Wednesday, August 01, 2012

தலைக்கு மேலே வெள்ளம் போனால்............ ( ப்ரிஸ்பேன் பயணம் 22)

போதும் நிறுத்துன்னு கால்கள் மக்கர் பண்ண ஆரம்பிச்சது. நானும் பார்க்கறேன்.. நாலு மணி நேரமா நடந்துக்கிட்டே இருக்கே? ஓ... நியாயம்தான். கொஞ்ச நேரம் பார்க் பெஞ்சு ஒன்னில் உக்காரலாமா? கண்ணு கரிச்சுருக்கும்போல வானத்துக்கு.... லேசா மழைதூறல் ஒன்னு ரெண்டுமா...... குடை குடைன்னு அலைஞ்சு வாங்கிட்டு இப்போ அதை அறையிலே வச்சுட்டு வந்துருக்கேன் யார் சுமப்பதுன்னு:( 

மெயின் கேட்டை நோக்கி வரும்வழியில் ஃப்ளட்லைன் இருக்கு. இதுவரை வந்த முக்கிய வெள்ளங்களின் அளவுகளை சொல்லும் அமைப்பு. கணக்கெல்லாம் ஒரு 188 வருச சரித்திரம்தான். அதுக்கு முன்னால் இந்த ஊருக்கு என்ன பெயரோ? பெயரே இல்லாமக்கூட இருந்துருக்கும்? இருந்திருந்தால் அபாரிஜின் மொழிப்பெயராக இருந்திருக்கலாம்.

 நகரம் அமைஞ்சது 1824 ஆம் ஆண்டு. என்ன மாதிரி ஆபத்துகள் வரக்கூடும் என்பதையெல்லாம் யோசிக்காமல் நதிக்கு இப்புறமும் அப்புறமுமா நகரை உருவாக்கி நகரமும் கொஞ்சம் கொஞ்சமா விரிஞ்சு போகத்தொடங்கி இருந்துச்சு. அரசு அலுவலகங்கள் பேங்குகள் கடைகண்ணிகள், கூடவே நகருக்கு அழகு சேர்க்கும் தோட்டங்கள் என்று எல்லாமும் நதியை ஒட்டியே! செடிகளுக்குத் தண்ணி எடுத்து ஊத்தக் கஷ்டப்படவேண்டாம் பாருங்க. காலநிலை நல்ல மிதமான சூடு என்பதால் மக்களும் வந்து செட்டிலாகத்தொடங்கி பதினேழு வருசம் கடந்த நிலையில் (1841) புயலும் மழையும் கட்டுக்கடங்காது போய் நதியில் வெள்ளம். ஊரெல்லாம் வெள்ளக்காடு. 27 அடி 8 அங்குல உசரத்துக்கு தண்ணீர் ஏறிப்போச்சு.

 பயந்துபோன வெள்ளையர்களுக்கு ஆறுதல் சொன்னது அபாரிஜின்களே! இதுக்குப்போய் பயப்படலாமா...... முந்தி இன்னும் கூடுதலா வந்துருக்கே.. ரெண்டு பனை உசரத்துக்கு வந்துச்சுன்னு சொல்லி இருக்கலாம். 12 மீட்டர்! அப்போ மீட்டரெல்லாம் ஏது? அடிக்கணக்குக்கூட பூமி புத்திரருக்குத் தெரிஞ்சுருக்கச் சான்ஸே இல்லை:(

 அடுத்து வந்த காலக்கட்டங்களில் சின்னச்சின்ன வெள்ளம் வருவதும் வடிவதுமா இருந்த நிலையில் 1893 ஃபிப்ரவரி மாசம் மூணுமுறை புயலும் மழையும் வெறியாட்டம் ஆடுனப்போ 27 அடி 5 அங்குல வெள்ளம்! நகரின் ஜனத்தொகை 84 ஆயிரம். மூணில் ஒரு பங்கு மக்களுடைய வீடெல்லாம் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சு. விக்டோரியாப் பாலத்தில் பாதியைக் காணோம்! 35 சாவு. 190 நபர்கள் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்!

