Wednesday, April 10, 2013

தைய்யல் நாயகி இங்கே யாரு?


குழிப்பணியாரச் சட்டி, ஆப்பச் சட்டி, வால் கரண்டி, இரும்பு வாணலி, தோசைக்கல்லு, அருவாமணை, தேங்காய்த்துருவி,மத்து, மோர் மத்து, கேரட் துருவி, பூரிக்கட்டை , கோலாட்டக்குச்சி, இப்படி  குறிப்பிட்ட சிலபல சாமான்களுக்குக் கோவில்கடைகளை விட்டா  வேற  பெஸ்ட் சாய்ஸே கிடையாதுன்னு அடிச்சுச் சொல்லலாம். நான் சொப்பு வச்சு விளையாடிய காலத்தில் அழகழகான வண்ணங்களில் மரச்சொப்புகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கடைகளில்  இருந்துதான் வாங்குவோம். அப்படியே அண்ணனுக்கு  பம்பரம், கோலிக்குண்டுன்னு   ஒரு பை நிறைச்சுச்  சாமான்கள்  வாங்கியாருவாங்க  எங்க அம்மம்மா.

அடடா.... பல்லாங்குழியைச் சொல்ல விட்டுப்போச்சே:( மகள் சின்னவயசா இருந்தப்ப இந்தியப்பயணம் ஒன்னு வாய்ச்சது. அவளுக்கு துலாபாரம் கொடுக்கும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் போறோம். திரும்பி வரும்போது  கோவை, திருச்சி, ஸ்ரீரங்கம் தஞ்சாவூர்  மதுரைன்னு  வர்றோம். கோவில்கடையிலே மரச்சொப்பு கேட்டால் கிடைக்கலை! எவர்சில்வருக்கு மாறியிருந்தாங்க.  பல்லாங்குழி? சுத்தம். பாத்திரக்கடையில்  கேளுங்கம்மா  வாம்! முந்தி இங்கேயே பாத்திரக்கடைகள் அண்டா,குண்டா, குடம், தவலை,கோதாவரி குண்டுன்னு கொட்டிக்கிடக்கும். அதெல்லாம் அம்பேல். வெறும் ப்ளாஸ்டிக் பொம்மைகளை நிறைச்சு வச்சுருக்காங்க.

 கடைசியில் கோவிலுக்கு வெளியே  மேலமாசி வீதியோ என்னமோ  ஒரு பாத்திரக்கடையில் விசாரிச்சா அங்கே எவர்சில்வர் பல்லாங்குழி. கோபால் அதை வாங்கக்கூடாதுன்றார். காரணம்? வெயிட்  கூடிப்போகுமாம். எக்ஸ்ட்ரா லக்கேஜுக்கு  அழ இந்த முறை காசில்லையாம்!  ஒரு கிலோ இருக்குமுன்னு ஆடுனார்.  கடைசியில் பார்த்தால்  200 கிராம்.வெறும் தக்கை:-)  அப்புறம் சென்னை மெரினாவில் அதுக்கு சோழி வாங்கித் தந்தாங்க நம்ம பூனா  ஃப்ரெண்ட் (கும்மோணம்) கோமளா மாமி. அது கூடவே கொஞ்சம் பெருசா  சங்கு ஒன்னும் ஏழெட்டு மீடியம் சைஸ் சங்குகளும் கிடைச்சது.  இதுதான் கடைசியில் கிலோவுக்கு மேலே வெயிட்டாச்சு. அந்தப் பொதியை  கோபாலுக்குக் காமிக்காம பொட்டியில் அடியில் போட்டு வச்சேன்:-))))


வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  பழசும் புதுசுமா எண்ணங்கள்  தலைக்குள் சுழலுது. நல்லவேளையா  இங்கேயும் ப்ளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சம் இருந்தாலும் கோவில்கடை ஸ்பெஷல்ஸ் நிறைய இருக்கு! ரங்கவிலாஸ் முற்றம் ஜேஜே!!

  மேலே இருக்கும் அலங்காரத்தில்  நித்யசூரிகளுடன் வைகுண்ட வாசனாக, பாற்கடலில் பாம்புப்படுக்கையில் கிடக்கும் பரந்தாமனாக,  அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்த தேரோட்டியாக, லக்ஷ்மிவராக மூர்த்தியாக பலவிதங்களில் போஸ் கொடுத்துக்கிட்டு இருக்கார்  நம்ம பெரும் ஆள்.

மண்டபத்துத்தூண்களில் யாளியும் யானையுமா நாலு.  இப்பத்தான் கவனிச்சுப் பார்க்கிறேன். முற்றத்தின் நடுவில் இருக்கும் நாலு கால் மண்டபம் திருவந்திக்காப்பு மண்டபம். நம்பெருமாள்  அழகியமணவாளர் ஊர் சுற்றிட்டு  உள்ளே வரும்போது இங்கேதான் அவருக்கு திருஷ்டி சுத்திட்டு உள்ளே கூட்டிக்கிட்டுப் போவாங்க.



கண்ணால் கடையைக் கண்டபின்னும் ஒன்னுமே வாங்காம எப்படின்னு யோசனை.  கோபாலுக்கு ஒரே திக் திக். எங்கே  தோசைக்கல்லு, இரும்பு வாணலின்னு ஆரம்பிப்பேனோன்னு !  அஞ்சேல் என்று அபயம் காமிச்சுட்டு  நகை நட்டுன்னு அலங்காரச் சாமான்கள் விக்கும் கடையில் ரெண்ட ரெண்டு ராக்கொடி . என்ன இருந்தாலும்  பழைய ஸ்டைல் சமாச்சாரங்கள் தனி அழகுதான்.


மற்ற ஆழ்வார்கள் எல்லாம் பெருமாள் கோவில்களைத்தேடிப்போய் பாடல்கள் பாடி அவற்றின் புகழை உயர்த்திக்கிட்டு இருந்த  காலக்கட்டத்தில்  தொண்டரடிப்பொடி ஆழ்வார்  மட்டும் ஸ்ரீரங்கத்தையும் ரெங்கனையும் விட்டு வேறெங்கேயும் போக விரும்பாமல் இருந்தார். காலம் எட்டாம் நூற்றாண்டு. இயற்பெயர் விப்ரநாராயணன்.  பூந்தோட்டம் அமைச்சு  பூமாலைகளாலும், வாய் நிறையப் பாமாலைகளாலும் ரெங்கனை, ரெங்கனை மட்டுமே  ரெங்கனுக்கு  மட்டுமே சூட்டிமகிழ்ந்தவர்.

பெருமாளுக்குத் திருப்பள்ளியெழுச்சியாப் பத்துப்பாடல் பாடியவர். முதல்பாட்டு இது.

கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.

இதுமட்டுமா......  திருமாலை என்று திருமாலை மட்டும் பாடி இருக்கார் பாருங்களேன். 45 மாலைகள்! நமக்கெல்லாம் ரொம்ப பரிச்சயமான பாட்டு இது, இல்லை!

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

ஒரே போடாப் போட்டுட்டார்..... வேற எதுவுமே வேணாம், ரெங்கா நீயே போதும்!!!!

குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை யிலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவு ளெந்தை
அரவணைத் துயிலு மாகண்டு,
உடலெனக் குருகு மாலோ
எஞ்செய்கே னுலகத் தீரே.

