Friday, October 19, 2012

இஷ்ட தெய்வம் இருக்கும், இஷ்டக் கோவில்!!


"ரொம்பப் பணக்காரக்கோவிலு போல! நவகிரஹம்கூட தங்கக் கவசம் போட்டுருக்கு "

ஒரு மூணு வருசத்துக்கு முன்னே  இதே சமயம் பெரியத்தை சொன்னது மனசில் வந்துபோச்சு.

எல்லாக் கோவிலும் பணக்காரக்கோவில்தான். என்ன ஒன்னு.... சாமிக் காசை முழுங்காம இருக்கும் நிர்வாகம் அமையணும்.  இங்கே அமைஞ்சுருக்கு! அடையார் அநந்தபத்மநாபன் கோவில்.

இந்தப் பயணத்தில் ஊனுடம்பில் ஒரு மூணுமுறை போய்வந்தேன். ஆனால் கடந்த மூணு வருசத்தில் தினம் ஒருமுறையாவது உள்ளே போய்  சுத்தாமல் வந்ததில்லை.  ஞானக்கண் இருக்கே! இஷ்ட தெய்வங்கள் வரிசையில் பெருமாள்தான் இருக்கார் ஆனால் இஷ்டக்கோவில் வரிசையில் முதலிடம் இதுக்குத்தான். ரெண்டாவது இடம் நம்ம சிங்கைச் சீனு.  இந்த ரெண்டு இடங்களிலும் நிம்மதியா சந்நிதிக்கு எதிரில் ஒரு பக்கம் உக்கார்ந்து மனசு போதுமுன்னு சொல்லும்வரை எம்பெருமாளைக் கண் எதிரில் பார்த்தபடியே இருக்க தடை ஏதும் இல்லை.  ஒரு ஜருகோ.... இல்லை போ போ என்ற கூச்சலோ இல்லாத இடங்கள்.

கோவிலுக்கு வயசு இப்போ அம்பது. பொன்விழா ஆண்டு நடக்குது.  போனமாசம் கும்பாபிஷேகம் நடந்து எல்லாமே பளிச் பளிச்.  கேட்டைக் கடந்தால் தங்கக்கொடி மரம் ஜொலிக்கும் வளாகம். நமக்கிடது பக்கம் புள்ளையார். இஷ்ட சித்தி விநாயகர். இவருக்கு ரெண்டு அவுட்ஃபிட் இருக்கு. தங்கக்கவசம் ஒன்னு. வெள்ளை சிகப்பு பச்சைன்னு தகதகன்னு வெளிச்சம்போடும் கல்வச்ச கவசம் ஒன்னு. நாளின் முக்கியத்துவத்துக்கு ஏத்தபடி போட்டுக்குவார். தெருவில் இருந்து பார்த்தால்கூட கண்ணுக்குப் புலப்படுவார். அதுக்கேத்தபடி சுத்துச்சுவரில் இவருக்கு முன்னால் மட்டும் கம்பிகள் . புதுசா கம்பிக்கு இந்தாண்டை தெருவில் சின்னதா ஒரு தொட்டி! உள்ளே கருங்கல் பதிச்சு இருக்கு. சிதர்தேங்காய் உடைக்க உண்டாக்கிய ஏற்பாடு. அப்பாடா.... இப்பவாவது தோணுச்சே!  (செட்டி நாடு கோவில்களில்தான் முதல்முதலா இப்படி ஒன்னு பார்த்து , ஐடியா சூப்பர்ன்னு அதிசயிச்சேன்) 

நம்ம புள்ளையாருக்குக் கவசம் போரடிச்சால் சந்தனக்காப்பு!  அதுலேகூடப் பாருங்க அநந்தபத்மநாபனைப்போல ஒரு ஸ்டைல் காமிக்கிறதை!!!!

வலது பக்கம் நவகிரகங்களுக்கான தனிச் சந்நிதி.  எல்லோருக்கும் தங்கக் கவசங்கள். சுற்றி வந்து கும்பிட,  ஆள்போகும் அளவில் குட்டிப்பிரகாரம். கொடிமரத்துக்கு அந்தாண்டை கைகூப்பிய நிலையில் நிற்கும் பெரிய திருவடி. அவர் கண் எதிரில் ஒரு நாற்பதடி  தூரத்தில் கருவறை. அநந்தன் மேல் பள்ளி கொண்ட பரந்தாமன் பதுமநாபன்.

ரொம்பப்பெரிய பிரமாண்டமான கோவில் கிடையாது. கோட்டைவாசல் கதவுகளைக் கடந்தால் உட்ப்ரகாரத்துக்குள் இருப்போம்.  உள்ளதே ஒரு பிரகாரம்தான்.  நடுவில் கருவறை. தலை, மார்பு, திருவடித்தாமரைன்னு மூன்று வாசல்களில் பரமனை சேவிக்கலாம்.  அச்சு அசலா திரு அநந்தபுரம் டிஸைனே!

