Monday, May 11, 2015

குருவாயூர் அம்பல நடையில்...ஒரு திவசம் ஞான் போயி..... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 48)

கோவில் கடை வீதி  கலகலன்னு இருக்கு!  ரெண்டு பக்கமும் கடைகளோ கடைகள். மெள்ள வேடிக்கை பார்த்துக்கிட்டே போறோம். நம்மூர் மாதிரி மல்லிப்பூக்களை கட்டி விற்பனைக்கு  வச்சுருக்காங்க.   மதுரையை விட்டுக் கேரளத்தில் நுழைஞ்ச பிறகு முதல்முறையா மல்லிச்சரம்.  கொஞ்சம் வாங்கித் தலையில் சூடிக்கிட்டேன். எல்லாம்  இந்தியாவோடு சரி. நியூஸியில் எங்கே?


கோவிலுக்கு முன்னால் பெரிய கொட்டாய் போட்டு வச்சுருக்காங்க.  இதெல்லாம் போனமுறை வந்தபோது இல்லை. எப்போ வந்தோமாம்? கால் நூற்றாண்டுக்கு முன்!  மகளுக்குத் துலாபாரம்கொடுக்க வந்துருந்தோம்.  மகள் ஒன்னரைவயசுக் குழந்தையா இருக்கும்போது  துலாபாரம் கொடுக்கணுமுன்னு இந்தியா போயிருந்தோம்.  அப்போ குழந்தைக்கு  உடம்பு சரி இல்லாமல் போய்  எங்கேயும்  உள்ளூர் பயணம் வேண்டாமுன்னு இருந்துட்டு, திருப்பதிக்கு மட்டும் ஒருநாள்  தமிழ்நாடு அரசு நடத்தும்  திருப்பதி ட்ரிப் (காலையில் போய் இரவு திரும்பி வந்துரும். தரிசன சார்ஜ் எல்லாமே டிக்கெட்டின் விலையில் சேர்ந்துருக்கும்) மட்டும் போய் குழந்தைக்கு மொட்டை அடித்து, சாமி தரிசனமும் ஆச்சு. மகளுக்கு சப்போர்ட் பண்ண, கோபாலும் மொட்டை அடிச்சுக்கிட்டார்!

அப்புறம்  மகளுக்கு  ஆறு வயசாகியதும் போன பயணத்தில் துலாபாரம் கொடுத்துட்டு வந்தோம். க்ருஷ்ணன் பொல்லாதவன்.  சின்னக்குழந்தை வெயிட் கொஞ்சமா இருக்குமேன்னு  கொஞ்சம் வளர்ந்து சிறுமியானதும் ஓக்கேன்னுட்டான்.  வெண்ணெய் துலாபாரம். அப்படியே சோறூட்டுதலும் செஞ்சுட்டு வந்தோம். (அதுவரை  சோறே கொடுக்கலையான்னு கேக்கப்டாது. கோவில் சோறு கொடுக்கலைன்னு வச்சுக்கணும்:-)

கேமெரா செல்ஃபோன் ஒன்னும்  அனுமதிக்கறதில்லைன்னு  சீனிவாசன் சொல்லி இருந்ததால் அறையிலேயே வச்சுட்டும் வந்தாச்சு. இப்போ  அங்கே இடதுபுறம் இருந்த மண்டபத்தில்கலை நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டு இருக்கும்போது , கெமெரா இல்லையேன்னு மனசு கூவியழுதது உண்மை:-)  நாலைஞ்சு சிறுமிகள் பரதநாட்டியம் ஆடிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் உக்கார்ந்து பார்த்துட்டு, தரிசனம் கிடைக்குமான்னு பார்க்கப் போனோம்.

