Thursday, May 26, 2011

மாலையும் இரவும் சந்திச்ச வேளை ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 18)

பிரம்மாவின் தரிசனம் முடிச்சுட்டுக் கோவிலைச் சுற்றிப் பார்க்கப்போனோம். வேற சந்நிதிகள் ஒன்னும் இல்லை. மண்டபங்களா நீண்டு கிடக்கு. கோவில் படித்துறைக்குப் போகலாமுன்னு இருந்தப்ப எனக்கு தலை சுத்தல் கொஞ்சம் அதிகமாச்சு. விழுந்துகிழுந்து வச்சால் தொல்லையாச்சேன்னு அப்புறம் பார்த்துக்கலாம். அறைக்குப் போகலாமுன்னு சொன்னேன். திரும்பி வந்து நம்ம பொருட்களை லாக்கரில் இருந்து எடுத்துக்கிட்டு எதிர்க் கடையில் ரெண்டு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கிட்டு ஆட்டோ எதாவது கிடைக்குமான்னு பார்த்தால்..... கீழே கடைத்தெருவில்தான் கிடைக்குமாம்.

என்னடா வம்பாப் போச்சுன்னு மெள்ள கடைவீதியில், நாம் வந்த வழியாகவே கொஞ்சதூரம் திரும்பிப்போனபோது ஒரு சைக்கிள் ரிக்ஷா கிடைச்சது. அதுலே ஏறி அறைக்கு வந்துட்டோம்.

தலைவலி, மயக்கமுன்னு கலந்துகட்டியடிச்சு வயித்தைப் பிறட்டுது. குளியலறைக்குப் பாய்ஞ்சேன். குபுக்......... வாந்தி....யக்:( காஷ்மீரி புலவ் வெளியே வந்து விழுந்தது. பித்த உடம்புக்கு வெய்யில் ஆகலை. அப்படியே தூக்கிருச்சு. இந்த நிலையிலும் தில்லானா மோகனாம்பாளில் நடிகர் பாலையா வசனம் நினைவுக்கு வருதே! தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதா?

'கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டுத் தூங்கிரு'ன்னார் கோபால். சொன்ன பேச்சைக் கேட்டேன்:-) பயணத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கப் போறேனோன்னும் ஒரு கவலை! இவரும் ஓசைப்படாம ஆஃபீஸ் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தாராம்.
மாலை ஆறுமணி இருக்கும். தூங்கி எழுந்தது கொஞ்சம் நல்லாவே இருக்கு. ஹொட்டேலுக்குத் தொட்டடுத்து ஒரு படித்துறை இருக்கு. அங்கே போகலாமான்னு கேட்டதும் கொஞ்சம் ஃப்ரெஷப் செஞ்சுக்கிட்டுக் கிளம்பினேன். ஒரு பெரிய அரசமரத்தின் சுவட்டில் ப்ராச்சீன் மந்திர்ன்னு ஒரு சிவன் சந்நிதி.. அங்கே இருந்து இறங்கும் நல்ல பெரிய படித்துறையில் அங்கே இங்கேன்னு கொஞ்சம் கூட்டம். முக்கால்வாசி வெளிநாட்டினர். எதிரே தெரியும் பிரம்மன் கோவிலுக்குப் பின் சூரிய அஸ்தமனம் ஆகப்போகுது.
டுமுக் டுமுக்குன்னு சீரா டோலக் வாசிச்சுக்கிட்டு இருக்கார் ஒருத்தர். படிகளின் கீழே தண்ணீருக்குள் இறங்கும் படியில் ஒரு வெளிநாட்டுப் பெண், ரெண்டு கைகளிலும் கயிறுகளை வச்சுக்கிட்டுச் சுத்திச்சுத்தி ஆடறார். கயிறுகளின் முனையில் கனம் வேண்டிக் கட்டி இருக்கும் சின்ன மூட்டைகள் தாளம் பிசகாமல் ஆடின! ஒருவேளை வெள்ளைக்கார ஜிப்ஸியாக இருக்கலாம். இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய அங்கத்து ஜிப்ஸிகள் ஏராளமா வர்றாங்க. உடைகளில் ஒன்னும் நமக்கு வித்தியாசம் தெரியாது. போதாததுக்கு வெள்ளைத்தோல் வேற! இங்கே புஷ்கரில் போதை மருந்து தாராளமாக் கிடைப்பதாகவும் இதற்காகவே வெள்ளையர் கூட்டம் வருதுன்னும் ஒரு இடத்தில் வாசிச்சேன்னு கோபால் சொன்னார்.
கட்டம் கட்டமா இங்கேயும் ரெண்டு குளம் பெரிய குளத்துலேயே இருக்கு. ஒரு இரும்புக்குழாயில் இருந்து தண்ணீர் வந்து குளத்தில் ரொம்புது. பெருசுலே இருந்து வருதோ? குழாய்க்குப் பக்கத்தில் ஒரு சிவலிங்கம் தண்ணீரில் இருக்கும் ஒரு படியில். இந்தப் பக்கம் உடைஞ்சு போன ஒரு நந்தி.



