Wednesday, April 25, 2012

இல்லாதவர்களின் மாங்காய்(????) பச்சடி!

உள்ளூர்த்தோழி சும்மா ஒரு விஸிட்ன்னு வந்துருந்தாங்க. காலை ஒரு 11 மணி இருக்கும். பகல் சமையலுக்கு என்ன செய்யலாமுன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு இருந்த நேரம். காஃபி ஒன்னு குடிச்சுட்டு ரெண்டு பேருமாக் கொஞ்சநேரம் அரட்டைஅரங்கில் இருந்தோம். அப்பதான் தோணுச்சு பரிசோதனைக்குப் புது ஆள் இருக்கும்போது...... விடமுடியுமா? மிக்ஸட் வெஜிடபிள், தாமரைத்தண்டு துண்டுகள் சிலன்னு போட்டு ஒரு ஃப்ரைடு ரைஸ் செஞ்சேன். அதுலே துள்ஸி ஸ்டைலில் கொஞ்சம் முந்திரிப்பருப்பு , திராக்ஷை நெய்யில் வறுத்துக் கலக்கியாச்சு. ஒரு மணி போல கோபாலும் லஞ்சுக்கு வந்துட்டார். சாப்பாடு பரிமாறினப்ப, தொட்டுக்க பச்சடி எடுத்து விளம்பினேன். தின்னு பார்த்த தோழியின் முகம் மலர்ந்தது. அட! மாங்காய்ப்பச்சடியா!!!! அம்மச்சி எப்பவும் செய்வாங்கன்னார். தோழி மலேசிய இந்தியர். சாப்பிட்டு முடிக்குமுன் இன்னும் கொஞ்சம் எடுத்துத் தட்டுலே போட்டுக்கிட்டு, 'எவ்வளோ நாளாச்சு மாங்காய் தின்னு...... ரொம்ப நல்லா இருக்கு....'
சக்ஸஸ்!!! மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன். நேத்து கோபாலுக்கு லஞ்சுக்கு பச்சடியும் பெங்களூர் கத்தரிக்காய் கறியும் சப்பாத்தியுமா சிம்பிளா செஞ்சு கொடுத்தேன். அப்பவும் பச்சடியைத் தின்னு பார்த்துட்டு,   'மாங்காய் ஏதும்மா?? 'ன்னு கேட்டதோடு சரி. சக்ஸஸ் சக்ஸஸ்.
இரவு டின்னருக்கு மகள் வந்துருந்தாள். பரிசோதனை எலி எண் 3. பச்சடியைத் தின்னதும் நல்லா இருக்கான்னு கேட்டேன்.   'நிறையதடவை செஞ்சுருக்கீங்களே. இப்ப என்ன கேள்வி. மேங்கோ இஸ் நைஸ் அண்ட் டேஸ்ட்டி '. சக்ஸஸ் சக்ஸஸ் சக்ஸஸ். வருசப்பிறப்பன்னிக்கு நம்ம ரோஷ்ணியம்மா மாங்காய்பச்சடி செஞ்சேன்னு சொல்லி பதிவில் எழுதி இருந்தாங்க. அன்னிக்கு வல்லியம்மாவிடம் பேசுனபோது இதேதான். அவுங்க மரத்துலே ஏகத்துக்கும் காய்ச்சுக்கிடக்கு. ஊறுகாய் எல்லாம் போடணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஹூம்..... கூந்தல் இருக்கறவங்க...... அள்ளி முடிஞ்சுக்கறாங்க. நாமோ......
புழக்கடையில், துவைச்ச துணிகளைக் காயப்போட்டுட்டுப் பார்வையை அகஸ்மாத்தா அந்தப்பக்கம் திருப்பினால்..... அட! எப்படி இதை மறந்தேன்? ஏகத்துக்கும் காய்ச்சு, பறிக்க ஆளில்லாமல் கீழே விழுந்து கிடக்கு.
ரோஷ்ணியம்மாவுக்கு எசைப்பாட்டு பாடியே ஆகணும். மரத்துலே இருந்து ரெண்டு பறிச்சுக்கிட்டு வந்தேன். நம்மாத்து க்ரானி ஸ்மித். அஸ்ட்ராலியாக் கண்டுபிடிப்பு. முதல்முதலா 1868 லே 'மரியா ஆன் ஸ்மித்' என்ற பெண்மணி ஓட்டுச்செடி மூலம் விளைவிச்சதாம் இது. அதான் அந்தம்மா பெயரையே வச்சுட்டாங்க. கண்டுபிடிப்பை ஆண்டுஅனுபவிக்காம அடுத்த ரெண்டாம் வருசம் அந்தம்மா சாமிகிட்டே போயிட்டாங்க. அப்போ வயசு 71.
ஒரு நாலு வருசம் முன்பு, இந்த ஆப்பிளை ஒருமாதிரி ஊறுகாய் போட்டுப் பதிவெல்லாம் போட்டாச்சு கேட்டோ:-) பார்க்கலையா? அடடா....நோ ஒர்ரீஸ். இப்பவும் க்ளிக்கிப் பார்க்கலாம். 

