Wednesday, March 27, 2013

ரங்கன் பட்டபாடு...... த்சு....த்சு.....

பெரிய பெருமாள்,பெரிய கோவில், பெரிய மேளம், பெரிய தளிகைன்னு எல்லாமே பெருசுதான் இங்கே.   பூலோக வைகுண்டம் இல்லையோ!!!!   கோவில் மட்டுமே 156 ஏக்கர் பரப்பளவு.  இந்தியாவில் இது மட்டுமே ஏழு பிரகாரங்கள் உள்ள ஒரே கோவில். ஒவ்வொன்னுக்கும் ஒரு பெரிய மதில் சுவர். மதில் சுவர்களின் மொத்த நீளம் 11.16 கிலோ மீட்டர்!  ஏழாம் பிரகாரம் தொடங்கி  அஞ்சாம் பிரகாரம் வரை  ரெவ்வெண்டு மதில்களுக்கு இடையில்  வீடுகள் நிறைஞ்சு  ஒரு முழுத் தெருவே இருக்கு.  ஒவ்வொரு தெருவுக்குள் போக ஒவ்வொரு கோபுரம்! கோவிலுக்குள்ளே ஒரு ஊர்.  முந்திக்காலத்துலே கோட்டைக்குள்ளே ஊர் இருக்கும் பாருங்க அதைப்போலத்தான்.

தெற்கு கோபுரத்தின் உயரம்  237 அடி.  13 நிலைகள். (13 என்றது வெள்ளையர்களுக்குத்தான் ஆகாத  நம்பர். நமக்கில்லையாக்கும்!) உச்சியில்  13 கலசங்கள்.  அங்கே நின்னு பார்த்தால் தூரக்க இலங்கை தெரியுமாம். ஆனால் இது உண்மைதான்னு  நிரூபிக்க யாருக்கும் மேலே போக அனுமதி இல்லை.

 கிருஷ்ணதேவ ராயர் காலத்தில்  கட்ட ஆரம்பிச்சு அப்படியே பாதியில் வேலை நின்னுபோய் மொட்டைக்கோபுரமாக் கிடந்ததை  அஹோபில மடம் பெரிய ஜீயர் (44 பட்டம் அழகியசிங்கர்) முயற்சியால்  1980 இல் மீண்டும் கட்ட ஆரம்பிச்சு 1987 வது ஆண்டு வேலை முடிஞ்சது.   பழைய ஆட்களுக்கு இப்பவும் இது ராயர் கோபுரம்தானாம்!





கோபுரத்தில் எதோ விரிசல் வந்துருக்குன்னு அக்கம்பக்கம் 40 மீட்டருக்குக் கடைகண்ணிகளை அகற்ற உத்தரவாகி இருக்குன்னு சேதி. கட்டி முடிச்சு 25 வருசம்தான் ஆறது:(

கோதண்டராமனை தரிசனம் செஞ்ச கையோட, ஏதோ வழியில் எப்படியோ போய்  மறுபடி ரெங்கவிலாஸ் மண்டபத்தின் அப்புறத்தாண்டை இருக்கும் (அகல/ளங்கன் வீதி) கார்த்திகை கோபுர வாசலுக்கு வந்திருந்தோம். வாசலின் இருபுறமும் த்வாரபாலகிகளா கங்கையும் யமுனையும்!  இங்கே எப்படி.?

ஒருமுறை  நம்ம கங்கை, யமுனை காவிரி மூவரும் தேவலோகத்தில்  வாக் போய்க்கிட்டு இருந்தாங்க.  அப்போ அந்தவழியா பறந்து போன கந்தர்வன் அவங்களுக்கு  பொதுவா ஒரு கும்பிடு போட்டுட்டுப் போனான். என்னைத்தான் கும்பிட்டான், என்னைத்தான் கும்பிட்டான்னு மூணுபேரும் தங்களுக்குள் விவாதம் செஞ்சாங்க. ' மகாவிஷ்ணுவின் காலடியில்  இருந்து நான் பிறந்ததால் நாந்தான்  உசத்தி'ன்னு கங்கை  சொல்றாள். நியாயம் கேக்க  மகாவிஷ்ணுவிடமே மூணு பேரும் போறாங்க.  கங்கை சொன்னது உண்மைதான். அவள்தான் உசத்தின்னு  பெருமாளும்  சொல்லிடறார்.  காவிரிக்குக் கண்  கலங்கிப் போச்சு. என்னை  இப்படிக் கைவிட்டீரேன்னு கடும் தவம் செய்யப்போயிட்டாள். தவத்தின் வலிமை கூடிப்போனதால்  பெருமாள் மீண்டும் ப்ரத்யக்ஷமாகி சாமிகள் பொதுவாச் சொல்லும் வசனம் பேசறார்.  " உன் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டுமென்று கேள்!"

'கங்கையைவிட உசந்தவளா என்னை  ஆக்கணும் என்றாள்' இவள்.

'சரி இவளே... நோ ஒரீஸ். அவள் காலில் கிடக்கட்டும். நீ என் கழுத்து மாலையா இருந்துக்கோ'ன்னார். அதுக்குப்பிறகுதான்   காவேரி ரெண்டாப் பிரிஞ்சு மறுபடி ஒன்னாச் சேர்ந்து ஒரு தீவை  உருவாக்கிடறாள்.

இதுக்கு நடுவில் இன்னொரு கதை  வரணும். வருது.  பாற்கடலில் தோன்றிய ரங்க விமானத்தை அர்ச்சாவதாரமா, ப்ரம்மா வச்சுப் பூஜை பண்ணிக்கிட்டு இருக்கார்.  தினப்படி பூஜைக்கு சூரியன்  உதவிக்கிட்டு இருக்கான்.  இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த அரசரொருவர்  பிரம்மனுக்கு  ஒரு சமயம் உதவப் போனார். அப்பெல்லாம் தேவர்களுக்கு மனுஷ்யர்கள் உதவியும் தேவைப்பட்டது. அதுக்கு பிரதி உபகாரமா என்ன வேணுமுன்னு ப்ரம்மா கேட்கப்போய் அவர் , நீங்கவச்சுப் பூஜிக்கும் ரங்கவிமானம் வேணுமுன்னு சொல்லிட்டார்.  இதைக்கொடுக்கத் தயங்கிய ப்ரம்மா, சூரியனும் இதை தினமும் பூஜிக்கிறான். அவனாண்டை ஒருவார்த்தை கேட்டுட்டுத்தான் முடிவு செய்யணுமுன்னு சொல்லி ஜகா வாங்குறார். உடனே அரசர், 'அட! சூரியனா? பழம் நழுவி பாலில் விழுந்ததுன்னு வச்சுக்குங்கோ. நானும் சூரிய குல அரசன் தான்.  நானும் உங்களைப் போலவே அனுதினமும்  ரங்கவிமானத்தை வச்சுப் பூஜிப்பேன்னு சொல்றார். இப்படியாக  ரங்க விமானம்  பூலோகம் வந்து சேர்ந்துச்சு.  வழிவழியா  இதே இக்ஷ்வாகு குலத்தின்  தனமா இது தொடர்ந்து  பூஜிக்கப்பட்டு வருது.  இந்தக்குலத்தில் தோன்றியவர்தான் ஸ்ரீ ராமர்.  தசரதகுமாரர்.

