Wednesday, April 23, 2014

கங்கை முழுக்கு!!

காசிக்கு வந்துட்டு பித்ரு கர்மம் செய்யாமப் போகலாமா?
காலை  ஏழரைக்கு வந்துருங்கோன்னு சொன்னார்  சிவகுமார். விலாசம், வரும் வழி எல்லாம் கேட்டு  எழுதி வச்சுக்கிட்டோம். இவருடைய  தொலைபேசி எண் கொடுத்தவர், நம்ம  தாம்பரம் அத்தையின் மூத்தபிள்ளை.  காசிக்கு போறோமுன்னு  அத்தை வீட்டுக்குப்போய் சொல்லி நமஸ்காரம் பண்ணிட்டு  வந்திருந்தோம். இவுங்கதான் குடும்பத்தில் மூத்தவர்.  எல்லாக் கோவில் சமாச்சாரங்களும் விரல்நுனியில்! சுருக்கமாச் சொன்னால் எங்காத்து வேளுக்குடி!

மகன் இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னால்தான் காசி போயிட்டு வந்துருக்கார்.  சாஸ்திரிகள்  எல்லா கர்மாக்களையும் ரொம்ப அருமையாப் பண்ணி வச்சுருக்காராம்.   இவர் தமிழ்க்காரரும் கூட ! ஓக்கே. நாம் அப்போ அலையவேணாம்.  நல்லதாப்போச்சுன்னு  நம்பர் வாங்கி வச்சுக்கிட்டோம்.


ஏழுமணிக்கு வண்டி வேணுமுன்னு நம்ம கைலாஷிடம்  முதல்நாளே சொல்லிவச்சு, அவரும் சரியான நேரத்துக்கு வந்துட்டார்.  காஃபி மட்டும் குடிச்சுட்டுக் கிளம்பியாச்சு.  இப்போ போற இடத்துக்கு  அவர் சொன்ன வழியைப் பிடிச்சே  வந்து சேர்ந்துட்டோம்.  சந்து பிரியும் இடத்தில் நமக்காக  ஒருவர் காத்திருந்து  கூட்டிப்போனார்.  வாசலில் போட்டுருந்த பெயர்ப்பலகையை முந்தாநாள்  ராத்திரி தட்டுத்தடுமாறி இருட்டில்  வந்தப்ப பார்த்துட்டு  க்ளிக்கும் பண்ணினேன்னு விசாரிச்சால் இது   (அதே) ஹனுமன் காட்!

முன்வாசல்   ரேழி கடந்து  பெரிய தாழ்வாரத்தில் நுழைஞ்சால்  நேரெதிரா பெரிய முற்றம்.  வலக்கை ஓரத்தில்  மேஜை, நாற்காலிகள் சோஃபா எல்லாம் போட்டு சின்னதா ஒரு ஆஃபீஸ்.  சுவர் முழுக்க சட்டம் போட்ட படங்கள்.  கண்ணாடிக்குள் இருந்தாலும் காலத்தால் பழுப்பாகிக் கிடக்கு.

உத்துப்பார்த்தால்  வி ஐ பி கள்!  தெரிஞ்ச முகம் இருக்கான்னு  கவனிச்சதில்  நம்ம சிவாஜி!


சிவாஜி, நம்ம  ஜிராவுக்காக:-)

நம்ம சிவகுமாரின் தந்தை  ராமசேஷ சாஸ்த்ரிகளும்,  இன்னும்  சிலரும் (விஸ்வநாத சாஸ்த்ரிகள், வெங்கடராமன் சாஸ்த்ரிகள் )  ரொம்ப வருசங்களுக்கு முன்னேயே  காசிக்கு வந்து செட்டில் ஆகிய ஸ்வாமிமலைக் காரர்கள். இப்பவே  அஞ்சாவது தலைமுறை நடக்குது!  தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வைதீக விஷயமாகக் காசிக்கு  வரும் மக்களுக்கு  வேண்டிய சகல உதவிகளையும்  செஞ்சு தர்றாங்க.  காசி மட்டுமில்லாமல்  கயா, ப்ரயாக் (அலஹாபாத்)  போய்ச் செய்யும் வைதீக கர்மங்களுக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுக்கறாங்க.  அங்கெல்லாம் போய்வர வண்டிகள் கூட இவுங்க மூலமா எடுத்துக்கலாம்.

