Friday, March 16, 2012

மீண்டு(ம்) வருமா? ( கதீட்ரல் தொடர்ச்சி) Christchurch Earthquake 9

நிலநடுக்கம் ஒன்னும் இந்த ஊருக்குப் புதுசுல்லேன்னாலும் இப்படி ஒரேடியா மேலேயும் கீழேயும், இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமா சாய்ஞ்சு ஒரே சமயத்தில் ஏற்பட்ட குலுக்கல்களும் ரொம்பவே புதுசு:(

1881, 1888, 1901 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் இந்த பெல் டவர் கும்மாச்சிக்குத்தான் எப்பவும் சேதம் ஏற்பட்டு திரும்பத் திரும்ப சீராக்கும் வேலை நடந்துச்சுன்னாலும் கடந்த 2010 செப்ட்ஃம்பர் முதல் இதுநாள் வரை நிக்காமல் தொடரும் நடுக்கங்களால் பெல்டவர் ஒரேடியா மொட்டைக் கோபுரமா நிக்குது. கீழே விழுந்த கூம்பை எடுத்து ஒரு மரத்தடியில் வச்சுருக்காங்க.

டவர் போனாப் போகட்டும், கோவில் நல்லா இருந்தால் சரின்னு நினைக்க முடியாம 2011 ஃபிப்ரவரி பூகம்பத்தில் உள்ளே நிறைய அழிவு. ஸ்ட்ரக்ச்சர் முழுசும் பாழாகிப்போச்சு. இனிமே இதை வெறுமனே விட்டுவச்சாலும் ஆபத்துதான்னு சொல்றாங்க. சம்பவம் நடந்தசமயம் இதுக்குள்ளே 22 பேர் மாட்டிக்கிட்டாங்கன்னு சேதி வந்து பதைபதைச்சு நின்னோம். டவரில் ஏறிப்பார்த்துக்கிட்டு இருந்தவங்க நாலுபேர் அப்படியே கல்லோடும் மண்ணோடும் புதைஞ்சுட்டாங்கன்னு தகவல். நல்லவேளையா எல்லாம் வதந்தீன்னு தெரிஞ்சப்போ நிம்மதி ஆனோம். இந்த வதந்'தீ' பரப்புவதில் மட்டும் உலகமெல்லாம் ஒரே ஒற்றுமை!!!!
Sue Spigel என்ற பெண், மாடியில் பூஜாரிகளுக்கான மேலங்கி தயாரிக்கும் வேலையில் இருந்துருக்கார். இடிபாடுகள் தலையில் விழுந்து, முகமெல்லாம் ரத்தம் ஒழுக, ஒரு கை ஒடிஞ்ச நிலையில் ஜன்னலை ஒருமாதிரித் திறந்து, உதவி கிடைக்குமான்னு இருந்தபோது ஒரு போலீஸ் ஆஃபீஸர் கண்ணில் விழுந்ததால் உடனே காப்பாற்றப்பட்டார்.

கதீட்ரல் உள்ளே இருக்கும் தூண்களைப்பத்தியும் சொல்லணும். மொத்தம் 14 தூண்கள். ஒவ்வொன்னும் ஒரு குடும்பம், நிறுவனம் இப்படிக் கோவிலுக்காக நிதி கொடுத்து அமைச்சுருக்காங்க. 1851 இல் பாடம் சொல்லிக்கொடுத்த நியூஸியின் முதல் டீச்சருக்கு பள்ளிக்கூடப்பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு தூண் வச்சுருக்காங்க. கோவில் ரெக்கார்டுகளில் யார் யார் எந்தத் தூண்களுக்கு நிதி உதவி செஞ்சாங்கன்ற விவரம் இருக்கே தவிர, நல்ல வேளையா தூண்களில் இன்னாரின் உபயம் என்று எழுதிவைக்கலை:-)