கோவில் அடையாறுக்கு வந்ததில் திருவாங்கூர் மகாராஜா சித்திரைத்திருநாளின் பங்கே முழுக்க முழுக்கன்னு சொல்லலாம். மதராஸில் இருக்கும் அரசரின் சொந்த இடத்தில் கோவில் கட்டலாமா என்று ஆலோசனைகள் வந்தப்ப.... மக்கள் வந்து போக ஏதுவா உள்ள பொது இடத்தில் கட்டலாமுன்னு சொல்லி அதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சு நிலம் வாங்கித்தந்ததும்  இவரே!  கார்னர் சைட் ஆனது இன்னும் விசேஷம்.

 வாசல் கடந்து ஒரு அடி உள்ளே வச்சு பெருமாளைப் பார்த்தபடி நிற்கிறோம். பிரகாரத்தின் முன்பகுதியில் இரண்டு மூலைகளிலும் நமக்கு வலப்பக்கம் ஹனுமனுக்கும் இடதுபக்கம்  கருடருக்கும் தனித்தனியாக சந்நிதிகள். மூணடி உயரம் உள்ள சிலைகள்.

கருவறையின் வெளியே ஒரு பத்தடி அகல முன்மண்டபம். கூடவே ஒரு நாலடி உசரக்  கம்பித்தடுப்பு. பட்டர்கள் நடமாட்டம் நம் பார்வையில் குறுக்கிடுவதில்லை. நிம்மதியாக தரிசனம் செய்யலாம். அடியும் முடியும் நடுவில் உடலுமாக் காண்பிக்கிறான். ஆனால் தேடிவரும் மக்களைத் திரும்பிப் பார்க்கக்கூடாதோ?  அலட்சியமா வானம் பார்த்த பார்வை. வலது கை நீட்டி தாழே இருக்கும் சிவனுக்கு ஒரு தடவல்.

முன்பக்கம்  தரையில் பக்கத்துக்கொன்றாக தேவியர் இருவரும், முனிவர்கள் இருவரும்.  நடுவில் சின்ன மரமேடையில் உலோகச்சிலைகள். (உற்சவர் என்று சொல்ல இயலாது. )ஆரத்தியும் தீர்த்தமும் சடாரியும்  அப்பப்ப லபித்துக்கொண்டே இருக்கு.


இந்தக் கருவறை முன்மண்டபத்துக்கு தரைக்கும் சுவர்களுக்கும் டைல்ஸ் மாற்றும்வேலை போன வருசம்(2011) ஆரம்பிச்சுருந்தாங்க. நியூஸி திரும்புமுன் சென்னை போனபோது பார்த்தது. இப்போ எல்லா வேலைகளும் முடிஞ்சு பொன்வண்ண டைல்ஸ்களும், பொற்தகடு போர்த்திய  மூன்று செட் கதவுகளும், மேலே வரிசைகட்டி நின்னு  மின்னும் மணிகளுமா  கண்ணை அப்படியே இழுத்துவச்சுக் கட்டிப்போடுதே!!!!



சந்நிதிகளை வலம்வரலாம் என்று இடப்பக்கம் பெரியதிருவடியைச் சுற்றிவந்து வணங்கி  நேராக நடக்கிறோம்.  கோவில் வாகனங்கள் ஹனுமன், பெரிய திருவடி, வெள்ளையானை, சிங்கம் எல்லாம் தூசி புகாமல் பத்திரமாக அததுக்குரிய  ஸீத்ரூ ப்ளாஸ்டிக் மூடிகளுக்குள் ! நமக்கு இடது பக்கத்தில் மடைப்பள்ளி.
மடைப்பள்ளிச் சுவரில் கொஞ்சம் உசரத்தில் புதுசா ஒரு அன்னபூரணி! சமீபத்திய வரவு. புடைப்புச் சிற்பம். கையில் கலசமும் கரண்டியுமா இருக்காள்.  முகத்தில் பெருசா ரெண்டு முட்டைக் கண்கள்.  அதுலே லேசா ஒரு கோபம் தெரியுதோ?  ஏய்.... சத்தம் கித்தம் போடாம லைனில் வரிசையா வந்தாத்தான் சோறு..... முக சாடையும் லேசா ஆணைப்போல இருக்கே! அன்னபூரணிக்குக் கண்களில் கனிவும், லக்ஷ்மீகரமான களையுள்ள முகமும் இருக்கவேணாமா? கருணைதெய்வமா இருக்கவேண்டியவளை இப்படிச் செஞ்சது யார்?


