Monday, December 22, 2014

ஆஞ்ஜி, ஆஞ்ஜி, ஹாஞ்ஜி! அனுமன் அருள் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 8)

காலை ஒரு எட்டேகால் போல  கீழே ப்ரேக் ஃபாஸ்டுக்குப் போனோம். அப்பதான்  சாந்தியும் பூபாலும் ஹொட்டேல் வாசலுக்குள் நுழையறாங்க.  ஆஹா..... பெர்ஃபெக்ட் டைமிங். இன்று நாள் முழுசும் இப்படியே  எல்லாம் ப்ளான்படி நடக்கட்டும்.  ததாஸ்து!

பஃபேயில்  இருந்த எல்லாத்தையும் நோட்டம் விட்டுட்டுப்போய் உட்கார்ந்தோம். அக்ரோட் ஹல்வா இருக்குன்னு மனசில் குறிச்சு வச்சேன்:-)  அவரவருக்கு  வேண்டியதை நாம் கொண்டு வரும் சிரமம் கூட இல்லாமல் எது  வேணும் என்று கேட்டுக்கேட்டுக் கொண்டு வந்துக்கிட்டு இருந்தாங்க பணியாளர்கள்.  நல்ல சர்வீஸ்.  அப்பதான்  ஹொட்டேல்  மேலாளர் ஒருவர் வந்து  அறையில் எல்லா வசதியும் சரியா இருக்கா? வேறு எதாவது  சௌகரியம் செஞ்சு தரணுமான்னு கேட்டார்.

ஓ.... குறை கேட்டாச் சொல்ல வேணாமோ?  எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனால்.... முக்கியமானவைகளை வைக்க இரும்புப்பெட்டி  இல்லை.  வெளிநாட்டுப் பயணிகள் என்றால்  பாஸ்போர்ட்  ரொம்பவே முக்கியமானது பாருங்க. அதைப் பையில் வச்சுக்கிட்டே ஊர்சுத்தறது சிரமம் இல்லையா? எந்தநேரத்துலே  யார் அடிச்சுக்கிட்டுப் போயிருவாங்கன்னு  கவனம் பை மேலேயே இருந்தால் கண் பார்ப்பவைகளை எப்படி அனுபவிப்பது?

"ஆமாங்க. நீங்க சொல்றது சரி மேடம். ஏற்பாடு செஞ்சுருவோம்!"

பரவாயில்லை. இன்னிக்கு நாங்க செக் அவுட் செஞ்சுருவோம்.  அப்புறம் நீங்க  எல்லா அறைகளுக்கும்  ஏற்பாடு செய்யுங்க. மத்தபடி   சர்வீஸ் நல்லா இருக்கு. ஒரு நிறுவனம் நல்லா இருப்பது அங்கிருக்கும் பொருட்களால் மட்டுமில்லை.  அங்கே பணிபுரியும் மக்களால்தான் நல்ல பெயர் கிடைத்து வெற்றியாகவும் நடக்கும்.  இங்கே நாங்க  பார்த்தவரை  எல்லோரும்  இனிய முகத்துடன் விசாரிச்சு தேவையானவைகளை உடனுக்குடன்  செய்யறாங்க. எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லோரும்  இளைஞர்கள்  வேற . ஃப்ரெஷ்ஷா  இருக்காங்க.  முக்கியமா முகத்தில்  புன்முறுவல். இனி வருங்காலத்தில் இன்னும்  நல்லபடியா  நடப்பது  உபசரிப்பின் தரத்தினால்தான். நல்லா இருங்கன்னு  வாழ்த்திட்டு கெஸ்ட் புக்கில் எழுதிட்டும் வந்தேன்:-)

செக்கவுட் டைம் பத்துமணியாம். நமக்கு  பனிரெண்டுவரை கிடைச்சது. போதும். தாராளம்.  ஒரு இருபத்தியஞ்சு கிலோமீட்டர்  போகணும். கூகுள்மேப் அரைமணின்னு சொல்லுது.  அரையும் அரையும் ஒன்னு.   அங்கே இங்கேன்னு வேடிக்கைக்கு ஒரு ஒன்னரை.  இப்படி அப்படி க்ரேஸ் டைம் அரை மணின்னு மனக்கணக்கு.

