Monday, December 12, 2011

மகிழ்ச்சி வாங்கலையோ மகிழ்ச்சி...........

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே


'மீண்டும் மீண்டும்.... மனசுலே இதுவந்து எட்டிப்பார்த்துட்டுக்கிட்டே இருக்கு. ஆனாலும் ஒரு மனுசனுக்கு இப்படி ஆகக்கூடாதுதான். ராமச்சந்திரக் கவிராயர் சொன்னது மிகையோ!!!!!

துளசிதளத்தில் கொஞ்சநாளா பதிவுகள் வழக்கத்தை அப்படியே புறந்தள்ளி விட்டுருக்கு. பயணம் இல்லாத நாட்களில் வாரம் மூணு என்றதைத் தூரத் தூக்கிப் போடும்படியா ஆகிருச்சே:(

எண்ணி இருபத்திநாலு நாளில் யமன் மீண்டும் வீட்டுக்கு வந்துட்டுப் போனான். போனமுறை ஒரு கணவரையும் இந்தமுறை அவர் மனைவியையும்:(

மாமனார் மரணத்தில் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தோம். இத்தனை வயசுக்கும் தினம்தவறாமல் நடைப்பயிற்சி, கடைகண்ணின்னு தெம்பா நடந்துக்கிட்டு இருந்தவர் ஒரு நாள் காலையில் தவறி விழுந்து ( வீட்டுலேதான்) மருத்துவமனைக்குக் கொண்டுபோய் எம் ஆர் ஐ ஸ்கேன் செஞ்சு பார்த்துட்டு ஒன்னும் இல்லைன்னு மருத்தவர் சொல்ல வீட்டுக்கு வந்த அன்று மாலையே 'மீளாப் பயணம்' போயிட்டார். இனியும் 'அம்மா' ஊரில் இருக்கவேணாமுன்னு கடைசி மச்சினர் முடிவு பண்ணி சென்னைக்குக் கூட்டிவந்துட்டார். அவுங்களும் கடந்த சிலவருசங்களா ரொம்ப முடியாமக் கிடந்தாங்க. ஒருவிதத்தில் அம்மாவின் பயணத்தைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தோமுன்னும் சொல்லலாம். ஆனா.... நடந்தது வேற!

சென்னைக்கு வந்தபின் மூணாம்நாள் அம்மாவும் கழிப்பறைக்குப் போனவுங்க தவறி விழுந்துட்டாங்க. இடுப்பு எலும்பு முறிவு:( வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து 'அறுவை சிகிச்சை' செய்தால் இனி 'வாழும் காலம்' வரை வலி இல்லாமல் இருக்க முடியும் என்று மருத்துவர் எடுத்த முடிவின்படி எல்லாம் ஆச்சு.

கம்பெனி அலுவலா தாய்லாந்து போயிருந்த கோபால், அந்த வீக் எண்டில் அம்மாவைப்போய் பார்த்துவர ஏற்பாடு செஞ்சுருந்தார். சனிக்கிழமை இரவு விமானம். எதிர்பாராத விதமா வெள்ளி மாலையே போன வேலை முடிஞ்சதால் அன்னிக்கே சென்னை போயிடலாமுன்னா..... நம்ம நேரம் பாருங்க. போதிய பயணிகள் இல்லைன்னு வெள்ளிக்கிழமை சர்வீஸை கேன்ஸல் செஞ்சுருக்காங்க. இனி சனி இரவுதான் ப்ளைட். சனி வழக்கம்போல் விடிஞ்சது. அன்னிக்குக் காலை பத்தரை மணி அளவில் அம்மாவும் பயணப்பட்டுட்டாங்க. முதல்நாள் ப்ளைட் கேன்ஸலாகாம இருந்துருந்தால்..... கடைசிமுறை அம்மாவை உயிரோடு பார்த்திருக்கலாம். ப்ச்......

அம்மாவுக்கும் தாங்கமுடியாத வலியில் இருந்து நிரந்தர விடுதலை கிடைச்சுருச்சு. என்னவோ இவர் வருகைக்குக் காத்திருந்தாப்போல வாழ்க்கை முடிஞ்சு போச்சு. மறுநாள் ஞாயிறு பெஸண்ட் நகர் மின்மயானத்தில் எரியூட்டல் நடந்து முடிஞ்சு கடற்கரையில் பால் தெளிச்சு அஸ்தி கரைச்சுன்னு எல்லாம் ஆச்சு. நம்ம வீட்டுலே டபுள் ட்ராஜிடி :( தாய்க்கு செய்யவேண்டிய கடமையைச் செஞ்ச திருப்தியுடன் கோபால் ஊர் திரும்பினார்.

