Wednesday, January 23, 2013

எப்படி வந்தனரோ!!!!!


மனுசனைப் போல கொடிய  மிருகம் உண்டோ? அதுபாட்டுக்கு தேமேன்னு படுத்திருக்கும் கடல்சிங்கத்தைப் பின்னால் நின்னு  கொல்றான். அது வலியில் அலறுது. ஐயோன்னு இருந்துச்சு எனக்கு. என்னால் முடிஞ்சது அவனை  மனசார சபிக்க  மட்டுமே:(  தோலுக்கும் இறைச்சிக்கும் கொன்னு குவிச்சவைகள் ஏராளம்  ஏராளம்.  நல்லவேளையா இந்தக்கொடுமைகள் 'இப்ப' நியூஸியில் அறவே இல்லை என்பது ஒரு சின்ன சமாதானம்.


சின்னப்பசங்களுக்கான குகை.  அதுலே பூந்து புறப்படும்போது சட்ன்னு ஒரு  டைனோஸார்  புதரில் இருந்து தலைகாட்டி உறுமுது. பசங்க அப்படியே ஸ்தம்பித்து நிற்கும்.  மனித அசைவை  கண்டதும் அதுக்கும்  பயம் வந்துருதுபோல:-)))) சென்ஸர் மூலம் இயக்கம்.




ஆல்பெட்ராஸ் என்ற பறவையினம் ஒன்னு. கடல்புறா (ஸீகல்ஸ்) இனம் என்றாலும் அவைகளோடு ஒப்பிட்டால் இது ராக்ஷஸ சைஸ்.  ரெண்டு  இறக்கைகளையும் விரிச்சால்   அஞ்சு மீட்டர் ! இதனால் காற்றில் மிதந்துகொண்டே வெகுதூரம் போக முடியும்.


சின்னதா இருக்கும் வாசல்வழியா பார்த்தால் கண் எட்டும்தூரம்வரை பெங்குவின்கள். இவர்களைப்பற்றி ஆண்கள் பொல்லாதவர்களா ?  என்று எழுதியது இங்கே.




அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்லின் கண்டுபிடிப்பும் கையெழுத்தும்.







ஆரம்பகால  கேமெராக்கள் ஒரு இடத்தில். நல்லவேளை   நான் அப்போ பதிவர் இல்லை:-)

ஒரு சுவர் முழுசும் சாவியலங்காரம்.  நம்ம வீட்டில் இந்த 25 வருசங்களில் சேர்ந்துபோன சாவிகளுக்கு  விமோசனம்  கிடைக்கலாம். ஐடியா வந்துருச்சுல்லே!


விக்டோரியானா என்ற பகுதியில்  அந்தக்காலத்து  வீடு ஒன்னு. படுக்கை அறையும் சிட்டிங் ரூமுமா  காட்சிகள் கண்முன்னே!   மேரிபாப்பின்ஸ்  உடை அலங்காரம் அப்பெல்லாம்:-)

நேச்சுரல் ஹிஸ்டரி பகுதியில் கற்களும் சிப்பிகளுமா  ரெண்டு ஹால் முழுசும் டிஸ்ப்ளே. இந்த சமாச்சாரங்களை பல இடங்களிலும் ஊர்களிலும் பார்த்துட்டதால்  ஜஸ்ட் ஒரு பார்வையோடு  நகர்ந்துட்டேன்.


இங்கே பறவைகள் , 'இருந்தவைகளும்  இருப்பவைகளுமா' ஏராளம்.  ஒவ்வொன்னும் ஒரு அழகு.

ஒவ்வொன்னையும் க்ளிக்கும்போது  நம்ம கல்பட்டார் நினைவு வந்ததென்னமோ நிஜம். அவர் உசுரோட எடுத்தார். நான்.........