 நம்ம சீனிவாசனுக்கு செல்லடிச்சு, சாப்பிட்டாரான்னு  கேட்டதுக்கு  எல்லாம் முடிச்சு  ரெடியா இருக்காராம்.   வண்டியை  முன்வாசலுக்குக் கொண்டு  வரச் சொல்லிட்டு  அறைக்குப்போய்  பெட்டிகளைப் பூட்டிட்டுத் திரும்பும்போது,   'இங்கே யாரு  ஆமெர் கான்?' என்று  நம்ம  தளத்தின் காரிடோரில் இருந்த ஹவுஸ் கீப்பிங் பணியாளரிடம் கேட்டேன்.

லேசாக மிரண்ட பார்வையுடன்,  நாந்தான்னு சொன்னார் அந்த இளைஞர். நேம்டேக் அதையே சொல்லுச்சு:-)  டவல்  அலங்காரங்கள்  ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டுனதும், முகம் பளிச். உடனே  நானும் க்ளிக்:-)

கிளம்பி, டும்கூர்  ரோடில் பயணம்.  வழியில் அங்கங்கே எதோதோ தொழிற்சாலைகள், மக்கள் கூட்டம் இப்படி..... புதுப்புது  அடுக்குமாடிக் கட்டிடங்கள்  ஏராளமாகக் கட்டிக்கிட்டு இருக்காங்க.  எல்லா நகரமும் இப்படித்தான் ஆகிக்கிட்டு இருக்கு, இல்லே!  வீட்டு விலைகள் எல்லாம்  தாறுமாறாய் ஏறிக்கிட்டு இருக்குன்னு பூபால் சொன்னார்.

ஒருமணி நேரத்துக்கு  மேலே  போய்க்கிட்டு இருக்கோம். இன்னுமா 25 கிமீ முடியலை?  பிரமாண்டமா ஒரு கோவில் கட்டிடம் தென்பட்டது.  இது ஏதோ ஜெயின் கோவில் என்றார் கோபால். கோவிலை அடுத்த  அலங்கார நுழைவு வாசலில் நேயுடு போல இருக்கே. போய்ப் பார்க்கலாமுன்னா.....  நேரமாகிக்கிட்டு இருக்கு. வந்த வேலையை பார்க்கலாமுன்னாரா.....  நான் லேசா மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டேன்:-))

இன்னும்  அஞ்சு நிமிசம் போனதும் கோவில் கோபுரம் ஒன்னு கண்ணில்பட்டது. கூகுள் மேப் சொன்ன  அரிசினகுண்ட்டே ஆஞ்சநேயர் கோவில்  இது.  கட்டாயம்  உள்ளே போகத்தான் வேணும்.  ரொம்பப் பழைய கோவிலாம். ஆனால் சமீபத்தில் புதுப்பிச்சுக் கட்டி இருக்காங்க. மூணு கோவில்களாத் தனித்தனிக் கட்டிடங்கள்.    காங்க்ரீட்  த்வஜஸ்தம்பம்.

 நடுவில் இருக்கும் கோவில் முகப்பில்  ராமர் & கோ .  மூலவர் நம்ம ஆஞ்ஜி.  ஒரு பெரிய சதுரக் கல்லில்  வலப்புறம் திரும்பி சைடு போஸில் இருக்கார்.

கற்பூர ஆரத்தி ஆனதும்,  அர்ச்சகரிடம் படம் எடுக்கலாமான்னதுக்கு,  சரின்னு தலை ஆட்டினார். பிள்ளையார் சந்நிதி  இங்கேயே தனியாக இருக்கு.  நவகிரகங்கள் ஒரு  மூலையில். எதிர்க் கட்டிடத்தில்  சக்தி.  இன்னொன்னில்  சிவன், லிங்க ரூபத்தில்.


