Friday, August 22, 2014

சுத்தித் திரிஞ்ச கால், சும்மா இருக்குமா? (மினித்தொடர்: பகுதி 1)

சம்பவம் நடந்து ஒரு ஒன்னரை வருசம்  ஆகிப்போச்சு.  ஈஸ்ட்டர் விடுமுறை நாட்கள்  வரப்போகுதே...  எங்கியாவது அக்கம் பக்கம் போய் வரலாமான்னு  எண்ணம்.  அதென்னவோ....  பயணம் போகலைன்னா கோல்ட்  டர்க்கி வர்றாப்ல இருக்கு பலசமயங்களில்.  மகளையும்  கூட்டிப்போகலாமுன்னு  கேட்டால், சரின்னுட்டாள். எங்கே போகலாமுன்னு  உக்காந்து யோசிச்சு,  'பதிவரானபின்பு' போகாத  &  எனக்கு ரொம்பப் பிடித்தமான  இடம்   தெக்கப்போ ஏரின்னு கண்டுபிடிச்சேன்:-)

எங்க பக்கங்களில் ஈஸ்ட்டர்  விடுமுறைன்னா  குட் ஃப்ரைடேயில் ஆரம்பிச்சு ஈஸ்ட்டர் மண்டே வரையும்( சில  நிறுவனங்களில், பள்ளிக்கூடங்களில்  ஈஸ்ட்டர்  ட்யூஸ்டே வரையும் கூட)  நாலு இல்லை அஞ்சு நாட்கள்ன்னு   லீவு உண்டு.

அங்கே போய் ச்சும்மா ரெண்டு  மூணு நாட்கள் ஓய்வெடுக்கலாமே(!)ன்னு  தங்குமிடம் தேட ஆரம்பிச்சால்......  வரப்போகும் ஈஸ்டர் ஹாலிடேஸ் முழுக்க  நோ வேக்கன்ஸிதானாம்.  இதென்னடா, தெக்கப்போவுக்கு வந்த வாழ்வுன்னு ஆகிப்போச்சு.  இதுவரை இந்த ஊரை(?) வேற  தென்மாவட்டப் பகுதிகளுக்குப்போகும் வழியில்  அதிகப்பட்சமா ரெண்டு மணி நேரம் சுத்திப் பார்த்ததுதான்.  அதுவுமே ஆச்சு  பதினைஞ்சு வருசங்களுக்கு முன்!


போகட்டும், ஈஸ்ட்டர் முடிஞ்சபிறகு ஒருவீக் எண்ட் போகலாமுன்னு சொன்னார் கோபால்.  அதெப்படி?  குளிர் ஆரம்பிச்சுருமே:(  நம்மூரில் மஹாசிவராத்ரிக்குப்பின் குளிர் காலம் சிவ சிவான்னு  விட்டுப்போயிரும்னு சொல்வாங்க பாருங்க.  அதேபோல் இங்கெல்லாம் ஈஸ்டர் வந்துபோனதும் குளிர் ஆரம்பிச்சுருமுன்னு சொல்வாய்ங்க.  வீக் எண்ட்ன்னு தீர்மானிச்சா,   இந்த வீக் எண்டே போனால் ஆச்சு, இல்லை?


இங்கே நியூஸியில் பொதுவா டூரிஸ்ட்டுகள் போகும் இடங்களில் எல்லாம் ஹாலிடே பார்க் என்ற பெயரில்  தங்கும் வசதிகள் செஞ்சுருப்பாங்க.  இதுலே  நாமே கூடாரம் போட்டுத் தங்கிக்கும்  கேம்ப்பிங் க்ரவுண்டுகளும் அடங்கும்.  நம்மிடம் கேரவான் இருக்குன்னால்  அதைக்கொண்டு போய் நிறுத்தி வச்சுக்கலாம்.  பவர் சைட்டுன்னு  சொல்வாங்க. கேரவானுக்குத் தேவையான பவர் சப்ளை, கேரவான் உள்ளே இருக்கும்  கழிவறை, குளியலறையைச் சுத்தம் செஞ்சுக்கும்  வசதி எல்லாம் இருக்கும். இதில்லாமல்  தனித்தனியா    பாத்ரூம் வசதிகளோடு உள்ள  கேபின்கள்,  இந்த வசதி இல்லாத  வெறும் கேபின்கள் ( பொதுக்கழிப்பறைகளும், குளியலறைகளும்  சமையல் கூடமும் பயன்படுத்திக்கணும். எல்லாம் ரொம்ப நீட்டா இருக்கும்! பொதுவான  ஃப்ரிட்ஜ் வசதிகளும் உண்டு. உணவுப்பொதிகள், பால், ஜூஸ்  பாட்டில்களில் நம்ம பெயரை எழுதி வச்சுட்டால் வேற யாரும்  எடுக்கமாட்டாங்க. )  இதுலேயே மோட்டல்கள், டூரிஸ்ட் ஃப்ளாட்டுகள்  இப்படி வகைவகையான  வசதிகள்  உண்டு.