 
மவொரிகள் பகுதியிலே அந்தக்காலத்து தட்டுமுட்டு சாமான்களோடு அவர்கள் பயன்படுத்திய படகு. கனூ என்று சொல்லும் ரகம்.  முழு மரத்தையே குடைஞ்சு செஞ்சுருக்காங்க. இக்கட்டாத்தான் உக்காரமுடிஞ்ச அதுலே ஏறி எப்படித்தான் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து நியூஸிக்கு வந்தார்களோ என்று நினைச்சுப் பார்த்தால்............. ஹைய்யோ!!!


இந்தப் பக்கங்களில் எங்கே பார்த்தாலும் நங்கூரங்களும் ப்ரொபெல்லர்களுமாத்தான்  போட்டு வச்சுருக்காங்க.  கடலோடிகள் என்பதைக் காமிக்கிறாங்கபோல. ம்யூஸியம்   மூடும் நேரம் வந்தாச்சு.  அதனால் நாங்களும் சட்புட்டுன்னு பார்த்துட்டு கிளம்பிப்போய் நின்னது வார் மெமோரியலில்.


ஊருக்கு ஒன்னுன்னு  சொன்னேன் பாருங்க, இங்கே இது கொஞ்சம் பெரிய அளவில் இருக்கு.  Invercargill Cenotaph. வீரர்களின் விவரங்கள்  முழுசும் கவனமாச் செதுக்கி இருக்காங்க. உலகப்போர்களில் மட்டுமில்லாமல்  அதுக்குப்பிறகு நடந்த போர்களிலும் கலந்துகொண்டு வீரமரணம் அடைந்த மக்களை நினைவுகூறுகிறது. அழகான பரந்த புல்வெளியும் இருக்கைகளுமா அமைதியா இருக்கும் இது மெயின்ரோடுலே (Dee Street ) இருக்குன்னா நம்புங்க. நினைவுத்தூணுக்கு முன்புறம் புல்தரையையே ஒரு டிஸைனாப் போட்டு வச்சுருக்காங்க. சிரத்தை கண்கூடு.


இதே தெருவில்  ரெண்டு பக்கமும் அங்கங்கே  விதவிதமான டிஸைனில் சர்ச்சுகள். இங்கெல்லாம் சர்ச்சுகள் நம்மூர் புள்ளையார் கோவில்கள் போலதான். ஆனால் ஒரே தெருவில் எட்டுப் புள்ளையார் கோவில்கள் இருந்து நான் பார்த்ததில்லை.

ஸேன்டி பாய்ண்ட் (Sandy Point)ன்னு ஒரு இடம்.  இங்கத்து   ஆறு ( Oreti River)    ஃபொக்ஸ்  ஜலசந்தியில் (Foveaux Strait ) சங்கமிக்கும் பகுதி. 2000 ஹெக்டேர் மணல் பரந்து விரிஞ்சுருக்குமிடம். totara மரங்கள் நிறைந்த  ஆற்றுப்பகுதி. இன்வெர்கார்கில்  ஊர்  உருவாகுமுன்னேயே இந்த இடம் மவொரிகள் நிறைஞ்ச பகுதி.  மட்டன்பர்ட் என்று சொல்லும் பறவையினங்கள் இங்கே ஏராளமா இருந்துச்சு. அவைகளை இந்த டோடரா மரத்தின் பட்டைகளைச்சேர்த்து சமைச்சு  இங்கே கிடைக்கும் ஒரு வகை ஓலைகளைக் கூடை போல் முடைஞ்சு அதுக்குள்ளே சமைச்ச இறைச்சியை வச்சுருவாங்க.  மூணு வருசம்வரை கெடாமல் இருக்குமாம்.


இந்தப்பறவைகள்  கடல்புறாக்களில் ஒரு வகை. மவொரி மொழியில் இதை Titi ன்னு சொல்றாங்க.இவைகளை வலைவீசிப்பிடிக்கும் உரிமைகள் மவொரிகளுக்கு மட்டுமே.  36 சிறு தீவுகளில்  இவைகளைப்பிடிச்சுப் பக்குவப்படுத்தி விக்கறாங்க.  இதுக்கு ஆட்டிறைச்சியின் ருசி இருக்காம்.  இப்பவும் உப்பிலிட்ட  மட்டன்பர்ட் வியாபாரம் கொடிகட்டிப்பறக்குது .கிலோக் கணக்கெல்லாம் இல்லை. பக்கெட் இவ்ளோன்னு விலை.