நாம் போக இருக்கும்  கோவில் இன்னும் அஞ்சு  நிமிச தூரத்தில் தானாம்.  அப்பாடா ஒரு வழியா வந்துட்டோமுன்னு வாசலில் இருந்த போர்டைப் பார்த்துட்டு உள்ளே போய் வண்டியை நிறுத்தினோம்.

விஸ்வ சாந்தி ஆஷ்ரம். கார் பார்க் சமீபத்துலேயே  கோவில் கட்டிடங்கள்.  பெரிய ஹாலா இருக்கும் இடத்தில் மூன்று பக்கமும் சந்நிதிகள். நடுநாயகமா  ராமர் அண்ட் கோ!  பிள்ளையார், லிங்க ரூப சிவன், பாண்டுரங்கன், வேணுகோபாலன், விஷ்ணு, சக்தி என்று  நம்மைச் சுத்திச் சந்நிதிகள்.  பட்டர்,  படம் எடுத்துக்கலாமுன்னு சொன்னார்.  ஆச்ரமம்  அந்தப் பக்கம் உள்ளே இருக்குன்னு கை காட்டினார்.

அதுக்குள்ளே அடுத்த கட்டிடத்துக்குள்ளே நுழைஞ்ச கோபால்,  அங்கிருந்தே  வா வான்னு கை காமிச்சார். உள்ளே நுழைஞ்சால்....  ஹாலின்  மறு கோடியில்  ஏழு படிகள் உயர மண்டபத்தில் வலது கையில் தூக்கிப்பிடிச்ச சஞ்சீவினி  மலையுடன்  நிக்கறார் நம்ம  நேயுடு!  நல்ல பெரிய உருவம். ஹனுமனுக்கு முன் ஒரு உற்சவமூர்த்தி, இடக்கையில் மலை ஏந்தி!



அவர் நிக்கும் பீடத்தைப் பாருங்கன்னு  சுட்டிக்காமிச்சாங்க சாந்தி. அட!   சிவலிங்கங்கள் . அதன் மேல் கிடக்கும் ஒரு உருவம். அதை ரெண்டு பாதங்களாலும்  மிதிச்ச மாதிரி  நேயுடு நிக்கறார்.

என்ன கதைன்னு பட்டரிடம் கேட்டேன்.   'ராக்‌ஷஸ்' என்றார் சுருக்கமாக!

கும்பிடு போட்டுட்டு   வளாகத்தின் உள்ளே நடந்தோம்.  தொலைதூரத்தில்   ஒரு பெரிய சிலை.  என்ன  சாமின்னு  அங்கிருந்து தெரியலை:(

கிட்டப்போய்ப் பார்த்தால்.....  ஸ்ரீ விஜய விட்டலன்.  36 அடி உசரம்!


"இன்னும்  ஏகப்பட்ட  சமாச்சாரம் இருக்கு. வாங்க போய்ப் பார்க்கலாம்."

'எப்படி அண்ணி இதெல்லாம்?  நாங்க இங்கேயே இருக்கோம்.  இதுவரை இப்படி ஒன்னு இருக்குன்னே தெரியாதே'ன்னார் பூபால்.

'வலை 'என்றேன் ரத்தினச் சுருக்கமாக:-)

தொடரும்............:-)

PINகுறிப்பு:  நேத்து நம்ம ஆஞ்ஜிக்கு ஹேப்பி பர்த்டே!  அந்த நாளையொட்டியே நம்ம தளத்திலும்  அவர் வந்துட்டார்.  அஞ்சனை மைந்தனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.





18 comments:

said...

தரிசனம் கிடைத்தது அம்மா...!

said...

//'எப்படி அண்ணி இதெல்லாம்? நாங்க இங்கேயே இருக்கோம். இதுவரை இப்படி ஒன்னு இருக்குன்னே தெரியாதே'ன்னார் பூபால்.//

துளசி டீச்சர்னா சும்மாவா....:))

ஆஞ்சி தரிசனம் உங்க மூலமா எங்களுக்கும் கிடைத்தது.

