Monday, July 02, 2012

நாளுக்கு 20 மணி நேரம்........ .....(ப்ரிஸ்பேன் பயணம் 9)

ரெண்டு கிளைகளுக்கு நடுவில் திணிச்சு வச்ச சாக்கு மூட்டை . அனக்கமே இல்லை. நல்ல உறக்கம். நாளுக்கு 20 மணி நேரம்........ (நாம் தமிழ்மணத்திலும் வலையிலும் மேய்வது போல:-) சோம்பேறியா என்ன? ஊஹூம்..... வெஜிடேரியன் பெலமில்லையாக்கும், கேட்டோ!

யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே தின்னுவேன். தண்ணியே பல்லுலே படப்படாதுன்னு நியமங்கள் எல்லாம் இருந்தால் இப்படித்தான். அப்படி ஒரு கடுமையான விரதம் இருந்து என்னத்தை சாதிக்கப்போறேன்னு (மனசுக்குள்ளே) கேட்டேன். 

இந்த இலைகளிலே சக்தி அதிகமா ஒன்னும் இல்லை. போதாக்குறைக்கு சட்ன்னு ஜீரணமும் ஆகாது. அதுபாட்டுக்குக் குடலிலே திம்ன்னு தங்கிக்கிடக்கும். மலச்சிக்கலுன்னா சோர்வு(ம்) வரத்தானே செய்யும்?

கொஆலா என்ற பெயருக்கு தண்ணியே குடிக்காதது என்ற பொருள்தான். koola. Coola என்றெல்லாம் எழுதுனது கடைசியில் யாரோ செஞ்ச எழுத்துப்பிழையால் Koala ன்னு ஆகிருச்சு. ஆனால் அபாரிஜன் மொழியில் இந்தச் சொல்லுக்கு தண்ணி குடிக்காததுன்னு பொருளாம். அது எவ்ளோ பொருத்தமுன்னு பாருங்க.

பொதுவா நம்ம பக்கங்களில் கோலாக்கரடின்னு சொல்லி பொம்மைகளை விற்பாங்க. ஆனால் இது கரடி இனமே இல்லை. நல்லா கரடி விட்டுருக்கோம்:-) ஆஸி மக்களைவிட மற்ற நாட்டு மக்கள்தான் இப்படி எல்லாம் கரடி விடறாங்கன்னு ஆஸிகளுக்குக் கொஞ்சம் கோவம்!

ஒரு காலத்துலே ஏகப்பட்டவை இருந்துருக்கு. புஸுபுஸுன்னு இருக்கும் தோலுக்காக மனுசன் வேட்டையாடித் தீர்த்துருக்கான். மனுசனைப்போல் இன்னொரு கொடிய விலங்கு உலகத்தில் உண்டோ? அதுக்கப்புறம் முழிச்சுக்கிட்டு இப்போ மொத்த இனமே அழிஞ்சுறப்போகுதோ என்ற பயத்தில் அரசு இருக்கு. இப்போ ஏகப்பட்ட சரணாலயங்கள் இங்கே தென்கிழக்கு அஸ்ட்ராலியாவில்.

நான் முதன்முதலில் அஸ்ட்ராலியா போனபோது மரத்துக்கு மேலே கொஆலா இருக்குமுன்னு நினைச்சு தலையைத் தூக்கி வச்சுக்கிட்டே அலைஞ்சேன். எப்படியும் பார்த்துடணும். விடறதில்லைன்னு தாபம். கடைசியில் லோன்பைன் பார்க் என்ற இடத்தில் கங்காரு கொஆலா வகைகளைப் பார்த்தேன். குழந்தைப் புள்ளையாட்டம் தூக்கிக் கையிலே வச்சுக்கொடுத்தாங்க காப்பாளர். எங்க கப்புவைவிடக் கனமா இருக்குன்னு நினைச்சேன்:-) அப்போ எடுத்த படம் இது:-)
ஒவ்வொரு மாநிலத்துக்கும் எடையில் வித்தியாசம் கூட இருக்காம். சிட்னி பக்கத்துலே ஒருத்தன் சுமார் 12 கிலோவரைக்குமுன்னா இங்கே ப்ரிஸ்பேன் பகுதிகளில் ஒரு ஆறரைக் கிலோவரைக்கும் இருப்பான்.

