Friday, July 12, 2013

வாங்களேன் ஒரு (?) காஃபி குடிக்கலாம்.... (பாலி பயணத்தொடர் 12 )

அடடா.....  ந்யோமேனுக்கு நம்மீது எவ்ளோ அக்கறைன்னு புல்லரிச்சுப் போச்சு. " காஃபி குடிக்கறீங்களா?  இங்கே பக்கத்துலேதான். நாம் போகும் வழியில் " என்றார். நல்ல காஃபியான்னா...  அது காஃபி ப்ளான்டேஷன் என்றார்.  அட!  அப்போ காஃபி சூப்பரா இருக்கும். இதுவரை  ப்ளாண்டேஷன்  உள்ளே போய் பார்த்ததில்லையே:(    சலோ  காஃபி  ப்ரேக்..........

இருவதே நிமிசப் பயணத்தில்  டேபாசாரி(Teba sari)  ப்ளான்டேஷன் வந்துருந்தோம். இது அக்ரோடூரிஸம் (Agrotourism) என்ற வகை என்பது   அங்குள்ள போர்டு பார்த்துத்தான் தெரிஞ்சது.ரெண்டு வண்டிகள் கார்பார்க்கில். நாங்க மூணாவதாப் போயிருக்கோம்.

ஒரு இளம்பெண் வந்து எங்களை வரவேற்று உள்ளே கூட்டிப்போனாங்க. காஃபி குடிக்க ந்யோமேனையும் கூப்பிட்டப்ப 'நீங்க முதல்லே போங்க, நான் இதோ வரேன்'னார். வேலிகட்டி உள்ளாற நிறைய செடிகொடிகளா இருந்ததை ஒரு அஸ்வாரஸ்யமாப் பார்த்துக்கிட்டே பின் தொடர்ந்தேன் அந்த பொண்ணை. பெயர் கூட என்னவோ சொன்னாங்க. இப்போ சட்ன்னு நினைவுக்கு வரலை:(



பிங்க் நிறத்தில்  மரத்தண்டில் ஒட்டிப் பிடிச்சுருந்த பழங்களைக் காட்டி இதுதான் கோக்கோ என்றதும் சட்னு  மின்னல் அடிச்சது மனசில்!  அட! இப்படியா இருக்கும்!!!  ஆர்வம் திரும்பி வந்துருச்சு.  அடுத்து இஞ்சியும்  மஞ்சளுமா தளதளன்னு இலைகளுடன் செடிக்கொத்துகள்.  பெரிய இஞ்சியான்னு கேட்டேன்.  யானை இஞ்சியாம்! சிகப்பு வகை கூட இருக்குன்னாங்க.

கிளைகளில் முத்துமணிகளை வரிசையாக் கோர்த்துப்பிடிச்சுருக்கும்  காஃபிச்செடிகளைக் கண்டதும் கண்கள் விரிஞ்சது உண்மை.  நம்ம வீட்டில் இருக்கும் ஒரே ஒரு காஃபி செடியில் இந்த ஆறேழு வருசத்தில் ஒரே ஒருமுறை மூணே மூணு பழம் கிடைச்சது. அதுக்கே நான் ஆடுன ஆட்டம் கொஞ்சநஞ்சமில்லையாக்கும்! பதிவெல்லாம் கூடப் போட்டுருந்தேன்.  புதுச்செடிகள் வருமுன்னு  அந்தப் பழங்களை மீண்டும் நட்டு வச்சு இப்போ ஒன்னரை வருசம் ஆச்சு. கப்சுப்ன்னு கிடக்கு தொட்டி மண்ணில்:(

ஹைய்யோ  ஹைய்யோன்னு  வாய் தோறாமல் சொல்லிக்கிட்டு இருந்ததைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருந்தார் கோபால்.  சின்ன வயசில் காஃபித் தோட்ட அனுபவம்  இருந்துருக்குன்னு ஒரு கெத்து!



ரெண்டு தனித்தனி கூண்டுகளில் ரெண்டு மிருகங்கள்  ஒரு விநாடி நின்ன இடத்தில் நிக்காமல் குறுக்கும் நெடுக்குமா போய்வருது. க்ளிக்குக்குச் சரியா அகப்படலை.  நரியோன்னு முதலில் நினைச்சாலும்.... இது  நரி இல்லை. புனுகுப் பூனை!!!!