வலப்பக்கம் கருவறைச்சுவரில் ஸ்ரீ சுதர்சனர். இவருக்கு நேரெதிரா இப்ப ஒரு புது வாசல் வந்துருக்கு! வெளியே எட்டிப் பார்த்தால் உணவுக்கூடம் கட்டும் ஏற்பாடு. கூடவே கழிப்பறைகள்.  அவசியமானவைகள்.  ரொம்ப நல்லது.

பிரகாரத்தில் மேற்கொண்டு காலை வீசிப்போட்டால் மூலையில் பெரிய கண்ணாடி அறை அமைப்பில் தங்க ரதம். கோவிலுக்கு ஒரு தொகை கட்டினால்  நாம் குறித்த நாளில் ஜொலிக்கும் தங்கரதத்தை நாமே உள்பிரகாரத்தைச் சுற்றி இழுத்து வலம் வரலாம்.

இது இல்லாமல் கோவிலுக்கு ஒரு பெரிய தேரும் உண்டு. எல்லா மாசங்களிலும் திருவோணம் நட்சத்திர தினங்களில் வீதியுலா கோவிலையொட்டி இருக்கும் நாலுவீதிகளிலும் சுற்றிவரும். இதுக்கும் விருப்பம் இருந்தால் நாம் ஒரு தொகை கட்டி ஸ்பான்ஸார் செஞ்சுக்கலாம். வருசத்துக்கு பனிரெண்டு நாட்கள் மட்டுமே என்பதால் ஏகப்பட்ட டிமாண்ட். இதைத்தவிர விசேஷ நாட்களிலும் ப்ரம்மோத்ஸவ காலங்களிலும் பெரியதேர் புறப்பாடு உண்டு. ரொம்ப சிஸ்டமேடிக்கா உற்சவர்களை ஆடாமல் அசையாமல்  ஃபோர்க்லிஃப்டில் வச்சு  தேரில் ஏத்தறதும் இறக்குறதும் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.




தங்கத்தேரைப் பார்த்துட்டு .இப்ப வலப்பக்கம் திரும்பறோம். அலர்மேல்மங்கைத்தாயாரும் ஸ்ரீநிவாஸனுமா பெரிய படங்கள்.  கீழே சின்ன மண்டபத்தில் குழலூதும் ஸ்ரீவேணுகோபாலன். பெருசு ஒன்னும் சிறிசு ரெண்டுமா மூணு சிலைகள்.  நமக்கு வலப்பக்கம் கருவறையின் பின்புறச்சுவர். மாடத்தில் லக்ஷ்மிநரசிம்மர். அவருக்கு நேரெதிரா கோவிலின் பின்வாசல். பிரகாரத்துலேயே கோவிலின் தலவிருட்சம்.மரத்தின் உடல்மட்டும் காமிக்குது. தலைப்பக்கம் மேற்கூரைக்கு வெளிப்பக்கம்!

இன்னும் நாலடியில் எதிர்மூலைக்குப்போயிருவோம். அழகான ஒரு அறை. கோவிலில் உள்ள எல்லா மூலவர்களுக்கான உற்சவர்களின் கூட்டம்! எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம். மினுமினுன்ற ஜொலிப்பில் தகதகன்னு கண்ணைப்பறிக்கும் அழகு!  ரெண்டு படி ஏறிக் கம்பிக்கதவுக்குப்பின்னே பார்க்கலாம். படிகளின் ஓரம் ரெண்டு யானைகள்.  புறப்பாடு தினங்களில் உற்சவர்களை வெளியே கொண்டுவந்து வச்சு அலங்கரிக்கிறாங்க. கண்கொள்ளாக் காட்சி.

இந்த அறைக்கு நேரெதிரே எதிர் மூலையில் ஆஞ்சநேயர் சந்நிதி வந்துருது,  மற்றபடி நமக்கு வலப்பக்கம் கருவறை வெளிச்சுவர் மாடத்தில் ஸ்ரீ விஷ்ணுதுர்கை.  இவளுக்கு நேரெதிரில் பிரமாண்டமான கதவு.  சொர்க்க வாசல். கருவறையைச் சுற்றி இருக்கும் நாலு வாசல்களுக்குமே பெரிய பெரிய கதவுகள்தான். நாலு நாலரை மீட்டர் உசரம் இருக்கும்! (இருக்குமோ???)