அது என்ன கதை என்று தெரிந்ததா டீச்சர்?

said...

விஜய விட்டலன் ரொம்பவும் அழகா இருப்பார். முதலில் அவர் மட்டுமே இருந்தார். இப்போதுதான் மற்றவர்கள் கோயில் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கு அனுமன் தரிசனம் செய்து வைத்த உங்களுக்கும் அவரது அருள் கிடைக்கட்டும்.

said...

தேடிக் கண்டு பிடிச்சு அனுமனையும் பார்த்தாச்சு. வல்ல பிரம்மாண்டம் தான். விட்டலனுக்கும் பெரிய விஸ்வரூபம் கொடுத்துட்டாங்க்களா.இனிமேல் விமானத்தில் இருந்து பார்த்தால் ஆஞ்சனேயர்களும்,லிங்கங்களுமாக லாண்ட் மார்க் மாதிரித் தெரிவார்களாக இருக்கும்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நல்லா இருங்க.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அதான் சொன்னாரே ராக்ஷஸ்!

அம்புட்டுதான்.


இனி வேறெங்காவது விசாரிக்கணும்.

said...

வாங்க ரஞ்ஜனி.

அழகான தெளிவான முகலக்ஷணம்தான்!

மெள்ளமெள்ள விரிவாக்கம் செஞ்சுருக்காங்க. அத்தனையும் அழகே!

said...

வாங்க வல்லி.

கணினி சரியாச்சா?

எல்லோரும் விஸ்வரூபம் எடுக்கும் காலம் வந்தாச்சு:-)

said...

அருமையான படங்கள். உங்கள் மூலம் ஆஞ்சியின் தரிசனம் எங்களுக்கும்!

said...

ஆஞ்சநேயர் தரிசனம் கண்டேன். கோயிலில் கட்டட வேலைகள் எல்லாமே சிமெண்ட்டில்தான் போலிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

said...

நேயுடு தரிசனத்திற்கு நன்றிகள் . பிள்ளையார் அழகோ அழகு !!!

said...

வலையில் எல்லாம் கெடைக்கும். ஒங்களுக்கு ஒங்க பிரிய ஆஞ்சனேயர் கெடைச்சிருக்காரு.

அந்த ஆமெர்கானுக்கு வாழ்த்துச் சொன்னது அழகு. நானும் இப்போ முடிஞ்ச வரைக்கும் அப்படிப் பாராட்டப் பழகிட்டிருக்கேன். சமயத்துல மறந்துரும். நினைவுல இருக்குறப்பல்லாம் சொல்றதுதான்.

பெங்களூர் ரொம்பத்தான் மாறிப்போச்சு.

நேயுடுங்குற பேருக்குப் பொருள் விளக்கம் என்ன டீச்சர்?

said...

வாங்க தமிழ் இளங்கோ.

பழைய காலத்துக் கல் கோவில்களுக்கு இப்ப எங்கே போறது? அந்தக் காலக் கோவில்களில் மேலே கற்பலகைகள் உள்ள தளங்களைப் பார்த்து இன்னமும் வியப்புதான்.

இனி எல்லாம் காங்க்ரீட்தான். அதான் சாமிச் சிலையை கல்லில் வடிச்சுட்டாங்களே!

said...

வாங்க சசி கலா.

ரசனைக்கு நன்றிகள்ப்பா.

said...

வாங்க ஜிரா.

நல்லா இருக்கும் சமாச்சாரங்களை ரசிப்பதோடு கூடவே கொஞ்சம் பாராட்டுவது நம்ம மனசுக்கும் நல்லதுதானே!

இது நான் நியூஸி வந்தபிறகு கற்றுக்கொண்டதே! ஒன்னுமில்லாததுக்கெல்லாம் இங்கே பாராட்டு மழை பொழிஞ்சுருவாங்க:-)))

ஆஹா.... நேயுடுதான் அந்த ஆஞ்சநேயுடு!(தெலுகு) செல்லமாச் சுருக்கிட்டேன்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி.

said...

இனியஆஞ்சி தரிசனம்.

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.