நல்ல தரமான காஃபிப் பழங்களைப்பொறுக்கி எடுத்துத் தின்னுமாம். தின்னட்டுமே...யார் வேணான்னாங்க?  தின்னுட்டு?  கொட்டையைப் பிரிச்சு எடுத்துப் பழத்தை மட்டும் தனியாத் திங்கத் தெரியாதாம் இதுகளுக்கு. அப்படியே 'லபக்'தான்.  பழம் மட்டும் செரிச்சு, செரிக்காத கொட்டைகள் 'வெளியே' வருது பாருங்க,  அது அத்தனையும்  காசு!!!!  அம்பது கிராம் காஃபிப்பொடி  பதினேழரை யூ எஸ் டாலர் ! ஒரு லட்சத்து எழுபத்தி அஞ்சாயிரம் ரூபாய்.  (அம்மாடியோவ்!!!)

அந்தக் கொட்டைகளை எடுத்துச் சுத்தம் செஞ்சு  அதை வறுத்து  காஃபிப் பொடியாவும் காபிக்கொட்டையாவும் விற்பனை. Luwak Coffeeன்னு  சொல்றாங்க. (  Luwak, the Asian Palm Civet)

superb, exotic taste and aroma என்று உலகின் காஃபி ப்ரியர்கள் போற்றுகிறார்களாம்.  ஐயோ.... (yuck)

இன்னும் குறுமிளகு, கிராம்பு, வனிலா  எல்லாம்  பயிரிட்டு இருக்காங்க.







 தோட்டத்தில் சின்னதா ஒரு குடிலுக்குள்  இங்கே உள்ள விளைச்சல்களை  மூங்கில் தட்டுகளில் காட்சிக்கு வச்சுருக்காங்க. விறகு அடுப்பு மூட்டி காஃபிக்கொட்டை  வறுப்பும் அதை இடிச்சுத் தூளாக்க உரலும் உலக்கையுமா  ஒரு  'செட்டிங்' நானும் கொஞ்சம் இடிச்சுப் பார்த்தேன்:-)



சரி, வாங்க  காஃபி குடிக்கப்போகலாமுன்னு  கூட்டிப்போனாங்க.  இன்னொரு பெரிய  குடில். நடுவிலே ஒரு நீளமான மேசை. எனெக்கென்னமோ சட்னு கேரள வீடுகளின்  ஊட்டுப்பொறை நினைவுக்கு வந்துச்சு.  பழைய ஸ்டைல் உள்ள தரவாட்டில் மேல் அடுக்களை இப்படித்தான் மரமேசையுடன் இருக்கும். உக்கார பெஞ்சு போட்டுருக்கும். இங்கேயும் அதே!






மேசையின் ஒரு பக்கம் அழாகான கண்ணாடி ஜாடிகள்.  விதவிதமான  காஃபிக்கொட்டைகள். மேசையை ஒட்டி இருந்த  அரைச் சுவரின் மறைப்பில் அடுப்பாண்டை ஒரு பெண். ஓஹோ.... அப்ப அது கீழடுக்களை. சரிக்கும் கேரள வீடு தன்னே!

கொஞ்சம்   சாக்லேட் கொண்டு வந்து வச்சாங்க.  கோக்கோதான் காய்ச்சுத் தொங்குதே!

சூடான காஃபிக்குக் காத்திருந்தோம். பத்தே நிமிசத்தில் ஒரு ட்ரே முழுக்க கண்ணாடிக் கப்புகளில் காஃபி வருது. நாம் ரெண்டே பேர்தானே? எதுக்கு இத்தனை கப்? ஒருவேளை எல்லாருக்கும் சேர்த்தே தயாரிச்சு இருப்பாங்களாயிருக்கும். அங்கே ரெண்டு சின்னப்பசங்க ஒருமூலையில்  விளையாடிக்கிட்டு இருந்தாங்களே.