இந்த சொர்க்கவாசல் கதவு(ம்) இப்போ தங்கமே தங்கம்!!!!  அழகழகான  சின்னச் சின்ன தங்கப்படங்களை வச்சு அடுக்குனதைப்போல விஷ்ணுவின் பல அவதாரங்களையும் லீலைகளையும் விளக்கும் அமைப்பு! கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம். முழுக்கதவுக்கும் ஒரு கண்ணாடிச் சட்டம். டபுள் கதவு! நம்மாட்களைப் பற்றி முழுசும் தெரிஞ்சுவச்சுருக்கும் நிர்வாகத்தினரை என்ன சொல்லி பாராட்ட?  ஹ...ங்.... முழுசும் தங்கமா...... தொட்டுப்பார்க்கத் துடிக்கும் கைகளைப்பற்றி .....

கைகள் வெறுமையாப்போயிருதேன்னு பக்கத்துலே ஒரு மேசை அமைப்பில் பெருமாளுக்குச் சாத்திய மலர்களும் துளசியும், ஒரு அகலமான பாத்திரத்தில் குங்குமம். சில நாட்களில் சந்தனமும் உண்டு. இதெல்லாம் சந்தனக்காப்பு போட்ட மறுநாள் ஸ்பெஷல்.

ஆஞ்சநேயனை வணங்கி வலம் வந்து மறுபடியும் பெருமாளை ஒருமுறை ஸேவிச்சுக்கிட்டு  ஒரு அரைமணி முகமோ இல்லை மலரடிகளோ பார்த்துக்கிட்டே தூணோரம் சாய்ஞ்சுக்கலாம். விசேஷ நாட்களில்  கருவறை சமாச்சாரங்கள் எல்லாம்  ரெண்டு CCTV யில் நேரடி ஒளிபரப்பு. நல்லவேளை கேமெராவை கடவுளுக்குக் காமிக்கக்கூடாதுன்னு  யாரும் தடை சொல்லலை!

வெளியே போய் இடக்கைப் பக்கமுள்ள நவகிரகங்களைச் சுற்றி வணங்கிட்டு  தொட்டடுத்துள்ள ஹாலைக் கட்டாயம் எட்டிப் பார்ப்பேன். எதாவது நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளோ இல்லை விசேஷங்களோ நடந்துக்கிட்டுத்தான் இருக்கும் முக்கால்வாசி தினங்களில்.,ஏகப்பட்ட கச்சேரிகளும் கலை நிகழ்ச்சிகளுமா..... எல்லாமே  இலவசம்!  நவராத்ரி சமயமானால்  கோவில் கொலு இங்கேதான். கூடவே கலைநிகழ்ச்சிகளும் அமர்க்களப்படும். நல்ல பெரிய ஹால். நாற்காலிகளும் ஏராளம். இந்த ஹாலை கல்யாணம், நிச்சயதார்த்தம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஒரு தொகை கொடுத்து, வாடகைக்கு எடுத்துக்கலாம்.  மாடியில் பெரிய டைனிங் ஹாலும் உண்டு.



நவகிரக சந்நிதிக்கு முன்புறம் யாகசாலையும் தொட்டடுத்து பெரிய தேர் நிற்க ஷெட் ( இது தெருப்பக்கம் திறப்புள்ளது) இப்படி சகல வசதிகளோடு  எல்லாமே அம்சமா அமைஞ்சுருக்கு இங்கே!

நவகிரக சந்நிதிக்கும் ஹாலுக்கும் இடைப்பட்ட ஒரு எட்டு/ஒன்பது அடி அகல பாதை ஒன்னு நம்மைக் கொண்டுப்போய்ச் சேர்க்குமிடம் அரசமரத்தடி சிவன் சந்நிதி. நல்ல பெரிய மேடையில் மரமும் அதைச்சுற்றி நாகர்களும், பிள்ளையாரும் அபிஷேகப்பிரியனுக்கு தண்ணீர் தலையில் சொட்டிக்கொண்டே இருக்கும்படியான கலச அமைப்புமா இருக்கு. கூடவே ஒரு துளசி மாடமும்!

பாதை முழுசுக்கும் இப்போ அருமையான டைல்ஸ் பாவி இருக்காங்க. பாதையின் இரண்டு பக்கங்களிலும் வரிசையா பெஞ்சுகள்.  கோவிலுக்குப் போனால் கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு வரணும் என்ற சாஸ்த்திர சம்ப்ரதாயப்படி ஒரு அஞ்சு நிமிசம் உக்கார்ந்து ஆனந்திக்கலாம்.
பாதையின் நடுப்பகுதிக்குக்கிட்டே சொர்க்கவாசலின் வெளிப்புறக் கதவு இருக்கும்!

நாம் ஒரு நாள் போனது சனிக்கிழமையாக இருந்துச்சு. புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பெருமாள் முன்னே  பிரபந்தம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. தமிழ் ஓசை கேட்டு அவன் முகம் திரும்பாதான்னு  எனக்கொரு நப்பாசை இருந்ததென்னவொ நிஜம்.











47 comments:

said...