ராவணனோடு  போர்  நடந்து முடிஞ்சு சீதையைக் காப்பாற்றிக் கொண்டுவந்து வனவாசம் முடிஞ்சதுன்னு எல்லா க்ளைமேக்ஸும் ஆனபிறகு ஸ்ரீ ராமனுக்கு  அயோத்தி நாட்டின் அரசரா முடிசூட்டு விழா நடக்குது .  மேற்படி சமாச்சாரம்  எல்லாத்திலும்  உதவியா இருந்தவங்களுக்கு  தேங்ஸ் கிவிங் கிஃப்ட் கொடுக்கும்போது  குலதனமான ரங்க விமானம் விபீஷணனுக்குக் கிடைச்சது.

இலங்கைக்குக் கொண்டு போறான்.  போற வழியிலே , இந்தக் காவிரித் தீவைக் கடக்கும்போது  மாலை சந்தியாவந்தனம் செய்யும் சமயமாச்சு.  ரங்க விமானத்தைத் தரையில் வைக்க மனமில்லை.  சுத்துமுத்தும் பார்க்க  ஒரு பையன் கண்ணுக்குத் தென்பட்டான்.  அவனிடம் ' கொஞ்ச நேரம் இதைப்பிடிச்சுக்கோ  இவனே. இதோ வந்துடறேன்னு சொல்லி அவன் கையில் கொடுத்துட்டு அனுஷ்டானம் முடிச்சுத் திரும்பினால் பையன்  விமானத்தைத் தரையில் வச்சுட்டு விளையாடிக்கிட்டு இருக்கான்.

விபீஷணன்  என்னடா இவனே இப்படிச் செஞ்சுட்டேன்னு திரும்ப விமானத்தைத் தூக்கி எடுக்க முயற்சிக்கிறான். அசைக்கக்கூட முடியலை. அது  அங்கேயே இடம் பிடிச்சு உக்கார்ந்துக்கிச்சு.  இந்தப்பையனை என்ன பண்ணறேன் பாருன்னு  அவனைத் துரத்த அவன் ஓடிப்போய்  ஒரு மலையில் ஏறி  உச்சிப் புள்ளையாரா மாறி உக்கார்ந்துட்டார்!!

அதென்னவோ தெரியலை   அண்ணன் தம்பி ரெண்டுபேருக்குமே  கிடைச்ச சாமியை  தங்களுடைய ஊர்வரைக் கொண்டு சேர்க்கக் கொடுப்பனை இல்லை. அண்ணனுக்கும் இதே கதைதான். அவருக்கு சிவன். இவருக்கு விஷ்ணு.


இப்படித்தான் காவிரிக்குக் கொடுத்த வரத்தின்படி விஷ்ணு இங்கே கோயில் கொண்டார். அந்தக்கோவில் கோபுர வாசலுக்கு  கங்கையும் யமுனையும் த்வாரபாலகிகளா வந்து நிக்கும்படி ஆச்சு.

கார்த்திகை கோபுரம் கடந்து உள்ளே போனால் ஏகப்பட்ட தூண்களுடன் பிரமாண்டமான  மண்டபம். 212 தூண்கள் இருக்காம்! வலது பக்கம் ஒரு சந்நிதியில்  தீபாராதனை காமிச்சு  அங்கிருந்த சிலர் கண்ணில்  ஒத்திக்கிட்டு இருந்ததைப்பார்த்து  காலை வீசிப்போட்டு அங்கே ஓடினால்.............  பெரிய திருவடி பெருமாளை நோக்கி கூப்பிய கைகள். கூப்பிட்ட நொடியில்  கிளம்பும் வகையில் இதோ பறக்க ரெடி என்றதுபோல் இறக்கைகளை விரிச்சு  எழும் பாவனையில் இருக்கார்!  பெரிய திருவடி என்ற பெயருக்கேத்தமாதிரி பெரிய உருவம். 25 அடி உசரம்! அம்மாடியோவ்!!!!  இவருக்கு 30 மீட்டர் வேஷ்டி வேணுமாம். அகல விரிச்ச கண்ணை சுருக்க மறந்தேன்.  சந்நிதியைப் பூட்டிட்டாங்க. கம்பிக்கதவு என்றதால் நமக்கு பிரச்சனை இல்லை:-)  நகை நட்டுக்களா நாகங்களையே போட்டுருக்கார். கருடனைப்பார்த்து பயந்து ஒவ்வொன்னும்  கையிலும் காலிலுமா சுத்திக்கிட்டு இருக்கு.  மொத்தம் எட்டு!

செப்புச்சிலை மாதிரி ஒரு நிறம்.ஆனால் மரச் சிற்பமாம். இவருக்கு அபிஷேகம் கிடையாது.  ஆனால் கொழுக்கட்டை நிவேதனம் உண்டு!!!

மசமசன்னு ஒரு படம் கிடைச்சது. காப்பிரைட் இருக்காம்.இந்தச் சுட்டியில் பாருங்களேன்.



மண்டபத்துக்குள் மண்டபமா இவருக்கு முன் ஒரு மண்டபம்.  விக்ரம சோழர் காலத்தில்(1070-1125 ) கட்டுனது.  இதுக்கே ஆயிரம் வயசு ஆயிருக்கு பாருங்க!  இவருக்கு த்வாரபாலகரா சுக்ரீவனும் அங்கதனும்!!!  இவர் மண்டபத் தூண்களில் நாயக மன்னர்களின் சிலைகளும் உண்டு.

மாலிக்காபூர்  படையெடுப்பில் இவர் மேல் பூசி இருந்த தங்கத்தை அபகரிக்க  இவர்மேல் மெழுகு தடவி தீவச்சு அதில் உருகி வழிஞ்ச தங்கத்தைத் திருடிக்கொண்டு போனதாக ஒரு கதை உலவுது.  ஒருவேளை அப்போ செப்புத் திருமேனியா இருந்துச்சோ என்னவோ!  இல்லை...இந்தக் கதை  இன்னொரு பிரகாரத்தில் இருக்கும் அமிர்த கலச  கருடாழ்வாருக்கானதா?  சின்னக்குழப்பம்.தெரிஞ்சவுங்க சொல்லுங்க. கீதா? சீக்கிரம் மேடைக்கு வரவும் ப்ளீஸ்:-)

இந்தக்கோவிலிலே   ஏராளமான மண்டபங்கள் இருந்தாலும்  ரொம்ப  அழகானதுன்னு  இந்த கருட மண்டபத்தைத்தான் சொல்றாங்க.  தேவராஜன் குறடு என்று பெயராம். பகல்பத்தில் நம்பெருமாள்  மோஹினியா இங்கேதான் எழுந்தருள்வாராம்!