எல்லா கப்புகளையும்  ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி  நமக்கு முன்னால் வச்சாங்க. ஏழு கப்பு! என்னன்னு வாயைத்திறந்து விசாரிப்பதற்குள் இன்னொரு ஆறு கப் வந்து  வரிசைக்கு எதிர்வரிசையா உக்காந்துச்சு.  முக்காப்லா டீம்?

மெனு கார்டைக் கொண்டு வந்து எங்க கையில் கொடுத்துட்டு ஒரு சாஸரில் ரெண்டு ஸ்பூன்ஸ் வச்சாங்க. ஏழு வரிசை காஃபி ,ஆறு வரிசை டீ!  எல்லாத்தையும் டேஸ்ட் பண்ணிக் குடிக்கணுமாம்.


பாலி, கோகோனட், ஜின்செங், வனிலா, ஜிஞ்சர், ரெட் ரைஸ் இப்படி காஃபி வகைகள்.   லுவாக் இருக்கான்னு பார்த்தேன். நல்லவேளை இல்லை!
!
டீயிலும்  டாமரிண்ட் & ஸாஃப்ரொன், ஜிஞ்சர், லெமன்க்ராஸ், ரோஸல்லா,  லெமன்,  ரெட் ரைஸ் டீ! தேயிலைச் செடிகள் எங்கே இருக்குன்னு கேட்டால்.... அந்த டீ வகைகளில் தேயிலையே  கிடையாதாம் !!!  நோ டீ இன் டீ:-))))


  அஞ்சாறு கோப்பைகளில் இருந்ததை ஸ்பூனால் எடுத்து ருசி பார்த்தோம். காஃபி ஆசையே என்னைவிட்டுப் போயிருச்சு என்பதே உண்மை:-)  அதுக்காக.....   ?

ஆவலா நம் முகம் பார்த்து  நிற்கும்  டேப சாரி பணியாளர்களிடம் ,

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
 நன்மை பயக்கும் எனின்

என்று தாடி சொல்லி வச்சுட்டுப் போனதை மனதில் நினைத்து  நல்லா இருந்தது. நன்றின்னு சொல்லிக்  கிளம்புனதும்  தோட்டம் கடந்து முகப்பில் உள்ள  இன்னொரு பெரிய குடிலுக்குக் கொண்டுபோகப்பட்டோம்.

இது கடை! ரகம்ரகமான  காஃபி, டீ, வாசனைப்பொருட்கள். மசாலா சாமான்கள் எல்லாம் வச்சுருக்காங்க. லுவாக் பக்கம் திரும்பாம,   பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு  பாலி ப்யூர் காஃபிக்கொட்டை வெறும் நூறு கிராம் பாக்கெட் ஒன்னு வாங்கினோம். எழுபத்தியஞ்சாயிரம் ரூபாய். இங்கே நம்மூருக்குக் காஃபி,டீ கொண்டுவரலாம். டிக்ளேர் செஞ்சுடணும். (இன்னும்  அதை திறக்கவே இல்லை!)


காஃபி நல்லா இருந்ததா என்று கேட்ட ந்யோமேனுக்கு(ம்) அதே குறள் தான்:-)  ஒரு கிராமத்தினூடாக வண்டி போகுது.   உபுட் என்ற   ஊர் வந்துருச்சாம். வீடுகளின் மதில்களில் எட்டிப்பார்க்கும்  வீட்டுக்கோவில்கள் எல்லாம் தாண்டி அடர்த்தியான மரங்களுக்கிடையில் போகும்  சாலையின் வழியாகப்போய்  வலது பக்கம் திரும்பிக் கொஞ்சதூரத்தில்  நாம் தங்கப்போகும் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
 ரெண்டே நாளில்  எங்களோடு அருமையாக பழகி  மனசில் இடம்பிடிச்ச   ந்யோமேனுக்கு  கொஞ்சம்  ருப்பைய்யா அன்பளிப்பாக் கொடுத்ததும்  அவர் கண்ணில் மின்னின மகிழ்ச்சியைப்பார்க்கணுமே!  இப்படி வெகுளியா இருக்காரே! நல்ல பையர். நல்லா இருக்கட்டும்!

தொடரும்...........:-)







38 comments:

said...

