பொங்கல் வச்சாங்க'ன்னார். இந்த 'அவுங்க' என்பது நம்ம தமிழ் ஆட்களைத்தான். ஏறக்கொறைய அம்பதாயிரம் தமிழர்கள் இங்கே இருக்காங்க. அவுங்க யாரும் கோவில்பக்கம் வராதது நமக்கு ரொம்பவே மனக்குறைதான். இன்னிக்குப் பொங்கல் வைக்கவாவது வந்தாங்களேன்னு கொஞ்சம் மகிழ்ச்சியா இருந்துச்சு.

இவுங்க எப்படி இங்கே வந்தாங்கன்னா............. காமராஜர்தான் காரணம்.


இங்கே சண்டிகர் நகர நிர்மாணத்திற்கு (1954) வேலை செய்ய, காமராஜர் ஆட்சி காலத்தில் இங்கே அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ,வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து தப்பியவர்கள், இப்போ இங்கே சண்டிகர் நகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாக நல்ல மாதச் சம்பளத்துடன் வாழ்கிறார்கள். மூணுதலைமுறையா ஆகி இருக்கு. குடும்பங்கள் பெருகி இன்னிக்கு ஏறக்கொறைய அம்பதாயிரம் தமிழர்கள். நகரின் மொத்த ஜனத்தொகையில் ஏழு சதமானத்துக்கும் மேல்.

மேலே உள்ள பத்தி நம்ம தளத்தில் போனவருசம் எழுதுனது. இன்னும் கொஞ்சம் விவரம் வேணுமுன்னா இங்கே பாருங்க.


பத்தரைக்கு விழா ஆரம்பம். சரியா பதினோருமணிக்குப் போய்ச் சேர்ந்தோம். பாரதி பவன். செக்டர் 30B. கட்டிடத்தின் முன்வாசலில் போட்டிருக்கும் பெயர்ப்பலகையில் முன்னே நிற்பது தமிழ்! சண்டிகர் தமிழ் மன்றம். ஆஹா..............ஒரு பத்துப்பேர் நமக்கும் வேணுமுல்லே? அவுங்க படங்கள் வரிசையா நிலைவாசல் மேலே. அண்ணாதுரை, காமராசர், வ.உ.சி, வள்ளுவர், காந்தி, பாரதி, நேரு, சுபாஷ் சந்த்ரபோஸ், இந்திரா அம்மையார், பகத் சிங். அகலமான ரெட்டைக் கதவுகளோடு வாசல். பதினோராவது படமாக வாசல் நிலையில் முருகனின் குடும்பப் படம். உள்ளே நுழைஞ்சால் பத்தடி அகலத்தில் ஹால். வலது பக்கம் மாடிப்படி. இடது பக்கம் ரெண்டு கழிப்பறைகள். எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கதவு.
மாடிப்படி ஏறி மேலே போனால் கீழே இருப்பது போலவே சின்னதா நீண்ட ஹால். தெருப்பக்கம் பார்த்த பால்கனிக்கு ரெண்டு பக்கமும் பக்கத்துக்கொன்னா ரெண்டு சின்ன அறைகள். அவ்ளோதான் கட்டிடமே!
யுனிவர்ஸல் ஸ்டூடியோவில் படத்துக்கு போட்ட செட் நினைவுக்கு வருதே!

கீழே இறங்கிவந்து எதிர்ப்பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்தால் துணிச்சுவர்கள் வச்ச பந்தல். அலங்காரத்தோடு களைகட்டுது. நல்ல பெரிய இடம்தான். 2 Kanal இருக்கும். வடக்கே ஹரியானா பஞ்சாப், ஹிமாச்சல் ப்ரதேஷ், ஜம்மு & காஷ்மீர் இங்கெல்லாம் நில அளவை இப்படித்தான் கனால் ன்னு சொல்றாங்க. ஒரு கனால் என்பது 510 சதுர மீட்டர். பழங்கணக்குன்னா அரைக்கால் ஏக்கர். இன்னும் நம்மூர் கணக்குன்னா 2 கிரவுண்டுக்கும் கொஞ்சம் அதிகம். இந்த தமிழ் மன்றம் இருக்குமிடம் ரெண்டு கனால் என்பதால் நாலரை கிரவுண்டுக்கு பரந்துருக்கு.