அந்த  சந்துக்குள்ளேயே எதிரும் புதிருமா இருக்கும் வீடுகளும் அடுத்தடுத்து இருக்கும் வீடுகளும் இவுங்களோடதுதான்.  எல்லா வீடுகளும் நம்ம தமிழ்நாட்டு அக்ரஹாரம் (இப்ப அதெல்லாம் ஏது? ) போலவே முற்றம், ஆளோடி, கூடம்,  ரேழின்னு அமைஞ்சுருக்கு.

காஃபி கொண்டுவந்து  கொடுத்தாங்க.  இதுக்குள்ளே  உள்ளிருந்து நிறைய பேர்  முற்றத்தில்  வந்து கல் மேடையிலும் இருக்கைகளிலும் உக்கார்ந்துருந்தாங்க.  எல்லோருக்கும் காஃபி சப்ளை:-)  கொஞ்ச நேரத்தில் நம்மை மாடிக்குக் கூட்டிப்போனாங்க.  அங்கே ஊஞ்சல்!

நம்ம சிவகுமார் சாஸ்த்ரிகளின் (இப்போதைய) கடைக்குட்டி  அப்பா மடியில்!






கோபாலுக்கு ஒரு புது வேஷ்டி கொடுத்தார். உடை மாற்றிக்கிட்டதும்  பூர்வாங்க சங்கல்ப்ப பூஜையில் ஆரம்பிச்சு எல்லாம் முறைப்படி  நடந்தது.  அடுத்து கங்கையில் முழுக்கு போடணும்.  ரெண்டு இடத்துலே  செய்யவேண்டியவைகளைச் சொல்லி சுரேஷ் என்ற இளைஞரிடம் நம்மை ஒப்படைத்தார்.

 இத்தனை படித்துறைகள்  இருந்தாலுமே....  புண்ணியத்துக்குமேலே புண்ணியம்  சேர்க்கும்படியும் சிறப்புக்கு மேலே அதி சிறப்பாகவும் இருப்பது  ஒரு அஞ்சு படித்துறைகளே!  பஞ்சதீர்த்தம் என்றும் சொல்றாங்க. எல்லாமே கங்கைதானேன்னாலும்  கங்கையில் அங்கங்கே  மற்றும் சிலபல தீர்த்தங்கள் வந்து சேர்ந்து சிறப்பு செய்யுதாம். தசாஸ்வமேத காட், அஸ்ஸி காட், மணிகர்ணிகா காட், பஞ்சகங்காகாட் மற்றும் ஆதிகேசவா காட்.  இந்த அஞ்சுலே  நீராடினால்,மொத்த படித்துறைகளில்  நீராடின புண்ணியம் மொத்தமாக் கிடைச்சுருமாம்!

சுரேஷைத் தொடர்ந்து போறோம்.  முன்னால் நடந்து போகும் கோபாலைப் பார்த்ததும்  நம்ம முண்டாசு  (சுப்ரமண்யபாரதியார்) ஞாபகம் சட்னு வந்துச்சு!  சந்து திரும்பினால் இடப்பக்கம்  நாம் முந்தாநாள் போய்வந்த  சங்கரமடம் கோவில்!  இந்த ஏரியாவில்தான் வந்த அன்னிக்கு இருட்டில் சுத்தோ சுத்துனு சுத்தியிருக்கோம்:-) வழக்கம்போல் மாடுகளும் நாய்களுமா இருந்த சந்தில் இப்போ சில அம்மாக்களும் குழந்தைகளும்.


