Friday, April 05, 2013

கல்லிலே கலை வண்ணம் கண்டேன்........

இன்னையத் தேதிக்கு  சரியா  496  வருசங்களுக்கு முன்னே  )  மாமன்னர் கிருஷ்ண தேவராயர் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை தந்தார்.  கோவில் கல்வெட்டு சொல்லுது 16-2-1517ன்னு!

பெரிய பக்திமான்.  1509 வது வருசம் அரியணையேறியதும்  நிறைய கோவில்களுக்குப்போய் தரிசனம் செய்தது மட்டுமில்லாமல்  போன இடங்களுக்கெல்லாம்  வாரிக்கொடுக்கும் மனம் இருந்துருக்கு.

சில வருசங்களுக்கு முன்னே (2009) இவருடைய ஐநூறாவது  ஆண்டு விழா  கொண்டாடிய சமயத்தில் திருப்பதி  ஸ்ரீ வெங்கடாசலபதிக்கு  இவர்  முன்பு அளித்த  நகைநட்டுக்கள் எல்லாம் மாயம் என்ற சேதி வந்தது:(  யாரு ஆட்டையப் போட்டாங்களோ... அது அந்தப் பெருமாளுக்கே வெளிச்சம்!

மன்னர் வரும்போது தனியாவா வருவார்? கூடவே மந்திரிப்பிரதானிகள் ,காவலர்கள், ஆள் அம்புன்னு கூட்டம் வந்துருக்கும்தானே?  சேஷராயர்  என்ற முக்கியப்ரதானி, கோவிலைச் சுற்றி வரும் சமயம்   ஆயிரங்கால் மண்டபத்து எதிரில் காலியா இம்புட்டு இடம் கிடக்கேன்னு நினைச்சாரோ என்னவோ..... ' கட்டு ஒரு மண்டபத்தை'ன்னு   கட்டுனவர்  வெறும் கோவில் மண்டபமா விடாமல் விஜயநகரப்பேரரசின் வீரத்தைக் காட்டும் வகையில்  மண்டபத்தின் முன் வரிசையில்  பிரமாதமான  கலை அழகுடன் எட்டு தூண்களை வடிவமைச்சுட்டார்.   இந்த மண்டபமும், குதிரை வீரர்களின் சிற்பங்களும்  கட்டிடக்கலை அழகுக்கே சவால் விடும்வகையில் அமைஞ்சுருக்கு!  மண்டபத்துக்கு சேஷராயர் மண்டபம் என்ற பெயரும்  வந்துச்சு.

வெள்ளைக்கோபுரத்துக்கு  தொட்டடுத்து  இருக்கும் இந்த சேஷராயர் மண்டபம்  பார்த்து மகிழ  எல்லா மதத்தினருக்கும்  எல்லா நாட்டவர்க்கும்  தடை ஏதும் இல்லை. (முதல் நான்கு சுற்றுக்கள், இந்துமதத்தினர்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பு பார்த்தேன்)







கல்லுலே ஜடை பின்னி விட்டுருக்காங்க!


ஐயோ ...என்னடா  செய்யறே? ன்னு  கை கொண்டு வாய் பொத்தி  இருக்கும் குரங்கன்!

குதிரை வீரனும்  வேடுவர்களுமா  புலியுடன் போராடிக் கொன்னுட்டாங்கப்பா.......

தசாவதாரத் தூண்களின் வரிசை!

இதென்ன முதலை வயிற்றில்........  ம்ம்ம்  என்னவா இருக்கும்?  கதை இருக்கு!


 ராம ராவண யுத்ததில் மயங்கி விழுந்த  லக்ஷ்மணனைக் காப்பாத்த ஹனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடிப்போறார்.  அப்போ அவர் போகும் காரியத்தைக் கெடுக்க  ராவணனால் ஏவப்பட்ட அசுரன் முனிவர் வேஷம் போட்டுக்கிட்டு   ஹனுமன் போகும் வழியில் காத்துருக்கார்.  முனிவரைக் கண்ட ஹனுமன் விநயத்தோடு அவரை வணங்கினார்.   இதோ இந்தப் புனிதக்குளத்தில் நீராடி  வந்து ஆசி பெற்றுக்கொள் . ராம காரியம் ஜெயிக்கும் என்றார் முனிவர்.