 பூமத்திய ரேகைக்குத் தென்புறம் இருக்கும் நாடுகளுக்குக் கோடை காலம் டிசம்பர், ஜனவரி ஃபிப்ரவரி என்பதால் இந்த மூணு மாசங்களில்தான் மழையும் புயலும் வரும் சீஸன். நாங்க ஃபிஜித்தீவுகளில் இருந்தப்ப வருசாவருசம் வெள்ளத்திருவிழாதான். ஊருக்குள்ளே தண்ணி ஏறிப்போய் படகு மூலம்தான் தெருக்களில் போய் சேதத்தைப் பார்வை இடுவாங்க. பாவம் ஒரு முறை கோபால் Dடிக்கர்லே ஏறிப்போய் ஃபேக்டரி என்ன நிலையில் இருக்குன்னு பார்த்துட்டு வந்தார்! 


 தென்கோள சமாச்சாரம் இன்னொன்னு சொல்லணும். ஊர்லே சிங்க் தண்ணீ எப்படிச் சுத்தி இறங்குதுன்னு பார்த்துருக்கீங்களா? அதுக்கு நேரெதிரா இங்கே தண்ணீர் சுழிச்சு  'இடம் ' போகும். 

 1974 இல் வந்த வெள்ளம் அஞ்சரை மீட்டர் (18 அடி) 6700 வீடுகள் மூழ்கிப்போச்சு. மொத்த நஷ்டக்கணக்கு 200 மில்லியன் டாலர்கள். ஆறுதலான விஷயம் என்னன்னா..... உயிர்ச்சேதம் 14தான்.

 ஒவ்வொருமுறை ஆத்துலே வெள்ளம் வரும்போதும் தோட்டம் கரைமட்டத்தில் இருப்பதால் தண்ணீர் ஊருக்குள்ளே புகுந்து இந்த க்வீன்தெரு மால்தான் முதலில் பாதிக்கப்படும் இடமா இருக்கு. தண்ணீர் ஊருக்குள்ளே வராம இருக்க தடுப்புகளும், ஆற்றின் மட்டம் ஏறாமல் அதிகப்படி வரும் தண்ணீரை இன்னொரு ஆத்துப்பக்கம் (ஸ்டேன்லி ரிவர்) திருப்பிவிட ஏற்பாடுகளும் பண்ணிவிட்டாலுமே வெள்ளம் அதுபாட்டுக்கு வந்துபோய்க்கிட்டு இருக்கு. 1974 வெள்ளத்துக்குப் பிறகு ஒரு அணைகூட கட்டி விட்டுருந்தாங்க. Wivenhoe Dam. ஆறு ஊருக்குள்ளே வர்றதுக்கு 80 கிலோமீட்டர் தூரம் இருக்கும்போதே கட்டுன இது Wivenhoe பெரிய செயற்கை ஏரி!

 ஒவ்வொருமுறையும் பொட்டானிக் கார்டன் பாதிக்கப்பட்டால்....திரும்பி அதைச்சரியாக்க ஏகப்பட்ட நாட்களாகுது. செடிகள் கஷ்டப்படுது 1974 வது வருச வெள்ளத்துலே தண்ணீர் சட்னு வடியாம தோடத்துக்குள்ளே 4.6 மீட்டர் உசரத்துக்கு தேங்கி நின்னுபோய் ஏகப்பட்ட செடிகள் பாழ்! தோட்டத்தையே 10 வாரங்களுக்குப் பூட்டிவைக்க வேண்டியதாப்போச்சு:(

 பேசாம தோட்டத்தை வேற இடத்துக்கு மாத்திட்டால் என்னன்னு யோசனை. Mount Coot-tha என்ற இடத்தில் (நகர மையத்தில் இருந்து இது 7 கிலோமீட்டர் தூரம்) புதுசா ஒரு தாவர இயல் பூங்காவை 1976 இல் அமைச்சுருக்காங்க. 52 ஹெக்டேர் பரப்பளவு. ஆறுவருச உழைப்பு! (இங்கே அடுத்த முறை போகலாம், என்ன! ஆஸிக்கு வராமயா இருக்கப்போறோம்?) 

