Friday, April 10, 2015

இப்படி ஒரு பாச மழையா? என்ன ஆச்சு இவுங்களுக்கு?

பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்  என்பது துளசிதளத்தின்  கொள்கைகளில் ஒன்னு:-)  ஏற்கெனவே சொல்லி இருக்கேன், ஞாபகம் இருக்கோ?  ஆனால் அது பெரூசா இருக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஜஸ்ட் காலையில் போய் மாலையில் திரும்பும் டே ட்ரிப் (Day Trip) ஆகவும் இருக்கலாம். முக்கிய நோக்கம் இடமாற்றம். ஒரே இடத்துலேயே எப்பவும் இருக்க நாம் என்ன மரமா?

எங்களுக்கு ஈஸ்ட்டர் சமயம் எப்பவும் நாலுநாள் லீவு  கிடைக்கும்.  இந்த ஈஸ்ட்டர் வேற, எப்பப் பார்த்தாலும்  ஞாயித்துக்கிழமையே வருது பாருங்க:-) அதனால்  அந்த ஞாயிறு வழக்கமான வார விடுமுறையா ஆகிப்போகுதேன்னு  அதுக்குப் பதிலா இன்னொருநாள் சேர்த்து திங்களுக்கும் அரசு விடுமுறை தர்றாங்க.

சம்மர் முடிஞ்சு  ஆட்டத்தில் (Autumn)இருக்கோம். தோ.....குளிர் வந்துக்கிட்டே இருக்கு.  அதைத் தாங்கறதுக்குச் சார்ஜ் ஏத்திக்கணும் இப்போது:-)  எங்காவது போகலாமான்னு  பார்த்தப்ப  'ஏர் நியூஸீலாந்து  மலிவு விலையில் டிக்கெட் தர்றோம்.  உள்நாட்டுலேயே ஊருக்குப் போங்க'ன்னு தினமும்  வந்து சொல்லிக்கிட்டே இருக்கான்.  கணினி திறந்தால் போதும்.... 'ஊருக்குப்போ....ஊருக்குப்போ.'


நம்மகிட்டே வேற ஏர் பாய்ண்ட்  கொஞ்சம்  இருக்கு. அதை எங்கே  பயன்படுத்தாமக் காலாவதி ஆகிடப் போகுதோன்னு  ஒரு சின்னப்பயணத்துக்கு ரெடி ஆனோம்.  வெள்ளிக்கிழமை  முதல்  திங்கள் வரை லீவுதான் என்றாலுமே....  குட் ஃப்ரைடே  கடைகண்ணிகள் எல்லாமே மூடிக்கிடக்கும் என்பதால்  சனிக்கிழமை காலை போயிட்டு திங்கள் இரவு  திரும்பலாமுன்னு  முடிவு செஞ்சோம். குட்ஃப்ரைடே அன்னிக்கு எங்கூர் டிவியில்  விளம்பரம் கூட வராது! வியாபாரம் எந்த வழியிலும் கூடவே கூடாது:-)

தலைநகரத்துக்குப் போகலாம்.  வெறும் 49 டாலருக்கு ஒன் வே   டிக்கெட் கிடைச்சது.  இது ஆளுக்கு மட்டும்.  பொட்டி கொண்டு போகணுமுன்னா இன்னொரு 20 டாலர் தரணும்.  ஓக்கே. ரெண்டு பேருக்கு ஒரு பொட்டி போதுமுன்னு  முடிவு செஞ்சோம்.

ச்சும்மாச் சொல்லக்கூடாது, ஏர் நியூஸீலண்ட் சர்வீஸ்  அட்டகாசம்.  டிக்கெட் புக் பண்ண நாளில் இருந்து  வாரம் ஒருக்கா இமெயில் அனுப்பிடுவாங்க.  'போற இடத்துலே  எங்கே தங்கப் போறே?  இன்னின்ன  இடம் நல்லா இருக்கு.  புக் பண்ணிக்கோ....   போற இடத்துலே  நடந்தா ஊர் சுத்துவே? கார் வாடகைக்கு எடுத்துக்கோ. இன்னின்ன கம்பெனி  உனக்கு சஸ்தாவா  கார்  கொடுக்கும், பார்த்துக்கோ.....'

"ஈஸ்ட்டர் விடுமுறைக்குப் போறயே... பொன்னுத்தாயி. அப்ப பள்ளிக்கூட லீவு வேறவருதே. உனக்குத் தங்க இடம் கிடைக்காமக் கஷ்டப்படப் போறே.  சீக்கிரம்  தங்க இடம் பார்த்துக்கோ."