காபி தயாரிக்கும் இடத்தில் காபி குடிக்கும்போது ஏனோ பிடிப்பதில்லை :)

சுவையான தகவல்கள்..... கூடவே புனுகுப்பூனை காபிக்கொட்டையின் விலை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி.... [இதை முன்பே படித்திருந்தும்!]

said...

படித்து முடித்ததும் காப்பிப் பிரியரான
எனக்கு ஏக்கம் கூடியது நிஜம்
குறிப்பாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட
கிண்ணங்களைப் பார்த்ததும்....
நேரில் பார்ப்பதைப் போல படங்களுடன்
பகிர்வு மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

said...

படங்கள் மனதிற்கு இனிமை...

ரசிக்க வைக்கும் தகவல்களுக்கு நன்றி...

said...

நல்ல தரமான காஃபிப் பழங்களைப்பொறுக்கி எடுத்துத் தின்னுமாம். தின்னட்டுமே...//படங்களும் விளக்கமும் அருமை

said...

பூனைக்காபி ஏற்கனவே வாசிச்சிருந்தாலும் இப்ப வாசிக்கறப்பவும் அதே'யக்'தான் தோணுச்சு.

ஆகவே, அதை மட்டும் தவிர்த்து மற்ற காபியெல்லாம் மும்பைக்குப் பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..

உங்கூட்டுக் காபிச்செடி எனக்கும் ஞாபகம் வந்தது நிஜம்.

said...

விலை எவ்வளவா இருந்தா என்ன? பூனைக்காபியா இருந்தா என்ன? ... இதுவரை காபியே குடித்திராதவளுக்கு...:)))

படங்கள் எல்லாமே அழகு..

said...

இப்பத்தான் எனக்கு விவரமே புரியுது. காப்பி பழங்களைத் திங்குறதாலதான் புனுக்குப்பூனையோட புனுகு வாசனையா இருக்குதா! :)

said...

காபி குடிக்க மாட்டேன் ஆனா காபி மணம் பிடிக்கும். படமும் பிடிக்கும்.

///கிளைகளில் முத்துமணிகளை வரிசையாக் கோர்த்துப்பிடிச்சுருக்கும் காஃபிச்செடிகளைக் கண்டதும் கண்கள் விரிஞ்சது உண்மை///

முதல் முதலாக காபிச்செடிகளைப் பார்த்த நினைவு வருது துள்சிம்மா :)

said...

சாக்லேட் எப்பிடி இருந்துது ...
அண்ட்உங்க வீட்டுச்செடியில் காய்த்த காபி யின் லிங்க் ப்ளீஸ் ...

said...

"உலக்கை அரசி" -ன்னு ஒங்களுக்குப் பட்டம் குடுக்குலாம்-ன்னு இருக்கேன் டீச்சர்:)

அந்தப் படத்தைப் பாக்கும் போது எங்க பெரிய அத்தை ஞாபகம் வந்துருச்சி..

சின்ன புள்ளைல நான் ஊருக்குப் போகும் போதெல்லாம், எனக்காகவே உலக்கை-ல புதுசாக் குற்றுவாங்க!
வேணாம் அத்தை, ஒங்களுக்கு மூச்சு வாங்குது-ன்னாலும் கேக்க மாட்டாங்க!

ணங் ணங் -ன்னு அந்தச் சத்தமே கன கம்பீரமா இருக்கும்! மர உலக்கை-ன்னாலும் பூண் சத்தம்!

கைக் குற்றல் அரிசி மணமோ மணம்; கீரைக் கொழம்பு/ கருவாட்டுக் கொழம்பு - ரெண்டுத்துக்குமே நல்லா இருக்கும்; பச்ச நெல்லு வாசனையோட, கொழம்பு வாசனை!:)

அத்தையும்-மாமாவும் மறு அம்மா-அப்பா மாதிரி;
மாமா, என் பேரையே மாத்திக் கூப்புட்டு, பசங்க முன்னாடி மானத்தை வாங்குவாரு.. செல்லமா:)
ஆனாலும் அந்தப் பேரு எனக்கு ரொம்பப் புடிக்கும்! That name reserved only for Murugavan:)

said...