கோவில் முகப்பில் நிலவிளக்குக்குப்பின்  ஒரு  கம்பித்தடுப்பு. அதுக்கு இந்தாண்டை  ஒரு பெட்டி போல ஒன்னு.  ஜனங்கள் பெட்டிக்குப் பக்கத்தில் நின்னு உள்ளே கோவில் முகப்பு வழியா பார்த்துக்கிட்டே கைகூப்பி கும்பிடறாங்க.  சின்னதா ஒரு வரிசை. முன்னால் நிற்பவர் நகர்ந்தால் அடுத்தவர் கைகூப்பல்.  ஜருகு, போபோ, மதி ன்னு  கூப்பாடு போடும் நாட்டாமைகள் யாரும் இல்லை. மக்கள் பாட்டுக்கு ரெண்டு நிமிசம் நிக்கறதும்  போறதுமா இருக்க, நமக்கு முன்னால் இருந்த ஒரு அம்மா , பின்னால் நிற்கும் யாரையும் சட்டையே செய்யாமல் ஒரு அஞ்சாறு நிமிசத்துக்கும் மேல் கும்பிட்டுக்கிட்டே நிக்கறாங்க. இன்னும் நேரமாகுமோன்னு கோபால் வரிசையைவிட்டு  வெளியே போயிட்டார்.  நான் மட்டும் விடாப்பிடியா வரிசையில் நின்னேன்.

அந்தம்மா  ஒருவேளை கோவிலில் வரிசையில் நிற்பதையே மறந்துட்டாங்கபோல!   சிலருக்கு இப்படி ஆகலாம் இல்லே?

   நாங்க கொரட்டியில் இருந்தப்ப ஒரு சமயம்  முதல்லே  குடியிருந்த போல் மாஸ்டர் வீட்டுக்குப்போயிருக்கோம்.  அது ட்யூப்லெக்ஸ் வீடு. நாங்களும்,  மேரி டீச்சரும்  வாடகைக்கு எடுத்திருந்தோம். அப்புறம் வீட்டை விற்கப் போட்டப்ப மேரி டீச்சர் , அவுங்க இருந்த  பாகத்தை  வாங்கிக்கிட்டாங்க. எங்களை வரவேற்று சிட்டிங் ரூமில் உக்காரச்சொல்லிட்டு உள்ளே போனவங்க  அப்புறம்  வெளியே வரவே இல்லை. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே உக்கார்ந்துருக்கோம். அப்பெல்லாம் கோபாலுக்கும் எனக்கும்  பேச நிறைய விஷயங்கள் இருந்துச்சு:-)  கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆயிருச்சு.  சரி. நாம கிளம்பலாமுன்னு எழுந்து  பின்பக்கம்  அடுக்களையில் போய் மேரி டீச்சரிடம் சொல்லிட்டுப்போகலாமுன்னு போனால்.... அடுப்படியில் என்னவோ செஞ்சுக்கிட்டு இருந்த மேரிக்கு,  என்னைப் பார்த்ததும் ஒரு திடுக்!  அப்பதான் ஞாபகம் வருது நம்மை சிட்டிங் ரூமில் உக்கார்த்தி வச்சது:-))))  பின்னொருக்கில் ஆட்டேன்னு நாங்க வந்துட்டோம். அதை நினைச்சு நாங்க பலமுறை சிரிச்சதுண்டு. முன்னால் நிற்கும் அம்மா   அந்த மாதிரி கேஸோ என்னமோ! 

ஒருவழியா அவுங்க நகர்ந்ததும் நான் எட்டிப் பார்த்தேன். ரொம்பதூரத்தில் குருவாயூரப்பன் சந்நிதியில் பூக்கள் அலங்காரத்தில் ஒளிஞ்சுக்கிட்டு நிக்கறான் கள்ளன்.  நல்லவேளை கண் ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டால்  தொலைவில் இருப்பது நல்லாவே தெரிஞ்சது.  உண்மையைச் சொன்னால்  பூக்குவியலுக்குள் சந்தன முகம்!  உள்ளே பிரகாரங்களில்  இருப்பவர்கள் இங்கு அங்கும் போகும் தலைகள்தான்  மறைக்குது. இடைவெளியில் தெரிஞ்சது வரை பாக்கியம்!

ஒரு நாப்பத்திநாலு வருசத்துக்கு முன்னே  கோவில் டூரில்  வந்தப்ப ,  அதிகாலை  மூணு மணிக்கு  உள்பிரகாரத் திண்ணை மேல் ஏறி நின்னு நிர்மால்ய பூஜைகூட பார்த்துருக்கேன்.   'அம்மே நாராயணா 'ன்னு ஒரே கோஷமா இருந்தது!  சின்ன  உருவம்தான் அப்பன். அதிகாலையில் குழந்தை ரூபமும்,  மத்யான நேரம் சிறுவனாகவும்,  அத்தாழப் பூஜையில்  வளர்ந்த மனிதனாகவும் இருப்பானாம்! இந்தக் கணக்கில்  இந்த மூணு தரிசனமும் எனக்கு   முந்தி வந்த  நாலு பயணங்களில் கிடைச்சுருக்கு!