 மண்டபத்தின்  இரு பக்கங்களிலும் ஆழ்வார்களின் சந்நிதிகள். ஒரு பக்கம் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்களை தரிசிக்கலாம். மறுபக்கம் திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், நவநரசிம்ஹர் சந்நிதிகள். எல்லாமே  சாத்தி இருக்கும் கம்பிக்கதவு வழியாத்தான் ....... நாள் நக்ஷத்திர விசேஷத்துக்கு மட்டும் திறப்பார்களோ என்னவோ!

மண்டபம் கடந்து அடுத்த பிரகாரத்துக்கு  ஆர்யபட்டாள் கோபுரவாசல் வழியாகப் போனோம்.  கொடிமரமும் பலிபீடமுமாய் வலதும் இடதும்  திறந்த மண்டபமுமாய் இருக்கு. குலசேகரன் வீதியாம்.  மூலவரை நோக்கிப்போய்க் கொண்டிருக்கோம். அடுத்து நாழிகைக்கோட்டான் கோபுரவாசல்.  நீண்ட பாதையில் போய் நின்னது ராஜமகேந்திரன் வீதி(!)யில்,  சந்தனு மண்டபம் முன்னால்.  மக்கள் நடமாட்டம் கூடுதலா இருக்கு.

திடீர்னு பட் பட் ன்னு ஒரு சப்தம். ரெண்டு பேர் ஒரு தோல்வாரை தரையில் அடிச்சுக்கிட்டே வர்றாங்க.  அவர்களுக்குப்பின்னால்  பெரிய பாத்திரங்களைச் சுமந்து கொண்டு சிலர். ஓ.... சாமி சாப்பிடப்போறார்!  டின்னர் டைம்லே டிஸ்டர்ப் செய்யலாமான்னு  யோசனை எனக்கு.  இடது மூலையில் இருந்த படிக்கட்டில் போய் உக்கார்ந்தோம்.  அப்போ அங்கே வந்த பட்டர் ஒருவரிடம் தரிசனம் உண்டான்னு கேட்டதுக்கு  ஸ்பெஷல் தரிசனம் 250ன்னு சொன்னார்.

இந்த  பிரகாரத்தில்  மேற்குப்பக்கம் திண்ணை போன்ற ஒரு அமைப்பு. அதில் பூட்டப்பட்ட சின்னச் சின்ன  கதவுகளா இருக்கு.  முன்பக்கம் ஒரு கண்ணாடி கவசத்துக்குள் ஆள் உயரச் சிலைகளா சிலர். மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர்  குடும்பத்துடன்.  தந்தச் சிற்பமாம். அதுக்குமேல்   வர்ணம் பூசி இருக்காங்க.

கோபால் மட்டும் எழுந்து போய் விசாரிக்கறேன்னு போனவர் தர்ம தரிசனத்துக்கு பெரிய வரிசை காத்துருக்கும்மா.  பெருமாளை இன்னிக்குப் பார்க்கலாமா இல்லை நாளைக்கான்னு கேட்டார்.  என்ன கேள்வி இது?  இன்னைக்கே.......தான்.

தரிசனச்சீட்டு வாங்கும் இடத்துக்கு ஒருவர் கை காட்டினார்.  வளைஞ்சு திரிஞ்சு போய்  சீட்டு வாங்கியதும்  அவர் காமிச்ச வழியில் போனோம்.  படிகள் இறங்கி, ஏறின்னு போய்  கருவறை முன் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஏற்கெனவே நின்னுருக்கும் தர்ம தரிசனக்கூட்ட ஜோதியில் கலந்தோம்.

காயத்ரி மண்டபம் இது.  எங்கே நேராப் பெருமாளைப் பார்த்துடப் போறோமுன்னு வரிசையை  இடது பக்கம் கம்பிகளுக்கிடையில் திருப்பி விட்டுருக்காங்க. அங்குலம் அங்குலமா நகர்வு.  ஒரு  இருபது நிமிஷக் காத்திருப்பு.  நாம் குலசேகரன் படியருகில் போகப்போறோம். அப்ப   தடுப்புச்சங்கிலியை அவிழ்த்து ஒரு  பெண்ணையும் அவர் மகன் போலிருந்த  பதின்மவயது பிள்ளையையும் உள்ளே கூட்டிவந்து நமக்கு முன்னால் ஒட்ட வைத்தார் பட்டர் ஒருவர்.

"பெருமாளைப் பார்க்கணுமுன்னா  இங்கேயும்  தெரிஞ்சவா சிபாரிசு  வேணும்போல!  நமக்குப் பெருமாளைத்தவிர வேற யாரையும் தெரியாதே"  கொஞ்சம் உரக்கவே சொல்லியிருக்கேன். சட்டென்று திரும்பிய  பட்டர் (கொஞ்சம் அசடு வழிய) ' அப்படியெல்லாம் இல்லே மாமி.  உங்களுக்கும் தரிசனம் பண்ணி வைக்கிறேன்(!!)  நீங்க நன்னா சேவிங்கோ' ன்னார்.
(சுட்ட படம்!   இவர் கோபுரப்பட்டி ஆதி நாயகப் பெருமாள் . எதுக்குக் கயிறு? அவனைக் கட்டி வலிக்கணுமா என்ன?)


அடுத்து நம் முறை!  ஆஜானுபாகுவா 21 அடி நீளத்தில்   பதினைஞ்சடி ஆதி சேஷ மெத்தைப் படுக்கையில் கிடக்கிறான்.புஜங்க சயனம்.  லேசாத் தலை சாய்ச்சு தெற்கு நோக்கிய திருமுகம்  குழைச்சாந்தில்  செஞ்சு, புனுகுச்சட்டம் சாத்திய மினுமினுப்பான மேனி! படுக்கை நீளம் போறாமல் வெளியே நீட்டி இருக்கும்  பங்கஜச் சரணம்  காட்சிக்கு இல்லை. போர்த்தி வச்சுருக்கு. காலடியருகே நிற்கும் விபீஷணனும்  தரிசனம் கிடைக்கலையேன்னு இருக்கான். புரட்டாசி மாசம் தைலக்காப்பு. தீபாவளிக்குத்தான்  பாத தரிசனம் கிடைக்குமாம்.  பெருமாளை அடி முதல் முடிவரை  சேவிக்கணும் என்ற நியமம் இருந்தாலும்.....  நம்மைப்போன்ற நாடோடிகளுக்கு  கிடைச்சவரை சொர்க்கம்தான் இல்லையா?
ஊனக்கண்ணால் முகத்தையும் ஞானக்கண்ணால் காலடியும்  கண்டேன்.