முகப்புச் சுவரில் ரோஸ் விண்டோன்னு ஒன்னு மிகவும் புகழ்பெற்றதா இருந்துச்சு. 25 அடி குறுக்கு விட்டம். முதல் பிஷப் ஹார்ப்பர் அவர்களின் மகனும் மருமகளும் இதுக்கு நிதி கொடுத்துருக்காங்க. வெனிஸ் நகரத்தில் உருவாக்கப்பட்டு இங்கே கொண்டுவந்தது. தேவாலயத்துக்குள்ளே நுழைஞ்சதும் தலையைத் தூக்கி மேற்கே வாசல்பக்கம் பார்க்காம யாருமே இருந்துருக்கவே முடியாது. அப்படி ஒரு அழகும் வேலைப்பாடும்!!!!


ரோஸ் முதல் க்வேக்கில் கொஞ்சம் தப்பியது, டிசம்பர் ஆட்டத்தில் தப்பிக்கலை:(

இழப்பை சகிக்கமுடியாத ஒரு கேக் அலங்கார நிபுணர் இந்த ஜன்னல் அலங்காரத்தைத் தான் செய்த பாவ்லோவா என்னும் கிவி ஸ்பெஷல் இனிப்பில் கொண்டுவர முயற்சி செஞ்சார். இந்தப் படம் பாருங்க. 20 கிலோ மார்ஷ்மல்லோ, 25 கிலோ அரிசிப்பொரி, ஏராளமான முட்டைகளின் வெள்ளைக்கரு, ஐஸிங் சக்கரைன்னு மூணு மீட்டர் குறுக்கு விட்டம் அளவில் பிரமாண்டமான தயாரிப்பு.
கருவறை(ஆல்ட்டர்)க்கு முன்னால் இருந்த மூணு தேவதைகளின் உருவங்களும் கட்டிடம் இடிஞ்சப்பக் கீழே விழுந்துருச்சு. அதில் உடையாமல் தப்பிச்ச 'கேப்ரியல்' என்னும் தேவதூதனை ஒரு க்ரேன்லே கட்டிவிட்டு நகரத்தைப் பார்க்கும்படி வச்சுருக்காங்க. எப்படியோ நகரம் காப்பாற்றப்படணும்.
முந்தி இருந்ததைப்போலவே இந்த தேவாலயத்தைத் திருப்பிக் கட்டணுமுன்னா குறைஞ்சபட்சம் 100 மில்லியன் டாலர் செலவுன்னு ஒரு கணக்கு. எங்க மாட்சிமைதாங்கிய எலிஸபெத் ராணியம்மா அவுங்க காசுலே இருந்து 20 மில்லியன் தரேன்னு சொல்லி இருக்காங்க. மீதி 80 எப்படி சேர்க்கப்போறோமுன்னு தெரியலை. இன்ஷூரன்ஸ் பணம் அவ்ளோ கிடைக்காது. கோவில்வேற ((அல்ப்பமா) பத்து டாலர் டொனேஷன் கொடுங்கன்னு கேக்குது. எங்க ஊர் ஜனத்தொகையே மூணரை லட்சம்தான். எல்லோரும் தவறாமக் கொடுத்தாலும் மூணரை மில்லியன்தான் தேறும். அப்ப பாக்கி????

பத்தே மில்லியன் டாலர் செலவில் ஜப்பானியர் ஒருத்தர் இதே மாதிரி ரிப்ளிகாவை அட்டையில் தயாரிச்சுத் தரேன். அதை கோவிலாப் பயன்படுத்தங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கார். நம்ம தோட்டா தரணியிடம் பயிற்சி பெற்றாரா என்ன? (இப்ப எதுக்குப் புது சட்டசபை செட் விவகாரம் மனசில் வருது? அடங்கு மனசே)

ஸ்டெய்ண்டு க்ளாஸ் stained glass என்ற வகையில் தேவாலயத்துக்குள்ளே ஏராளமான கண்ணாடி அலங்காரங்கள், ஒரு முப்பது இருக்கும். இவையும் உள்ளூர் மக்களால் பல நாடுகளில் இருந்து வாங்கப்பட்டு, கோவிலுக்குக் கொடுத்த தானங்களே!