குருபகவானும், வாயு பகவானும்  இங்கே  க்ருஷ்ணனை ப்ரதிஷ்டை செஞ்சதாக ஐதீகம். அதுதான் குரு+வாயு   சேர்ந்து குருவாயூர் என்றாகியிருக்கு!

கோவிலுக்கு வயசு அஞ்சாயிரம் வருசங்களுக்கு முன்னால் என்று சொன்னாலும்... இப்ப இருக்கும் கோவில் கட்டிடங்கள் முன்னூறு இல்லை நானூறு வருசங்களுக்குள்தான் இருக்கணும்.

மேலே   படம்= பழையகாலக்கோவில்களில் ஒன்று

கீழே படங்கள் ரெண்டும்  குருவாயூர் . இப்போ  ஒரு  நாப்பதம்பது  வருசங்களுக்கு முன்!!

முக்கியக்குறிப்பு:  மேலே உள்ள படம்  குருவாயூர் அம்பலம் இல்லை(யாம்) அது ஒரு போலிப்படம் என்று  பின்னூட்டங்கள் இட்ட Strada Roseville  அவர்களுக்கு நன்றிகள். வரவர எது  உண்மை எது பொய் என்பதே புரியவில்லை:(  மேலே போட்ட படத்தை அந்தக் காலக் கோவில்களில் ஒன்று  என்றும் சொல்லிக்கலாம்.  

1638 இல் கோவிலை புனரமைச்சதாகவும்,  1716 இல் டச்சு நாட்டுப் படைகள் கோவிலைக் கொள்ளையடிச்சுக் கைக்குக் கிடைத்த செல்வங்களைச் சுருட்டிக்கிட்டுக் கோவிலுக்குத் தீவச்சுட்டுப் போயிட்டதாகவும், 1747 இல் கோவிலை மீண்டும் புனரமைச்சதாகவும்  கோவில் நிர்வாகம் வச்சுருக்கும்  தலப்புராணம் சொல்லுது.  1766 இல் ஹைதர் அலி ஒரு தொகை சொல்லி, அதைக் கட்டும் வரை கோவில்  தன் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டதா இருக்கணும் என்றதும் அப்போதிருந்த மலபார் கவர்னர் முயற்சியால் கோவிலுக்கு  எந்த ஆபத்தும் இல்லாம  விடுவிக்கப்பட்டதாம்.

பின்னே திப்பு சுல்தான் படையெடுப்பில்தான்  கோவிலுக்கு ஆபத்து  வந்துருமுன்னு பயந்து  மூலவரை பூமிக்கடியில் ஒளிச்சு வச்சுட்டு, உற்சவரை அம்பலப்புழா கிருஷ்ணர் கோவிலில் கொண்டு போய் வச்சதாகவும் வரலாறு.  திப்புவின் படையினர் கோவிலுக்கு நெருப்பு வச்சுட்டுப் போனாங்க.  அந்த சமயம் பெருமழை ஒன்னு அடிச்சுப் பேய்ஞ்சதில்  கோவில் தப்பிப் பிழைச்சது! ஆங்கிலேயரிடம் திப்பு சுல்த்தான் தோற்ற பிறகு  1792 இல் மறுபடி மூலவரை வெளியில் எடுத்து ப்ரதிஷ்டை செஞ்சாங்களாம்.  பாவம்.... க்ருஷ்ணனும் படாதபாடு பட்டுட்டான் இல்லே:(

அப்புறம் 1970 இல்  ஒரு ஏகாதசிக்கு விளக்குகள்  ஏத்திப்பூஜைகள் எல்லாம் முடிஞ்சு  நடை சாத்தின இரவில் கோவிலில் தீ புடிச்சு  அஞ்சு மணி நேரம் எரிஞ்சுருக்கு.  சேதாரம் அதிகம்தான்.   நல்லவேளையா மூலவர் சிலை இருந்த இடம் தப்பிச்சது.  திரும்ப எல்லாம்  சரியாக்க அதிகநாட்கள் எடுத்ததும் உண்மை.