அதெப்படி... சில மரங்களில் மட்டும் மேலே பார் நான் இருக்கேன்னு போர்டு போட்டுருக்கேன்னு பார்த்தால்.....பொதுவா இது ஒரு மரத்துப் பிராணியாம். எப்பவும் அதுலேயே வாசம் செய்யுமாம். மகள் சொன்னது. இங்கே அட்ராலியா Zoo வில் கொஆலாப் பகுதிகளில் நமக்காக ஒரு நாலைஞ்சை எடுத்து நம் கைக்கு எட்டும் உசரத்தில் உக்காரவச்சுருக்காங்க. இதுக்காகவே நட்டு வச்ச மரக்கிளைகளில்தான். சின்னதா ஒரு ரெண்டு மரப்படிகள் நமக்கு. அதுலே ஏறி நின்னு தொட்டுத்தடவிக் கொடுக்கலாம். ஆனா தூக்கி வச்சுக்க முடியாது.

இதுகளோட வாழ்க்கை ஒரு ஒரு சைலன்ட் பிக்சர் போலதான். ரொம்ப கொயட். இப்படி ஓசைப்படாத வாழ்விலும் அவைகளுக்கு ப்ரீடிங் ஸீசன் (பருவகாலம்?) காலங்களில் மட்டும் பையன்கள் சத்தமாக் கூவுவான்களாம். அமைதியா இருக்கும் இடத்தில் இது ஒரு கிலோமீட்டர்வரை கேக்குமாம்! ஆஹா....இ(த்)தைப் பார்றா............. இவனுக்கு அடிக்கும் கூத்தை!!!!!


பெண்களுக்கு மூணு வயசாகணும் அம்மாக்களாக. பையன்கள் நாலு வயசுலே அப்பா:-)

கரு தரிச்ச 35வதுநாள் குழந்தை பொறந்துருது! ரெண்டே சென்டி மீட்டர்தான் குழந்தை அளவு. பொறந்த விநாடியே அம்மாவின் உடம்பு ரோமத்தைப்பிடிச்சு ஊர்ந்து போய் நிமிச நேரத்துக்குள்ளே அம்மாவின் அடிமடிக்குப் போயிருது. அங்கே பை போல ஒரு திறப்பு இருக்கு. அதுக்குள்ளே ரெண்டு முலைக்காம்புகள். போன வேகத்துலே ரெண்டுலே ஒன்னைப் பிடிச்சுக்கிட்டுப் பால்குடிக்க ஆரம்பிச்சுரும்.

இந்தப் பையிலே என்ன விசேஷமுன்னா இது கீழ்ப்பக்கம் திறக்கும் வகை. நல்லா பிடிச்சுக்கலைன்னா கீழே தொபுக்கடீர்னு விழவேண்டி இருக்கும். ஆனால் அம்மா தன் குழந்தையை இந்த ஆபத்தில் இருந்து காப்பாத்த ஒரு வழி வச்சுருக்கு. தன்னுடைய அடிவயிறு தசையை ஒருவிதமா இறுக்கிக்கிட்டு அந்தப் பையை மூடி வச்சுக்குது.

ஆறு மாசம் பைக்குள்ளேயேதான் வாசம். ரெண்டு செ.மீ ஜீவனுக்கு காது, கண்ணு, உடம்புலே எலும்புகள், தோல் ரோமம் எல்லாம் அப்போதான் வர ஆரம்பிக்கும். அதுக்குப்பிறகு வெளியே விடும்மான்னு பிடுங்கி எடுத்துரும்போல! அம்மா முதுகுலே சவாரி இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு. வெளி உலக வேடிக்கைகளைப் பார்த்துப் படிக்கணுமே! ஆனாலும் அந்த அடுத்த ஆறுமாசமும் பெட் ரூம் அம்மா மடிக்குள்ளேதான். தாயைப்பார்த்துச் சின்ன இலைகளைத் தின்னக் கத்துக்கிட்டு பசி வந்தவுடன் பைக்குள் புகுந்து பாலைக் குடிக்கணும். ம்ம் குடிச்சுக்கோ. பையை விட்டு ஒரேடியா வெளியில் போனதும் உன் குடிக்கு ஃபுல்ஸ்டாப். ஜென்மத்துலே இனி குடிக்கப் போறதில்லை நீ!

