Friday, October 07, 2011

சவுத் ப்ரிட்ஜ் ரோடுலே, சைனாடவுன் நடுவிலே! ( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 7)

சிங்கையின் இந்துக் கோவில்களில் மூத்தது என்ற பெருமையை தனதாக்கி இருக்காள் மாரி. கிழக்கிந்தியா கம்பெனி, மலேயா ப்ராஞ்சின் பினாங் ஆஃபீஸ்லே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த நாராயண பிள்ளை என்றவர் ஸர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் ( ப்ரிட்டிஷ் காலனிகள் அமைப்பதில் இவர் முக்கிய புள்ளி. திரு. ராஃபிள்ஸ்தான் சிங்கையை நிர்மாணித்தவர்.) அவர்களுடன் 1819லே சிங்கப்பூர் தீவுக்கு வந்துருக்கார். புது ஊர் உருவாகி வந்துக்கிட்டு இருக்கும் சமயம் நாராயண பிள்ளையும் செங்கல் சூளை வச்சு வியாபாரம் ஆரம்பிச்சு நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துருக்கு. கூடவே கட்டிட வேலைக்கான கம்பெனியும் தொடங்கினார். இந்தியாவில் இருந்து இங்கே கட்டிட வேலை செய்யறதுக்குன்னு ஆட்களைக் கூட்டிக்கிட்டு வந்த காலக்கட்டம். (இப்பவும் இது நடக்குதுல்லே?)

ஒன்னுரெண்டு வருசங்களில் கொஞ்சம் செட்டில் ஆனதும் கோவில் ஒன்னு கட்ட பிரிட்டிஷ் அரசிடம் இடம் கேட்டுருக்கார். முதல்லே ஒதுக்குன இடம் தண்ணீர் தட்டுப்பாடு இருக்குன்றதாலே சரிப்படலை. ரெண்டாவதா ஒரு இடம் ஸ்டாம்ஃபோர்டு வாய்க்கால் பக்கம் ஒதுக்குனதும்கூட நகரமைப்புத் திட்டத்தின் காரணம் சரிவரலை. மூணாவதா கிடைச்ச இடம்தான் சவுத் ப்ரிட்ஜ் ரோடுலே, சைனாடவுன் நடுவிலே!

நிறைய மரக்கட்டைகளையும் ஓலைகளையும் பயன்படுத்திச் 'சின்ன அம்மன்' கோவில் எழும்புனது 1827 இல். ரொம்பவே சிம்பிளா ஒரு கட்டிடம் மக்களை நோய்களில் இருந்து காப்பாத்தும் மாரியம்மன் குடிவந்தது இப்படித்தான். இதுக்குள்ளே நாராயண பிள்ளை வந்து வருசம் எட்டாகி இருந்துச்சு. துணி இறக்குமதி வியாபாரம் ஒன்னும் ஆரம்பிச்சு உள்ளூர் வர்த்தகப் பிரமுகரில் முக்கியமானவரா ஆகியிருந்தார்.

அந்த்க் காலக்கட்டங்களில் ஊரில் இருந்து சிங்கை வந்து சேரும் மக்களுக்குப் புகலிடம் போல இருந்துருக்கு இந்தக் கோவில். இந்துக் கலியாணம் செய்யணுமுன்னா, அதைச் செஞ்சுவைக்கும் அதிகாரம் இந்தக் கோவில் அர்ச்சகர்களுக்கு மட்டும்தான்னு அரசு அங்கீகாரம் கொடுத்துருந்துருஞ்சுன்னா பாருங்க!
நாலைஞ்சு வருசத்தில் கோவிலைச் சுத்தி இருக்கும் இடங்கள் சில தானமாக் கிடைச்சது. .கோதண்டராமசாமிக்கு யாரு தானமாக் கொடுத்தாங்கன்ற கல்வெட்டு ஒன்னு இன்னும் கோவிலில் இருக்கு! இப்படி மாரியம்மன் கூடவே ராமனும் வந்துட்டான். சித்தி விநாயகரும் சைலண்டா வந்து கூட்டணி அமைச்சுக்கிட்டார்.