ஷிவாலா காட் படித்துறைக்குப்போனதும், அங்கே கட்டியிருந்த ஒரு படகை  அவிழ்த்த சுரேஷ்  அதில் ஏறி படகு எஞ்சினை  ஸ்டார்ட் செஞ்சார்.  மீண்டும் படகேறும் கஷ்டம் எனக்கு:-) இது இன்னும் கொஞ்சம் உயரம் அதிகமான படகு! படகில் ஒரு நாற்காலி போட்டுருக்கு. (நம்ம) பாரதியார் அதுலே உக்கார்ந்தார்:-)

பகல் நேரத்தில் பளீர்னு இருக்கு  கங்கையும் படித்துறைகளும்.  ஒரு ஹனுமன் கோவில் இருக்கு ஷிவாலாவில்.   சின்ன அறையில்  தரையில் பதிஞ்சுருக்கார் நேயுடு!


வெவ்வேற பெயர்களில் அகாடாக்கள் , ப்ராச்சீன் ஹனுமன் காட், ஹரிஷ்சந்த்ரா காட் , கேதார் காட் எல்லாம் கடந்து போய்க்கிட்டு இருக்கோம். மணி ஒன்பது. பனிமூட்டம்  விலகிக்கிட்டு  இருக்கு. சோம்பலான சூரியன் தலைக்கு மேல்!  காலை நேர கங்கையில் குளியலும், துவையலும்(!) ஜெபதபங்களுமா மக்கள்ஸ்  பிஸியா இருக்காங்க.


வரிசையா  துவைக்கும் கல் போட்டு வச்சுருக்கும் டோபிகாட்!!!

நேத்து இரவு பார்த்த தசஸ்வமேத காட் கடந்து போறோம் இப்ப. (எல்லா காட்டுக்கும் முன்னால் ஒரு ஜி சேர்த்துக்கிட்டு Gகாட்  (Ghat) என்று வாசிக்கணும்,கேட்டோ!)  ஜலசாயி காட் கடந்து  மணிகர்ணிகா காட் வருது!  தீயில் விழுந்து  உயிர்விட்ட சதிதேவியின்  காதுகள் விழுந்த இடம்.  காசியில் கங்கைக்கரையில் இருக்கும்  ரெண்டு  மயானத்தில் இது ஒன்னு.


எரிக்க உதவும் கட்டைகளை  மலைபோல் குவிச்சும்,  அழகா அடுக்கியும் வச்சுருக்காங்க. இதெல்லாம் போதாதுன்னு படகுகளில் குவிஞ்சுருக்கும்  கட்டைகளும்  தங்களுக்கான தேவை வரும்வரை வெயிட்டிங்! எப்போதும் புகையும் தீயுமா இருக்கும் இடம்.  அக்கம்பக்கத்துக் கட்டிடங்கள், கோவில்கள் எல்லாம் அப்படியே புகை படிஞ்சு கரிபிடிச்சுக்கிடக்கு!
4193


அடுத்து சிந்தியா காட்டில் தண்ணீருக்குள் சாய்ஞ்சு கிடக்கும்  ஒரு கோவில்!  பளிங்குக் கற்களின் கனம் தாங்காமல் கோவில்  கங்கையில் மூழ்கிருச்சு.  கரையோரம் அவ்வளவா  ஆழமில்லாததால்  ஒரு பக்கம் சாய்ஞ்சு, எனக்கு  லீனிங் டவர் ஆஃப் பைஸாவை  நினைவுபடுத்தியது. ( இதை ஏன் இப்போ உங்களுக்குச் சொல்றேன்?  அங்கேயும் போய்வந்தேன்னு பின்னே எப்படி உங்களுக்குத் தெரிவிப்பது:-))))