மகளுக்கு முழங்கால் சர்ஜரி காரணம் எனக்கு எங்கேயும் நகரமுடியாத நிலை. நானும் வீடு மருத்துவமனைன்னு அந்த சமயம் ஓடிக்கிட்டு இருந்தேன். அப்பப்ப தொலைபேசி நடப்பைச் சொல்லிக்கிட்டு இருந்தார் கோபால். தவிப்போடு இங்கிருந்தவளுக்கு கடவுள் ஒரு போனஸ் அனுப்பினார். பதிவர் சந்திப்பு. அதுபற்றி 'அவுங்களே எழுதுவாங்கன்னு நினைக்கிறேன். அருமையான பூங்கொத்தும் பூச்செடியுமாக் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க. நியூஸிலாந்து புத்தகத்தில் வாசிச்சது எல்லாம் சரி இருக்கான்னு 'டபுள் செக்' செய்ய வந்தாங்களாம்:-))))))
எங்கூரில் வருசாந்திர 'ஸேண்ட்டா பரேடு' சொல்லிவச்சமாதிரி அன்னிக்குத்தான் வச்சுருந்தாங்க. பாதி ஊர் அழிஞ்சு போச்சுன்னாலும் நாள்கிழமைன்னா விட்டுடமுடியுதா? என்னால் போக முடியலைன்றதுக்காக ஊர்வலத்தில் வரும் அலங்கார வண்டி ஒன்னு நம்ம வீட்டுக்கு முன்னால் நின்னு அலங்கரிச்சுக்கிட்டு இருந்துச்சு.
'அம்மா' படுக்கையில் விழுந்தவங்க இன்னும் அதிகக் கஷ்டப்படாமப்போனது ஒரு நிம்மதியைத் தந்தாலும் மனசுக்குள்ளே ஒரு சங்கடம். ஒரு நாள் உள்ளூரில் கடைக்குப்போன சமயம் லக்கிபேம்பூ, நியூஸியில் முதல்முறையா விற்பனைக்கு வந்துருந்துச்சு. இதுலே மூணு தண்டுகள் இருந்தா மகிழ்ச்சியைத் தருமாம். நமக்கு இப்போ வேண்டியதுதான்னு நினைச்சு ஒன்னு வாங்கியாந்தேன். பார்க்கலாம் ஒர்க் அவுட் ஆகுதான்னு!

PIN குறிப்பு: நாலு தண்டுகள் உள்ளதை வாங்கிறாதீங்க. அது மரணத்தைக் குறிக்குமாம். மற்றபடி 2 for Love & Marriage, 3 for Happiness 5 for Health
8 for Wealth and Abundance 9 for Good Fortune.

எது எப்படியோ.... செடி பார்க்க ஒரு அழகாத்தான் இருக்கு!



48 comments:

said...

எப்படியோ நீங்க மறுபடி பதிவு போட்டது எனக்க்கு சந்தோஷம்.
லக்கி மூங்கில் அதுவும் ட்விஸ்ட்டட் வகை நல்லதுப்பா.இனிமே நல்லதே நடக்கும்.

said...

ஒரே மாதத்தில் கணவன் மனைவி இருவரும் போனது வருத்தத்தை தருகிறது.தங்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

//( தாய்க்கு செய்யவேண்டிய கடமையைச் செஞ்ச திருப்தியுடன் கோபால் ஊர் திரும்பினார்.)//
கடமையை முடித்தது ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்.

said...

அப்படி எல்லாம் மகிழ்ச்சி வாங்க முடிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்..
ஆனா மகிழ்ச்சி நமக்குள்ள தான் இருக்குன்னா..அதை வெளிய கொண்டுவர இந்த மூங்கில் உதவும்.

said...

அதிகம் துன்பம் அனுபவிக்காமல் ‘அம்மா’ விடைபெற்றதில் துக்கத்தின் இடையேயும் சிறு ஆறுதல் இல்லையா? கோபால் சாரின் மனதைக் காலம் ஆற்றட்டும். உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. வல்லிம்மா சொன்னது போல இனி நல்லதே நடக்க வாழ்த்துகிறேன்.

said...

என் வருத்தங்களும்.

மகளுக்கு முழங்கால் சர்ஜரி - சின்ன வயசுதானே? அடிகிடி பட்டுச்சா? நலமா இப்ப?

said...