முகலாயர் படையெடுத்து கோவில்களைக் கொள்ளையடிச்ச  காலத்தில்  நம்பெருமாளை தூக்கிக்கிட்டு  ஒளிஞ்சோடிப்போன  கதையும்  சிலபல வருடங்கள் அவர் திருப்பதியில்  அடைக்கலமா இருந்ததும்  தெரிஞ்ச கதைதானே?  உற்சவரைத்  தூக்கிப்போக முடிஞ்சது. சுதைச் சிற்பமா இருக்கும்  மூலவரின் கதி?  21 அடி  பெரிய ஆளை  எப்படி ஒளிக்க?   பேசாம கருவறைக்கு முன் சுவரெழுப்பித்தான், வேற வழி?  காற்றுமில்லாம கவனிப்பும் இல்லாம காராக்ருஹ வாசம் செஞ்ச தை நினைச்சாப் பாவமாத்தானே இருக்கு?

கருவறை  திருச்சுற்றில்  சாளக்ராமத்தால்  செஞ்ச   திருமலை ஸ்ரீநிவாஸன்  நிற்கும் கோலம்  கண்டு வணங்கி  விஷ்வக்சேனரை தரிசனம் செஞ்சுக்கிட்டு  கோவிலில் இருந்து வெளியே வந்தோம். மணி ஏழரை.   ஊர் முழுசும் அந்தகாரம். இந்தப் பக்கங்களில்  16 மணி நேரம் பவர் கட்டாம்.  அதுக்காக இப்படியா?

திருச்சிக்குப் போய் சாப்பிட்டு ஓய்வெடுக்கணும்.  சங்கீதாவுக்குப் போனோம்.  சாப்பாட்டுக்கிடையில் செல்லில்  ஒரு கால்.   காளிமுத்து கூப்புடறார்.

"நாளைக்கு நீங்க கட்டாயம் வந்துருவீங்கதானே?"

" கட்டாயம் வர்றோம். காலை ஒரு எட்டரை ஆகிரும்.  கோவிலுக்கு வந்தவுடன் உங்களை கூப்பிடறேன்"

வாக்குக் கொடுத்தேன்.

தொடரும்...........:-)




49 comments:

said...

//அப்பெல்லாம் தேவர்களுக்கு மனுஷ்யர்கள் உதவியும் தேவைப்பட்டது. //

இப்பவும் தேவைப்படுகிறது. என்னுடைய இந்தப் பதிவைப் பார்க்கவும்.

http://swamysmusings.blogspot.com/2013/02/blog-post_27.html

said...

முதல் கருப்பு வெள்ளை படம்...1982 ல் நான் பார்த்த அழகர் கோவில் மொட்டை கோபுரம் மாதிரி இருக்கு...

திருமணமான போது, என் மனைவி என்னை வலுக்கட்டாயமாக இங்கு (அழகர் கோவில்+ பழமுதிர் சோலை) கூட்டிட்டு போனது என் வாழ்கையில் மற்றும் போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம்...

அதென்னா அப்படிப்பட்ட புண்ணியம்?
ஆம்..! அழகர் கோவில் புளியோதரையை அறிமுகப் படுத்ததற்காக...ஆம்.

இது மாதிரி அட்டகாசமான புளியோதரையை என் வாழ்நாளில் நான் எங்கும் சாப்பிட்டதில்லை.

நன்றாக எழுதுகிறீர்கள்; அப்படியே எந்த பெருமாள் கோவிலில் எது நன்றாக இறுக்கும் (பட்டை சோறு; பொங்கல், லட்டு, தயிர்சாதம்..இப்படி) என்றும் சொல்லுங்கள்.

said...

//(சுட்ட படம்! எதுக்குக் கயிறு? அவனைக் கட்டி வலிக்கணுமா என்ன?)//

பழத்திலே தான் சுட்ட பழம். சுடாத பழம் அப்படின்னு சொல்வாக. இப்ப படத்துலேயும் சுட்ட படம் சுடாத படம் அப்படின்னு..... !!

அந்த கயிறு என்ன ? எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நான் தான் ஒரு முந்திரிக்கொட்டை ஆச்சே.. ஒரு விசயம் காதுலே பட்டதுன்னா
உடனே அது பத்தி விசாரிச்சு நல்லா தெரிஞ்சுக்கணும் இல்லயா...

உடனே எனது அத்யந்த நண்பர்கள் திரு கிடாம்பி கே.ராமன் ( இவருக்குத்தான் இன்னிக்கு பங்குனி உத்திரம் முதல் மரியாதை.) . பெருமாள்
மூலவருக்கு இன்னிக்கு அபிஷேகம் நடந்த கையோடு பிரசாதம் , தலைலே வஸ்த்ரம் கட்டி மாலை போட்டு அமக்களம் பண்ணுவாக...
மற்றும் சேஷாத்ரி, ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் அவரோட மடத்துலெ ப்ரதான ஜோசியர். ) இரண்டு பேருக்கும் ஃபோன் போட்டு
என்ன விவரம் அப்படின்னு தெரிஞ்சுக்கணும் அப்படின்னு முயற்சி பண்ணினா...

இரண்டு பேருமே கோவில்ல தான் இருக்காகளாம். இன்னிக்கு தேர். தேர் புறப்பட்டு பின் தான் வீட்டுக்கு வருவாகளாம். ஆனா
திரு கே.கே.ராமன் அவர்களோட தர்ம பத்னி சொல்றாக... அது மாதிரி கயிறு ஒண்ணும் கிடையாதே...

நான் தான் சேவிச்சுக்கிட்டெ இருக்கேனே... எனக்குத் தெரியாதா என்ன ? அப்படின்னு...

எதுக்கும் அவர் ( அதாவது அவரோட ஹஸ்பென்டு) வந்தோடன்ன ஃபோன் பண்ணச்சொல்றேன்னு சொல்றாக...

அது சரி.. இது நீங்க எடுத்த ஃபோடோவா ?

எப்ப எடுத்தது ? பதில் மெயிலில் தந்தீங்கன்னா கயிரு பத்தி கரெக்டா விசாரிச்சு சொல்லிடலாம்.

சுப்பு ரத்தினம்.

said...

திருமணமான புதிதில் ஏராளமான கோவில்களுக்கு தொடர்ச்சியாக சென்று கொண்டிருப்பது வழக்கம். அப்போது திருச்சியில் உள்ள அத்தனை கோவில்களுக்கும் சென்று வந்த ஞாபகம் இப்போது வருகின்றது. ஆனால் எதையோ நினைத்து வேண்டி உள்ளே இருந்த அழகியலை ரசிக்க முடியாத தருணங்கள் உங்கள் கருப்பு வெள்ளை புகைப்படத்தை ஞாபகத்தில் கொண்டு வருகின்றது.

said...

அதென்னவோ தெரியலை அண்ணன் தம்பி ரெண்டுபேருக்குமே கிடைச்ச சாமியை தங்களுடைய ஊர்வரைக் கொண்டு சேர்க்கக் கொடுப்பனை இல்லை. அண்ணனுக்கும் இதே கதைதான். அவருக்கு சிவன். இவருக்கு விஷ்ணு.