இன்னும் சிலபல படித்துறைகளைக் கடந்து  பஞ்சகங்கா படித்துறையில் படகை நிறுத்தினார் சுரேஷ். மேலே இருக்கும் பிந்து மாதவர் கோயிலுக்குப் போகணும் இப்போ.  தலையைத் தூக்கிப் பார்க்கும்போதே மயக்கம் வருது எனக்கு.  முதலில் படகில் இருந்து கரையில் இறங்கவே  பேஜார். அப்புறம் மண்சரிவில் ஏறி மேலே படித்துறைக்குப்  போகணும்.:(  படிக்கட்டுகள் அப்புறமா வருது!படித்துறையில்  இருக்கும் கட்டிடத்தில் எதோ பராமரிப்பு வேலை வேற நடக்குது.
4245
எத்தனை படிகள்னு சுரேஷைக் கேட்டால் தொன்னுத்தி அஞ்சுன்னார். நாங்க ரெண்டு பேர் போய் வரோம். நீங்க படகுலே இருங்க மாமி!!!!! மேலே போகும்போது பாதிவழியில் ஒரு கோவில். ஸ்ரீ சத்யபாமேஷ்வர் மஹாதேவ் அண்ட் அன்னபூரணி கோவில் . (இளங்காவிக்கலர்)

அங்கே ஒரு கும்பிடு போட்டுட்டு  இன்னும் மேலே போனால் பிந்து மாதவா கோவில்.  ரொம்பப்பழைய கோவில்தான்.  இதையும்  ஔரங்கஸேப்பின் படைவீரர்கள் இடிச்சுத் தள்ளிட்டாங்க.  கொஞ்சம் போல் விட்டுப்போனதுலே மாதவர் இருக்கார்.  இடிச்ச இடத்தில் ஒரு மசூதியும் கட்டிட்டாங்க அவுங்க:(  இப்போ படகில் இருந்து பார்த்தால் மசூதிதான்  பளிச்ன்னு தெரியுது.   கோவில் கண்ணில் படலை:(

நான் வேடிக்கை பார்த்துக்கிட்டு, கண்ணில் படுவதை க்ளிக்கிக்கிட்டு  இருந்தேன்.  ஜெபதபங்கள்,டெய்லி பூஜை,குளியல், பாத்திரம் தேய்த்தல் இப்படி சகலவேலைகளிலும் மக்கள்ஸ் பயங்கர பிஸி.   பண்டிட் ஒருத்தர்  தண்ணீருக்கு வந்து கங்கையைக் கோரி கங்கையில்  ஊற்றி சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தார்.   மேலே போனவங்கஒரு இருவது நிமிசத்தில் திரும்பி வந்தாங்க.

இப்ப நம்மகோபால் கங்கையில் முழுகி வரணும். படகுக்கயிறை ஒரு கையில் பிடிச்சுக்கிட்டுத்தான் முங்கணும். உச்சந்தலையில் தண்ணீர் படலை. இன்னும் இன்னும்  என்று சொல்லி நான் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.  மூன்று முறை முங்கி எழுந்ததும்  படகில் ஏறினார். பண்டிட் கூடவே  படகுக்குள் வந்து  எதோ மந்திரம் சொல்லி எங்களுக்குக் குங்குமம்  தீற்றி, ஒரு குங்குமப் பொட்டல பிரசாதத்தையும் கொடுத்து ஆசிகள் வழங்கி தட்சணை வாங்கிண்டு போனார்.





தண்ணியில் கொஞ்சதூரத்தில்  எதோ ஏணி போல ஒன்னு. பறவைகள்  வரிசையா உக்கார்ந்து  தண்ணியில் மூக்கை விடுவதும் எடுப்பதுமா இருக்கு.  கொஞ்ச நேரமுன்பு,  ஒரு படகில் ' ஒருத்தர் 'பூமாலைகளுக்கிடையில் போறதைப் பார்த்தேன்.  வேறெங்கோ இருந்து படகில் கொண்டு வர்றாங்க.