எப்படிக் கிடக்கிறான்னு தெள்ளத்தெளிவா பாடியது இப்படி!!!

கங்கயிற் புனித மாய
காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள்மா லிறைவ னீசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யேனே.

காவிரியின் பெருமை!  இவள் கங்கையை விட மிகப் புனிதமானவளாம்!!!!

நல்லவேளை, அப்பவே  சாமிகிட்டேபோய்ச் சேர்ந்துட்டார். காவிரியின் இப்போதைய நிலையைக்  கண்டிருந்தால் அவர் கண்ணில் ரத்தமே வழிந்திருக்கும்:(

இவருக்கான சந்நிதியின் படிக்கட்டில் உக்கார்ந்துருக்கோம்.  வழக்கம்போல் இதுவுமே சாத்தி இருக்கு. ஸ்ரீ மதுரகவியாழ்வார், யோகநரசிம்ஹர், அஷ்டபுஜ வேணுகோபாலன், சத்யபாமா, ருக்மிணி எல்லோரும் உள்ளே இருக்காங்க.


அஷ்ட புஜம் இருந்தால் கொள்ளாம் என்ற  நினைப்போ!!! செல்லுக்கொன்னு, டிவி ரிமோட்டுக்கு ஒன்னு,  மடிக்கணினிக்கு ஒன்னுன்னு  ஜமாய்ச்சுருக்கலாம்.( அப்படியே  ரெண்டு கைகளை  எனக்கு வெங்காயம்
உருளைக்கிழங்கு உரிச்சு, வெட்டிக் கொடுக்கன்னு தனியா வச்சுக்கணும்)

தங்கத்தமிழர் ஃப்ரம் தலைநகர்   நம்ம வெங்கட் நாகராஜ் ,மகளோடு வந்துட்டார். நான் முன்னாலே போறேன் நீங்க பின்னாலே வாங்கன்னார். மேற்குப்பக்கமாச் சுத்திச்சுத்தி  அடுக்கு மாடிக் கட்டிடத்துக்குள் நுழைஞ்சோம். மாடியேறிப்போனவுடன் இன்னொரு பதிவர்  வாய் நிறைய சிரிப்புடனும்  கண் நிறைய மகிழ்ச்சியுடனும் வரவேற்றார்.  கோவை2தில்லியின் உரிமையாளர் ரோஷ்ணியம்மா!!!

குட்டிப்பொண்  ரோஷ்ணி வரைவதில் கெட்டிக்காரி!  தில்லிப் பள்ளியில்  இருந்து  இங்கே வந்து உள்ளூர்ப்பள்ளியில் சேர்ந்து  படிக்கும் சுட்டிப்பெண்.  முதலில்  கொஞ்சம் மிரண்டாலும்  பத்து நிமிசத்துலே பயம் போயிருச்சு. பாவம் சின்னப்பெண், யானையைக் கண்டால் பயம் வரத்தானே செய்யும், இல்லையா?

உக்காரச்சொல்லி உபசரிச்சுக் கையில் ஃபேனைக் கொடுத்தாங்க.:-) நேத்துப் பேசிக்கிட்டே இருந்து பாதியில் விட்டுப்போன பேச்சைத் தொடர்வது போல நாங்கள்  பேசிக்கிட்டே இருக்கோம்.பதிவர் மாநாடு களை கட்டுது!  அப்போ  ஒரு  மூத்த தம்பதி வந்து  சட்னு தரையில் உக்கார்ந்துட்டாங்க.  (கட்டிலில் உக்கார்ந்துருக்கேனேன்னு  எனக்கே பேஜாராப்போச்சு) .வணக்கம் சொன்னோம். வெங்கட்டின் பெற்றோர்.  அவுங்களுக்கும்  கை ஃபேன்  கொடுத்தார் வெங்கட்.  அம்மா தயவில்  கைகளுக்கு நல்ல பயிற்சி.

ரொம்ப மோசம் நான். புது மனிதர்கள் என்ற  பயம் வேணாமோ? அவுங்களையும் பேச்சில் இழுத்தாச்சு.  என்னைவிட அவுங்க இன்னும் ரொம்பவே மோசம். அப்பதான் முதல்முதலாப் பார்க்கிறோம்.  ஆனால் தினம் பார்க்கும் பக்கத்து வீட்டுக்காரங்ககிட்டே (??!!)  பேசிக்கிட்டே இருக்காங்க.  இந்த இணைய நட்பும் பதிவர் குடும்பமும், பதிவரின் எக்ஸ்டெண்டட் ஃபேமிலியும் எப்படிப் பின்னிப் பிணைஞ்சுருக்குன்னு  பார்த்தால்..... 'இது என்னாடி அதிசயம்!!' என்று கன்னத்துலே  கை வைச்சுக்கணும்:-)

அப்பா, வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதுக்காகச் சும்மா இருப்பாரா என்ன?  சோஸியல் சர்வீஸ்  செய்யக் கிளம்பியாச்சு.  அந்தக் குடியிருப்பில் இருக்கும் மூத்தோருக்கு  பவர் பில்(?? அதான் பவரே இல்லையே அப்புறம் என்ன பில்?)  கட்டுவது ,  பில்டிங் சொஸைட்டி சம்பந்தமான  வேலைகளுக்கு ஆலோசனை போன்றவைகள். ' இதென்ன பெரிய கஷ்டம்? நம்ம வேலைக்கு நாம் போகுபோது கையோடு அவுங்களுக்கும் உதவுனால் ஆச்சு'ன்றார்.   நாட்டுலே மழை பொழிய இவர்போல்  இருப்பவர்கள்தான் காரணம் !

இதுக்குள்ளே ரோஷ்ணியம்மா ஏலக்காய் டீ போட்டுக்கொண்டு வந்து  ஒரே உபசாரம். வேணாமுன்னு சொல்லலாமுன்னா...வாசனை இழுக்குதே!!

கொஞ்சநேரத்தில் கை பழகிப்போச்சு. வாய் பாட்டுக்குப் பேச கை  அதுபாட்டுக்கு விசிறிக்குது. வீட்டுக்கு வாங்க, காத்து அப்படியே பிச்சுக்கிட்டுப் போகும் என்றார் அப்பா. மேல் மாடியில்  வீடு.
படிகளேறிப் போனோம்.(நல்லவேளை)  ஒரு மாடிதான். பால்கனி கதவின் வழி உண்மையாவே அருமையான காற்றடிக்குது. கண் எதிரே பரந்து கிடக்கும் கொள்ளிடம். மெரீனாவுக்குப் போட்டியா ஒரு பீச்:-)))

தலையைத் திருப்பியவள் .... பார்த்த விழி பார்த்தபடி நிக்க, ' யார் இங்கே தைய்யல் நாயகி?'ன்னு கேட்டேன்!   ஹப்பா..... இதே  போலத்தான் ஒன்னு  வச்சுருந்தேன்.  என் ஆதிகாலத் தோழி. என்னை  அரை டாக்குட்டர் ஆக்கியது இதுதான். ஆயிரம் துணியைக் கெடுத்துருக்கேனே:-)

நாந்தான்னாங்க அம்மா. (ரோஷ்ணியம்மா , வெங்கட் அம்மான்னு அங்கே ரெண்டு அம்மாக்கள்!) ப்ளவுஸ் ஸ்பெஷலிஸ்ட்.  தனக்கும் மகள்களுக்கும் தைச்சுச்சுவாங்களாம்.  இப்போ  மருமகளுக்கும் பேத்திக்கும்!  அப்டிப்போடுங்க!  எத்தனை மருமகளுக்கு  இந்த பாக்கியம் கிடைக்கும் சொல்லுங்க!

