Wednesday, February 12, 2014

ஓசைப்படாமல் ஒரு புத்தக வெளியீடு

டிசம்பரும் ஜனவரியும்  சென்னையைப் பொறுத்தவரை  அதகளம்தான்.  எங்கேயும் எப்போதும்  சங்கீதம்தான். இசைவிழா நிகழ்ச்சிகளுக்குப் போக ஆசை இருந்தாலும் நேரம் வாய்க்கணுமே!  எதாவது கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

நாம் தங்கி இருக்கும் இடத்திலும் தினசரிகள் பல வந்தாலும் எனக்குத் தேவையான  ஹிண்டு பேப்பர் ஒரே ஒரு காப்பிதான் வரும். காலையில் ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போகும்போது  எடுத்துக்குவேன்.  அதில்தான்  அன்றைக்கான இசைவிழா நிகழ்ச்சிகள்  வரும். யாருமே தொடாமலது  தனியாக அம்போன்னு கிடக்கும். புதுத் தலைமுறைகளுக்கு   தேவையான சுவாரஸியமான சேதி ஒன்னும் அதில் வர்றதில்லை போல! . படிக்கும் காலங்களில்  ஹிண்டு பேப்பரைப்போல் டார்ச்சர் வேறொன்னுமில்லை. தினமும் அதைப் படிச்சால்தான் இங்கிலீஷ் நல்லா வரும் என்பதில் எங்கவீட்டுப் பெரியவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இதுலே புரியாத சொற்களை டிக்ஷ்னரி பார்த்து வேற  தெரிஞ்சுக்கணும்.

எரியும் தீயில் எண்ணெய் விடுவதைப்போல கோபாலும் நெட்டில் பார்த்து  இன்னிக்கு   இவுங்க கச்சேரி இருக்கு,அவுங்க கச்சேரி இருக்குன்னு
 நமக்கிஷ்டமான பாடகர்கள் பெயரைச் சொல்வார். மனசில்லா மனசோடு இருந்துட்டுப் போகட்டுமேன்னு சொல்றதுதான்.........

நாளைக்கு ராஜேஷ் வைத்யான்னார்.

  ஹைய்யோ!!!  இவர் வாசிப்பைக் கேக்கணுமுன்னு எத்தனை வருசம் தவம் கிடந்தேன்.  ஹூம்.....  அடுத்த முறை எப்பவாவது  கிடைச்சால் போகலாம்.


நாளைக்கு மாலை ஒரு  ஆன்மீக அன்பரைப் பார்க்கணும்.  இவர் உண்மையில் ஒரு சித்தர். அவரை முன்பொருக்கில் சந்தித்து உரையாடும் பேறு அமைஞ்சது.  கோபாலுக்கு அவரை சந்திக்கணுமுன்னு  ஆவல் உண்டானதே... அப்பப்ப அந்த சந்திப்பைப் பற்றி நான் சொல்லிக்கொண்டு இருந்ததால்தான். சித்தர் போக்கு சிவன் போக்கில்லையா? அவர் எங்கே எப்போது  வருவார்ன்னு  நமக்கெங்கே  தெரியும்.  அந்த  அன்பரின் ஆன்மீகக்குழுவில்  இருப்பவரிடம்  நம் சென்னைப்பயணம் பற்றியும் அந்த நாட்களில் பெரியவரை சந்திக்க எதாவது சான்ஸ் உண்டான்னும் கேட்டிருந்தேன்.


கோபாலுக்கு அடிச்சது யோகம்.  நாளை  சந்திக்கலாம் என்று பெரியவர்  சொல்லி இருக்கார்.  அதனால் மாலை  வேறெந்த  ப்ரோக்ராமும்  வச்சுக்கலை நாங்க. அப்பப்பார்த்து   ராஜேஷ் வைத்யா.....  ஹூம்...........