இந்த இடத் தகராறுக்குத்தான் எப்பவும் பிரசவத்துலே ஒரே குழந்தை பெத்துக்குதுங்க. அபூர்வமா ஒரு சமயம் (1999) ரெட்டைப் புள்ளைங்க பொறந்துச்சு ஒரு காப்பகத்துலே. திகைச்சுப்போன காப்பாளர்கள் ஒரு புள்ளைக்கு யூகா. இன்னொரு புள்ளைக்கு லிக்டஸ்ன்னு பெயர் வச்சுட்டாங்களாம்! யூகலிப்டஸ் சரியா வந்துருச்சுல்லே!

இந்த யூகலிப்டஸ் குடும்பத்து மரங்களில் 680 வகை இருக்காம். கேட்டவுடன் வாயைப் பொளந்துட்டேன். சின்ன இலை, நீண்ட இலை வட்ட இலைன்னு அந்த இலைகளை சாப்புட்டால் ஆச்சு! சராசரியா நாளுக்கு அரைக் கிலோ இலைகளை ஒவ்வொன்னா கடிச்சுத் திங்கறாங்க. தினம் ஒரே ருசி. போரடிச்சுப் போயிருக்காதா?

அம்மா முதுகுலே சவாரி செய்யும் குழந்தையைத் தேடுதேடுன்னு தேடி கண்ணு பூத்ததுதான் மிச்சம். பொதுவா இவைகள் இரவு நேரத்தில் நடமாடும் வகைகள் என்பதால் எனக்குப் பார்க்கக் கொடுத்து வைக்கலை. அதுக்காக விட்டுற முடியுதா? சுட்டுப் போட்டுட்டேன். குழந்தையை (Joey)ஜோயின்னு சொல்றாங்க.
பெண் குழந்தைகள் ஒரு வயசு ஆனதும் மெள்ள மெள்ள ஒரு மரம் பார்த்து அதுலே இடம்பிடிச்சு உக்கார்ந்துக்கும் பையன்களோ..... படு உஷார். ரெண்டு மூணு வயசுவரை அம்மா இருக்கும் மரத்துக்குப் பக்கத்துலேயே அம்மா கண்பார்வை படும் தூரத்துலேயே இருப்பானுங்க.

எனக்கு என்ன ஆச்சரியமுன்னா.... யாரு யாரைப்பார்த்துக் கத்துக்கிட்டாங்கன்னு.....இந்தப் பக்கங்களில் பெண்குழந்தைகள்தான் மேல் படிப்பு, வேலை அது இதுன்னு 16,17 வயசானதும் ரெண்டு மூணு தோழிகளோடு சேர்ந்து தனியா வீடு எடுத்துக்கிட்டுப் போயிருவாங்க. ஃப்ளாட்டிங்ன்னு இதுக்குப் பேரு. பையனுங்க..... ரொம்ப விவரம்தான். படிச்சு முடிக்கும்வரை சிலசமயம் கேர்ள்ஃப்ரெண்டு கூட லிவிங் டுகெதர் ஆகும்வரை அம்மா வீட்டுலேயே இருப்பாங்க. தனியாப்போனால் துணி மணி துவைக்கக் கொள்ளன்னு எல்லா வேலையும் செஞ்சுக்கிட்டு சமைச்சும் சாப்பிடணுமே:-)))))  


கொஆலா பார்க்க பொம்மையாட்டம் அழகு. ஆனால்.... வயசாகும்போது கண்பார்வை மங்கி கண்ணுத் தெரியாமப் போயிருமாம். பார்வை இழந்து மரத்தைக் கட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருக்கும் கொஆலாவை மனசுலே நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது என்னவோ நிஜம்.

ஆயுட்காலம் முடியும் வரை வாழ்ந்தாகணுமே! உண்மையா இதுகளுக்கு ஆயுட்காலம் எவ்வளவுன்னு தெரியலை. காப்பகத்துலே இருப்பவைகளுக்கு அதிகபட்சமா 18 வயசு வரை ஆயுள்.

 தொடரும்.............:-)

26 comments:

said...

//மனுசனைப்போல் இன்னொரு கொடிய விலங்கு உலகத்தில் உண்டோ? //

அதானே....

பார்க்கவே அழகா இருக்கு....

விவரங்கள் அனைத்தும் அருமை...

said...

