Wednesday, May 04, 2011

ஒன்னு இங்கே இருக்கு.... ...அப்ப இன்னொன்னு எங்கே? (ராஜஸ்தான் பயணத்தொடர் 8)

ஒருவித பிரமிப்போடு இதே சதுக்கத்தின் இடதுபக்கம் இருக்கும் மாளிகைக்குள் போறோம். ரித்தி சித்தி வாசலாம். (Riddhi Siddhi Gate) மாளிகையின் முகப்பு அப்படியே அள்ளுது!
இதன் பின்னம்பக்கம் இருக்கும் பெரியமுற்றம்தான் பார்க்க வேண்டிய முக்கிய அம்சம். ப்ரீதம் நிவாஸ் சௌக் இது. இந்த முற்றத்துக்கு வர நாலு வாசல்கள். இருப்பதிலேயே சூப்பரா இருக்கும் மயில் வாசலில் நாம் போயிருக்கோம்.
குட்டியா ரெண்டு பக்கமும் திண்ணை வச்ச முன்புற அமைப்பு. ஜிலுஜிலுன்னு தங்கக் கதவு. நிலைவாசலுக்கு மேலே தோகை விரித்து நிக்கும் அஞ்சு மயில்கள். சுவத்துக்குள்ளே இருந்து வெளியே எழுந்து வருவதுபோல மயில் உடம்பு அப்படியே 3D எஃபெக்ட்லே வெளியே நீட்டிக்கிட்டு இருக்கு. அந்த மயில் கழுத்துத் தொடங்கி முழுசும் நீலமா மயில்கழுத்துக்கலர்''!! இந்த ஐவருக்கு மேல் பக்கத்துக்கொன்னா மயில்மேல் அமர்ந்து இசைக்கருவி மீட்டும் கின்னரர்கள். அவுங்களுக்கும் மேலே ஜோடி ஜோடியா இருக்கும் ஏராளமான மயில்களின் வரிசை. இன்னும் மேலே கண்ணை உயர்த்தினால் அங்கேயும் ஆடும் மயில்கள்.....சின்னச்சின்ன பளிங்குகளை வண்ண வண்ணமா வச்ச அலங்காரத்துடன் இந்த மோர் போல் (Peacock gate) ஜொலிக்குது!
மயில்கேட்

ஒவ்வொரு உப்பரிகைக்குக் கீழேயும் ஒவ்வொரு கதவுன்னாலும் எதுவும் நம்ம மயிலை பீட் பண்ண முடியாது! ஒவ்வொரு கதவுக்கு மேலே உள்ள நிலைவாசலில் சிவன்பார்வதி, விஷ்ணு, காளிமாதா, சூரியன், பிள்ளையார்ன்னு சாமிகளுக்கு நேர்ந்துவிட்டாப்லெ பளிங்கு ஸ்லாப்லே செதுக்கிய கடவுளர் உருவங்களைப் பதிச்சு வச்சுருக்காங்க. இந்த முற்றத்தைக் கடந்து உள்ளே போனால் அரச குடும்பம் இருக்கும் பகுதி என்பதால்.... ஓசைப்படாம வந்த வழியே திரும்புறோம்.
ராசா வீடு



இதுதான் இந்தியாவிலேயே ரெண்டாவது பெருசுன்னு சொல்லிக்கிட்டே கையை மேல்நோக்கிக் காமிக்கிறார் காஷிராம். ஸீலிங்லே இருந்து தொங்குது பிரமாண்டமான சரவிளக்கு. (முதலாவது பெருசு எங்கே இருக்காம்? க்வாலியர் அரண்மனையில்! அதுவும் ஜோடியா!!!) இந்த இடம் திவானிஆம் என்ற சபா நிவாஸ். அட! ராஜசபை!!! கூஜா இருக்கும் அதே முற்றத்தின் இன்னொரு கோடியில் இருக்கு இது.
முற்றத்தின் மூலையில் தர்பார்

வெளியே சின்னதா ரெண்டு பீரங்கிகள் பக்கத்துக்கு ஒன்னா. இதுமட்டும் இல்லைன்னா ஏதோ ஒரு சாதாரண வாசல்னு நினைச்சுக்கிட்டுக் கடந்து போயிருப்போம். அரசவைக்குள்ள கம்பீரம் இருக்கவேணாமோ?
அத்தனை பெரிய ஹாலுக்கு நடுவில் ஒரே பீஸா அழகான கம்பளம் விரிச்சு வச்சுருக்கு. பாரசீகத்துலே இருந்து வந்ததாம் பதினேழாம் நூற்றாண்டுலே! கொஞ்சம் காலத்தால் பழசானாலும் இன்னும் மினுமினுப்பு குறையலை.வண்ணங்களும் நல்லாவே இருக்கு. சுற்றிவர அருமையான வேலைப்பாடுகளுடன் இருக்கைகள். நடுவிலே இருக்கும் சிம்மாசனம் அரசருக்குன்னு தனியாச் சொல்லணுமா?