  அருளும் பொருளும் குறைவறாது நிறைந்து வழியும்  வேற ஒரு  'பெரிய'மனிதருக்கு  என்ன நினைவுப்பரிசு  கொடுக்கலாமுன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு யோசிச்சு,  நியூஸியின் இயற்கை அழகு  படம் ஒன்னு வாங்கிப் போயிருந்தோம். சென்னையில்  அதுக்கு ஃப்ரேம் போட்டுக்கும் எண்ணம்.  பாண்டி பஸாரில் கடையைத் தேடுனப்பதான் நடைபாதைகள் வெறிச்சோடிக் கிடப்பதைக் கண்டேன். இந்தக் கடைகளை எல்லாம் வேறு ஒரு வளாகத்துக்கு மாற்றிட்டாங்களாம். ரொம்ப தொலைவில் இல்லை. இங்கேயேதான்.
(அடடா.....  பிழைதிருத்தம் செய்யலையா யாரும்?  வனிக= வணிக )

நடைபாதையில் ஹாயா நடக்கலாமுன்னா......  கண்ணு தெரியாத காலத்துலே  விழுந்து வைக்கப்போறோமோன்னு  பயம்தான்.  நானாவது பரவாயில்லை......  ஓடியாடும் விவரம் புரியாத சின்னக்குழந்தைகளுக்கு  ஆபத்தா இருக்குமே:(

குழியைச் சுற்றி அரண் போட்டு வச்சுருக்கும் அழகைப் பாருங்க:(

கடைகளை மட்டும் காணோமே தவிர அழுக்கு குப்பைகள் எல்லாமப்படியேதான் இருக்கு. பாண்டிபஸாரின் பெயரை மாத்தி இருக்காங்க போல! இப்ப அது  சவுந்திர பாண்டியனார் அங்காடி(யாம்!)  ஸர். தியாகராயா  சாலையும்  சவுந்திர பாண்டியனார் சாலையாக இருக்கு. ஓ.... அப்ப இந்தப் பாண்டி... அந்தப் பாண்டியா!!!!  அட! இதுவரை பாண்டி பஸார் என்ற பெயர் எப்படி வந்துருக்குமுன்னு  நினைச்சுக்கூடப் பார்த்ததில்லையே!


ஒரு பெரியவருடைய  கடையில் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில்) படத்தைக் காண்பிச்சு ஃப்ரேமும் செலக்ட் செஞ்சு அதுக்கு அவர் சொன்ன  சார்ஜையும் கொடுத்துட்டு வந்தோம். மறுநாள் வந்து வாங்கிக்கச் சொன்னார். இந்த வயதிலும் உழைக்கிறாரே என்ற எண்ணம் வந்தாலும்,  அவரை நினைக்கும்போது பெருமையாகத்தான் இருந்துச்சு. மலைக்குப்போக  மாலை வேற போட்டுருக்கார்.

கொஞ்சம் துணிமணிகள் தைச்சுக்கணும். அவரவர் டெய்லர்  கடைக்குப்போய்  கொடுத்துட்டு வந்தோம்.  அப்படி இப்படின்னு நேரம் போயிருச்சு.  பகல் சாப்பாட்டுக்குப்பின் கொஞ்ச நேர ஓய்வு. அப்ப  எதிர்பாராமல் ஒரு  ஃபோன்.  மறுநாள் நம்மைச் சந்திக்கப் போவதாகச் சொன்ன பெரியவர்  இன்று மாலை நமக்கு முடியுமானால்   சந்திக்கலாமென்று  சொன்னாராம்.

கரும்பு தின்னக் கூலியா?   எத்தனை மணி, எங்கே  என்ற விவரம் எல்லாம் கேட்டு, சரியாக சத்சங்கத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். நேரம் ஓடுனதே தெரியலை.  கோபாலுக்கு  ரொம்ப மகிழ்ச்சி. அதிசயமாக நான்  வாய்மூடி மௌனியாக இருக்க, அதிசயத்திலும் அதிசயமா  நம்ம கோபால் அவரிடம் பல ஆன்மீக விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார்.

இந்த சந்திப்பு பற்றியும் ஆன்மீக அன்பரைப்பற்றியும்  இந்த சத்சங்கக் குழுவினர் யாரும் வெளியாட்களிடம்  பொதுவாக பேசுவதில்லை என்ற நிலை காரணம், இன்னும் ஒன்னும் விவரிக்க முடியாமல் இருக்கேன். மன்னிக்கணும்.  வேளை வரும்போது சொல்வேன்.

