Monday, March 02, 2015

குற்றால அருவியிலே குளித்தது போல் ....... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 26)

கண்  போகும் திசை எல்லாம் பச்சைப் பசேல்னு இருக்குப்பா!  தென்காசி ஊருக்குள் போகாமலேயே பைபாஸ் செஞ்சு போய்க்கிட்டு இருக்கோம்.  அலங்கார தோரணவாசல் வச்சு குற்றால சிறப்பு நிலை பேரூராட்சி அன்புடன் வரவேற்றது!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 86 கிமீ. ஒன்னேமுக்கால் மணி நேரம்  எடுத்தது. இப்ப  நடுப்பகல் 12.30.

ஐந்தருவி, சிற்றருவிக்கு இந்தப்பக்கம் போ. புலியருவிக்கு அந்தப்பக்கம் போன்னு எந்தெந்த அருவிக்கு எந்தத் திசை போகணுமுன்னு தகவல்.  பேஷ் பேஷ். சுற்றுலாப்பயணிகள் ஏராளமாக வரும் இடம். இதெல்லாம்  இருக்கணும்தான். இருக்கு என்பதே மகிழ்ச்சி.

மெயின் அருவிக்கு இன்னும் அறுநூறு மீட்டர்கள்தான் என்றதைப் பார்த்ததும் மனசு ஜிவ்ன்னு பறந்தது. இதே குற்றாலத்துக்கு  ஒரு நாப்பத்திநாலு வருசங்களுக்கு  முன் வந்திருக்கேன்.

 மே மாசம். நல்ல  வெயில் காலம்.  ஒரு சுற்றுலாக்குழுவில் சேர்ந்துக்கிட்டோம் நானும் என் தோழியும். அதுலே போக வேண்டிய குடும்பங்களில்  கடைசி நாட்களில்  சிலர் ஜகா வாங்க, அந்த இடம் எங்களுக்கு ரொம்ப மலிவான விலையில் கிடைச்சது.  பஸ் பயணம்.  12 நாட்கள். எல்லாம் கோவில் விஸிட்களே.  இடையில்  இந்தக் குற்றாலம் வாய்ச்சது. அருவியைப் பார்க்க துள்ளிக் குதிச்சு ஓடோடிப் போறோம். போனால்.....

சுத்தம்.  சொட்டுத்தண்ணி இல்லை:(  பளிச்ன்னு காஞ்சு நிற்கும் மலைதான் கண் முன்னே!  கிட்டக்கூடப் போய்ப்பார்க்கலை. அதான் தண்ணி இல்லையேன்னு இலஞ்சிநாதர் கோவிலுக்குப்போய் கும்பிட்டுட்டுத் திரும்பிட்டோம்.

அப்பெல்லாம் பக்தி அதிகமுன்னு சொல்லமுடியாது. ஜஸ்ட் வேடிக்கை பார்க்கும் மனோபாவமே. கோவில்களுக்குப் போனாலும்  பழக்க தோஷத்தில் கையெடுத்துக் கும்பிடுவதோடு சரி. நம்ம வீடுகளில் குழந்தைகளை இப்படித்தான் பழக்கி வச்சுடறோம் இல்லையா?  

சிற்பங்களை உத்துப் பார்த்து ரசிப்பது எல்லாம் பின்னால் வந்தது. சரியாச் சொன்னால்..... கோவிலே இல்லாத வெளிநாடுகளுக்குப் போனபின் நாம் விட்டு வந்த நாட்டின் நல்ல விஷயங்களை  'இப்போது இழந்துட்டோம்' என்ற மனோபாவம் வருதே... அப்ப இருந்துதான்  சாமி சாமின்னு அலையறேன். அதுகூட நம்ம வீட்டுக்கு  சாமி வந்துட்டார் பாருங்க, அப்போலே இருந்து அதிகம். வயசும் ஏறிக்கிட்டே போகுதே....!கோவில் கோவிலா...  இப்போ பார்க்கலைன்னா பின்னே எப்போ?  அதுக்காக இன்னொரு ஜென்மம் எடுக்க  வேணாமேன்னுதான், கேட்டோ:-)


இப்போ தண்ணீர் இருக்கான்னு கேக்க வேண்டிய அவசியமே இல்லை.  நீர்வீழ்ச்சியின் ஓசை  இங்கேயே கேக்குது.  திருக்குற்றாலம் பேரருவிக்கு ஒரு அலங்கார நுழைவு வாசல்!