பறவைகள் கூட்டம் இருக்குமிடத்தில் கூட 'இன்னொருவரோ'ன்னு சந்தேகம்.  சுரேஷைக் கேட்டதுக்கு பறவைகள் தண்ணீர்குடிக்கச் செஞ்சு வச்சுருக்கும் ஏற்பாடாம்! கங்கையில் பாதி எரிந்த நிலையில்  பிணங்கள் மிதக்குமாமே!  ஒன்னையும் காணோமேன்னதுக்கு, அதெல்லாம் நிறுத்தி  சில வருசங்கள் ஆச்சு  மாமி.  இப்பெல்லாம் அப்படி தண்ணீரில் இழுத்து விட்டால் பயங்கர  அபராதம்.  நகரசபையும், கங்கை சுத்த கமிட்டியும்   கூர்ந்து கவனிச்சுக்கிட்டே இருக்கு.  சாவுக்கு ஆகும் செலவு குறைவா இருக்கணுமுன்னு நினைக்கறவங்க  இங்கே இருக்கும் மின்மயானத்துக்குக் கொண்டு போறாங்க. அதோ இருக்கு பாருங்கன்னு காமிச்சார்.


வந்தவழியிலேயே திரும்பிப்போறோம்.  மணிகர்ணிகா பக்கம்  ஒரு ஹனுமன் ஜி மந்திர் இருக்கும்  படித்துறையில் அடுத்த ஸ்டாப். அங்கேயும் ஒருமுறை கங்கையில்முழுக்கு. பண்டிட்  மந்திரம், நெற்றியில் நீறு, ஆசி எல்லாம் ஆச்சு.  இனி கோபால் உடை மாற்றிக்கலாம்.  திரும்ப  சாஸ்த்ரிகள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.



காஃபி கொண்டு வந்தார் சுரேஷ். வேணாமுன்னதும்  வியப்பு! 'சௌத் இண்டியன்ஸ்  அடிக்கடி காஃபி  குடிப்பாங்களாமே.....  ஏன்  நீங்க வேணாமுன்னு சொல்றீங்க? '

இனி அடுத்த பகுதி தொடங்கணும், எதிர்வீட்டில்.

தொடரும்.....:-)


32 comments:

said...

வணக்கம் அம்மா.. உங்கள் கட்டுரையை வாசிக்கவே புல்லரிக்கின்றது. எங்களுக்கெல்லாம் சிதம்பரம், மதுரை கோயில்களுக்கு வந்து வணங்கவே வாய்ப்புவரவில்லை ( நாங்கள் யாழ்ப்பாணம்) பிறகு எப்படி காசி தரிசனம்...கங்கை முழுக்கு??? கொடுத்து வைத்தவர் நீங்கள். -வைதேகி பாலமுரளி-

said...

காசிக்கே நேரில் சென்று வந்த அனுபவம் ஏற்பட்டது. படங்களும் கட்டுரையும் பிரமாதம்!

said...

கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனேன்னு பாட்டு ஒன்னு உண்டு. ஆனா இந்தப் படங்களைப் பாத்தா கங்கையிலே ஓடம் எல்லையோன்னு பாடத் தோணுது. படகுகள் ஓடிக்கிட்டேயிருக்கும் போல.

சிவாஜி போட்டோவைப் பெருசாப் போட்டிருக்கலாம் :)

அந்த மசூதி இன்னும் பயன்பாட்டில் இருக்குதா? இல்லை...அது இதுன்னு சொல்லி சும்மாயிருக்குதா?

தமிழ்நாட்டை விட்டு அஞ்சு தலைமுறைகளுக்கு முன்னால் போன குடும்பம்னா தமிழை மறந்திருக்கனுமே. அவங்க தமிழ்ப் பேச்செல்லாம் எப்படி?

said...

படங்களுடன் பயணம் பிரமாதம் அம்மா...

said...

படங்கள் ,விளக்கங்கள் அருமை .அடுக்கி வைக்கப்பட்ட கட்டைகள் வரிசையாய் பறவைகள் (என்ன சாப்பிட்டு இருக்கும்?) சாய்ந்தகோவில் பாரதி கோபால் ஊஞ்சலில் துளசி,குட்டிபாப்பா என்று அனைத்து படங்களும் அருமை !!

said...

sivaji photo super . even i searched for his photo when i read about him .:)))

said...