ஆன்னா ஊன்னா இந்த ஊர்லே பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு அவுங்க சொன்னதை இலவச தினசரியில் போட்டுருவாங்க. பொதுவா எல்லாத்துலேயும் அஞ்சு சாதகமாவும் அஞ்சு பாதகமாவும் இருக்கும். இந்த ஒரு விஷயத்துலேதான் பத்துக்கு எட்டு 'கூடாது'ன்னு சொல்லுது. நம்ம சிட்டிக் கவுன்ஸிலர் ஒருத்தர் நம்ம பக்கம்!

ஒரு நாளைக் குறிப்பிட்டு கதீட்ரலின் தலைவிதியின் தீர்ப்பு பகல் ரெண்டு மணிக்குச் சொல்வோமுன்னதும் ஊரே டிவியில் கண்ணும் ரேடியோவில் காதுமாக் கிடந்துச்சு.

ரெண்டு சனி ரெண்டு ஞாயிறு சதுக்கத்துக்குள்ளே விடுவோம். கண்ணாரப் பார்த்துக்குங்க. அப்புறம் சொல்லாமக்கொள்ளாம போயிருச்சுன்னு புலம்பக்கூடாது. ஒரு சனி ஞாயிறு போச்சு. பாக்கி இன்னும் ஒரே ஒரு வார இறுதி.
கல்யாணத்துக்குப் போகலைன்னாலும் சாவுக்குக் கட்டாயம் போகணும் என்ற பண்பாடு இன்னும் நம்ம ரத்தத்தில் இருக்கே. ரெண்டு பக்கமும் ஆள் உயர வலைக்கம்பித் தடுப்பும் இடையில் நாலைஞ்சு மீட்டர் அகலமுமா பாதையும். உள்ளே போக ஒரு மூணு நிமிசக் காத்திருப்பு. வரிசை ஒன்னும் இல்லை. ஆனாலும் யார்மேலேயும் இடிச்சுத்தள்ளாமல் அப்படியே போனோம். நிகழ்ச்சி நடந்த ஃபிப்ரவரி 22க்குப்பிறகு முதல்முறையா கதீட்ரலை நேருக்குநேர் சந்திப்பது ஒருவிதமான ஆவல், எதிர்பார்ப்பு, ஐயோ என்ற மனக்கஷ்ட,ம் எல்லாம் சேர்ந்து ஒரு கலப்படமான உணர்வு.


தேவாலயத்துக்கு முன்னால் சதுக்கம் ஆரம்பிக்கும் இடத்தில் இடுப்புயரத்தில் ஒரு தடுப்பும் ஆறேழு மீட்டர் இடைவெளிவிட்டு இன்னொரு தடுப்புமா அமைச்சுருக்காங்க. தப்பித்தவறி இப்போ எதாவது நிலநடுக்கம் வந்தாலும் விழும் கற்கள் நம்மகிட்டே வர வாய்ப்பே இல்லை. ஏற்கெனவே உருண்டு விழுந்த உருண்டைக் கற்களை ஒரு கம்பிக்கூண்டுக்குள் சேர்த்து வச்சுருந்ததைப் பார்த்தால் வியப்பா இருக்கு. எங்கே இருந்து வந்தவைகள்????
மணிக்கூண்டு முக்கால்வாசி உடைஞ்சு போய் மொட்டையா நிக்க, தேவாலயத்தில் முன்பக்கச்சுவர்கள் இடிஞ்சு கிடக்கு. இரும்புச்சட்டங்களை அங்கங்கே முட்டுக்கொடுத்து வச்சுருக்காங்க.. ரோஸ் ஜன்னல் இருந்த இடத்தில் பெரிய ஓட்டை:(
சதுக்கத்தில் மக்கள் ஓய்வெடுக்கக் கட்டிவச்சுருந்த ரெண்டு மேடைகளிலும் மக்கள் ஏறி நின்னு கண்கொட்டாமல் கோவிலைப் பார்த்து திகைச்சு நிக்கறாங்க. மனசில் ஓடும் எண்ணக் குவியல்கள் முகத்தில் தெரியுது. ஏறக்கொறைய நிசப்தம். பேச நாக்கும் எழும்புதா என்ன? எழவு வீட்டில் இருப்பதைப்போலத்தான் இருக்கு:(
இந்தச் சதுக்கத்தில் எத்தனைமுறை எத்தனை விழாக்கள், கூட்டம் எல்லாம் நடந்து கலகலப்பா இருந்துருக்கு. ஊருக்குள்ளே நல்லது கெட்டது எதுன்னாலும் இங்கேதானே கூடுவோம்! இந்தியன் க்ளப் தீபாவளி விழாவைக்கூட ரெண்டுமுறை இங்கே நடத்துனோமே! நம்ம ஹரே க்ருஷ்ணா குழுவில் ஒரு கல்யாணம்கூட இங்கே சதுக்கத்தில் கோலாகலமா ஊர்த்திருவிழா போல நடந்துச்சே!