நல்லவேளையாக அருவிக்குப் பக்கம்வரை வண்டி போகும் நல்ல சாலையாகவும் இருக்கு.  இதோ கண் முன்னே  அருவி தெரிய ஆரம்பிச்சதும் உள்ளம் துள்ளியது உண்மை. ரொம்ப நடக்க வேணாம்.


வண்டியை விட்டு இறங்கும்போதே  மலை முகட்டில் இருந்து பொங்கி வழியும் தண்ணீர்  ஒரு பரவசத்தைக் கொடுப்பது உண்மை. ஹைய்யோ!  பெருமாளே!  என்னவெல்லாம் படைச்சு விட்டு, எங்களை அனுபவிக்கச் சொல்றீரே !



கார்பார்க்கிலிருந்து அருவிக்குப்போகும் பாதையில் ரெண்டு பக்கமும் சின்னச்சின்னக் கடைகள். எதா இருந்தாலும் திரும்பி வரும்போது பார்த்துக்கலாம். முதலில் தண்ணி!

கம்பித்தடுப்புகள் போட்டு வச்சுருக்காங்க. அருவித்தண்ணீர் வழிஞ்சு ஆறாக ஓடுது. குறுக்கே ஒரு பாலம்.  பாலத்துக்கு அந்தாண்டை பெண்கள் கூட்டம்.  இந்தாண்டை ஆண்களுக்குத் தனி இடம்.



அருவி யாருக்கும் வஞ்சனை  காமிக்குதுன்னு சொல்ல இயலாது. இரைச்சலோடு பொங்கி வழியுது!


ஆண்கள் பகுதியில் ஏகப்பட்ட கூட்டம்.  பெண்களில் பலர் அருவி வழிஞ்சு ஆறாகஓடும் இடத்தில் பாலத்துக்குக் கீழே இருக்கும் பாறைத் தரைகளுக்கிடையில்  தண்ணீரில் கிடக்குறாங்க. மனசின் மகிழ்ச்சி பூராவும் முகத்தில்!

இருட்டினபிறகும் குளிக்கமுடியும். நிறைய விளக்குகள் போட்டு வச்சுருக்காங்க. இங்கே பவர் கட் இருக்காதுன்னு நம்புவோமாக. வெய்யில் அதிகம் இருப்பதால் ஸோலார் லைட்ஸ் போட்டும் வைக்கலாமில்லையா?

தண்ணீர், எல்லோர் வயசையும் குறைச்சுச் சின்னப்புள்ளைகளா ஆக்கிருது. இதுக்குள்ளே நம்ம  ஆஞ்சீ குடும்பத்தினர்  இடது பக்க மலைச்சரிவிலிருந்து இறங்கி வரஆரம்பிச்சாங்க.குழந்தையும் குட்டியுமா பார்க்கவே குஷி!
கீழே கிடக்கும் காலி தீனிப்பைகளை எடுத்துத் திறந்து பார்க்கும் முகத்தில் ஏமாற்றம்:(

பசங்களுக்கு எதாவது தரலாமேன்னு நினைச்சவுடன் காரில் இருக்கும்  சரவணபவன்  பன் ஞாபகம் வந்துச்சு. காருக்குப்போய் எடுத்துக்கிட்டு வந்தார் கோபால். வரும்போதே பொதியைத் திறந்து  கொஞ்சம் கிள்ளி அருகில் வந்துக்கிட்டு இருந்த சின்னவனுக்குக் கொடுத்ததும் எல்லோரும் இங்கே ஓடி வந்தாங்க.

'சட்னு  பன்களை வெளியே வீசிப்போடுங்க'ன்னு சொன்னதும்  அப்படியே ஆச்சு.  ஆளாளுக்குக் கிடைச்சதை எடுத்துக்கிட்டுத் தனியே போய் தின்ன ஆரம்பிச்சாங்க. கிடைக்காததுகள் பாவம்.... அடுத்தவனிடம் இருந்து பிடுங்கப் பார்க்குதுகள்.

பசங்க, இங்கே வேற வகை. கொஞ்சம் சிவந்த நிறம். அழகு கொஞ்சும் முகம்!