அன்பு துளசி, அருமையான கர்மாக்களைமுடித்து பித்ருக்களுக்கு நீரிறைத்த கோபால பாரதிக்கு நன்றி. புதல்வனாகவும் சகோதரனாகவும் புனித காரியங்களைச் செய்திருக்கிறார். புண்ய கர்மாக்கள் நம் துன்பங்களிலிருந்து விடுவிக்கும். நலமே வாழ்க துளசி.

said...

நாங்க போனப்போவும் (98 ஆம் வருடம்) இதே ராமசேஷ சாஸ்திரிகள் வீட்டில் தான் இறங்கினோம். எதிர் வீடு, எங்களுக்குத் தனியாக் கொடுத்துட்டார். :)))) எல்லா ஏற்பாடுகளும் ராமசேஷ சாஸ்திரிகளும், அவர் தம்பியுமாப் பண்ணி வைச்சிருந்தாங்க. படகில் போனப்போ ஒவ்வொரு கட்டத்துக்கும் பிண்டம் வைத்தோம். மொத்தம் உள்ள முக்கியமான 64 கட்டங்களில் பிண்டம் வைச்சது கிட்டத்தட்ட 28 இல் இருந்து 30 வரை இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் குளியல், படகிலேயே கரி அடுப்பில் பிண்டம் வைக்க சாதம் சமைத்தேன். ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் போவதற்குள்ளாக சாதம் தயார் ஆனது அதுவும் கரி அடுப்பில் தயார் ஆனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்று.

said...

கங்கை முழு பிரவாஹத்தில் இருந்தாள் நாங்க போனப்போ! ஆகஸ்ட் மாதம்.

அப்பாடா, ஒருவழியா நாங்களும் படிக்கிறோம்னு சொல்லியாச்சே! :)

said...

Do u have contact info of the sasthrigal? My father's abdhikam at end of October. Planning to do there. Do they arrange accommodation?

said...

Strada Roseville,

வாரணாசி ஸ்டேஷனில் உங்களை அழைத்துப் போவது முதல் திரும்பக் கைக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்துக் கொண்டுவிடும்வரை எல்லாமும் செய்வார்கள். சென்ற வருடம் கூட எங்கள் உறவினர் ஒருத்தர் சென்று வந்தார். விலாசம் தேடித் தருகிறேன். அல்லது துளசியே கொடுத்தாலும் சரி.

said...

தங்குமிடத்திலிருந்து சுற்றிப்பார்க்க வண்டி அனுப்புவதிலிருந்து எல்லாமும் அவர்கள் பொறுப்பு.

said...

வாங்க வைதேஹி.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

அதென்ன வாய்ப்பு வரவில்லை என்ற கவலை?

எல்லாத்துக்கும் வேளைன்னு ஒன்னு வரணும். கட்டாயம் நமக்குக் கிடைக்கணும் என்றுள்ளது கிடைக்காமல் போகாது.

இத்தனை வயசுக்கு மேல் எனக்குக் கிடைச்சதே! நீங்கெல்லாம் சின்ன வயசுக்காரர்கள். பொறுத்திருங்கள். விரைவில் புனிதப்பயணம் கிடைக்கணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.

said...

வாங்க எக்ஸ்பேட் குரு.

ரசிச்சு வாசிச்சதுக்கு என் நன்றி.

'எல்லாம் நான் பெற்ற இன்பம்...' வகைதான்:-)

said...

வாங்க ஜிரா.

அநேகமா கங்கை ஆரத்தி முடிஞ்சதும் படகோட்டமும் முடியுதுன்னு நினைக்கிறேன். ஒரு முழுநிலவு நாளில் அங்கே படகில் போகணும் என்பது இப்போதையக் கனவு.

உங்களுக்காக சிவாஜியை பெருசாக்கிட்டேன்:-) போய்ப் பாருங்க!

மசூதி, பயன்பாட்டில் இல்லைன்னு தோணுது.

சாஸ்திரிகள் வீட்டில் இன்னமும் திருமண சம்பந்தங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்துதான். நம்ம சிவகுமார் அவர்களின் தங்கை, சென்னை நங்கநல்லூரில்தான் இருக்காங்க.