நாம் செய்த பாக்கியம் ....

said...

முன்பக்கம் ஒரு கண்ணாடி கவசத்துக்குள் ஆள் உயரச் சிலைகளா சிலர். மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் குடும்பத்துடன். தந்தச் சிற்பமாம். அதுக்குமேல் வர்ணம் பூசி இருக்காங்க.//

http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_12.html

விழி அழகு ...!

said...

எதுக்குக் கயிறுனு எனக்கும் தெரியலை. கருடாழ்வார் விஷயமா தகவல் உறுதிபடத் தெரிஞ்சதும் பகிர்ந்துக்கறேன். இந்த கருடாழ்வார் குறித்துச் சொன்னதாக நினைவில்லை. அநேகமாய் அமிர்த கலசமாகத் தான் இருக்கணும்.

said...

இவருக்குத் தங்கம்னா அம்மாடியோவ், எம்புட்டுத் தங்கம் வேணும்! சான்ஸே இல்லை. :))))))

said...

ஸ்ரீரங்கத்தில் ரங்கனுக்கு அடுத்தபடி மிகவும் பிடித்த அம்மா ஆண்டாளம்மா. அவர்களைச் சேர்ட்த்துவைத்த கருடாழ்வார்.
எவ்வளவு பெரிய உருவம்பா.
அருமை அருமை அருமை. துளசிமா ரொம்ப நன்றி. அந்தக் கயிறு பார்க்கத் துக்கமாக இருக்கிறது. வயிற்றில் இருக்க வேண்டிய யாசோதையின் தாமோதரந்தான் இவர் என்று கொண்டாலும் காலுக்குக் கட்டுப் போடுவார்களா.:(

said...

நாங்க போனப்பவும் திருமுக தரிசனந்தான். நீங்க சொல்ற இடைச்செருகல்கள் பெரிய கோயில்கள்ள நடக்குறதுதானே. திருச்செந்தூரோ தில்லையோ திருவரங்கமோ, தட்டிலே துட்டு விழுந்தால் ரெண்டு எட்டிலே பட்டுடுத்திய சாமி பக்கமே போகலாம்னு தெரியாதா! :)

அந்த மரக்கருடன் மிகமிக அழகு. நல்ல கலையழகோட செய்திருக்காங்க.

திருச்சியில் எந்த சங்கீதாவில் சாப்பிட்டீர்கள்? ஒன்னு ஜிஜ்ஜிலிஜிலிப்பான்சியா ஜொலிச்சிக்கிட்டு இருக்கும். அதுலயா? ஓட்டல் ஆனந்துன்னு இன்னொன்னு பக்கத்துலயே அமைதியா இருக்கும். அங்க உணவும் அருமை. விருந்தோம்பலும் அருமை.
http://gragavanblog.wordpress.com/2012/08/09/trichy_trip_post4/

said...

மேடம்,
இந்த போட்டோ ஸ்ரீரங்கம் அரங்கநாதர் போட்டோ இல்ல

said...

தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது...

said...

ஆமாம், துளசி, ரங்கனார் முகம் சற்றே வலப்பக்கம் சாய்ந்திருக்கும். திரு சம்பத் சொன்னதுக்கப்புறமா மறுபடியும் படத்தை ஆராய்ந்தேன். இவர் ரங்கனார் இல்லை. :)))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

தேவலோகத்தில் புது நடைமுறைகளுக்கு நீங்க இன்சார்ஜா பொறுப்பு ஏற்றுக்கிட்டதைத் தொடர்ந்தே வருகிறேன். பின்னூட்டம் இடத்தான் சிலசமயம் பிரச்சனையாகிப் போகுது.

said...

வாங்க நம்பள்கி.

செந்தில் மாதிரி டாட்டாபேஸ் ஒன்னு வச்சுக்கணும் பிரசாதச் சுவைகளுக்கு:-)))

இந்தியப் பயணங்களில் முக்கால்வாசி உணவுப்பொருட்களை(இதில் ப்ராசாதங்களும் சேர்த்திதான்) கண்ணால் தின்பதோடு சரி.

அப்படி கவனமாக இருந்தும்கூட சிலசமயம் வயித்துக்கு ஆகறதில்லை.

பேசாம இதுக்கு ஒரு தொடர்பதிவு போடலாம். அவரவர் தங்களிடைய கோவில் ருசியைப் பற்றிச் சொல்லலாம்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

கருவறையில் எங்கே (நான்)படம் எடுக்க? சேஷன் ஏற்கெனவே படம் எடுத்துண்டுன்னா இருக்கான்:-)

கூகுளிச்சப்பக் கிடைச்ச படம் அது.

http://3.bp.blogspot.com/__bxacuSUkeU/TMFLbNJ_fBI/AAAAAAAAB5E/eiUbUNeGuJU/s1600/aadhi+nayaka+perumal+moolavar.JPG

Moolavar : Adhi Nayaka Perumal Bala Sayanam
Goddess : Adhi Nayaki (Separate Sannidhi)
Temple Time: 9am-1pm and 4pm-8pm
Priest : Murali Bhattar @ 94431 83939

முழுவிவரம் இந்தச்சுட்டியில் இருக்கு பாருங்க.

http://prtraveller.blogspot.co.nz/2010/10/gopurapatti-adhi-nayaka-perumal-temple.html

அழகான பெருமாளா இருக்காரேன்னு இன்றையப்பதிவில் இவரைப்போட்டேன். விட மனசில்லை கேட்டோ:-))))

அந்தப்பதிவர் ப்ரபுவுக்கு இமெயில் கொடுக்கலாமுன்னா அதில் கொடுத்த சுட்டி வேலை செய்யலை:(

கயிறு சமாச்சாரம் கிடைச்சால் கட்டாயம் சொல்லுங்கோ.

ஸ்ரீரங்கம் பதிவு சரியா எழுதறேனா? நம்மவன் கோச்சுக்கமாட்டாந்தான் என்றாலுமே பயமா இருக்கு. பெருமாள் காரியமாச்சே!

said...

வாங்க ஜோதிஜி.

முதலில் உங்கள் அரை ஆயிரத்துக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள். மேன்மேலும் வளர வாழ்த்துகின்றேன்.

அந்தந்த வயசில் அந்தந்தத் தேவைகளுக்கு இறைவனை வேண்டுவது இயல்பானதுதான்.

அழகியல் எல்லாம் ரசிக்கறதுக்குன்னு ஒரு காலமும்நேரமும் வரணும்.

எனக்கு இப்போதான் வந்துருக்கு!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பாரதபூமி இது புண்ணியபூமின்னு அப்போ இருந்துருக்கு!

said...

வாங்க கீதா.

நானும் அம்ருதகலசமென்றுதான் நினைச்சேன். அவரைத்தான் மீண்டும் புதுப்பிச்சு வச்சாங்கன்னு கோவில் புத்தகத்துலே இருக்கு.