முந்தி ஒரு பதிவில் நம்ம ஜிரா கேட்டுருந்தார் பாருங்க இப்படி மரச்சட்டங்களில் விளக்கேற்றினால் ஆபத்து வராதான்னு  அதே தான்.  இப்ப மீண்டும்  சம்ப்ரதாயமுறைப்படி விளக்கு ஏத்தறாங்கதான். கவனமாக இருப்பாங்கன்னு நம்புவோம்!


வலது பக்கம் கம்பித் தடுப்புகளுக்குள்ளில் கூட்டமான கூட்டம் வரிசைகளில். முழுசும் மூடின கம்பிக் கூண்டாக இல்லாமல்  இடுப்புயரத் தடுப்பா இருப்பது  ஓரளவுக்கு நல்லது. ச்சும்மா இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சுத்திக்கிட்டு இருந்தப்ப  கோவிலின் இடது பக்கம் ஒரு கதவு திறந்துருக்கு. பக்கத்தில் ஒரு பெஞ்சில் காவல்துறையினர் சிலர்.  மக்கள் அதுலே போய் வந்துக்கிட்டு இருக்காங்க. ஒரு எலக்ட்ரானிக்  கேட்டைக் கடக்கணும்.  நான் போய் 'அகத்துப் போகாம்பற்றோ?'ன்னு விசாரிச்சதில்  தலையை எஸ்ஸுன்னு ஆட்டுனாங்க.
கோபாலைத் திரும்பிப் பார்த்து  இங்கே வாங்கன்னு கை அசைச்சேன். நல்லவேளையா கோபால்  முண்டு கட்டிக்கிட்டு வந்துருந்தார். அதையே இப்போதான் கவனிக்கிறேன்!  அறையிலிருந்து கிளம்பும்போது மாற்றியிருக்கார்!  கோவிலில் முந்தி மாதிரி பெண்களுக்கு அவ்வளவு கடுமையான விதிகள்  இல்லாமக் கொஞ்சம் தளர்த்தி இருக்காங்க. ஸல்வார் கமீஸ் ஓக்கே! ( இத்தைப் பார்றா! புடவை  கட்டிக்கிட்டு வா ன்னால் அது கடுமையா!!!!)

அந்த வாசல் வழியா உள்ளே போனோம்.  அது பகவதி சந்நிதியை அடுத்துப்போகுது.  உள்ளே  இடதுபக்கம்  பெரிய ஹாலில் ப்ரஸாத கவுண்ட்டர்,  பக்தர்கள் உக்கார்ந்து  ஓய்வெடுக்க  இடமுன்னு  வசதியாகத்தான் இருக்கு.  அப்படியே கடந்தால்  பிரகாரத்துக்குள்ளே  போயிடலாம். இங்கேயும்  கொஞ்ச தூரத்துலே உள்ப்ரகாரம்  தெரியுது.  அதுக்கு நடுவில் கருவறை.   அதுக்கு நேராய் இங்கே நாம் நிற்குமிடத்தில்  தங்கக் கொடிமரம்!

நாம் வெளியே வாசலில் நின்னு தூரப்பார்வை பார்த்த க்ருஷ்ணனை கொஞ்சம்  கிட்டவே பார்க்கலாம். இங்கேயும் ஒரு பெட்டி மாதிரி இருக்கு. முன்னே நிலவிளக்குகள் ஒன்னும் இல்லாததால் பார்வையை நேரா உள்ளே செலுத்த முடியும். ஆனால் கூட்டம் இடிச்சுத் தள்ளுறாங்க. கோவில் ஊழியரொருவர்,  நின்னு பார்த்தவர்களை  'வேகம் மாறிக்கோ, மாறிக்கோ'ன்னு  அதட்டல் போட்டபடி இருக்கார்.