 மட்டன்பர்ட் தீவுன்னு கூட ஒன்னு இருக்கு. ஆனால் Poutama Island Titi தான் பேர் வாங்கி இருக்கு. மார்ச் 15 முதல்  மே மாசம் கடைசிவரை ரெண்டரை மாசத்துக்கு மட்டன்பர்ட் சீஸன். ஹெலிக்காப்டரில் அங்கே போய் இறங்கி, இரவு நேரங்களில் புதர்களில் இருந்து வெளியே உலவவரும்  வளர்ந்த பறவைக் குஞ்சுகளைப் பிடிச்சுப்போட்டுக்கிட்டு வருவாங்களாம்.


இந்தப்பகுதிகளில் ஏராளமான கேப்பேஜ் மரங்கள் (Cabbage Trees) இருக்கு. Native Tree. சும்மா விளைஞ்சு நிக்குது என்பதைத் தவிர வேறொன்னும் எனக்குத் தோணலை. இப்படிக் காடுகரையில் இருந்தால் ஓக்கே. ஆனால் வீடுகளில் சிலசமயம் இருப்பதால் ரொம்ப சல்லியம். அதோட  இலைகள், ஓலைகள் போல இருப்பவை.  நம்ம வீட்டுப் புல்வெளியில் உதிர்ந்து லான் வெட்டும் மிஷினில் மாட்டிக்கும்.  மிஷின் ஓடாது. கழட்டிச் சரி பண்ணனும். இது பேஜார் புடிச்ச வேலை. மரத்தை வெட்டிப் போடலாமுன்னா.......   அதுக்கு நமக்கு ரைட்ஸ் இல்லை.நேடிவ் ட்ரீ என்பதால் இதுக்கு(ம்) பாதுகாப்பு.

பூமி புத்திரர்களான  மவொரிகளுக்கு இந்த மரத்தின் பயன் தெரிஞ்சுருக்கு. இது பூக்கும் சீஸனுக்குக் கொஞ்சம் முன்னால்  மரத்தின் அடியில் தோண்டி அதன் வேர் பாகங்களை எடுத்து  வேகவச்சுத் தின்னுவாங்களாம். நம்ம  பனங்கிழங்கு மாதிரியா!!!! ஆனால் இது ரொம்ப இனிப்பா இருக்குமாம்.

1863 முதலே  திமிங்கில வேட்டைக்கான  whaling stations இந்த முகத்துவாரத்துக்கருகில் அமைச்சதால் எப்பவும் படு பிஸியான இடமா  இருந்துருக்கு.  திமிங்கில எண்ணெயை இங்கே காய்ச்சி எடுத்து  கப்பலில் அனுப்பிக் காசு பார்த்தாங்க.

நல்ல அகலமான ஆறுதான். அடிக்கும் காற்றும் மழையும் நம்மை வண்டியைவிட்டு இறங்கவிடலை. இங்கே வரும்வழியெல்லாம்  மௌண்டன் பைக், கோல்ஃப் க்ளப், ரோயிங் க்ளப், ஆர்ச்செரி அண்ட் போ ன்னு அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் வகைகள் குத்தகை எடுத்துருக்கு.


வந்த வழியே திரும்பி மெயின்ரோடில் சேர்ந்து இன்னும் கொஞ்சதூரம் போய் இடம் எடுத்தா அது ஒரெடி பீச் ( Oreti Beach) போகும் வழி.  இங்கேயும் பிஸ்டல் க்ளப், ஸ்கௌட் க்ளப்ன்னு  வழி நெடுக....  பாதை முடியும்போது கண்ணுக்கு எதிரில் 'ஹோ'ன்னு ஆர்ப்பரிக்கும் கடலும்,  மணல்பரப்புமா  மனசில்  இனம்தெரியாத  லேசான ஒரு பயம் தரும்  காட்சி. பாதைக்கு ரெண்டு பக்கங்களிலும் மணல்குன்றுகள்.