அருமை அருமை
படங்களும் விளக்கமாகச் சொல்லிச் சென்றவிதமும்
நாங்களும் கோவிலிக்குள் இருப்பது போன்ற உணர்வையும்
அவசியம் அடுத்தமுறை சென்னை வருகையில்
தரிசிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தையும்
ஏற்படுத்திப் போனது.பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

said...

ஸ், அப்பா, கோவிலைச் சீக்கிரம் பாத்துடலாம் போல இருக்கு, பதிவப் பார்த்து முடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு.

said...

அட... எங்களை கூடவே அழைத்துக் கொண்டு சென்றது போன்ற ஒரு உணர்வு....

அடுத்த முறை சென்னை செல்லும் போது போக முயற்சிக்கிறேன்...

said...

உங்கள் பதிவின் மூலம் நாங்களும் கோவிலுக்கு சென்று வந்து விட்டோம்...

நன்றி...

said...

தேர் இழுக்கும்தேவதையப் பத்தி ஒண்ணும் சொல்லலியே அண்ணா அண்ணி கூட இருக்காங்க.!!
அருமையான் இக்குணிப் பிசகாம வர்ணிக்கிற கலை எப்படித்தான் வந்ததோ. நானும் கோவிலை ரசித்தேன். இத்தனை ஆதுரத்துடன் சொல்ல உங்களுக்கு மட்டுமே கைவந்தகலை. இன்று வெள்ளி. பதுமனுக்கு உகந்த நாள். தரிசனம் ஏற்பாடு செய்ததற்கு நன்றி மா துளசி.

said...


அடையார் அனந்தபத்மனாப சாமி கோவிலா !!
அங்கே இன்னிக்கே போய்
பெருமாளையும் தாயாரையும்
தர்சனம் பண்ணு அப்படின்னு
தர்ம பத்தினி சொல்லுறாங்க ..

இவங்க அன்ன பூரணியாச்சே !!
மறுக்க முடியுமா ?
அந்த அன்ன பூரணி மாதிரி ஒரு கோபத்தைக்
கண்ணிலே காட்டறதுக்கு முன்னாடி,
கிளம்பிடுவோம்.

நவராத்திரி முடியறதுக்குள்ளே ஒரு நாள் போய்ட்டு வரோம்.
வல்லியம்மாவும் கூப்பிட்டு இருக்காக.
வரேன்னு சொல்லிருக்கோம்.

சுப்பு ரத்தினம்.

said...

பிரம்மாண்டமான, பிரமாதமான படங்கள்.

said...

வீட்டுலேர்ந்து 3 கிமீ இருக்கற கோவிலை இப்போ இங்க பல்லாயிரம் மைல் தள்ளி இப்படி ஃபோட்டாவுல பாக்குறதை நினைச்சா சிரிப்பு வருது. ஒரு விந்தையான உணர்வு! ஹேப்பி நவராத்ரி டீச்சர், கொலு வீற்றிருக்கும் வீட்டை நேரில் பார்த்த ஞாபகங்கள் வந்தன. :)

said...

படங்களும்,விவரங்களும் அருமை.
நான் பல முறை சென்றிருக்கிறேன் இக்கோவிலுக்கு ஆனால் கோவிலைப்பற்றி இவ்வளவு விவரங்களை உங்கள் பதிவிலிருந்துதான் அறிந்து கொண்டேன்.நன்றி.

said...

உங்க (எழுத்துக்கள்)கூட கோயிலைச் சுத்தி வந்ததும் (படங்கள் மூலமா) நல்ல தரிசனம் கிடைச்சதும் ரொம்ப ரொம்ப சந்தோஷத்தைத் தந்திடுச்சு. நன்றிங்க.

said...


இன்னிக்கு அந்த அடையார் கோவில் பத்மனாபன் கோவிலுக்கு போகலாம்னு
கிளம்பினால் மழை பிடித்துக்கொண்டு விட்டது.

என்ன செய்வது ? படத்தையெல்லாம் ஒரு வீடியோ விலே இணத்து எங்க ஸ்வாமினியின்
பாடலுடன் மனத்திரையில் கண்டேன்.

உங்களுக்கும் கோபால் சாருக்கு மட்டும் அதை ப் பார்க்க இங்கே அனுப்புகிறேன்.

www.arthamullavalaipathivugal.blogspot.com

meenachi paatti.

said...

//கோவில் வாகனங்கள் ஹனுமன், பெரிய திருவடி, வெள்ளையானை, சிங்கம் எல்லாம் தூசி புகாமல் பத்திரமாக அததுக்குரிய ஸீத்ரூ ப்ளாஸ்டிக் மூடிகளுக்குள் !//

இது ரொம்பப்பிடிச்சிருக்கு.