உங்கள் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மகளின் முழங்கால் இப்ப எப்படி உள்ளது?
இனிமே நல்லதே நடக்கட்டும்....

said...

துன்பம் வந்தால் தொடர்ந்து வரும் என்பார்கள்.அதனால்தான் ‘பட்ட காலிலே படும்.’என்ற பழமொழி கூட உண்டு.இனி எல்லாம் நல்லதே நடக்கும்.

தாங்கள் குறிப்பிட்டிருந்த பாட்டில். இறுதி வரிகள் இவ்வாறு இருக்கவேண்டும் என
நினைக்கிறேன்.

“கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக்

குருக்கள் வந்து தட்சிணைக்கு குறுக்கே நிற்க

பாவாணர் கவிதை பாடி பரிசுகேட்க

பாவி மகன் படுந் துயரம் பார்க்கொணாதே”

said...

செடி பார்க்க ஒரு அழகாத்தான் இருக்கு!


மகிழ்ச்சி வாங்கலையோ மகிழ்ச்சி..........."

இடுக்கண் வருங்கால் பதிவு!

said...

"துன்பம் வரும்வேளையிலே சிரிங்க" என்று பாடிவிட்டார்கள். வரும்போது படும்பாடு நமக்கல்லவா தெரியும்.

உங்கள் குடும்பத்தினர்களுக்கு எனது அனுதாபங்கள்.

உங்கள் வீட்டில் விரைவில் மீண்டும் வந்திடும் வசந்தம்.

said...

என் அனுதாபங்கள்.

இப்போ மூங்கில் செடி வாங்கி விட வேண்டியது தான். சந்தோஷம் அதிகரித்தால் சந்தோஷமே!

said...

இனி வரும் நாட்கள் இனிமையாகக் கழிய வாழ்த்துகள். மகளுக்குக் கால் சரியாகவும் உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காணவும் பிரார்த்திக்கிறேன். கோபால் சாரைக் கேட்டதாய்ச் சொல்லவும், கடைசிக்காரியங்கள் செய்யவாவது கொடுத்து வைச்சதே; அதுவரை சந்தோஷம் தான்.

மகிழ்ச்சி இப்போது மறைந்து கொண்டுள்ளது. காலம் போகப் போக சரியாகும்.

said...

அதிர்ஷ்ட மூங்கில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரட்டும். அதன் எண்ணிக்கை விஷயம் பற்றி இன்னிக்குத் தான் தெரிந்து கொண்டேன். நன்றி தகவலுக்கு.

said...

Bonus ayiducha padhivar sandhippu, am glad it was a diversion for you :) kandippa ezhudhuven, teacherai sandhitha anubavam nu podalena varalatril en peyar enna agaradhu! Hope all is well with Gopal sir and chella ponnu.

said...

varunthukiren
gopal sir kku aaruthal kooravum

said...

எல்லாத் துன்பங்களையும் ராமச்சந்திர கவிராயர் ஒரே மூச்சாக சொல்லிவிட்டாரே..!
அனுபவிக்கும் வரை துன்பம். பழகிவிட்டால் அது வாடிக்கையாகி விடும்.

said...

//எண்ணி இருபத்திநாலு நாளில் யமன் மீண்டும் வீட்டுக்கு வந்துட்டுப் போனான். போனமுறை ஒரு கணவரையும் இந்தமுறை அவர் மனைவியையும்:(//

இது உள்ளபடி மிக்க வருத்தத்தை தருவது. கால தேவனுக்கு ஏது ஈவு இரக்கம்...?

said...

//நம்ம வீட்டுலே டபுள் ட்ராஜிடி ://

எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

said...

////எண்ணி இருபத்திநாலு நாளில் யமன் மீண்டும் வீட்டுக்கு வந்துட்டுப் போனான். போனமுறை ஒரு கணவரையும் இந்தமுறை அவர் மனைவியையும்:(///

வந்தால் எல்லாம் ஒண்டுமண்டாத் தான் வரும் என்று எங்க ஊரில் சொல்வார்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்

said...

//நியூஸிலாந்து புத்தகத்தில் வாசிச்சது எல்லாம் சரி இருக்கான்னு 'டபுள் செக்' செய்ய வந்தாங்களாம்:-))))))//

:)

said...

// லக்கிபேம்பூ, நியூஸியில் முதல்முறையா விற்பனைக்கு வந்துருந்துச்சு. இதுலே மூணு தண்டுகள் இருந்தா மகிழ்ச்சியைத் தருமாம். //

மகிழ்ச்சி வளரட்டும்..

said...

