Thursday, August 07, 2014

இது புதுசு :-)

நமக்கெல்லாம் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி, ஏன் கூஸ்பெர்ரி கூடத் தெரியும்தானே?இந்த வகையில் இன்னொரு புது பெர்ரியை  எங்களுக்கு அறிமுகப்படுத்தினாங்க இங்கே நியூஸியில். கடைகளில் விற்பனைக்கு வந்துருக்கும் புது சமாச்சாரங்களை வாங்கித்தின்ன  எல்லோருக்கும் ஒரு சிறு பயம் இருக்கத்தானே செய்யுது!  எப்படி இருக்குமோ, என்ன ருசியோ.... யார் கண்டா?

எனக்கு ரொம்பப்பிடிச்ச விஷயம் இங்கே நியூஸியில் என்னன்னா.....  எல்லாத்தைப் பற்றியும் தெளிவா விவரங்கள் கொடுத்துருவாங்க. இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் ன்னு நம்ம 'செந்தில்' சொன்னதை ஞாபகப்படுத்திக்குங்க:-)



கிவி பெர்ரி என்ற பெயரில்  கண்டேன்.  கிவி பழம் போல் ஷேப்  பார்க்க இருந்தாலும், இது  ரொம்பச் சின்ன சைஸ் .  முழுப்பழமும் அதிகபட்சம் 20 கிராம் இருந்தால் அதிகம். மினியேச்சர் கிவின்னு சொல்லிக்கலாம். ஆனால் வித்தியாசம் என்னன்னா,  இதுக்கு  கிவி  போல ரோமம் கிடையாது.

 மொழுமொழுன்னு இருக்கு மேல் தோல். மிகவும் மெல்லிசான தோலாக்கும், கேட்டோ! அதனால் அப்படியே  திங்கலாம்.

கிவிப் பழத்திலும்  இப்போ சிலவருசங்களா, மேலே ரோமம் இல்லாத வகை ஒன்னு  வருது.  பழத்தை நறுக்கிப் பார்த்தால் வழக்கம்போல் உள்ள பச்சை நிறமிருக்காது. பொன்னிற இள மஞ்சளா இருக்கும். இதுக்கு கோல்டன் கிவின்னு பெயர் வச்சுட்டோம்:-)  ஆனால் தோல் என்னவோ ரெண்டு வகைக்குமே ப்ரவுண் நிறம்தான்.  ஒன்னு முடி உள்ளது  இன்னொன்னு மொட்டை!





கிவிப் பழங்களுக்கு,  காம்புப் பகுதியில் சின்னதா கடினமான  ஒரு  பாகம் இருக்கும்.  சாப்பிடுமுன் கவனமா இதை வெளியே எடுத்தெறிஞ்சுரணும். சப்பாத்திக்கள்ளிப் பழத்தில் ஒரு முள் போல இருக்கும் பாருங்க, அதைப்போலவே!  தொண்டையில் மாட்டிக்கிட்டால் ஆபத்துன்னு சொல்வாங்க.



இந்த கிவிபெர்ரிக்கு இந்தப் ப்ரச்சனை ஒன்னுமே  இல்லையாக்கும்!  125 கிராம் உள்ள  சின்னப்பொதியில்  ஒரு ஒன்பது பழங்கள் இருந்தன.  கை விரலால் லேசா அமுக்கிப் பார்க்கணும்.  சட்னு விரல் அமுங்குனா , பழம் நல்லாப் பழுத்துருக்குன்னு பொருள்.  அப்புறம்? அப்படியே  வாயில் போட்டுக்க வேண்டியதுதான். தேனாட்டம் இருக்கு!