ஏன் ஒங்களுக்குக் காபி புடிக்கலை-ன்னு தெரியலை;
Black Coffee யே ரொம்ப தண்ணியாக் குடுத்துட்டாங்களோ?

சில தோட்டங்களில், காபி/ டீ நல்லா இருக்கும்;
இயற்கையான முறையில் மணமாப் பறிச்சி, நம்ம முன்னாடியே கொதிக்க வச்சித் தருவாங்க!
பால்/சருக்கரை வகையறாச் சேத்துக்கறதும் சேத்துக்காததும் நம்ம விருப்பத்துக்கு விட்டுருவாங்க!

தொண்டு நிறுவனம் மூலமா, ஈழம் போன போது, கதிர்காமம் போகும் வழியில்..
நுவரேலியா -ன்னு ஒரு Tea Plantation (தேயிலைத் தோட்டம்); கண்டி பக்கம் தான்-ன்னு நினைக்கிறேன்; அங்கிட்டுக் கூட்டிப் போனாங்க! அருமையான தேநீர்!

எனக்குத் தான் எண்ணமெல்லாம் வேற எங்கேயோ இருந்துச்சி..
இது போலக் காடு/ தோட்டம்/கதிர்காமம் -ன்னு மனசுக்குப் பிடிச்சவங்களோட போகணும்! பல விதமான காபி வகைகளைக் குடிக்கணும்:)

said...

// பழம் மட்டும் செரிச்சு, செரிக்காத கொட்டைகள் 'வெளியே' வருது பாருங்க.. Luwak Coffeeன்னு//

உவ்வேக் காபி -ன்னு சொல்லுங்க:)

//Luwak, the Asian Palm Civet//

நீங்க காபிக்குச் சொல்றீங்களே டீச்சர்..

துட்டு இருக்குது-ன்னு, திருப்பதியில், பெருமாளுக்கு, இந்தப் "புனுகில்" அபிசேகமே நடத்துறானுங்க! உவ்வேக்:(
Search for Civet Vessel & Musk Vessel in Tirumala Abhishekham!

எந்த சாஸ்திரக்காரன் கெளப்பி விட்டானோ, புனுகு, அரச போகப் பொருள்-ன்னு...

உம்... அந்த வாசனை அப்படி; கடவுள் இப்படியா படைப்பான் இந்த விலங்குகளை?
அதன் அந்தரங்க உறுப்பில் வாசம் வருது என்ற ஒரே காரணத்துக்காக, எத்தனை வேட்டைகளோ? :( அதுவும் அவற்றின் சம்போகத்தின் போது?:(( முருகா!

இப்பல்லாம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு போல; Synthetic Civet பயன்படுத்துறாங்க!
Jovan Musk எனக்குப் பிடிச்ச Perfume! ஆனா வாங்க மாட்டேன்; Synthetic ன்னு முத்திரை இருந்தா மட்டும் எப்பவாச்சும் முகந்து பார்ப்பேன்!

said...

படங்கள் செய்திகள் எல்லாமே அழகு புதுசு.... புனுகுப்பூனை காபிக்கொட்டையா?:)

said...

லூவாக் உவாக்னு தோணறது துளசி. வித விதமான டேஸ்ட்.கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்திருக்கலாமோ வேற மாதிரி இருக்கே அந்த உலக்கை!
எங்க போனாலும் கேரள நினைவுகள் துரத்துதே இப்படி.

said...

நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது- புனுகுப் பூனை காப்பி கொட்டையும் இப்படித்தான்!

அத்தனை கப்புகளில் இருந்த காபி வகைகளையும் ரெண்டுரெண்டு ஸ்பூன் ருசி பார்த்துவிட்டு - அப்புறம்? எதையுமே முழுசா குடிக்கலையா?

அமெரிக்க டாலர் 17 1/2 என்பது எப்படி ஒரு லட்சத்து...? கணக்கு புரியவில்லையே!

காலையில் உங்கள் பதிவுடன் சேர்த்து எங்க ஊர் கோத்தாஸ் காபி குடித்தாயிற்று!


said...

சிக்மங்களூரில் காஃபி எஸ்டேட் சென்றிருக்கிறோம்.

அளவுக்கு மிஞ்சினால்.. கதைதான். எத்தனை கப்?