//நாலு தண்டுகள் உள்ளதை வாங்கிறாதீங்க. //

நாலு தண்டுகள் என்பது 'தூக்கிப் போடுவதை' குறிக்கிறது. போகும் போது நாலு பேர் தூக்க வேண்டும் என்பது அது..

said...

//எது எப்படியோ.... செடி பார்க்க ஒரு அழகாத்தான் இருக்கு!//

உங்கள் பதிவுகள் அப்படியே ஒரு படமாக விரிகிறது. அவ்வளவு அழகு..

http://jayarajanpr.blogspot.com/

said...

வாங்க வல்லி.

உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கட்டும்!
நன்றிப்பா.

said...

வாங்க ராம்வி.

ஆறுதல் சொற்களுக்கு நன்றிகள்.

said...

வாங்க கயலு.

இதை மூங்கிலுன்னு சொல்றமே தவிர இது மூங்கில் குடும்பமே இல்லைப்பா. போலி:-))))
Dracaena braunii என்ற தாவரப்பெயர். லில்லி குடும்பத்தைச் சேர்ந்ததாம்.

வீட்டுச் செல்லங்களுக்கு 'ஆகாதாம்':(

said...

வாங்க கணேஷ்.


வாழ்த்தியமைக்கு நன்றி. வாழும் வாழ்க்கையில் தரம் இல்லையெனில் வாழ்ந்தென்ன பயன்?

படுக்கையில் விழுந்தா பாயும் எதிரிதான்னு சும்மாவாச் சொல்லி வச்சுருக்காங்க!

said...

வாங்க ஹுஸைனம்மா.

ஸ்போர்ட்ஸ் இஞ்சுரி. அவள் நெட் பால் ப்ளேயர். இந்த விளையாட்டில் இது ரொம்ப சகஜமா நடப்பதுதான். முழங்காலில் இருக்கும் மூட்டில் லிகமெண்ட் பழுதாகிருது. காலின் கீழ் பகுதியில் இருந்து தசைநார் எடுத்து முழங்காலில் வச்சுத் தைக்கிறாங்க.

ஒரு முழங்கால், ஆகஸ்ட்டில் சிகிச்சைமுடிஞ்சு சரியானபிறகு இப்போ மற்றொரு காலுக்கு செஞ்சுருக்காங்க. இன்னும் நாலைஞ்சு மாசத்தில் மீண்டும் விளையாடப் போகலாம்.

விசாரிப்புக்கு நன்றிப்பா.

said...

வாங்க கோவை2தில்லி.

மகளுக்கு இப்போ பரவாயில்லை. இனி ஃபிஸியோதெரபி நாலைஞ்சு மாசம் உண்டு. ரெண்டு வாரத்தில் ட்ரைவ் செய்யலாமுன்னு சொல்லிட்டாங்க.

ஆறுதல் சொற்களுக்கு நன்றிப்பா.

said...

வாங்க நடனசபாபதி ஐயா.

பாட்டின் கடைசி வரிகள் எனக்குக் கிடைக்கலை. எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றிகள்.

துன்பம் ஒத்தையிலே வராது. சோடி போட்டுக்கிட்டுத்தான் வரும் என்பது சரியாத்தான் இருக்கு.

தங்கள் வருகைக்கு நன்றிகள்.

said...

வாங்க கீதாம்

அன்புக்கும் ஆறுதல் சொற்களுக்கும் நன்றிப்பா.

இந்த லக்கி மூங்கிலுக்கு சீன வாஸ்துவிலே விசேஷ இடம் இருக்கு. 'அவுங்க பஞ்சபூதம்' தொடர்பும் உண்டாம்.

மரம் = இது இந்த மூங்கிலில் அமைஞ்சுருது
நிலம் = செடியைச்சுத்தி வச்சுருக்கும் கூழாங்கல்
தண்ணீர் = செடியே தண்ணீரில்தான் பாதம் வச்சு நிக்குது.

தீ = செடிக்கு ஒரு சிகப்பு ரிப்பன் கட்டி விட்டுறணும்.

உலோகம்= ரெண்டு செப்புக்காசை செடி உள்ள பீங்கான் சட்டியில் போட்டு வச்சுடலாம்.

இந்த அஞ்சும் செஞ்சுட்டா சீனவாஸ்து பூர்த்தியாகிருதாம்.

said...

வாங்க பொற்கொடி.

வந்து போனது மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா. கட்டாயம் எழுதுங்க. காத்திருக்கேன்:-)

said...

வாங்க சிஜி.

ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு!!!!! நலமா ?

கோபால் நன்றி சொல்லச் சொன்னார். அவருக்கு அன்றைக்கு இருந்த பிஸியில் சட்ன்னு நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியலைன்னு சொல்லச் சொன்னார்.

said...

வாங்க ஜயராஜன்.

தொடர்ந்து வந்தால் துன்பம்கூட பழகிப்போகுது பாருங்களேன்!!!!!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ம.தி.சுதா.

நம்ம வீட்டில் நட்சத்திரத்தின் ஜொலிப்புக்கு நன்றி.

வருகைக்கு நன்றி.

ரெட்டைத் துன்பம் இப்போதைக்கு மதி.

said...

வருத்தங்களைப் பதிவு செய்கிறேன். இறந்தவர்கள் இறையடி நிழலில் சேரப் பிரார்த்திக்கிறேன்.

said...

நீங்க மீண்டு வந்தது சந்தோஷம் துளசியக்கா.

எனது ஆழ்ந்த அனுதாபங்களும்.

said...

காலம் மனதைத் தேற்றட்டும் .

இராமச்சந்திரக் கவிராயரின் இந்தக் கவிதை படித்து நான் பலமுறை வியந்து ..இல்லை இல்லை பயந்திருக்கிறேன்.

said...

மொத்தமான உங்கள் உணர்வுகளை கோர்த்து பார்க்கும் போது மனதளவில் ஒரு மாதிரியாக இருக்கிறது.

மரணம் ...... பாடம், படிப்பினை, புரிதல்,தண்டணை,அமைதி.

இதைப்பற்றி நிறைய யோசித்து இன்னமும் ஆச்சரியப்பட்டாலும் தினந்தோறும் பார்க்கும் மரணங்கள் மேன்மேலும் பல பாடங்களை கற்றுத் தந்து கொண்டு தான் இருக்கு.

said...

வாங்க்க மதுரையம்பதி.

பிரார்த்தனைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நல்லதோ கெட்டதோ வேறெங்கே போக? இங்கேதானே வந்தாகணும்.. அதான் வந்துட்டேன்.

நன்றிப்பா.

said...

வாங்க சிவகுமாரன்.

கவிராயர் சொன்னதைப் படிச்சால் பயம்தான். நல்லவேளை அந்தளவுக்கு ஆகலைன்னு மனதைத் தேற்றிக் கொள்ளணும்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜோதிஜி.

தருமரிடம் யக்ஷன் கேட்ட கேள்விக்கு பதிலும் 'மரணம்' பற்றித்தானே!!!!!

வாழ்க்கைப்பாடம் முழுசும் சொல்லித்தரும் ஆசான் 'அது'வல்லவோ!

புரிதலுக்கு நன்றிகள்.

said...

மகளுக்கு இப்போ எப்படி இருக்கு?
வீட்டில் மறுபடி மகிழ்ச்சி பொங்க பிரார்த்தனைகள்

said...

நண்பர் ஜயராஜன்,

பின்னூட்ட மழையால் என்னத் திணற வச்சுட்டீங்க!!!!! நன்றிகள் பல!

ஒரு காலத்தில் எனக்குப் பின்னூட்ட நாயகி, பின்னூட்ட மாதாமகி (பிதாமகருக்கு எதிர்ப்பதம்!) என்றெல்லாம் பெயர் இருந்துருக்கு:-))))

said...

வாங்க வெற்றிமகள்.

நாலு தவிர்த்து மற்றதை வாங்கிருங்க. மனம் நிறைந்த மகிழ்ச்சி கேரண்டீ தான் போல! நேற்று மறுபடி அந்தக் கடைக்கு வேற ஒரு பொருள் வாங்கப் போனபோது கவனிச்சேன்..... விற்பனைக்கு இருந்த மூங்கில்கள் அனைத்தும் விற்றுப்போயிருக்கு. அப்ப...கடைக்காரருக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருந்துருக்கும்:-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உண்மைதான்.
அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்!

said...

வாங்க மாதேவி.

அன்புக்கு நன்றிப்பா.

வாழ்வில் மட்டுமா வசந்தம்?

நாட்டையே மகிழ்வில் ஆழ்த்த கோடை வந்துருச்சு.இனி ஒரு மூணு மாசமாவது கொண்டாட்டங்கள் இருக்கும்.

said...

வாங்க விருட்சம்.

மகளுக்கு இப்போ நல்லாவே குணமாகிக்கிட்டு வருது. விசாரிப்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் உங்கள் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.