செய்முறை விளக்கம் பார்க்கலாம் வாங்க.

 தேவையான பொருட்கள்:


 பச்சை ஆப்பிள் 2
 உப்பு ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் 5
 மஞ்சத்தூள் கால்தேக்கரண்டி
 அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
நாட்டுச்சக்கரை அரைக் கப்

தாளிக்க: 

எண்ணெய் ரெண்டு தேக்கரண்டி
கடுகு முக்கால் தேக்கரண்டி
 கருவேப்பிலை ஒரு இணுக்கு.

செய்முறை: 

ஆப்பிளைக் கழுவி ரெண்டா வெட்டி நடுவில் இருக்கும் விதையுள்ள கெட்டிப்பகுதியை(Core) வெட்டி எடுத்துட்டுக் கடாசிட்டு பெரிய துண்டமாப் போட்டுக்குங்க. பச்சை மிளகாயைத் துண்டுகளா வெட்டிக்கணும்.
ஒரு பாத்திரத்தில் அரைக்கப் தண்ணீர் ஊற்றி அதுலே இன்த வெட்டிய ஆப்பிள் துண்டுகள், மஞ்சள் தூள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அடுப்பில் வச்சு வேகவிடுங்க.( அடுப்பைப் பத்தவைக்க மறக்கவேண்டாம்) அஞ்சே நிமிசத்தில் வெந்துரும். இப்போ சக்கரையைச் சேர்க்கணும். வெல்லம் கிடைச்சால் இன்னும் நல்லது. நான் சாஃப்ட் ரவுண் சுகர் என்று இங்கே கிடைப்பதைப் பயன்படுத்துகிறேன். சக்கரை உருகிக் கலந்ததும் ஒரு கிளறு கிளறிட்டு அரிசிமாவைக் கொஞ்சம் தண்ணீரில் கரைச்சு ஊத்துங்க. எல்லாம் சேர்ந்து ரெண்டு கொதிவந்ததும், தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊத்திச் சூடானதும் கடுகு போட்டு வெடிக்கவிட்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதை எடுத்துப் பச்சடியின் தலையில் கொட்டணும்.
டடா....... மாங்காய்ப் பச்சடி ரெடி:-))))) ரொம்ப சுலபம். பத்துப்பதினைஞ்சு நிமிசத்துலே தயார். இனி பரிசோதனை எலியின் வருகைக்குக் காத்திருந்து பரிமாறவும். அம்புட்டுதான், கேட்டோ:-)))

34 comments:

said...

எலிகளுக்குக் கொண்டாட்டம்தான்:)! அருமையான பச்சடி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

முதல் ரெண்டு எலியைவிட அன்த மூணாவது இருக்கே....சரியான க்ரிடிக்.

அப்ப பாஸ் ஆனதுதான் கூடுதல் மகிழ்ச்சி:-)))))

said...