காஃபி குடிப்பதில்லை. ஆனால் காஃபி சாக்லேட் பிடிக்கும்.

புனுகுப் பூனை, புதிய செய்தி. யக்தான்:)!

காஃபி பவுடரைக் கொண்டு இப்போது ஓவியங்களும் தீட்டுகிறார்கள்.



said...

எத்தனைவகையான காப்பிகள்.
தினம் ஒன்றாக குடித்தால் சுவைக்கும்.ஒரே தடவையில் சுவைப்பதுதான்:))

நம்நாட்டில்கொக்கோ,தேயிலை,காப்பி, மிளகுசெடிகள் மலைநாடுமுழுதும் நிறைந்திருக்கும்.

said...

உப்பிட்டவர்களை உள்ளவும் மறவேன். என் பிறந்தநாளுக்கு மறு அழைப்பு விடுத்தாச்சு .அங்க இன்னும் அதி விசேச உணவுகள் பரிமாறப் படும் ஓடி வாங்க தோழி :)
http://rupika-rupika.blogspot.com/2013/07/blog-post_14.html

said...

வித்தியாசமான அனுபவங்கள்! ரசனையான படங்கள். வழக்கம்போல அசத்தல். லுவாக் காஃபி... ஆத்தீ... இனி இந்தப் பெயரை எங்கு கண்டாலும் கவனமாக இருக்கவேண்டும் போலும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரே சமயத்தில் ஏழெட்டு வகைன்னா எப்படி ருசி தெரியும்? அதான் பிடிக்காமப் போயிருது:(

said...

வாங்க ரமணி.

என்னதான் நாம் காஃபி பிரியர்களா இருந்தாலும் ஃபில்ட்டர் காஃபியை ரசிப்பதுபோல் மற்றவைகளை ரசித்து ருசிக்க முடிவதில்லை.

ஒருமுறை எல் ஏ ஏர்ப்போர்ட்டில் காஃபிக்கு அலையும் நாக்கை சமாதானப்படுத்த ஆங்கிருந்த ஒரு காஃபி ஷாப்பில் காஃபின்னு கேக்க அவுங்க ஸ்ட்ராங்கான்னு கேட்டதுக்கு தலைவலி போகட்டுமேன்னு ஆமாம்னு தலையாட்டி வச்சேனா......

கட்டக்கடுப்பா வெறும் டிக்காஷன் ஒரு அரைக்கால் டம்ப்ளர் கொடுத்தாங்க. நோ பால் வேற. அஞ்சு டாலர் போச்சேன்னு மனசில் அழுதுக்கிட்டு கொஞ்சம் வெந்நீர் ஊத்திக் கட்டங்காப்பியா கொஞ்சூண்டு குடிச்சு வச்சேன்:(

காஃபின்னா அது ப்ளாக் காஃபின்னு அப்போ யாருக்குத் தெரியும்? வருசம் 1996

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க கவியாழி கண்ணதாசன்.

பழத்தைத் தின்னுட்டுக் கொட்டை போட்டுருச்சு பாருங்க:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

வெறும் 100 கிராம்தான். அதை பார்ஸல்
செஞ்சுடலாம்:-)

நம்ம காஃபிச்செடியில் ஒயிட்லைஸ் வந்து குற்றுயிராக்கிடக்கு. எல்லா இலைகளையும் தரிச்சுட்டு குளிரில் ஃப்ராஸ்ட் க்ளாத் போட்டு வெளியில் நிக்க வச்சுருக்கேன். பனிஷ்மெண்டுதான்!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

இது யானைக் காஃபியா இருந்தால் விலை இன்னும் பலமடங்கா ஆகி இருக்குமில்லே:-))))

காஃபி குடிக்காத புண்ணீயவதிக்கு என் ஆசிகள்.

நாங்கதான் விட்டுத்தொலைக்க முடியாமக் கிடக்கோம்:(

said...

வாங்க ஜிரா.

இது அதர் வே ரௌண்ட். இயற்கையா அதுக்கு இருக்கும் வாசனையைக் காஃபியில் ஏத்தறாங்க இப்படி!

said...

வாங்க கவிதாயினி.