அப்புறம் அந்தப்படம்.... அதான் சுட்டது. இந்தக்கோவில் இல்லையென்று பதிவில் குறிப்பிட விட்டுப்போச்சு.

மூலவரை கூகுளில் தேடுனப்பகண்ணில் பட்டவர் இவர். அதென்னடா கயிறு? யாராவது விளக்கம் சொல்வார்களேன்னுதான் இங்கே போட்டேன்.

அதுக்கு அடுத்த படம் ரங்கனேதான். லேசாத் தலை சாய்ச்சு தெற்கு நோக்கிய திருமுகம் என்று எழுதி இருக்கேனே!

said...

வாங்க வல்லி.

யசோதை கண்ணனை மட்டுமே கட்டினாள். இங்கே.... சேஷனுக்கும் சேர்த்தே கட்டு!!!

கோபுரப்பட்டி ஆதி நாயகப் பெருமாள் இவர்.
படமும் பதிவும் போட்ட பதிவர் பிரபு அவர்களுக்கு கயிறு சமாச்சாரம்கேட்டு பின்னூட்டம் அனுப்பினேன்.

பதில்வந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுவேன்ப்பா.

said...

வாங்க ஜிரா.

உண்மையைச் சொன்னால் சங்கீதாவுக்குப்போனபோது உங்களை நினைச்சுக்கிட்டு கோபாலிடம் சொன்னேன். பதிவில் குறிப்பிட மறந்து போச்சு.

ஆடம்பரம் இல்லாத பழைய சங்கீதாதான். வெறும் ஆப்பம் மட்டும்தான் எனக்கு.

said...

வாங்க சம்பத்.

இவர் அவரில்லைன்னு தெரிஞ்சுதான் படமே போட்டேன். ஆனால் குறிப்பிட விட்டுப்போச்சு.

வித்தியாசமா இருப்பதை விட மனசில்லை.

கவனிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தரிசனம் நல்லபடியாகக் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

said...

வாங்க கீதா.

மன்னிக்கணும்ப்பா. கோபுரப்பட்டி ஆதி நாயகப் பெருமாள் இவர்.குறிப்பிட விட்டுப்போச்சு.

இதோ விவரம் அங்கே போய் சேர்த்துடறேன்.

said...

கயிறு சமாச்சாரம் பற்றி நம்ம சுப்பு ரத்தினம் ஐயாவிடமிருந்து வந்த தனி மடலின் ஒரு பகுதி இங்கே!

மேடம்,
வணக்கம்.
திருவரங்கன் தன்னைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அளிக்க உத்தரவு போட்டிருக்கிறான். பெருமாளுக்கும் தாங்க்ஸ்
நீங்கள் போட்டு இருக்கும் மூலவர் கோவில் கொபுரப்பட்டி மணச்சநல்லூர் சமயபுரம் பக்கத்தில் இருக்கிறது ஆதி நாயக பெருமாள் அங்கு இருப்பது பால சயனம். திருவரங்கம் மூலவர் போடோ அது இல்லை
தற்பொழுது அந்த கோவிலுக்கு மறுபடியும் கும்பாபிஷேகம் நடந்ததாக தகவல்.
இந்த கயிறு சமாசாரம். நீங்கள் குறிப்பிட்ட சுட்டியிலேயே இருக்கிறது.
திருவரங்கன் கோவிலுக்கு எழுதி வைத்த நிலத்தை அளப்பதற்கு சரிபாற்பதற்கு இந்த பெருமாள் இந்த கயிறை பயன் படுத்துவதாகவும் ஐதீகம்.
க்வைட் இன்டரஸ்டிங்
நான் அந்த கோவிலுக்கு போனதில்லை. திருச்சியில் இருந்து ஒரு இருபது கிலோ தொலைவில் இருக்கிறதாம்.

என் நண்பர்களிடம் இருந்து மேலும் தகவல் வரலாம் வந்த உடன் சொல்கிறேன்.

said...

கோபுரப்பட்டியா, திருமயமானு ஆராய்ச்சியிலே இறங்கி இருந்தேன். தெளிவாக்கியதுக்கு நன்னி ஹை! கோபுரப் பட்டி போகணும். போயிட்டு வந்து சொல்றேன். :))))

said...

சுட்ட படம்! இவர் கோபுரப்பட்டி ஆதி நாயகப் பெருமாள் . எதுக்குக் கயிறு? அவனைக் கட்டி வலிக்கணுமா என்ன?)//

படத்தைப்பார்த்தால் புது மருந்து சாற்றிய மாதிரி உள்ளது.

கோவில் குமபாபிஷேகம் ஆகும் போது முதலில் கும்பத்தில் வைக்கபட்டுள்ள மந்திர சொரூபமான இறைவனை தர்ப்பை கயிறு வழியாக மூலஸ்தான திருவுருவத்தில் ஆவாஹனம் செய்வார்கள். அந்த தர்ப்பை கயிறு தான் அங்கு சுற்றப்பட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன். வைஷ்ணவ் சம்பிரதாயத்தில் வேறு அர்த்தம் உண்டா தெரியவில்லை.

said...

பெருமாளைப் பார்த்துக்கிட்டே இருக்கேன்..

said...

// வாங்க ஜிரா.

உண்மையைச் சொன்னால் சங்கீதாவுக்குப்போனபோது உங்களை நினைச்சுக்கிட்டு கோபாலிடம் சொன்னேன். பதிவில் குறிப்பிட மறந்து போச்சு.

ஆடம்பரம் இல்லாத பழைய சங்கீதாதான். வெறும் ஆப்பம் மட்டும்தான் எனக்கு. //

நல்லவேள தப்பிச்சிங்க. ஆப்பம் நல்லாயிருந்ததா? நீங்க அளந்து அளந்து சாப்பிடுறதுதான் தெரியுமே. எவ்வளவு நாளா வலைப்பூவில் இருக்கோம் :) கோபால் சாராவது ஒழுங்கா சாப்பிட்டாரா?

said...

இங்கேயும் தோமாலை தோசை என ஒன்று கிடைக்கும். நல்லா இருக்கும்! :)

சிறப்பான பகிர்வு. ரங்கனின் பெருமை சொல்லும் பகிர்வுகள் தொடரட்டும்.

said...

ஸ்ரீரங்கம் போகும்போது கருடாழ்வாரை ரொம்பவும் ரசித்து சேவிப்பேன். எத்தனை உயரம்! உள்ளே சயனித்திருக்கும் பெரிய பெருமாளை தோளில் எழுந்தருளப் பண்ண வேண்டுமே அதற்காகத்தான் இந்த உயரமும் ஆகிருதியும் என்று நினைத்துக் கொள்வேன்.
அவருக்கு எப்படி வேஷ்டி சாத்துபடி செய்வார்கள்? சாத்துபடி செய்திருக்கும் அழகைப் பார்த்தால் அவரே எழுந்து நின்று வேஷ்டியை உடுத்திக்கொண்டு மறுபடி உட்கார்ந்து விட்டாரோ என்று தோன்றும். அப்படி ஒரு அழகிய சாத்துப்படி!