இப்ப எதுக்கு  அவரைப்பற்றிச் சொல்றேன்னா..........        நம்ம காசி பயணத்தைப்பற்றிச் சொல்லி  அவருடைய ஆசிகளை பெறுவது என் நோக்கம். காசிக்குப்போனால் எதையாவது விட்டுடணும் என்று சொல்றாங்களே...  நான்  கொஞ்சநாளாய் யோசிச்சுப் பார்த்துக் கோபத்தை விட்டுடலாமுன்னு  நினைக்கிறேன்.  நீங்க என்ன சொல்றீங்கன்னு  கேட்டதுக்கு அவர் சொன்ன பதில்..........

"கொஞ்சம் ப்ராக்டிக்கலா இரும்மா."

உண்மைதான். அப்படிக் கோபத்தை மட்டும் விட்டிருந்தேன்னா.....   ஒரு நாளிலேயே  உலகை விட்டுருப்பேன்.  அந்த அடக்கின  கோபமே என்னை முடிச்சிருக்கும்.  பெரியவர் வாக்கு  சத்தியம்!

ரௌத்திரம் பழகுன்னு அன்னிக்கே முண்டாசு சொல்லி வச்சுட்டுப்போனார். நமக்குப் புதுசா இனி பழகிக்க வேணாம். ஏற்கெனவே இருப்பதை விட்டுடாமல் இருப்பதே  சிறந்தது போல!  எல்லாம் கலிகாலம். ரௌத்திரம் விடேல்

சத்சங்க நிகழ்ச்சி முடிஞ்சு  நாங்கள் பெஸண்ட் நகர் பக்கம் போக நேர்ந்துச்சு. அப்படியே அறுபடை வீடு கோவில்களுக்குப்போய் தரிசனம் செஞ்சுக்கிட்டோம். கூட்டம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. ஒருவேளை  வெள்ளி என்பதாலோ என்னவோ? இந்தக் கோவில்  பற்றி முந்தி  எழுதியது இங்கே.


என் தோழி , நம்ம சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷை, பல பதிவுகளில்  உங்களுக்குச் சொல்லி இருக்கேனே...யாருக்காவது நினைவு இருக்கா? அவர்களைவிட அவுங்க பெற்றோர்கள் எனக்கு ரொம்பவே நெருக்கம். என்  அப்பா அம்மான்னும் வச்சுக்கலாம்.  அவுங்களையும் இன்னிக்கே போய் பார்த்துட்டு வர எண்ணம். தோழியும் ஏற்கெனவே வருசாந்திர விடுமுறைக்கு வந்துருக்காங்க. அங்கே போனால் முழுக் குடும்பமுமாச் சேர்ந்து ஒரே கலகல:-)

தோழி , ஒரு புத்தகத்தை என் கையில் வச்சாங்க.  நகரத்தின் கதை. ஆஹா.....   சிங்கை பத்திரிகையில்  தொடராக வந்தது இப்போ புத்தகமாக!  வெளியீடு நடத்தியாச்சான்னால்.....  அதெல்லாம் ஒன்னும் இல்லையாம். அட ராமா...... சும்மா விடலாமோ?  அங்கேயே அந்தக் கணமே புத்தக வெளியீடு நடத்திட்டோமுல்லெ;-) கோபால் முதல் பிரதியை வெளியிட்டார்.  நான் நிகழ்ச்சியை கவர் செஞ்ச ஃபொட்டோக்ராஃபர்:-) நல்லகூட்டம்தான் எங்க நியூஸிக் கணக்கில். அதான்  ஒன்பது பேர் இருந்தோமே!

எழுத்தாளருக்கு எதாவது கையில் கொடுத்து ஆசி பண்ணுங்கன்னு கோபாலிடம் சொன்னதுக்கு  பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தார்!  'கஞ்சர் கோபாலுக்கு'ன்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுத்தாங்கன்னு  சொன்னேன்:-))

சிங்கையில் புத்தக வெளியீடு வைப்பாங்களான்னு தெரியலை. ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க சிங்கை பிறந்த கதையை!