மேலே உட்புறக்கூரையில் இருக்கும் அலங்காரச்சித்திர வேலைப்பாடுகள் என்னவோ இப்போ போனமாசம் வரைஞ்சு வச்சதுபோல பளிச். அதிலுள்ள தங்க நிறமெல்லாம் நிஜத் தங்கமேதான்!

வலைப்பின்னல் வேலைப்பாடு உள்ள அமைப்பின் பின்பக்கம் மகாராணிகளும் இளவரசிகளும் உட்கார்ந்து சபையில் நடப்பதைப் பார்வையிடும் வசதி!

ஹாலின் சுவர்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை இருந்த / இருக்கும்.மன்னர்களின் சித்திரங்கள். எல்லாம் மிகப்பெரிய அளவில்! கொஞ்சநேரம் கண் சிமிட்டாமல் உத்துப் பார்த்தால் 'என்ன பார்க்கிறாய்?'னு கேட்டுக்கிட்டே ராஜா வெளிவந்துருவார் போல!!!! புகைப்படக்கருவி கண்டு பிடிச்ச காலத்துக்கு அப்புறம் இருப்பதெல்லாம் ஃபோட்டோக்கள். மன்னர்களுக்குப் பிடித்த விளையாட்டான 'போலோ' ஆடும் படங்கள் வெராந்தா முழுசும்.

இந்த அரச சபையில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துருக்கு. அதுலே ஒன்னு ஸவாய் மான்சிங் (இரண்டாமவர்) ராஜஸ்தான் மாநில கவர்னரா பதவி ஏற்றது. நாடு சுதந்திரம் அடைஞ்ச பிறகும் இங்கே சின்னச் சின்ன சமஸ்தானங்கள் அப்படியே தனித்தனியாத்தான் இருந்துச்சு. ஸர்தார் வல்லப் பாய் படேல் அவர்கள் இந்த ராஜாக்களின் ஒப்புதலைப்பெற்று சமஸ்தானங்களையெல்லாம் ஒன்றாய் இணைத்து ராஜஸ்தான் மாநிலம் உருவாகக் காரணமாய் இருந்தார். இது நடந்தது 1949 வது ஆண்டு. மானியம் நல்ல அளவில் கொடுக்கறோமுன்னு வாக்கு கொடுத்துதான் இவைகளை இணைச்சது. அப்புறம்...... பின்னாட்களில் வந்த மத்திய அரசு மானியத்தில் கை வச்சுட்டதால்..... இப்போ இந்த மாளிகைகள் பராமரிப்பு மற்ற சீரமைப்புச் செலவுகளுக்கும் அரச குடும்பங்களுக்கு உப்புப்புளி மிளகாய் வாங்கவும் ராஜகுடும்பத்தின் அங்கங்கள் எல்லாம் பல்வேறு தொழில் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ எல்லாத்துக்கும் டிக்கெட் போட்டுக் காசு பார்க்கும்படியா ஆகிக்கிடக்கு. பல மாளிகைகள் ஸ்டார் ஹொட்டேல்களா மாறி இருக்கு.

இந்த சபா நிவாஸில் படம் எடுக்க அனுமதி இல்லை:( இங்கே போய்ப் பாருங்கள். அவுங்களே அட்டகாசமான படங்களைப்போட்டு வச்சுருக்காங்க.

சுத்திப்பார்த்துட்டு நாம் வெளியே போறோம். இங்கே காஃபி ஷாப் ஒன்னு (பேலஸ் கேஃபே)இருக்கு. முற்றத்தில் இருக்கைகள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க. இந்த வெய்யிலில் அங்கே உக்காரும் மனவலிமை நமக்கில்லை. இது கடந்து வெளிவரும் வாசல் 'கணேஷ் போல்'. இந்தியான்னு சொன்னதும் வெளிநாட்டினருக்குப் பாம்பும் பிடாரனும் நினைவுக்கு வரணும் என்ற ஐதீகப்படி ஒரு பாம்பாட்டி மகுடியோடு அங்கே உக்கார்ந்துருக்கார்.
அரண்மனையைப் பார்த்தது போதுமுன்னு கோட்டைக்கு புறப்பட்டோம். நாம் தங்கி இருக்கும் ஹொட்டேல் வழியாத்தான் போகணும். நேத்து பார்த்தோம் பாருங்க, ஜல்மஹல், கனக் வ்ருந்தாவன் இதையெல்லாம் தாண்டுனதும் மலை அடிவாரப்பாதை ஆரம்பிக்குது. பயணிகளை ஏற்றிக்கிட்டுப்போக நாலைஞ்சு ஒட்டகங்கள் ஜல்மஹலுக்கு முன்னாலே அலங்காரத்தோடு காத்திருக்கு.
என்னடா..... எங்கே பார்த்தாலும் படங்களில் மட்டும் இருக்கும் நம்மாளைக் காணோமேன்னு நினைச்ச மறு விநாடி.... 'அங்கே பார்' என்றார் கோபால். 'உன்னை வரவேற்க நான் போதுமு'ன்னு ஆடி ஆடி அசைஞ்சு அசைஞ்சு வர்றார். ஓகே. ஒன்னுன்னா ஒன்னு! க்ளிக். க்ளிக்!