என்  கண்ணால்  3 time Zoom பண்ணதான் முடிஞ்சது.   அந்த விநாடியில்  கைகூப்பிட்டு நகர்ந்துட்டேன். நம்ம கோபால்தான், பார்த்தியா, இந்தப் பக்கம் பாருன்னு டைரக்ட் பண்ணிக்கிட்டு இருந்தார். பெட்டிக்கு முன் வரிசைகள் பக்கவாட்டில் நகருது.  நமக்கிடது பக்கம் மேலே பாலமாட்டம் போகும் வழியில்  ஜனங்கள்!  வெளியே நாம் பார்த்த வரிசை இதன் வழியா உள்பிரகாரம் போகுதாம்!   வரவர  கோவில்களில்  ஏகப்பட்ட  சொந்த சட்டங்கள். கேரளத்தில் நுழைஞ்சது முதல்   இன்றைக்கு  மாலை வரை நிம்மதியாக் கிடைச்ச தரிசனங்களில் இருந்த மனத்திருப்தி இங்கே கிடைக்காதுன்னு புரிஞ்சது. பெரிய கோவில்கள் என்றால் இப்படித்தானாம்!  அருள்வாக்கு!

இவ்ளோ ஜனம் குமியும் கோவில், 108 திவ்யதேச லிஸ்ட்டில் கிடையாது!  ஆழ்வார்கள் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்காதோ அல்லது ஆழ்வார்களுடைய டூர் ஆப்பரேட்டர்கள்  சரியானபடி  பயணங்களை  ஒருங்கிணைக்கலையோ தெரியாது!

உள்ளுக்குள்ளே பத்து நிமிசம் சுத்திட்டு,  திரும்ப பகவதி சந்நிதி வழியாகவே வெளியே வந்துட்டோம். வெளியே கொட்டகையில்  சின்ன மாடக்கோவில்கள் போல மூணு.  வெறும்விளக்கு மட்டும் இருக்கு.  உற்சவரைக் கொண்டு வந்து வச்சு எதாவது  பூஜை செய்வாங்க போல!


அங்கே கடைகள் வரிசையிலொரு உடுபி ஹொட்டேல்  போர்டு.  அதுக்குள்ளே நுழைஞ்சோம்.  மாடியில் அட்டகாசமான, நீட்டா இருக்கும்  ஏஸி டைனிங் ஹால். அங்கேயே தோசை, காஃபின்னு  ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டோம்.
மறுபடி கடைகள் வரிசைகளை நோட்டம்விட்டபடியே போனால்....  எனக்கிஷ்டப்பட்ட ( எதுதான் இஷ்டமில்லை?) கெண்டி  கண்ணில் பட்டது.

 கோபாலின் மனசு குளிரட்டுமேன்னு சின்னதா ஒன்னும், யானை மேல் சீவேலி போகும்  க்ருஷ்ணனையும்  வாங்கிக்கிட்டோம். ரெண்டு கடை தாண்டி,  சிறுமிகளுக்கான  கேரளா கசவு புடவை ஸ்டைலில்  பாவாடை சட்டை!  நம்ம ஜன்னுவுக்கு ஒன்னு வாங்குன கையோடு,  சின்னக்குழந்தைகளுக்கு இருக்கான்னா இருக்குன்னார் கடைக்காரர். மூணு மாசக் குழந்தைக்குப் போடும் சைஸ் வாங்கினேன்.


நாங்க ஊரில் இருந்து கிளம்ப ரெண்டு நாள் இருக்கும்போது   என் மலேசியத் தோழிக்கு பேத்தி பிறந்துருக்காள்.  ஆஸ்பத்திரிக்குப்போய்  குழந்தையைப் பார்த்துட்டு, அக்டோபர் 15.  ரொம்ப நல்ல நாள். எங்க பழைய ப்ரெஸிடெண்ட் கலாம் பிறந்த நாள்.  குழந்தை நல்லா இருப்பாள்ன்னு  ஆசிகள் சொல்லிட்டு வாங்கிப்போன  ஸாஃப்ட்  டாய்ஸ் கொடுத்துட்டு வந்திருந்தோம். அவுங்களுக்கு நாந்தான்  பஞ்சாங்கம் வச்சு   நாள் கிழமை பார்த்துச் சொல்லும் பண்டிட்:-)))

அப்புறம் இன்னொரு கடையில்  க்ருஷ்ணர்  டிஸைன் போட்ட புடவை. இதேமாதிரி ஒரு புடவையை  கோபாலின் தம்பி மனைவி தனக்காக வாங்கி இருந்ததை  போன பயணத்தில்  நான்  அபேஸ் பண்ணியிருந்தேன். அதுக்கு பதிலா இப்ப ஒன்னு வாங்கினாலாச்சு.  அது நீலம்.   நான் இப்போ தேர்ந்தெடுத்தது பச்சை:-) பச்சை வண்ணக் கண்ணா வாடா....