மருமகள்தான் வீட்டின் உண்மையான மகள். அவுங்க இல்லேன்னா நாம் இல்லை . மருமகளுக்குத்தான் செய்யணும்னு  என் ரெண்டு செண்ட்டைச் சொன்னேன்:-))))  அதெப்படி வாயைத் திறக்காம தலையை ஆட்டுவது?

முதல்நாள்  மாலை  ரெங்கதரிசனம் கதையைச் சொல்லிட்டு  இப்படிக் கூட்டம் இருக்கே, எப்படிதான் உள்ளூர்க்காரங்க சாமி பாக்கறதுன்னேன். அதுக்கெல்லாம் வேற டைமிங் இருக்குன்னு  குண்டைத் தூக்கிப்போட்டாங்க  ரோஷ்ணியம்மா.  எப்ப 'அவர்  ஃப்ரீ'யா இருக்காரோஅப்பப்போய் சட்னு பார்த்துருவாங்களாம். அட! எப்போ ஃப்ரீன்னு  எப்படித் தெரியும்?  அதெல்லாம் நியூஸ் வந்துருமாமே. ' கூட்டமே இல்லை.சட்னு போங்கோ'ன்னு. கதவைப் பூட்டிக்கிட்டு  அப்படியே போயிட்டு வந்துருவாங்களாம். கோவிலுக்குப் போக ஷார்ட் கட்  வேற இருக்கு. ஹைய்யோன்னு  இருந்துச்சு எனக்குன்னு சொல்லணுமா?

ஆமாம்.கோவிலில் 'அன்னமூர்த்தி'யை தரிசனம் செஞ்சீங்களான்னார் அப்பா.  ஙேன்னு  முழிச்சேன். கே எம் ஒன்னும்சொல்லலை:(  கட்டாயம் தரிசனம் செய்யணும். நம் வாழ்நாள் முழுசும் உணவுக்குக் குறையே  இருக்காதுன்னார். அப்படியே பேச்சு உணவின் ஒருபகுதியான காஃபிக்குப்போச்சு.  ஸ்ரீரங்கம் ஸ்பெஷலுன்னா  முரளி காபிதானாம்.  அப்படியொரு அட்டகாசமான  காஃபி. விலை ரொம்ப மலிவு. முந்தியெல்லாம் அஞ்சே ரூபாய்தானாம். சும்மா வாக் போறமாதிரி போய்  'வயிறு வேணாமுன்னாலும்  அதை சும்மாக்கிட'ன்னு சொல்லிட்டு  ஒரு காஃபி குடிச்சுட்டு வந்தாத்தான் மனசுக்கு மகிழ்ச்சின்னார் வெங்கட்.

பெரியவுங்க ரெண்டு பேரும் ஒல்லிக்குச்சியா இருக்காங்க. அப்படியே காத்துலே மிதந்து  போகும் உடம்பு.  சட்னு உக்காரவும்  எந்திரிக்கவும்  கால்நொடி . ரொம்பவே எளிய  மனசு.  அளவில்லாத அன்புன்னு  மகனையும் மருமகளையும் அப்படியே கொண்டிருக்காங்க!

இன்னும் கொஞ்சநேரம் இருந்து கதையளக்க ஆசையா இருந்துச்சு.  ஆனால் மணியோ 12. பவர்   வரும் நேரம்.   . அது இருக்கும்போதே  அவுங்க எஞ்சாய்  பண்ணனும்.   கிளம்பினோம். நேராத் திருச்சி.  அதே சங்கீதா.  மினி மீல்ஸ் ரெண்டு.  கரெக்டா தட்டுக்கு அந்தப்பக்கம் இருப்பவரும் போட்டோவில்  விழுந்துடறாரே! நம்பள்கி என்ன சொல்லப்போறாரோ:-)))))

தொடரும்............:-)






46 comments:

said...

உங்கள் [எழுத்து] நடைக்கு ஒரு சல்யூட்! போற போக்கிலே நானும் கோவிந்தனை பாரட்ட ஆரம்பித்து விடுவேன் போலிருக்கு...! அவருக்காக இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் இடுகை உண்டு...!

said...

//அருவாமணை,தேங்காய்த்துருவி,மத்து, மோர் மத்து, பூரிக்கட்டை , கோலாட்டக்குச்சி,இப்படி குறிப்பிட்ட சிலபல சாமான்களுக்குக் கோவில்கடைகளை விட்டா வேற பெஸ்ட் சாய்ஸே கிடையாதுன்னு அடிச்சுச் சொல்லலாம்.//


இதில் அருவாமனையைத் தவிர மீதி எல்லாம் எனக்கு அத்துப்படி! எல்லாம் என் மனைவி மூலமாகத்தான்.

said...

//மத்து, மோர் மத்து//

ஆறு வித்தியாசம் சொல்லுங்க:)

//அருவாமணை, தேங்காய்த்துருவி//

அதென்ன துருவி?
துருவாமணை-ன்னு சொல்லுங்க!
அருவாமணை போலவே துருவாமணையும் உண்டு!

அது சரி, அது மனையா? மணையா? சொல்லுங்க பார்ப்போம்:)

ரங்க விலாச மண்டபம் போலவே, தெற்கு வாசல் கடைகள் மற்றும் கீழச் சித்திரை வீதிக் கடைகள்;
அத்தனை பாத்திரமும் எப்படித் தான் விப்பாங்களோ?:)

துருவலகு, சாந்தம்மி, நாலறைப் பெட்டி, சேவை அச்சு - இன்னும் என்னென்னமோ!

மரச் சொப்பு கூட விக்கும்; ஓலைக் கூடையில்!
ஊதா வண்ண உரல் சொப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்:)

மரப் பல்லாங்குழி கெடைக்கலீயா டீச்சர்?

மீன் உருவத்தில், சோழி போட்டு வச்சிக்க கீழறை கூட இருக்கும்!
ஏழு + ஏழு = பதினாலு குழிக்கும் ஓவியம் கூட உண்டு;

10 குழிக்கும், தசாவதாரம் வரைஞ்சி இருப்பாங்க;
கடேசீ நாலு குழிக்கும் - திருவரங்கம், திருமலை, காஞ்சி, மேலக்கோட்டை -ன்னு நாலு பெருமாள் படம் போட்டிருக்குமே!

//குழிப்பணியாரச் சட்டி, ஆப்பச் சட்டி//

அரங்கத்தம்மா, ஆப்பம் ரெடி, பள்ளி எழுந்தருளாயே!:)

said...