அதன்படி குளத்தில்  நீராடப்போன ஹனுமனை  ஒரு முதலை விழுங்கிருச்சு.  முதலை வயிற்றைக் கிழிச்சு ஹனுமன் வெளியில் வர்றார்.  ஆக்ச்சுவலி அந்த முதலை  ஒரு  தேவன். தான்யமாலி என்ற பெயர்.  ஒரு சாபத்தால் முதலையாக இங்கே இருந்தான்.  ஹனுமனால்  முதலை கொல்லப்பட்டதும் சாபவிமோசனம் ஆச்சு. (என்ன சாபம்னு  தெரிஞ்சவுங்க சொல்லலாம். நான் நினைக்கிறேன், ஈவ் டீஸிங்)

தான்யமாலி  தேவலோகத்துக்குக் கிளம்பிப் போகுமுன், ' நீராடச் சொன்ன முனிவர்  ஒரு  போலி.  உண்மையில் அவன்  அரக்கன்' என்ற உண்மையைச் சொல்லிட்டுப் போறார்.   போகும் காரியம்  தாமதமாச்சே என்ற கோபத்தில்  ஹனுமன் , முனிவரின் சடைமுடியைப் பிடித்து  சுழற்றி ஒரே வீச்சாய்  வீச,  அரக்கனின் உண்மை உருவம் வெளிப்பட்டு,   ராவணன் சபையில்  சடலமா வந்து வீழ்ந்தான்.


இந்தக் கதை முழுசுமே  படம் பார்த்துக்கதை சொல் பாணியில் அங்கே செதுக்கி இருக்கு!!!!

முதல்லேயே கதை தெரிஞ்சுருந்தா நம்ம கே எம்மையே விழி பிதுங்க வச்சுருப்பேன். நல்ல சான்ஸ் போயிருச்சு!  இப்ப எப்படிங்கறீங்கதானே?  வலை எதுக்கு இருக்கு? வீசுனதில் ஆப்டுச்சு:-)  பதிவர் விஜய் அவர்களுக்கு  நன்றிகள்.

ராவணன் சபையில் ஹனுமன்!  நம்ம சனத்துக்கு  ஆஞ்சநேயனைக் கண்டாலே பக்தி பெருகி வெண்ணையா வழிஞ்சுரும்!

உங்க வெண்ணெய் வேணாமுன்னு  அவரே வந்து கதறினாலும் கேக்கமாட்டாங்க.  பாருங்க எப்படிப் பூசி வச்சுருக்காங்கன்னு:(

சிறிய திருவடிக்கு   அப்படின்னா பெருமாளைச் சுமக்கும் பெரிய திருவடிக்கு இப்படி!  சந்தனமும் குங்குமமும்!


இதுக்கிடையில் நம்ம  கைடு கே எம்  மண்டபத்துச் சிற்பங்களைப் பற்றிய  விளக்கங்களைச் சொல்லும்போது  கலக்கோ கலக்குன்னு  ஒரே  காக்டெயில். நமக்கு விளக்கம் சொல்லவேண்டியதாப்போச்சு:-) (எ.கா)

இல்லீங்களே....  இது ராமாயணத்துலே வர்ற வாலி வதம். இத பாருங்க, ராமர் (மரத்துக்குப்)பின்னால்  நின்னு  அம்பு போடறார்! லக்ஷ்மணன் அட, ராமான்னு தலை குனிஞ்சு நிக்கறார்:-)


திருப்பாற்கடல் கடைதல்


குழலூதி மனமெல்லாம்......

வெண்ணெய்க்குத் தப்பிப் பிழைச்சவர்:-)
நின்னவாக்குலேயே ஒரே கிழி!!!


ராமனும் சீதையும்.


ஸ்ரீ வேணுகோபாலன்

வெண்ணெய் உண்ட கண்ணனாம்.... கொழுக் முழுக்ன்னு :-))))

வராகம் என்னத்தை வேணாமுன்னு சொல்லுது?

மோஹினி அமுத குடத்துடன்?