சிலசமயம் எனக்கு மனசு சரி இல்லைன்னா பஸ் பிடிச்சு நேரா இங்கே வந்துருவேன். தேவாலயத்துக்குள்ளே போய் பெருமாளை தியானிச்சுட்டு சதுக்கத்தில் வந்து கொஞ்ச நேரம் உக்கார்ந்து போற வர்ற மக்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பேன். வரும்போது வாங்கின பஸ் டிக்கெட் மூணு மணி நேரம் வரை செல்லும் என்பதால் ரெண்டரை மணிநேரம் சுத்திக்கிட்டு இருந்துட்டு அதே டிக்கெட்டில் வீட்டுக்கு வந்துருவேன். மனசு லகுவாகிப்போகும். புலம்பல் சொல்ல அப்போ ப்ளொக் இல்லை பாருங்க:-)
குறைஞ்சது ரெண்டு மூணு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் சதுக்கத்திலும் கோவிலிலுமா நடமாடுவாங்க. சதுரங்க ஆட்டம் சதுக்கத்தில் நடக்கும். ரெண்டு டாலர் செலவு. இடுப்புயர பொம்மைகள். படைவீரனையும் குதிரையையும் கோட்டையையும் ராஜாவையும் ராணியையும் தூக்கிப்போய் வைக்கணும்.

பகல் 12 ஆனதும் டவுன் க்ரையர் என்றவர் பழங்கால உடுப்புகளுடன் சதுக்கத்தில் வந்து நின்னு அன்று ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை கையில் உள்ள சுருட்டி வச்ச ஓலையைத் திறந்து வாசிப்பார். நம்மூர் மந்திரவாதி ஒரு சின்ன ஏணியில் நின்னு நாட்டு நடப்பையும் எப்படி உலகம் கெட்டுக்கிடக்குன்னும் சொல்லிக்கிட்டு இருப்பார். உலகத்தின் வரைபடம் ஒன்னு தலைகீழாய் வரைஞ்சது இவர் வச்சுருப்பார். சுருக்கத்தில் சொன்னால் லண்டன் ஹைடு பார்க் போல ஆளாளுக்கு 'உசரமா நின்னு' பேசலாம்.
டூரிஸ்ட் அட்ராக்ஷனா ட்ராம் வண்டிகள் மீண்டும் ஓட ஆரம்பிச்சதும் சதுக்கத்தைச் சுற்றி கலகலப்பு இன்னும் கூடுனதென்னவோ நிஜம். இப்போ வெறிச்சோடிக்கிடக்கும் இடம் பார்த்தாலே மனசைக் கலக்குது:(