இந்தப் பதிவில் தான் அரங்கனைப் பார்த்த திருப்தியே எனக்கு வந்தது;

Lemme say once more,
டீச்சர், ஒங்க கிட்ட புடிச்சதே, இதான்;

* கோயிலுக்குப் போவும் போது, ஹோமம்/ பரிகாரம் ன்னு கண்டதையும் பண்ணாம
* இறைவனை மட்டுமே கண் குளிர அனுபவிச்சிட்டு,
* அவனைச் சுத்தி இருக்குற இடமும், தூணும், கொட்டாரமும், குளமும், கடையும், யானையும், பறவையுமா அனுபவிக்கிறீங்க பாருங்க... அதான்! I like it:)

ஆழ்வார்கள், இப்பிடித் தான் அரங்கனை அனுபவிச்சாங்க!
- ஒரு ஹோமம்/ பரிகாரம் -ன்னு பண்ணினாங்களா? No!
- தங்க ரதம்/ வெள்ளிக் கவசம் -ன்னு உண்டியில போட்டாங்களா? Never!

கோயிலைச் சுத்தி இருக்குற வீடு, தோட்டம், தொரவு, யானை, பறவை -ன்னு தான் பாடுறாங்க பாசுரத்தில், கூடவே இறைவனையும், சில வாழ்வியல் உண்மைகளையும்!

மன்னு தண் பொழிலும், வாவியும் மதிளும், மாட மாளிகையும் மண்டபமும்...

மாதர்கள் வாழும், மாட மா மயிலைத், திருவல்லிக்கேணிக் கண்டேனே!

இவரு, "மாதர்கள் வாழும்" -ன்னு வேற எதையோ பாக்குறாரா? ஆழ்வார் சைட் அடிக்கிறாரா? -ன்னு சந்தேகம் எனக்குப் பல நாள் உண்டு:)
---

எங்கள் அப்பர் பெருமான், ஈசனைப் பாடாம, "காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன்" -ன்னு பாடுவாரு திருவையாற்றில்!

மனசாரச் சொல்லுறேன்; ஒவ்வொரு கோயிலும் ஒத்தை யானையா வளர்க்காம, சோடி யானையா வளருங்கப்பா...
பாவம், ஒங்க பூசைக்கு, அதுங்க என்ன பண்ணும்? வாழ்க்கை பூராத் தனிமை தானா?
"காதல் மடப் பிடியோடு களிறு" = அப்பர் பதிகம் ஞாபகம் வந்து வாட்டுது;

said...

அரங்கனைப் பாடும் வாயால் - வேறோர்
குரங்கனைப் பாடேன்

-ன்னு சொன்ன ஆழ்வார், தொண்டரடிப்பொடிகள்:))

இவரு, "குரங்கன்" -ன்னு சொன்னது, ஏதோ சைவ-வைணவப் போட்டி அல்ல!
திருப்பதி ஏழு மலையானைத் தான் "குரங்கன்" -ன்னு சொல்லுறாரு:)
திருமலையில் ஒரு காலத்தில் நெறைய குரங்கு இருக்கும்-ல்ல?

அதாச்சும், இவருக்கு அரங்கனிடம் மட்டுமே அத்தனை ஊற்றம்;
வேறு எந்த திவ்ய தேச எம்பெருமானையும் பாட மாட்டேன்-ன்னு அப்பிடியொரு உறுதி;

இதனால், அரங்கன் மட்டுமே "பதின்மர் பாடும் பெருமாள்" ஆனான்;
திருவேங்கடமுடையான், just boundary miss:) ஒன்பதின்பமர் பாடும் பெருமாள் ஆயீட்டான்!
----

இந்த "உறுதி" ஏதோ வீம்பு-ன்னு நினைச்சிக்காதீங்க;
ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே, அந்தணர்களைப் "புலையர்"-ன்னு தைரியமாத் திட்டுறாரு-ன்னா, இவருக்கு எம்புட்டு "உறுதி"!!!

அரங்கனின் அடியவர்களைச் சாதி பேதம் பாராட்டி, ஊர்வலத்தில் தள்ளி வைக்கும், போக்கைப் பாக்குறாரு; பொங்கிட்டு வருது; சும்மா வெளாசுறாரு...

அமர ஓர் அங்கம் ஆறும்
வேதம் ஓர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவர் ஆய
சாதி அந்தணர்கள் ஏலும்

நுமர்களைப் பழிப்பார் ஆகில்
நொடிப்பதோர் அளவில் ஆங்கே
"அவர்கள் தாம் புலையர் போலும்
அரங்க மா நகருளானே!"

நமக்கெல்லாம் "பச்சைமா மலை போல் மேனி...
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே -தானே தெரியும்?
அதே பாசுரத்தில் தான், இந்தப் புரட்சிப் பாசுரமும் வருகிறது!
---

அதென்ன "தொண்டர்-அடிப்-பொடி"?

ஆழ்வார் ஆவதற்கு முன், தான் செய்த பழைய பெண் மோகம்/ பாவம் எல்லாம் தீரணும்-ன்னா,
ஹோமம்-பரிகாரம் பண்ணுங்கோ -ன்னு வேத வித்துக்கள் சொல்ல...

அதெல்லாம் வேணாம்...

எத்தனையோ அடியார்கள், அவனைப் பாக்கும் போது, கண்ணில் நீர் தளும்புது...
அவர்கள் சிந்தின நீரிலும், நடந்த கால் மண்ணிலும்,
நான் உருண்டு, அங்கப் பிரதட்சிணம் செய்கிறேன்! அவர்கள் கண் நீரும், கால் மண்ணும், என் பாவங்களைக் கழுவும்!

தொண்டர்களின் - அடி(கால்) - பொடி(தூசு/மண்)
= இதுவே தொண்டரடிப்பொடி ஆழ்வார்!

said...

பெரும் ஆள் தரிசனம் அருமையா இருந்துச்சா? மதுரை மீனாக்ஷி கோயில் கடைகள் என் சின்ன வயசு ஞாபகங்கள்ல உறைஞ்சு கிடக்கு. இப்ப எப்படி இருக்கோ தெரியல.. போய் நாளாச்சு டீச்சர்! வெங்கட் குடும்பத்தின் படங்கள் அழகா இருக்குது- அவங்க மனசு போலவே!

said...

வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வணக்கம்;

அவர்கள் பெற்றோர் முகத்தில் தான் எத்தனை தெளிவு/இன்பம்?
அரங்கன் ஊரிலேயே வசிக்கும் பேறு-ன்னா சும்மாவா?
சாமி மாடத்தில் Gas Cylinder-ன்னு போலித்தனமில்லா அழகு!

Best wishes to that lil' girl Roshini!
திருநீற்றுக் கீத்தும், ரெட்டைப் பின்னலுமா, குட்டிப் பொண்ணு சூப்பர்;

said...

மரச்சொப்புகள் அம்பாசமுத்திரத்திலிருந்து தான் செய்து எல்லா ஊருகளுக்கும் வரும் விற்பனைக்கு.
மதுரையில் இப்போது பிளாஸ்டிக் சமையல் சாமான்கள் அழகாய் கிடைக்கிறது. மரச்சொப்புகளும் கிடைக்கும்.

பல்லாங்குழி மரத்தில் மீன் வடிவத்தில் எல்லாம் கிடைக்குமே!
அம்மம்மாவின் நினைவுகள் வந்து விட்டதா?

தலைப்பைப் பார்த்தவுடன் ஸ்ரீரங்கத்தில் தையல் நாயகி எங்கே வந்தார்! என்று நினைத்தேன்.

வெங்கட் அவர்களின் தாயார் என்பது தெரிந்து கொண்டேன்.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பது சரியாக இருக்கிறது.
வெங்கட் அப்பா அவர்களின் உதவும் மனப்பான்மைக்கு வணக்கங்கள்.
ரோஷணி ஓவியம் வரைவதில் கெட்டிக்காரி.