அந்தக் காலத்துலே (1972) தமிழன்பர் ஒருத்தர் 35 ஆயிரத்துக்கு வாங்கித் தமிழ்ச்சங்கத்துக்கு தானமாக் கொடுத்துட்டார். இன்றைய மதிப்பில் இது 40 கோடிக்கு உசந்துருக்கு. இவ்வளோ பெரிய இடத்துலே பக்காவா ஒரு கட்டிடம் கட்டி தமிழ்ச்சங்கப் பயன்பாட்டுக்கு வச்சுக்கணுமுன்னு ஆசைதான். ஆனால்.............. நிதி வசதி இல்லையே:( தமிழ்மன்றக் காரியதரிசி நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகரின் கவலையைக் கேட்டால் நமக்கும் கவலையா இருக்கு.

பெரிய ஹால் ஒன்னு வசதிகளோடு கட்டி நம்முடைய பயனுக்குப் போக மற்ற நாட்களில் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்கு விடலாம். வருமானம் வரும். கட்டிடம் கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வாடகையில் கிடைக்கும் வருமானத்தில் இருந்து கடனை அடைக்கலாம். இப்படி எல்லாம் எங்களுக்கு யோசனை இருந்தாலும் கோடிகளைக் கடன் வாங்க பயமா இருக்கு, நம்மைப்போல சாதாரண மனுசர்களுக்கு. அங்கங்கே என்னன்னா............. லட்சக்கணக்கான கோடிகளில்........... சரி. நல்ல நாளுலே, இன்னிக்கு அந்த கொடுங்கணக்கெல்லாம் வேணாம்........... அப்புறம் ஒரு நாளு வச்சுக்கலாம்

காஞ்சி சங்கர மடம், ஒரு முறை இங்கே கட்டிடம் கட்டித் தருவதாகவும், அதுலே ஒரு பகுதியை மடத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்குவாங்கன்னும் ஐடியா கொடுத்துருக்காங்க. நம்ம ராஜசேகர்தான் முதல் ஆளா நின்னு இதுக்கு எதிர்ப்பைக் காமிச்சிருக்கார். தமிழ்மன்றத்தில் மதத்தின் குறுக்கீடு இருக்கக்கூடாது. அனைத்து மதத் தமிழர்களுக்கும் பொதுவா இருக்க வேண்டிய இடமுன்னு சொல்லி இருக்கார். அதனால் அந்த ஐடியா கைவிடப்பட்டுச்சாம். இது எங்களுக்கு பரம சந்தோஷமே!

வங்கின்னதும் இன்னொன்னு சொல்லத்தான் வேணும். இங்குள்ள தென்னாட்டு வங்கிகள் பலவிதங்களிலும் தமிழ்மன்ற நடவடிக்கைகளுக்கும், நம்ம கார்த்திகேயஸ்வாமி கோவிலுக்கும் உதவிக்கிட்டே இருக்காங்க. அதிலும் 'கெனெரா பேங்க் அது உங்களுடைய பேங்க்' என்னும் விளம்பர வரிகளை உண்மையாகவே கடைப் பிடிக்கிறாங்க.

இங்கே இருக்கும் தென்னிந்தியர்களும் நம்மாலான உதவிகளைச் செய்யணும் என்ற எண்ணத்தோடு, உதவி செய்யப் பின் வாங்குவதே இல்லை.

இப்பக்கூடப் பாருங்க நம்ம கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நிதி சேகரிப்பு ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்கு சண்டிகரிலும் சுற்றிலுமுள்ள பல ஊர்களிலும் இருக்கும் எல் அண்ட் டி கம்பெனி மக்கள்ஸ் நல்லாவே வாரிக் கொடுக்கறாங்க.