Cool pachadi! இதே மாதிரி க்ரான்னி ஸ்மித் ஆப்பிள் சாதம், க்ரான்னி ஸ்மித் ஆப்பிள் தொக்கு எல்லாம் பண்ணி அசத்தலாம்! மாங்காவையும் க்ரான்னி-யும் பிரித்து அறிவது கடினம் சமைத்த பிறகு!!

said...

Ciik pachadi!! இதே மாதிரி க்ரான்னி ஸ்மித் ஆப்பிள் சாதம், க்ரான்னி ஸ்மித் ஆப்பிள் தொக்கு எல்லாம் பண்ணி அசத்தலாம்! மாங்காவையும் க்ரான்னி-யும் பிரித்து அறிவது கடினம் சமைத்த பிறகு!!

said...

நானும் இந்த ஆப்பிளை வைத்து ரைய்த்தா ,ஊறுகாஉ மற்றும் பச்சடி செய்து இருக்கிறேன். உங்களின் அரிசிமாவுக்கு பதிலாக நான் கார்ன் பவுடரையும் மாங்காய் பவுடரையும் உபயோகிப்பேன்.,பகிர்வுக்கு நன்றி படங்கள் அருமை

said...

பச்சை ஆப்பிளுக்கும் மாங்காய்க்கும் அந்த அளவுக்கா சுவை ஒற்றுமை இருக்கும் ? எங்க ஊருல பச்சை நிற ஆப்பிள் இனிப்பாகத்தான் இருக்கு.

said...

வாவ்.... பச்சை ஆப்பிள் உபயோகித்து மாங்காய் பச்சடி....

”சோதனை எலிகள் இருக்க பயமேன்!” என்று சொன்னாலும் பல வெற்றிகளுக்கு இவர்கள் தானே காரணம்.... :) - இப்படிக்கு இன்னுமொரு சோதனை எலி!

said...

துளசீம்மா! ’அந்த’ மாங்காய்(???) பச்சடியில் 2 ஸ்பூன் Aamchur கலந்துவிட்டால், எந்த எலியாலும் கண்டுபிடிக்கமுடியாது!

தெரியாதவர்களுக்கு....இதோ ஒரு ரெசிப்பி:
ஸம்மரில் வாட்டர் மெலன் வாங்கி ஜ்யூஸி சிவப்பு பகுதியை தின்றுவிட்டு, மீதியைக் குப்பையில் போடுகிறோம். அதிலிருந்து பரங்கிக்காய் கூட்டை விட என்னும் அதிக ருசியான கூட்டு செய்யலாம்.

பீலரால் வெளி பச்சைப்பகுதியை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பாதி வெந்து எடுத்த இருபிடி கடலைப்பருப்புடன் துண்டுகளை கருவேப்பிலை, உப்பு மஞ்.பொடியுடன் வேகவைக்கவும். வேகும்போது ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம். கால்மூடித்தேங்காய், டீஸ்பூன் ஜீரகம், 2 காய்ந்தமிளகாய் இவற்றை நன்றாக அரைத்து, அதன் தலையில் கொட்டிவிடவும். தாளிக்க ,கடுகு, உளு. பருப்பு, கறிவேப்பிலையுடன், Dessicated Coconut Powder-ம் வறுத்துப்போடலாம். எலி…என்ன…பெருச்சாளியாலும் கண்டுபிடிக்கமுடியாது!

பாரதி மணி

said...

ஹையோ.. என் பின்னூட்டத்தை நிஜ எலி தின்னுருச்சா?...!!!!!!!!!!!!

said...

அமைதிச்சாரலின் எலி தின்ன பின்னூட்டம்!!!!!!
-----------------------------
கொடுத்து வெச்ச எலிகள் :-))))

கூட்டாஞ்சோத்துலயும் மாங்காய்க்குப் பதிலாச் சேர்க்கலாம்.. நல்லாவே இருக்கும்.