யம்மாடி..கொஆலா கொஞ்சமும் பயமில்லாமல் கையில் வைத்து இருக்கின்றீர்களே.!எனக்கு எலியைக்கண்டாலே பயம்...:(

said...

சாக்கு மூட்டை சுமந்திருக்கும் உப்பு மூட்டை செம அழகு..

கப்பு, கோகி, முதலை, கோஅலான்னு வரிசை நீண்டுக்கிட்டே போறதைப்பார்த்தா அடுத்தது யாரா இருக்கும்ன்னு ஆவலைத்தூண்டுது. நிஜ யானைக்குட்டியா இருக்குமோ :-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ஸாதிகா.

அது குழந்தை போல பாவமாப் பார்த்துச்சு. அதான் பயம் இல்லை:-)))))
நம்ம வீட்டுலே பூனை நாய்களைத் தூக்கிக் கொஞ்சுவோமே அப்படி:-)

மகள் மலைப்பாம்பு கூட தோளில் போட்டுப்பார்த்திருக்காள். நான் சும்மாத் தொட்டுப் பார்த்து வால் பகுதியைக் கொஞ்சமாத் தூக்கிப்பார்த்தேன். கைக்கு ச்சில்லுன்னு கனமா இருந்துச்சு.

said...

வாங்க அமைதிச்சாரல்.

உப்பு மூட்டை செம க்யூட் இல்லை:-)))))

பேசாம தூக்கியவைகள் என்றே ஒரு தொடர் போடலாம் போல இருக்கே:-)))))

ஆனால்...அதுலே யானைக்குட்டி இல்லை கேட்டோ:-)

said...

நல்ல வர்ணனை.

said...

ஐயோ
அந்த குட்டிகள் ஒவ்வுனும் டெட்டி பியர் பொம்மை போல அவ்ளோ அழகு ,தொட்டு பார்க்க சூப்பரா இருந்து இருக்குமே.

said...

வித்தியாசமான அறிமுகம்.. கொஆலா.. நீங்கள் சொல்லிப் போன விதம் ரசிக்க வைத்தது.

said...

வயசாகும்போது கண்பார்வை மங்கி கண்ணுத் தெரியாமப் போயிருமாம். பார்வை இழந்து மரத்தைக் கட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருக்கும் கொஆலாவை மனசுலே நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது என்னவோ நிஜம்.//

வயசாகும்போது கண் பார்வை தெரியாது என்று படித்தவுடன் எனக்கும் மனது பாரமாய் ஆகி விட்டது.
கொஆலா பொம்மை என் பேத்தி வைத்து இருந்தாள்.

said...

எனக்கு ரொம்ப பிடிக்கும். கோலா பத்தி நிறையதெரிஞ்சுக்கிட்டேன்.. :) அது மரத்தைப் பிடிச்சிக்கிறதுக்கு இப்படி ஒரு சோகமான காரணம் இருக்கா..ம்..

said...

கோலா பற்றி அதிகம் தெரியாது.

உங்கள் அருமையான பதிவை பார்த்து தெரிந்து கொண்டேன். சில விஷயங்களில் கங்காரு போல தெரிகிறதே(கர்ப்பம், பால் குடித்தல்).

அழகான படங்கள்.

வணக்கம்.

said...

கோலா பற்றி அறியாத விவரங்கள்.

கரடிதான் விட்டிருக்கோம்:).

அம்மா முதுகில் சவாரி செய்யும் ஜோயி.. ஜோர்!

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.

said...

வாங்க விஜி.
கைக்கு நல்லா மெத்துன்னு இருக்குதுங்க. பட்டுப்போன்ற உடல்!

said...

வாங்க ரிஷபன்.

உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தந்தது.

இனிய நன்றிகள்.

said...

வாங்க கோமதி அரசு.

வருகைக்கு நன்றி.

அந்த பொம்மை இன்னும் இருக்கா? எடுத்து வையுங்க. நினைச்சு ரசிக்கலாம்.

said...

வாங்க கயலு.

வித்தியாசமான ப்ளாஸ்டிக் மூக்கோடு அது ஒரு தனி அழகுதான் இல்லை?

said...

வாங்க வெற்றிமகள்.

உண்மைதான் சில ஒற்றுமைகள் இருக்கு.