இந்த வங்கிகளும், எல் அண்ட் டியும் இல்லைன்னா பலவிதத் திட்டங்கள் நடந்துருக்குமா என்பதுகூட சந்தேகம்தான். இன்றைய விழாவிலும் இந்த தென்னிந்திய வங்கிகளின் அதிகாரிகள்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு உதவிக்கிட்டு இருந்தாங்க.
மேடை அலங்காரம், இசைக்கருவிகள், சவுண்டு சிஸ்டம், ஒலிபெருக்கி எல்லாம் சரிப்படுத்தக் கொஞ்ச நேரம் ஆயிருச்சு. இந்த நிகழ்ச்சி நடத்திக்க நிதி வேணுமே..... வருகை தந்தவங்க ஆளுக்கு நூறு ரூ என்ற கணக்கில் பணம் செலுத்திக்கலாமுன்னு ஒரு ஏற்பாடு. அதை இப்போதான் அறிவிச்சாங்க. அதுக்கு நிதி வசூல் பொறுப்பாளரா கண்ணன் என்றவரை உடனடியா நியமிச்சாங்க..

இந்தக் குளிரிலும் நடன நிகழ்ச்சிகளுக்கான சிறப்பு உடை அணிஞ்ச சின்னப்பெண்கள் நடுக்கத்தோடு காத்திருந்தாங்க. பரதநாட்டிய உடைகள்! பார்த்தாவே மனசுக்கு நிறைவா இருந்துச்சு எனக்கு.
'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்...........' தமிழ்த்தாய் வாழ்த்தோடு.....நிகழ்ச்சிகள் ஆரம்பம். ராதா & ரம்யா சகோதரிகள் அழகாப் பாடுனாங்க. தெரிஞ்சவரை மக்களும் கூடச் சேர்ந்துக்கிட்டோம். உள்ளுர் சுந்தரகாண்டம் பஜன் ஸ்பெஷலிஸ்ட்டுகளின் மகன் (குழந்தைப்பிள்ள)ரொம்ப அழகா கணபதியை நமஸ்கரிச்சுப் பாடுனது ரொம்பவே நல்லா இருந்துச்சு.

முதல் நடனமா பிள்ளையார் பாடலுக்கு ரெண்டு சிறுமிகள். வடக்கும் தெற்குமா சேர்ந்து ஆட கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு.
எங்களுக்கு சூடான காஃபி வந்தது. குளிரில் உக்காந்துருக்கோமே! காபியோடு நிக்காம பஜ்ஜியா, பனீர் பக்கோடா. ரச வடை, லட்டு இப்படி அடுக்கடுக்காத் தீனிகள் வரவர கண்ணுக்கும் வாய்க்கும் வேலையோ வேலை.
லட்டு உபயம் எல் அண்ட் டி( ராஜ்புரா) காரர்.