திராக்ஷைக் கொடிகள் போலத்தான் கிவிப் பழங்களின்  செடிகளும்   இருக்கும். இந்த பெர்ரியும் இதே போல கொடிகளாப் பிரிஞ்சே இருக்கு. பந்தல் போட்டுக்கிட்டா , நோகாம பழம் பறிக்கலாம்.  சைஸ் ரொம்பவே சின்னது என்பதால்  அறுவடை மனிதக் கைகள் மூலமாகத்தான்.  கொஞ்சமும் அலுங்காமல்  பறிச்சுச் சின்னச் சின்ன  டப்பாக்களில்  வச்சு, அந்த  டப்பாக்களை,  இன்னொரு பெரிய அட்டைப் பெட்டியில்  அடுக்கி வச்சு பழம் பொதியும் இடத்துக்குக் கவனமாக் கொண்டு வரணுமாம்.  அந்தப்பெரிய அட்டைப்பெட்டியில் கூட கண்டமானம்  போட்டுக் கனமாத் தூக்கி வரப்டாதாம். ஆறு கிலோ வரைதான்   இருக்கணும் ஒவ்வொரு பெட்டியும் என்றெல்லாம் கணக்குச் சொல்றாங்க.  மக்கள்ஸ் கைகளுக்குப் போய்ச் சேரும்வரை பத்திரமா கையாளணும் என்பதால் கூடுதல் கவனம்.


கொடியில் காய்ச்சுத் தொங்குவதைப் பார்க்கணுமா?  இதோ உங்களுக்காக சில படங்கள்:-)




வெளிநாட்டுக்கு  ஏற்றுமதி செய்ய முடியுமா என்பதை ஆராய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க.  பயணத்தொலைவு  அதிகம் என்பதால் தாக்குப்பிடிப்பது கஷ்டம்தான், இப்போதைக்கு.


தின்னு பார்க்க ஆசை இருந்தால்  பேசாமக் கிளம்பி  நம்மூருக்கு  வந்துருங்க.  ஃபிப்ரவரி ரெண்டாம்  வாரம் முதல்  ஏப்ரல் முதல் வாரம் வரை சீஸன் என்று சொன்னாலும்  கிடைக்கும் மகசூலைப் பொறுத்துதான்  எல்லாம்.  மார்ச் மாசம் ஓக்கேன்னு நினைக்கிறேன். நம்மூர் கால நிலையும் கோடை முடிஞ்சு, இலை உதிர்காலத் தொடக்கம் என்பதால்  நல்லாவே இருக்கும்!

நியூஸியின் வடக்குத்தீவில்   Bay  of Plenty  என்ற ஊரிலும்,  தெற்குத்தீவில் நம்ம கிறைஸ்ட்சர்ச் என்ற ஊரிலும் மட்டுமே  இப்போதைக்கு விளையுது என்பது கூடுதல் தகவல்.

PINகுறிப்பு: நான் பெற்ற இன்பம் வகையில்  இன்னும் சில பொருட்களைப்பற்றி அப்பப்பச் சொல்வேன்.  ஜஸ்ட் வாரம் ஒருக்கான்னு வச்சுக்கலாமா?


22 comments:

said...

கிவிபெர்ரி பழம் பற்றி தெரிந்து கொண்டேன்.
மூணாரில் இது போன்ற பழம் பார்த்தது போல் இருக்கு. நீங்கள் சொல்வது போல் தெரியாத பழங்களை சாப்பிட பயம் தான்.

said...

கிவிபெர்ரி பற்றி இதுவரை அறியாத் தகவல்கள். தகவல்களோடு விற்பனை நல்ல விஷயமாச்சே...

அந்த பழம் சாப்பிட இதோ வந்துகிட்டு இருக்கோம். எடுத்து வைங்க டீச்சர்...:)

said...

இந்தத் தகவலை முதன்முதலா நீங்கதான் சொல்லியிருக்கீங்க டீச்சர்.. அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

படங்களைப் பார்க்கவே அழகாகவும், ஆசையாவும் இருக்கு. நியூஸின்னாலும், புது நியூஸுன்னாலும் நம்ம துளசி டீச்சர்தானே.. கண்டிப்பா ஒரு நாள் வர்றேன் :)

said...

Informative ...Thanks Teacher :)

said...

கிவி பெர்ரி மரத்தில் எப்பிடி இருக்கும்னு நினைத்தேன் , உடனே படங்கள் கீழே . :) நாம என்ன எதிர் பார்கிறோமோ அந்த விபரங்கள் கண்டிப்பா உங்க பதிவுல கிடைக்கும் .

said...

சிறந்த உணவும் ஆய்வும்
தொடருங்கள்

பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

said...