கோபிகைகளின் வஸ்த்ரம் அபகரித்தது:(


கே.எம் சில வருசங்களாத்தான்  கைடு வேலை செய்யறாராம். இதுக்கு முன்னே எதோ கடை வச்சு வியாபாரம்.இன்னும் கொஞ்சம் சரித்திரம், புராணம் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்குங்கன்னு சொல்ல வேண்டியதாப்போச்சு. ஆமாம்.... கொடுக்கற இருநூறுக்கு உபதேசம் வேறன்னு  மனசுக்குள்ளே வையாமல் இருந்தால் என் பாக்கியம்.


இவ்வளவு  அழகான மண்டபத்தின் தற்காலபயன் பாடு என்னன்னு பாருங்க.  டுவீலர் பார்க்கிங் ஸ்பேஸ். (வெளங்கிரும்!)



அசுத்தம் செய்யக்கூடாதுன்னு  போர்டு எழுதி வச்சாலும் யாரும் சட்டை செய்யமாட்டாங்க போல:(


என் வகையில்  மண்டபத்துக்குக் கொடுக்கும் மரியாதையாக, இந்த இடுகையில்  வேறு எந்த இடத்தையும் பற்றி எழுதலை.  ஜஸ்டிஃபைடுதானே?

தொடரும்............:-)





35 comments:

said...

சேஷராயர் மண்டபம் முழுக்க நன்கு சுற்றிப்பார்த்து விட்டேன்.
தூணில் உள்ள சிலைகளின் வரலாறூம் நீங்கள் சொன்ன அழகும் அற்புதம்.

said...

படங்கள் அனைத்தும் அருமை.

//கோவில் கல்வெட்டு சொல்லுது
16-2-1517ன்னு!//

நெஜமாங்களா?

said...

அற்புதமான சிற்பங்கள். அருமையான படங்கள் மூலமாக கல்லிலே கலை வண்ணம் காணத் தந்தீர்கள்! தகவல்களுக்கும் நன்றி.

said...

ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொருவிதத்தில் அழகு. அழகோ அழகு. சுத்தி வளைச்சு படம் புடிச்சிருக்கிங்க. அருமை. அருமை. அந்தக் குரங்கனின் உடல்மொழியும் முகபாவங்களும் அட்டகாசம்.

அதே போல அந்தக் கூந்தல் அலங்காரம். எத்தன பின்னல். அடேங்கப்பா. இப்பிடியொரு கூந்தல் இருந்தா நாள் முழுதும் அதைத்தான் பராமரிக்கனும்.

said...

இத்தனை பெரிய மண்டபத்துக்கு
அமைத்த சேஷராயருக்கும் வணக்கம்.

எவ்வளவு தத் ரூபமான சிலைகள். கால்களைத்தூக்கி நிற்கும் குதிரைகளின் கம்பீரம்.
குரங்கனின் முகபாவம்:)
எத்தனை படங்கள் எடுத்து இருக்கீங்கப்பா. அற்புதமான சேவை.

said...

கலைவண்ணம் நிறைந்த காவியப்பகிர்வுகளால் அரங்கத்துக்கு அழைத்துச் சென்றதற்கு பாராட்டுக்கள்..

said...

கலையழகு கொஞ்சுது. பொக்கிஷங்களைப் பாழாக்கறதுன்னா நம்ம ஆட்களுக்குச் சொல்லியா தரணும்!!

செமயா சாத்துறாங்க போலிருக்கு "போறும்"ன்னு அனுமன் அலறியும் விடாம வெண்ணெய்யைச் சாத்துறாங்களே. திர்னேலிலயும் இப்டித்தான் காந்திமதியம்மன் கோயிலுக்குள்ளார சாத்துபடி நடக்குது.

said...

ஆகா... அற்புதமான படங்கள்...

நன்றிகள் பல...

said...

சேஷராயர் மண்டபத்தின் ஓவியங்கள் அத்தனை அழகு. நானும் அங்கே வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன்! :)

said...