இன்னும் கொஞ்சதூரம் மணலில் வண்டியை ஓட்டிப்போய் கிட்டே பார்க்கலாமுன்னு கோபால் சொன்னதுக்கு தடா போட்டேன். மணலில் கார்ச்சக்கரம் புதைஞ்சால் உதவிக்கு அக்கம்பக்கம் ஒரு ஜீவன் இல்லை. அடிக்கிற பேய்க் காற்றிலும்  விட்டுவிட்டுப் பெய்யும் மழையிலும் மாட்டிக்கிட்டு முழிக்கணுமா?  வண்டியைவிட்டு வெளியே  வந்து ரெண்டு க்ளிக்கலாமுன்னா கதவைத் திறக்க முடியாமல் காற்று தள்ளுது. கூடவே வாரி இறைக்கும் மணலும்.

நல்ல வெய்யில் இருக்கும் நாளில் இங்கிருந்து பார்த்தால் 70 கிமீயில் இருக்கும் ஸ்டீவெர்ட் ஐலேண்ட் தெரியுமாம்.  இடையில்  Foveaux strait  இருக்கே. இங்கே எப்பவும் காற்றில் பனித்துளி கலந்தே இருப்பதால்  மிஸ்ட்டியாகவே இருக்கும். கொஞ்ச தூரத்தில் நடந்துபோறவங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தால் காற்றில் மிதப்பதுபோல் தெரிஞ்சு அப்புறம் காணாமல் போயிருவாங்க.  நமக்கு அதிர்ஷ்டம் இல்லை காணாமப் போக!!


அறைக்குத் திரும்பினோம்.   அதிகம் ஒன்னும் தூரமில்லை. 11 கிமீதான். வரும்வழியில்  ஆற்றங்கரையில் ஒரு அழகான வீடு,அத்துவானக் காட்டில் எப்படிக் கட்டியிருக்காங்க பாருங்க.


தொடரும்........:-)



29 comments:

said...

நல்லா ரசித்தேன்.

said...

ஆரம்ப கால காமெராவை வெச்சு அப்ப பதிவரா படம் எடுத்திருந்தீங்கன்னா... முக்காடு‌ போட்டு முகத்தை மூடிக்கிட்டு குறைவான ஷட்டர் ஸ்பீட்ல படம் எடுக்கறதுக்குள்ள வெறுத்துப் போய் பதிவே எழுதாம இருந்திருப்பீங்க. நாங்கல்லாம் நிறைய இழந்திருப்போம். நல்லவேளை...! பல விஷயங்களில் மிருகங்களைவிட மனிதன் மோசம்தான்! புகைப்படங்கள் சார்ந்து பயண அனுபவங்களை ரசிக்கிறது ரொம்பவே இனிமையா இருக்கு டீச்சர்!

said...

முதல் படம் கொடூரமா இருக்குப்பா.

என்ன பூனை வள்ர்க்கக் கூடாதா. என்னப்பா ஆச்சு இவங்களுக்கு. அதுவும் ஒரு உயிரினம் இல்லையா.
அந்த வீடு தன்னந்தனியே இருக்கே. ஏன் அந்தப் பீச் அப்படி ஜிலோன்னு இருக்கு. ஒரு வேளை கொல்லப்பட்ட திமிங்கலங்களின் ஆவி அங்க சுத்துதோ என்னவோ. பாவம்.அற்புதமான படங்கள். துளசி.

said...

படங்களுடன்விளக்கங்களும் மிக மிக அருமை
முதல் படத்தின் கொடுமையைக் கண்டு
கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்
நேரடியாகப் பார்ப்பதைப் போன்று அனைத்து
காட்சிகளையும் ரசிக்க முடிந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

said...