இதுக்குள்ளே அருவியில் குளிச்சு முடிச்சுத்  திரும்பும்  ஒரு இளைஞர் குழுவில் ஒருத்தர்  ஒரு 'இவன் ' பக்கத்தில் உக்கார்ந்து 'அவனிடமிருந்து கொஞ்சம் பன்  வாங்கறேன் பாரு'ன்னு நண்பர்களிடத்தில் சவால் விட்டுக்கிட்டு இருந்தார். இவர் கை நீட்டுனதும் அவன் சட்ன்னு அந்தப்பக்கம் திரும்பித் தின்ன ஆரம்பிச்சான்.





இவர் கெஞ்ச, அவன் மிஞ்சன்னு  ஒரே சிரிப்பும் கலாட்டாவுமா ....
இவர் பெயர் ராஜகோபால். விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு, உங்க படங்கள் உலகெல்லாம் போகப்போகுதுன்னு சொன்னவுடன்,  வெட்கம் கலந்த  முகத்தில்  நன்றி சொன்னார்.  குளிச்சு முடிச்சாச்சா, இல்லை மீண்டும் வருவீங்களான்னா....  வருவாங்களாம். ரெண்டு நாளா  அருவியில் அதிகமாத் தண்ணீர் வரத்து இருந்ததால் யாருக்கும் குளிக்க அனுமதி  இல்லையாம். இன்றைக்குத்தான்   குளிக்க அனுமதி கிடைச்சது. அதான் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகம் என்றார்.

பசங்களைப் பார்ப்பதே ஒரு ஆனந்தம் தானே:-)))







அருவி பொங்கிப்பெருகி ஆறாக ஓடும் இந்த இடத்தில் தண்ணீர் சிக்கனம் குறிச்சு ஒரு விளம்பரம்!




நாங்களும்  தண்ணீரில் காலை நனைச்சுட்டுக் கிளம்பினோம்.  அருவியை  க்ளிக்குவதைத்தான் நிறுத்தமுடியலை என்னால். அதேதான் குரங்கன்களையும்...    திரும்பி வரும்போது  நெல்லி,  கொய்யா, கருவேப்பிலைன்னு பார்க்கவே ஆசையா இருந்துச்சு.  கூடை முடைஞ்சு விற்கும் அம்மாவின் புன்சிரிப்பு  மனசுக்குப் பிடிச்சது.  கூடையும் அழகுதான்.  ஆனால்  கொண்டு போக முடியாதே!  டீ குடிச்சுக்குங்கமான்னு  கொஞ்சம் காசு கொடுத்துட்டு  வண்டிக்குத் திரும்பினோம்.




சின்னதா இருக்கும் கடைத்தெரு என்றாலும் பயணிகளுக்கான குளியல் சாமான்களுக்குக் குறைவில்லை. கூடவே டீக்கடைகளும் தீனியும்.  குளிச்சு , தின்னு, குளிச்சு தின்னுன்னு இருக்கலாம். பயணிகள் உடமைகளைப் பாதுகாத்து வைக்கும் லாக்கர் வசதிகளும் இருக்கு.



திரும்பி வரும்போதுதான் கவனிச்சேன் 'கண்ணும் கண்ணும்'  சினிமாவில் நடிச்ச பங்களாவை! க்ளிக் க்ளிக்.   எதுக்கு ஜன்னலை செங்கல் வச்சு அடைச்சுட்டாங்க? தளவாய் ஹவுஸ் என்னும் பெயராமே!

கோவிலுக்குப் போகலாமுன்னால்.... மணி ஒன்னு. கோவில் மூடி இருக்குமாம்.  மாலை நாலு வரை காத்திருக்க நமக்கு நேரமில்லை:(
ஆதியில் பெருமாள் கோவிலா இருந்து அப்புறமா சிவன் கோவிலாக ஆச்சுன்னும்,  பெருமாள் அரூபமா இருக்கார் அங்கேன்றதும் சுவையான தகவல்கள்.


சரி.இங்கேயே பகல் சாப்பாட்டை முடிச்சுக்கலாமுன்னு கோபால் சொன்னதும், வரும்வழியில் 'அருணா ஆப்பக்கடை ' பார்த்தேன்னேன். அங்கேயே போனோம். சாரல் ரிஸார்ட்டின் ரெஸ்ட்டாரண்ட் இது.