பதிப்பகம்: தமிழ்வனம்
பக்கங்கள் :224
விலை :  இந்தியாவில் 250 ரூ
சிங்கையில்  25 வெள்ளி

தொடரும்......:-)



26 comments:

said...

நடைபாதையில் இவ்வளவு 'அழகு' செய்தவர்கள் நடுவில் குறுக்காக ஒரு பலகையோ + நீண்ட குச்சியாவது சொருகி வைக்கக் கூடாதா...? ம்...

பெரியவர் வாக்கு சத்தியம் தான்...

புத்தக வெளியீடு - அவருக்கு மேலும் உற்சாகத்தினால் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்...

said...

எளிமையான புத்தக வெளியீட்டு விழா. வாழ்த்துக்கள்.

said...

சென்னை அனுபவம்: நடை பாதை காட்சி பயம் ஏற்படுத்துகிறது.
வயது ஆனாலும் உழைப்பவர் நமக்கு புத்துணர்ச்சி தருகிறார்.
எளிமையான புத்தகவெளியீடு எல்லாம் அருமை.

said...

//"கொஞ்சம் ப்ராக்டிக்கலா இரும்மா."//

ரொம்பவும் சரி..

said...

போனவாரம் பார்த்தேன். நடைபாதை கடைகள் வந்திருக்கு. நல்லி வாசலில் மாகாளி கிழங்கு வாங்கி வந்தோம். :))

/"கொஞ்சம் ப்ராக்டிக்கலா இரும்மா."//

படிக்கும்போது முதல்ல சிரிப்பு வந்தாலும் பல சங்கதிகளை சொல்லுது டீச்சர்.

said...

மரத்தடி காலத்தில் இருந்து உங்கள் எழுத்தைப் படித்து வருகிறேன். நன்றாக எழுதுகிறீர்கள்

said...

//ஓ.... அப்ப இந்தப் பாண்டி... அந்தப் பாண்டியா!!!! //

எனக்கும் இதே டயலாக் தான் அந்த போர்டு பாத்தப்ப தோணிச்சு .

ஆன்மீகப் பெரியவர் சொன்னது போல் கோவப்படாமல் இருக்க முடியாது தான் . சரியான விஷயத்துக்கு ரௌத்திரம் தான் நியாயமான தீர்வு கொடுக்கும் .
புத்தக வெளியீடு போட்டோவில் அந்த சந்தோஷ முகங்கள் .... வரிசையாக அந்த மூன்று பேரின் முகத்திலும் எவ்வளவு சந்தோசம் ...முழு பெருமையும் நடத்திவைத்த துளசிக்கே .

said...

சௌந்தபாண்டிய பஜார் ஹ்ம்ம் இங்குதான் பாண்டியனார் கடைவிரித்தாரோ}}}} நல்லவேளை எனக்குப் பாண்டியனின் பஜாருக்குப் போக வேலை இல்லை. பெரியவர் வாக்கு எப்போதாவது பலிக்கும். சித்ராவுக்கு வாழ்த்துக்கள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நம்ம இந்தியாவில் மனுச உயிர்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை:(

அதான் கண்ணு இருக்கே பார்த்துப் போகக்கூடாதான்னு அடிபட்டவரைத்தான் குற்றம் சொல்வாங்க:(

தோழி சித்ராவின் சார்பில் வாழ்த்துகளுக்கு நன்றி.

பெரியவர் சொன்னா....அது பெருமாளே சொன்னமாதிரிதான்!

said...

வாங்க கவிப்ரியன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க கோமதி.

அருமையாகச் சொல்லிட்டீங்க.
மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க சாந்தி.

அன்னிக்கு அவர் மட்டும் வேறமாதிரி சொல்லி இருந்தாருன்னா....... நான் அம்பேல்!!!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அட! வந்துட்டாங்களா?

நாங்க கிளம்பும் கடைசிநாள் ஒரு பூக்காரம்மா மட்டும் நடைபாதை மரத்தடியில் இருந்தாங்க.

வளாகத்துலே வியாபாரம் ஒன்னும் சரி இல்லை. நாங்க திரும்ப இங்கே வந்துடப்போறோமுன்னு கோபால் கிட்டே சொன்னாங்களாம்.