சொந்தக்காரங்க கூட இவ்ளோ கரிசனமாக் கவலைப்பட்டுக் கேக்கமாட்டாங்க! இப்படி ஒரு பாச மழை  பொழியறாங்களே!    என்ன ஆச்சு இவுங்களுக்கு?

பிடுங்கல் தாங்காம வலையிலே தேடி   ஹொட்டேல் அறை, வண்டி ரெண்டும் ஏற்பாடு செஞ்சோம். ஏர்ப்போர்ட்டுலே காரை பிக் பண்ணிக்கிட்டு திரும்பி வரும்நாள்  அங்கே ஏர்ப்போர்ட்டிலேயே  வண்டியைக் கொண்டுவந்து சேர்த்துடறதுன்னு ஏற்பாடு. என்ன வண்டி வேணுமுன்னதுக்கு  இப்ப நம்ம கிட்டே இருக்கும் இதே மாடல் வண்டியே போதுமுன்னு  சொன்னோம்.  தெரிஞ்ச பேய், பெட்டர் இல்லையோ?

கிளம்ப ஒரு வாரம் இருக்கும்போது , நம்ம ஃப்ளைட் விவரங்கள் (எல்லாம்  ஏற்கெனவே அனுப்பி இருந்த  ஐட்டினரியை)  திரும்ப ஒருவாட்டி அனுப்பினாங்க.  கிளம்ப  மூணு நாளிருக்கும்போது ஊருக்குப்போக மறந்துடாதே. காலை இத்தனை மணிக்கு  உனக்கு  ஃப்ளைட். அங்கே நீ தங்கும் நாட்களில் இன்னின்ன மாதிரி காலநிலை இருக்கப்போகுது, அதுக்குத் தகுந்தாப்புலே  உடைகளைக் கொண்டு போய்க்கோன்னு  மூணுநாளைக்கான  வெதர் ஃபோர்காஸ்ட் வேற  வந்துச்சு. Travel Tips!

 உடனே குடையை எடுத்துப் பொட்டியில்  வச்சோம்:-)

கிளம்பறதுக்கு முதல்நாள்....  'ஆன்லைன் செக்கின் ஓப்பன் ஃபார் யூ.   இப்பவே செக்கின் பண்ணிக்கோ'. பயங்கர  சர்வீஸால்லே இருக்கு:-)  வெத்தலை பாக்கு மட்டும் இங்கே  கிடைக்கும் பக்ஷத்தில்  வீட்டுக்கு வந்து  எழுப்பி, குளிப்பாட்டிவிட்டு,   அழைச்சுப்போய்  ஏர்ப்போர்ட்லே ப்ளேன்லே ஏறுமுன் ஆரத்தி எடுத்துருப்பாங்க போல!

இங்கே நம்மூரில் இப்பெல்லாம் செக்கின்கூட செல்ஃபீ ஆகிருச்சு.  அது ஒன்னும் ப்ரச்சனையே இல்லை. நாளைக்குப் பார்த்துக்கலாமுன்னு இருந்தோம்.


ரஜ்ஜுவை வீட்டுலேயே விட்டுட்டுப் போறதாகவும், மகள்  ரெண்டு நேரம் வந்து சாப்பாடு கொடுத்துடணும் என்ற ஒப்பந்தம். அதேபோல நம்மை ஏர்ப்போர்ட்டுக்குக் கொண்டு போய் விட்டுட்டு, திரும்பி வரும் நாளில்  பிக்கப் செஞ்சுக்கணுமுன்னு துணை ஒப்பந்தம் போட்டாச்:-)

சனிக்கிழமை பயணநாளும் வந்தாச்சு. நம்ம ரஜ்ஜுவுக்கு மட்டும் என்னமோ சந்தேகம். வீட்டுலே என்னவோ நடக்குதுன்னு. தயாரா எடுத்துவச்ச பொட்டிக்குப் பக்கத்தில் போய்  உக்கார்ந்துக்கிச்சு. பாவம்....  குழந்தை!

காலை எட்டே  முக்காலுக்கு மகள்  வந்து கூட்டிப்போய்  விமானநிலையத்தில் இறக்கிவிட்டாள். பத்தே நிமிச ட்ரைவ்தான்.  செல்ஃப் செக்கின் செஞ்சபின், நம்ம கோபால் தயவில் கோரு க்ளப் லவுஞ்சில் (ஏர் நியூஸிலாண்ட் Koru Club Lounge ) போய்  காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு விமானம் ஏறினோம்.