லேக் வ்யூ  இருக்கும்படியான  கொஞ்சம் உயரமான இடத்தில் கட்டி இருக்கும் மோட்டல் யூனிட் (ரெண்டு படுக்கை அறைகள்)  ஒன்னு  பதிஞ்சு வச்சோம்.  ஜஸ்ட் ஒரு நாள் தங்கல்.  சனிக்கிழமை கிளம்பிப்போய் அங்கே இரவு தங்கிட்டு மறுநாள்  ஞாயிறு மாலை வீடு வந்துடலாம்.  திங்களுக்கு வேலைக்குப் போகணுமில்லெ?  போட்டும், ஒருநாளுன்னா ஒரு நாளு.
நம்மூட்டில் இருந்து 235 கிலோ மீட்டர் தூரம். எங்கேயும் நிக்காமப்போனால்  மூணே மணி நேர ட்ரைவ்.  குதிரைக்குப்போட்டாப்லெ கண்பட்டையா  கட்டிக்கிட்டு இருக்கோம்? போற வழியில் அங்கங்கே வேடிக்கை பார்த்துக்கிட்டே போனால் ஆச்சு.


சனிக்கிழமை  காலை ஒன்பதரைக்குக் கிளம்பியாச்சு. ஒருமணி நேரத்தில் ஆஷ்பர்ட்டன் என்ற  டவுனுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  கொஞ்சம் பெரிய ஊர்தான்.  ஒரு இருபத்தி எட்டாயிரம் மக்கள்ஸ் வசிக்கிறாங்க.  நியூஸியின் பெரிய நகரங்களில் உள்ள எல்லா  முக்கிய கடைகளும் (செயின் ஸ்டோர்ஸ்)  இங்கேயும்  இருக்கு.  மெயின் ரோடிலேயே  நகரசபை அமைச்சுருக்கும் பூங்காவும் மணிக்கூண்டும்  அருமை!  பூங்காவில் ஒரு சிலை!


ஜான் க்ரிக்  (John Grigg) . 19 ஆம் நூற்றாண்டில்  பார்லிமெண்ட் அங்கமா இருந்தவர். இங்கிலாந்தில் இருந்து  தன்னுடைய 26 வது வயசில் நியூஸிக்கு  குடிபெயர்ந்தவர்.  லாங்பீச்  (Longbeach)  என்ற இடத்தில்  வீட்டைக் கட்டிக்கிட்டு ,  அக்கம்பக்கம்  சுற்றி இருந்த சதுப்பு நிலப்பகுதியை  சீராக்கி, அந்த    இடத்தை  ஒரு ஊராக  மாற்றி அமைத்தவர். அப்ப மொத்தம் 32000 ஏக்கர் நிலம். கழிவு நீர்  குழாய்கள், சாக்கடை அமைப்புகள் எல்லாம் இவர் ஏற்படுத்தியதுதானாம். 150  மைல்தூரத்துக்குக் கல்பாவிய  கழிவுநீர் வாய்க்கால்,  70 மைல் தூர  திறந்த  சாக்கடைகள் எல்லாம்  இவர்  ஏற்பாடு.


பெரிய பண்ணையை உருவாக்கி இருக்கார்.   முப்பதாயிரம் (30000) ஆடுகள்,  3000 பன்றிகள், 1000 மாடுகள்,  பண்ணையில் வேலை செய்ய 150 குதிரைகள், 200 வேலையாட்கள் இப்படி எல்லாம் பெரிய அளவில்!  5000 ஏக்கரில் கோதுமை,  3000 ஏக்கரில் ஓட்ஸ் தானியம் இப்படி விளைச்சலும் உண்டு.  இங்கிலாந்து நாட்டுக்கு முதல்முதலா  உறையவச்ச இறைச்சியை அனுப்புனது இவர்தான்.  வியாபாரம் கொடிகட்டிப்பறந்துருக்கு.