உங்கள் ஸ்ரீரங்கப் பதிவு படிக்கப் படிக்க எப்போது போகப் போகிறேன் என்ற தவிப்பு அதிகமாகிறது!

said...

கைக்கு எட்டியும் வாய்கெட்டாத கொடுத்துவைக்காத ஜன்மங்கள் என்பது உண்மைதான் :(

ரங்கன் தர்சனம் கண்குளிரப் பெற்றோம்.

இரண்டாவது தடவை வந்தபோது ரங்க தர்சனம் கிடைத்தபின் தங்கியிருந்த ஹோட்டல் அண்ணா புக் செய்திருந்தார் பெயர் நினைவில் இல்லை. ரூம் வியூவுக்கு நேரே கோபுர சயனரங்கன் தர்சித்தபடியே இருந்தேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

said...

கொஞ்ச நாள் முன்னாடி தான் ரங்கனை பார்த்தோம் . ஆனால் அவசர அவசரமாக ....
இப்போ ஆற அமர பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவ்ளோ விவரங்கள் ..... நன்றி துளசி :)
ஸ்ரீரங்கத்தில் புளியோதரை கிடைக்காதா ?

said...

ரொம்ப இயல்பான/ அழகான "கோயில்" நடைப் பயணம்;
கோயில் -ன்னு தனித்துச் சொன்னா அது திருவரங்கம் மட்டுமே (வைணவத்தில்)

நிறைய இடத்தில், படிக்கும் போதே சிரிப்பு வந்துருச்சி, esp when teacher said, "எங்களுக்கு யாரு ரெக்கமண்டேசன், பெருமாளைத் தவிர?":)

கங்கையில் புனிதம் ஆய - காவேரி நடுவில் பாட்டு
பொங்கு நீர் புரந்து பாயும் - பூம்பொழில் அரங்கம் தன்னுள்

எங்கள் மால் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் - "உன்னை
எங்ஙனம் மறந்து வாழ்வேன்? - ஏழையேன் ஏழையேனே"!

said...

டீச்சர் -ன்னு பேரு அமைஞ்சாலும் அமைஞ்சுது, புள்ளைங்களைக் கட்டிப் போடும் கயிறு மேல இத்தினி கண்ணா?:)

தாம (கயிறு) + உதரன் கேள்விப்பட்டதில்லையா?

நான் சொல்லவா, அந்தக் கயிறு பற்றி?:)

said...

அந்தக் கயிறு = "சும்மா":)

மூலவர் சிலையை நிறுவும் போது, பாலாலயத்தில், இழுத்து நிறுத்தி வைக்க உதவும் வழக்கமான கயிறு (பந்தனம்) தான்;

நீங்க பார்த்த படம், கோபுரப்பட்டிப் பெருமாள், பாழடைஞ்ச கோயிலில் இருந்து, புதுசா நிறுவும் போது எடுத்தது;
இந்தப் படம் பாத்தீங்க-ன்னா, இழுத்து நிக்கும் முழுக் கயிறும் தெரியும்:)
http://3.bp.blogspot.com/_B5c_SVozZC4/THrG-lyYbOI/AAAAAAAABl0/mUuIXIJVl2E/s1600/gopurapatti3.JPG

புதுக் கோயில் நிர்மாணப் படங்கள்
http://malolamusic.blogspot.com/2010/08/gopurapatti-2010-completed.html

இப்போ கோபுரப்பட்டி போனீங்கனா = கயிறே இருக்காது!
இந்தா பாருங்க = http://srirangapankajam.com/?attachment_id=261
---------

:)))
மனசு ஒரு விசித்திரப் பிராணி; இப்பிடிக் "கயிறு" திரிச்சிருச்சே:))

பல "தல புராணங்களும்", இப்படித் தான் உருவாச்சோ என்னமோ?:) யூ டூ டீச்சர்:)))

said...

கீதாம்மா, சூரி சார் -ன்னு நீங்க பல பேரைக் கெளப்பி விட்டு...

அவங்க, கோயிலில், இன்னும் பல பேரைக் கெளப்பி விட்டு..

ha ha ha; Teacher in full form:)
I gotto tell this to Madumitha-kka!

என்னமோ ஏதோ-ன்னு நீங்க prtraveller கிட்ட போயி, சந்தேகமெல்லாம் வேறக் கேட்டு...

அவரு எழுதின "measuring instrument" இந்தக் கயிறு இல்லை டீச்சர்:)
அது நெல் அளக்கும் மரக்கால்; Measuring Instrument; அதையே தலையணையா வச்சித் துயில் கொள்ளும் பெருமாள்; அதைத் தான் "Measuring Instrument" ன்னு அவரு சொல்லி இருக்காரு!

கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கும் இந்த "Measuring Instrument" உண்டு; மரக்காலே தலையணையாக...
http://www.charmingindia.com/govindarajaperumal.html

முருகா முருகா, ரொம்ப நாள் கழிச்சி, வாய் விட்டுச் சிரிக்கிறேன்:)
Came here for a volunteer child cancer camp; Not much Internet; Just got it today & lo, nice Arangam Visit - Dank u teacher:)

said...

பெருமாளுக்குச் சில கோயில்களில், வயிற்றில், பொன் கயிறு/பட்டுக் கயிறு கட்டப் பட்டிருக்கும்; அது வேற! அது தாம + உதரம் = தாமோதரம்!

தாம்புக் கயிறு/ தாம்பு எனப்படும்;
* தாமம் = தாம்புக் கயிறு
* உதரம் = வயிறு
தாம + உதரம் = யசோதை, கண்ணனைக் கட்டிப் போட்டது;

திருவரங்கம் பெரிய பெருமாள் இடுப்பிலே, இந்தக் கயிற்றின் தழும்பு இன்னிக்கும் தெரியும் (கிட்டக்க பார்க்கும் போது)

அவன் கிடந்த கோலம், மனிதனைப் போலத் தான் இருக்கும்!
நாலு கையெல்லாம் கிடையாது; ரெண்டே கை தான்!
அதுலயும் சங்கு - சக்கரம் எல்லாம் ஏந்தி இருக்க மாட்டாரு; கையைத் தலைக்குக் குடுத்து படுத்து இருக்கும் அறி துயில் = அரி துயில்!

தாயார் கூட அருகில் இல்லாமல், "திரு-அமர்-மார்பன் கிடந்த வண்ணமும்" -ன்னு இளங்கோவடிகள் சொல்வது போல், மார்பிலேயே அமர்ந்து இருப்பாள்;

* ஒரு கை = "கீழே" -ன்னு பாதங்களைக் காட்டி இருக்கும்
* இன்னொரு கை = "மேலே" -ன்னு திருநாடு (பரமபதம்) காட்டி இருக்கும்!