 என்னதான் காபந்து செஞ்சாலும் இயற்கை அழிவுன்னு வரும்போது மனுசனால் எதிர்த்து நிக்க முடியுதா? இதோ போனவருசம்  2011 இன்னுமொரு வெள்ளம் வந்து நகரைப்பதம் பார்த்துச்சு. இந்தமுறை க்வீன்ஸ்லாந்து மாநிலத்தையே பதறவச்சுட்டுப்போச்சு. அன்னிக்கு நேபாளக் கோவில் இருக்குன்னு தென்கரைக்குப்போனோம் பாருங்க.... அங்கே இருக்கும் ஸ்டேடியத்துக்குள்ளே ஆறறை அடித் தண்ணீர் தேங்கி நின்னுச்சு. அந்த ஃபெர்ரி வீல் இருக்குமிடத்தில் ரெண்டு கூண்டுகள் வரை முங்கிப்போச்சு!

 வழக்கம்போல் நகரமையத்துலே பதினாலரை அடி உயரம் வெள்ளம். இப்போ நகரின் மக்கள் தொகை ரெண்டு மில்லியனுக்கும் மேலே! நஷ்டக்கணக்குன்னு பார்த்தால் ஒரு பில்லியன் டாலர்களாம்! கூட்டம் சேரச்சேர எல்லாமே கூடித்தான் போகுது, இல்லை!

 சிட்டி தோட்டத்தையே இப்போ பாதிவரைதான் பார்த்தேன். மீதி இன்னொருக்கான்னு நினைச்சுக்கிட்டு ஆன்ஸாக் சதுக்கத்தின் வழியா அறைக்குத் திரும்பினேன். வழியில் அங்கங்கே சைக்கிள் ஸ்டேண்ட்லே ஒன்னுபோல சைக்கிள்கள். எல்லாத்துலேயும் லிப்டன் டீ விளம்பரம் கண்ணை இழுத்துச்சு. என்னன்னு கொஞ்சம் கிட்டேபோய்ப் பார்த்தால்..... இது ஒரு சூப்பர் ஐடியா!

 சிட்டி சைக்கிள் வலைப்பக்கத்துலே போய் நாம் பதிவு செஞ்சுக்கணும். நம்முடைய கடனட்டை எண்ணோ இல்லை டெபிட் கார்டு எண்ணோ கொடுத்துடணும். நமக்கு ஒரு அட்டையை அனுப்பி வைப்பாங்க. இல்லைன்னா மூலைக்கடையில் ப்ரீபெய்டு கார்டு வாங்கி இதுக்குண்டான டெர்மினலில் நுழைச்சு ரெஜிஸ்தர் பண்ணிக்கணும்.

 நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 150 சைக்கிள் ஸ்டேண்ட் வச்சுருக்காங்க. ஒவ்வொன்னிலும் குறைஞ்சது 20 வண்டிகள். பல சைக்கிள்களுக்கு ஹெல்மெட் கூடவே இருக்கு. நம்ம கார்டை அதுக்குண்டான மெஷினில் உள்ளெ தள்ளி அது கேக்கும் தகவல்களைப் பதிஞ்சுட்டா ஒரு சைக்கிள் லாக்கிலிருந்து விடுபடும். அதை எடுத்துக்கிட்டு சவாரி போக வேண்டியதுதான். அதிலும் முதல் 30 நிமிசங்களுக்குச் சார்ஜ் கிடையாது. ஒவ்வொரு முப்பது நிமிசத்துக்கும் வெவ்வேற ஸ்டேண்டுலே சைக்கிளை விட்டுட்டு இன்னொரு வண்டி எடுத்தோமுன்னா நாள் பூரா இலவசமாவே சுத்திவரலாமாம். எதுக்கு இந்த அல்பத்தனம்? ஒரு முழுநாள் வாடகையே ரெண்டு டாலர்தான். வருசம் முழுசுக்கும் வாடகை சைக்கிள் வேணுமுன்னா வெறும் 61 டாலர்கள்தான். மாணவர்களுக்கு இன்னும் சலுகை விலை வேற! நமக்கு வார வாடகைன்னா கூட 11 டாலர்கள்தான். சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு வரப்ரசாதம். ஒரே ஒரு கண்டிஷன் என்னன்னா குறைஞ்சபட்ச வயசு 17 ஆக இருக்கணும்.

 எங்க நியூஸியில் இது இல்லை:( இங்கேதான் முதல்முதலாப் பார்த்தேன்.

மாலையில் கோபால் வந்தபிறகு மறுபடி பொடிநடையில்  க்வீன்தெரு மால் விஸிட். கழுதை கெட்டால் குட்டிச்சுவர்! வேற போக்கிடம் ஏது?  ராச்சாப்பாட்டுக்கு  இன்னிக்கு ஜோஜோ:-)

 தொடரும்.............:-)))))))

18 comments:

said...

வெளிநாடுகள்ள இந்த சைக்கிள் திட்டம் நல்லபடியா செயல்படுது. பாராட்டனும்.

வெள்ளத்தை அந்தக்காலத்து மக்கள் ஒழுங்காவே சமாளிச்சிருக்காங்கன்னு தோணுது.

நேத்து ஒரு கோயிலுக்குப் போனேன். அஞ்சு சுற்றுக் கோயில். ஆனா இப்ப கருவறை மட்டுந்தான் இருக்கு. வெள்ளத்துல அடிச்சிட்டுப் போயிருச்சாம். விவரத்த வலைப்பூவில் பயணக்கட்டுரைய எழுதுறேன்.

பழங்கள் அடுக்கி வெச்சிருக்குறதும் அழகாயிருக்கு.

said...

சைக்கிள் ஐடியா அருமையா இருக்கே. இங்கேயும் மும்பையில் பெட்ரோலை மிச்சப்படுத்த நினைக்கும் மாணவர்களுக்காக இப்படியொரு திட்டம் ஆரம்பிச்சுருக்குன்னு எங்கியோ வாசிச்சேன். முழுத்தகவலையும் தெரிஞ்சுக்கிட்டுச் சொல்றேன்.

வரிசை வரிசையா பழங்கள், சைக்கிள்கள் ரொம்பவே அழகாருக்கு.

வெள்ளம்னாலே பயமாருக்குப்பா இப்பல்லாம் :-(

said...

அந்த pineapple ஒரு தினுசா இருக்கு .இவ்ளோ வெள்ளம் வந்துமா அந்த ஊர் இவ்ளோ சூப்பரா இருக்கு,ஹ்ம்ம்ம்,
நீங்க இன்னும் என்னோட வலைபூ பார்கலைய,கொஞ்சம் என்னாகும் நேரம் ஒதுக்குங்க

said...

பாட்டி ....இன்னைக்கு நல்லா எழுதினீங்க....ஆமா இப்ப நீங்க டூரில் இருக்கிறீங்களா இல்லை டூர் முடிச்சிட்டு எழுதிறீங்களா?

said...

வாடகை சைக்கிள் சிஸ்டம் நல்லாருக்கு.

said...

2011 வெள்ளத்தை நினைச்சால் இப்பவும் பகீர்ங்குது. எப்படித்தான் அதிலிருந்து மக்கள் மீண்டு வந்தாங்களோ? பல புதிய புதிய தகவல்களைத் திரட்டி எழுதுவதற்கு மறுபடியும் ஒரு சபாஷ் மேடம்.

said...