புது விமானம். கால் நீட்டிக்க நிறைய இடம் விட்டு, இருக்கைகளை அமைச்சுருக்காங்க. மொத்தம் 52 விமானங்கள்  ஏர் நியூஸிலேண்ட்  வச்சுருக்கு. இன்னும் ஒரு 13  வாங்கும் திட்டமும் இருக்காம்.  இந்த வருசம்  இவுங்க 75 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுறாங்க.  அதிக பட்சமா  விமானத்தை  ஒன்பது வருசத்துக்குமேல் வச்சுக்கறதில்லைன்னு பேச்சு.

வெளிப்புற டிசைனைக்கூட  மாத்திக்கிட்டு இருக்காங்க. பழைய நீலம்   ஒன்னோ ரெண்டோதான்.

 சரியான நேரத்துக்குக் கிளம்புன விமானத்தில்  வழக்கமா காமிக்கும் பயணிகள் பாதுகாப்பு குறிப்புகளைக் காமிக்க, ஹாபிட் (Hobbits) மக்கள்ஸ் வந்து, ஆக்ஸிஜன் மாஸ்க்,  லைஃப் ஜாக்கெட்ன்னு    சமாச்சாரம் எல்லாம் சொல்றாங்க. கடைசியில் 'எல்லாம் கவனிச்சுப் பார்த்துவச்சுக்கிட்டீங்கதானே?  உங்கள்  பயணம் சிறக்கட்டுமு'ன்னு வந்து சொன்னது எங்க பீட்டர் ஜாக்ஸன்:-)

எங்கூரைக் கீழே விட்டுட்டு நாங்க மட்டும் மேலே  போறோம்:-)

உள்ளூர் பெரிய ஆறு,  கடலில் கலக்கும்  இடம்!

அரைமணி நேரம் பறக்கிறோம். ஏத்தி இறக்கன்னு எல்லாம் சேர்ந்து ஒரு முக்கால்மணிநேரம்.


மிடில் ஆஃப் த மிடில் எர்த்!  இது வெலிங்டன் விமான நிலையத்தின் பெயர்!  உலக அரங்கில்  இந்நாட்டுக்குப் பெயர் வாங்கித் தந்த படைப்பு!   கோஷம் போட்டுக்கறேன்....லார்ட் ஆஃப்  த ரிங்ஸ், புகழ் ஓங்குக!!!! ஹாபிட்ஸ் புகழ்  இன்னும் ஓங்குக!!!!

 அரசியல்வியாதிகளின் பெயர்கள் வைக்கும் கலாச்சாரம் நல்லவேளையா இந்த நாட்டுக்கு இன்னும் வரலை!  பொதுமக்கள் காசுலே ஒருவியாதி கட்டுனதுக்கு  ஒரு வியாதியின் பெயரை வைப்பது. அடுத்த வியாதி வந்தால் பொதுமக்கள் காசுலே கட்டுனது என்றதை  வசதியா மறந்துட்டு,  அதைப் புறக்கணிச்சு  தங்களுக்குப் பிடிச்ச வியாதியின் பெயரை  வச்சு  அடாவடி செய்வது என்ற வம்பெல்லாம் இல்லையாக்கும், கேட்டோ!

சின்ன விமானநிலையம்தான். இடப்பற்றாக்குறை இருக்கே!   ஓடுதளம்கூடச் சின்னதுதான். சுத்தி இருக்கும் குன்றுகளுக்கும், அதைத் தொட்டடுத்து இருக்கும்  கடலுக்கும் இடையில்  இருக்கு! இப்பதான் கொஞ்சம் விரிவாக்கிக் கட்ட ஆரம்பிச்சுருக்காங்க.  உழக்கிலே கிழக்கு மேற்கு பார்த்தாப்போல:-)


காத்திருப்புப் பகுதியிலே தலைக்கு மேல் பறக்கும் ராக்ஷஸ  கருடன்கள்!   அநேகமா உங்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவைகள்தான்.


ஏற்பாடு செஞ்சுருந்த வண்டிச்சாவியை வாங்கிக்க  ரெண்டல் கார் பகுதிக்குப்போகும்போது....  செல்லில் சேதி வந்தது.  "வருக வருக.  நான்   விமானநிலையம் வந்து  அழைத்துப்போகவா?"


வடக்குத் தீவின் ஒரே தமிழ்பதிவர், தெற்குத்தீவின் ஒரே பதிவரை வரவேற்கிறார்!!!