தொடரும்..............:-)

18 comments:

said...

//இங்கே போய்ப் பாருங்கள்//

எங்கே? நம்ம யானையாரை பார்த்த சந்தோஷத்துல சுட்டி கொடுக்க மறந்தாச்சா?

நல்ல பகிர்வு!

said...

ஹை! இப்ப சுட்டி கொடுத்தாச்சே... இருங்க பார்க்கிறேன்... :)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அட ராமா? சுட்டி வேலை செய்யுதான்னு பார்க்காம விட்டுட்டேனே.......
சிரமம் பார்க்காமல் இப்போ ஒருக்கா

said...

ம்.. வேலை செய்யுது.. நல்ல படங்கள் வருது. தொடர்ந்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி..

said...

அன்புள்ள நண்பருக்கு!
உங்களிடம் இருந்து இரண்டு சுற்றுலா கட்டுரைகளை வெள்ளிநிலா இதழுக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்! சற்றே பெரியதாக இருந்தால் நலம்.
நான் தேடி பார்த்தேன் உங்களின் வலைப்பூவில், சரியா தேடமுடியவில்லை, ஆகவே உடனே இரண்டு சுற்றுலா கட்டுரைகளை தருமாறு வேண்டுகிறேன்

said...

'அங்கே' போய் படங்களையெல்லாம் பார்த்தாச்சு.. இப்ப சம்பந்தமில்லாம 'சந்திரமுகி' படம் ஏன் ஞாபகம் வருதுன்னு தெரியலியே :-))))))

said...

ராஜாவும் ராணியும் மாளிகையில் ;) சூப்பர் படம் ;)

said...

துளசி, இந்த அரண்மனையெல்லாம் பார்க்கும் போது இப்பவே ஜெய்பூர் போக ஆசை வருது:)

அந்தக் கார்பெட் படம் எடுக்க விடலையா. எதுக்கும் சுட்டி பார்த்துட்டு வரேன்.
eththanai vishayangal kavar seythirukkiReerkal apaaram paa. vaazhththukal.

said...

கலைநுணுக்கங்களை உங்கள் படம் தெளிவாக உள்வாங்கியுள்ளது. வியப்பாக மலைப்பாக உள்ளது.

said...

போன வருடம், பயன காலேஜில் விட போகும் போது ராஜஸ்தான் போனோம் ரொம்ப அருமையாஇருந்தது
அந்த ஹவ்வா மால் ரோடு சூப்பரா இருக்குமே,
பாம்ப்பாட்டி போட்டோ நிறிஅய எடுத்து வந்தேன்.

பயன தொடர் அருமை

said...

வாங்க ஷர்புதீன்.

உங்க பதிவில் பின்னூட்டி இருக்கும் சுட்டிகளைப் பாருங்க.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஏனா?

ரா......ரா........:-))))

said...

வாங்க கோபி.


யூ மீன்..... த்வாரபாலகர்ஸ்????

said...

வாங்க வல்லி.

கால்வலி சரியாச்சா?

டிசம்பரில் போகலாமா?

said...

வாங்க ஜோதிஜி.

கலையழகு கொட்டிக்கிடக்கேன்னு அதுலே கொஞ்சூண்டு கிள்ளி எடுத்தேன்:-)))))

said...

வாங்க ஜலீலா,

பகலில் அந்த ரோடில் ஒரு 'நடை' போயிருந்தால் அற்புதமாக இருந்துருக்கும்.

இவ்வளவு கடைகளை ஒரே இடத்தில் நான் பார்த்ததே இல்லைப்பா!!!! பிரமிப்புதான்!

said...

மயில் கேட் அருமை.

ராஜமரியாதை மகிழ்ச்சி.

said...

வாங்க மாதேவி.

ராஜமரியாதை??????

நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குதாம்:-)))))