கிவிக்குக் கிடைத்த புதுக் கிவின்னு சொல்லப் போறேன். நல்லா இருக்குப்பா பார்க்கவே. அங்க வரதுக்குள்ள ஃப்ரீஸ் செய்து வைங்க. நான் வந்து சாப்பிடறேன். மகிழ்ச்சியா இருக்குப்பா பதிவு.

said...

நல்லா எழுதி இருக்கீங்க. கிவி பெரி சாப்பிட அங்க வரவா? அம்மாடி!!!!!! இங்க ஒண்ணு தபால்ல அனுப்புங்க. என்னதான் ஆகுதுன்னு பாத்துருவொம். நமது வலைத்தளம் : சிகரம்

said...

கிவி எனக்குப் பிடிச்ச பழம். புளிப்பும் இனிப்புமாய் நாவில் ருசிக்கும் இனிய பழம்.

அந்தக் கிவியை நடுவுல வெட்டி சின்னக் கரண்டி வெச்சு தோண்டித் தோண்டித் தின்னும் இன்பம் பேரின்பம்.

கிவியில் புளிக்கொழம்பும் ரசமும் செய்யலாம்னு தோணுது. முயற்சி செஞ்சு பாக்கனும்.

கிவி பெர்ரி பாக்கப் பொடுசா இருக்கு. அதையும் சாப்பிட்டுப் பாக்கனும்னு முருகன் நெனச்சிருந்தா அதுக்கும் வழி செய்வான் வாழ வைக்கும் வள்ளல். :)

said...

கிவிபெர்ரியை சீக்கிரமே எங்கூருக்கு அனுப்பிவையுங்க டீச்சர். ருசித்துப் பார்க்கக் காத்திருக்கிறோம்.

said...

பொறுத்திருப்போம்...
ஒருநாள் கிடைக்கும்.

said...

வாங்க கோமதி அரசு.

உண்மைதான். விஷக்கனி பயம்தான் வேறென்ன!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

வர்ற ஃபிப்ரவரிக்குப் பழம் தயார்! வந்துருங்க.

said...

வாங்க ரிஷான்.

சுற்றுலாப்பயணியா வந்தா, இன்னும் நல்லா ரசிச்சுப்பார்த்து ஊர் சுத்தலாம். கட்டாயம் ஒரு முறை பார்க்கவேண்டிய நாடுதான்.

said...

வாங்க ஜோ மாம்.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றீஸ்.

said...

வாங்க சசி கலா.

மாணவர் மனசு டீச்சருக்குத் தெரியாதா:-)

said...

வாங்க யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.


பா புனையத் தெரிஞ்சால்...இப்படியா இருப்பேன். கோலி வுட் நம்மை விட்டு வச்சுருக்குமா????

போட்டியிடும் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்!

said...

வாங்க வல்லி.

ப்ரீஸருக்குத் தாங்காது:(

டிசம்பர் வந்ததும் நியூஸி வந்து ஃபிப்ரவரி வரை நம்ம சம்மரை அனுபவிச்சு, கிவிபெர்ரி உட்பட எல்லாப் பழங்களையும் ஒரு கை பார்த்துட்டா எனக்கு மனசு மகிழ்ச்சியா இருக்கும்.

உங்க வீடா நினைச்சுக்குங்க.

said...

வாங்க சிகரம் பாரதி.

பெயருக்கேற்றபடி சிகரம் தொட வாழ்த்துகின்றேன்.

தபாலில் அனுப்புனா, அது பழம் இல்லை. ஜாம் ஆகிரும்:-)

said...

வாங்க ஜிரா.

முருகனருள் முன்னிற்கட்டும்!

பச்சை ஆப்பிளை, குழம்பில் சேர்த்தால் புளி தேவை இல்லை.

ஒருநாள் அரைச்சு ரசம் வச்சுப் பார்க்கணும்!

said...

வாங்க கீத மஞ்சரி.

உங்கூருலே உள்ளே விடுவாங்களா?

உருளையையே வேணாமுன்னுல்லே சொல்லிப்புட்டீங்க:(

said...

வாங்க மாதேவி.

ரொம்பச்சரி. கிடைக்கணும் என்றிருந்தால் கிடைச்சிரும்!