பத்துப்பனிரெண்டு வருசங்களில் நாகப்பட்டினம், கடலூர் பக்கங்களில் இருந்து கோவில்கட்டும் வேலையில் பயிற்சி உள்ளவர்களைக் கூட்டிவந்து 1843 இல் கோவிலைப் புதுப்பிச்சுக் கட்டுனார் நாராயண பிள்ளை. மறுபடி 1862, 63 களில் இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சுக் கட்டுனாங்க. நம்ம மக்கள் தொகை உயர உயர கோவிலின் அவசியமும் கூடிக்கிட்டுத்தானே போகுது.
1903 வது வருசம் சின்னதா ஒரு மூணு நிலைக் கோபுரம் உருவாச்சு. நல்ல நிதானமான வளர்ச்சிதான். சைனா டவுனுக்கே(!!!) லேண்ட் மார்க்கா ஆகி இருந்துச்சு இந்த இந்துக்கோவில். 1925 வது வருசம்தான் நாம் இப்போ பார்க்கிற இந்த அஞ்சுநிலை ராஜகோபுரம் நிர்மாணிச்சாங்க. ரொம்பவே கலர்ஃபுல்லா அழகான பதுமைகளுடன் கோபுரம் ஜொலிக்குது. இடைவிடாம தேவையானபோது மராமத்துப் பார்த்து புனரமைச்சு, குடமுழுக்குன்னு நிர்வாகம் நல்ல முறையில் சேவை செஞ்சுவருது. போன கும்பாபிஷேகம் நடந்து ஒன்னரை வருசம்தான் ஆகி இருக்கு. எல்லா சிலைகளும் பளிச்ன்னு அட்டகாசம் போங்க. மாரியும் சிங்கைத் தமிழ்மக்கள் மனசில் நீங்காத இடம் பிடிச்சுட்டாள்.
கோவிலுக்குள்ளே படம் எடுக்க மூணு டாலர் கட்டணம். பிரச்சனை இல்லாமச் சுட்டுத் தள்ளலாம்.
கோட்டை வாசல் கதவுகளைப்போல் பிரமாண்டமா புதுக்கருக்கு அழியாத பளபளக் கதவைக்கடந்து உள்ளே காலடி எடுத்து வச்சால் வெல்கம் சொல்லி வரவேற்கும் மிதியடிகள்! கண்ணுக்கு நேரா தொலைவில் மூலவர். இடையில் உள்ள மண்டபம் முழுசும் அலங்கார ஓவியங்கள். அம்மனின் பலவித உருவங்கள். விதானத்தையும் விட்டுவைக்கலை. ஆலிலைக் கண்ணன் அழகா இருக்கார். அர்த்தமண்டபத்தின் அலங்காரம் தூள் கிளப்புது. கருவறையில் மஹாமாரி அருள் பொங்கும் முகத்துடன் இருக்காள். நல்ல பெரிய திருமேனி. நம்ம நாராயண பிள்ளை காலத்து சின்ன அம்மன் சிலையும் கருவறையில் இருக்கு.
அம்மனை கும்பிட்டுக் குங்குமப்பிரஸாதம் வாங்கி நெற்றியில் வச்சுக்கிட்டுக் சந்நிதியை வலம்வர முற்றத்தில் இறங்குனா...... ஒரு
நாலைஞ்சு பாத்திரங்கள் அடுக்கிவச்சு பிரஸாதம் விநியோகம். வேணுமுன்னா சாப்பிடலாம். எனக்கு வேணாமுன்னு இருந்துச்சு. பசி இல்லை. அவுங்களுக்குப் பின்புறம் இருக்கும் பெரிய கட்டிடத்தின் கீழ்தளத்தில் பெரியாச்சி, துர்கை, மதுரைவீரன், காளின்னு.....
முற்றத்தில் மூலவர் சந்நிதிக்கு இடப்பக்கம் புள்ளையாருக்குத் தனிக்கோவில். அழகான குட்டி விமானம். இவர் சித்தி விநாயகர். வணக்கம் போட்டு வலம் வர்றோம். பளிச்ன்னு படு சுத்தமா இருக்கும் வளாகத்தில் நம் வலதுபக்கம் பூராவும் அந்தந்த சாமிக்கு ஏற்ற வகையில் விதவிதமான விமானங்களுடன் உள்ள கருவறைகளின் சுற்றுச்சுவர்களில் (ஆச்சரியமான) கடவுளர் சிலைகள், காசைப் போடாதேன்னு கண்டிப்பாச் சொல்லிக்கிட்டு நிக்கறாங்க.!!!!!!!
பசுவின்மேல் சாய்ந்த நிலையில் குழல் இசைக்கும் ஸ்ரீ வேணுகோபாலன் உருவம் பதித்த விமானத்தின் கீழ் கண்ணை ஓட்டுனா........ ரெண்டு பெரிய விழிகள் நம்மைப்பார்த்து முறைக்குது! ஆஹா..... அரவான்! இதுதான் முதல் முறையா அரவான் சந்நிதி பார்க்கிறேன்! என்ன கதை என்ன கதைன்னு பிச்சு எடுத்த கோபாலுக்கு 108 வது முறையா அரவான் கதையைச் சொன்னேன்.
இந்தப்பக்கம் தனி மேடையில் வெள்ளி(கவசம்?) சிவலிங்கம்.
அவருக்குப்பின்னே உள்ள பகுதியில் ஏழு பெண்கள் ஒரே யூனிஃபார்ம் போட்டு தலையை அள்ளி முடிஞ்சு, கொண்டையில் பூச்சூடி வரிசைகட்டி உக்கார்ந்துருக்காங்க. மாம்பழக்கலர் உடல்(புடவைக்குத்தான்) ஜரிகை போட்ட ப்ரவுன் பார்டர். அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. எல்லாம் லைஃப் சைஸ்! இந்தப்பக்கம் இரு தேவியருடன் அய்யனார். த்ரௌபதியம்மன் சந்நிதி மண்டபத்தில் நிக்கறோம். இந்த அம்மனுக்குத்தான் இங்கே வருசாவருசம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தீமிதித் திருவிழா நடக்குது.
சந்நிதி உள்ளே பச்சைப்புடவையில் த்ரௌபதி. சின்ன உருவம். அஞ்சு துணை இருந்தும் தனியா நிக்கறாள். வெளிப்புறம் வலப்பக்கம் பூராவும் ஸ்ரீகிருஷ்ணன், அரியணையில் இருக்கும் தருமர். அவருடன் திரௌபதி. தருமருக்கு வலப்பக்கம் அர்ஜுனன் நிற்க, பீமன் தரையில் கொஞ்சம் தள்ளி அமர்ந்துருக்கார்.. இந்தப்பக்கம் நகுலன் நிற்க சகாதேவன் உக்கார்ந்துருக்கார். ராமர் பட்டாபிஷேகம் பார்த்துருக்கேன். ( நேரில் இல்லைப்பா.........சிலைகள், படங்கள் இப்படி.) ஆனா தருமர் பட்டாபிஷேகம் பார்ப்பது இதுவே முதல்முறை.
இன்னும் கருடவாகனத்தில் விஷ்ணு, அரவான், சிவனடியார் தலையைக் கொய்து கையில் பிடிச்சுருக்கும் ஒரு சாமின்னு ஏகப்பட்ட சிலைகள். எல்லாம் மூக்கும் 'முழி'யுமா இருக்கு.