நம்ம மக்களுக்கும் ஓரடி கூட நடந்து வளாகத்துக்குள் போய் வாங்கிக்க சோம்பல். எல்லாம் நினைச்ச இடத்துலேயே கிடைக்கணுமுன்னா எப்படித்தான் நகரை சீர்படுத்துவது?

said...

வாங்க சாந்தி.

அன்னிக்கு அவர் மட்டும் வேறமாதிரி சொல்லி இருந்தாருன்னா....... நான் அம்பேல்!!!

said...

வாங்க Samkev.

முதல் வருகைக்கு நன்றி.

ஆஹா....மரத்தடி காலம் முதலா!!!!!

எழுத்திலெதாவது முன்னேற்றம் இருக்கோ?

said...

வாங்க சசி கலா.

புத்தகம் வெளியிடும் மகிழ்ச்சி நம்ம கோபாலுக்கும் இருக்கட்டுமேன்னுதான்:-))))

வெளியீட்டு விழா எதுவும் நம்ம புத்தகங்களுக்கு நடத்திக்கலைன்னு அவருக்கு கொஞ்சம்(!!) வருத்தம் இருக்கத்தான் செய்யுது.

said...

வாங்க வல்லி.

பெரியவர் சொன்னால் பெருமாளே சொன்னமாதிரி இல்லையோ!

வாழ்த்துகளுக்கு நம்ம சித்ராவின் சார்பில் நன்றிப்பா.

said...

நிறைய. நல்ல முன்னேற்றம். நேரடியாக எழுதுகிறீர்கள். Regular ஆக படித்து வருகிறேன். ஊரு across the ditch தான். தங்களுக்கு PM/IM பண்ணுவது எப்படி?

said...

//'கஞ்சர் கோபாலுக்கு'ன்னு // :)))

பத்து ரூபாய் பத்துக்கட்டி வராகனுக்குச் சமம்! அன்பு மட்டும்தானே முக்கியம்! :)

மீண்டும் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி......

கோபத்தினை விட நினைச்சீங்களா... :))))

said...

புத்தக வெளியீடு என்று படித்தவுடன், உங்களது புத்தகம் என்று நினைத்தேன்.
உங்கள் கையால் புத்தகம் வெளியீடு என்றால் எத்தனை பெரிய பாக்கியம்! திருமதி சித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

said...

அறுபடை முருகன் கோயில் கட்டிய புதுசுல கூட்டமே இருக்காது. நிம்மதியாப் போயிட்டு வருவேன். இப்பல்லாம் கூட்டம் நெறைய வருது. கோயில்லயும் நிறைய விரிவாக்கங்கள். அனந்தனை எப்படி நிம்மதியா பாக்க முடியறதில்லையோ.. அதே நிலைதான் ஆறுமுகனுக்கும். போய் ரொம்ப நாளாச்சு.

அந்த வயதான பெரியவரின் உழைப்பு போற்றுதலுக்குரியது. இத்தன வயசுலயும் அவர் உழைச்சுதான் சாப்பிடனுங்குற நிலமை கொடுமை. அந்தக் கொடுமைல சோராம அவர் உழைக்கிறது பெருமை. முருகனருள் முன்னிற்கட்டும்.

said...

திருமதி சித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

/"கொஞ்சம் ப்ராக்டிக்கலா இரும்மா."//

தப்பித்தோம்.

said...

இப்ப அது சவுந்திர பாண்டியனார் அங்காடி(யாம்!) ஸர். தியாகராயா சாலையும் சவுந்திர பாண்டியனார் சாலையாக இருக்கு. ஓ.... அப்ப இந்தப் பாண்டி... அந்தப் பாண்டியா!!!! அட! இதுவரை பாண்டி பஸார் என்ற பெயர் எப்படி வந்துருக்குமுன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லையே!///

இந்த லின்கை கிளிக் செய்து பாருங்க துளசிம்மா.

said...

மாற்றியது முன்பே கேள்வி பட்டேன், ஆனால் சில காலம் கடந்து தான் அங்கு சென்றேன் :)

said...

வாங்க ரூபக் ராம்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஸாதிகா.

எந்த லிங்க்?

தாமதமான பதிலுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.