தெரியாத அறியாத தகவல்கள் அருமை.

said...

இதையும் பாருங்க http://kaviyazhi.blogspot.com/2013/01/blog-post_529.html

said...

தெளிவான படங்கள் அழகா கொடுத்திருக்காங்க. அதனால சட்டுனு மனசுல பதிஞ்சிருச்சு. நோட்ஸ் எடுக்கும் வேலை மிச்சம். :)

said...

மணலில் கார்ச்சக்கரம் புதைஞ்சால் உதவிக்கு அக்கம்பக்கம் ஒரு ஜீவன் இல்லை. அடிக்கிற பேய்க் காற்றிலும் விட்டுவிட்டுப் பெய்யும் மழையிலும் மாட்டிக்கிட்டு முழிக்கணுமா? வண்டியைவிட்டு வெளியே வந்து ரெண்டு க்ளிக்கலாமுன்னா கதவைத் திறக்க முடியாமல் காற்று தள்ளுது. கூடவே வாரி இறைக்கும் மணலும்.//

நீங்கள் சொல்வது சரிதான்.சாருக்கு நீங்கள் தடா போட்டது நல்லது தான். படத்தை பார்த்தலே தெரிகிறது .பயமாகத்தான் இருக்கிறது.

said...

ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் அந்த வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

படங்களுடன் பகிர்வு நன்றாக இருந்தது டீச்சர். நாங்களும் கூடவே வந்துகிட்டிருக்கோம்...

said...

சீல்கள் நிறைய அழிக்கப்பட்டனன்னு நானும் படிச்சிருக்கேன். வருத்தத்துக்குரியதுதான். இப்ப நின்னது ரொம்ப மகிழ்ச்சி.

பெங்குயின்கள்ள ஆண் தானே அடைகாக்கும். :)

சாவி அலங்காரம் நல்ல டெக்னிக்கா இருக்கே. இவ்வளவு நாளா தோணாமப் போச்சே!

திமிங்கிலம் ரொம்பப் பெருசா இருக்குமே. அதை எப்படி வேட்டையாடுனாங்க? அதுலருந்து எண்ணெய் எப்படி எடுப்பாங்களோ தெரியல.

அந்தத் தனிவீடு உண்மையிலேயே அட்டகாசம். அப்படியொரு சூழலில் வாழ்ந்தா எவ்வளவு நல்லாயிருக்கும். ம்ம்ம்.

said...

அற்புதம் அற்புதம்!

அருமையான படங்கள். குறும்புடன் விளக்கங்கள்.

ஒரு யுனீக் எக்ஸ்பீரியன்ஸ்.

said...

வித்தியாசமான படங்கள்.வித்தியாசமான பகிர்வு.மிகவுமே ரசித்தேன்.

said...

வித்தியாசமான படங்கள்.வித்தியாசமான பகிர்வு.மிகவுமே ரசித்தேன்.

said...

நல்லாயிருக்கு .....




said...

சாவி நல்ல ஐடியா....

காமெரா - நல்லாத் தான் இருக்கு. அதுல ஒரு படம் பிடிக்க ஆசை!

கரையோர வீடு! அங்க எனக்கு ஒரு இடம் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க பால கணேஷ்.

அந்தக் கேமெரா..... கோபாலை நினைச்சால்தான் பாவமா இருக்கும். என்னதான் நான் 'புகைப்படக் கலைஞர்' என்றாலும் அம்மாம்பெருசை தூக்கிட்டு வரப்போறது அவர்தானே? நல்லவேளை தப்பிச்சார்:-)))))

said...

வாங்க வல்லி.

என் சார்பில் நீங்களும் முதல்படச் செய்கையை சபிக்கும்படி கேட்டுக் 'கொல்'கிறேன்.

பூனை பட்சியைப் புடிச்சுத் தின்னுருதாம்:( ரஜ்ஜு இதுவரை ஒன்னையும் புடிக்கலை!!!