ஹூம்..... எல்லாம் போச்சு.
தேவாலயத்துக்கு வடக்குப்பக்கம் ஒரு வார்மெமோரியல் வச்சுருந்தாங்க. அதுக்குப்பின்பக்கம் 1995 இல் புதுசா ஒரு விஸிட்டர்ஸ் செண்டர் கட்டிடம் கட்டி அதை எங்க மாட்சிமை தாங்கிய ராணியம்மாதான் திறந்து வச்சாங்க. சுற்றுலாப்பயணிகள்/பார்வையாளர்களுக்கான தகவல்கள், காஃபி ஷாப், நினைவுப்பொருட்கள், கிஃப்ட்ன்னு இருந்தாலும் அது கோவில் டிஸைனுக்கு ஒட்டாத eye sore ன்னு எனக்கு ஒரு நினைப்பு. ஆனாப் பாருங்க..... இது அழிவிலே இருந்து தப்பிச்சமாதிரிதான் தெரியுது!


தேவாலயத்தின் தெற்குப்பக்கத்தில் பிரமாண்டமான மூணு தூண்களை வச்சு அதை Columbarium ன்னு ஐரோப்பிய நாடுகளின் ஒரு வழக்கத்தை அனுசரிக்கும்விதமாச் செஞ்சுருக்காங்க. மதங்கள் நம்பிக்கைகள் இப்படி எந்த வித்தியாசமும் இல்லாம ஊர் மக்கள் அனைவருக்கும் பொதுவா, நம்ம குடும்பத்தில் இறந்து போனவர்களின் அஸ்தியை ஒரு சின்னப்பெட்டியில் வச்சுக் கொடுத்து அதுக்கான ஒரு கட்டணமும் கட்டினால் அதுக்குள்ளே வச்சுருவாங்களாம். 700 அஸ்திகள்வரை வைக்கலாமாம். முன்கூட்டியே இதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சுக்கலாம். அந்தத் தூண்கள் சேதம் ஆகாமல் இப்போதைக்கு நிலையாத்தான் நிக்குது. (பாங்காக் நகரில் ஒரு கோவிலில் இப்படி அஸ்திகள் அழகழகான ஜாடிகளில் வச்சுருப்பதைப் பார்த்த நினைவு வருது)
உலோகச்சிற்பமான சலீஸ் சேதாரம் ஒன்னும் இல்லாம இருந்தாலும் அதுக்குள்ள கம்பீரம் குறைஞ்சுபோய் சோகமா நிக்குதோ?

வலைக்கம்பி வேலியில் மஞ்சள் நிற ரிப்பன்களில் ஊர்மக்கள் சேதி எழுதி கட்டியிருக்காங்க. அநேகமா எல்லோரும் கோவிலைக் காப்பாத்த நினைப்பவர்கள்தான்.

ரெண்டு தடுப்புகளுக்கிடையில் ஒரு போலீஸ் கார் மக்கள் பாதுகாப்புக்காக நிக்குது. நம்ம சோகத்துலே பங்கெடுத்துக்குது போல. அங்கே ஒன்னு இங்கே ஒன்னு ரெண்டு செக்யூரிட்டி. தனக்கு நாட்டாமை கொடுத்தமாதிரி மக்களைப் போ போ நிக்காதேன்னு சொல்லி விரட்டும் எண்ணமே இல்லாம தூரத்துலே கைகட்டி அமைதியா நிக்கறாங்க.
இந்தப் படத்தில் தெரியும் புதுசு, பழசுன்னு அத்தனை கட்டிடங்களுமே இடிபடப்போகுது.:(
சிட்டிமாலின் இந்தப்பகுதி மொத்தமும் இடிச்சுடப்போறாங்க. நகரின் நடுவில் ஒரு 12 சதுர கிலோமீட்டர் பரப்பு முழுசும் காலியாகுது:(