நிறையக்கோயில்களில் வாகனங்கள் பாழடைஞ்சு திருவிழா சமயங்களில் மட்டுமே வண்ணம் கண்டு இருக்கும் துயர நிலை ஒரு நொடி நினைவுக்கு வந்தது.

said...

எல்லாக் கோவிலும் பணக்காரக்கோவில்தான். என்ன ஒன்னு.... சாமிக் காசை முழுங்காம இருக்கும் நிர்வாகம் அமையணும்.

மிக முக்கியம்.. பகிர்வுகளுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்..

said...

மிகமிக விரிவான பதிவு. கோவிலுக்குப்போக வேண்டாம்;உங்க பதிவினைப் பார்த்தால் போதும்.

said...

எனது ஆசானான தங்களிடம் ஒரு கருத்துரை பெற ஒரு வருடம் காத்திருக்கிறேன்!

said...

அநந்தபத்மநாபன் உலாவரும் காட்சிகள் மனத்தை நிறைத்து நிற்கின்றன.

உங்கள் வர்ணனைகளுடன் கோயிலை வலம் வந்தோம்.

said...

வாங்க ரமணி.

சின்னக்கோவிலுன்னாலும் எல்லாம் அம்சமா இருக்கு இங்கே.

அடுத்தமுறை சென்னைவருகையில் நீங்க வரப்போறீங்கன்னு பதுமனுக்கு சேதி போயிருக்கும் இந்நேரம்!!

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

சுருக் ஒரு பெரும் பிரச்சனை. அதிலும் சாமி சமாச்சாரம்.... எதைச் சொல்ல எதைவிட?

சாமிக் குத்தமாப் போச்சுன்னா????
:-)))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரிஜனல் திருவனந்தபுரம் கோவிலில் இருக்கும் தள்ளுமுள்ளு இல்லாம இங்கே ஹா(ய்)யா சாமி பார்க்கலாம்.

முயற்சி வெற்றி பெறட்டும்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும், கோவில் விஸிட்டுக்கும் நன்றி.

said...

வாங்க வல்லி.

அது......... ஆச்சு மூணு வருசம்!

நாள் கிழமை பார்த்தால் எல்லா நாளும் நன்நாளே!

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

வல்லிம்மா கூப்புட்டா...தட்ட முடியாது.

கோவிலிலும் கொலு சூப்பரா இருக்கும். அப்படியே மயிலை கபாலியையும் கண்டுக்கிட்டு ஒரு நடை போய் வந்துருங்க.

என் சார்பில் எல்லோருக்கும் ஒரு ஹை பை சொல்லிட்டு வாங்கன்னு உங்களையும் மீனாட்சி அக்காவையும் வேண்டிக்கறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க பொற்கொடி.

எனக்கும் உங்க ஞாபகம் வந்துச்சுன்னு சொன்னால் அது மெய்.

நீங்க அன்பளித்த செடியில் மொட்டு விட்டுருக்கு!!!

said...

வாங்க ராம்வி.

அடுத்த முறை போகும்போது சரியாச் சொன்னேனான்னு பார்த்துட்டு வந்து சொல்லுங்க.

said...

வாங்க பால கணேஷ்.

நாம் ஸ்வாமிக்காக கொண்டுபோகும் பூக்களை ரொம்பவும் பவ்யமா ஸ்வாமிக்குச் சாத்துவது எனக்கு ரொம்பப்பிடிச்ச விஷயம் இங்கே!

said...

வாங்க அமைதிச்சாரல்.

வருசத்திருவிழா முடிஞ்சவுடன் வாகனங்களை பலகோவில்களில் சட்டையே செய்யறதில்லை.

கண்டாமுண்டான்னு எல்லாத்தையும் காலொடிஞ்சு கையொடிஞ்சு கிடக்கும் நிலையில் குறிப்பா ஆண்டாள் சந்நிதி மூலையில் போட்டு வச்சுருப்பதைப் பார்த்தால் ரத்தக்கண்ணீர்தான்.

இங்கேயோ அருமையான பராமரிப்பு!!!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

முக்கியமான பாய்ண்ட்டைப்பிடிச்சீங்க!!!!

நன்றியோ நன்றிகள்.

said...

வாங்க பத்மா சூரி.

உங்க மதுரை ஸ்பெஷல்களை விடாமல் வாசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

ஆசான்னு ஏத்த வேணாம்.அன்பான தோழின்னு சொல்லுங்க.

said...

வாங்க மாதேவி.

ஏற்கெனவே இந்தக் கோவிலைப்பற்றி சில பதிவுகள் போட்டுருக்கேன்ப்பா.

ஆனாலும்... பதுமனை நினைச்சால்.... இன்னும் எழுதத் தோணுது!

said...