நல்ல நீட்டா இருக்கு. உள் அலங்காரம் பரவாயில்லை.  அங்கோர்வாட்,  ஸ்ரீரங்கம், குற்றாலம்  ஆகிய படங்கள் சுவர்களில்.  டிவியில் எதோ  ஹிந்தி  சினிமா ஓடிக்கிட்டு இருக்கு.  வேலை செய்பவர்கள் எல்லோரும்  வடக்கர்களாம்.   சூப்பர்வைசர் சொன்னார்.  அவரும் முந்தி பம்பாயில் பல வருசங்கள் இருந்ததால் , இவர்களிடம் அவர்கள் மொழியில் பேசி வேலை வாங்கமுடியுதுன்னார்.



ஆப்பக்கடையில் ஆப்பத்தைத் தவிர  மத்ததெல்லாம் இருக்கு:(  தமிழ்நாடு முழுசும்  வட இந்திய, சீன வகைகள் சாப்பாடுதான்.  ப்யூர் வெஜ் ஃபேமிலி ரெஸ்ட்டாரண்ட் என்ற பெயரில் எல்லா நான் வெஜ் சமாச்சரங்களும் கிடைக்குதுன்னு மெனு சொல்லுது.  ஒருவேளை மாடியில் இருக்கும் நான் வெஜ் ரெஸ்ட்டாரண்டுக்கும் சேர்த்து ஒரே மெனு கார்டு போல!
கீழே அருணான்னா மாடியில் டயானா:-)

நமக்கு  சப்பாத்தி, சாதம், தயிர்,  தால், மிக்ஸட் வெஜ்ன்னு எதோ ரெண்டு கறிகள்  கிடைச்சது.      நமக்குப் பரிமாறின  பெண்,   ஹரியானாவாம்.  நாம் சண்டிகரில் இருந்துருக்கோம் என்றதும்   முகம் மலர்ச்சியும் லேசா சோகம் இழையோடும் கண்களும் ஒருசேர...... ப்ச்...யாரா இருந்தாலும் சொந்த ஊர் நினைவு கொஞ்சம் படுத்தத்தான் செய்யுது, இல்லை?

  நல்ல மிருதுவான  ஃபுல்கா.  சமையல் யாருன்னா .... அவரும் பஞ்சாபியாம்.

ஓய்வறைகள்  பரவாயில்லை.

ஒன்னு நாப்பதுக்கு கிளம்பி செங்கோட்டை  நோக்கிப் போறோம். பத்தே நிமிசம்தான் ஆச்சு இந்த எட்டு கிமீ வர்றதுக்கு!  சாலை சூப்பர்!
தொடரும்...  :-)








26 comments:

said...

பதிவை படிக்கும்போதும் படங்களை பார்க்கும்போதும் கூடவே சுற்றிய அனுபவம் வந்துவிட்டது...

said...

வருடா வருடம் நான்கு நாட்கள் குற்றாலம் தான்... இப்போது இன்னொரு முறை... அழகான படங்கள்...

ஆமா, சுடச்சுட அல்வா, சிப்ஸ் - சொல்லவே இல்லை...

கிலோகணக்கில் வாங்கிக் கொண்டு (உறவினர்களுக்கு...!) ஊர் திரும்புவோம்...

said...

குற்றால அருவியிலே குளித்தது போல் ....... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 26) - துளசிதளம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். முகநூலில் மட்டும் தான் பகிர முடிகிறது. G+ இலும் பகிர்வது போல், எல்லா தளங்களிலும் பகிர்வது போல் அமைப்பு சேர்க்கலாம். = நண்பர்களே, குற்றாலம் நீங்கள் போனால் கூட இவ்வளவு பார்த்திருக்க முடியாது, நம் கண் முன்னே குற்றாலத்தை, அதன் சிறப்புகளை கொணர்ந்து விட்டார். அற்புதமான பதிவு. நன்றி மேடம் Tulsi Gopal

said...

குற்றாலம் அனுபவித்தோம். புகைப்படங்கள் மிகவும் அருமை. நன்றி.

said...

அஹா, அழகு, அற்புதம், படங்கள் வர்ணனை எல்லாமே....
மிகவும் ரசித்தேன்.

said...