போருக்கு முன் அம்மனை வழிபட்டு ஆசி வாங்குவது
விதானம் முழுசும் பாரதக் காட்சிகள். அதிலும் த்ரௌபதை கல்யாணம். தருமருக்கு மகுடம் சூட்டுதல் இப்படி பெரிய ஓவியங்கள். வெளிப்பிரகாரத்தில் தனியா முத்தாலராஜா. மதுரைவீரனாம் இவர்.
சிங்கை அறநிலையத் துறையின் கவனிப்பில் கோவில் நடக்குது. தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்னா இந்தக் கோவிலைச் சேர்த்துருக்காங்க.

மணி எட்டாகுதே. கிளம்பலாமுன்னா சும்மா விடறாங்களா? கோவிலில் பார்த்த ஒரு பெண்மணி, இங்கே பக்கத்துலே ஒரு புள்ளையார் கோவில் இருக்குதுங்க. அங்கே இன்னிக்கு ரொம்ப விசேஷம். அஞ்சே நிமிசத்துலே நடந்துபோகும் தூரம்தான்னு கிளப்பி விட்டுட்டாங்க.

தொடரும்............:-)



22 comments:

said...

அட கோவில் முழுவதும் என்ன ஒரு சுத்தம். ....

தருமர் பட்டாபிஷேகம்... வெள்ளி கவசமிட்ட சிவன்... துரோபதி கல்யாணம்.... என நிறைய புகைப்படங்கள் கண்ணை கொள்ளை கொள்கின்றன. பகிர்வுக்கு நன்றி டீச்சர்.

said...

ஏழு தேவியர் தான் அப்படியே நிக்கிறாங்க கண்ணுகுள்ள.. லைஃப் சைஸ்..ஆகா..:)

said...

ஓவியங்கள் ஒவ்வொண்ணும் அழகு..

லைஃப் சைஸ்ல ஏழு தேவியரும் ஜூப்பரு.அவங்க கட்டியிருக்கும் புடவையைப் போலவே :-))

said...

ஓவியங்கள் சிற்பங்களின் படங்கள் மிக அழகு.கோவில் வளர்ச்சி பற்றிய தகவல்கள் அருமையாக கொடுத்தும் இருக்கீங்க மேடம்.

said...