Long time reader, but have not commented before.

I wanted to share one more detail about this temple, as it is this at the top of my 'Ishta Deivam and Ishta Koil' as well.

There is a Sahasranama Pooja in the morning around 7:30 AM. They have Nadaswaram and Thavil, along with koil mani osai. It is a very 'paravasamaana anubhavam', unlike any other I have experienced.

I used to attend this pooja every possible Saturday when I lived in Chennai. I'm not sure if its done everyday,

Regards,
RV

PS: I'm a big fan of you writing and your zest for life.

said...

இந்தக் கோவில் போன நினைவிருக்கிறது.
பழனி கந்தசாமியின் கமென்ட் சு.

said...

வீட்டுக்கு ரொம்பப் பக்கமா வந்திருக்கீங்க. வீட்டுக்குக் கூப்புடாமப் போயிட்டேனே!

ஒரு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கோயிலைப் பத்தி மகரந்தத்தில் “அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்”னு எழுதினேன். அதுக்கு முதல் பின்னூட்டமே ஒங்களோடதுதான். :)
http://gragavan.blogspot.in/2005/08/blog-post_10.html

அப்போ இருந்த அமைதி இப்போ இல்லை. :( எளிமையா இருந்த கோயில் இப்போ பப்பளபளபளான்னு இருக்கு. ஆனாலும் சீரங்கத்தையும் திருப்பதியையும் ஒப்பிடும் போது ரொம்பவே தாவலை.

said...

கோவில் பற்றிய இவ்வளவு தகவல்களை சொல்ல உங்களால் தான் முடியும்மா....

வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வர வேண்டும்.

said...

படங்களும் விளக்கமும் ரொம்ப பிரமாதம் துளசி!
நீங்களும் அனுபவித்து எங்களையும் அனுபவிக்கச் செய்து விட்டீர்கள்.

நவராத்திரியும் அதுவுமா, ஒரு கோவில் சுற்றுலா போய் வந்ததைப்போல உணர்வு!

பாராட்டுக்கள்!

said...

வாங்க RV.

காலையில் கோவில்போக நேரம் இருப்பதில்லை. ஆனால் சனிக்கிழமை மாலைகளில் அஞ்சுமணிக்கு ஒரு மகளிர் குழு விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்வதைக் கவனிச்சு இருக்கேன். சில நாட்கள் அவுங்களுடன் சேர்ந்து சொல்வதும் உண்டு.

விஷூ தினம் மட்டும் காலை 7 மணிக்குக் கோவில் போனது ஒரு இனிய அனுபவம். பெருமாளுக்கு எண்ணெய் தேய்ச்சு முழு அபிஷேகம் & அலங்காரம். சுமார் ஒன்னரை மணி நேரம்.

முன்வரிசையில் நின்னு முழுசும் கண்டு மகிழ ஒரு ச்சான்ஸ் கிடைச்சது. பூஜை முடிஞ்சு எல்லோருக்கும் வெத்திலைபாக்கு பழத்துடன் விஷுக் கைநீட்டம் வேற கொடுத்தார் பெருமாள்!!!! க்ரேட்!!!

said...

வாங்க அப்பாதுரை.

சாமியை நடுவழியில் நிறுத்த முடியலை. அதுக்காக..........

said...

வாங்க ஜீரா.

ஸ்ரீரங்கம் கூட ஒரு காலத்துலே நல்லா எளிமையா இருந்துச்சு. இப்போ அட்டகாசம் அங்கேயும்:(

இங்கே பளபளன்னு ஜொலிப்பு இருந்தாலும் காட்சிக்கு எளியவனாத்தான் இருக்கான் அவன்!

பெருமாள் என்றதும் துளசி ஆஜர்:-)))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

உங்க வீட்டுலேயே ரெண்டு கோவில் தகவல் களஞ்சியங்கள் உண்டே!

சென்னைக்கு வரும்போது ஒருநடை எட்டிப்பார்த்துட்டுப் போங்க. க்ராண்ட் ஸ்வீட்ஸ் கடைக்குப்போய் பலகாரம் வாங்குவதை ஒரு சாக்கா வச்சுக்கலாம்:-)))

said...

வாங்க ரஞ்சனி.

ரசனைக்கு நன்றிகள்.

நவராத்ரி விழா மட்டும் அதிகப்பட்சம் ஒன்னரை தசராவரை உண்டு இங்கே:-)

தீபாவளியையே ஒரு வருசத்தில் 13 முறை கொண்டாடுன மக்கள்ஸ்ப்பா நாங்க:-)))

said...