ஏம்ப்பா... அந்த வீடு...ஒருவேளை அந்த ஆத்துவெள்ளம் அடிச்சுக்கிட்டு வந்து அங்கென வச்சுருக்குமோ?

said...

வாங்க ரமணி.

அந்த முதல் படம்....அங்கே பார்த்ததும் எனக்கு கோபமும் அதிர்ச்சியுமா பொங்குனது உண்மை.

தேமேன்னு படுத்துக்கிடப்பதை..... ச்சீச்சீ...

மனுசனின் கொடுமை தெரியட்டுமுன்னு
இடுகையில் போட்டு வச்சேன்.

ஒரு பக்கம் உலக சமாதானம் என்று சொல்லிக்கொண்டே செய்யும் செய்கைகள்:(

said...

வாங்க கவியாழி கண்ணதாசன்.

உலகத்தின் கீழ்க்கோடியில் இருப்பதால் சிலபல தெரியாத தகவல்களை துளசிதளம் தெரிவிக்கிறது!!!

சரியா:-)))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இது பரிட்சைக்கு வரும் பகுதி என்ற ரகசியம் உங்களுக்கு மட்டும்!!!

said...

வாங்க கோமதி அரசு.

ஈ காக்கை இல்லைன்னு சொல்வோமே அதாங்க...இது:-))))

தொடர்ந்து வருவதற்கு நன்றி.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அது அசப்புலே என் கனவு வீடு போல(??) இருக்குதுங்க!!!

கூடவே வருவதற்கு நன்றிப்பா. ஜிலோன்னு இருந்தால் சிலசமயம் பயமா இருக்குல்லே:-)))

said...

வாங்க ஜிரா.

பெங்குவின் ஆண்கள் ரொம்பப்பாவம்.

முந்தி பார்க்கலைன்னா இப்பப் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_04.html

திமிங்கிலத்தின் கொழுப்புப்பகுதிகளையும் மற்ற சில பகுதிகளையும் துண்டுகளாக்கி பெரிய கொப்பரையில் போட்டுக் காய்ச்சுவாங்களாம். இந்தக் கொப்பரைகள்தான் இந்தப் பக்கங்களில் எல்லா மியூஸியத்துலேயும் இருக்கு.

ஒரு சமாச்சாரம் தெரியுமா? இந்த எண்ணெய், அழகுசாதனங்கள் செய்யவும், வாசனை திரவியங்கள் செய்யவும் பயன்படுதுன்னு ஏகப்பட்ட டிமாண்ட்!!!

தனிவீடு நல்லா இருக்கே தவிர தனியாவே அங்கே நம்மால் நெடுநாள் வாழ முடியாது. மனுசன் ஒரு சோஸியல் அனிமல்.

said...

வாங்க பட்டு ராஜ்.

ஆமாங்க. அனுபவங்கள் எல்லாமே ஒரு வகையில் அற்புதங்களே!

ரசனைக்கு நன்றி.

மீண்டும்வருக.

said...

வாங்க ஸாதிகா.

ரசிப்புக்கு நன்றிகள்ப்பா.

said...

வாங்க நான்.

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பேசாம அந்த வீட்டுலே ஒரு பதிவர் சந்திப்பு வச்சே ஆகணும்.

எல்லோரும் கிளம்பி வாங்க வெய்யில் இருக்கும்போதே:-))))

அந்த சாவிகளில் எதாவது ஒன்னு அந்த வீட்டுப் பூட்டைத் திறக்காதா?
பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் அந்தக் கேமெராவில் படமெடுத்துடலாம்.

எப்படி...ஒரே கல்லில் மூன்று மாம்பழம்!!!

said...

நேடிவ் ட்ரீ பற்றி அறிந்துகொண்டேன்.

திமிங்கிலம், கடல்,தனிக் காட்டு வீடு என பல படங்களும் கதை சொல்கின்றன.