இந்த பதிவிற்கு நிறைய கிளைக்கதைகள் வரும் போல இருக்கே (ஆவலுடன் waiting )
சிற்பங்கள் அருமை . நுணுக்கமா பாத்து பாத்து எடுத்துருக்கீங்க . பகிர்விற்கு நன்றி .
நேர்ல கூட இவ்ளோ கவனிச்சு பாத்துருக்க வாய்ப்பில்லை (அவசர அவசரமா எல்லா எடத்தையும் பாக்கணுமே ன்னு ஓடினதால )
அந்த பின்னல், வாய் பொத்தின குரங்கு
(கதை pl... ) சூப்பர்ங்க !!!!

said...

சிலைகளை ரசிப்பதில் ஆர்வம் இருப்பதால்....திருநெல்வேலியில் உள்ள கிருஷ்ணபுரம் கோவிலுக்கு சென்று அந்த சிலைகளைப் பாருங்கள். பிடிக்கும்,.

said...

கோவிலுக்கு செல்லும் பலருக்கு இந்த மாதிரி சிற்பங்களையெல்லாம் பார்க்க ஆர்வம் இருப்பதில்லை.ஒவ்வொரு தூணிலும் பல பல சேதிகள் இருக்கும்.
படங்கள் அருமை.

said...

டீச்சர்,
"செதுக்கி" இருக்கீங்க பதிவை:)

சேடராயர் மண்டபத் தூணு ஒவ்வொன்னும் ரொம்ப நுட்பமா பார்க்கோணும்; அம்புட்டு விசயம் இருக்கு;

//வராகம் என்னத்தை வேணாமுன்னு சொல்லுது?//

அது வராகம் இல்லை;
சாம்பவான் - சுக்ரீவன்; கம்ப இராமாயணக் காட்சி

சுக்ரீவன், தான் அரசாட்சி பெற்றதற்குப் பரிசு குடுக்குறான்; "வேணாம், சீக்கிரம் சீதையத் தேடும் வழியைப் பாரு"-ன்னு சொல்லுறாரு அமைச்சர்:)
என்ன 2G-3G அமைச்சரோ? பொழைக்கத் தெரியாதவரு:)

// ராமர் (மரத்துக்குப்)பின்னால் நின்னு அம்பு போடறார்
லக்ஷ்மணன் அட, ராமான்னு தலை குனிஞ்சு நிக்கறார்:-)//

இராமன், வாலியின் மகன் அங்கதனிடம் "மன்னிப்பு" கேட்கும் சிற்பம் கூட இருக்கும்; பாத்தீங்களா?
"நீ இது பொறுத்தி" -ன்னு கம்பன் காட்டும் வரிகள்;

சொல்லப் போனா, இலக்குவன் தலை குனிஞ்சி எல்லாம் நிக்கலை;
அவன் தான் தாறு மாறாப் பேசுவதே;

"மிருகத்தை, முன்னால் இருந்தும் கொல்லலாம், பின்னால் இருந்தும் கொல்லலாம்; ஒரு வேடன் சொல்லிட்டாக் கொல்லுவான்?" -ன்னு வீழ்ந்து கிடக்கும் வாலியிடம், திமிராகப் பேசுறவனே இலக்குவன் தான்:(

இராகவன் தான், மனசாட்சி கேட்காம, "நீ இது பொறுத்தி" -ன்னு சொல்லுறது;

said...

அந்தக் கல்லுச் சடை, sooperu:)
ஆனா, ஆம்பிளைக்கு எதுக்கு, அம்புட்டு நீளமாச் சடை?:)

இடுப்புல கத்தி பாருங்க, கயிறு போட்டுக் கட்டி இருக்கான்; பிளேடு பக்கிரியா இருப்பானோ?
= "பின்னல் போட்ட பிளேடு பக்கிரி":)
---

அந்த வாய் பொத்தும் குரங்கும் அழகோ அழகு!