பாபம் போக்கும் புண்ணிய நீரில் முங்கத்தான் முடியலைன்னாலும் தலையிலாவது ஒரு கை தண்ணீரை அள்ளித் தெளிச்சுக்கலாமுன்னு கோபால் தண்ணீரில் கைகால் நனைச்சுட்டு வந்தார். அவருக்குப் பாவம் போச்சு! அப்ப என் பாவம்? நானும் தண்ணீருக்குப் போனேன். சிவலிங்கத்தின் பக்கத்தில் அமர்ந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி அபிஷேகம் செஞ்சேன். குளத்தில் ஒரு செண்டி மீட்டர் சைஸில் ஏராளமான மீன் குஞ்சுகள். ஆடாமல் அசையாமல் காலை நீட்டிக்கிட்டு இருந்தால் பிலுபிலுன்னு வந்து மொய்க்குதுங்க.

இந்த ஊரில் தெருநாய்கள் ஏராளமா இருக்கு. எல்லோரிடமும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா வேற பழகுதுங்க. அதிலும் வெள்ளைக்காரர்களிடம் இத்திரி ப்ரேமம் கூடுதல், கேட்டோ! தெருநாய்களின் பசியை உணர்ந்து எதாவது வாங்கித் தருவார்களா இருக்கும். நிறைய நாட்கள் வேற அவுங்க தங்குவதால் ஒரு குழுவுக்கு ஒரு நாய்ன்னு கூடவே சுத்துதுங்க. இப்பவும் படிக்கட்டில் உக்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணிடம் ஒட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருச்சு ஒன்னு:-)
இருள் மயங்கும் வேளையில் ஒரு பெரிய குடும்பம் வந்து அகல்விளக்குகளை கீழ்ப்படியில் ஒரு டிஸைனா வச்சுக்கிட்டு இருந்தாங்க. பார்க்க இந்தியாவின் உருவப்படம் போல இருந்துச்சு. கிட்டேப் போய்ப் பார்த்தேன். நினைச்சது ரொம்பச் சரி.

குடும்பத் தலைவர் போல இருந்தவரிடம்...என்ன விசேஷமுன்னு கேட்டதுக்கு இன்னிக்கு 'இந்திய நாட்டுக்குப் புது வருசம்' என்றார். கொஞ்சம் முழிச்ச என்னிடம், 'ஜனவரி ஒன்னு அங்க்ரேஜிகளின் புது வருசம். நம்முடைய பாரத தேசத்துக்கான புது வருசம் இன்னிக்குத்தான்' என்றார். யுகாதிப் பண்டிகை தெலுங்கருக்கும் கன்னடர்களுக்கும் மட்டும் வருசப்பிறப்பு இல்லை போல! எந்த ஊருன்னு என்னை விசாரிச்சப்ப..... அந்த இந்திய மேப்பிலே தமிழ்நாட்டைச் சுட்டிக்காமிச்சேன்:-)