சொந்தமா   சர்ச், போஸ்ட் ஆஃபீஸ், பள்ளிக்கூடம், மாவு மில், செங்கல் சூளை, பேக்கரி, இரும்புப் பட்டறைகள்,  வுல் ஷெட்கள்,  பண்ணை மிருகங்கள்,  இப்படி  எல்லா தன்னிறைவுகளுமா  இவருடைய பண்ணை ஒரு அரசாங்கம் மாதிரி செயல்பட்டு இருக்கு.   சுருக்கமா, இப்ப நம்ம மக்களுக்குப் புரியும்படிச் சொன்னால்...... இவர் ஒரு அம்பானி!   ஆனால்........  (நாட்டு) மக்களுக்கு நல்லதே செஞ்சுருக்கார்.  எந்தக் கட்சியிலும் சேராம,  தனிப்பட்ட வகையில்  தேர்தலுக்கு நின்னு ஜெயிச்சு  நாட்டுக்கு நல்லது செஞ்சுட்டு, தன் 73 வது வயசுலே சாமிகிட்டே போயிட்டார்.


இப்பவும்  இவருடைய  பண்ணை  இல்லம், 16 ஏக்கர்  தோட்டத்துக்கு நடுவில்  The Longbeach Cookshop என்ற பெயரில்  ஃபங்ஷன் செண்ட்டராப் பயன்படுது. அட்டகாசமான இடம்! பண்ணையே இப்ப சரித்திரச் சான்றாக ஆகி போற்றப்படுதே!  நாட்டுக்கு நல்லது செஞ்ச தனிமனித வரலாறும் போற்றப்படணும்தான்.


இவருடைய சேவையைப் பாராட்டி, இவருடைய மரணத்துக்குப்பின் நாலு வருசம் கழிச்சு, ஆஷ்பர்ட்டன் நகரசபை,  நகரப்பூங்காவில்  சிலை வச்சுருக்கு. பூங்காவில் கொஞ்சநேரம் உலாப்போனோம். எல்லாம் ஒரு காமணிதான்.  பூங்காவின் நடுவில் இருக்கும் மணிக்கூண்டு ஒரு  ஃப்ரேமில் அடங்காத பிடாரி:-)

 பூங்காவுக்குப் பின்பக்கத்தெருவில்  ஒரு ம்யூஸியம் கூட இருக்கு.   ஒரு நாள் போய் வரணும்.   அப்புறம் கிளம்பி நேஷனல் ஹைவே  எண் ஒன்றில் போய்க்கிட்டே இருந்து   வலது பக்கம் பிரியும் ஸ்டேட் ஹைவே 79க்கு மாறிக்கணும்.  அப்படியெல்லாம் வழியைத் தவறவிட ச்சான்ஸே  இல்லை. தகவல்கள்  பக்காவா இருக்கும். யாரும்  அதன்மேல்  விளம்பர நோட்டீஸ் , மினி போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி வைக்க மாட்டாங்க.



  51 கிமீ தூரத்தில் இருக்கும் ஜெரால்டின் என்ற சிற்றூர்.  முக்கால் மணியாச்சுப் போய்ச்சேர.



PINகுறிப்பு:  அஞ்சேல்!!!!!

இது ஒரு மினித் தொடர்.


தொடரும்.....:-)



6 comments:

said...

மினித்தொடர் ஆரம்பம் :) மகிழ்ச்சி.

said...

மகிழ்ச்சி...
https://www.google.co.in/maps/@-44.067358,171.369833,3a,27.4y,255.59h,82.19t/data=!3m4!1e1!3m2!1sQdlt5ZqkouNM4MXsse_osA!2e0

said...

டீச்சர், இந்தப் பயணத்திலும் கூடவே வர்றேன்..அப்பப்போ தெரியாததுக்கெல்லாம் விளக்கம் சொல்லித் தரணும்..கேட்டோ? ;)

said...

பூங்காவின் நடுவில் இருக்கும் மணிக்கூண்டு ஒரு ஃப்ரேமில் அடங்காத பிடாரி:-)
:D !!

said...

குறும்படம் மாதிரி குறுந்தொடர்...

அவர் நல்லவரா இருக்குறது நல்லதுதான். அவரை நினைவு வெச்சி புகழ்ந்து பாராட்டுறதும் சிறப்புதான். எங்கிருந்தாலும் வாழ்க.

மணிக்கூட்டு புதுமையா இருக்கு.

said...

பயணம் இனிது. அது போன வருஷம் செய்தாலும் எப்ப செய்தாலும். நல்ல மனுஷங்களைப் பத்தித் தெரிய வருதே. மணிக்கூண்டு எல்லா ஊரிலயும் ஒரே மாதிரி இருக்கே. நேப்பர்வில் மணிக்கூண்டும் இப்படித்தான் இருக்கும்.