ஆதி, வெங்கட், ரோஷணியை இருமுறை டெல்லியில் சந்தித்து இருக்கிறேன். இனிமையானவர்கள்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் பகிர்வு அருமை.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் பற்றி கண்ணபிரான் ரவி அவர்களின் விளக்கம் அருமை.





said...

நல்லதொரு குடும்பம். அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள் எங்களுக்கு.

மரச்சொப்பு நெல்லை கோவில் வாசலில் இப்போதும் கிடைக்கின்றன எனத் தெரியும். அதே ஓலைபெட்டியில் அதே திருவை, உரல், அம்மியோடு வருகின்றனவா என்பதை ஒரு முறை வாங்கிப் பார்க்க வேண்டும்.

said...

கோயில் கடைகள் பற்றிய விவரங்களும் படங்களும் பழைய நினைவுகளைக் கிளறித்தான் விட்டன. கோபால் சாருக்கு அஷ்டபுஜம் இருந்தால் எதெதற்கு ஆகுமென்று போட்ட மனக்கணக்கு முறுவல் தந்தது.

பதிவர் சந்திப்பு ஏலக்காயாய் மணக்கிறது. நுணுக்கமான தகவல்களையும் கவனித்து எழுதும் உங்கள் பாங்கு கண்டு எப்போதும் போல் எனக்கு பிரமிப்புதான்.

said...

இனிமையான குடும்பம் அறிமுகம்... சந்தோசம்... நன்றி... மதுரை மீனாட்சியம்மன் கோவில் கடைகளில், வீட்டுக் தேவையான (புதிய) பொருட்கள் கிடைக்காதது எதுவும் இல்லை...

said...

ஆழ்வார் தரிசனம் நன்று,.
ஒருத்தரைப் பாடினாப் போதும்பா.
அது எல்லாருக்கும் போய்ச் சேரும்.

ஸ்ரீவேணுகோபாலனுக்கு எட்டு கைகள் தானா. உங்களவருக்கு அது போறாதே!!அச்சு அசல் கோபால் போஸ்:)

காரைக்குடியில் கூட பழுக்கா சொப்பு கிடைத்தது. பேத்திகளுக்குக் கொடுத்துவிட்டேன்,.

ராக்கொடி படம் எங்கே.
மத்து, கீரை மத்து,
மோர் கடைகிற மத்து.,
வெண்ணெய் எடுக்கிற மத்து. மூணுதான் எனக்குத் தெரியும்.

said...

பெரியவுங்க ரெண்டு பேரும் ஒல்லிக்குச்சியா இருக்காங்க. அப்படியே காத்துலே மிதந்து போகும் உடம்பு. சட்னு உக்காரவும் எந்திரிக்கவும் கால்நொடி . ரொம்பவே எளிய மனசு. அளவில்லாத அன்புன்னு மகனையும் மருமகளையும் அப்படியே கொண்டிருக்காங்க!

பிரமிப்பு..!

said...

//அதே ஓலைபெட்டியில் அதே திருவை, உரல், அம்மியோடு வருகின்றனவா என்பதை ஒரு முறை வாங்கிப் பார்க்க வேண்டும்.//

@ராமலக்ஷ்மி.. இப்பவும் கிடைக்குதுங்க. தம்பி பெண்களுக்கு வாங்கிக்கொடுத்தேன்.

துள்சிக்கா.. ராக்கொடியைக் கண்ணுலயே காமிக்கலை :-))

//கதவைப் பூட்டிக்கிட்டு அப்படியே போயிட்டு வந்துருவாங்களாம். கோவிலுக்குப் போக ஷார்ட் கட் வேற இருக்கு. ஹைய்யோன்னு இருந்துச்சு//

எனக்கும்தான். இப்படியொரு கொடுப்பினை இருக்கவும் கொடுத்து வெச்சுருக்கணும்.

பதிவர் சந்திப்பும் அழகுதான். ரோஷ்ணி அப்பா ஜாடைன்னு நினைச்சுட்டிருந்தேன். ஊஹும்.. பாட்டி ஜாடை :-))

said...

தங்களையும் கோபால் சாரையும் சந்திச்சதுல மிக்க மகிழ்ச்சி.

எங்க குடும்பத்தை பற்றி நிறைவா சொல்லியிருக்கீங்க...:)

அம்மா புண்ணியத்துல ரொம்ப நாளைக்கு கை ஃபேன் உபயோகிக்க முடியலை. அதனால இன்வர்ட்டர் போட்டாச்சு....:)) இல்லையின்னா கொளுத்தற இந்த வெய்யில்ல...அவ்வளவு தான்...:)

ராக்கொடியை எங்கிட்டயும் காட்டலியே....

கோயில் கடைகள்ல இருக்கற சாமான்களை பார்க்கும் போது ஆசையா தான் இருக்கும்...:) பித்தளையில் அழகான குதிரை வண்டி, பாவை விளக்கு, சைக்கிள், கல் சட்டி இப்படி பல ஐயிட்டங்கள் கண்ணைக் கவரும், விலையும் எகிறும். இங்க எப்பவுமே வெளிய விட விலை கூடுதல் தான்...:)

பெருமாளை பார்ப்பது அபூர்வம் தான். ஆனால் சட்னு கிளம்பிப் போன சமயங்கள் தான் அதிகம்...:) தாயாரை தினமுமே பார்ப்பேன். சக்கரத்தாழ்வாரை பார்த்து நாலு பிரதட்சணம் செய்து விட்டு வசந்த மணடப வழியில் காற்றாட நடந்து வந்து தாயாரை பார்த்து விட்டு வெளியில் பத்து நிமிடங்கள் அமர்ந்து இயற்கை காற்றையும் கோபுர அழகையும் தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வருவது எனது தினசரி வழக்கம். வழியில் தோன்றினால் பன்னீர் சோடா ஒன்று குடிப்போம்.
பன்னீர் சோடா குடித்தீர்களா? திருச்சி ஸ்பெஷல்...:)

said...

டீச்சர்,
இம்புட்டு திருவரங்கப் பதிவிலும், ஒரேயொரு குறை வைக்குறீங்களே:(

ஒங்க மூனாவது படம் பாருங்க!
அந்த மண்டபம் முழுக்கவே "நம்-ஆழ்வார்" தான்!
அவனைப் பத்தி ஒன்னுமே சொல்லலையே?

"அவன்" -ன்னு ஆழ்வாரைச் சொன்னதுக்கு கோச்சிக்காதீக;

32 வயசுப் பையன் தான்; நாயகி பாவம் மிகுந்த பையன்;
இன்னிக்கி தேதியில், "அவனா நீயி?"-ன்னு கேட்டிருப்பாங்க;
32 வயசுலயே போய்ச் சேர்ந்துட்டான்:(

ஆனால், அப்பவே சிவபெருமானைச் சேத்து பாடின பையன்;
"முக்கண் அப்பா"-ன்னு பாசுரம்!