பாற்கடல் கடையும் காட்சியில்,
அசுரர் பக்கம் நின்னு கடையும் குரங்கு முகத்தைக் கவனிச்சீங்களா?
= வாலியும் சுக்ரீவனும்
= அதில் தான் ருமா என்ற பெண் தோன்றுவாள்; Equal Sharing for Brothers:)
(கதை நீங்களே தேடிக்கோங்க, Me Escape)

//இவ்வளவு அழகான மண்டபத்தின் தற்காலப் பயன் பாடு என்னன்னு பாருங்க. டுவீலர் பார்க்கிங் ஸ்பேஸ். (வெளங்கிரும்!)//

ha ha ha!
சேடராயர் மண்டபத்தை, இன்னும் நல்லபடியாக வச்சிக்கணும்;

இல்லீன்னா, அங்கிட்டு பெருமாள் மண்டகப் படி ஏதாச்சும் வச்சிட்டா, "புனிதம்" வந்து ஒட்டிக்கும்; அப்போ சைக்கிள் நிறுத்த மாட்டாங்க:)

Did u note the last but one sculpture?
அந்தத் துவார பாலகர்? அசுரன் போல் பல்லு, மீசையுடன்?

அவன் தான் இராவணன் - கும்பகருணன்!
மறுபடியும் இறைவனிடமே வாயில் காக்கச் சென்று விட்டார்கள்;

அவர்கள் கையிலும் சங்கு-சக்கரங்கள்!
அட, இராவணன் கையில் சங்கு-சக்கரமா?
கேட்கவே, வித்தியாசமா இருக்கு-ல்ல?

எப்படி, முருகன், சூரனை மயில் ஆக்கிக் கொண்டானோ,
அதே போல், திருமால், இவர்களைத் தன்னவர்கள் ஆக்கிக் கொண்டான்; அத்தோடு நிற்காமல் தன் அடையாளமான சங்கு-சக்கரங்களையே குடுத்து விட்டான்!

"தீயோர்" -ன்னு தனித்து யாரும் இல்லை;
எல்லாருமே நல்லோர் தான்; எல்லாருமே தீயோர் தான்;
அனைவருக்கும் அடைக்கலம் "ஒருவனே" -ன்னு ஒத்தை விரலைக் காட்டி நிக்குது பாருங்க அந்தச் சிற்பம்!

அதன் காலடியில் ஒரு யானை இருக்கும்; யாரோ உடைச்சிட்டாங்க போல:(

* பெரிய யானை
* பெரிய யானையையே விழுங்கும் மலைப் பாம்பு
* அந்தப் பாம்பு, அந்தக் Gகதையில் சுற்றி இருக்கு
* அந்தக் Gகதையை இராவணன் (எ) துவார பாலகன் ஏந்துகிறான்
* ஏந்தி என்ன சொல்லுறான்?

= யானை பெரிது
= அதை விட மலைப் பாம்பு பெரிது
= அதை விட என் Gதை பெரிது
= அதை விட நான் பெரியவன்?
= இல்லை! என்னிலும் பெரியவன் "ஒருவன்";
= என் உயர்வு அற, உயர் நலம் ஒன்னு இருக்கு!

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
துயர் அறு சுடரடி, தொழுதெழு என் மனனே!

(ஆழ்வார் அருளிச் செயல் - திராவிட வேதமான திருவாய்மொழி)

ஒத்தை விரல் தூக்கிக் காட்டி, "அந்த ஒருவன், ஒருவனே"!

said...

ஜூப்பரா ஜஸ்டிபைடு.

said...

கோவிலுக்குள்ளே இத்தனை வெளிச்சமா? படங்கள் அத்தனையும் பளிச்னு இருக்குதே? ப்ளேஷா இப்படி!?

said...

வாங்க கோமதி அரசு.

கதைகள் கொட்டிக்கிடக்கு அங்கே. நமக்குதான் நிக்க நேரமில்லை.

அடுத்தமுறை விடுவதில்லை!!!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

சோழர்கள் காலத்தில் இருந்தே முக்கிய சமாச்சாரங்களை கல்லில் வெட்டி வைக்கும் வழக்கம் வந்துருச்சு.

நல்லகாலம் இவை எல்லாம் இல்லைன்னா.....பல சரித்திரங்கள் சரித்திரமாகவே போயிருக்கும்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

புகைப்படக் கலைஞரே வந்து சொன்னால் அது உண்மைதான்!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

மெயின் சிற்பங்கள் மட்டுமில்லாம அதுக்கடியில் பார்டர் போட்டதுபோல் சின்னச்சின்ன கதைகளை செதுக்கி வச்சுருக்காங்க.