ஆனால் பை மட்டும் வெவ்வேற வழிகளில் திறப்பு!!!! ஒன்னு மேல்புறமுன்னா ஒன்னு கீழ்ப்புறம்!

said...

வாங்க ராமலக்ஷ்மி

அப்ப ... இது பயனுள்ள பதிவுன்னு சொல்லிக்கவா;-)))))

said...

ஜோயி பார்க்கும்போது சிரித்த முகமாக இருக்கும். அதனால்தான் அனைவருக்கும் பிடிக்கின்றது போலும்.

பலதகவல்கள் தெரிந்து கொண்டோம்.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.

said...

கடந்த ஒரு மாதமாக இது போன்ற ஏதாவது ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று உந்துதல் அதிகமாககிக் கொண்டேயிருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் இல்லாத இடத்திற்கு.

ரசித்த படங்களுக்கு ரசனையான வார்த்தைகள்.

said...

எந்த ஒரு தகவலையும் சுவாரசியமாக எழுதுவதில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது டீச்சர். உங்கள் பதிவுகளின் மூலம் பல புதிய புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இங்கும் கொவாலா பற்றி எத்தனை எத்தனை சுவையான தகவல்கள். படங்களும் ரசனை கூட்டுகின்றன. நன்றி டீச்சர்.

ஒரு சிறிய விண்ணப்பம்- பயணப்பதிவுகளாகட்டும், அனுபவப்பதிவுகளாகட்டும், சமையற்குறிப்புகளாகட்டும், தங்களுடைய எல்லாப் பதிவுகளுமே பயனுள்ளவையாக இருந்தும் என்னைப் போல் தேடுபவர்களுக்கு அது சட்டென்று கண்டுபிடிக்க சிரமமாக உள்ளது. லேபிள் இட்டுக்காட்டினால் எளிதாக கண்டுபிடிக்க முடியும் அல்லவா?

சிறு உதாரணம் - என் அம்மா பிறந்த ஊர் மன்னார்குடி. ஊருக்குப் போய் வெகுநாட்களாகிவிட்டன என்று வருந்தினார்கள். அவர்களுக்கு மன்னார்குடிக் கோவில் பற்றிய படங்களுடனான தங்கள் பதிவைக் காட்ட விரும்பினேன். கண்டுபிடிக்க முடியாமல்போய்விட்டது. ஒவ்வொரு ஊருக்கும் நாட்டுக்கும் பயணிக்க விரும்புவோர்க்குக் கையேடு போல் உபயோகிக்கவேண்டிய பதிவுகள் தங்களுடையவை. எனவே லேபிள் பட்டியல் இருந்தால் பலருக்கும் பயன் கூடும் என்பது என் எண்ணம். தவறாக நினைக்காதீர்கள் டீச்சர்.

said...

வாங்க ஜோதிஜி.

பேசாமக் கிளம்பி நம்ம ஊருக்கு வாங்க. எப்பவும் ஏகாந்தமேதான்!!

அதுவும் தென்பகுதிக் கிளம்பிட்டால்.....ஏரிக்கரையில் ச்சும்மா உட்கார்ந்தாலே போதும். மனம் கூட 'ஹோ' என்று இருக்கும்! !

said...

வாங்க கீதமஞ்சரி.

தலைப்பு மூலம் எது பற்றி எழுதறேன்னு கண்டுபிடிக்கமுடியாத சிக்கல்கள் நம் பதிவுகளில்! அப்படியே பழக்கப்பட்டுப்போச்சு.

குறிச்சொற்கள் சேத்துட்டால் பிரச்சனை இல்லை . ஆனால் அனுபவம் என்ற ஒற்றைச் சொல்லைத்தவிர வேற எது போட்டாலும் தமிழ்மணம் அனுபவத்தில் காண்பிக்காது.

பதிவு வெளியிட்ட பின், தனியா ஒருமுறை போய் குறிச்சொற்கள் சேர்க்கணும். ஆனால்... இது செய்ய அப்பப்ப விட்டுப்போகுது:(
வயசாச்சு பாருங்க....ஞாபக மறதிதான்.

நீங்கள் தேடிய மன்னார்குடி இங்கே. அம்மாவுக்குக் காண்பியுங்கள்.

http://thulasidhalam.blogspot.co.nz/2013/03/b.html


தாமதமான பதிலுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.