காபி குடிக்காத புண்ணீயவதியே.... கோடிவணக்கங்கள்.

தோட்டத்தில் அடையடையாக் காய்ச்சுக்கிடப்பது பார்க்கவே வியப்புதான்,இல்லே?

நான் முதல்முதலில் பார்த்த காஃபி பழமே நம்மூட்டுதுதான்.

said...

வாங்க சசி கலா.

சாக்லேட் சுமார் ரகம்தான். இங்கே நியூஸியில் காட்பரி சாக்லேட் ஃபேக்டரி இருக்கு. சூப்பர் டேஸ்ட் கேட்டோ!!!

said...

வாங்க கே ஆர் எஸ்.

இந்த உலக்கைக்கு இரும்பு பூண் இல்லை.மொட்டையாத்தான் கிடக்கு. வறுத்த கொட்டைக்கு அதே போதுமுன்னு இருக்கோ என்னவோ?

முன்னொரு காலத்தில் வீட்டுலே காஃபி அரைக்கும் மெஷீன் கைப்பிடி உடைஞ்சு போனபோது, உரலில் போட்டு சின்னதா கடப்பாரை போல ஒரு இரும்பு உலக்கையில் குத்திப்பொடி பண்ணினது ஞாபகம் வருது இப்போ!

ஓம் முருகா:-)

ஒரே சமயம் ஏழெட்டு வகைன்னா எப்படி ருசி தெரியுமாம்?

நீங்க சொல்லும் நுவரேலியாவுக்கு தோழி ஒருத்தர் போயிட்டு வந்தப்ப டீத்தூள் அளந்து போடும் பீங்கான் ஸ்பூன் அழகான மரப்பெட்டியில் வச்சது நினைவுப்பொருளா வாங்கிவந்து கொடுத்தாங்க. கூடவே அங்கே பக்கத்திலிருக்கும் சீதைக்கோவிலை (அசோகவனமாம்) க்ளிக்கிக் கொண்டு வந்ததும் எனக்கான ஸ்பெஷல்.


புனுகுப்பூனையும் பாவம், பெருமாளும் பாவம்தான்:(

இப்பக்கூடக் கோவில்களில் புனுகுச்சட்டம் சாத்தறாங்களே:(

said...

வாங்க ஷைலூ.

ரசனைக்கு நன்றி.

ஆமாம்ப்பா... பூனைக்காஃபி:(

said...

வாங்க வல்லி.

யக்கோ யக்கி....... எப்படிப்பா குடிக்க முடியும்...உவ்வே:-(

அந்த ஊரில் இருந்தப்ப கேரள வாசம் தூக்கியடிச்சது. அடுத்த பதிவை பாருங்கப்பா.

said...

வாங்க ரஞ்ஜனி.


ஹைய்யோ..... மூலத்தால்தானேப்பா உவ்வே ஆறது:-))))

ஒரு டாலருக்கு பத்தாயிரம் ருப்பைய்யா. இப்போ கணக்கு சரியா வருதா:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதே அதே... அளவுக்கு மிஞ்சித்தான் போச்சு:( அதுவும் ஆறி அவலா இருந்தால்.... த்சு....


காஃபி ஓவியங்கள் அருமை! அதுவும் புள்ளையார் அருமையா அழகா இருக்கார்!

காஃபி சாக்லேட் ருசி எனக்கும் பிடிக்கும்!

said...

வாங்க மாதேவி.

சொன்னது ரொம்பச் சரி.

இந்தியாவிலும் இவை உள்ள இடங்கள் இருக்குன்னாலும் நமக்கு பாலியில்தான் வாய்ப்பே கிடைச்சது!

said...

வாங்க அம்பாள் அடியாள்.

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

ஊருலகத்தையே கலக்கிட்டீங்க:-))))

said...

வாங்க கீத மஞ்சரி.


ரசித்தமைக்கு நன்றீஸ்.

லூவாக் நினைவு இருக்கட்டும். உவ்வே லூவாக்குன்னு சொல்லிப் பழகிக்கலாம்:-)))

said...

link anuppavey illa ye . the article where you wrote about your house coffee seed

said...

என்னமா எழுதுறீங்க... அட்டகாசம்..