பில் போடும்வரை கடையை அப்படியே நோட்டம் விட்டபோது ஒரு திருவுடையட  (திரு+உடை + ஆடை) கண்ணில் பட்டது.  திருமகளுக்குச் சார்த்தன்னு இல்லை. ஆனால் இதில்  பகவதி குடி இருக்கிறாள் என்ற ஐதீகம்.  வைணவர்களுக்கு திரு என்னும் செல்வமங்கை மஹாலக்ஷ்மி குடி இருக்கமாட்டாளா என்ன?   மங்கலப்பொருட்களில் இது ஒன்னு. வாங்கிமுடிச்சதும், போதும்  போகலாம் என்றார் கோபால்.  பர்ஸ் கொண்டு வரலையாம். இனி ஏதும் வாங்கினால் காசில்லை என்று பொருள்:-))))

 நானும் என் கைப்பையை அறையிலேயே வச்சுட்டு வந்துருந்தேனே!   சீனிவாசனைக் கூப்பிடலாமுன்னா செல்ஃபோனும்  அறையிலே இருக்கே!   பேசாம நடந்து போயிடலாமுன்னு  வந்தோம்.  ஒரு   அஞ்சாறு நிமிச நடைதான். அழகான  கருடன் ஒன்னு  வழியில்!

காலையில்  ஒருநடை வந்து படங்கள் எடுத்துக்கிட்டுப்போகணும்.

தொடரும்..........:-)

PIN குறிப்பு :  மறுநாள் எடுத்த படங்களில் சில  இதில்  உண்டு.




15 comments:

said...

உங்களுக்கு கேமரா இல்லையென்றால் சிரமம் தான் அம்மா...

மூணு தரிசனத்திற்கு வாழ்த்துகள்...

said...

Please refer the link below. The old photo is not gury vayoor, but chitoor temple. http://keralasnostalgia.blogspot.com/2012/09/guruvayoor-sree-krishna-temple-in-1730.html

said...

One more URL http://fbinvestigations.blogspot.com/2014/08/guruvayur-temple-in-1730.html

said...

குருவாயூர் கோவிலுக்குப் பலமுறை போனதுண்டு. ஆனால் 1960-70 களில் கிடைத்ததரிசனம் மாதிரி இப்போதெல்லாம் இல்லை. குருவாயூரிலும் பணம் விளையாடுவது தெரிகிறது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் கிருஷ்ணனை கேசாதி பாதம் வர்ணித்து எழுதி இருக்கிறேன் சுட்டி தரட்டுமா. ?படித்துப் பாருங்களேன்
http://gmbat1649.blogspot.in/2013/05/blog-post_14.html

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

007 மாதிரி கண்ணுக்குள்ளேயே ஒரு கெமெராவை அமைத்துக்கொள்ளும் டெக்னிக் இருந்தால் கொள்ளாம்:-)

said...

வாங்க Strada Roseville .

சுட்டிக் காமிக்கும் சுட்டிகளுக்கு நன்றி.

ஏற்கெனவே போட்ட படத்தை எடுக்கவேண்டாமேன்னு பழைய காலக்கோவில்களில் ஒன்று என ஒரு அறிவிப்பு போட்டுருக்கேன் அங்கே!

என்னப்பா.... இது போலிகள் உலகம் முழுக்க இருக்காங்களே:(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அருமையான தகவல்களுக்கு நன்றி ஐயா.

மேற்கு நடை தரிசனத்தகவல் எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. அடுத்தமுறை போனால்(!) கட்டாயம் அந்தப்பக்கம் போவேன்.

முதியோர்கள் நேரம் ஒதுக்கி இருப்பதும் புதுத்தகவல்.

நன்றிகள் பல.