தொடரும்...........:-)



19 comments:

said...

இதுவல்லவோ சேவை...!

கடலில் கலக்கும் படம் உட்பட அனைத்தும் அவ்வளவு துல்லியம்...

said...


"இப்படி ஒரு பாச மழையா? என்ன ஆச்சு இவுங்களுக்கு?"- துளசிதளம் - இப்போது விமானத்தில் நம்மை கூட்டிச் செல்கிறார் = வடக்குத் தீவின் ஒரே தமிழ்பதிவர், தெற்குத்தீவின் ஒரே பதிவரை வரவேற்கிறார்!!!= எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.

said...

ஒரே பாசமாப் பொழியுது?

said...

ஆகா.. ஆகா.. எப்பேர்ப்பட்ட பயணம் போயிட்டு வந்திருக்கீங்க. என்னோட கனவுப் பயணம் இது. அடா அடா அடா..

Eagles, Gollum, Gandalf, Frodo, Bilbo... ஐயோ ஐயோ... அட்டகாசம் போங்க. அடுத்த பதிவுக்கு ஆவலோட காத்திருக்கேன் :)

said...

உங்களது பயண அனுபவங்கள் எங்களை அந்தந்த இடத்திற்கே அழைத்துச்சென்றுவிடுகின்றன.

said...


புகைப்படங்கள் அனைத்தும் என்னைப்போலவே அழகு
தொடர்கிறேன் மேடம்.

said...

//வடக்குத் தீவின் ஒரே தமிழ்பதிவர், தெற்குத்தீவின் ஒரே பதிவரை வரவேற்கிறார்!!!
//
ட்ரிப் ப்ளஸ் பதிவர் சந்திப்பு.. வெர்ரி நைஸ் ..
படங்கள் எல்லாம் அழகு ..
take off பண்ணும்போது நான் பக்தி பழம் ..கண்ணு மூடித்தான் இருப்பேன்

அக்காவ்வ் ..ரஜ்ஜு sad ஆ பாக்குது .என்னதான் அக்கா பார்த்துக்கிட்டாலும் அம்மாவை போல வருமா :)

said...

கடலில் கலக்கும் ஆறு, படம் அழகா இருக்கு.

said...

இனிய பயணம். வெளியிட்ட அன்றே படித்தேன்.

உங்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வருவதாலோ என்னமோ, எனக்கும் நியூசி வரச் சொல்லி சுற்றுலாத் துறையின் அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது! :)

said...

அருமையான பயண விவரம்! அழகான மிகவும் நேர்த்தியான படங்கள். அதுவும் அந்த ஆறு கடலில் கலக்கும் படம் சூப்பர் கேட்டோ....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எனக்கே ஆச்சரியமாப் போச்சு இவுங்க பிழிஞ்ச சேவையைப் பார்த்து:-)

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ரத்னவேல்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அதாங்க எனக்கும் புரியலை:-)

said...

வாங்க ஜிரா.

இந்தப் பயணத்துலே 'அந்தப் பயணம்' போகமுடியலை. குறைஞ்சது வே(ட்)டா பார்க்கலாமுன்னா.... ஈஸ்ட்டர் ஹாலிடேவாப் போயிருச்சு:(

அடுத்த பகுதி நாளை வெள்ளி:-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க கில்லர்ஜி.

அட! அழகே அழகை ரசிக்கலைன்னா எப்படி?

நன்றீஸ்.

said...

வாங்க ஏஞ்சலீன்.

ஒருமுறை இப்படித்தான் ஒரு பெரிய பக்தி கோஷ்டி ப்ளேனில். டேக் ஆஃப் ஆனதும் கோவிந்தா கோவிந்தான்னு கூச்சல்.ஒருகுரலிசை. ஷாக்காகிப் போச்சு:-)

திரும்பி வந்தது முதல் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிக்கிச்சு என்னோடு. ப்ரைவஸியே இல்லைப்பா. பாத்ரூமுக்குள்ளேயும் வந்து உக்கார்ந்துக்குது இந்த ரஜ்ஜு !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அழைப்பை விடமுடியுமா?இப்ப நாங்களும் அழைக்கிறோம். கட்டாயம் வாங்க. ஒருமுறை பார்க்கவேண்டிய நாடுதான் இது!

said...

வாங்க துளசிதரன்.

எல்லோருக்கும் கடலில் கலக்கும் நதிதான் ரொம்பப் பிடிச்சுருக்கு!

நன்றி.