நீங்க போட்டோ எடுத்த அதே மண்டபத்தில், சிவபெருமானும் இருப்பாரு; இந்தக் காரி மாறன் என்னும் பையன் ஈசனையும் பாடும் சிற்பக் காட்சி;

அவன், "ஆழ்வார்" ஆனதெல்லாம் பின்னாளில் தான்! தான் ஆழ்வார் ஆவோம்-ன்னு எல்லாம் அப்போ தெரியாது இவனுக்கு;

So called நாலாம் வருணம்/ கீழ்ச் சாதிப் பையன்;
ஆனா, அவனே, அடியார்களின் "குல முதல்வன்" -ன்னு போற்றப்படுறான்;

எப்படி நம்-பெருமாளோ, அப்படி நம்-ஆழ்வார்;
அரங்கனே, "நம்-ஆழ்வார்" ன்னு பேர் சொல்லி அழைத்த பையன்!

ஆண்டாளைக் கூட, "நம் ஆண்டாள்"-ன்னு அரங்கன் சொன்னதில்லை; இவனை மட்டுமே!
-------

இராமானுசர், இவன் காலடியில் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார் - "சடகோபன் பொன்னடி"

பின்னாளில் வந்த ஆசாரியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாய் இவன் காலில் விழுந்து எந்திருக்காங்க;

கம்பன், நளவெண்பாப் புகழேந்தி-ன்னு கவிஞர்கள், கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததா, இவனை வாழ்த்திப் பாடுறாங்க..

அப்படி என்ன பெருசாச் செஞ்சிட்டான்?
------

ஒரு சாராருக்கு மட்டுமே இருந்த வேதங்களை...
பெண்கள் சொல்லவே கூடாது-ன்னு சொன்ன வேதங்களை...

எல்லாருக்கும் பொதுவாக்கி, சொல்லி வைத்தான்;
புரியும்படியாத் தமிழிலே சொல்லி வைத்தான்
= வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்
= சடகோப வாங்மயம், நமாம்யஹம் "திராவிட வேத" சாகரம்;

அற்றது பற்றெனில் உற்றது வீடே
-ன்னு திருக்குறள் போல ரெண்டே அடியில், தமிழ் வேதமான திருவாய்மொழி;

இவனுக்குத் தான் திருவரங்கத்திலே இத்தினி ஏற்றம்!

* பெருமாளின் பிரம்மோற்சவம் எல்லாம் ஒன்னுமே இல்லை; இவன் பேரில் "திருவாய்மொழித் திருநாள்" தான் Biggest Festival; மார்கழியில் 21 நாட்கள்; பகல் பத்து/இராப் பத்து

* எல்லாரும் பெருமாளின் மோகினிக் கோலத்தைக் காண ஆசைப்படுவர்; ஈசனே ஆசைப்பட்டார்;
ஆனா, அந்தப் பெருமாளே ஆசைப்படுவது = இந்தப் பையனின் நாச்சியார் திருக்கோலம் தான்;
(நம்மாழ்வார் நாச்சியார் கோலம் இன்னிக்கும் நடக்குது)
-----

முருகனின் தினமான வைகாசி விசாகம் அதுவுமா தோன்றின பையன்; மகிழம் பூ-ன்னா இவனுக்கு ரொம்பப் பிடிக்கும் (என்னைப் போலவே)

நீங்க போட்டோ எடுத்த அந்த மண்டபத்தில் தான், முழுக்க முழுக்க, இவனைப் பற்றிய சிற்பங்கள்; அதை விட்டுட்டீங்களே -ன்னு தான் ஆத்தாம இத்தினி சொல்லிப்புட்டேன்;

திருவாய்மொழிக்கு உருகாதார்
ஒருவாய்மொழிக்கும் உருகார்!!!

said...

நன்றி டீச்சர்.....

வேறென்ன சொல்ல!

உங்களைச் மீண்டுமொரு முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

said...

இன்று எனது பக்கத்திலும் திருவரங்கம் தான்! கூடவே ஆண்டாளும் :)

முடிந்தால் வாங்களேன்...

said...

தையல் நாயகியா தைய்யல் நாயகியா ரீச்சர்?

said...

மர பல்லாங்குழி இன்னுமே வெயிட் ஜாஸ்தி இருக்குமே .
//இதுதான் கடைசியில் கிலோவுக்கு மேலே வெயிட்டாச்சு. அந்தப் பொதியை கோபாலுக்குக் காமிக்காம பொட்டியில் அடியில் போட்டு வச்சேன்:-)))) //
அதானே பின்ன எப்பிடி விட்டுட்டு போக முடியும் .....
நான் ஒரு கதைல படிச்சுருக்கேன் (சிவசங்கரியோட பாலங்களா தெரில ) அந்த காலத்துல பித்தலைல சொப்பு சாமான் கொழந்தைங்க விளையாடினதா ...
என் பொண்ணுக்கு வேணும்ங்கற சாக்குல மயிலாப்பூர் , தில்லகேணி
கும்பகோணம் ல கூட தேடி பாத்தேன் ப்ச் ... கிடைக்கல .

said...

வாங்க நம்பள்கி.

உங்க கோவிந்தனைப் பார்த்தேன்!

//இதில் அருவாமனையைத் தவிர மீதி எல்லாம் எனக்கு அத்துப்படி! எல்லாம் என் மனைவி மூலமாகத்தான்.//

ஹாஹா:-))))

ஒரு சமயம் கோபாலை அருவாமணை வீசி வெட்டிப் போட்டுட்டு கதறி அழுதுக்கிட்டு இருந்தேன்.

எதுக்கு நடுராத்திரியில் இப்படி விக்கிவிக்கி அழறேன்னு என்னை எழுப்பிக் கோபால் கேட்டார்:-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

அருவாமணையிலேயே தலையில் தேங்காய்த்துருவி வச்சு டு இன் ஒன்னாக் கிடைக்குமே!

கேரளத்தில் துருவாமணை தனி. தேங்காய் செறவு.

நான் சொல்றது இடக்கையில் தேங்காய்ச் சிரட்டையைப் புடிச்சுக்கிட்டு வலக்கையால் பிடியைச் சுத்தி தேங்காயைத் துருவும் துருவி.

வெளிச்சுற்றுகளில் இருக்கும் கடைகளில் இன்னும் நல்ல பொருட்களும் கிடைக்குமோ என்னவோ.... எங்கே போகவிடுறாங்க?

மணைப்பலகைன்னு சொல்றது போல இது மணைதான். மனைன்னா வேற பொருள் வருதே!

said...

அப்புறம் இந்த யானை சமாச்சாரம் பலசமயங்களில் கவலை தருது எனக்கு.

முந்தி ஒருபதிவில் நான் கொடுத்த பின்னூட்டம் இங்கே ஒன்ஸ் மோர்.

வாங்க கிரி.

புள்ளையார்தான் யானை என்ற அன்பாலும் நம்பிக்கையாலும் இருக்கலாம்.

ஆனால் என்னுடைய சொந்தக் கருத்து...

யானையை யானையா தன்னிச்சையா இருக்கவிடணும். எப்பேர்ப்பட்ட ஜீவன். அதை தனியா ஒற்றைப்படுத்தி வளர்ப்பதுகூட அநியாயமுன்னு தோணுது. பேச்சுத் துணைக்காவது அதுக்கொரு ஜோடி அதே இனத்துலே வேணும்தானே? எத்தனை நாளுக்கு மனுசப்பயல்களோடு போரடிச்சுக்கிட்டு இருக்கும்?

3/18/2013 4:55 PM

said...