இத்தனை விதமா எப்படி? பக்கத்துலே ஒரு கலியாணம் நடக்குதாம். இங்கே சிலவகைச் சமையலுக்குப் பொறுப்பேத்துக்கிட்டவர்தான் அங்கேயும் சமைக்கிறாராம். அங்கே செய்யும் ஸ்பெஷல் ஐட்டங்களை இங்கேயும் அனுப்பிக்கிட்டே இருக்காராம். ஆஹா.... இனி மேல் முஹூர்த்தநாளில்தான் தமிழ்ச்சங்க நடவடிக்கைகளை வச்சுக்கணும்:-))))
' கேசாதி பாதம் தொழுன்னேன் கேசவா' பாட்டுக்கு மூன்று சிறுமிகள் ஆடுனாங்க.
ரம்யா ராஜசேகரின் 'ராரா..............' பாட்டு தூள் கிளப்பிருச்சு. 'லகலக சொல்லத்தான் யாருமில்லை! வயசான(?) மக்களுக்குக் கொசுவத்தி ஏத்த ராதா ராஜசேகரின் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?'.
நிகழ்ச்சியைத் தொய்வில்லாமல் நடத்திக்கிட்டே போன சுரேஷ் (வங்கி) அருமையான தமிழில் பேசியது, ஆள் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதில் பழம் தின்னு கொட்டை போட்டவர்னு சொல்லாமல் சொன்னது.
இடைக்கிடை பலவிதங்களில் உதவி செய்துகொண்டிருக்கும் மக்களுக்கு மாலை மரியாதைன்னு நன்றி சொல்லிக்கிட்டே இருந்தார் நம்ம ராஜசேகர். இது உண்மையாவே போற்றப்படவேண்டிய குணம். நம்ம கிருபானந்த வாரியார் அவர்கள் கூட 'குமுதம் வினா விடை புத்தகத்தில் புண்ணியங்களில் அனைத்துக்கும் தலையானது நன்றி பாராட்டுதல். பாவங்களில் பெரிய பாவம் நன்றி மறப்பது என்று சொல்லி இருக்கார்.
நடனம் ஆடி முடிச்சவுடன் மேடையை விட்டு ஓடும் சிறுவர்சிறுமிகளை அப்படியே விட்டுடாமல் திரும்பக்கூப்பிட்டு சபைக்கு முன் நிறுத்தி அவர்களை நம்ம ராஜசேகர் பாராட்டிய விதமும் அருமை. ( இவரிடமிருந்து நிறைய பாடம் கத்துக்கலாம்)

பரதம் ஆடிய குழந்தைகள் மாடிக்குப்போய் உடை மாற்றி அடுத்துவரும் நடனங்களுக்கு சட் புட்டுன்னு தயாராகி வந்தாங்க. கொஞ்சம் கூட சோம்பல் இல்லாமல் வளை, பொட்டு, நகை நட்டுன்னு எல்லாத்தையும் கவனமாப் பார்த்து மேட்ச் பண்ணிக்கிட்டு வந்தது, அவுங்க ஆர்வத்தை விளக்கிச்சு. இந்த முறை எல்லாம் ஹிந்திப் பாட்டுகள். பர்ஸோரே மேஹா மேஹா ன்னு ஆடுனப்ப.............. ரொம்ப ரசிச்சு இயல்பா ஆடுறமாதிரி இருந்துச்சு. பெற்றோரின் விருப்பத்துக்காக பரதம் கத்துக்கிட்டாலும், சினிமா நடனமுன்னு வரும்போது சிறகடிக்கும் உணர்வுதான். அப்படி ஆக்கி வச்சுருக்கு இந்த சினிமா என்னும் பவர்ஃபுல் சமாச்சாரம்.

ஒரு நிமிசம் சூழலை மறந்து நியூசியில் இருப்பதுபோல் இருந்துச்சு எனக்கு. அங்கேயும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமில்லாம ஹிந்தி, ஆங்கிலம் இப்படி எல்லா மொழிகளிலும் கர்நாடகம், ஹிந்துஸ்தானி, சினிமாப் பாட்டுன்னு பாரபட்சமில்லாம கலந்துகட்டி அடிப்பதுதான். (பத்து வருசமா கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளரா இருந்த என் அனுபவம் பேசுது)

ஒரு சிறுமி, I'm a barbie girl ஆட ஆரம்பிச்சதும் மொத்தக் குழந்தைகள் பட்டாளத்தையும் மேடையில் ஏத்திவிட்டுட்டார் ராஜசேகர். பார்ட்டி டைம்!!!!!
ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.... பாடுன இளம்பெண் குரல் அருமை. தமிழ் படிக்கத்தெரியாத ஒரு தமிழ் இனம் வெளிமாநிலங்களில் தமிழ் பாட்டை ஆங்கிலத்தில் எழுதி வச்சு பாடுறாங்க. குறைஞ்சபட்சம் தமிழ் பேசத்தெரியுதேன்னு தான் நாம் நினைக்கணும். தமிழ்நாட்டுலேயே தமிழ் படிக்கத்தெரியாத குழந்தைகளுக்கு இவுங்க எவ்வளவோ மேல். இல்லையா?