Loch Ness Monster ஆக இருக்குமோ?
தகதகன்னு ஆரஞ்சுப்பழம் கொஞ்சம் கொஞ்சமா வானத்தில் இருந்து மறைஞ்சது. அந்த சமயம் மேற்குக்கரையில் இருந்த கோவில்களும் கட்டிடங்களும் பார்க்கவே மனமயக்கத்தைத் தந்துச்சு. இதுக்குள்ளே நிறைய ஆட்கள் குறுக்கும் நெடுக்குமா குளக்கரையை ஒட்டிப்போய்க்கிட்டே இருக்காங்களேன்னு கவனிச்சால்..... வரிசையா அகல் விளக்குகளை வச்சு எண்ணெய் ஊத்திக்கிட்டே போறாங்க. இன்னொருத்தர் விளக்குகளை ஏத்திக்கிட்டே போறார். கொஞ்ச நேரத்தில் அமைதியான மினுக் மினுக் ஜொலிப்பு குளக்கரையைச் சுற்றிலும்!



இந்தப் பக்கம் குளக்கரையில் கொஞ்சம் சாமிச் சிலைகளை வச்சுருந்தாங்க புள்ளையார், அனுமன், சிவலிங்கம், தேவி, நந்தி இப்படி.
மணி ஏழாச்சு. உடம்பு தேவலையான்னு கேட்ட கோபாலுக்கு 'இப்ப தலை சுத்தல் நின்னுருச்சு'ன்னு பதில் சொன்னதும், 'மெள்ள நடந்து அந்த ரங்காஜி கோவிலுக்குப் போலாமா'ன்னு கேட்டார். பக்கத்து தெருதான். மிஞ்சிப் போனால் அஞ்சு நிமிச நடை.. போகும் வழியில் அப்படியே ஆளைத் தூக்கிப்போகும் ஒரு நல்ல நறுமணம். மதில் சுவரை எட்டிப் பார்த்தால் பூந்தோட்டம். செவ்வரளிச் செடிகள் பூத்துக்குலுங்குது. இதே நறுமணத்தை ஒரு சமயம் சென்னை அண்ணா சாலையில் இருந்து ஜிஎன் செட்டி சாலைக்குள் நுழைஞ்சு கொஞ்ச தூரத்தில் அனுபவிச்சு இருக்கேன். மியூஸிக் அகெடமியில் ஒரு கச்சேரிக்குப் போய் திரும்பிவந்த இரவு நேரம். அப்போ அது என்ன வாசனைன்னு கண்டுபிடிக்க முடியலை.
அட.... அரளியின் மணமான்னு அதிசயிக்கும்போது கடூரமா உரத்த ஒலியில் மயில் அகவும் சப்தம். தலைக்கு மேலே அண்ணாந்து பார்த்தால் அரை இருட்டில் மரத்தின் உச்சியில் நீளத்தோகையுடன் மயிலார் உக்கார்ந்துருக்கார்!

13 comments:

said...

பயண அனுபவங்கள் தொடரட்டும்.. ராஜஸ்தான் 18 நன்றி

said...

மாலையும் இரவும் சந்தித்த நேரத்தில் எடுத்த புகைப்படங்கள் அருமை.

இதுபோல வெளியே செல்லும்போது உடம்பு படுத்துனா கஷ்டம்தான்.. படுக்கவும் முடியாம, சுத்தவும் முடியாம... இல்லையா...

said...

அன்பு துளசி தலை சுத்தல் வந்துதா. அடப் பாவமே.

வெய்யில் தான் இந்தப் பாடுபடுத்தறதோ

படங்கள் எல்லாமே மணிரத்னம் ச்டைலில்

சூப்பரா வந்திருக்கு. என்ன இருந்தாலும் பூவும் விளக்கும் எப்பவும் அழகுதான் இல்லையாப்பா.

said...

உங்கள் நடையில்
மின்னும்
மிளிரும்
அனாஸ்யம் தான், என்
ஆச்சர்யம் ,
எப்படி இது
உங்களுக்கு மட்டுமே
உங்களால் மட்டுமே
சாத்தியமாகிறது
ஆன்மீகத்தில்
நவரசத்தையும்
நளினமாக கலந்து , கவர்ந்து செல்லும்
நடை இது வரை
நானறியாதது
நன்றி அம்மா

said...