கே ஆர் எஸ்,

குரங்கனை ஓரம் கட்டுனது எனக்கும் கொஞ்சம் வருத்தமே. நான் சொல்வது 'அந்தக் குரங்கு':-)

கார்டன் செட்டிங்கைப்பாருங்களேன்.

வண்டின முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல்மீ தணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோ னமரும் சோலை
அணிதிரு வரங்க மென்னா,
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை
விலக்கிநாய்க் கிடுமி னீரே.

said...

வாங்க பால கணேஷ்.

//சின்ன வயசு ஞாபகங்கள்ல உறைஞ்சு கிடக்கு.//

அந்த உறைஞ்சு கிடத்தல்...ஆஹா என்ன ஒரு அழகான சொற்பிரயோகம்!!!

மனசில் உறைஞ்சு கிடக்கு கல்வெட்டு போல!

இனிமையான குடும்பம்.ரெங்கன் அருளால் நல்லா இருக்கணும்!

said...

வாங்க கோமதி அரசு.

அதென்னமோ நமக்கு அப்போ மரச்சொப்பு கிடைக்கலை:(

சமீபத்து இந்திய வாழ்க்கையில் சண்டிகரில் ஒரு பொம்மைக்கடையில் இருந்து மாடர்ன் அடுக்களை ஒன்று வாங்கிவந்தேன்.கேஸ் அடுப்பு, சிலிண்டர் மிக்ஸி, கிச்சன் கப்போர்ட்ஸ் என்று இருக்கு. கொலுவுக்கு இருக்கட்டுமேன்னுதான். இந்தவருசம் டிஸ்ப்ளேயில் வைக்கணும் மறக்காம:-)

கே ஆர் எஸ் வந்ததும் பதிவு நல்லா நாமம் போட்டுக்குது இல்லை:-))))

ஐ மீன் .... பக்திப் பெருக்கு!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதே அதே.. அந்த ஓலைப்பெட்டியில் வரும் சொப்புகள் அருமை. திருகையும் உரலும் அழகா இருக்கும்.

தக்ஷின் சித்ராவில் டெர்ரகோட்டாவில் அம்மி ஆட்டுக்கல் உரல் கிடைச்சது. சாமான்கள் அன்பேக் செஞ்சப்போ குழவி மிஸ்ஸாகிப்போச்சு.

ஐ மீன் அம்மிக்குழவி:-)

said...

வாங்க கீதமஞ்சரி.

பழைய நினைவுகள் மனசை விட்டு அகலுவதில்லைப்பா.எல்லாம் பொக்கிஷம்.

நல்லா யோசிச்சுப்பார்த்தால் எனக்கும் அஷ்டபுஜம் இருந்தால் கொள்ளாம். ப்ளவுஸ் தச்சுக்கத்தான் கஷ்டம்:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அந்தக்காலங்களில் வீட்டு சாமான்கள் வாங்குவதே கோவில் விஸிட்களிலும் திருவிழாக்களிலும்தான்!

மாக்கல் சட்டி வாங்கணுமுன்னா ஆலுவா சிவராத்ரிக்கு மணல்புறத்திலாக்கும்.

said...

ரங்கவிலாசம் கடைகளுடன், சன்னிதிகளுடன் அருமையாக இருக்கும். நிறைய சந்நிதிகள் அங்கு.
மண்டபத்தின் மேலே இருக்கும் பரமபதநாதன் போலவே கோவிலுக்கு உள்ளேயும் பரமபநாதன் அமர்ந்த திருக்கோலத்தில் மூன்று தேவியருடன் இருப்பாரே, சேவித்தீர்களா?

KRS - இன் விளக்கங்கள் சூப்பர்!

said...

ஸ்ரீரங்கம் போய் ஒரு வருடத்திற்கு மேலே ஆகிவிட்டது. சீக்கிரம் போய், உங்கள மாதிரியே ஒரு பதிவர் விழா நடத்தி திருமதி ஆதி, ரோஷ்ணியைப் பார்க்க ஆசை!

said...

யாத்திரை சென்றால் பாத்திரம் வாங்கணும் என்று சொல்லி ஏதாவது வாங்காமல் வரமாட்டேன் ..

இந்தக்கடைகளைக்கண்டாலே காத தூரம் ஓடுவார் கணவர் ..

said...

ஆஹா ஒவ்வொரு அங்குலமும் எங்க ஊர்ல எனக்கு அத்துப்படி அங்கல்லாம் ரவுண்ட் அடிச்சி போட்டோ எடுத்து....அமர்க்களம் தான்..வெங்கட் நாகராஜ் ஸ்ரீரங்கமா ஓ அடுத்தவாட்டி ஊர் போறப்போ அவரப்பார்க்கறேன்.. தெற்குவாசல் என்னும் தேவலோகம் ஆளும் அரங்கமாநகரின் அச்சுவை வேறெங்குமில்லைதான்..

said...

.//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
டீச்சர்,
இம்புட்டு திருவரங்கப் பதிவிலும், ஒரேயொரு குறை வைக்குறீங்களே:(

ஒங்க மூனாவது படம் பாருங்க!
அந்த மண்டபம் முழுக்கவே "நம்-ஆழ்வார்" தான்!
அவனைப் பத்தி ஒன்னுமே சொல்லலையே?

"அவன்" -ன்னு ஆழ்வாரைச் சொன்னதுக்கு கோச்சிக்காதீக;

32 வயசுப் பையன் தான்; நாயகி பாவம் மிகுந்த பையன்;
இன்னிக்கி தேதியில், "அவனா நீயி?"-ன்னு கேட்டிருப்பாங்க;
32 வயசுலயே போய்ச்
////

ஸ்ரீரங்கம்னா ரவிக்கு ஒரு தனி பாசம்தான்! எல்லாம் தம்பி ஒருகாலத்துல அன்பா பேசின அக்காவோட பொறந்த ஊராச்சே:)

said...

பெருமாள் தர்சனத்துடன் இனிய குடும்ப சந்திப்பையும் எங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

said...

வாங்க வல்லி.

காரைக்குடியில் ஷோ கேஸ்லே வைக்கும் அடுக்களைச் சொப்புகளிருக்குன்னு அண்ணிகூடச் சொன்னாங்க. அங்கே போயிருந்த சமயம் ஆயிரம் ஜன்னல்வீட்டைப் பார்த்து வாய் பிளந்து நின்னவள் சொப்பை மறந்துட்டேன்:(

ஆக்ச்சுவலா மோர் மத்துன்றது மோர் சிலுப்பி! என்னமா சிலுப்பும் பார்த்துருக்கீங்கதானே? ஹைதராபாத் பயணத்துலே சார்மினார் அருகில் மோர் சிலுப்பி ஒன்னு வாங்கினேன். கூடவே நம்ம புதுகைத்தென்றல் இருந்தாங்க.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

இப்பெல்லாம் கோவில் பதிவுகள் எழுதும்போது உங்க நினைப்பு டாண் னு வந்துருது.

நீங்க என்ன சொல்லி இருக்கீங்கன்னு போய் பார்த்துக்குவேன்!

எவ்ளோ அழகா விளக்கமா எழுதறீங்கன்ற பிரமிப்புதான்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அடடா.... கிடைக்குதா? நெல்லையில் பார்க்கலையேப்பா:(

இந்தப்பதிவில் இல்லைப்பா...வேறொரு இடத்தில் ராக்கொடி இருக்கு:-)

சக பதிவரைப்பார்த்தாலே சந்தோஷம். இதுலே பதிவர் குடும்பமுன்னா கேக்கணுமா?