நமக்கு எவ்வளோ நேரம் இருந்து பார்க்கணுமோ அவ்ளோ நேரம் மனம் அடங்கும்வரை நின்னு நிதானமா சோகத்தை ஜீரணிக்கும்வரை இருக்கலாம். பாழும் கண்ணீர்தான் திரைபோட்டுக்கிட்டே இருக்கு. நமக்குப் பழக்கமே இல்லாத யார்யாரோ ஆறுதலா தோளைத்தட்டிப் போறாங்க. பொது சோகத்துக்கு ஊரே பழக்கபட்டுருக்கு.
மெள்ள நடந்து வெளியே வர்றோம். பாதை முடிவில் கடைசியில் ஒரு டொனேஷன்ன்னு ஒரு ப்ளாஸ்டிக் வாளி வச்சுருக்காங்க. கொஞ்சம் காசைப்போட்டால் தேவலைன்னு இருந்துச்சு. இதே வாளியை சதுக்கத்தில் கோவிலுக்கெதிரில் இருக்கும் இடுப்பளவு தடுப்புக்கு முன்னே வச்சுருந்தால்...... நிறைய கலெக்ஷன் ஆகச் சான்ஸ் இருக்கு. மக்கள் எமோஷனலா இருப்பாங்க இல்லே? அதென்னவோ போங்க..... பொழைக்கத் தெரியாத ஊர்..... நானூறு மீட்டர் நடந்து வந்தபிறகு துக்கம் குறைஞ்சு நிகழ்கால நடைமுறைக்கு வந்துறமாட்டோமா?

ஆச்சு. நாளைக்கும் நாளன்னைக்கும்தான் கடைசி நாள். இன்னொருமுறை கட்டக்கடசியா முகம் பார்க்கலாமுன்னு இருக்கேன். கோபால் சம்மதிக்க மாட்டார்.

" அங்கே போய் என்னத்துக்கு அழறே..... அதை இங்கேயே உக்காந்து அழுது முடியேன்"


22 comments:

said...

ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விரிவான பகிர்வு. ரோஸ் ஜன்னலின் கேக் தத்ரூபம்.

இன்னொரு முறை செல்வது வேதனையை அதிகரிக்கவே செய்யும்.

said...

படத்துல பார்க்கற எங்களுக்கே அது இடிபடப்போகுதுங்கறதை ஜீரணிக்க முடியலையே.. உங்களூர்க்காரங்களுக்கு இன்னுமே கஷ்டமாத்தான் இருக்கும்.

said...

கடைசியில கோபால் சார் சொன்னதுதான் சரி. மீண்டும் பார்க்கப் பார்க்க வேதனைதான் மிஞ்சும். என்ன செய்ய..?

said...

தேவாலயத்தின் உள்ளே பெயிண்டிங் ரொம்ப நல்லா இருக்கு.

ரோஸ் ஜன்னல் கேக் அருமையா இருக்கு.

திரும்ப பார்த்தாலும் அழுகை தான்....

said...

நமக்கு எவ்வளோ நேரம் இருந்து பார்க்கணுமோ அவ்ளோ நேரம் மனம் அடங்கும்வரை நின்னு நிதானமா சோகத்தை ஜீரணிக்கும்வரை இருக்கலாம். பாழும் கண்ணீர்தான் திரைபோட்டுக்கிட்டே இருக்கு. நமக்குப் பழக்கமே இல்லாத யார்யாரோ ஆறுதலா தோளைத்தட்டிப் போறாங்க. பொது சோகத்துக்கு ஊரே பழக்கபட்டுருக்கு.//

இதை படிக்கும் போது உங்களின் வருத்தம், மற்றும் ஊர்க்காரர்களின் வருத்தம் தெரிகிறது.

படத்தில் பார்க்கும் எங்களுக்கே மிகவும் வருத்தமாய் உள்ளது.

என்ன செய்வது!

மீண்டும் கதீட்ரல் ஆலயம் பழைய வனப்புடன் வர பிராத்திப்போம்.

said...