நேரப்பற்றாக்குறை ஒருபக்கம். வண்டிகளைத் தூணில் சிற்பங்கள் மேல் சாய்ச்சு வச்சுட்டுப்போனதால் படம் எடுக்க முடியாத வேதனை ஒரு பக்கமா இருந்துச்சு.

இந்த மாதிரி பின்னல் வாழ்வில் ஒருமுறை போட்டுக்கிட்டால் அதைப் பராமரிக்கும் வேலை இல்லை ஜடைக்காரருக்கு! ஒரு முடியிழை அந்தப்பக்கம் இந்தப்பக்கமுன்னு நகரவே இல்லை:-)))

said...

வாங்க வல்லி.

டிஜிட்டல் கேமெரா என்பதால் க்ளிக்குக்கு என்ன குறைச்சல். ஒவ்வொன்னையும் நாலு எடுத்தால் அதுலே ஒன்னு தேறாதா:-))))

500 வருசங்கள் பழசு என்பதால் முகபாவனைகளில் ஷார்ப்னஸ் கொஞ்சம் குறைஞ்சுருக்குன்னாலும்..... இன்னும் அட்டகாசமாத்தான்ப்பா இருக்கு!

சில சிலைகள் உடைஞ்சுருக்குப்பா:( யாருக்கு இதை உடைக்க மனசு வந்துருக்கும்?

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரெங்கன் கூட்டிக்கொண்டு போறான்ப்பா. நான் ஒரு கருவியே!

said...

வாங்க அமைதிச்சாரல்.

வெண்ணெய்க்கு அருள் இல்லை ஹனுமனே நேரில் வந்து சொன்னாலும் சனம் கேக்காதே!

சுசீந்திரத்தில் அட்லீஸ்ட் வெண்ணெயும் பன்னீரும் ரீசைக்கிளாகிருது. அதையெல்லாம் பூசுன்னா அவரே மறைஞ்சுருவார்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நன்றிகளுக்கு நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்களுக்குப் பக்கத்தில் அதிர்ஷ்டம் கூடவே நிக்குதே.

தினம் தினம் எடுக்கலாம். வாராவாரம் எடுக்கலாம்.ஒரு படம் சரியா வரலைன்னா திரும்ப ஒரு எட்டுப்போய் எடுக்கலாம்.

இனிமே அங்கத்துப் பதிவுகளுக்கு துளசிதளத்தின் ஆஸ்தான ஃபொட்டோக்ராஃபரா உங்களை நியமனம் செய்யச்சொல்லி நம்ம ரெங்கனைக் கேட்டுக்கணும்:-)

said...

வாங்க சசி கலா.

கிளக்கதைகளுக்கு நானும் காத்திருக்கேன். ரெங்கன் அனுப்பும் 'ஆழ்வார்' வந்து கோடி காட்டுவார்:-)

said...

வாங்க நம்பள்கி.

நானும் ரொம்ப நாளா கிருஷ்ணாபுரம் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். வேளை வரலை பாருங்க. அதுக்குள்ளே கிருஷ்ணாம்பேட்டை போகாமல் இருக்கணுமே!

சிலகள் என்றதும் ஒரு முறை பேரூர் கூட்டிப்போனார் கோபால். சிலைகளை நம்மவர்கள்தான் (அந்நியர்கள் இல்லை) கண்ட இடங்களில் உடைச்சு வச்சுருக்காங்க. விஷமிகளிடம் இருந்து அவைகளைக் காப்பாற்ற கம்பி வலை அடிச்சு அழகிகளை ஜெயிலில் வச்சாச்சு:( படம் கூட எடுக்க முடியலை.கம்பிகம்பியாத்தான் தெரியும்.

நம்ம மக்கள்..... என்னன்னு சொல்றது? பசித்த மானிடர் என்று ஒரு பதிவு முந்தி எழுதினேன். விஜிபியில் உள்ள சிலைகளுக்குக்கூட இந்த கதிதான்:(

கைக்கெட்டும் உயரத்தில் உள்ள கன்னியர் சிலைகளில் எல்லாம்
கலர் போன மாராப்பு.

பயங்கரப் பட்டினியோ, பசித்த மானிடரே.....................


said...

வாங்க குமார்.