இந்த படங்களை பார்த்தவுடன் ஊரில் பேட்டை வியாபாரிகள் சங்கத்தில் அப்பா
தலைவராக இருந்தார். வருடத்திற்கு ஒரு முறை வரும். ஊரே களை கட்டி இருக்கும். சாமி ஊர்வலம் போன்ற இந்த படங்களில் வருகின்ற அத்தனை விசயங்களும். குறிப்பாக ஆர்க்கெஸ்ட்ரா என்று சொல்லப்படும் பாட்டுக் கச்சேரி, அதற்கு மேல் வீட்டுக்கு தெரியாமல் நடு இரவில் சென்று பார்க்கும் கரகாட்டம்.

பலதும் மனதில் வந்து போகின்றது.

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க தினப்பதிவு.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜோதிஜி.

கொசுவத்திகள் பல, மனசுக்கு மகிழ்ச்சியையே தருது ,இல்லையா?

அசை போடுவதும் ஒரு ஆனந்தமே:-)))

said...

இன்னிக்கு அடையாறு பத்பநாபன் கோவில் சென்று வந்தேன் . உங்கள் பதிவு பார்த்ததிலிருந்து போகணும்னு ரொம்ப நாளா நெனச்சு இன்று தான் போனேன் ( முதல் முறை) எப்படி என் அம்மாவிற்குஇந்த கோவில் பற்றி தெரியாமல்போனதுன்னு தெரியலை இதுநாள் வரை போகலை .:(
அடடா என்ன ஒரு அனுபவம் துளசி நீங்க எனக்கு தந்தது . மனசு நெறஞ்சு , குளிர்ந்து , பரவசம் என்ன சொல்றதுனே தெரில . நீங்க சொன்னது போல ஒரு தொந்தரவும் இல்லாம, அதிகாரமோ அதட்டவோ படாம அமைதியா ஆனந்தமா கும்பிட முடிஞ்சுது . புரட்டாசி மாசம் சனிகிழமை கூட்டமா இருக்குமேன்னு இன்று சென்று திவ்ய தரிசனம் செஞ்சு வீட்டுக்கு வந்து திரும்ப உங்கபதிவை படிச்சு இன்னொரு முறை ஆனந்தித்தேன் .
எவ்ளோ தெளிவா கண்ணுல கொணர்ந்து நிறுத்திட்டீங்க
இனிமே தில்லை கேணி கூட இந்த கோவிலும் அடிக்கடி போற இடம் ஆகிடும் .:))
நன்றிகள் பல !!!
pl reply

said...

வாங்க சசி கலா.

அப்படி என்னதான் எழுதினேன்னு உள்ளெ போய்ப் பார்த்தால்..... கோவில் ஏக்கம் வந்து மனசில் மணை போட்டது.

பெருமாள் முகம் நிச்சிந்தையா மேலே பார்த்துக்கிட்டு இருக்குமே கவனிச்சீங்களா?

இந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பேண்டான்னு இறைஞ்சுவேன். காதுலே போட்டுக்கமாட்டான்.

உங்க இஷ்டக்கோவில் லிஸ்ட்டில் சேர்த்துட்டீங்க போல!

ஒரு திருவோண நட்சத்திரத்துக்கு மாலை 6 மணிக்குப் போய்ப் பாருங்க. அதுவும் ஊர்வலம் முடிஞ்சு (ஒரு எட்டு மணி ஆகிரும்) பெருமாளை இறக்கி உள்ளே கொண்டு வரும்போது
ஸ்ரீபாதம் தாங்கிகள், விதவித நடையில் ஆடும்போது மனம் நிறைஞ்சு விக்கிவிக்கி அழுதுருக்கேன். (பாவம். கோபால் என்னவோ ஏதோன்னு பயந்துட்டார்!)

வெங்கடநாராயணா ரோடு திருப்பதி தேவஸ்தானக் கோவிலை என் லிஸ்ட்டில் இருந்து தூக்கிட்டேன். துளசியைக் கொண்டு வரக்கூடாதுன்னு போர்டு மாட்டி இருக்காங்க!

said...

பெருமாள் நம்ம பக்கம் பாக்கற மாதிரியே இல்லையேன்னு (நாம தான் உத்து உத்து பாக்கறோம்னு)கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துது ....

வெங்கட்நாராயணா கோவில்ல அர்ச்சனையும் ஒழுங்கா பண்ணிகுடுக்கறதில்லை ஏனோதானோன்னு பெருமாள்ட்ட வெச்சு குடுத்துடறாங்க . எனக்குமே கொஞ்சம் கஷ்ட்டமாதான்இருக்கும். திருப்பதிக்கு அடிக்கடி போக முடியாதே ,அதனால இங்க போவேன்
.
உடனடிபதிலுககு நன்றி :) பதில் வராட்டி ஏன்.. ..பாக்கலையோ reply வரலியேன்னு தோணும் :)