நன்றாகப் பார்த்த ஒரு இடம் இடிபாடுகளுடன் பார்க்க நேரிடும் போது கஷ்டம் தான்....

said...

முகப்புச் சுவரில் ரோஸ் விண்டோன்னு ஒன்னு மிகவும் புகழ்பெற்றதா இருந்துச்சு.

ரொம்பவும் ஆதங்கமாகத்தான இருக்கிறது இடிபடுவதை நினைத்தால்..

ஏங்க போராட்டம் உண்ணாவிரதம் இருந்து காப்பத்த தெரியல்லியா....

said...

'துக்கம் குறைஞ்சு நிகழ்கால நடைமுறைக்கு வந்துறமாட்டோமா?'

எதனையும் நீண்டகாலம் நினைக்காமல் மறக்கும் "மறதி" யின் துணையால் தான் நாம் வாழ்கிறோம்

said...

ரோஸ் ஜனல் அழகு..கேக்கும்தான்...பார்க்கப் பார்க்க வருத்தம்தான்..ஆனாலும் கட்டக் கடைசியாய்ப் பார்க்க ஆசைதான் வரும்..

said...

ரோஸ் விண்டோ தான் எத்தனைஅழகா இருக்குப்பா. மிகக் கஷ்டமா இருக்கு. இடிப்பதுன்னு தீர்மானமே செய்துட்டாங்களா.

இந்த அழகான பூமிக்கு வந்த சோகத்தைப் பார்க்கத் துயரம் தான் மேலிடும்.

said...

வேதனைதான்.

said...

வாங்க ராமலக்‌ஷ்மி.

உண்மைதான். அதனால் இன்னொரு முறை போகலை:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

கசப்பையும் ஜீரணிச்சுக்கிட்டு இருக்கோம்.

வழக்கு போட்டுருக்காங்க. தீர்ப்பு சீக்கிரம் வந்துரும்.

said...

வாங்க கணேஷ்.

சில சமயம் அவர் பேச்சைக் கேட்கும்படி(யும்) ஆகிருது:-))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

சரியான கலர் மேட்ச் செய்யணுமுன்னு கேக்லே ஜன்னல் படங்களுக்கு அக்ரிலிக் பெயிண்ட் பயன்படுத்தி இருக்காங்க. அதான் பளிச்ன்னு அட்டகாசமா வந்துருக்கு.

said...

வாங்க கோமதி அரசு.

ஆறுதல் தந்த சொற்களுக்கு நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கண் முன்னால் காணாமப்போன சரித்திரம் இது:(((((

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

போராடலாம். ஆனால் உண்ணாவிரதம்.... இங்கே யாருக்கும் அதைப்பற்றித் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

(நம்ம வீட்டில் )இதுபற்றித் தெரிஞ்சவங்க கூட சட்டை செய்வதில்லை.

பெடிஷன் போட்டுருக்கோம். பார்க்கலாம்...... என்ன பதில் சொல்வாங்கன்னு.

said...

வாங்க பத்மா.

சொன்னீங்க பாருங்க...கோடியில் ஒரு சொல்!!!!

இந்த மறதி மட்டும் இல்லைன்னா......

வாழ்க்கை நரகம்தான்:(

said...

வாங்க பாசமலர்.

கடைசி நாள் நான் போகலை, ஆனால் மகள் போயிட்டு வந்தாள். மனசுக்குக் கஷ்டமா உணர்ந்தாளாம்.

said...

வாங்க வல்லி.

அநேகமா இடிச்சுருவாங்கதான். அதைப் பிரிச்செடுக்கும்போது யார் தலையிலும் விழாம இருக்கணும் என்பது முக்கியம்.

20 மில்லியன் தரேன்ன ராணியம்மாள் இப்போ ஜகா வாங்குறாங்களாம்:(

said...

வாங்க மாதேவி.

துயரில் பங்கு பெற்றமைக்கு நன்றிப்பா.