தமிழை நல்லாவே பேசறாங்க.

படகோட்டிப்போன சுரேஷ் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் மழலை மாறாமல்:-) சுருக்கமாச் சொன்னால் தமிழ்நாட்டு இளைஞர்களை விட நல்லாவே பேசறார்:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பயணம் பிரமாதமா????

அச்சச்சோ.... நேற்றுதான் (எத்தனையாவது முறைன்னு கணக்கு வச்சுக்கலை) மும்பை எக்ஸ்ப்ரெஸ் பார்த்தேன்.

தெலுகுலே ப்ரமாதம் அன்டே.... ஆக்ஸிடெண்டு:-)))

said...

வாங்க சசி கலா.

வரிவரியாக ரசனையுடன் வாசிப்பு !!!

நன்றீஸ்ப்பா.

படங்கள் ப்ரேமுக்குள் இருந்தாலும் கால ஓட்டத்தில் பழுப்படைஞ்சு போயிருதே:(

said...

வாங்க வல்லி.

இப்போதாவது பித்ரு காரியங்கள் செய்ய பெருமாள் ஒரு வாய்ப்பு கொடுத்தாரேன்னு மனம் திருப்தி அடைஞ்சது உண்மைதான்ப்பா.

said...

வாங்க கீதா.

ஒவ்வொரு கட்டத்திலும் குளியலா!!!!!

ஆஹா....ஆஹா....

முழுப்ரவாகம் என்றால் சீறிப் பாய்ஞ்சிருப்பாளே!!!

ஹைய்யோ!

அங்கே ஒரு நாலைஞ்சு சாஸ்த்ரிகள் இருக்காங்க. எல்லோரும் உறவினர்களும் கூட. நம்ம தேவைக்கேற்றபடி நல்லபடியா செஞ்சு
வைக்கிறாங்க. அது பாராட்டப்படவேண்டியதொன்று!

said...

வாங்க Strada Roseville,

அங்கேயே தங்கவும் வசதி இருக்கு. இல்லைன்னா வேறு இடங்களிலும் தங்க ஏற்பாடு செஞ்சு தருவாங்க. முக்கியமா தென்னிந்திய சாப்பாடு கிடைக்குது அங்கே!

அவுங்க வலைப்பக்கம் இது. பாருங்க.

சிவகுமாரின் இ மெயில் ஐடி, விலாசம், டெலெஃபோன் நம்பர்ஸ் எல்லாம் இதுதான்

www.shrikashiyatra.com

Contact Address at Kashi : B - 5/311, Hanuman Ghat, Varanasi - 221 001, Ph: 91-542-2276134 / 2275173, 2276533

E - Mail : rshiv_kumar@rediffmail.com / rshiv_kumar_73@yahoo.com

செல் நம்பர்: +91-9335333137
9415336064, 9336912058

said...

கீதா,

எல்லா விவரமும் தெரிவித்தமைக்கு நன்றிப்பா.

நீங்க சொன்ன ராமசேஷ சாஸ்த்ரிகள் இப்போ பூவுலகில் இல்லை:( அவர் மகன்தான் நமக்கு உதவிய சிவகுமார் என்னும் ஸ்வாமிநாத சாஸ்த்ரிகள்.

said...

பலருக்கு உத்வும் தகவல்கள்....

கரி படிந்த கட்டிடங்கள் - முழு நகரமுமே அப்படித்தான் இருக்கிறது - பழைய கட்டிடங்களும் இன்னமும் அப்படியே! :)

said...

ஆமாம் துளசி, ராமசேஷ சாஸ்திரிகள் தகவல் வந்தது. நாங்க போனப்போவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் தான் இருந்தார். அவர் பிள்ளை தான் எங்களை அலஹாபாத் எல்லாம் கூட்டிச் சென்றார். அவர் தம்பி கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் காசி, கயாவில் வேண்டிய ஏற்பாடுகள் செய்து தந்தார். மாடியில் அவங்க வாசம். கீழே வரவங்களுக்கு சமையல், சாப்பாடு இன்ன பிற. மாடியில் ஒரு சிலரின் கர்மாக்களும் நடைபெறும்.

said...