முக்கால்வாசிப்பேர் டிமாண்ட் லிஸ்டோடுதான் கோவிலுக்கே போறாங்க. சிலை ரசிப்பா? இதுக்கெல்லாம் ஏது நேரம்?

போதாக்குறைக்கு ஒரே நாளில் மூணு கோவில் போகணும், நாலு கோவில் போகணும் அப்போதான் பலன் கிடைக்குமுன்னு மூட்டிவிட்டுருக்காங்க. அப்புறம் என்ன? ஓட்டம்தான்!

said...

வாங்க கே ஆர் எஸ்(ஆழ்வாரே!)
அப்படிச் சொல்லப்டாதோ? அதான் அடைப்புலே போட்டுட்டேன்!

அடடா! அவர் ஜாம்பவானா!!!! அவருக்கும் வராகனுக்கும் முக ஒற்றுமை இருக்கு... அதான்..... மாப்பு மாப்பு.

ஆமாம். அது என்ன கிஃப்ட்? ஃபதேபூர் சிக்ரியில் சோப் ஸ்டோனில் செதுக்கிய கேண்டில் ஹோல்டரா?

லக்ஷ்மணன் இந்தப்பேச்சு பேசினானா? பேசறதையும் பேசிப்புட்டு ஒன்னும் தெரியாதமாதிரி இங்கே கைகூப்பி நிக்கிறான் பாருங்க!!!

said...

கே ஆர் எஸ்.

அந்தக் காலத்துலே ஆம்புளை நீண்ட கூந்தல், காலில் மெட்டி, இன்னும் ஏகப்பட்ட நகைநட்டுகளும்தான் போட்டுருந்தான். அதான் சடை பின்னி விட்டுருக்கு. நல்லவேளை பின்னல் போட்ட ப்ளேடு பக்கிரி, அதில் ராக்கொடி வச்சுக்கலை பாருங்க:-)

மற்ற தூண்களைச் சரியாப் பார்க்க முடியலை. பெருமாளுக்கு ஒரு நியாயம், எங்களுக்கொரு நியாயமான்னு சிலபல மக்கள்ஸ் படுக்கை போட்டுருந்தாங்க.

அந்த மண்டபத்துலே பெருமாளுக்கு ஒரு மண்டகப்படி இருக்கான்னு கோவிலொழுகில் தேடிப்பார்க்கணும்.

வெள்ளைக்கோபுரத்துக்கு முன்னே இருக்கும் நாலுகால் மண்டபத்தில் ஒரு சமயர் கார் ஒன்னு நிப்பாட்டி இருந்தாங்களாம். பதிவர் ஒருத்தர் புலம்பினார்!

கதை சுமாராத் தெரியும். எதுக்கும் இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்துக்கறேன். சரியா:-)))

said...

K R S,

ஆஹா.... அந்த பல்லன்..ராவணனா? அட்டகாசமான ஹாஃப் பேண்ட்ஸ் போட்டுருக்காரேப்பா!!!!

என்ன இருந்தாலும் ராஜா இல்லையோ!!!!

தகவலுக்கு நன்றி.

said...

வாங்க அப்பாதுரை.

இது திறந்த வெளியிலிருக்கும் தனி மண்டபம். அதான் வெளிச்சம் நல்லாவே இருக்கு. ஃப்ளாஷ் போடலை.

ஜஸ்டிஃபைடு சொன்னதுக்கு நன்றீஸ்.

said...

உங்க கைவண்ணத்தில் படங்கள் அழகா வந்திருக்கு...

எல்லா சன்னிதியிலுமே அங்கங்கே தூண்களில் இருக்கும் பெரிய திருவடிக்கு, எப்போதும் வெண்ணெய் சாத்துபடி தான்...:))

வீதிகளில் போகும் போது வழியில் நடுவில் இருக்கும் கோபுரத்தில் இருக்கும் அனுமனுக்கும் வெண்ணெய் அலங்காரம் தான்...:))

said...

வியக்க வைக்கும் கலைவண்ணம். அந்த பின்னல் என்ன நேர்த்தி.

கற்பூர எரிப்பும் எண்ணைப் பூச்சுக்கும் தப்பி இருப்பதே அதிசயம்.

said...

படங்கள் அனைத்தும் அருமை.