ஜாலிதான் போங்க:-)))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

//பெருமாளை பார்ப்பது அபூர்வம் தான். ஆனால் சட்னு கிளம்பிப் போன சமயங்கள் தான் அதிகம்...:) தாயாரை தினமுமே பார்ப்பேன். சக்கரத்தாழ்வாரை பார்த்து நாலு பிரதட்சணம் செய்து விட்டு வசந்த மணடப வழியில் காற்றாட நடந்து வந்து தாயாரை பார்த்து விட்டு வெளியில் பத்து நிமிடங்கள் அமர்ந்து இயற்கை காற்றையும் கோபுர அழகையும் தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வருவது எனது தினசரி வழக்கம். வழியில் தோன்றினால் பன்னீர் சோடா ஒன்று குடிப்போம்.
பன்னீர் சோடா குடித்தீர்களா? திருச்சி ஸ்பெஷல்...:)//

ஹைய்யோ!!!! என்னன்னு சொல்வேன்.

பன்னீர் சோடா ஸ்பெஷலா? சொல்லவே இல்லெ.......

ராக்கொடியை வண்டியிலேயே விட்டுட்டு உங்களைப்பார்க்க மாடி ஏறியாச்சு.அவ்ளோ அவசரம்!!!!

உங்களனைவரையும் சந்திச்சதுலே எனக்கு அபார மகிழ்ச்சிப்பா. நல்லா இருங்க!

said...

வாங்க கே ஆர் எஸ்.

//"அவன்" -ன்னு ஆழ்வாரைச் சொன்னதுக்கு கோச்சிக்காதீக;//

எனக்குப் பெரும் ஆளே கூட 'அவன்' தான்.நம்மாத்துப் பையன் அவன். அதனால் தனி மரியாதை ஒன்னும் இல்லையாக்கும், கேட்டோ!

உங்க பின்னூட்டம் ஒவ்வொன்னும் ஒரு பதிவாகவே போட்டுடணும். எனக்கு அப்படித்திதான் தோணுது.

நிற்க...

ஆழ்வார்களைப்பற்றி எழுத எனக்கு ஞானம் போதாது. அதிலும் மெய்ஞானியான அவரை, நம்ம ஆழ்வார்ன்னு பெருமாளே பெருமைப்படுத்திய அவரை எழுத இந்த அஞ்ஞானியால் இயலுமோ!

அவர் ராமர் அவதாரம். பொறந்து ரெண்டு வாரம் வரை ஜஸ்ட் உயிருள்ள பிண்டமா,அசையாமக் கிடந்தார்.

பெற்ற தாய்க்கு எப்படி இருந்துருக்கும்? சொல்லும்போதே கண்ணில் வழிய ஆரம்பிக்குது!

அப்புறம் லக்ஷ்மணனைத்தேடி ராமர் போயாச்சு., புளியமரத்தின் அடியில் உக்கார. அந்த உறங்காப்புளி லக்ஷ்மணந்தான். வனவாசத்தில் கண் இமைக்காமல் காவல்காத்த பழக்கம் இங்கே மரம் ஆனாலும் மாறலை!

மற்ற குழந்தைகளை விட வேற மாதிரி இருந்தவன் மாறன். காரி மாறன். என்ன ஒரு பெயர்ப் பொருத்தம்!!!

அன்ன ஆகாரமில்லை. பேச்சும் இல்லை.வெறும் மூச்சு மட்டுமே!

ஒன்னா ரெண்டா 16 வருசம். பேசா மடந்தன்! மதுரகவி வந்தாரோ நாம் பிழைச்சோமோ!

சடாரி சேவிக்கறது அந்த சடகோபரைத்தானே! நம்ம ஆழ்வார் அவர்!

ஒரு ஆழ்வார் சந்நிதியும் உள்ளே போய் பார்க்கமுடியலை என்பது எனக்கு வருத்தம்தான். அதென்னவோ சொல்லி வச்சமாதிரி பூட்டியே கிடந்துச்சே:(

விசாகம் என்றவரை எனக்கும் சந்தோஷமே! என்ன ஒன்னு தை ஆகிப்போச்சு:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சிங்கத்தை அதன் குகையிலே சந்திச்சது போலத்தான் !!

ரொம்ப சந்தோஷம் உங்க பெற்றோர்களை சந்திச்சது. எதிர்பாராத அதிர்ஷ்டம்!

ஆண்டாள் குளியல் அட்டகாசம்! ரொம்பச் சமர்த்துப்பெண் அவள்!

said...

வாங்க கொத்ஸ்.

நாலு நாளா சொல்லிப்பார்த்தேன்.தையல் தைய்யல் தையல் தைய்யல்....

தைய்யல்தான் அழுத்தமா இருக்கு. காலை அழுத்தி வச்சு பெடல் சென்ம்ஜ்சாத்தானே மிஷீன் ஓடும்!

அதுவுமில்லாமல்... தையல்...என்றால் பெண்.

இங்கே நம்ம பதிவில் துணிகளைத் தைக்கும் பெண்.

அதுதான் தைய்யல். போதுமா?

டீச்சருக்கே பாடம் எடுக்கறீங்கன்னு கோபால் புலம்பிக்கிட்டு இருக்கார்:-)))))

said...

வாங்க சசி கலா.

மரம் கூடுதல் கனம் என்று தெரியாத அப்பாவி அவர்!!!

எங்க வீட்டுலேயே குட்டியா ஒரு இட்டிக்குண்டான் பித்தளையில் இருந்துச்சு. அதுலே இட்டிலி செஞ்சுகுடுக்கச் சொல்லி பெரிய அக்காவைப் பிடுங்கி எடுப்பேன். எல்லாரும் காலை பலகாரம் முடிச்சதும்தான் செய்வேன்னு சொல்லிச் செஞ்சு வைப்பாங்க.

காலையில் பள்ளிக்கூடத்தில் ரீஸஸ் பெல் அடிச்சதும் குட்டி இட்டிலிக்கு ஓடி வருவேன். எப்பவும் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலேதான் வீடு!

இப்ப மினி இட்டிலித் தட்டு பார்த்ததும் பழைய ஞாபகம். ஒரு தட்டு வாங்கியாந்தேன் சில வருசங்களுக்கு முன்!

said...

வாங்க ரஞ்ஜனி.

கண்ணாடி அறை ஆண்டாள் பக்கத்துலே பரமபத நாதனை(யும்) சேவிச்சேன்ப்பா.

ரோஷ்ணி வீட்டுலே அஞ்சு அற்புத மனிதர்கள்! விட்டுடாதீங்க:-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

யாத்திரைப் பாத்திரம்னு குருவாயூரில் வாங்குன குண்டை இப்பத்தேடிக்கிட்டு இருக்கேன்.

என்னைச்சொல்லலை. நான் தேடுவது அப்பக்குண்டு. சின்ன சைஸ்தான்:-)

said...

வாங்க ஷைலூ.

உள்ளூர்க்காரியை எப்படிப்பா மறப்பது? அங்கே சுத்துனபோதெல்லாம் திருவரங்கப்ரியாவின் நினைப்பு இருந்ததென்னவோ உண்மை!