நம்ம கோவில் வழிபாடுகளிலும் சரி, இது போன்ற கலை நிகழ்ச்சிகளிலும் சரி, ஒரு வித்தியாசமும் இல்லாம தென்னிந்தியர் அனைவரும் சேர்ந்தே பங்களிப்பு செய்யறாங்க. அதே போல் வடக்கர்களும் வேறுபாடில்லாமல் கலந்துக்கறாங்க.

வடக்கர்கள் வழக்கப்படி ஒரு பார்ட்டின்னா எல்லோருமே ஆடனும் என்ற நியதியை அப்படி லேசா விட்டுறமுடியாதுன்னு எல்லா ஆண்களையும் 'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்னு கைதட்டி ஆடவச்சார் ராஜசேகர். பிறகு அதே பாட்டுக்கு அங்குள்ள அனைத்துப் பெண்களையும்.!
சம்பிரதாயத்தை மீறக்கூடாதாமே...........:-)
16 வகை சாப்பாடு வாழை இலையில் பரிமாறுனாங்க. இருக்கைகள் பத்தலைன்னு மூணு பந்தி. நாங்க ரெண்டாவது பந்தியில் இருந்தோம். சாப்பிடும்போது எத்தனை வகைன்னு எண்ணுனீங்களான்னார். தண்ணீரோடு பதினாறுன்னேன். இன்னும் மூணு இருக்குன்னார். ஐஸ்க்ரீம், பீடா, அரை அடி நீளக் கரும்புத்துண்டுகள். மேடை அலங்காரத்தில் வச்சுருந்த கரும்புகளை அழகாத் துண்டு போட்டு அடுக்கி வச்சுருந்தாங்க ஒரு பக்கம்.

மனநிறைவோடு கொண்டாடி மகிழ்ந்தாலும்............'அவர்கள்' வந்து கலந்துக்காதது கொஞ்சம் குறையாகத்தான் எனக்குப் பட்டது.

எதாவது செய்யணும் பாஸ்..............



26 comments:

said...

நல்லா எஞ்சாய் செஞ்சிருக்கீங்க. படங்கள் வளக்கம்போல. (சூப்பர்னு சொன்னேன்)

said...

'அவங்களும்' வந்திருந்தா காலி நாற்காலியெல்லாம் நிரம்பியிருக்கும் இல்லையா..

'வாள மீனுக்கு' நீங்க ஆடுனீங்களான்னு சொல்லவேயில்ல :-))

said...

Reading your Blog is a Fantastic Experience, Madam - as we are also travelling and enjoying the function.
Thanks a Lot.

said...

நல்ல அனுபவம்தான்
பகிர்வுக்கு நன்றி

said...

எப்பவுமே நம்ம ஊர் பண்டிகையை இங்கே கொண்டாடும்போது ஒரு மன நிறைவு ஏற்படுகிறது என்னவோ உண்மை. நான் வசிக்கும் இடத்தில் மூன்று வருடங்கள் தொடர்ந்து பொங்கல் விழா, ஜனவரி முதல் ஞாயிறு அன்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். பிறகு பிரச்சனைகள் காரணமாய் விட்டுவிட, அதன் இழப்பு ஒவ்வொரு வருடமும் முதல் வாரத்தில் தெரிகிறது. தொடரத்தான் வழியில்லை, மக்களிடம் மனமும் இல்லை :)

பகிர்வுக்கு நன்றி.

said...

நாட்டியம் சாப்பாடு என எல்லாம் அருமையாக உள்ளது டீச்சர்:))))

said...

சண்டிகரில் தமிழா.. அருமை. இரண்டு சிறுமிகள் முகத்தில் எத்தனை பிரகாசம்!
ரசித்துப் படித்தேன் - வாழையிலையை ரசித்துப் பார்த்தேன். பலமுறை.

said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.