வாசிக்கும் போது படங்களைப் பார்க்கும் மனசுக்கு ரொம்ப இதமாக இருக்கு. கூல்.

said...

தூத்துக்குடில இருந்தவரைக்கும் குற்றாலத்துக்கு நெறைய வாட்டி போயிருக்கோம். அப்பல்லாம் அருவில குளிக்க அலறுவேன். இப்பப் போய்க் குளிக்கனும்னு ஆசையாத்தான் இருக்கு.

என்ன பிடிக்காதுன்னா... எல்லாரோடையும் இடிச்சு நெருக்கி ஒரசிக்கிட்டு குளிக்கிறது. சிலர் ஒடம்பெல்லாம் எண்ணெயப் பூசிட்டு வந்திருப்பாங்க. சிலர் சோப்பு தேச்சிட்டு வருவாங்க. சிலர் அப்படியே அமுக்குவாங்க. எனக்கு அப்படியெல்லாம் இருந்தாப் பிடிக்காது. குளிக்கிறது பட்டும் படாம நிதானமாக் குளிக்கனும்.

அதென்ன கண்ணும் கண்ணும் பட பங்களா? கண்ணும் கண்ணும்னு ஒரு படமா?

நான் தூத்துக்குடில படிச்சப்போ எங்க சயின்ஸ் சார் ஒருத்தர் குற்றால அனுபவங்களச் சொன்னாரு. அவரும் நண்பர்களும் போனாங்களாம். மலை மேல ஏறிப் போய் அங்கயே சமைச்சுச் சாப்பிட்டிருக்காங்க. மிச்சமிருந்த சோத்துக்குள்ள மொளகாப் பொடியை வெச்சி ஓரமா வெச்சிட்டாங்களாம். பக்கத்துலயே நல்லதா நாலு பிரம்புகள் வேற. குரங்குகள் வந்து தின்னுட்டு ஒறப்பு தாங்காம என்ன செய்றதுன்னு தெரியாம பெரம்ப எடுத்து அடிச்சிக்கிச்சாம். பாவம். அன்னைல இருந்து அவர எனக்குப் பிடிக்காமப் போயிருச்சு.

கூடை அழகு. சின்ன வயசுல பாத்தது. நானாயிருந்தா ஆசைக்கு ஒன்னு வாங்கிருப்பேன். கூடையெல்லாம் நியூசிலாந்துக்குள்ள விடமாட்டாங்களா என்ன?

நெல்லிக்காய் கருவேப்பிலையெல்லாம் பச்சப் பசேல்னு அழகு.

said...

படங்கள் எல்லாம் அழகு.
குற்றாலம் போய் பல வருடம் ஆச்சு.
இன்று முழுமையாக பார்த்து மகிழ்ந்தேன்.

said...

அருவில குளிக்கப் போலியா.என்னப்பா இது. படங்களெல்லாம் அழகோ அழகோ அழகு.
இப்படி எழுதிகிட்டே பொண்கா. எங்க போறதுனு முழிச்ச்கிட்டு இருக்கேன்.
அவ்வளவு நல்ல பதிவு போடறீங்கப்பா. நன்றி மா துளசி.
Jira naan solla vendiyathais sollittaar.

said...

இந்தப் பதிவுக்கான பின்னூட்டம் ஆண்டாளம்மாவிலேயே எழுதப் பட்டுவிட்டதா.?குற்றாலம் அருவி என்ன கடற்கரையா கால் நனைக்க. குளிக்க வேண்டாமா.?நம் நாட்டில் கோவில்கள் மட்டும் குறைவாய் இருந்திருந்தால் உங்களுக்கு சுற்றுலா போகவோ படம் பிடிக்கவோ வாய்ப்புகள் குறைந்திருக்கும்

said...

அம்மா....

அக்டோபர் மாசம் குற்றாலம் வந்தீங்கன்னு தெரியாம போச்சே...... எனக்கு தென்காசி தான் ....உங்க எல்லா பதிவுகளையும் படிசிட்டுருக்கேன்...... குறிப்பா " அக்கா " தொடர் ரொம்ப பாதிச்சது .....ரொம்ப ரசிததுன்னா " வீடு வா வாங்குது"...... நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா எப்படியாவது உங்களை சந்திசிருப்பேன்........ அடுத்த முறை வரும் போது முன் கூடியே தெரியபடுதுங்க உங்க பதிவுகளில்......நிச்சயம் சந்திப்போம் .......

said...