கீழே பற்றினால், மேலே பற்றலாம் என்பதே உள்ளுறைக் கோலம்
= பற்றுக பற்றற்றான் பற்றினை!

said...

சொல்ல மறந்துட்டேனே...
//(அகல/ளங்கன் வீதி)//

அகளங்கன் தான் சரி!
* களங்கம் = களங்கம் உடையவன்
* அ-களங்கன் = களங்கம் இல்லாதவன்!

திருவரங்கத்தில், இராமானுசர் ஏற்படுத்தின நியமத்தில் எல்லாமே நல்ல தமிழ்ப் பெயர்கள்...
இன்னிக்கி, அதையும் சம்ஸ்கிருதம் ஆக்கிடணும் -ன்னு சில பேரு பாக்குறாங்க!:((

விண்ணப்பம் செய்வார்
திருவாடை ஈரங் கொல்லி (வண்ணான்)
கோயில் ஒழுகு
அருளிச் செயல்
-ன்னு சொட்டச் சொட்டத் தமிழ்ப் பெயர்கள்..

இன்னிக்கும், நம்பெருமாளைத் தூக்கிக் கொண்டு வரும் போது, அழகிய தமிழில், விலக்கு சொல்லுவாய்ங்க!

* பதின்மர் பாடிய பெருமாள் பராக் - எச்சரிகை!
* தமிழ் வேதம் கேட்டருளும் பெருமாள் பராக் - எச்சரிகை!
* அமுதூறும் இதழாள் திருமார்பில் ஏந்திடுவார் - எச்சரிகை
* தமிழுக்கு முகம் காட்டி, வடக்குக்கு முதுகு காட்டுவார் - எச்சரிகை!

:)

said...

வாங்க கோமதி அரசு.

கயிறு பற்றிய சரியான விளக்கம் கொடுத்து எங்களை காப்பாத்துனதுக்கு நன்றி.

கிட்டத்தட்டப் பாயைச் சுரண்டும் நிலைக்குப்போய்க்கிட்டு இருந்தேன்:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

இங்கேதான் மனம் நிறைய நிம்மதியா சேவிக்க முடியும். துளசிதளத்தில் நோ ஜருகு, நோ தள்ளு முள்ளு:-))))

said...

ஜீரா,


கோபாலுக்கு மன உறுதி அதிகம்!

சிதம்பரம் கொஸ்துவைக்கூட விட்டு வைக்கலையே:-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தோமால சேவைதான் தெரியும். திருப்பதியிலே கிடைச்சது. ராத்திரி ரெண்டரை மணிக்குக் கோவிலில் இருந்தோம்.

தோமால தோசை புதுசா இருக்கே!! கிடைச்சாலும் கண்ணால் மட்டுமே தின்னுவேன். என் ராசி அப்படி:(

said...

வாங்க ரஞ்ஜனி.

எனக்கும் இனி எப்போன்னு இருக்கு. சரியாப் பார்க்கலை. நோ திருப்தி அட் ஆல்:(

said...

வாங்க மாதேவி.

ஆஹா... அறையில் இருந்தே கோபுர தரிசனமா!!! சூப்பர்!

திருவரங்கத்தில் அறை எடுத்துருக்கலாம்னு நானும் இப்போ நினைச்சுக்கிட்டே இருக்கேன்.

இனி எப்போ வாய்க்குமோ தெரியலை:(

said...

வாங்க சசி கலா.

அதென்னமோ இந்த முறை பிரசாத ஸ்டால் இருக்கும் பக்கம் கூட தலையைத் திருப்ப விடலை ரெங்கன்.

'அதான் நீ ஒன்னும் வாய் திறக்கமாட்டியே... அப்ப எதுக்குக் கண்ணுலே காமிக்கணும்? மத்தவங்களுக்கு வயித்து வலி வர்றதுக்கா?' ன்னு பெருமாள் நினைச்சுட்டான்!!!

said...

வாங்க கே ஆர் எஸ்.

பதிவுலக ஆழ்வார் வருகை புரிந்தவுடந்தான் பதிவே நாலாயிரத்து ரெண்டாம் ப்ரபந்தம் ரேஞ்சுக்குப் போயிருமாம். எங்க ரெங்கன் சொல்லச் சொன்னான்:-)))

முகம் பார்த்து (என்) மெய் மறந்துபோனதால் அவன் உதரத்தில் கயிற்றின் அடையாளம் பார்க்கலைன்னு ஜம்பமாச் சொல்லிக்க ஆசைதான்.

ஆனா.....இங்கே கையைப் பிடிச்சு இழுத்துக் கடாசாம விட்டாலும் கூட, நகர்ந்துக்குங்கோன்னு மெலிசான விரட்டுதல் இருக்கே:(

பெருமாள் குளிக்கிறச்சே கோபால் போய் பார்த்து வந்து சொல்லட்டுமேன்னு இருக்கேன்:-)))

சூரி சார் திரிச்ச கயிறு இன்னும் நல்லா இருக்கே:-)))))

(அ)களங்கன் கலங்க(ன்) வச்சுட்டானே:-) கோவிலில் கிடைச்ச வரைபடம் ஒன்னு இன்றையப் பதிவில்
'முப்பது கைகளோடு நரசிம்ஹர்' போட்டுருக்கேன் பாருங்க.

அப்படியே அங்கே வந்து அந்த முப்பதுக்கு விளக்கம் சொல்லவேணுமாய் விண்ணப்பிக்கிறேன்.

said...

கருட மண்டபத்தில் சமீபத்தில் பெருமாளின் திருமஞ்சனம் காணப் பெற்று, தீர்த்தம் சடாரி கிடைத்தது.

கருடனுக்கு பக்கத்தில் தானே நம்ம ஆண்டாள் நிப்பாங்க. 6 மணிக்கு பணி முடிந்து வெள்ளைக் கோபுரம் வழியாக அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க...:)

தைலக்காப்பு சமயத்தில் போனால் திருவடி சேவை கிடைக்காது. எனக்கும் ஒருமுறை அப்படி ஆனது. மீண்டும் இன்னொரு நாள் சென்று தான் தரிசித்தேன்.

பெருமாளுக்கு அம்சி பண்ணுவது ”அரவணை” என்னும் சாதமும், அகத்திக் கீரையும், சீரான்னம், தோமலை தோசை, சப்பாத்திக் கூட துளுக்க நாச்சியாருக்காக...

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

முதலிரண்டு முறை போனபோது ஆண்டாளைப் பார்க்கவே இல்லை. ரெங்கா எனக்கில்லை என்று தவிச்சேன்.

ஆனால் மூணாவது முறை கண்ணில் காமிச்சுட்டான்:-)

பத்து நாள் கேம்பில்தான் மற்றதை எல்லாம் அனுபவிக்கணும். சீக்கிரம் கூப்பிடுடா ரெங்கா....