வேற காய்கறிகள் எதுவும் சேர்க்காம, பொடியா நறுக்குன ஆப்பிள் துண்டங்களைப் பயன்படுத்தி கேரளா ஸ்டைல் மாங்காப்பச்சடியும் செய்யலாம். தயிர் சாதத்துக்குச் செஞ்சேன். அள்ளிட்டுப் போச்சு :-)) நாம சொல்லாத வரைக்கும் கண்டே பிடிக்க முடியாது எலிகளால்..

said...

மாங்காய் பச்சடிக்கு தாளிக்கும் போது இரண்டு மிளகாய் கிள்ளி போட்டு தாளிக்க வேண்டாமோ!

படத்தில் மிளகாய் மிதக்கிறதே!

செய்முறையில் தாளிக்கும் போது கடுகு மட்டும் இருக்கே, மிளகாய் இல்லையே! அதுதான் கேட்டேன்.

இங்கு பச்சை ஆப்பிள் கிடைக்கும் போது செய்து விடுகிறேன்.

said...

எலி தின்ன இன்னொரு பின்னூட்டம் .

From Susan:

I used to read your blogs as soon as you post them. Today i enjoyed your post.your timing sense is superb.

said...

எலிக்கு ரொம்பப்பசி போல. நாலைஞ்சு பின்னூட்டங்கள் ஸ்வாஹா......

From Ramani:

படங்களும் செய்முறையும் ஏங்கவைக்கிறது
படங்களுடன் பதிவு அருமை

said...

From பழனி.கந்தசாமி:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

said...

From கோவை2தில்லி

எச பாட்டு பச்சடி பிரமாதம்.
ஏகப்பட்டது காய்ச்சி கீழேயெல்லாம் விழுந்திருக்குதே......இங்க கொஞ்சம் அனுப்பி வைங்க. நானும் செய்து எங்க வீட்டு பரிசோதனை எலிகளுக்கு தரணும்.

said...

நீங்க எலியை சோதனை செய்தா..ப்ளாக்கர் உங்களை சோதனை செய்யுதா..:)

said...

வாங்க யாதாயாதா.

சாதம் மட்டும் இதுவரை பண்ணலை. ஆப்பிள் தொக்கு ப்ரெட்க்கு சட்பட்டான்னு நல்லாவே இருக்கு.

said...

வாங்க அவர்கள் உண்மைகள்.

அட! எனக்கு இந்த மாங்காய்ப் பவுடர் நினைவுக்கு வரலை பாருங்க!!!!! நன்றியோ நன்றி:-)

ரைத்தா செஞ்சதில்லை. ஆனால் ப்ளம் காய்களை வச்சு 'வடுமாங்காய்' ஒருமுறை போட்டேன்.
நாள்பட வைக்கமுடியலை. நாலைஞ்சு நாளுக்கப்புறம் நாறிப்போயிருச்சு:(

said...

வாங்க கோவியாரே.
பழுக்கவிட்டால் கொஞ்சம் இனிப்பு வரும். முத்துன காயா இருக்கும்போது சமைச்சால், ருசி எலிகளுக்குத் தெரியாது:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மைதான். எலி மட்டும் வீட்டுவீட்டுக்கு இல்லைன்னா சமைச்சதெல்லாம் பாழ்-)))))

said...

வாங்க பாரதிமணி ஐயா.

ஆஹா...... நீங்களும் சமையல் குறிப்பு சொல்லி எங்களை அசத்திட்டீங்களே!!!!

சம்மர் முடிஞ்சு விண்டரை நோக்கிப்போறோம். உங்க ரெஸிபி செஞ்சு ருசிக்க இன்னும் அஞ்சாறுமாசம் காத்திருக்கணும்:(

பெருச்சாளிகள் வாழ்க!!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

கேரள ஸ்டைல் உப்பிலிட்டது நானும் கோல்டன் டெலீஷியஸ் வகையில் செஞ்சேன். நண்பர் வீட்டு மரம்:-)

கிடைச்சதை விடமுடியுதா?

ஒரு நாலு பின்னூட்டங்களை நெசமாவே எலி கொண்டு போயிருக்கு.