நாராயணீயம் வீட்டில் இருக்கு. இதுவரை வாசிக்கலை.
கேசாதி பாதம் தொழுந்நு பாட்டு ரொம்பப் பிடித்தமானது.

said...

ஆகா... அப்போ நான் சந்தேகப்பட்டது சரிதானா!!! அஞ்சாறு மணி நேரம் எரிஞ்சிக்கிட்டேயிருந்ததுன்னா ஆபத்தாச்சே.

குருவாயூருக்கு ஒரேயொரு வாட்டி போயிருக்கோம். மொத்தக் குடும்பமும் போனோம். பெரிய படைக்கூட்டம். தங்க எடம் கிடைக்கல. ஒரு ஹோட்டல் மொட்டை மாடியில் ஓலைப்பாய் குடுத்தாங்க. ராத்திரி விரிச்சுப் படுத்துக்கிட்டோம். இப்ப அப்படிச் செய்ய முடியுமான்னு யோசிச்சுப் பாத்தா இல்லைன்னுதான் சொல்லனும்.

கோயில்ல ஒரு பெரிய கொப்பரை நெறைய குன்றிமணிகள். அழகா சிவப்பா.. எனக்கு அதைப் பாத்து ஆசை வந்து அள்ளினேன். அதெல்லாம் எடுக்கக் கூடாதுன்னு பெரியவங்க யாரோ சொன்னாங்கன்னு எடுத்துட்டு வரலை. அது விஷம்னு சொல்வாங்க. அதை வெச்சு விளையாட முடிஞ்சது கடவுள்தான் போல.

எல்லாக் கோயில்களும் மொதல்ல சின்னதாத்தான் இருந்திருக்கும். பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக் கட்டிப் பெருசாயிருக்கும்.

said...

கிண்டி வாங்கியாச்சு சரி. எப்போ தபஸ் ஆரம்பிக்கப் போறீங்களாம்.துளசி.
அந்த விசிறி மாதிரி இருக்கிறது மடிச்சுத் தைத்த ஆடையா. தம்பி கூடப் போனவாரம் குருவாயூர் போய் வந்தான். யாரையோ தெரியுமாம் .நல்ல தரிசனம் என்று கேள்விப்படேன். நாம் பார்ப்பதற்குள் அவன் நம்மைப் பார்த்துவிடுவான் என்பதே நிம்மதி.

said...

அழகான படங்கள்.....

நண்பரின் கல்யாணத்திற்குச் சென்றபோது அங்கே ஒரு பகல் ஒரு இரவு தங்கினேன். அப்போது பார்த்தது - 15 வருடங்கள் ஆகிவிட்டது....

said...

ம்ம்ம்ம்ம் பரவாயில்லை கேரளத்து மக்கள் தரும் தகவல்களை விட நீங்கள் மிக அழகாகவே தருகின்றீர்கள். எப்போதுமே அப்படித்தான் அங்கிருப்பவர்களுக்குக் கூட அந்த ஊர் பற்றிய பெருமையோ ஸ்தலங்களோ தெரிந்திருக்காது...இப்படி உங்களைப் போன்றோர் எழுதினால்தான் உண்டு....அருமை! படங்கள் அனைத்தும் சூப்பர்!

said...

வாங்க ஜிரா.

இப்பெல்லாம் பாய் கொடுக்கும் காலம் மாறித்தான் போச்சு.

எல்லாம் காசு காசு. கோவில் உட்பட காசேதான்.... கடவுள்:(

said...

வாங்க வல்லி.

எனக்குப் பெருமாளைத் தவிர அங்கே வேற யாரையும் தெரியாதேப்பா! போட்டும். அவன் பார்த்திருப்பான்தானே? முன்னாடி வந்து நிக்க தைரியம் அவனுக்கில்லை:-)

இத்துனூண்டு கிண்டியில் தபஸ் பண்ண முடியாது, கேட்டோ!

விசிறிமடிப்பு ஆடைதான்... அம்பாளுக்கு!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒவ்வொருமுறை போகும்போதும் மாற்றங்களைக் காண நேரிடும்! பெரிய கோவில்கள் என்றாலே இப்படித்தான்:(

said...

வாங்க துளசிதரன்.

முற்றத்து முல்லைக்கு மணம் உண்டோ?