மஹாபாரதக் காட்சிகள் இவ்வளவு அழகா எங்கயாவது இருக்கானு தெரியவில்லை. அருமையான வர்ணங்கள். சப்த கன்னியர் இதற்கு முன் இவ்வளவு அழகா யாராவது வரைந்திருப்பார்களா.!!

said...

சவுத் ப்ரிட்ஜ் ரோடுலே, சைனாடவுன் நடுவிலே!/

அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்.

ஏழு தேவியர் சப்தகன்னியரா?

said...

கோட்டை வாசல் கதவுகளைப்போல் பிரமாண்டமா புதுக்கருக்கு அழியாத பளபளக் கதவை போகும்போது தொடாமல் செல்லவேண்டுமாம்.

திரும்பி வரும் போது தொட்டு பிரார்த்தித்துவிட்டு வந்தால் மறுபடி இந்த கோவிலுக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும் என்று எங்களுக்கு வழிகாட்டி சொன்னாரே!

said...

grand pictures .......

said...

கோயில்களைப் பராமரிக்கிறதைப் பத்தி சிங்கப்பூர் மக்கள் கிட்டதான் கத்துக்கனும்.

சைனாடவுனுக்கு ஒரேவாட்டிதான் போயிருக்கேன். அஞ்சு டாலருக்கு மூனு பொருட்களை வாங்குறதுக்கு. ஆனா இந்த மாரியம்மன் கோயிலுக்குப் போனதில்லை. அடுத்து போறப்போ போயிறலாம். :)

ஆமா.. இத்தன சாமிக இருக்குன்னு சொல்றீங்க. சிங்கப்பூர் கோயில்கள்ள மறக்காம இருக்குற முருகன் இங்க இல்லியா? :)

said...

இந்தக்கோவிலுக்கு சென்று இருக்கிறேன் என்றாலும் இதன் விவரங்கள் அவ்வளவாக தெரியாது :-) இதில் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சுத்தமான கோவில்தானே உண்மையில் கடவுளின் இருப்பிடம்!

இந்த முறை படங்கள் கொஞ்சம்(?) கூடித்தான் போச்சு:-)

said...

வாங்க கயலு.

உண்மைதான்ப்பா. வரிசையைப் பார்த்துப் பிரமிச்சுப்போனது உண்மைதான்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அவுங்களைப் பார்த்தவுடனே கட்டாயம் உங்களுக்குச் சொல்லிடணுமுன்னு வேகம் வந்துச்சு. இந்த நிலநடுக்கம் காரணம் எல்லாம் 8 மாசம் பிந்திப் போச்சுப்பா!

இப்ப ஒரு கால்மணிக்கு முன் நிலம் ஆடோஆடுன்னு ஆடி அடங்குச்சு. ரிக்டர் அளவில் 5.5

said...

வாங்க ராம்வி.

தொடர்ந்த வருகைக்கும் தவறாமல் அளிக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

said...

வாங்க வல்லி.

சப்த 'மாதா'க்கள் என்று நினைக்கிறேன்ப்பா. எல்லாம் ஆளளவு சிற்பங்கள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சப்தமாதாக்கள் என்று நினைக்கிறேங்க.

முகம் நல்ல மெச்சூரிட்டியைக் காமிக்குதே!

said...

என்னங்க இராஜராஜேஸ்வரி, இப்படி ஒரு புதுத்தகவல்!!!!!

இது தெரியாம நுழையும்போது கைகள் மணியை ஆட்டிருதே!

said...

வாங்க தருமி.

கேமெராக்காரர் சொன்னாச் சரி..... படம் நல்லா வந்துருக்கு போல இருக்கே!

said...

வாங்க ஜீரா.
பிரகாரங்களில் இருக்கலாம். கொஞ்சம் இருட்டிப்போனதால் நின்னு நிதானமாப் பார்க்க நேரமில்லை. கோபுரங்களிலும் விமானங்களிலும் இருப்பாருன்னுதான் நினைக்கிறேன்.

அடுத்தமுறை நீங்க பார்த்து வந்து சொல்லுங்க.

said...

வாங்க கிரி.

நேரம் கிடைக்கும்போது அப்பப்போ ஒரு விஸிட் அடிங்க. சிற்பங்களின் அழகு அப்படியே அள்ளுது!

said...

கோயில் வலம் வந்ததில் தருமர் பட்டாபிஷேகம்,திரௌபதை கல்யாணம், எனப் பல படங்கள் காணக்கிடைத்தன. நன்றி.

said...

வாங்க மாதேவி.

எல்லாம் நான் பெற்ற இன்பம், நீங்களும் பெறணுமுன்னுதான்:-)))))