இன்னிக்கு ஒரு வேலையா நம்ம பேங்க் வரை போனால் நாம் போன கவுண்ட்டரில் மௌஸ் காணாமப்போச்சுன்னு தேடிக்கிட்டு இருந்தாங்க டெல்லர்.

ஆஹா.... பின்னூட்டங்களோடு எலியும் காணோமுன்னு கோபாலிடம் கிசுகிசுத்தேன்:-))))

said...

வாங்க கோமதி அரசு.

சமைக்கும்போது ரெண்டே பச்சை மிளகாய் சேர்த்ததால் தாளிக்க இன்னும் ரெண்டு காய்ஞ்ச மிளகாய் சேர்த்தேன்.

சரியா உங்க 'கண்ணுலே விழுந்துருக்கு' பாருங்க:-))))

said...

வாங்க சூஸன்.

ஆதரவுக்கு நன்றிப்பா.

said...

வாங்க ரமணி.

ஆண்களும் சமைக்கலாம் என்ற வகையில் ஈஸி ரெஸிபி:-)

ஈஸிபீஸி இண்டியன் குக்கிங் என்று ஒரு புத்தகம் போட நினைக்கிறேன்!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அப்டீங்கறீங்க!!!!!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

எலிகளுக்கெல்லாம் கிலிகள் பிடிக்கப்போகுது:-))))))

said...

வாங்க கயலு.

இன்னிக்கு ரொம்பவே சோதனை செஞ்சுருச்சுப்பா இந்த நெருப்பு நரி.

படங்கள் வலை ஏத்தறதுக்குள்ளே படாதபாடு:(

ஆன்னா...ஊன்னா.....நாட் ரெஸ்பாண்டிங்:(

said...

மாம்பிள் பச்சடி சூப்பர். சீக்கிரமே செய்து பார்த்திடவேண்டியதுதான். பச்சடியைவிடவும் நீங்க எழுதும் விதம் ருசிக்கிறது துளசி மேடம்.

said...

சுவையான பச்சடி. செய்து பார்கின்றேன்.

எலிக் கொண்டாட்ட வாரம் போல எனது மெளஸ் சற்றுப் பிடிவாதம் பிடிக்குது. புதுஎலியார் வரப்போகின்றார்.:))

said...

வாங்க கீதமஞ்சரி.

தொடர்ந்த ஆதரவுக்கும் ரசிப்புக்கும் நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

புது எலியார் எப்படி இருக்கார்?

ஒத்துழைப்பு தர்றாரா:-)))))

said...

நன்றி நவிலல்

பாரதி மணி ஐயா,

இன்னிக்கு உங்க சமையல் குறிப்பு பயன்படுத்தி கூட்டு ஒன்னு செஞ்சேன். கடலைப்பருப்புக்கு பதிலா காபூலி ச்சனா தர்பூசனிக்குப் பதிலா சௌசௌ. மத்தபடி உங்க செய்முறையை ஃபெயித்ஃபுல்லா ஃபாலோ செஞ்சேனாக்கும்:-)

அருமையா இருக்குன்னு கோபால் வாயைத் திறந்து சொல்லிட்டார்!!!!!


அவர்கள் உண்மைகள்.

இன்னிக்கு(ம்) மாங்காய் (இல்லாத) பச்சடிதான். காய்ச்சுத்தொங்கும் பச்சை ஆப்பிளைக் கரைக்க வேற வழி? உங்க குறிப்பின்படி ஆம்ச்சூர் (மாங்காய் பவுடர்)சேர்த்தேன்.

ஆஹா..... அசல் மாங்காய்ப் பச்சடிதான். என்னாலேயே சுவையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியலை!!!!

உங்க இருவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

said...

pachcidia innum unga apple ai pannalai . innikku lunch kku neengakonduvantha apple ai venthaiya apple akkiyassu!! naeththu Wardorf. quninoa , pachchaimilakai, kariveppilai grate pannina granny, pumpkin seed, sesame seed toast panninathu pottu upma nallavae irukku :)