.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

எஞ்சாய் செய்யத்தானே போறது:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது நாற்காலிகள் நிறைஞ்சிருப்புப்பா.

ஃபோட்டோக்ராஃபர் ஆடுனா படங்கள் ஆடிடாது??????

said...

வாங்க ரத்னவேல்.

எல்லாம் நான் பெற்ற இன்பம் வகைதான்:-)

said...

வாங்க ராஜி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நாங்க எங்கூர்லே தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சதும் முதன்முதலாக் கொண்டாடுனது பொங்கல் பண்டிகைதான்.

பொங்கலை ஒட்டி வரும் வார இறுதியில் விழா வச்சுக்குவோம். அதனால் ரெண்டு முறையா ஒரே விழாவைக் கொண்டாடிக்குவோம்.

நம்ம ஊரைவிட்டு, நம்ம நாட்டைவிட்டுப் போனபிறகு அங்குள்ள நம் மக்கள்தானே நமக்குச் சொந்தக்காரர்கள்? அவுங்களோடு சேர்ந்து கொண்டாடும்போது நம்ம மனசுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்குது என்பது உண்மை.

said...

வாங்க சுமதி.

ஆமாம்ப்பா. நல்லாவே இருந்துச்சு அன்னிக்கு.

said...

வாங்க அப்பாதுரை.

சண்டிகர் மட்டுமா? நம்ம நியூஸியில் பாருங்க. சுட்டி இதோ.

http://thulasidhalam.blogspot.com/2007/10/blog-post_25.html

http://thulasidhalam.blogspot.com/2006/01/blog-post_23.html

வாழை இலைச்சாப்பாடு இங்கேயும் இருக்கு:-)

http://thulasidhalam.blogspot.com/2005/09/blog-post_112683830656335682.html

said...

வாங்க தமிழன்.

said...

நல்ல எழுது நடையில் அற்புதமாய் கூறி எங்களையும் அங்கு அழைத்து சென்றமைக்கு மிக்க நன்றிங்க

said...

ஆடல் பாடலுடன் வயிறும் மனமும் நிறைந்த இனிய விழா.

said...

எவ்வளவு ஊருக்கு போறீங்க , கொடுத்து வச்ச தாயி நீங்க.

said...

வாங்க அரசன்.

முதல்முறை வருகை போல இருக்கே!!!!

நலமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க மாதேவி.

ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான்......... சுகமாம்:-))))

said...

வாங்க காவேரி கணேஷ்.

பெரும் பயணம் வரும்வரை சிறுபயணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கு. பொறந்ததுலே இருந்து இப்படித்தான். சகடயோகமோ என்னவோ???

said...

நாடார் சமூக வரலாற்றைத்தான் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றேன் ( டி வந்து விட்டது என்று நினைக்கின்றேன்(?) )

said...

உண்மையாகவே தமிழ்ச்சங்கம் மனசு வச்சா அவங்களும் வரலாமேப்பா.
இவ்வளவு சாப்பாடும் இருக்கப் பட்டவங்கதானே சாப்பிடறாங்க.
அவங்களையும் கூப்பிட்டால் அவங்களால் ஆனதைச் செய்வார்களே.
பந்தி பரிமாறலும் இலைச் சாப்பாடும் அருமை.

said...

வாங்க ஜோதிஜி.

ஆமாம். 'டி' வந்துருச்சு:-)

said...

வாங்க வல்லி.

அவுங்களும் இருக்கப்பட்டவங்கதான்ப்பா.

எந்திரன் படம் போட்டப்ப விலையைப்பத்தி அசராமல் உயர்வகுப்பு டிக்கெட்டெல்லாம் அவுங்கதான் வாங்கினாங்க.

அவுங்களுக்கும் எப்பவும் போல அழைப்பு அனுப்பினார்கள்.

என்னமோ ஒருமனத்தடை.

கோவில் வாசல் பொங்கல் வரை வந்துருக்காங்க. பொறுத்துப் பார்க்கலாம் இனி வரப்போகும் விழாக்களில் கலந்துக்கலாம்.