அங்கே சாம்பாரின் ருசியில் சாம்பாரே பிடிக்காத நானே சாம்பார் சாதம் சாப்பிட்டேன் என்றால் பார்த்துக்குங்க. பக்கத்திலே ஒரு பால் கடையில் பாலை வாங்கி அங்கேயே சூடு பண்ணிக் கொண்டு வருவேன். நாங்க தங்கின வீட்டில் வந்ததும், காஃபி பவுடர் போட்டு காஃபி சாப்பிடுவோம். எங்களுக்குப் படகோட்டியவர் பிஹாரி ஒருத்தர். ஆனால் மாமா, மாமினு கூப்பிட்டுத் தமிழில் (கொச்சைத் தமிழ் தான்) பேசுவார். மைதிலி மொழியில் ஶ்ரீராமன், சீதை பத்தி உருக்கமாய்ப்பாடுவார். படகோட்டும்போது பார்க்கணுமே. அவர் ஆரம்பிக்க, கூடவே வரும் மத்தப் படகோட்டிகள் எடுத்துக்கொடுக்க, ஒரே அமர்க்களம் தான். அது தனி உலகம்.

said...

கண்டேன் சிவாஜியை நன்றி நன்றி :)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எத்தனை வெள்ளையடிச்சாலும் கரி போகாது:(

நகரை முழுசுமா மாத்தி சீரமைக்க முடியாமல் அல்லவா கட்டி இருக்கிறார்கள்?

அங்கங்கே கொஞ்சம் பராமரிப்போடு நிறுத்திக்குவாங்க.

குறைஞ்சபட்சம்... திறந்த சாக்கடைகளை மூடி, கழிவுநீர் குழாய்களை அமைக்கலாம்.

said...

தகவல்களுக்கு நன்றி கீதா.

சாம்பார் பிடிக்காதா????

அப்ப என் பொண்ணுதான் நீங்க:-))))

said...

காசிதொடர்கிறேன்...

said...

We completed our Father's Abdhikam at Kasi and finished Prayag and Gaya Shradham. ShivKumar and his brother Ramanan did the ceremonies. We really enjoyed the trip. Thanks for your referal.

said...

வாங்க Strada Roseville .

ரொம்ப நல்லது. பதிவு பயனாக இருந்தது மகிழ்ச்சியே.

said...

Anbhu Thalami. , nann ungal blog RASIGAI. Enakkum. Payanangali. Rombha pidikkum. Mighavum Piditha blog. One request to

you. I always refer your travel and sight seeing places. But very difficult to get information of the places. From your blog. Shall I suggest.

you to put Lables for our use. It will help and guide us for our travel. Thank you!!! Ungal RASIGAI....

said...

வாங்க அனு.


கூடியவரை லேபிள் போட்டு வைக்கிறேன்தான். தமிழ்மணத்தில் சேர்க்கும்போது அனுபவம் என்ற ஒற்றைச் சொல்லைத்தான் அது எடுக்குது. அதன் பின் கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் டேஷ் போர்ட் போய் சில லேபிளுக்கான சொற்களைச் சேர்த்துக்கிட்டு வர்றேன். ஆனாலும் சிலசமயம் விட்டுத்தான் போகுது. அதுதவிர, பயணப்பதிவுகளில் பல இடங்களைச் சொல்லிக்கிட்டே போவதால் எதுக்குன்னு தனித்தனி லேபிள் சேர்க்கமுடியுது, சொல்லுங்க. அதான் அனுபவம் என்பதோடு பதிவுகளில் எந்தப் பயணமுன்னு சொல்வதால் அந்தப்பக்கம் பயணம் போகும் நண்பர்கள் குஜராத், உடுபி, ராஜஸ்தான் இப்படித் தேடினால் அந்தந்தத் தொடர்கள் கிடைக்கும்.

வருகைக்கு நன்றி என் ரசிகையே!