சைக்கிள் ஐடியா நல்லா இருக்கே... தில்லில இருந்தா நல்லாத்தான் இருக்கும்! ஆனா இங்க சைக்கிளை மட்டுமல்ல, ஸ்டேண்டோட ”ஸ்வாஹா” பண்ணிடுவாங்க!

இனிய தகவல்கள்....

said...

//நம்ம கார்டை அதுக்குண்டான மெஷினில் உள்ளெ தள்ளி அது கேக்கும் தகவல்களைப் பதிஞ்சுட்டா ஒரு சைக்கிள் லாக்கிலிருந்து விடுபடும். அதை எடுத்துக்கிட்டு சவாரி போக வேண்டியதுதான்//

பிரான்சுல இதுபோல் பார்த்திருக்கிறேன், அப்ப விவரம் தெரியவில்லை, சைக்கிள் ஸ்டாண்ட் போலன்னு நினைச்சேன்.

said...

வாங்க ஜீரா.

கூட்டம் குறைவு. அதான் சமாளிக்க முடிஞ்சுருக்கு!

உங்க பயணக் கட்டுரையைத் தொடர்கின்றேன்:-)

சீர் வரிசைக்காக அடுக்குகளைத் தேடிக்கிட்டு இருந்தேன் பிட் போட்டிக்கு! அப்போ கண்ணுலே பட்ட பழங்கள் அவை:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

சைக்கிள் திட்டம் உண்மையிலேயே பாராட்ட வேண்டியது. பார்க்கிங் திண்டாடாமல் அதுக்குண்டான பார்க்கில் விட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம்.

நம்ம ஊருன்னா இதைப் பார்த்து காசு வசூலிக்க சிலரைப்போடுவாங்க. உடனே அந்த ஆள் தான்தானதுக்கு ராஜான்னு அலட்டுவார். பார்க்கிங் ஏரியா இப்படித்தானே இருக்கு சென்னையில்:(

said...

வாங்க விஜி.

எல்லாம் உள்ளூர் விளைச்சல் பைனாப்பிள்ஸ்தான்.

வரேன்ப்பா. தோ வந்துக்கிட்டே இருக்கேன்:-)

said...

வாங்க நான்.

டூர் சமயம் டூர் மட்டும்தான். அப்போ கவனம் சிதறாமல் பார்த்துக்கிட்டால்தான் இப்போ பதிவா எழுத முடியும்.

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

ஆமாம்!

சிஸ்டம் நல்லா இருக்கு என்றாலும் நம்ம நாட்டுக்குச் சரி வருமான்னு யோசிக்கணும் இல்லையா?

said...

வாங்க கீதமஞ்சரி.

வெள்ளம் முடிஞ்சதும் ஃப்ளட் ஸேல்ஸ் இருக்குமே. அதை மக்கள் பயன்படுத்திக்குவாங்க.

நாங்க ஃபிஜியில் இருந்தபோது பாத்திரங்கள் வாங்க ஃப்ளட் ஸேல்தான். தண்ணீர் புகுந்த பாத்திரம் கரைஞ்சு போகாதுதானே:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மை. நம்ம மக்கள் பொது சொத்துகளுக்கு தீங்கு செய்வதில் வல்லவர்கள்:(

said...

வாங்க கோவியாரே.

லண்டனிலும் வந்துருக்கணுமே. இப்போ ஒலிம்பிக் விழா சமயத்துலே பயணிகளுக்கு ரொம்பப் பயனா இருக்கும்.

said...

சைக்கிள் ஐடியா நன்றாக இருக்கின்றது.

ஜே... ஜே போடவைத்த பழங்கள் படம் அருமை. சாப்பிட அழைக்கின்றது.

said...

வாங்க மாதேவி.

கண்முன்னால் இருந்ததைச் சாப்பிடாம வந்துட்டேனே:(