படங்களுடன் அருமையான பதிவு.
உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி.

said...

வாங்க சிவஷன்முகம்.

தொடர்வதற்கு என் நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணத்துலே உடம்பு சரி இல்லைன்னா மகா கஷ்டம், நமக்கும் நம் கூட வருபவர்களுக்கும்:(

அதுக்குத்தான் வாயை இறுக்கமாக் கட்டிருவேன்:-)

பேச மட்டுமே வாய்:-))))))

said...

வாங்க வல்லி.

அலுக்காத காட்சிகள் லிஸ்ட்டுலே பூவும் விளக்கும் உண்டு!

ப்ரெஷர் ஏறிப்போச்சு. மேலும் ஏத்த இறக்கத்தில் போகும்போது இதயம் தடதடவென அடிப்பதைக் கேக்கணுமே:-))))

இயற்கை ஒளியில் எடுத்த படங்கள் என்று டிஸ்கி கொடுத்துருக்கணுமா:-))))

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

எழுத ஆரம்பிச்சப்ப நடைகள் பலவகையில் நடந்து பார்த்து இதுதான் என்னோடதுன்னு உறுதி செஞ்சுக்கிட்டேன்:-)

ஆன்மீகமுன்னு தனியா ஒன்னும் இல்லை நம்ம வீட்டில். 'அவனும்' நம்ம வீட்டுலே ஒருத்தன் என்பதுதான்.

நாலுநாளைக்கு முன்னே நம்ம கோவிலுக்குப் போனால் ஹனுமன் சந்நிதியில் ஒரே மண்ணு.

கோவிலில் ராஜகோபுரம் கட்டும் வேலை நடக்குது. சின்ன இடம் என்பதால் கோவில் முழுசும் நறநறன்னு மண்ணுதான். போதாக்குறைக்கு அன்னிக்கு ஆந்தி வேற அடிச்சது.

நம்ம ஹனுமன் வேற குழந்தைப்புள்ளையாட்டம் சின்னவனா இருப்பான். சட்னு இடுப்பிலே தூக்கி வச்சுண்டு நடந்துடலாம் போல இருக்கும்.

வெளிப்புறம் மண்ண்ணுன்னா.... நானே பெருக்கித் தள்ளிருவேன்.(எத்தனாம் வாய்ப்பாடுன்னு கேக்கப்பிடாது)

சந்நிதிக்குள்ளே இருக்கேன்னு 'என்னடா இது! மண்ணுலே நிக்கும்படி ஆயிடுச்சா?'ன்னு கேட்டால் சட்னு பதில் வருது 'ஹாஞ்சி'ன்னு:-)

சொன்னது நம்ம கோபால்:-) சிரிச்சுச் சிரிச்சு வயித்துவலி.

இங்கே பஞ்சாப் ஹரியானாவில் எதுக்கெடுத்தாலும் 'ஹாஞ்சி ' தானாக்கும்:-)

நம்ம ஹனுமனை இங்கே பாருங்கோ.

http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_25.html

said...

வாங்க ரத்னவேல்.

ஊருக்குத் திரும்புனதும் ஒரு முழு செக்கப் போகணும்.

விசாரிப்புக்கு நன்றி.

said...

சூரிய அஸ்தமனம் படங்கள் மனத்தை இழுக்கின்றன..

ஒளிரும் இந்தியா அழகூட்டுகிறது.

said...

வாங்க மாதேவி.

//ஒளிரும் இந்தியா அழகூட்டுகிறது.//

அட! ஆமாம்.... இந்தியா ஒளிர்கிறதுன்னு தலைப்பு வச்சுருக்கலாமோ!!!!!!

said...

மத ரீதியான ஒரு விவாதத்திற்குரிய இன்றைய அடியேனின் பதிவை பார்வை இட அழைக்கிறேன்