வாங்க கவிதைவீதி சௌந்தர்.

நலமா? ரொம்பநாளாச்சு உங்களை இங்கே பார்த்து!

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

மீண்டும் வருக.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

என்னது அல்வாவா? கண்ணுலேயே படலையே? இங்கே மிளகாய் பஜ்ஜிதான் பார்த்தேன்.

ஊருக்குள்ளே போகணுமோ?

said...

வாங்க ரத்னவேல்.

உங்கள் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு என் நன்றி.

said...

வாங்க ரமா ரவி.

நன்றிப்பா.

said...

வாங்க ஜோதிஜி.

ஆஹா.... வெரி கூல் யார்:-)

இந்த யார் Yaar என்பது ஹிந்திச் சொல்!

ஞாயிறன்று உங்களை நினைக்க வேண்டியதாப்போச்சு!
விவரம்,வரும் வெள்ளிக்கிழமை பதிவில்:-)

said...

வாங்க ஜிரா.

கண்ணூம் கண்ணும் நல்ல படம்தான். ப்ரசன்னா நடிச்சது.

2008 லே வந்த படம். கிடைச்சால் பாருங்க.

அதென்ன ஒரு வாத்தியாருக்கு இப்படி கொடூர மனசு? ச்சீன்னு இருக்கே:(

கூடை... பனைஓலையில் செஞ்சதுதானே? செடிகொடி மரம் சம்பந்தமுள்ள எதுவும் நாட்டுக்குள் வரப்டாது! பயோ செக்யூரிட்டி.... பயம்தான்:-)

said...

வாங்க கோமதி அரசு.

இன்னொருமுறையும் ரசித்தீர்கள்தானே!

நன்றி.

said...

வாங்க வல்லி.

குளிக்காம வந்துட்டேனேப்பா? ஆஸ்த்மாக்காரிக்கு ரிஸ்க் எடுக்கமுடியாது.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பின்னூட்டத்தை முன்னூட்டமாப் போட்டதுக்கு நன்றி.

பொது இடத்தில் குளிக்க முடியாது என்னால். மேலும் பயணம் வந்த நோக்கமே இப்பதான் ஆரம்பிச்சு இருக்கு. அங்கே போறவழியில் இது எனக்குக் கிடைச்ச போனஸ்.
அதுக்குள்ளே உடல் நலமில்லாமப் போனால் கூட வர்றவங்களுக்கும் கஷ்டமில்லையோ!

நம் நாட்டில் கோவில்களுக்கு என்ன பஞ்சம்? கோடிக்கணக்கில் இருக்கே. ஒரு ஆயுள் போதுமா என்ன?

இதுக்குத் தோதா இப்ப டிஜிட்டல் கெமராவும் வந்துருச்சு:-)

said...

வாங்க தமிழ் காதலி.

அடடா.... நீங்க தென்காசியா!!!

பசுமை வாழ்க்கை!!!

எனக்கும் உங்களை சந்திக்க ஆவல்தான் இப்போ! ரசிகையை சந்திக்கக் கசக்குமா:-)

said...

அருமை !! கூடவே பயணித்தது போல இருந்தது . அருவி ச்சாரலில் நானும் நனைந்தேன் :)
சுட சுட அல்வா பத்தி ஒன்னும் சொல்லலையே ன்னு நானும் நினைத்தேன் .

said...

வாங்க சசிகலா.
ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா.

said...

அருமையான அருவிப்படங்கள். முன்னோர்களும் ஜோரா இருக்காங்க...

தனபாலன் சார் சொல்லும் அல்வாவின் தகவல்கள் என்ன டீச்சர்??

said...

ஹைய்யா ! ! எங்கூருக்கு வந்துட்டு போயிருக்கீக ! ! மெயின் அருவியிலிருந்து 2 கி.மீ தூரம்தான் என் இல்லம். மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் அருவி தெரியும். இலஞ்சி குமாரகோவில் வரை நாங்கள் வாக்கிங் செல்லும் தூரம்.....படங்கள் அருமை....